பிரம்மாண்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 8,759 
 

சிகாகோ நகரின் ஓ’கேர் சர்வ தேச விமான நிலையத்தில் சுந்தரி பயணித்த விமானம் தரை இறங்கிய பொழுது அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்தியாவில் லோக்கல் விமானங்கள் ஏறி பழக்கமில்லாத அவள், முதன் முறையாக சர்வதேச விமானத்தில் பயணித்து, அதுவும் 21 மணி நேரம் பயணித்து, சிகாகோ வந்து அடைந்திருக்கினறாள். அதை விட அவள் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது?

சுந்தரி, உள்ளூரில் தனியாகச் செல்வதற்கே பயந்து கொண்டிருப்பவள். இன்று கிட்டத்தட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வான் மைல்களைக் கடந்து இருக்கின்றாள் என்று சொன்னால் அது அதிசயத்திலும் அதிசயமாக அவளுக்கே இருந்தது. ஒரு மனிதனுக்குத் தேவைதான் தைரியத்தைத் தருகின்றது; அவனை வழி நடத்திச் செல்கின்றது; அவனை இயங்க வைக்கின்றது. இவற்றையெல்லாம் இந்தப் பயணத்தின் மூலம் அவள் புரிந்துகொண்டாள்..

வீட்டில் உள்ள அனைவரும் சுந்தரியிடம் “நீ சிகாகோ போய் இறங்கியவுடன் போன் பண்ணு. நாங்கள் எல்லாம் கவலைப்பட்டுக் கொண்டு இருப்போம்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். விமான நிலையத்துக்கு வெளியில் வந்ததுக்கு அப்புறம், இமிகிரேஷன் முடித்து, கஸ்டம்ஸ் முடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் அவர்களுக்கு முதலில் போன் பண்ணனும் அப்படின்னு நினைத்துக் கொண்டு, சுந்தரி மகிழ்ச்சியாகத் தரை இறங்கினாள்.

“அம்மா! உனக்கு 65 வயசு ஆகுது. தனியா வேறு வருகின்றாய். கூட அப்பா வந்தாலும் பரவாயில்லை… அவர் எல்லாம் ஆறு மாசம் எங்க இருக்க போறாரு. அதனால பிடிவாதமா வரமாட்டேன் என்று கூறிவிட்டார். உனக்கோ இதெல்லாம் பழக்கம் இல்லாதது. மேலும் நீ துபாயில் 4 மணி நேரம் காத்திருந்து பின்பு மற்றொரு விமானம் பிடித்து இங்கு வரவேண்டும். துபாய் விமான நிலையம் மிகப் பெரியது. அங்கு உனக்கு விமானம் மாற்றுவதும், அதற்காகக் கேட் மாறி செல்வதும் மிக கடினம். சிகாகோவிலும் ஏர்போர்ட்டுக்குள்ளே நடந்து வருவதும் உனக்குக் கொஞ்சம் கஷ்டம். அதனால் உனக்கு வீல் சேர் ஏற்பாடு பண்ணி இருக்கேன்” என்று அவள் மகள் கூறியிருந்ததாள். “அவர்கள், நீ சென்னையிலிருந்து சிகாகோ வந்து சேரும் வரை உனக்கு உதவியாக இருப்பார்கள்” என்று கூறி அதற்கான ஏற்பாடு செய்திருந்தாள்.

துபாயில் சுந்தரியின் விமானம் மூன்றாவது கேட்டில் தரை இறங்கியது. அந்தக் கேட்டிலிருந்து இருபத்தி மூன்றாவது கேட்டுக்கு மாறி வருவதற்கு வீல்சேர் அசிஸ்டன்டின் உதவி மிகத் தேவையாக இருந்தது. அது போல அவள் சிகாகோவில் விமானத்தை விட்டுக் கீழே இறங்கியவுடன் வீல் சேர் அசிஸ்டன்ட் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். வீல் சேருக்குப் பதிவு செய்தவர்கள் ஒவ்வொருத்தரையும் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சுந்தரியின் பெயரைச் சொல்லி அழைத்தவுடன், அவள் முன்னே சென்றாள். அவளைக் கூட்டிச் செல்வதற்கு வந்தவர் ஓடிவந்து, வந்தனம் சொல்லிவிட்டு, சுந்தரியை வண்டியில் அமரச் செய்து, இமிகிரேஷன் கவுண்டருக்கு அழைத்துச் சென்றார்.

இமிகிரேஷன் கவுண்டரில் நாற்பது வயது மதிக்கத்தக்க வெள்ளைக்காரர் நின்று கொண்டிருந்தார். சுந்தரி அவருக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்தாள். அதற்கு அவர் தலையசைத்து விட்டு, கையை அவள் முன் முன் நீட்டினார்.. சுந்தரியை அழைத்து வந்தவர் முன்பே அவளிடம் இருந்து வாங்கி வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் விசாவை அவரிடத்துக் கொடுத்தார். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு சுந்தரியிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்.

“நீங்க எதற்காக சிகாகோ வந்துள்ளீர்கள்” என்று கேட்டார்.

ஏற்கனவே சுந்தரியிடம் அவள் மகள் சொல்லி வைத்திருந்தாள். “மகளின் பிரசவத்துக்கு வந்திருக்கேன்னு சொல்லிடாதம்மா. உன்னை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறேன் என்று மட்டும் சொன்னால் போதும். ஏன்னா, நீ டூரிஸ்ட் விசாவில் வந்திருக்கிறாய். அதனால் மாற்றிச் சொல்லி விடாதே” என்று கூறி இருந்தாள். அவள் கூறியபடி, சுந்தரி, தான் அமெரிக்க நகரங்களான சிகாகோ, வாஷிங்டன், நியூயார்க் போன்ற நகரங்களைச் சுற்றிப் பார்ப்பதற்காகவும், நயாகரா நீர்வீழ்ச்சியைப் பாரப்பதற்கும் வந்து இருப்பதாகச் சொன்னாள்.

அவர் தலையசைத்துக் கொண்டார்.

“உங்க சூட்கேசில் என்ன வைத்திருக்கின்றீர்கள். பவுடர் வைத்துள்ளீர்களா” என்று கேட்டார்.

சுந்தரி முகப்பவுடர் கொண்டு வந்து இருந்தாள்..ஆனால், அவர் அதையா கேட்கப் போகிறார். வேறு எதையோ கேட்கிறார் என்று மனதில் நினைத்து கொண்டாள். அதனால் அவர், தன் மகள் ஏற்கனவே எதைக் கேட்டாலும் ‘நோ’ என்று கூறு என்று கூறியது போல் ‘நோ’ என்று தலையசைத்தாள்.

சூட்கேசில் ஸ்வீட்ஸ் இருக்கா, கருவேப்பிலை இருக்கா என்றெல்லாம் கேட்டார். சுந்தரி வேகமாக நோ நோ என்று மறுத்துத் தலையசைத்தாள்….

ஓகே… நீங்கள் எவ்வளவு நாட்கள் இங்கு தங்கப் போகிறீர்கள் என்று கேட்டார்.

பத்து வினாடிகள் யோசித்துவிட்டு மூன்று மாதங்கள் என்று சொன்னாள்..

உடனே அவர் ரிட்டர்ன் டிக்கெட்டைக் காட்டுங்கள் என்று கேட்டார்.

அப்பொழுதுதான் சுந்தரிக்குச் சுரீர் என்றது. மருமகன் ஒரு தடவைக்கு இரு தடவையாகச் சொல்லியிருந்தார். ரிட்டன் டிக்கெட்டில் என்ன தேதி போட்டிருக்குறதோ அந்தத் தேதியைச் சரியாக நீங்க இமிகிரேஷனில் சொல்ல வேண்டுமென்று. மருமகன் சொன்னதை மறந்து விட்டு, மனதிற்குள் அவள் நினைத்துக் கொண்டு வந்தபடி மூணு மாசம் என்று சொல்லிவிட்டாள். “ஐயையோ! தப்பு செய்து விட்டேனே” என்று பயத்துடன் அவரைப் பார்த்தாள்.

அவர் சற்று கோபத்தோடு சுந்தரியை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, “உங்கள் டிக்கெட்டில் ஆறு மாதம் கழித்து அல்லவா தேதி போட்டிருக்கிறார்கள். நீங்கள் மூன்று மாதம் என்று சொல்கிறீர்களே!” என்று கேட்டார். உடனே சுந்தரி சமாளிக்கும் விதத்தில்,” சார், எனக்கு ஆஸ்துமா பிராப்ளம் உண்டு. அதனால் இந்த ஊர் குளிரில் என்னால் மூன்று மாதத்திற்கு மேல் தங்க முடியாது என்று நினைக்கிறேன். அதனால் தான் மூன்று மாதம் என்று சொல்லிவிட்டேன். ஒருவேளை இந்தக் குளிர், எனக்கு ஒத்துப் போய்விட்டால், நான் ஆறு மாதம் வரை தங்குவேன்” என்று பதில் கூறினாள்.

உடனே அவர் “ஓகே. நான் நீங்கள் முதலில் கூறியபடி மூன்று மாதம்தான் இமிகிரேஷன் கொடுக்க முடியும்” என்று உறுதியான குரலில் கூறினார். சுந்தரிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மருமகனும் மகளும் கோபித்துக் கொள்வார்களே என்று வருந்தினாள். மகளுக்கு இப்பொழுது தான் ஆறாவது மாதம் நடக்கிறது. மூன்று மாசம் என்றால் டெலிவரிக்கு முன்னால் ஊர் திரும்பி விட வேண்டும். வந்த காரியம் நடக்காது. மகள் ரொம்ப கோபித்துக் கொள்ளப் போகிறாள்.

உடனே சுந்தரி அழும் குரலில், “ப்ளீஸ் சார். ஆறு மாதம் கொடுத்து விடுங்கள். உடல் நன்றாக இருந்தால் நான் ஆறு மாதம் இருப்பேன்” என்று மன்றாடினாள். அவர் “நோ” என்று உறுதியான குரலில் கூறிவிட்டு, சரி நேராக அமருங்கள்” என்று சொல்லி, சுந்தரியின் முகத்தைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்ப முற்பட்டார்.

அதற்குள் சுந்தரிக்கு அந்தக் குளிரிலும் வேர்த்து விறுவிறுத்து விட்டது. “ப்ளீஸ் சார்” என்று பேசத் தொடங்கினாள். அதற்குள் வீல் சேர் ஓட்டுநர் அவள் தோளில் கை வைத்தார். சுந்தரி அவரைத் திரும்பி பார்த்த பொழுது, அவர் மேற்கொண்டு பேச வேண்டாம் என்று ஜாடை காட்டினார். வீல் சேர் ஓட்டுனர் இமிகிரேஷன் கவுண்டரில் உள்ளவர் அருகில் சென்று ஏதோ கூறினார். அவரும் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல், பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் பண்ணிவிட்டு, அதை வீல் சேர் ஓட்டுநரிடம் நீட்டினார். அவர் அதை வாங்கிக்கொண்டு அவருக்கு ஒரு வந்தனம் தெரிவித்து விட்டு, வீல் சேரை அங்கிருந்து நகர்த்தத் தொடங்கினார்.

உடனே சுந்தரி, இமிகரேஷன் கவுண்டரில் உள்ள நபருக்கு ஒரு வணக்கத்தைத் தெரிவித்து விட்டுத் திரும்பினாள்.. சுந்தரியின் மனநிலையைப் புரிந்து கொண்ட வீல் சேர் ஒட்டுநர் , கூல் கூல் என்று அறிவுறுத்தினார். “அப்பாடா ஒரு கண்டம் தாண்டி விட்டேன்” என்று மனதிற்குள் சுந்தரி நினைத்துக் கொண்டாலும், அவள் மனது அழுதது. மகளுக்குப் பிரசவம் பார்க்க முடியாமல் திரும்பி விடுவோமே என்று வருந்தினாள்.

அடுத்ததாக, வீல் சேர் ஓட்டுனர், சுந்தரியை கஷ்டம்ஸ் கவுண்டருக்குக் கொண்டு வந்து சேர்ந்தார். அங்கு ஒரு வெள்ளைக்கார பெண்மணி இருந்தாள். அவளும் சுந்தரியிடம் பலவிதமாக வினாக்களைக் கேட்டுத் துளைத்து எடுத்தாள். சுந்தரி கொண்டு வந்திருந்த சூட்கேஸ்களைத் தூக்கி தூக்கிப் பார்த்தாள். திறக்கலாமா வேண்டாமா என்று சிந்தனை செய்தாள். சுந்தரியோ எல்லா தெய்வங்களையும் மனதில் நினைத்துக் கொண்டாள். ” அப்பனே! முருகா! கந்தா! கார்த்திகேயா! இந்தியா திரும்பியபின் உனக்குப் பால் பாயாசம் வைத்துப் படைக்கின்றேன்” என்று அவள் மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.. “என்னைக் காப்பாற்றி விடு.

பெட்டிக்குள் கருவேப்பிலை பொடி, சாம்பார் பொடி, ரசப்பொடி, கிராண்ட் ஸ்வீட் கடையிலிருந்து கொஞ்சம் ஸ்வீட், காரம் , புளித்தொக்கு, காரக்குழம்பு எல்லாம் வாங்கி கொண்டு வந்திருக்கிறேன். புள்ளத்தாச்சி பொண்ணு இருக்கா. அவளுக்கு நாக்குக்கு ருசியாகக் கொடுக்கலாம் அப்படின்னு அவ கேட்டது கேட்காதது எல்லாத்தையும் வாங்கி வைத்திருக்கிறேன். அந்த வெள்ளைக்கார பெண்… திறந்து பார்த்துட்டுத் தூக்கிப் போட்டு விடுவாளோ “என்று ஒரே பயம் சுந்தரிக்கு.

கஷ்டம்ஸ் பெண்மணி பெட்டியைக் கீழே வைத்தாள்; திறந்து பார்க்க முற்பட்டாள். சுந்தரியின் மனசு ஐயோ என்று கூக்குரலிட்டது. “பாவி… படுபாவி.. அசிங்கப்படப் போறேன்”. அப்பெண் சுந்தரியிடம் என்னவோ கேட்டாள். அவளுக்குச் சரியா காதில் விழவில்லை. அதற்குள் சுந்தரிக்கு முன்னர் கஸ்டம்ஸ் செய்தவர் பெட்டியை நாய் மோந்து பார்த்து சுற்றி வந்து குரைத்துக் கொண்டிருந்தது. அந்தக் கஸ்டம்ஸ் பெண், அந்தப் பெட்டியை செக்கிங் செய்தவரிடம் ஏதோ பேச சென்றுவிட்டாள். அந்த நேரம் , வீல் சேர் ஓட்டுநர் அந்தப் பெண்ணை இடைமறித்து ஏதோ சொன்னார். உடனே அந்தப் பெண் வேகமாகத் தலையை ஆட்டிவிட்டு, சுந்தரியிடம் போகலாம் என்று ஜாடை காட்டினாள்.

உடனே வீல் சேர் ஓட்டுநர் பெட்டிகளை அள்ளிப் போட்டுக்கொண்டு, அவளைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார். சுந்தரிக்கு உயிர் போய் உயிர் வந்தது. அவள் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி, “கடவுளே! என்னைக் காப்பாற்றி விட்டாய்…

அமரர் இடர் தீர்த்த முருகா!

கந்தா! கடம்பா! கதிர்வேலா ! இடும்பனை அழித்த இனிய வேல் முருகா! வள்ளி மணாளா! பழனி பதிவாழ் பால குமாரா!…” என்று வாய் விட்டு முணுமுணுத்தாள்…

சுந்தரிக்குவிற்கு சாட்சாத் முருகனே வீல் சேர் ஓட்டுநராக வந்தது போலிருந்தது…. சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு, அவரைப் பார்த்து கை கூப்பி வணங்கினாள்.. அவர் சிரித்துக்கொண்டே “உங்களைக் கூப்பிட வருகின்றவர் வந்துவிட்டாரா என்று பாருங்கள்” என்றார்.

சுந்தரிக்கு அப்பொழுது தான், தான் எங்கு இருக்கிறோம் என்ற நினைவு வந்தது. வேக வேகமாக ஹேண்ட் பேக்கை திறந்து, 20 டாலரை எடுத்து அவர் கையில் வைத்தாள்.. அவர் நோ தேங்க்ஸ்….என்று சொல்லி வாங்க மறுத்துவிட்டார்.

அந்த நேரத்தில் சுந்தரியின் மருமகன் வந்து சேர்ந்தார்.. “என்னம்மா பிரயாணம் எல்லாம் நல்லபடியா முடிந்ததா? ஒரு பிரச்சினையும் இல்லையே?…..” என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

“என்கூட முருகன் வரும்போது, எனக்கு என்னப்பா பிரச்சினை? நான் நல்லபடியா வந்து சேர்ந்துட்டேன்… என்று கூறிக்கொண்டே சுந்தரி, வீல் சேரை விட்டு இறங்கினாள்.

சுந்தரியின் மருமகன் ஆதவ் ஒன்றும் புரியாமல் விழிக்க, அவரிடம் சுந்தரியை ஒப்படைத்த வீல் சேர் ஓட்டுநர், பின் அவரை வணங்கி, “மேடம், உங்களுக்கு ஆறுமாதம் விசாவே வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று கூறிவிட்டு விடைபெற்றார்.

சுந்தரிக்கு, சாட்சாத் முருகனே நேரில் வந்து , தன்னை நல்லபடியாக விட்டுச் சென்றது போல் தோன்றியது. இதைப்பற்றி எல்லாம் ஒன்றும் அறியாத சுந்தரியின் மருமகனும் வீல்சேர் ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மாமியார் கொண்டு வந்த லக்கேஜை சேகரிக்கத் தொடங்கினார்.

அந்த நிமிடம் சுந்தரிக்கு ஓ’கேர் விமானநிலையம் பிரம்மாண்டமாகத் தெரியவில்லை. பெயர் தெரியாத அந்த வீல்சேர் ஓட்டுநரே பிரம்மாண்டமாகத் தெரிந்தார். கண்ணில் வடிந்த நீரைத் துடைத்துக் கொண்டு, அவர் தன் மருமகன் பின்னே செல்லத் தொடங்கினார்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *