பிரமனின் குரு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 3,540 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆபாசக் கதைகள் பற்றி எழுத்தாளர்களிடையேயும், வாசகர்களிடையேயும் நீண்ட நாட்களாகப் பெரும் சர்ச்சைகள் நடக்கின்றன. இது ஒரு ஆபாசக் கனாவின் மேல் கட்டப்பட்ட கதை. படியுங்கள். உங்கள் மனசில் நிலைத்து நிற்பதைப் பயமின்றி எழுதுங்கள் – கே.டானியல்.

***

கடைசியாக அவன் சொல்லி விட்டுப் போனானே ஒருவழி, அந்த வழியைத் தவிர வேறெந்தப் பாதையும் செல்லம்மாளுக்குத் தெரியவில்லை. மனதுக்குள் எழுந்து நிற்பதெல்லாம் இது சரியோ பிழையோ என்பதல்ல, இப்போதைக்கு இந்தக் கண்டததிலிருந்து மீண்டு விடுவதெப்படி என்பது தான்!

உலகத்தின் பால் உணர்வுகளை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு மனதும் உடலும் பக்குவமடைந்துவிட்ட நாளிலிருந்து, இன்று வரை காதுக்கும், கண்ணுக்கும் எட்டிய சம்பவங்களை யெல்லாம் மனதுக்கு முன்னால வருவித்து வருவித்துப் பார்த்துக் கொண்டாள்; அவைகளோடு ஒப்பிடும் போது தனது நிலையின் தாக்கம் சிறிதாயினும், அது பூதாகரமாகவே தோன்றியது.

நான்கு வீடுகளுக்கப்பால் இருக்கும் அன்னமுத்துவை அவளுக்கு நன்கு தெரியும்.

அவளுக்குக் குழந்தைகள் ஐந்து, மூத்தபெண் பெரிதாகி வீட்டில் இருக்கிறாள். கணவன் செத்துப் போய் இருவருடங்கள் கூடச் சரியாகக் கழியவில்லை. சமீபத்தில்தான் அவள் ஆறாவது குழந்தை ஒன்றை ஈன்றிருக்கிறாள்.

குழந்தைகள் ஐந்து. வயதும் நாற்பனதத் தொட்டு நிற்கிறது, இந்த நிலையில்…?

இரண்டொரு மாதங்கள் தான் அன்னமுத்து கூனிக் குறுகி வாழ்ந்தாள். அதன்பின் கடைசியாகக் கிடைத்த இந்த ஒன்றை விட முன்னைய ஐந்திற்காக, அவள் சந்தைக்குள் நிற்கவும், கடைப்படிகள் ஏறவும், விதியில் கடக்கவும் வேண்டியாகிவிட்டது.

நேற்று மாலை கூட செல்லம்மாள் அன்னமுத்துவைப் பார்த்தாள், அன்னமுத்து ஒழுங்கை யால் செல்லும்போது, அவள் இடுப்பில் அந்தக் கடைசித் ‘தவ்வல்’ இருந்தது.

அன்னமுத்து வாயும் வயிறுமாக இருந்த போதும் செல்லம்மாள் பார்த்திருக்கிறாள். அப்போது அவள் முகத்தில் இருந்த நமைச்சல் உணர்ச்சியையும் வேதனைக் கோடுகளையும் இப்போது செல்லம்மாளால் பார்க்க முடியவில்லை.

சணத்தைச் சணத்தால் விழுங்கவைத்து விழுங்கவைத்து, அதற்குள் அடங்கிய யாவையுமே ஜீரணிக்க வைத்துவிடும். காலத்தின் வலிமை அன்னமுத்துவின் மனதின் வடுவையும், உடலின் சோகையையும் கழுவிச் சென்று விட்டதைச் செல்லம்மாளால் உணர முடிந்தாலும் தனக்கான மட்டில் இதை ஒத்து நிற்க முடியவில்லை.

“து; மானங்கெட்ட வாழ்வு” என்று அன்னமுத்துவைக் காறி உமிழ்த்து விட முடியாத நிலையாயினும் அவளின் அடி மனதுக்குள் இப்படியும் ஒரு நினைப்பு!

***

“என்னடி பிள்ளை வீட்டுக்கை இன்னும் விளக்கு வைக்கவில்லையே?” என்று கேட்டுக்கொண்டு செல்லம்மாளின் தாய் வந்து சேர்ந்தாள். அவள் இப்போது தான் சந்தையிலிருந்து வருகிறாள்.

இருட்டி வெகு நேரமாகி விட்டதென்ற நினைவு செல்லம்மாளுக்கு வருகிறது.

“கொண்ணன் இன்றும் வரயில்லையே? ஊரெல்லாம் கொய் யேண்டு கிடக்கு, இவன் ஏன் இப்பிடித் திரியிறானெண்டு தெரியேல்லை, விளக்கைக் கொளுத் தன்மோனை, கொப்பர் எக்கணம் வெறியிலை வரப்போறார். விறு விறெண்டு உலையை மூட்டு”

வீட்டுக்கு விளக்கு ஏற்றப் பட்டதைத் தொடர்ந்து அடுப்பில் உலையும் ஏறியது.

செல்லம்மாளை உலைப்பானை யோடு விட்டு விட்டு சின்னாச்சி தாழ்வாரத்தோடு உட்கார்ந்து மீன் வெட்டத் தொடங்கி விட்டாள். விளக்கின் மின்மினி ஒளியில் மீன் வெட்டிக் கொண்டே, கொதிக்கும் உலைக்குள் அரிசி கிளைந்து போடும் செல்லம்மாளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள் சின்னாச்சி.

செல்லம்மாளின் முகம் வெளிறீப் போய் இருப்பதாக அவன் உணர்கிறாள். இப்போது மட்டுமல்ல இரண்டொரு கிழமையாக அவள் இதை உணர்ந்து தான் வருகிறாள்.

“அதுவும் வீட்டிலை இருந்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்குது, அந்தாளுக்கு உதைப் பற்றி ஏதெண்டாலும் யோசனை இருக்குதோ? அவன் குத்தியன் ஊரின்ரை ஓட்டை ஒடிசல் பாத்துக் கொண்டு திரியிறான் நான் என்ன செய்ய எல்லாத்துக்கும் அடிச்சுக் குடுக்க என்னாலை முடியுமே … ம் … அதென்ன வாயாலை கேக்கவே போகுது.”

தன் மனதுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் சின்னாச்சி பேசிக் கொள்கிறாள்.

செல்லம்மாளுக்குக் கீழ்ப் பட்ட பெண்களெல்லாம் குடியும் குடித்தனமுமாகி ஒன்றிரண்டாகப் பெற்று விட்ட போது இந்த மனது வேகாதா என்ன? ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுகளை யெல்லாம் சின்னாச்சி நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சில நினைவுகள் அவள் ஈரல் குலையையே பிடித்து ஆட்டியது.

சின்னாச்சி சீட்டுப் பிடித்து வந்த உடையாரின் தங்கை, காலா காலத்தில் மொத்தமாக அந்தப் பணத்தைக் கொடுத்திருந்தால் செல்லம்மாளுக்காக இப்படி ஏங்கி சாக வேண்டிய இருக்காது. அந்த நாச்சியார்தான், ஐந்து பத்தாகவும், காயாகவும், பிஞ்சாகவும், கிழங்காகவும், கறி புளியாகவும் கொடுத்துத் தீர்த்து விட்டாளே! நேருக்கு சேர் இன்று அவள் பண்ணிவிட்ட இந்தக் கொடுமைக்காக மண்ணள்ளித் திட்டும் வலு சின்னாச்சிக்கு ஏது? செல்லம்மாள் கண்ணில் படும் போதெல்லாம் அந்தச் சீட்டுக் காசை நினைத்துக் குமைந்து குமைந்து வேதனைப் பட வேண்டியது தான்!

“பூமியில் மாண்ட ஜென்ம
மெடுத்துமோர்,
புண்ணிய மின்றி விலங்கு
கள் போல்…”

வயல் கரை ஒழுங்கையின் அந்தத்திலிருந்து காற்றோடு மிதந்து வரும் இந்தச் சங்கீத மாருதம் செல்லப்பனுடையது.

இப்படி ஒரு சங்கீத மாருதம் காற்றில் வருமெனில், அது அவன் இரண்டு போத்தல் பனங் கள்ளுடித்து விட்டு வருவதற்கான கட்டியந்தான்!

“எடி புள்ளை, கொப்பர் வாறா ரெடி, உலையைக் கொதிப்பண்ணி வடிமோனை, எக்கணம் அவன் பாவி துள்ளிக் குதிக்கப்போறான்…”

மகளை அவசரப்படுத்திவிட்டு, சின்னாச்சி கறி புளிகளைக் கூட்டத் தொடங்கினாள்,

நேற்றுத்தான் தாய் தெருவிவிருந்து எடுத்து வந்த இரும்புக் குழாயினால், மூச்சைப் பிடித்துக் கொண்டு ஊதித்தள்ளுகிறாள் செல்லம்மாள்.

***

செல்லப்பனின் குறட்டைச் சத்தம், இரவின் அமைதியை யெல்லாம் கிழித்துக் கொண்டு கேட்கிறது.

சற்று வேளைக்கு முன்புதான் அவனை ஒரு விதத்தில் சமாளித்து உணவு கொடுத்துவிட்டுப் படுக்க வைத்தாள் சின்னாச்சி. அதற்குள் இப்படிக் குறட்டை விடத் தொடங்கிவிட்டானே செல்லப்பன்!

பகலெல்லாம் களத்து மேட்டில் சூடுமிதிக்கும் மாடுகளோடு மாடாக என்று உழைத்தவனுக்கு, சின்னாச்சி, மத்தியானம் – நான்கு துண்டு கிழக்கு முறியும், சம்பலுந்தான் கொடுத்திருந்தாள். இந்தக் கிழக்கு முறியும், சம்பலும் தீர்ந்து விட்டபோது இந்த இரண்டு பனையும் உள்ளே சென்றிராவிட்டால் குடல்களே ஒன்றோடொன்று தாவிப் போரிட்டு அமர்க்களம் பண்ணியிருக்கும். இந்த இரண்டுக்கும் மேல் இப்போது தினைச் சோறும் போய்விட்டால் இப்படி மெய்மயக்கம் வராமல் வேறென்ன செய்யும்?

மகன் ஆறுமுகத்தின் வரவுக்காக சின்னாச்சி காத்திருந்தாள், ஆறுமுகத்தின் வரவுக்காக அவள் எப்போதும் இப்படித் தான் காத்திருக்க வேண்டும். அதுவும் சமீபகாலத்சிலிருந்து – ஊருக்குள் விவசாயிகள் சங்கம் அமைந்ததிலிருந்து எப்போதும் அவள் இப்படி ஏக்கத்துடன் தான் காத்திருக்க வேண்டியதா யிருந்தது.

பருவ நினைவுகளால் அவன் பாதிக்கப்பட்டு, அப்படி இப்படி கடந்து விடுவானோ என்ற பயம் அவளுக்குத் துளியுமில்லை. ஆனால் அவன் இப்படி ஊருக்காக நின்று நின்று பழிகாரனாகி, … அதுவும் பெருங் கமக்கார னென்ற பெயரை எடுத்த – ஆனால் என்றுமே கலப்பையைத் தொட்டும் பார்க்காத உடையார் சிவனடியாரின் எதிர்ப்புக்கு ஆளாகிவிட்டவர்களில் ஆறுமுகம் தலைச்சனாக நிற்பதை நினைக்குக் தோறும் நினைக்குக் தோறுந்தான் அவளின் ஈரல் குலை திருகப்படுவது போன்ற நிலை ஏற்படுகிறது. சமீபத்தில் கூட நெருப்பால் முகம் கருக்கப்பட்ட நிலையில், வயல் காட்டுக்குள் சாக்கோடு கட்டப்பட்டிருந்த ஒருவனின் சடலத்தை சின்னாச்சி கண்ணால் கண்டிருந்தாள்.

கடந்த மாதம் உடையார் வீட்டு வேலைக்காரப்பையன் சுது பண்ட ஒருமுழக் கயிற்றில் தூங்கிச் செத்துப் போனான். அவன் செத்துப்போனதற்கான காரணங்கள் கூறப்பட்டதுடன், ‘தற்கொலை ” என்று தான் டாக்டர் சொல்லிவிட்டுப் போனார். ஆனாலும் மறுநாள் காளிகோவில் சுவரில் “பண்டா சாகவில்லை, சாகக் கொல்லப் பட்டான்’ என்று எழுதிவைக்கப்பட்டிருந்தது. அப்பாடா, பொலிஸ் பட்டாளமே ஊரைச் சுற்றி ஐந்தாறு இளவட்டக்களைப் பிடித்துச் சென்று உதைக்கு மேல் உதையும், வதைக்கு மேல்வதையும் செய்து பார்த்தார்கள். ஆனாலும் ஒருத்தனாவது எழுதியவனைச் சொல்லவில்லை. அந்த வதைக்குட்பட்டவர்களில் இருவர் இன்னும் புக்கை கட்டிக் கொண்டு திரிகின்றனர். அந்தப் பொலீஸ் தேடுதலின் போதெல்லாம் ஆறுமுகம் பொலீசார் கண்ணில் படாமல் தலைமறைவாகத் திரிய முயற்சித்ததை சின்னாச்சி நன்கறிவாள்.

ஊரில் உடையார் வீட்டுக்குத் தான மதில் சுவர் உண்டு. அப்படியானால் ஏனையவர்களுக்கு நிலம் மட்டுந்தான் இருக்கிற தென்பது அர்த்தமல்ல. எல்லோரும் உடையார் வீட்டுக்கு அல்லது, சொந்தம்பட்டப் போல அவர் குடும்பச் சுற்று வட்டத்து நிலத்தின் வாரக்குடிகள். ஆனால் உடையார் தனக்கு மட்டு மட்டாக – ‘அடக்கமாக’ இரண்டு ஏக்கருக்கு மதில் சவர் கட்டிக்கொண்டிருக்கிறார்.

நேற்று இரவு அந்த மதில் சுவரில் ‘கொலைகாரன் ஒழிக!’ என்று யாரோ எழுதி வைத்து விட்டார்கள்.

பரம்பரை பரம்பரையாக உடையார் குடும்பம் ஊருக்கு இராஜ குடும்பம். அக் குடும்பத்தினருக்குத்தான் பரம்பரை பரம்பரையாக இங்கிலீசு தெரியும், உடையாரின் அப்பனின் அப்பனோடு வெள்ளக்காரத் துரை ஒருத்தர் உயிர்ச் சிகேகிதமாக இருந்த தொடக்கத்தோடு, எந்த இலாக்காவிலும் உடையார் குடும்பமே மேலதிகாரம் வகிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. குடும்பத்தின் நிறம், குணம், பார்வை, பேச்சு, உடை, நடை, யாவுமே வெள்ளைக்காரரைப் போலத்தான்! அந்த வெள்ளைக்காரத் துரையோடு ஒட்டிக்கொண்டு வந்த சகல அதிகாரங்களும் இன்று வரை நிலைத்துத்தான் நிற்கிறது, அப்படி இருந்தும், அவரின் மதில் சுவரிலேயே கொலைகாரன் ஒழிக!” என்று எழுதி வைத்து விட்டார்களே! இது காலமாற்றம் என்பதை உடையாரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

“மகன் ஆறுமுகத்திற்கு எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்” என்று சின்னாச்சி எண்ணி ஏங்கினாள். மகன் என்ன தான் ஊருக்காக உழைத்து மதிப்பெடுத்தாலும், சமீபத்தில் அவனும் அவன் கூட்டத்தினாதும் செய்துவரும் பிரசாரம் நியாய ஈனமாகவே அவளுக்குட்பட்டது.

“உழுபவனுக்குத்தான் நிலம்”

இப்படி அவர்கள் கூறுகிறார்கள். உடையாரின் சொந்த நிலத்தை பறித்தெடுக்கப் பார்ப்பதில் துளியும் நியாயமில்லை என்பது தான் அவள் முடிவு,

***

என்ன தான் இருந்தாலும் உடையார் வீட்டு மதில் சுவரில் இப்படி எழுதியிருக்கக்கூடாது. என்பது மகள் செல்லம்மாளின் முடிவு. இப்படி எழுதியவர்கள் மேல் அவளுக்கு அருவருப்புக் தான்.

இந்த அருவருப்பு சம்மா வெறுமனே காற்றில் எழுந்த தல்ல. சமீபத்தில் ஏற்பட்டதே ஒரு உறவு முறை அதனால் எழுந்தது தான்,

உடையார் வீட்டு வாரக் குடிகளில் செல்லம்மாள் ஒருத்தி தான் பெண்களில் படிக்கவள். படிக்தவளென்றால் பிரமாதமாக இல்லை. ஏதோ ஒன்பதாவது வரை அவ்வளவு தான்.

செல்லப்பனுக்கும், சின்னாச்சிக்கும் இருந்த ஆசையின் ஒரு பகுதி எப்படியோ அரையும் குறையுமாக நிறைவேறிவிடடது.

”என்ன செல்லப்பன், உன்ரையள் படிச்சு என்ன செய்யப் போகுதுகள் இனிப் போதும் திப்பாட்டு!” உடையாரின் இந்த வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல் செல்லப்பன் நடந்து கொண்டான்.

உடையார் தீர்க்க தரிசி! எதையோ வைத்துக்கொண்டுதான் இப்படிக் கூறியிருக்கிறார்.

உடையாரின் பேரன் பாஸ்கரன்.

இவன் செல்லம்மாளுக்கு மேலாகப் படித்துக்கொண்டிருந்தான்.

அவனின் மன எழுச்சிகளுக்கு வழி விலத்திச் சென்று விடச் செல்லம்மாளுக்கு முடியவில்லை. பார்ப்பதற்கு வெள்ளைக்காரப் பரம்பரை போன்ற அவனை அவள் காதலித்தாளோ? நேசித்தாளோ? இரண்டும் சேர்ந்ததான ஒன்று செய்தாளோ? அல்லது தனித் தனியனாகத்தான் செய்தாளோ?.

பாஸ்கான் புத்திசாலி, தன்னைக் காட்டிக் கொடுக்காதவன். நிதானமாக – இதமாக அவளை அணுகினான்.

செல்லம்மாளும் இலேசுப்பட்டவளல்ல. தன்னை இழந்து விட அவள் தயாராக இல்லை. இரண்டாண்டுகள் மிகவும் இறுக்கமாக நடந்து கொண்டாள். என்ன போதாத காலமோ அன்று அந்தத் தமிழ்ப் படக் காட்சிக்குப்போய்விட்டாள்.

காளி கோவில் நிதிக்காக, பட்டணத்தில் தமிழ்ப் பட கொன்று காட்டப்பட்டது, பாஸ்கானும் இந்த ஏற்பாட்டாளர்களில் ஒருவன்.

சுதாநாயகியாக மூக்கும் முளியுமாக ஒருத்தி, கதையில் அவள் ஒரு அநாதை.

கதாநாயகனாக இரட்டை நாடிக்காரன் ஒருத்தன். கதையில் இவன் ஒரு சீமான் மகன்.

காதலியை அடைய அவன் வாள் எடுத்து விசுகிறான்; கம்பெடுத்து அடிக்கிறான். விரசாகசங்கள் புரிகிறான். கடைசியில் வீர கர்ச்சினையே புரிகிறான். முடிவில் அவளின் உறவினர்கள் மனம்மாற அநாதைப் பெண் அவனுக்கு மனைவியாகிறான். ‘மங்களம்” என்று கதை முடிகிறது.

செல்லம்மாள் கண்டதெல்லாம் அந்த இரட்டை நாடிக்காரனில் பாஸ்கரனைத் தான்.

இத்தனை சுழுவில் வெற்றி கிட்டுமெனப் பாஸ்கரன் எதிர்பார்க்கவில்லை. ‘வாழ்க தமிழ்ச் சினிமா!’ என்று வாழ்த்த அவனுக்கு நேரமும் போதாமல் இருந்தது.

நீலவானத்தில் வெள்ளி நிலா ஊர்ந்து மறைந்துவிட்டபோது,

பட்டணப் புறத்தின் ஊதைக் காற்றுக் கலந்துவிடாத புனிதமான வயல் பரப்புக் களத்து மேட்டில் தென்றல் தாலாட்டித் தழுவ,

செல்லப்பனின் வழக்கமான குறட்டை ஒலி கேட்காத தொலைவில்,

வளர்ந்து, தரை நோக்கிச் சாய்ந்து, அசைந்து லலிதமாடும் நெல் குமரிக் கொத்தின் மங்களகரமான ஓசைக்கு நடுவே வந்த தேயொரு உறவு! அந்த உறவு உடையார் வீட்டு மதிற் சுவரில் எழுதி வைத்தவன் மேல் அருவருப்பையே வருவித்தது.

***

அடிவானத்தில் நிலவு புகைந்து போக இன்னும் நேரமிருந்தது.

“பிள்ளை, தொண்ணன் வந்தால், சோறு போட்டுக் குஞ்சுக் கடகத்தாலே மூடி வைச்சிருக்கிறன் எடுத்துக் குடு மோனை. ஆ… நாரியெல்லாம் கொதிக்குது. நான் எப்பன் உறங்கப் போறன்” என்று மகளுக்குச் சொல்லிவிட்டுச் சின்னாச்சியும் உறங்கிப் போய்விட்டான்.

செல்லம்மாளுக்குச் சங்கட மாகிவிட்டது. நிலவு பட்டுப் போய்விட்டபின்னும் அண்ணன் வராவிட்டால்……. வழமைப்படி நிலவு பட்டுப்போய்விட்டதும் களத்து மேட்டில் பாஸ்கரன் காத்து நிற்பானே!

இருந்தாலும் சிறியதோர் நம்பிக்கை அவளுக்கு, நிலவுபட்டுப் போவதற்கு இன்னும் நேரமிருக்கிறது.

வழமை போல, நிலவு பட்டுப் போகும் வரையில் ஏதரவ தொன்றைப் படித்துக்கொண்டிருக்கக்கூடிய மனநிலை இப்போது இல்லையாயினும் என்ன செய்வது? மனதை வலிக்திழுத்து, அன்று காலை அண்ணன் வைத்துவிட்டுப் போன புத்தக மொன்றைக் கையில் எடுத்துத் திறந்தாள்.

அது ஒரு மாத சஞ்சிகை.

மெதுவாக அதன் பக்கங்ளைப் புரட்டிக் கண்களை மேய விட்டவள் அதன் பதினைந்தாவது பக்கத்தில் சிலை குத்தி நின்றுவிட்டாள்.

அங்கே ஒரு சின்னச் சிறுவனின் படமிருந்தது. அவன் கையில் வெடிகுண்டு வைத்து துப்பாக்கிச் சனியனுடன் நின்ற நான்கைந்து பட்டாளக் காரர்களை நோக்கி வீசி எறிந்து கொண்டிருந்தான். “ஒரு வீரனின் கதை” என்ற கொட்டை எழுத்துமின்னிச் சிரித்தது.

எங்கோ ஒரு தேசத்தில் கொடுமைக்காரர்களை எதிர்த்து ஒரு சின்னஞ் சிறியவன் வீரப் போர் புரிந்த சம்பவம் அது.

ஒரே மூச்சில் செல்லம்மாள் அதைப் படித்தாள்.

அவள் கண்கள் கலங்கிப் போயின.

அவள் மனதால் விம்மினாள். உணர்ச்சி அவள் உடலெல்லாம் பரவி ஓடியது.

அந்தச் சின்னஞ் சிறியவள் ஸ்தூல வடிவில் அவள் கண்களுக்கு முன்னே வந்துவிட்டான்.

“அசிங்கமானவர்களே, கொடுமைக்காரர்களே, மிருகங்களே, கொலை வெறியர்களே ஒழிந்து போங்கள்!”

இப்படிக் கத்திக் கொண்டே செல்லம்மாளின் மனக் கண்களுக்கு முன்னால் அவன் வீழ்ந்து மடிந்தான்.

செல்லம்மாள் கண்ணை மூடிக் கொண்டாள். அவள் கண் குழிகளில் முட்டி நின்ற நீர் வெட்டுண்டு மார்புக் சட்டையில் வீழ்ந்தது.

அந்த வீரனின் உள்ளுணர்வைத்தான் அவள் அனுபவிக்கிறாளா? வெளியே ஆளரவம் கேட்டது.

சுய நிலைக்கு வந்த செல்லம்மாள் கண் விழித்தபோது, அடிமேல் அடி வைத்துக்கொண்டே ஆறுமுகம் வந்தான். ‘அண்ணே’ என்று பேச முயன்றவளைக் கையமர்த்தி , விளக்கை எடுத்துக்கொண்டு ஆறுமுகம் குசினிக்குள் போனான். அவன் பின்னே சென்ற செல்லம்மாள் அவன் காதுக் குள் ”என்ணண்ணை” என்றாள்

“தங்கச்சி, பொலிசு என்னைத் தேடுது, மதில் சுவரிலை எழுகின சாட்டிலை என்னைப் பிடிச்சுக் காலைக் கையை வாங்கியிட்டா விவசாயிகள் சங்கம் அழிஞ்சு போகுமெண்டு நினைக்கிறாங்க”

இதை மட்டும் கூறிவிட்டு அவன் சோற்றுருண்டைகளை உள்ளே தள்ளினான். அவன் முடறு முறிப்பு செல்லம்மாளின் கெஞ்சுவரை சென்று மோதியது.

சாப்பாடு முடிந்தது. ஆறுமுகம் வெளியே வந்தான். எந்தக் கேள்வியுமின்றி செல்லம் அவன் பின்னே வந்தாள்.

“தங்கச்சி, நான் காளி கோயிலுக்கை படுக்கப் போறன். நீ போய்ப் படு” என்று மட் டும் கூறிய ஆறுமுகம் அவசரத் தோடு, வயல்க் கரையால் இறக்கி, களத்து மேட்டையும் தாண்டி, மறைத்து விட்டான்,

நிலவு அடிவானத்தைத் தொட்டு நின்றது.

***

“செல்லம்மா, என்னை நீ நம்பு, என்ன வந்தாலும் நான் உன்னைக் கைவிடப் போறதில்லை. ஆனா நான் முதல்லை சொன்னது போலை இன்னும் இரண்டு வருஷம் போகட்டும், செல்லம்! விடிஞ்சதும் வெறு வயித்தோடை இந்தச் சக்கரை உருண்டையை உடைக்காமலுக்கு அப்படியே விழுங்கியிடு. அப்புறம் எல்லாம் சரியாப் போயிடும், இரண்டு வருஷம் வரையிலை இப்பிடி இருந்திட்ட மெண்டா அப்புறம் நீயும் மேஜராகிவிடுவே, நானும் என் கால்லை நிக்கத் துவங்கியிடுவன். பிறகு நாம யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. இதுக்கு முந்தி நீ பிள்ளைக்காரியாகிவிட்டால் ஊரெல்லாம் கீயென்டு போயிடும். யோசிச்சுப்பார் செல்லம். நான் உன் அத்தான் என்கிறதை நீ ஒத்துக்கொண்டா நான் சொல்றபடி இந்தச் சக்கரைக் கட்டியை வெறு வயித்திலை சாப்பிட்டிடு…….”

கரை தெரியாச் சமுத்திர நடுவே ஒரு சின்னஞ் சிறிய கட்டையைத் தன்பலக் கொண்டு அமுக்கிப் பிடிக்கும் ஒரு நாதியற்ற ஜீவனைப் போன்று பாஸ்கரனை அப்படியே அமுக்கிக் கொண்டு செல்லம்மாள் அசைவற்றுக் கிடந்தான். கடைசியில் அவன் பேசியது அவளுக்கு நியாயமாகவே பட்டது. எதையும் பேசிவிட முடியாத நிலையில் வழிந்தோடிய கண்ணீமை அவளின் அகன்ற மார்பிலே துடைத்துக் கொண்டு அவன் தந்த சக்கரைக் கட்டியை வாங்கி முந்தானைத் தலைப்பில் முடிந்து கொண்டாள்.

உலகம் அமைதியாகக் கிடந்தது.

களத்து மேட்டில் தூற்றி விடப்பட்ட நெற் சப்பிகளில் கால் கை பட்டு உரசும் ஓசை காதுச் சவ்வுகளைக் கீறுவது போல் பூதாகாரமாகக் கேட்டது.

“செல்லம், கொண்ணண்ரை வேலை மிச்சம் சரியில்லை. எங்களுக்கு அவன் எதிரியாய் விட் டான். என்னைப் பற்றிக தெரியாமல் எங்க வீட்டு மதில் சுவரிலே எழுதிப் போட்டான். நீயும் ஒருக்கா அவனுக்குச் சொல்லிப்பார். ஊரிலே நாம கொலைகாரரெண்டா ஆரும் நம்புவினமோ?”

செல்லம்மாளுக்கு உடலெல்லாம் சுரீரென்றது. சணவேளை அவள் திகைத்துப் போனாள்.

“உடையாற்றை இளைய பேத்தியாலை தான் இந்தச் சிங்களப் பொடியன்ரை உயிர் போச்சுது எண்டு ஊரெல்லாம் பேசுறாங்களே’ என்று பட்டென்று சொல்லி விடத்தான் அவன் வாய் உன்னினான். ஆனாலும் அவனுக்கு நேருக்கு நேர் இந்த வார்த்தைகள் பிரசவிக்கவில்லை .

“செல்லம், கொண்ணையைத் திருந்தி கடக்கச் சொல்லு, இல்லாட்டி பிறகு என்னிலை குறை நினைக்காதை!”

பாஸ்கரன் சற்று அழுத்தமாகவும், எரிச்சலாகவும் இனதச் சொன்னான்.

இப்போதும் ‘சுள் ‘ளென்று ஏதாவது சொல்லதான் அவள் நினைத்தாள். அதுவும் முடியாமல் போயிற்று.

செல்லம்மாளின் வீட்டு நாய் ‘அவக், அவக் ‘கென்று குரைத்தது.

வெளிப் படலையை உதைத்துத் தள்ளிக் கொண்டு யாரோ உள்ளே வந்து விட்டதைப் போன்ற ஆரவாரங்கள்,

வழவைச் சுற்றி ‘டோஜ்லையிற்’றுக்களின் ஒளிப் பொட்டுக்கள்!

ஒளிப் பொட்டொன்று வேலிக் கரையால் ஊர்ந்து வந்தது.

செல்லம்மாளை அல்லாக்காகத் தூக்கி வீசிவிட்டு பாஸ்கரன் மின்னலாக மறைந்தான்.

செல்லம்மாள் வெல வெலத்துப் போய்விட்டாள்.

வெட்ட வெளியில் – களத்து மேட்டில் செல்லம்மாள் தன்னந்தனியாக நின்றாள். தலையைச் செருகிக்கொள்வதற்கே னும் ஒழிவிடம் இல்லை. வயற்கரையால் ஊர்ந்து வந்த ஒளிப் பொட்டொன்று அவள் நெற்றிக்கு நேரில் நின்றது.

வேறொரு ஒனிப் பொட்டு ஓடிச் சென்ற பாஸ்கானைத் துரத்தியது. ஆனாலும் அவளின் முதுகுப் புறம் மட்டும் தெரிந்தது. அதற்கிடையில் பக்கத்துக் கொய்யாக் காட்டுச்குள் அவன் மறைந்து போனான்.

***

“எடேய் செல்லப்பன், உன்ரை மோன் எக்கை சொல்லடா !”

“ஐயா, இந்தக் காளியாச்சி பாணை எனக்குத் தெரியாதையா!”

செல்லப்பனை ஒருவன் இழுத்து உதைத்துத் தள்ளினான். அந்தத் தாக்குதல் வேகம் பக்கத்து மரத்தோடு அவன் மண்டையை மோத வைத்தது. பற்களை இறுகக் கடித்துக்கொண்டு, அடிபட்ட இடத்தைப் காத்தால் பொத்தினான் செல்லப்பன். அவன் காத்தால் இரத்தம் பீறிட்டு வழிந்தது.

பக்கத்தே நின்ற மற்றவன் அவன் அடிவயிற்றை நோக்கிக் குத்தினான். செல்லப்பனுக்கு இது ஒன்றே போதும். அவன் சுருண்டு விழுந்தான்!

“எனெடி நீ சொல்லடி எங்கைபடி மோன், சொல்லடி”

“என்ரை குஞ்சுகளாணை எனக்குத் தெரியாதையா!”

“திருட்டு வேசை சொல்லடி!”

குடி போதையிலிருந்த ஒருத்தன் சின்னாச்சியின் பிடரி மயிரைப்பற்றிக் கீழ்நோக்கி இழுத்தான்.

அப்போது தான் செல்லம்மாள் அங்கே கொண்டுவரப்பட்டாள், இவளை இழுத்து வந்த ஒருத்தன் அதிகாரியின் காதுக்குள் எதையோ பேசினான்.

“என்ன அப்படியே சங்கதி, எடி வேசைக் குமரி, உன் அண்ணனோடையாடி படுத்திருத்தனி? தேவடியாள் மகளே, வாடி இங்கே, எங்கையடி ஓடி விட்டான் உன்ரை அண்ணன்? சொல்லடி உன் அண்ணனோடை யாடி படுத்திருந்தனி?”

அதிகாரி தனது டோஜ்சின் ஒளிப் பொட்டை அவள் மார்புக்கு நேராக வலமிடமாக ஊர விட்டான். பேசுவதற்கு எதுவுமின்றி அதிகாரி மீண்டும் மீண்டும் இதையே செய்ய முற்பட்டார். அவள் உடை கலைந்திருந்தது.

தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு செல்லம்மாள் வெறுமனே விம்மினாள்.

அந்த அதிகாரி செல்லம்மா ளோடு தனித்திருக்க, சின்னாச்சியும், செல்லப்பனும் அப்புறப்படுத்தப்பட்டனர்.

சற்று வேளைக்குப் பின், உடல் நிலத்தில் உரச உரச, செல்லப்பன் இழுத்துச் செல்லப்பட்டான். சின்னாச்சி மண்ணை வாரித் திட்டினாள்.

செல்லம்மாள் முனகியபடி வீழ்ந்து கிடந்தாள். அவள் கண்கள் மூடிக் கிடந்தன.

சில மணி நேரத்திற்குமுன் படித்தாளே ஒரு வீரனின் கதையை! அதை அவள் நினைத்துப் பார்த்தாள்.

ஸ்தூல வடிவில் அந்த வீரச் சிறுவன் மனதுக்கு முன்னால் வந்து விட்டான்.

“அசிங்கமானவர்களே, கொடுமைக்காரர்களே, மிருகங்களே, கொலை வெறியர்களே ஒழிந்து போங்கள்!”

அந்த வீரனின் ஓங்கார ஒலி அவள் காதுவரை கேட்கிறது.

எதை நினைத்துக்கொண்டாளோ செல்லம்மாள்!

அவசர அவசரமாக எழுச்திருந்தவள் முன்தானையைத் தொட்டுப் பார்த்தாள். பாஸ்கரனால் தரப்பட்ட சர்க்கரை உருண்டை பவுத்திரமாக இருந்தது.

அதை எடுத்து அவள் வெளியே விட்டெறிந்தாள். செல்லப்பனின் இரத்தம் பட்டிருந்த மாத்தடியில் பட்டு அது சிதறிப் போவது தெரிந்தது.

அவளுக்கு அடி வயிற்றில் கனதி தெரிந்தது. உள்ளே இருந்த ஜீவன் முந்திக்கொள்வது போன்ற அசைவா அது? ஆனாலும் இந்தக் கனதி நேற்றுப் போல இல்லை. அதில் நமைச்சலும், அருவருப்பும் அருக்குளிப்பும் தெரியவில்லை.

ஏனென்றால் உள்ளே இருப்பவன் புதிய பிரமன்!

செல்லம்மாள் மேலே பார்த்து வாயசைத்தாள். ‘பிரமனே உனக்குப் படைப்புத் தொழில் தெரியவில்லை. அதை உனக்குப் புதிதாகச் சொல்லித் தர நான் ஒருத்தனை பெற்றுத் தரட்டுமா?” என்று அவள் கேட்பது போலிருந்தது.

வைகறையை எதிர்நோக்கி அடிவானம் சிவத்துக் கிடந்தது. செல்லம்மாள் இப்போது இந்தச் சிவப்பையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

– வசந்தம் 1966.03

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *