பிரசாதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 7,868 
 

சரியாக ஆரத்தி ஆரம்பிக்கும் நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்து, கால்களை அலம்பிக் கொண்டு ஆரத்தி பார்க்க நின்ற வரிசையில் கடைசியாக சேர்ந்து கொண்டேன். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தால் “என்ன இவ்வளவு லேட்?” என்பது போல சந்நிதானத்திலிருந்த பாபா கம்பீரமாகப் பார்த்தார்.

சரியாக பத்து நிமிடம் ஆயிற்று நாமாவளி சொல்லி பஜனைகள் பாடி முடிக்க. ஆரத்தி முடிவில் ‘போலோ சாயிநாத் மகாராஜ் கீ …ஜெய் …’ என்று சொல்லி “எல்லாரும் பாபா முகத்தைப் பாருங்கள்” என்ற குரல் வந்தபோது தான் மூடிய கண்களைத் திறந்தேன். பின் ஒவ்வொருவராக படியேறி பாபாவை நமஸ்கரித்து விபூதி பெற நகர ஆரம்பித்தார்கள். அப்பொழுதான் எனக்கு முன்னர் நின்றிருந்த நபரைப் பார்த்தேன்.

அவர் டர்ன் வந்ததும் படியேறாது சட்டென்று மேடைக்கு வலப்புறம் சென்று நின்று கொண்டார். அப்போது தான் அவரை நன்றாகப் பார்த்தேன். நல்ல உயரம். கரு கரு தேகம். நாற்பதுகளின் மத்தியில் இருப்பார். இதெல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது அவர் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கெட்டியான தங்கச் சங்கிலியும் அதில் இணைந்திருந்த சிலுவையும்.

யோசித்துக்கொண்டே மேலே ஏறி பாபா அருகில் சென்று அவர் பாதங்களைப் பணிந்து எழுந்து அர்ச்சகர் மாமாவிடம் விபூதி வைத்துக் கொள்ள நின்றேன். “இதோ” என்று சொல்லி அவர் அந்த மனிதரை நோக்கிச் சென்றார்.

“என்ன டேவிட்! எத்தனை தடவ சொல்றது? லைன்ல எதுக்கு நிக்கறே? நேராவே இங்க வந்து நிக்கலாமே?”

“பரவால்ல சாமி! கோயில்ல வந்து லைன ஓடைக்கலாமா?” என்று மெலிதாக சிரித்தார் டேவிட்.

“இந்தாப்பா விபூதிப் பிரசாதம். மாமி சௌக்கியமா?” என்று கேட்டவரிடம், “இருக்காங்க சாமி! என்ன, எளுந்து நடக்கத்தான் முடியாது போல இருக்கு” என்று சொன்னார்.

“எல்லாம் அவன் சித்தம்” என்று சொல்லி அர்ச்சகர் என்னிடம் பிரசாதம் கொடுக்க வந்தார்.

விபூதியை வாங்கிக்கொண்டு கீழே இறங்கிய நான், நேரே பொங்கல் பிரசாதம் கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்குச் சென்றேன். அங்கேயும் டேவிட்! பிரசாதம் விநியோகித்துக் கொண்டிருந்தவர் இவரைப் பார்த்து “வணக்கம் சார்” என்று சொல்ல “தோத்திரம் சேகர்! நல்லா இருக்கீங்களா?” என்று புன்னகைத்தார். அப்புறம் ஒரு சிறிய டப்பாவில் பொங்கல் வாங்கிக்கொண்டு வெளியேறினார்.

பொங்கலை வாங்கிக்கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்த நான் யோசனையில் மூழ்கிப் போனேன். பாபா கோவிலில் டேவிட்!

அதற்குள் கூட்டம் கலைந்து விட, அர்ச்சகர் மாமா கீழே இறங்கி வந்தார். “என்ன கதாசிரியரே! இன்னைக்கு லேட்? சாதாரணமா ஆரத்தி ஆரம்பிக்கறதுக்கு மின்னால வந்துட்டுப் போய்டுவேளே!”

“இன்னைக்கு லீவு. கொஞ்சம் கண் அசந்துட்டேன். அப்புறம்…” என்று இழுத்தேன்.

‘என்ன’ என்பது போல பார்த்தார். “டேவிட்… கோவில்ல…”

“ஒ! இங்கேயும் கதை தேட ஆரம்பிச்சுட்டீரா? ஆனா இது ரொம்ப சுவாரசியமான கதை. கேக்கறேளா?” என்றார்.

“சொல்லுங்க மாமா! கண்டிப்பாக் கேக்கறேன்”

“ நீங்க தெனமும் சீக்கிரம் வந்து போறதுனால இவரப் பாத்திருக்க சான்ஸ் இல்ல. இவர் பேரு டேவிட். மாடம்பாக்கத்துல பெரிய டிம்பர் மர்ச்சன்ட். ஹார்ட்வேர் ஸ்டோர் வச்சிருக்கார்.

அவர் ஆத்துக்காரி அய்யர் ஜாதி. பேரு கமலம். சின்ன வயசுல ஒரே ஏரியாவுல இருந்த ரெண்டு பெரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிண்டா. அவா மேரேஜ்ல கூட நிறைய பிரச்சனை. பொண்ணு ஆத்துலே ஒத்துக்கலை.

வீடேறி பொண்ணு கேக்கப் போனவர, கமலத்தோட தோப்பனார் “ உன் ஜாதி என்ன, என் ஜாதி என்ன? என்னமா நீ என் பொண்ணக் கேட்டு வரலாம்’னு பேசக்கூடாதத எல்லாம் பேசிட்டார்.

கோவமான டேவிட் கமலத்த வெளில கூப்ட்டார். இதப் பாரு என்ன நெஜம்மா ஆசப்பட்டிருந்தா என்னோட வந்துடுன்னு சொன்னார். அவளும் தாயார் தோப்பனார விட்டுட்டு இவரோட வந்துட்டா.

அப்பறம் இவாளுக்கும் அவாளுக்கும் சம்பந்தம் விட்டுப் போச்சு. கமலத்தோட தாயார் தோப்பனார் இருந்தது வாடகை வீடு. இவளே போனதுக்கு அப்பறம் என்னன்னு அவா தங்களோட பையனோட, அதாவது கமலத்தோட தம்பியோட, வேற ஏரியாவுக்குப் போய்ட்டா.

ஒரு ரெண்டு வருஷம் முன்ன, ஒரு நாள் திடீர்னு காலம்பற கமலம் அம்மா கமலத்தோட ஆத்துக்கு வந்தா. வந்தவள என்னன்னு கூட கேக்காம கமலம் மொகத்தத் திருப்பிண்டு உள்ள போய்ட்டா. டேவிட் தான் என்ன ஏதுன்னு விசாரிச்சுருக்கார்.

கமலம் தம்பி ஒரு பெரிய எடத்துப் பொண்ண கல்யாணம் பண்ணின்டானாம். வந்தவளுக்கு மாமனார் மாமியார் பாரமா தோணிருக்கு. ஒண்ணு இவா இருக்கணம் இல்லை நான்னு புருஷங்காரன்கிட்ட சொல்லிட்டா. அந்த புள்ளாண்டானும் இவாள வெளில போன்னு சொல்லிட்டானாம். அந்த வருத்ததுல கமலம் அப்பா அட்டாக் வந்து போய்ட்டார். வேற நாதியில்லாம பொண்ணாத்துக்கு வந்திருக்கா.

அவா கதயக் கேட்ட டேவிட்டோட மனசு எளகிடுத்து. பொண்டாட்டிப் பேச்சையும் மதிக்காம அவ அம்மாக்கு பக்கத்துலேயே ஒரு வீடு எடுத்துக் கொடுத்து எல்லா வசதியும் பண்ணிக் கொடுத்தார். சமைச்சு போட, கூட மாட ஒதவியா இருக்கன்னு ஒரு சமையல் மாமியையும் ஏற்பாடு பண்ணார்.

கமலத்தோட அம்மா பாபா பக்தை. ஒரு நாள் கூட வராம இருக்க மாட்டா. இப்படி இருக்கறச்சே ஒரு நா கோவிலுக்கு வந்துட்டு திரும்பிப் போறபோது அவா மேல ஒரு கார் மோதிடுத்து. கால்ல பெரிய அடி. பெரிய பெரிய டாக்டர்கிட்டல்லாம் காட்டினார் டேவிட். அதான் இன்னிக்கு சொன்னதக் கேட்டேளே, இனிமே நடக்கறது கஷ்டமாம்.

நடமாட முடியாம இருந்த கமலம் அம்மாவுக்கு பாபா கோவில் வராம விபூதி பிரசாதம் வாங்காம மனசு ரொம்ப ஒடஞ்சு போய்டுத்து. அதே கவலைல சாப்டாம கொள்ளாம இருந்தா. இது விஷயம் சமையல் மாமி மூலமா தெரிஞ்சுண்ட டேவிட் அவாளப் பாக்கபோனார்.

‘இனிமே இதுக்கெல்லாம் கவலைப்படுவாளா? நான் உங்க பிள்ள மாரி தானே? என்கிட்டே சொன்னா ஏற்பாடு பண்ண மாட்டேனா? நாளேலேர்ந்து நானே போய் விபூதி வாய்ண்டு வர்றேன்’னு சொல்லியிருக்கார்.

அதக் கேட்ட கமலம் அம்மா உருகிட்டா. அன்னிலேர்ந்து இன்னி வரைக்கும் மனுஷன் நாள் தவறாம வந்து விபூதி வாங்கிண்டு போறார். பெத்த பிள்ளை தள்ளி வச்ச காலத்துல வந்த பிள்ளை இப்படி இருக்கார். ஆனா என்ன, கமலம்தான் இன்னும் மாறல்ல” என்று சொல்லி முடித்தார் அர்ச்சகர் மாமா.

எனக்கு ஒரே மலைப்பு! இப்படியும் நடக்குமா?

சரியாக அப்போது அடுத்தத் தெருவில் இருந்த தேவாலயத்தின் மணி எட்டு முறை அடித்து ஓய்ந்தது. நான் திரும்பி சந்நிதானத்தைப் பார்த்தேன். பாபா அதே காருண்ய புன்னகையுடன்.

ஒன்றுமே புரியவில்லை. அதே சமயத்தில் ஏதோ புரிவது போலவும் இருந்தது.

– மார்ச் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *