பிரகாசமும் சாயையும்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2022
பார்வையிட்டோர்: 30,882 
 

(1946 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆரம்பத்திலேயே மட்டம் தட்டியிருந்தால், இம் மாதிரி நடந்திராது. அப்பொழுது முடியவில்லை. முடியும் என்றாலும்-உலகத்தில் எவ்வளவோ நடக்கின்றன எல்லாமா எனக்குத் தெரிகின்றன? இந்தக் கதையைப் படியுங்கள். இதனால் எவ்வித ஹானியும் ஏற்படாது என்பது என் நம்பிக்கை. கதை எழுத உட்காரும்போது எல்லாம் உண்மையாக எழுதவேண்டுமென்று பிரதிக்ஞை செய்து கொள்ள முடிவதில்லை. இரண்டொரு தவறுகளும் இருக்கலாம். அபிப்பிராய பேதங்களும் இருக்கலாம். இதனால் என்ன குடியா முழுகிப்போய்விடப் போகிறது? ஆமாம்; கதாநாயகன் பெயர் யக்ஞதத்த முகர்ஜி. ஆனால் ஸுரமா அவனைப் ‘பிரகாஷ்’ என்றுதான் அழைப்பது வழக்கம். கதாநாயகியின் பெயர்தான் தெரிந்துவிட்டதே. ஆனால் யக்ஞதத்தன் அவளைச் ‘சாயா’ என்று தான் அழைப்பது வழக்கம். சில தினங்கள் வரையில் யார் பிரகாசம், யார் சாயை என்ற விவாதம் இருந்தது. ஆனால் ஒருவிதமான முடிவும் ஏற்படவில்லை, கடைசியில் ஒரு நாள் ஸுரமா, “உன் கூர்மையான புத்திக்கு இதுகூட விளங்கவில்லையா? நீ இல்லாவிட்டால் நான் ஏது? ஆனால் நான் இல்லாமல் நீ நெடுநாள் இருக்கலாம்; ஆகையால் நீ பிரகாசம், நான் சாயை” என்றாள்.

யக்ஞதத்தன் சிரித்தான். “ஒருபக்ஷமாக ‘டிக்ரி’ பெறவிரும்பினால், வாங்கிக்கொள். ஆனால் விஷயம் தீர்ந்து விடவில்லை” என்றான்.

“இல்லை, தீர்ந்துவிட்டது, அழகாகத் தீர்ந்துவிட்டது. பிரகாஷ்! இனிமேல் சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை. நீ பிரகாசம், நான் சாயை!” என்று சொல்லிக் கொண்டே சாயா பலவந்தமாகப் பிரகாசனை ஓய வைத்து விட்டாள்.

***

கதை இதுவரையில் தான் வந்திருக்கிறது, ஆனால், இனி உங்களுக்குள் சண்டை வந்துவிடப் போகிறதே என்ற பயம்தான். இவர்கள் ஸ்திரீ-புருஷர் என்று நீங்கள் சொல்லுவீர்கள். நான் சொல்வேன்; “ஸ்திரீ புருஷர்கள் தான ; ஆனால் கணவன், மனைவி இல்லை” என்று. உங்கள் புருவங்கள் விரியும். அப்படியானால் “முறையற்ற காதலா?” என்பீர்கள். இல்லை, புனிதமான காதல்” என்பேன் நான். உங்களுக்கு நம்பிக்கையே ஏற்படாது. முகத்தைத் தூக்கிக்கொண்டு, ‘வயதென்ன?’ என்று கேட்பீர்கள். “பிரகாசனுக்கு வயது இருபத் தொன்று: சாயாவுக்குப் பதினெட்டு” என்பேன் நான். இதற்கு மேலும் அறிய விரும்பினால் இதோ ஆரம்பிக்கிறேன்.

யக்ஞதத்தன், சிறிய அழகிய தாடி, கண்ணுக்குக் கண்ணாடி, தலையில் ‘லவண்டர்’ வாஸனை, தேர்ந்தெடுத்த அழகான கரையுள்ள வேஷ்டி, சட்டைக்கு ‘ஸெண்ட்’ காலில் சாயா தன் கையினால் பூவேலை செய்த ‘ மக்மல் ஸ்லிப்பர்’ இவைகளோடு விளங்குவான். லைப்ரரி நிறையப் புஸ்தகங்கள் ; வீட்டில் அநேக வேலைக்காரர் கள்; மேஜை அருகே அமர்ந்து யக்ஞதத்தன் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறான். எதிரே பெரிய நிலைக் கண்ணாடி. படுதாவை விலக்கிக் கொண்டு ஜாக்கிரதை யாகச் சாயா உள்ளே பிரவேசிக்கிறாள். பேசாமல் பின்னால்வந்து பிரகாசனின் கண்ணைப் பொத்த வேண்டு மென்பது அவள் விருப்பம். ஆனால் அருகே வந்து கையை எடுத்ததுமே அவள் உருவம் கண்ணாடியில் தெரிந்துவிட்டது. பார்த்தான் யக்ஞதத்தன் ; அவள் முகத்தைப் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டிருந்தான். ஸுரமாவும் சிரித்துவிட்டாள்? “ஏன் பார்த்தாய்?” என்றாள்.

“இது என் குற்றமா?”

“பின்னே யார் குற்றம்?”

“பாதி உன்னுடையது. பாதி இந்தக் கண்ணாடியினுடையது!”

“இப்பொழுதே அதை உடைத்து விடுகிறேன்!”

“உடைத்து விடாதே, இதை உடைத்து விடுவாயானால் மற்றொரு பாதிக்கு என்ன செய்வாய்?”

ஸுரமா இரண்டொருதரம் அசைந்து கொடுத்துக் கொண்டு “பிரகாஷ்!” என்றாள்.

“சொல்லு சாயா!”

“நீ ஏன் இளைத்துப் போகிறாய்?”

“எனக்கு அப்படித் தோன்றவில்லையே!”

“நீ ஏன் சாப்பிடுவதில்லை?”

யக்ஞதத்தன் சிரித்துக் கொண்டே, “சாயா, சண்டைபோட வந்திருக்கிறாயா?” என்றான்.

“ஆமாம்!”

“நான் அதற்குத் தயாராக இல்லை.”

“நீ ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை?”

“இதற்குத்தான் தினம் ஒருமுறை பதில் சொல்லுகிறேனே!”

“இல்லை, செய்துகொண்டே ஆகவேண்டும்.”

“சாயா, நீ ஏன் விவாகம் செய்துகொள்ளவில்லை?”

ஸுரமா யக்ஞதத்தனின் கையிலிருந்த கடிதத்தைப் பிடுங்கிக் கொண்டு, “சீச்சீ, விதவைகள் எங்கேயாவது கல்யாணம் செய்து கொள்வதுண்டா?” என்றாள்.

யக்ஞதத்தன் சிறிதுநேரம் சும்மா இருந்தான். பிறகு. “எப்படிச் சொல்வது? சிலர் செய்து கொள்வதுண்டு என்கிறார்கள். சிலர் இல்லை என்கிறார்கள்” என்றான்.

“அப்படியானால் இந்த விஷயத்தில் என்னைக் குற்றவாளியாக்க ஏன் முயற்சிக்கிறாய்?”

யக்ஞதத்தன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டு, “அப்படியானால் எனக்கு ஸேவை செய்தே உன் வாழ்நாளைக் கழித்து விடுவாயா?” என்றான்…

“உம்” என்று சொல்லி அவள் கண்ணீர் விட்டு அழலானாள்.

யக்ஞதத்தன் அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, “சாயா, உன் மனோபீஷ்டம் என்ன? எனக்கு விவரமாய்ச் சொல்லமாட்டாயா?” என்றான்.

“என்னைப் பிருந்தாவனத்திற்கு அனுப்பிவிடு.”

“என்னை விட்டுவிட்டுத் தனியாக இருப்பாயா?”

ஸுரமாவின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவர வில்லை. இரண்டுதரம் தலையை அசைத்தாள். கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது.

2

“யக்ஞ அண்ணா, அந்தக் கதையை மறுபடியும் ஒரு தரம் சொல்லமாட்டாயா?”

“எந்தக் கதையைச் சாயா?”

“அதைத்தான், என்னைப் பிருந்தாவனத்தில் விலைக்கு வாங்கினாயே; எத்தனை ரூபாய்க்கு வாங்கினாய்?” .

“ஐம்பது ரூபாய்க்கு. அப்பொழுது எனக்கு வயது பதினெட்டு. பி. ஏ. பரீக்ஷை எழுதிவிட்டு அந்தப் பக்கம் சுற்றுவதற்கு வந்திருந்தேன். தாய் உயிருடன் இருந்தாள். அவளும் கூட வந்திருந்தாள். ஒருநாள் மத்தியான்னம் மாலதி குஞ்சத்திற்கருகில் வைஷ்ணவிகளின் கூட்ட மொன்று பாடிக் கொண்டே சென்றது. முதல் முதல் உன்னை அங்கேதான் கண்டேன். (யௌவனத்தின் முதல் படி ஏறும்போது உலகம் அழகாகவும் இனிமையாகவும் தோன்றுகிறது. அதன் இனிமை முழுவதையும் நம் கண் களாலேயே பருக முடியவில்லை. துணையிருந்தால்- இன்னும் இரண்டு கண்கள் இதைப்போலவே ஒன்றாக இந்தச் சோபையின் இனிமையை அநுபவிக்க முடியுமானால்). சரி, அவளுக்கு நான் என்ன சொல்ல முடியும்! இதென்ன சாயா, அழுகிறாயா என்ன?” என்றான்.

“இல்லை, நீ சொல்.” .

“நீ அப்பொழுது பதினைந்து வயதுள்ள புதிய வைஷ்ணவி. கையில் தம்பூரா இருந்தது; பாட்டுப் பாடிக் கொண்டிருந்தாய்.”

“போயேன், நான் என்ன பாட்டுப் பாடியிருக்கப் போகிறேன்?”

“அப்பொழுது உன்னால் பாட முடிந்தது. அதன் பிறகு மிகுந்த சிரமத்தின் பேரில் உன்னை அடைந்தேன். நீ பிராமணப் பெண், பால்ய விதவை. உன் தாய் தீர்த்த யாத்திரைக்குவந்து பிறகு வீடு திரும்பவில்லை. ஸ்வர்க்கத் திற்குச் சென்றுவிட்டாள். நான் உன்னை அழைத்துக் கொண்டுவந்து அம்மாவிடம் ஒப்பித்தேன். அவள் உன்னை மார்புடன் அணைத்துக்கொண்டாள். அதன் பிறகு அவள் இறக்கும்போது எனக்கே திருப்பிக் கொடுத்துவிட்டாள்” என்றான் யக்ஞதத்தன்.

“பிரகாஷ் அண்ணா, எங்கள் வீடு எங்கே?”

“எங்கோ கிருஷ்ண நகருக்கு அருகே என்று கேள்வி.”

“எனக்கு உறவினர் ஒருவரும் இல்லையா?”

“நான் இல்லையா? சாயா, நான் தான் உனக்கு எல்லாம்!”

ஸுரமாவின் இமைகள் மீண்டும் நனைந்தன.

“நீ என்னை மறுபடியும் விற்றுவிட முடியுமா?” என்றாள்.

“இல்லை, அது முடியாது. என்னை விற்றுக் கொள் ளாமல் இந்தக் காரியம் நடவாது.”

ஸுரமா ஒன்றும் பேசவில்லை. முன்போல் கண்ணீர் வழியும் கண்களுடன் அவன் பக்கம் பார்த்தாள். வெகு நேரத்திற்குப் பிறகு மெதுவாக, “ நீ அண்ணா , நான் தங்கை, நம் இருவருக்கும் மத்தியில் ஒரு மதனியை அழைத்துக்கொண்டு வாயேன்!” என்றாள்.

“ஏன், எதற்காக?”

“நாள் பூராவும் அவளுக்குச் சிங்காரம் செய்து அவளை அழைத்து வந்து உன் அருகே உட்கார வைப்பேன்.” .

“நீ அதை உன் முழு மனத்துடன் செய்வாயா?”

ஸுரமா தலை நிமிர்ந்து கண்கொட்டாமல் அவன் முகத்தைப் பார்த்தாள்; பிறகு “ அவளைக்கண்டு பொறா மைப்பட நான் என்ன அப்படி இழிவானவளா?” என்றாள்.

“பொறாமைப் படமாட்டாய், ஆனால் உன் ஸ்தா னத்தை இழந்துவிடுவாய் அல்லவா?”

“ஏன் இழக்கப்போகிறேன்? நான் ராஜாவுக்கு ராஜா வாகவே இருப்பேன். சும்மா ஒரு மந்திரியை நியமிக் கிறேன். இருவருமாகச் சேர்ந்து உன் ராஜ்யத்தை நடத்து வோம். மிக்க ஆனந்தமாக இருக்கும்” –

“இங்கே பார் சாயா, விவாகம் செய்துகொள்ள எனக்கு இஷ்டமில்லை? ஆனால் உனக்கு ஒரு தோழி வேண்டுமென்றால் செய்துகொள்ளுகிறேன்.”

“ஆமாம் அவசியம் செய்துகொள். மிக்க ஆனந்தமாக இருக்கும் இருவரும் சந்தோஷமாக நாட்களைக் கழிப் போம்” என்று சொல்லிவிட்டு மனத்திற்குள் “ மூன்று உலகத்திலும் எனக்கு ஒருவரும் இல்லை. மான அவமான மும் இல்லை. ஆனால் என் பொருட்டு நீ ஏன் களங்கத்தைச் சுமக்க வேண்டும்? நீ எனது கடவுள் ; நீ விவாகம் செய்து கொள். உன் முகத்தைப்பார்த்து நான் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளுகிறேன்” என்று சொல்லிக்கொண்டாள்.

3.

கல்கத்தாவில் பலர் தங்கள் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதைக்கூடத் தெரிந்துகொள்வதில்லை. சிலர் நன்றாகத் தெரிந்துகொண்டிருப்பார்கள். தெரிந்தவர் கள் ” யக்ஞதத்தன் பி. ஏ. பாஸ் செய்திருந்தால் என்ன? சுத்த உதவாக்கரைப் பையன். ஸுரமா ஆட்டிவைத்தபடி ஆடுகிறான்,” என்று சொல்வதுண்டு. சிலசமயம் இந்த வார்த்தைகள் ஸுரமா, யக்ஞதத்தன், இருவர் செவி களிலும் விழுவதுண்டு; கேட்டு இருவரும் சிரிப்பார்கள்.

ஆனால் நீ நல்லவனாக இருந்தாலும் சரி, கெட்டவனாக இருந்தாலும் சரி, பெரிய மனிதனாக இருந்தால் தான் உன் வீட்டுக்கு எல்லோரும் வருவார்கள். குறிப்பாக ஸ்திரிகள் சிலர் ஸுரமாவிடம், ” ஸுரமா, உன் அண்ணாவுக்குக் கல்யாணம் செய்துவைக்கக் கூடாதா?” என்று கேட்பார்கள்.

“செய்து வைக்க வேண்டும், நல்ல பெண்ணாகப் பார்த்து!” என்று பதிலளிப்பாள் ஸுரமா.

ஸுரமாவின் தோழி சிரித்துக்கொண்டே “சரி தான் நல்ல பெண் கிடைப்பது கஷ்டம். உன்னுடைய அழகைக் கண்டு அவன் கண்கள் பூத்துப்போயிருக்கும்போது அவன் …….” என்பாள்.

“சீ, நாசமாய்ப் போறவளே” என்று சொல்லும் போதே ஸுரமாவின் கன்னங்கள் அன்பினாலும் கர்வத்தினாலும் சிவந்துவிடும். 4 அன்று மத்தியான்னம் மழை பெய்துகொண்டிருந்தது. ஸுரமா அறைக்குள் நுழைந்ததும், “ஒரு பெண் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்!” என்றாள்.

“போ, ஒருகவலை ஒழிந்தது, எங்கே? சொல்லு கேட் போம்!” என்றான் யக்ஞதத்தன்.

“அந்தத் தெரு மித்தர் வீட்டில்” ” பிராமணனாக இருந்துகொண்டு காயஸ்தன் வீட்டிலா?”

“ஏன்; காயஸ்தர்கள் வீட்டில் பிராமணர்கள் இருக்க மாட்டார்களா? அவள் தாய் அங்கே சமையல் வேலை செய்கிறாள். பெண் ரொம்ப நன்றாக இருப்பாள் என்று கேள்வி. பார்த்துவிட்டு வா. மனத்திற்குப் பிடித்திருந்தால் வீட்டுக்கு அழைத்துவந்து விடலாம்!”

“நான் என்ன அப்படிப்பட்ட அபாக்யவானா? ஊரிலுள்ள பிச்சைக்காரிகள் இல்லாமல் என் வாழ்தாள் கழியாதா?”

“பிச்சைக்காரிகளைப் பிடித்துக்கொண்டு வருவது உனக்குப் புதிதல்லவே!”

“உம், அப்புறம்?”

“இல்லை, நீ போ, போய்ப் பார்த்துவிட்டு வா. மனத் திற்குப் பிடித்திருந்தால், முடியாது என்று மாத்திரம் சொல்லிவிடாதே”

“எவ்விதத்திலும் மனத்திற்குப் பிடிக்கப் போவ தென்னவோ இல்லை.”

“பிடிக்கும், ஐயா, கட்டாயம் பிடிக்கும். ஒரு முறை பார்த்து விட்டு வாரும்!”

பிறகு சாயாதேவி பிரகாச தேவனுக்கு அடியிற் கண்ட தண்டனையை அளித்தாள். அவனுக்கு வாசனைத் திரவியங்கள் பூசி, தலைசீவி, அவனைச் சிங்காரித்துக் கண்ணாடியின் முன் கொண்டுபோய் நிறுத்தியபோது யக்ஞதத் தனுக்கே வெட்கமாகப் போய்விட்டது. அவன் “சீச்சீ, இதெல்லாம் ரொம்ப அதிகப்படி” என்றான்.

“இருக்கட்டும், நீ போய்ப் பார்த்து விட்டு வா.”

வண்டியில் ஏறிப் பெண் பார்க்கச் சென்றான் யக்ஞ தத்தன். வழியில், கண்ட ஒரு நண்பனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டான், “வா, மித்தர் வீட்டுக்குச் சென்று ‘டிபன்’ சாப்பிட்டு விட்டு வரலாம்” என்றான்.

“இதன் கருத்து?”

“அவர் வீட்டில் ஒரு பிச்சைக்காரப்பெண் இருக் கிறாள். அவளைக் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்!”

“என்ன அப்பா சொல்லுகிறாய் நீ? யார் சொன்னார் கள் உனக்கு இதை?”

“நீங்கள் பொறாமைப்பட்டுச் சாகிறீர்களே, அதே சாயாதேவி தான் !”

யக்ஞதத்தன் தன் நண்பனுடன் பெண் பார்க்க மித்தர் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தான். பெண் ஜமக்கா ளத்தின் மேல் உடகார்ந்திருந்தாள். பல தடவை வெளுத்து வலையைப்போல் இருந்த ஒரு சுதேசிப்புடைவையை உடுத்தி யிருந்தாள். கையில் கறு வளையல். தாம்பர வர்ணத்தில் ஒரு பொற் கடகம் அணிந்திருந்தாள். பல இடங்களில் அதன் உள்ளே இருக்கும் செப்புக்கட்டை தெரிந்தது. தலையில் தடவிக்கொண்டிருந்த எண்ணெய் நெற்றி பூரா வும் வழிந்தது. நடுத் தலையில் பின்னலை எடுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். நண்பர்கள் இருவரும் பார்த்துவிட்டு நகைத்தனர். சிரிப்பை அடக்கிக்கொண்டு, பெண்ணைப்பார்த்து, “உன் பெயர் என்ன?” என்று கேட்டான் யக்ஞதத்தன்,

பெண் தன்னுடைய பெரிய கருவிழிகளை அவன் முகத்தின் மேல் செலுத்தி “பிரதுல்!” என்றது.

யக்ஞதத்தன் தன் நண்பனைக் கிள்ளிப் புன்னகையுடன், “என் அப்பா கதாதரன் அல்லவே!” என்றான்.

நண்பன் மெள்ள அவனை நெட்டிவிட்டு, “அதிகமாக அளக்காதே, சீக்கிரம் தீர்மானம் செய்!” என்றான்.

“சரி என்ன படித்திருக்கிறாய்?”

“ஒன்றுமில்லை.”

“ரொம்ப நல்லதாயிற்று.”

“வீட்டுக் காரியம் செய்யத் தெரியுமா?”

பிரதுல் தலையை அசைத்தாள். அருகே ஒரு வேலைக் காரி நின்றிருந்தாள். அவள் வியாக்யானம் செய்தாள். “ரொம்பக் கெட்டிக்காரப் பெண் பாபுஜி! சமையல் செய்வது, பரிமாறுவது, வீட்டுவேலை இவைகளில் தன் தாய்க்குச் சமானமாய்ச் செய்வாள். வாய்விட்டுப் பேச மாட்டாள்: மிக்க சாந்தம்” என்றாள்.

“அதுதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உனக்கு அப்பா இருக்கிறாரா?”

“இல்லை.”

“எங்கள் வீட்டுக்கு வருகிறாயா?”

“ஆஹா” என்று தலை யசைத்தாள் அந்தப் பெண். இதற்குள் அந்த ஜன்னல் பக்கம் கவனம் சென்றது. அங்கே இரண்டு கருவிழிகள் அனலைக் கக்கிக்கொண் டிருந்தன. அவள் பயந்துகொண்டு, “இல்லை ” என்றாள்.

வெளியே வந்து மித்தர் பாபுவைச் சந்தித்தார்கள்.

“பெண் எப்படி?”

“நல்ல பெண்!”

“அப்படியானால் முகூர்த்தம் குறிப்பிடலாமா?”

“ஆஹா!”

4

பத்துப் பன்னிரண்டு வயதுள்ள சிறுவன் ஒருவன் சுவாரஸ்யமான நாவலைப் படித்துக்கொண் டிருக்கும் போது, ரஸமற்ற ஒருவன் அதைப் பிடுங்கிக்கொண்டு விட்டானானால் அவன் நிலைமை எப்படி இருக்கும்? அவன் உள்ளம் நொந்து சங்கையடைந்து வாடிய முகத்துடன், இந்த அறைக்கும் அந்த அறைக்குமாய் ஓடுவான். பயந்த பார்வையுடன் தனக்குப்பிரியமான அப்பொருளைத் தேடிப் பிடிப்பதில் முனைந்து நிற்பான். அப்பொழுது அவனுக்கு, யாரிடம் கோபித்துக் கொள்ளலாம் என்று தோன்றும். இதே மாதிரிதான் ஸுரமாவும் யக்ஞதத்தனுக்காகத் துடிக்கலானாள். அவளுக்கென்ன தெரியும், அவள் எதைத் தேடிப் பிடிக்கப்போகிறாள். நாற்காலி, மேஜை, ஸோபா, கட்டில், அறை, தாழ்வாரம், எல்லாவற்றின் மீதும் அவள் கோபம் கொண்டாள். தெருப்பக்கம் இருந்த ஜன்னல் ஒன்று கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. இங்கே சற்றும் அங்கே சற்றுமாக உட்காரலானாள். யக்ஞதத்தன் அறைக் குள் நுழைந்தான்.

“பிரகாச மஹா சயரே, என்ன ஆயிற்று?” பிரகாசனின் முகம் கம்பீரமடைந்தது.

“பெண் பிடித்ததா?”

“ பிடித்தது.”

“கல்யாணம் எப்பொழுது?”

“அநேகமாய், இந்த மாதத்திலேயே-” உற்சாகத்துடன் ஸுரமா அங்கே வந்தாள். ஆனால் எவ்விதத் தொந்தரவும் செய்யவில்லை. “என் தலைமேல் ஆணை; உண்மையாகச் சொல்!” என்றாள்.

“இதென்ன ஆபத்து, உண்மையாகத்தான் சொல்லுகிறேன்.”

“என் முகத்தைப் பார், சொல், பிடித்திருக்கிறதா?”

“ஆமாம்.”

தேடிப் பார்த்தும் ஸுரமாவுக்கு இதற்குப் பதில் சொல்ல வார்த்தைகள் அகப்படவில்லை. அடிபட்ட குழந்தை அழுவதற்கு முன் எப்படி இங்குமங்கும் தலையை ஆட்டி அர்த்தமில்லாமல் பேசுகிறதோ அதேபோல் ஸுரமாவும் தலையை ஆட்டிக்கொண்டே அழுத்தமான குரலில், “நான் முன்பே கூறவில்லையா?” என்றாள்.

யக்ஞதத்தன் ஏதோ தன் நினைவில் ஆழ்ந்திருந்தான், ஆகையால் அவன் மறுக்கிறானா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால் பெண் பீடிக் கும் என்று ஸுரமா ஒருபோதும் சொன்னதில்லை. அவ ளும் பெண்ணை நேரில் பார்த்ததில்லை. தவிர இவ்வளவு சீக்கிரம் பெண் பிடித்து விவாகம் நிச்சயமாகும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. ஆகையால் நாள் பூராவும் தன் அறையில் அமர்ந்து இதைப்பற்றியே அவள் சிந்திக் கலானாள்.

இரண்டு தினங்களுக்குப் பிறகு யக்ஞதத்தனுக்கு ஒருவாறு பிரமை நீங்கிற்று, அவன் ” சாயா, எனக்கு இந்தக் கல்யாணத்தைச் செய்து வைக்காதே!” என்றான்

“பேஷ், இது எங்கேயாவது நடக்குமா? நிச்சயம் செய்தாகி விட்டதே!”

“நிச்சயம் ஒன்றும் செய்யவில்லை.”

“இல்லை, அது முடியாது. துக்கப்படும் பெண்ணைச் சுகப்படுத்த வேண்டும். இதைச் சற்று யோசி, தவிர வாக்குக் கொடுத்துவிட்டு அதிலிருந்து மாறலாமா?”

யக்ஞதத்தனுக்குப் பிரதுல குமாரியின் முகம் ஞாப கத்திற்கு வந்தது. அன்று அவளுடைய கறுவிழிகளில் அவன் பொறுமையையும் சாந்தத்தையும் கண்டான். ஆகையால் அவன் மௌனமாக இருந்தான். எனினும் பல விஷயங்களைச் சிந்திக்கலானான். ஸுரமாவைப் பற்றித்தான் அதிகமாக எண்ணினான். மழைக் காலத்தில் ஈசல் வீட்டில் நிறைவதைப்போல, அவன் மனம் அலுப்பி னால் நிறைந்தது. ஆனால் அது இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்க மட்டும் முடியவில்லை. ஸுரமாவின் வாய் வார்த்தைகள் ஹிருதயத்திலிருந்து எந்த விருப்பத்தைத் திரட்டிக்கொண்டு வருகின்றன என்பதும் தெரியவில்லை. அவன் கண்முன் மங்கலாக ஒரு வலை விரித்திருப்பதைப் போல் இருந்தது. அதில் ஸுரமாவின் முகம் தென்படவில்லை.

5

கல்யாணம் செய்துகொண்டு மணப் பெண்ணை வீட்டுக்கு அழைத்துவந்தான் யக்ஞதத்தன். நோயாளி இருக்கும் வீட்டில் வேறொருவரும் இல்லாவிட்டால் அவன் எப்படி ஓடிப்போய்த் தண்ணீர்க் குடத்தைக் கட்டிக் கொள்ளுவானோ, அதேபோல் ஸுரமா புது மணப்பெண் ணைத் தன் மார்புறத் தழுவிக்கொண்டாள். தன்னிடம் இருந்த நகைகளையெல்லாம் அவளுக்கு அணிவித்தாள். தன் பெட்டியிலிருந்த புடவைகளை யெல்லாம் அவள் பெட்டியில் எடுத்து வைத்தாள். நாள் பூராவும் நாட்டுப் பெண்ணை அலங்காரம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு யக்ஞதத்தனின் முகம் சுண்டிவிட்டது. பயங்கரமான கனவையும் சகித்துக்கொள்ளலாம்; ஏனென்றால் சகிக்க முடியாதபோது தூக்கம் கலைந்துவிடும். ஆனால் விழித்துக் கொண்டே கனவு காண்பதில் மூச்சுத் தடுமாறிப் போய் விடுகிறது. அது முடிவடைவதே இல்லை. கலைவதற்குத் தூக்கமும் இல்லை. சில சமயம் இது கனவென்றும், சிலசமயம் இது உண்மையென்றும் தோன்றுகிறது.

பிரகாசன், சாயர் இருவருக்குமே இப்படித்தான் தோன்றியது. ஒருநாள் அவளைத் தன் அறைக்கு அழைத்து,

“சாயா!” என்றான் யக்ஞதத்தன்.

“என்ன யக்ஞ அண்ணா?”

“பிரகாஷ் என்று சொல்ல மாட்டாயா?” ஸுரமா தலை குனிந்து கொண்டு “பிரகாஷ்” என்றாள்.

யக்ஞதத்தன் இரு கைகளையும் விரித்துக் கொண்டு *வெகு நாட்களாக அருகே வரவில்லையே, வா” என்றான்.

ஸுரமா ஒருதரம் அவன் முகத்தைப் பார்த்தாள். அடுத்தகணம், “பேஷ், நல்லவேலை செய்தேன் நான், நாட்டுப் பெண்ணைத் தனியாய் விட்டுவிட்டு வந்துவிட்டேனே!” என்று சொல்லிக்கொண்டே ஓடிவிட்டாள். . பழக்கமற்ற ஒருவரைக் கோபமிகுதியால் கன்னத்தில் அறைந்து, அவர்களும் சாந்தமாக அதைப் பொறுத்துக் கொண்டு மன்னித்துவிட்டுச் சென்றால், அந்தச் சமயம் மனம் என்ன பாடுபடும்! அதேமாதிரி மன்னிப்புக் கிடைத்த குற்றவாளியைப்போல், அவன் மனமும் உற்சா கம் இழந்தது. திரும்பத் திரும்பத் தான் ஏதோ தவறு செய்து விட்டதாகவும், தெரிந்தும் ஸுரமா அதை மன்னித்து விட்டுச் சென்றதாகவுமே அவனுக்குத் தோன் றியது.

ஸுரமா சகல ஆபரணங்களையும் போட்டு நாட்டுப் பெண்ணை அவனருகே கொண்டு வந்து உட்கார வைப் பாள். சாயங்காலமான தும் வெளியே கதவைத் தாழிட்டுவிடுவாள். யக்ஞதத்தன் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருப்பாள். நாட் டுப்பெண்ணும் சிலவற்றை அறிந்து கொள்வாள். அவள் வயதான பெண்ணாக இல்லாவிட்டாலும், ஸ்திரீயல்லவா! சாதாரண ஸ்திரீக்குள்ள புத்தியைக்கூடக் கொடுக்காமல் கடவுள் ஸ்திரீகளை வஞ்சிப்பதில்லை. அவளும் இரவு முழுவதும் விழித்துக்கொண்டிருப்பாள்.

கல்யாணம் நடந்து எட்டுத் தினங்கள் கூட ஆகவில்லை. இதற்குள்ளாகவே ஒரு நாள் காலையில் யக்ஞதத்தன் ஸுரமாவை அழைத்து, “சாயா, நாட்டுப்பெண்ணை அழைத்துக்கொண்டு போய் அத்தைக்குக் காட்டி விட்டு வரட்டுமா?” என்றான்.

தாமோதர நதியின் அக்கரையில் இருந்தது அத்தை யின் கிராமம். யக்ஞதத்தன் அத்தை வீட்டுக்குச் சென்றதும் “அத்தை, நாட்டுப்பெண் வந்திருக்கிறாள் பார்!” என்றான்.

“அடே கல்யாணம் செய்துகொண்டு விட்டாயா? ஓஹோ! ஆயுசோடு இரு! நூறு வயசு உனக்கு! சந்திர னைப்போல் நல்ல நாட்டுப்பெண். இனி நல்ல பிள்ளையாய்க் குடும்பம் நடத்து அப்பா! ” என்றாள் அத்தை.

“இதற்காகத்தான் ஸுரமா பலவந்தமாகக் கல்யா யணம் செய்து வைத்தாள் !”

“நல்லது, ஸுரமாவா செய்து வைத்தாள்?” ” அவள் தான் செய்து வைத்தாள், ஆனால் தலை எழுத்துச் சரி இல்லை. இந்த நாட்டுப் பெண்ணுடன் வீட் டுக்குப்போக முடியாது.”

“ஏன், ஏண்டாப்பா?”

“தெரியாதா அத்தை உனக்கு. நான் மனித கணம். இந்தப் பெண் ராக்ஷஸகணம்; ஒன்றாய் இருந்தால் உயிரோடு இருக்க முடியாதென்று ஜோசியன் சொல்லியிருக்கிறான்”

“அப்படியாப்பா, சேதி?”

“அந்த அவசரத்திலே இதெல்லாம் பார்க்கமுடிய வில்லை. இனி இவள் உன் வீட்டிலேயே இருக்கட்டும். மாதம் ஐம்பது ரூபாய் அனுப்புகிறேன். அதைக்கொண்டு உங்கள் காலக்ஷேபம் நடந்துவிடாதா அத்தை?”.

“ஆஹா, நடந்துவிடும். பட்டிக்காட்டில் அதிகக் கஷ் டம் ஒன்றுமில்லை. அடே தங்கமான பெண். பெரியவளாகிவிட்டாள். ஏண்டா ஜக்கூ! ஏதாவது சாந்தி கீந்தி செய்தால் சரியாகிவிடாதா?”

“ஆகும். நான் பட்டாசாரியரிடம் கேட்டுக்கொண்டு என்ன செய்யவேண்டுமென்பதற்கு உனக்குத் தகவல் கொடுக்கிறேன்.”

“சரி, அப்படியே செய், அப்பா!”

சாயங்காலம் யக்ஞதத்தன் அந்தப் பெண்ணை அருகே அழைத்து “அப்படியானால் நீ இங்கேயே இரு!” என்றான்.

அவள் தலையை அசைத்து, “ஆஹா!” என்று சொல்லிவிட்டாள்.

“உனக்கு எப்பொழுது எது வேண்டுமானாலும் எனக் குச் சொல்லி அனுப்பு!”

“சரி.”

“ உனக்குக் கடிதம் எழுதத் தெரியுமா?”

“தெரியாது.”

“பின்னே எப்படித் தகவல் தெரிவிப்பாய்?”

அந்தப் பெண் வீட்டில் வளர்த்த மான்போல் கண்களை மிரள மிரள விழித்துக்கொண்டு நின்றாள். யக்ஞதத்தன் திரும்பிச் சென்று விட்டான்.

அத்தை வீட்டில் நாட்டுப்பெண் அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிடுவாள். உட்கார்ந்துகொண்டிருக்க அவளுக்குத் தெரியாது. புதி தாக இருந்தாலும், பழகியவளைப்போல வீட்டு வேலை களைச் செய்யலானாள். இரண்டொரு தினங்களில், இம்மாதிரிப் பெண் எல்லோருக்கும் கிடைத்துவிட மாட்டாள் என்பதை அத்தை நன்றாகத் தெரிந்துகொண்டாள்.

நாட்டுப்பெண் நிறைய நகை அணிந்திருந்தாள். தெரு விலுள்ளவர்கள் பார்க்க வந்தார்கள். அதில் ஒருத்தி, “இந்த நகைகளை யாரம்மா போட்டார்கள், உன் தந்தையா?” என்று கேட்டாள்.

“எனக்குத் தாய் தந்தையர் இல்லை. நாத்தனார் போட்டாள்,”

சமவயதுள்ள இரண்டு பெண்கள் அவளுக்குச் சிநேகமானார்கள். பிறகு இவளைக் கிண்டிக் கிண்டி ரகசி யத்தை அறிய முயற்சித்தார்கள். ஒருத்தி, “உன் நாத் தனார் ஒரு வேளை பெரிய பணக்காரியோ?” என்று கேட்டாள்.

“ஆமாம்.”

“நகைகள் எல்லாம் அவளுடையனவா?”

“ஆமாம்!”

“அவள் அணிந்துகொள்வதில்லையா?”

“அவள் கைம்பெண். அணிவதில்லை.”

“வயதென்ன இருக்கும் ? ”

“நம்மைவிடச் சற்றுப் பெரியவள். அவள் தான் பல வந்தமாகத் தன் சகோதரனுக்கு என்னைக் கல்யாணம் செய்து வைத்தாள்.”

“உன் கணவன் அவள் சொல்வதையெல்லாம் கேட் கிறான் அல்லவா?”

“ஆமாம், அவள் ஸதி, லக்ஷ்மி. எல்லோரும் அவளை விரும்புகின்றனர்.”

6

மேலே அமர்ந்து ஜன்னல் வழியாகப் பார்த்தாள் ஸுரமா. யக்ஞதத்தன் வீடு திரும்பிக்கொண் டிருந்தான். ஆனால் கூட நாட்டுப் பெண்ணைக் காணவில்லை. அவன் உள்ளே நுழைந்ததும், “ அண்ணா, மன்னியை எங்கே விட்டுவிட்டு வந்துவிட்டாய்?” என்று கேட்டாள். –

“அத்தையின் வீட்டில்.” ‘

“ஏன் விட்டுவிட்டு வந்தாய்? ”

“இருக்கட்டும், கொஞ்சநாள் பொறுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.”

இந்த வார்த்தை சுரீரென்று ஸுரமாவின் உள்ளத் தில் தைத்தது. இருவரும் மௌனமாக இருந்தார்கள். நண்பர்களோடு விவாதித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று சண்டை வந்துவிட்டால் இருவரும் மனம் நொந்து சிறிது நேரம் மௌனமாக உட்கார்ந்து விடுவது வழக்கம். இவர்கள் இருவரும்கூடச் சற்றுநேரம் அவ்வாறே இருந்தார்கள். ” ஸ்நானம் செய்து சாப்பிடு, வெகு நேரமாகிவிட்டது” என்பாள் ஸுரமா.

“உம், போகிறேன்,” என்பான் யக்ஞதத்தன். இவ் வாறே சில தினங்கள் கழிந்தன.

ஒன்றாக இருப்பவர்கள் இப்படியே எப்பொழுதும் குடும்பம் நடத்த முடியாது; ஆகையால் மறுபடியும் ஸௌ ஜன்யம் ஏற்பட்டது. யக்ஞதத்தன் மீண்டும் அன் போடு “ சாயா!” என்று அழைக்கலானான். ஆனால் சாயா இப்பொழுது அவனைப் பிரகாஷ்’ என்று அழைப்பதில்லை. சில சமயம் யக்ஞதத்தன் என்றும், சில சமயம் அண்ணா என்றுமே அழைத்து வந்தாள்.

ஒருநாள் ஸுரமா, ” அண்ணா, கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப்போகின்றனவே, போய் மன்னியை அழைத்துக் கொண்டுவா” என்றாள்.

யக்ஞதத்தன், அவள் பேச்சை மறுத்து “ எல்லாம் வருவாள் ” என்றான். அவன் மனோபாவத்தை அறிந்து ஸுரமா பேசாமல் இருந்துவிட்டாள்.

அத்தையிடமிருந்து சிற்சில சமயம் கடிதம் வரும். அதில், ‘ நாட்டுப் பெண்ணுக்கு மலேரியா ஜுரம் ; வைத். தியம் செய்யவேண்டும்’ என்று எழுதுவாள். விஷயத்தை அறிந்துகொண்டு யக்ஞதத்தன் கொஞ்சம் ரூபாய் அனுப் புவான். பிறகு ஒரு மாதம் வரையில் ஒன்றும் இருக்காது.

இப்படி இருக்கையில் திடீரென்று ‘ அத்தை இறந்து விட்டாள்’ என்று கடிதம் வந்தது.

யக்ஞதத்தன் அந்த ஊருக்குச் சென்றான். போகும் போது ஸுரமா தன் தலையின் மேல் ஆணையிட்டு * மதனியை அழைத்துவர வேண்டும்!” என்று சொல்லி அனுப்பினாள்.

அத்தையின் காரியங்கள் ஆனதும் ஒருநாள் மத்தியா னம் யக்ஞதத்தன் தாழ்வாரத்தில் நின்றபடி வீட்டுக்குத் கிரும்புவதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். இடைக்கட்டில் நெற்குதிருக் கருகே பிரதுல் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தான். இருவர் கண் களும் சந்தித்தன. கைஜாடை காட்டி அவளை அருகே அழைத்தான். அவள் அருகே வந்தாள்.

“என்ன ?”

“உங்களிடம் ஒரு விஷயம் சொல்லலாமா?”

“சொல்லேன்!” – நாட்டுப்பெண் மென்று விழுங்கிக்கொண்டே, “எனக்கு ஏதாவது தேவையாக இருந்தால் உங்களைக் கேட்கும்படி சொன்னீர்களே-” என்றாள். –

“ஆமாம், ஆமாம், என்ன வேண்டும், சொல்-”

“வீட்டில் எல்லோரும் நான் பெரும் அவலக்ஷணம் என்று சொல்லுகிறார்கள். இனி என்னால் இங்கே இருக்க முடியாது.”

“எங்கே இருக்க விரும்புகிறாய்?”

“கல்கத்தாவில் எந்தப் பெரிய மனிதர் வீட்டிலாவது இடம் கிடைத்தால்- எனக்கு எல்லா வேலையும் தெரியும்.”

“நீ உன் வீட்டுக்குப் போகிறாயா?”

“என் வீடா? எங்கே இருக்கிறது? இனி அவர்கள் அங்கே இருக்க விடுவார்களா?”

யக்ஞதத்தன் தன் கையினால் மனைவியின் முகத்தைத் தூக்கி “என் வீட்டுக்கு வருகிறாயா?” என்று கேட்டான்.

“வருகிறேன்.”

“ஸுரமா உனக்காகத் துடித்துக் கொண்டிருக்கிறாள்.”

ஸுரமாவின் பெயரைக் கேட்டதும் அவள் முகம் மலர்ந்தது. “ஜீஜி என்னை நினைவு வைத்துக்கொண்டிருக் கிறாளா?” என்றாள்.

“ரொம்ப!”

“அப்படியானால் அழைத்துச் செல்லுங்கள்.”

உலகத்தில் பிறரைப்பற்றி அபிப்பிராயம் கூறத்தெரி யாத மனிதர்களும் இருக்கிறார்கள். ஆனால் கூடவே அவர் களிடம் ஒரு நல்ல குணமும் இருக்கிறது. அவர்கள் தங்கள் விஷயத்தைப்பற்றியும் பிறரிடம் ஆலோசனை கேட்ப தில்லை. நாட்டுப்பெண் இந்த வகையைச் சேர்ந்தவள். அவள் தன் விஷயத்தைத் தானே யோசிப்பாள். பிறரைக் கேட்பதில்லை. அவள் மீண்டும், “உங்களுக்குத் தீங்கு ஏற்படும் என்று எனக்குப் பயமாயிருக்கிறது. ஆனால் நான் எங்கே இருப்பது? நான் கீழேயே இருக்கிறேன்.

வேலைகளைச் செய்யக் கீழே எனக்குச் சௌகரியமாக இருக்கும்” என்றாள்,

“ஏன் நீ இருப்பதற்கு மேலே அறை இல்லையா?” என்றான் யக்ஞதத்தன்.

“இருக்கிறது. ஆனால் கீழே இருக்கும் அறையிலேயே நான் சௌகரியமாக இருப்பேன்!”

யக்ஞதத்தன் வேறொன்றும் கேட்கவில்லை. இவளும் டைய வார்த்தைகள் என்னவோ முட்டாள்கள் பேசும் வார்த்தைகளாய் இல்லை. ‘நீ அவலக்ஷணம் இல்லை ; ராக்ஷஸகணம் என்று சொல்வதெல்லாம் பொய் என்று சொல்லிவிடுவோமா’ என்று பலதடவை எண்ணினான். ஆனால், பொய் சொல்லவேண்டிய காரணம் என்ன என்று கேட்டால் என்ன சொல்லுவது? பிறகு ‘வீட்டுக்குச் சென்று முன்பு இருந்த சௌஜன்யத்தோடுகூட இருக்க முடியும்’ என்ற நம்பிக்கையைக்கூட அல்லவா அவள் இழந்துவிடுவாள் என்று எண்ணிப் பேசாமல் இருந்து விட்டான்.

7

ஸுரமா பார்த்தாள். நாட்டுப் பெண் வந்துவிட் டாள். ஆத்திரத்தின் தாக்குதலைச் சமாளித்துக்கொண்டு சாந்தமடைந்தாள். சாந்தமாக அன்புடன் அவளோடு வார்த்தையாடினாள். வாய்ப்பேச்சு மட்டுமல்ல; அந்தரங் கத்தோடு பேசினாள். அவளுடைய வாடிய முகம் மறுபடி யும் மலர்ச்சி யடைந்தது. “நாட்டுப்பெண்ணே! உனக்கு அங்கே உடம்பு அசௌகரியமா?” என்று கேட்டாள்.

நாட்டுப்பெண் தலையை அசைத்துக்கொண்டே “அடிக்கடி ஜுரம் வருவதுண்டு!” என்றாள்.

ஸுரமா அவள் நெற்றி வியர்வையைத் துடைத்து விட்டு, “இங்கே வைத்தியம் செய்துகொண்டால் எல்லாம் சரியாய்ப் போய்விடும்” என்றாள்.

நாட்டுப் பெண்ணுக்காகக் கீழே இருக்கும் அறை சுத்தம் செய்யப்படுகிறது என்ற விஷயம் ஸுரமாவுக்கு மத்தியான்னம் தெரிந்தது. அவமானத்தால் அவள் கண் களில் கண்ணீர் வந்துவிட்டது. ஒருவாறு அதை அடக்கிக் கொண்டு யக்ஞதத்தனிடம் சென்று, ” அண்ணா, நாட்டுப் பெண் கீழ் அறையிலா தூங்கப்போகிறாள்?” என்று கேட்டாள்.

யக்ஞதத்தன் புஸ்தகத்திலிருந்து தலை நிமிராமலே, ” அவள் அப்படித்தானே சொன்னாள் ; ” என்றான். –

“நீ ஒன்றும் சொல்லமாட்டாயா?”

“நான் என்ன சொல்வது, யாருக்கு என்ன இஷ் டமோ செய்து கொள்ளட்டும்!”

லஜ்ஜையாலும் வெறுப்பாலும் – ஸுரமாவினால் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை. அவன் முன் னேயே அழுதுவிட்டு மறுபுறம் சென்றாள். மேலே நடந்த இந்த விஷயம் கீழே எட்டவில்லை.

நாட்டுப்பெண் வீட்டு வேலையில் முனைந்திருந்தாள். நாளடைவில் ஸுரமாவின் சகல வேலைகளையும் தானே ஏற்றுக்கொண்டாள். மேலேமாத்திரம் போவதில்லை. கண வனைச் சந்திப்பதில்லை. நாளடைவில் ஸுரமாவும் மேலே போவதை விட்டுவிட்டாள். நாட்டுப்பெண் மலர்ந்த முகத் துடன் காரியம் செய்வாள். ஸுரமா பேசாமல் அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பாள். வேலை செய்வதில் எவ்வளவு சுகம் இருக்கிறது என்பதைக் கண்டாள் ஒருத்தி ; வேலை செய்வதால் சகல துக்கங்களும் மறந்து. விடுகின்றன என்பதைக் கண்டாள் மற்றொருத்தி. இரு வரில் ஒருவரும் அதிகமாகப் பேசுவதில்லை. ஆயினும்
இருவரிடையேயும் பரஸ்பரம் அனுதாபமும் அன்பும் அதிகரித்துக்கொண்டே வந்தன.

அடிக்கடி நாட்டுப்பெண்ணுக்கு ஜுரம் வந்துவிடும். இரண்டொருநாள் உபவாஸம் இருப்பாள். தானாகச் சொஸ்தமாகிவிடும். மருந்து சாப்பிட அவள் விரும்புவதும் இல்லை ; சாப்பிடுவதும் இல்லை. அந்தச் சமயம் வேலைகளை வேலைக்காரிகள் செய்வார்கள். ஸுரமாவினால் முடிவ தில்லை. ஆசையிருந்தாலும் அது அவள் சக்திக்குப் புறம் பான விஷயம்.

தங்கப் பதுமைபோல் இருந்த ஸுரமாவின் நிறம் மாறியது. பழைய காந்தி இப்பொழுது இல்லை. அந்த அழகு பூராவும் இந்த இரண்டு மாதங்களுக்குள் எங்கோ மறைந்துவிட்டது. நாட்டுப்பெண் சிற்சில சமயம் “ஜீஜி, நீ ஏன் நாளுக்குநாள் இப்படியாகிக்கொண்டு வருகிறாய்?” என்று கேட்பாள்.

“நானா? நல்லது மன்னி! உடம்பைப் பார்த்துக் கொள்வோம் என்று எங்கேயாவது வெளியே சென்றால் உனக்குக் கஷ்டமாக இருக்காதா?”

“ஆமாம், கஷ்டமாகத்தான் இருக்கும்!” – ” அதனால் தான் நான் போகவில்லை.” – ” சரி, ஜீஜி, நீ போகவேண்டாம். இங்கே இருந்த படியே ஏதாவது மருந்து சாப்பிடு, சரியாகப் போய்விடும்” என்றாள் பிரதுல். அன்பின் மிகுதியால் ஸுரமா அவள் நெற்றியில் முத்தமிட்டாள். 1 ஒருநாள் ஸுரமா யக்ஞதத்தனுக்காகத் தட்டுத் தயா ரித்துக்கொண்டிருந்தாள். யக்ஞதத்தன் வாடிய முகத் துடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் தலை நிமிர்ந்ததும் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு, ” இறந்து விட்டால் நல்லது என்று தோன்றுகிறது ” என்றான்.

“ஏன்?” என்றாள் ஸுரமா. அவள் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

“பயமாக இருக்கிறது. இன்னும் எவ்வளவு நாள் இந்த உயிரைச் சுமந்துகொண்டிருக்க வேண்டுமோ? ”

துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததும் காட்டு விலங்குகள் பூமியைவிட்டு வானத்துக்கு ஓடப் பிரயத்தனப்படு கின்றன. ஆனால் முடிவதில்லை. வேறு வழியின்றி பூமியி லேயே விழுந்து அதைத் தழுவிப் பிராணனை விடுகின்றன. ஸுரமாவும் துடிதுடித்து முதலில் வானத்தைப் பார்த் தாள். பிறகு அவைகளைப் போலவே பூமியில் வீழ்ந்து அழலானாள். “யக்ஞ அண்ணா! மன்னித்துக்கொள் ; நான் உன் சத்துரு. என்னை வேறு எங்கேயாவது அனுப்பிவிடு, நீ சுகமடைவாய்!” என்றாள்.

வேலைக்காரி வந்துவிடப் போகிறாளே என்ற பயத் தினால் யக்ஞதத்தன் கையைப் பிடித்து அவளைத் தூக்கி னான். அன்புடன் அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே “சீச்சீ! இதென்ன. சிறுபிள்ளைத்தனம்?” என்றான். கையை விடுவித்துக்கொண்டு ஸுரமா சட் டென்று தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.

8

இதன் பிறகு ஒருநாள் ஸுரமா மதனியைத் தன்னருகே அழைத்து அமரிக்கையாக, “ஏன் மன்னி, அண்ணா உன்னை என்றாவது ஏதாவது சொன்னாரா?” என்று கேட்டாள்.

பிரதுல் சகஜமான பாவத்துடன் “என்ன சொல்லப் போகிறார்?” என்றாள்.

“அப்படியானால் நீ ஏன் அவரிடம் செல்வதில்லை? உனக்குச் செல்ல இஷ்டமில்லையா?”

நாட்டுப் பெண்ணுக்கு முதலில் வெட்கமாக இருந்தது. பிறகு தலைகுனிந்துகொண்டு. “இஷ்டமில்லாமல் என்ன ஜீஜி, ஆனால் போக முடியவில்லையே! ” என்றாள்.

“ஏன் அம்மா?”

“உனக்கு ஞாபகமில்லையா?”

“இல்லையே!”

“அடே ஒருவேளை நீ மறந்திருப்பாய். நான் ராக்ஷஸ கணம், அவர் மனித கணம் அல்லவா!”

“யார் சொன்னார்கள்?”

“அவர்தான் – அத்தையிடம் சொன்னார். அதனால் தான்-”

ஸுரமாவுக்கு மயிர்க்குச் செறிந்தது.

“இது பொய் அம்மா! ” என்றாள்.

“பொய்யா?” விரிந்த கண்களுடன் அவள் ஸுரமாவின் முகத்தைப் பார்த்தாள்.

ஸுரமாவின் உடல் நடுங்கியது. அடிக்கடி மயீர்க்குச் செறிந்தது. அவள் “பிரதுல், இது பொய் அம்மா, முழுப் பொய்!” என்றாள்.

“நான் நம்பவில்லை. அவர் பொய் சொல்வாரா?”

ஸுரமாவினால் பொறுக்க முடியவில்லை. அவள் மதனியைத் தன் இரு கைகளாலும் கட்டிக்கொண்டு தேம்பித்தேம்பி அழலானாள். “நாட்டுப் பெண்ணே, நான் மகாபாதகி!” என்றாள்.

நாட்டுப் பெண் தன்னை விடுவித்துக்கொண்டு, மெதுவாக “ ன் அக்கா?” என்றாள்.

“ஐயோ! அதை இப்பொழுது கேட்காதே. நான் சொல்லமுடியாது!”

புயலைப்போல் ஸுரமா யக்ஞதத்தன் அறைக்குப் போனாள், “மன்னியை இந்தமாதிரியா ஏமாற்றுகிறாய்? அடாடா! எப்படிப்பட்ட பொய்யன் நீ!” என்றாள்.

யக்ஞதத்தன் இடிந்து போனான். “ஸுரோ, இதென்ன?”

“ரொம்ப கெட்டிக்காரன் தான் நீ! சீச்சீ. வெட்க மாக இல்லையா உனக்கு?” ‘

யக்ஞதத்தனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பேசாமல் கடும் சொற்களைக் கேட்டுக்கொண்டான்.

“என்ன நினைத்துக்கொண்டு கல்யாணம் செய்து கொண்டாய்? என்ன நினைத்துக்கொண்டு அவளை விட்டு விட்டு வந்தாய்? எனக்காகவா? என் முகத்தைப் பார்த்தா இந்த மாதிரி ஏமாற்றி வருகிறாய்?”

“ஸுரமா, உனக்குப் பைத்தியமா என்ன?”

“நானா பைத்தியம்? உன்னை விட எனக்குப் புத்தி அதிகம் இருக்கிறது. என்னை வேறு எங்கேயாவது அனுப்பிவிடு” என்று சொல்லும்போதே அவள் நாவறண் டது. “ இனி ஒரு நாள் கூட நான் இங்கே இருக்க முடி யாது!” என்றாள்.

யக்ஞதத்தன் உரக்கச் சத்தமிட்டு “என்ன சொல்லு கிறாய் நீ?” என்றான்.

“நீ பொய்யன், மோசக்காரன் என்று சொல்லுகிறேன்!”

ஒரு நிமிஷத்திற்குள் யக்ஞதத்தனின் மூளைக்குள் தீப்பற்றியதைப் போன்ற ஓர் உணர்ச்சி ஏற்பட்டது. காரணமில்லாமல் அவன் உயிர் அவனை விட்டு வெளியே வந்து அவனைப் போரிட அழைப்பதைப்போல் இருந்தது. அவன் சுய புத்தியை இழந்து மேஜைமேல் இருந்த தடித்த ரூல் தடியை எடுத்து, உரக்கச் சத்தமிட்டு, “நான் அயோக்கியன்! மோசக்காரன்! பொய்யன்! இதோ அதற்குப் பிராயச்சித்தம் செய்கிறேன்!” என்று சொல் லிக்கொண்டே தன் முழுபலத்தோடும் ஓங்கி ஸுரமாவை ஓர் அடி அடித்தான்.

மண்டை உடைந்து ரத்தம் பெருகியது. ஸுரமா உடைந்த குரலில், “ஐயோ, அம்மா!” என்றாள். பிறகு மூர்ச்சையடைந்து தரையில் வீழ்ந்தாள். யக்ஞதத்தன் அவளைப் பார்த்தான். தன் முகம் பூராவும் ரத்தம் வழிவ தையும் கண்டான். கண்ணின் மேல் ரத்தம் வழிந்ததால் பார்வை மங்கலாகத் தெரிந்தது. அவன் வெறி கொண்ட வனைப்போல் ” இனி என்ன?” என்றான். இதற்குள் பின்னாலிருந்து யாரோ வந்து அவனைப் பிடித்துக்கொண் டார்கள். திரும்பிப் பார்த்தான்; மனைவி. “நீ வந்துவிட் டாயா?” என்றான் அழுதுகோண்டே. அவள் தோளில் தலையைச் சாய்த்துக்கொண்டு அவனும் மூர்ச்சையானான்.

ஸுரமா வேகமாக மேலே ஓடிவருவதைக் கண்டு, பிரதுல் ஆச்சரியமும் சந்தேகமும் கொண்டாள். ஆகை யால் பேசாமல் அவளுக்குப் பின்னால் வந்து கதவருகே மறைந்து நின்றிருந்தாள். சகல விஷயங்களையும் கேட் டாள். எல்லாவற்றையும் பார்த்தாள். அநேக உண்மைகள் அவள் மனதிற்கு ஸுரிய வெளிச்சத்தைப்போல் ஸ்பஷ்ட மாக விளங்கின. அவள் மார்பு படபட வென்று அடித்துக்கொண்டது. கண்கள் பஞ்சடைந்தன. தன்னைச் சமாளித்துக்கொண்டு இந்த ஆபத்துக் காலத்தில் கணவன் தலையைத் தன் மடியில் வைத்துக்கொண்டாள்.

9

ஐந்தாறு தினங்களுக்குப் பிறகு நினைவு வந்தபோது, “அண்ணாவுக்கு உடம்பு எப்படி இருக்கிறது!” என்று கேட்டாள் ஸுரமா.

“சௌகரியமாக இருக்கிறது!” என்றாள் வேலைக்காரி

“நான் பார்த்துவிட்டு வரட்டுமா?” என்று சொல்லிக் கொண்டே ஸுரமா எழுந்தாள். ஆனால் படுத்துவிட்டாள்.

“நீ ரொம்பப் பலவீனமாய் இருக்கிறாய் அம்மா, ஜுரம் வேறு வந்திருக்கிறது. எழுந்திருக்காதே, டாக்டர் சொல்லி இருக்கிறார்!” என்றாள்.

யக்ஞதத்தன் பார்க்க வருவான், மதனி வருவாள், என்று எதிர்பார்த்தாள் ஸுரமா. ஒரு நாள், இரண்டு நாள் என்று ஒரு வாரம் கழிந்தது. ஒருவரும் வரவில்லை. யாரும் தகவலும் சொல்லவில்லை.

ஜுரம் நின்றுவிட்டது. ஆனால் பலவீனம் அதிகமாய் இருந்தது. எழுந்திருக்க முயற்சித்தால் எழுந்திருக்கலாம்.. ஆனால் அவமானத்தினால் எழுந்திருக்க மனம் வரவில்லை. அவள் தன் மனத்திற்குள்ளேயே தேம்பித் தேம்பி அழலா னாள். கண்களைத் துடைத்துக்கொண்டு தன்னுடைய ‘ பிரகாசன், சாயா’ கதையை நினைக்கலானாள்.

தீவிரமான ஒளியையும் ஆழ்ந்த சாயையையும் வைத்

இப்பொழுது பிரகாசம் அணைந்துகொண்டிருக்கிறது. மத்தியான சூரியன் மேற்கே சாய்ந்துவிட்டான். ஆகை யால் ஆழ்ந்த சாயை ஸ்பஷ்டமற்று விகாரமாகப் பிரேதத் தைப் போல் ஆகிவிட்டது. இப்பொழுது அந்தச் சாயை அறியாத ஓர் அந்தகாரத்தில் சென்று ஒடுங்கிவிட மெள்ள மெள்ள நழுவிக்கொண்டிருந்தது. அழுதுகொண்டே ஸுரமா தூங்கிவிட்டாள்.

உடம்பில் தன் சுடு கரங்களை வைத்து யாரோ, “ஜீஜி!” என்றழைத்தார்கள். –

ஸுரமா எழுந்து உட்கார்ந்தாள். ” இதென்ன மன்னி?” என்று கேட்டாள். .. அவள் கண்கள் சிவந்திருந்தன. முகம் வறண்டு போயிருந்தது. உதடுகள் கறுத்திருந்தன. ஸுரமா மறு படியும் ” ஏண்டி பிரதுல், என்ன உடம்பு உனக்கு?” என்று கேட்டாள்.

“எனக்கு என்ன உடம்பு? நீ என்னை இந்த வீட்டுக்கு அழைத்து வந்தாய். ஆகையால் உன்னிடம் சொல்லிக் கொள்ள வந்திருக்கிறேன். ஜீஜி! ஏனக்கு விடைகொடு. நான் போகிறேன்!” என்றாள். –

“ஏன் அம்மா? எங்கே போகப் போகிறாய்?”

பிரதுல் ஸுரமாவின் பாதங்களில் தலை வைத்துத் தரையில் படுத்து நமஸ்காரம் செய்தாள்.

ஸுரமா பார்த்தாள். நாட்டுப்பெண்ணின் உடல் நெருப்புப்போல் கொதித்தது. “ இதென்ன? உனக்கு நல்ல ஜுரம் வந்திருக்கிறதே?” என்றாள். இதற்குள் வேலைக் காரி கூவிக்கொண்டே ஓடி வந்தாள், “ஜீஜி! நாட்டுப் பெண் எங்கே? அடியம்மா! ஜுரவேகத்தில் ஓடி வந்து விட்டாள். இன்று எட்டு நாட்களாகப் பிரக்ஞையற்றுக் கிடந்தாள். அம்மா! எப்படி வந்தாள் இங்கே?” என்றாள்.

“எட்டு நாட்களாகவா ஜுரம்? டாக்டர் வந்து பார்த்தாரா?”

“ஒருவரும் இல்லை அம்மா! முந்தா நாள் காலையில் கூட நாட்டுப்பெண் குழாயடியில் அரை மணி நேரம் தலையை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள், எவ் வளவோ தடுத்தேன், கேட்கவில்லை” என்றாள்.

***

சாயங்காலம் ஸுரமா யக்ஞதத்தன் அறைக்குச் சென்று அழுதுகொண்டே, “ அண்ணா! மன்னி இனிப் பிழைப்பது கடினம்!” என்றாள்.

“பிழைப்பது கடினமா? ஏன்?”

“என் அறைக்கு வந்து பார். அண்ணா! இனி அவள் பிழைப்பது கடினம்.”

இரண்டொரு டாக்டர்கள் வந்து, “பலமான ஜன்னி பிறந்திருக்கிறது” என்று கூறி, இரவு பூராவும் வீணாகச் சிரமப்பட்டு விட்டுக் காலையில் சென்றார்கள்.

இரவு பூராவும் யக்ஞதத்தன் மனைவியின் தலைமாட் டருகே உட்கார்ந்திருந்தான். பல தடவை அவள் முகத் தருகே தன் முகத்தைக்கொண்டு சென்றான். ஆனால் பிரதுவால் ஒன்றையும் அறிந்துகொள்ள முடியவில்லை.

டாக்டர்கள் சென்றபிறகு யக்ஞதத்தன் அழலானான். “பிரதுல், ஒரு தரம் கண் திறந்து பார். ஒரு தரம் சொல், மன்னித்துவிட்டேனென்று!” என்று கதறினான்.

ஸுரமா காலருகே அமர்ந்து புடவைத் தலைப்பினால் முகத்தை மூடிக்கொண்டு விளக்கமற்ற குறலில் “மன்னி, ஏன் இம்மாதிரியான தண்டனை அளித்துவிட்டுச் செல்கிறாய்?” என்றாள்.

ஆனால் யார் பேசுகிறார்கள் ? மானாவமானம், ஆதரவு, அனாதரவு இவைகளைச் சட்டை செய்யாமல் இவ்வுலகை வீட்டு அனந்தத்தில் சென்று கலந்துவிட்டாள் பிரதுல் குமாரி.

***

“அண்ணா எங்கே?” என்றாள் ஸுரமா.

“நேற்று எங்கோ மேற்கே சென்றார்!” என்றாள் வேலைக்காரி.

“எப்பொழுது வருவார்!”

“தெரியாது, அநேகமாகச் சமீபத்தில் வரமாட்டார்!”

“நான் எங்கே இருப்பது?”

“உனக்கு வேண்டிய மட்டும் பணம் கொடுக்கும்படி குமாஸ்தாவிடம் சொல்லி இருக்கிறார். உனக்கு எங்கே இஷ்டமோ அங்கே இருக்கலாம்!”

ஸுரமா ஆகாசத்தைப் பார்த்து, “கண்டேன். உலகத்தின் பிரகாசம் அணைந்துவிட்டது. சூரியன் இல்லை, சந்திரன் இல்லை ; ஒரு நக்ஷத்திரம்கூடத் தென்படவில்லை. அக்கம் பக்கம் பார்த்தேன். ஸ்பஷ்டமற்ற அந்தச் சாயை கூடத் தென்படவில்லை. எங்கே சென்று விட்டது அது? நாற்புறமும் கோர அந்தகாரமாக இருக்கிறது. ஹிருதயம் நின்று விடும்போல் இருக்கிறது. கண்கள் மங்குகின்றன. விழிகள் நின்றுவிட்டன!” என்று கதறினாள்.

“ஜீஜி” என்று அழைத்தாள் வேலைக்காரி. ஸுரமா மேலே பார்த்துக்கொண்டே “யக்ஞ அண்ணா!” என்றாள். பிறகு மெள்ளக் கீழே சாய்ந்தாள்.

– நாலு கதைகள், சரத் சந்திரர், மொழி பெயர்த்தவர்: அ.கி.ஜயராமன், முதற் பதிப்பு: 1946, ஜோதி நிலையம், சென்னை,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *