கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2021
பார்வையிட்டோர்: 3,283 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

‘நான், அயோக்கியனாய் ஆகாமல் போனதற்காக வருத்தப்படும் யோக்கியனோ?’.

இப்படி, தன்னைத்தானே கேட்டுக்கொண்டார் பழனிச்சாமி. அந்த கய விமர்சனத்தில், எதிரில் சின்னத்தனமான காட்சிகளை மாட்சிமைப் படுத்தும் சின்னத்திரையை பார்க்கவுமில்லை, கேட்கவுமில்லை. ஒலியும் ஒளியும் பார்த்துக் கொண்டிருந்த புனிதா, வீட்டின் காம்பவுண்டு கேட் போடுகிற ஒலியை வைத்தும், காலடிச் சத்தத்தை வைத்தும் அப்பா வருவதை அறிந்து கொண்டாள். அவசரத்தில், தொலைக்காட்சிப் பெட்டியை நீல நிறமாக்க மறந்துபோய், அதில் தோன்றிய நீலக் காட்சிகளை, அப்படியே தக்கவைத்துவிட்டு, அவசரத்தில் உள்ளே ஒடி விட்டாள். அப்பா மட்டும் அவளை ஒலியும், ஒளியுமாக பார்த்திருந்தால், எள்ளும் கொள்ளுமாய் ஆகியிருப்பார். க்ாம்பவுண்டு கதவு, இசை மயமாய் ஒலித்தால் அதைத் தந்தை திறப்பதாக அர்த்தம், ராணுவ வீரன் போல் டக், டக் என்று சத்தம் கேட்டால் தந்தையின் நடை என்று கண்டுகொள்ளலாம். அவள் எதிர்பார்த்தபடியே அவர் தந்தை பழனிச்சாமிதான் வந்தார். வந்ததும் வராததுமாக, சமையல் கட்டில் தட்டுமுட்டுச் சாமான்கள் எழுப்பிய இசையை அடக்கும் வகையில் உரத்த குரலோடு, ‘மாப்பிள்ளை வீட்டில இருந்து சேதி வந்ததா? என்று வயிற்றை எக்கி ஆவலோடு கேட்டார். உடனே ‘தெரிஞ்சதுதானே’ என்று பாத்திரக் குரல்களோடு இன்னொரு சத்தம். அது மகளைப் பற்றியோ அல்லது அவளைப் பார்த்துவிட்டுப் போன மாப்பிள்ளையைப் பற்றியோ எழுந்த விமர்சனமல்ல என்பதைப் புரிந்து கொண்டார். அவரது இன்றைய நிலையைப் பற்றிய விமர்சனம். மனைவியின் அந்த ஒற்றை வார்த்தை விமர்சனம், அவரை, பிரம்பு நாற்காலியில் சாய்வாக உட்கார வைத்தது. ஒராயிரம் நடப்புக்களை சுட்டிக் காட்டியதோடு, அவரையும் சுட்டது.

பழனிச்சாமிக்கு, அரசுப் பணியின் பழைய பொறுப்பையும், இப்போது கமத்தப்பட்டிருக்கும் புதிய பொறுப்பையும் அந்த விமர்சனம் நினைவுபடுத்தியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர் தமிழக அரசில் முக்கியத் துறை ஒன்றிற்கு செயலாளராக இருந்தபோது, புனிதாவைப் பெண் பார்க்க வந்தார்கள். சப்-கலெக்டர் மாப்பிள்ளை. இவரைப் போலவே எடுத்த எடுப்பிலேயே இ.ஏ.எஸ் அதிகாரி ஆனவன். ஆரம்பத்தில் இவரிடம் அண்டர் செகரட்டரியாகவும் வேலை பார்த்தவன். பெற்றோர் உற்றோரோடு வந்தான். இன்னும் பதிலளிக்கவில்லை. கல்யாணத்தைப் பொறுத்த அளவில் மெளனம் சம்மதத்தின் அடையாளமல்ல என்பது அவருக்குப் புரிந்தது. மனைவியின் தெரிஞ்சதுதானே’ தெரியவேண்டிய அளவிற்குமேல் தெரியவைத்தது. இ.ஆ.ப. வான இவர் இம்பத்தெட்டைக் கடந்தாலும், அரசு, பதவி நீடிப்பு கொடுப்பதாக ஒரு பேச்சு அடிபட்டது. அந்தப் பின்னணியில் தான் அவர்கள் பெண்பார்க்க வந்திருக்க வேண்டும். ஆனாலும் இவர் மறு வாரமே ஒய்வு பெற்றுவிட்டார். சும்மா சொல்லக் கூடாது. அரசு, இவருக்கு நீட்டிப்பு கொடுக்க முன் வந்தது. கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் கரை படியாதவர் என்று பெயர் எடுத்தவர்.

என்றாலும், பதவி நீட்டிப்பு சம்பந்தப்பட்டவரின் பாரபட்சத்தை பலவீனப்படுத்தும் என்பதை அறிந்தவர். அதோடு, கீழே இருப்பவர்கள் சாபம் இடுவார்கள் என்பதை விட, ஒரு பதவி நீட்டிப்பில் பத்துக்கு மேலான பதவி உயர்வுகள் அடிபட்டுப் போகும், என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தவர். பின்னால் இருப்பவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று வழிகாட்டியாய் இருக்க விரும்பியவர். இதனால் நீட்டிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். மனைவியிடமும் இதைச் சொல்லிவிட்டார். அப்போது அந்த அம்மா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இவர் காதில் அவர்சொல் அம்பலம் ஏறாது என்பது அந்த அம்மாவுக்கே தெரியும். ஆனாலும் இப்போது சமயம் பார்த்து தானிக்கிறாள். மனைவி சொல்வதும் ஒருவகையில் சரிதானோ. மகளுக்கு, மனைவிப் பதவி கிடைக்காமல் போவதற்கு இவரது பதவி ஒய்வும் ஒரு காரணமோ.

பழனிச்சாமி யோசித்தார். தப்புசெய்துவிட்டேனோ. மகாத்மா காந்தியைப் பற்றிய விமர்சனங்களில், அவர் தனது சத்திய சோதனைக்கு இந்தியாவை ஒரு சோதனைக் கூடமாக்கினார் என்பது ஒரு விமர்சனம், நாடளவில் அவர் என்றால், வீடளவில் இவரோ. நேர்மை, சுயமரியாதை ஆகியவற்றை, சகல விளைவுகளோடும் சோதித்துப் பார்க்க வீட்டையே சோதனைக் கூடமாய் ஆக்கிவிட்டாரோ. பதவி நீட்டிப்பை ஏற்றுக் கொண்டிருந்தால், புனிதா, இந்நேரம் மாங்காய் கடித்திருப்பாள். நீட்டிப்பு கிடக்கட்டும். பதவியில் இருந்த முப்பதாண்டுக் காலத்தில், சக அதிகாரிகளைப் போல், சாதிய மனப்பான்மையுடன் செயல்பட்டிருந்தால், இந்த மாப்பிள்ளையை மட்டும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. காலில் விழாத குறையாக, கையெடுத்துக் கும்பிட்ட ஒரு சில தொழில் அதிபர்களுக்கு, சலுகை காட்டியிருந்தால் ஏதாவது ஒரு பிரபல கம்பெனியில் இப்போது ‘கன்ஸல்டண்டாக இயங்கி இருக்கலாம். இப்போது ஊமையாகிப் போன டெலிபோன் தொடர்ந்து ஒலித்திருக்கும். வாசலை அடைப்பதுபோல் ஒரு கார் ‘பழி கிடக்கும். அரசுக் கடனில் எப்போதோ வாங்கிய பாடாதிக் காரைத் தள்ளுவதற்கு ஆள்தேடும் சிரமம் ஏற்பட்டிருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக, புனிதாவிற்கு ஒரு ‘எக்ஸிகியூட்டிவ் மாப்பிள்ளை கிடைத்திருக்கும். முன்பெல்லாம் வீடு கொள்ளா விசிட்டர்கள். இப்போதோ இவர்தான் எங்கேயாவது விசிட்டராகப் போகவேண்டிய நிலை.

பழனிச்சாமி, ஆங்காங்கே முடியுதிர்ந்த தலைப் பொட்டல்களைத் தடவியபடியே நிமிர்ந்தார். படித்ததையும், பார்த்ததையும் மனப் படிவங்களாக்கினார். எளிமையில்லாமல் நேர்மையாய் இருக்க முடியாது. ‘தாசில்தார் செத்தால் போகமாட்டார்கள். ஆனால் அவர் நாய் செத்தால், துக்கம் விசாரிக்கத் துடித்துப் போவார்கள்’ என்ற அலுவலக பழமொழி நெசந்தானோ.

அப்போதுதான், அங்குமிங்குமாய்ப் பார்த்த பழனிச்சாமியின் கண்களில், அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி பட்டது. ஒலியும் ஒளியும் போய், இப்போது ‘நாடும் நடப்பும்’, அமைச்சர்கள் உருவத்தில் அல்லாடின. ஒருவர் மத்திய அமைச்சர். இன்னொருவர் மாநில அமைச்சர். இருவரும் ‘இருபால் அமைச்சர்கள். ஆனாலும் ‘ஒருபால்’ அமைச்சராய்த் தோன்றினார்கள். ஒரேமாதிரியான கீழ்நோக்கிப் பார்க்கும் கவிழ்ப்புப் பார்வைகள். எதிராளி பேகம்போது, எங்கேயோ பார்க்கும் பராக்குப் பார்வைகள். கடுவாய்ப் பற்களைக் கடித்தபடியே எவரையோ எதையோ விழுங்கப் போவது போன்ற திறந்தவெளி வாய்கள். உப்பிப் போன கழுத்துக்கள். குளிர்சதன வசதிகளால் வெளுத்துப்போன கருப்புகள். இந்த இரண்டு அமைச்சர்களும், ‘இனக்கலவரம் என்று ஒரேகுரலில் போட்டியிட்டு பேசுகிறார்கள். பழனிச்சாமிக்குக் கோபம் வந்தது. வாய்விட்டே பேசினார். ‘தென்மாவட்டங்களில் நடந்ததும், நடப்பதும் இனக்கலவரம் இல்லடா. இல்லடி. சாதிக்கலவரம். ஒரு இனத்தோட உட்சாதிகள் நடத்தும் கலவரம்’.

பழனிச்சாமி, அந்த அமைச்சர்கள் பேசுவதை முன்பெல்லாம் தட்டிவிடுவார். இப்போது நேரப் போக்காக உற்றுக் கேட்டார். அவர்கள் இனக் கலவரம், இனக் கலவரம் என்று வார்த்தைக்கு வார்த்தை வாயாடுகிறார்கள். இடையிடையே மறக்காமல், தத்தம் தலைவர்களின் பாதங்களை நாக்குகளால் மானசீகமாய் நக்குகிறார்கள். எதிரெதிராய் வாதாடுகிற இவர்களில் ஒருவர், கண்களைத் துடைக்கிறார். உடனே அதற்குப் பதிலடியாய் இன்னொருத்தர் தேம்பித் தேம்பி அழுகிறார். நடுவரான வீரபாண்டியன், சிரிப்புத் தாங்கமுடியாமல் முகத்தை மறைத்துக் கொள்கிறார்.

பழனிச்சாமி, இப்போது அந்த அமைச்சர்களை கோபம் கோபமாய்ப் பார்த்தார். அமைச்சர் பதவிக்கு, அவர்கள் புதுமுகங்கள். ஆனால் அவருக்கோ பழைய முகங்கள். கல்லூரி முகங்கள். இவர்களில் மத்திய அமைச்சர், அப்போதே நல்ல கவிஞர். மாநில அமைச்சர், சிறந்த பேச்சாளர். ஆனால் இந்தப் பழனிச்சாமிக்கு முன்னால், அவர்களின் பேச்சோ, கவிதையோ எடுபட்டதில்லை. கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் முதலில் வந்தவர் இவர். அப்போது ஆலமரமாகி இப்போது கிளையற்றுப்போன சென்னைப் பல்கலைக் கழகம், மாநிலம் தழுவி நடத்திய அனைத்துக் கல்லுரரிப் பேச்சுப் போட்டிகளில், இவர்தான் மாநிலத்திலேயே முதலாவதாக வந்தார். பத்திரிகைகளிலும், இந்த அமைச்சரின் கவிதைகளை விட, இவரது கவிதைகளுக்கே மெளக இருந்த காலம். இந்த இருவரின் ஒத்துழைப்பால் இவரே கல்லூரியில் தமிழ் மாணவர் மன்றத் தலைவராக் தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு தலைமைப் பண்பு கொண்டிருந்தார். ஏதோ ஒரு பட்டிமண்டபத்தில், இவரது சொற்பொழிவைக் கேட்ட உள்ளூர் அரசியல் வாதி பெரியசாமிக்கு, இவரைப் பிடித்துப் போய்விட்டது. கூடவே சொந்த சாதி அபிமானம். இவரை கட்சி மேடைகளில் பேசச் சொன்னார். தனக்கு உள்ள செல்வாக்கை இவரிடம் தெரியப்படுத்தினார். பேச்சாளர்களே தலைவர்களாகும். காலம் என்பதால், இவரும் ஒரு எதிர்கால அமைச்சர் ஆகலாம் என்று ஆசை காட்டினார்.அதில் ஒரு ஆத்ம நேயமும் வெளிப்பட்டது. இவருக்கும் சிறிது ஆசைதான். ஆனாலும் யோசித்துப் பார்த்து மறுத்துவிட்டார். அரசியல் மேடைப் பேச்சில், ஆபாசத்தைக் கலக்க வேண்டும். பழி போட்டு பேசவேண்டும். ‘தோல் இருக்க சுளை விழுங்கியே. முழுப்பாய் சுருட்டியே! கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் கேட்பவனே! என்று காட்டமாக எதிர்க்கட்சித் தலைவர்களை வர்ணிக்க வேண்டும். எதிர்க்கட்சிப் பெண் பிரமுகர் என்றால், அவரை ‘உன் பிடரிப்பூ கசங்கி இருக்கிறதே ஏன்? உன் உள்ளாடை நனைந்திருக்கிறதே ஏன்?’ என்று பேசியாக வேண்டும். தலைவர்களைப் பார்க்கும்போதெல்லாம், நாம் காரிலோ, சைக்கிளிலோ போகும்போது, ‘என்னையும் கூட்டிப்போ’ என்பதுமாதிரி, நமது வீட்டு நாய் பார்க்குமே அப்படிப் பார்க்க வேண்டும்.

பழனிச்சாமி, அரசியலில் குதிக்க மறுத்துவிட்டதால், பெரியசாமி சளைக்கவில்லை. இதோ தொலைக்காட்சியில் பேசுகிறாரே மாநில அமைச்சர். அந்த மாணவரை தயார் படுத்திவிட்டார். இந்த அமைச்சரும் வாயை ஆபாச ஊற்றாக்கி நாடறிந்த பேச்சாளாராகி விட்டார். இந்த அமைச்சரை அதிகமாகப் பிடிக்காத, அதே சமயம் இந்த பழனிச்சாமியின்மேல் ஒரு கண் வைத்திருந்த, அப்போதைய நல்லவளான இந்தப் பெண் அமைச்சர், இன்னொரு கட்சியில் இணைந்தார். கவிஞராயிற்றே. கட்சித் தலைவர்களுக்கு பிள்ளைத்தமிழ் பாடி, புத்தககங்கள் வெளியிட்டார். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஏழு பருவப் பெண்களாக தன்னை அனுமானித்துக் கொண்டு, தலைவருக்கு உலா பாடினார். தானைத் தலைவரைக் கண்டு, கருத்தழிந்து, காமுற்றதாக காவிய உலாக்களைப் படைத்தார். செயலிலும் இவர் ஒரு வீராங்கனையாக மாறினார். பல்வேறு போராட்டங்களில் – இவரது இடுப்புக்குக் கீழே சேலை இருந்ததே கிடையாது. பாவடையோடு சேர்த்து, மார்புக்குத் திரையாகி விடும். இதனால் கிடைத்த பேரும் புகழும் இவரை முக்கியமான அரசியல் பிரமுகராக்கி, இப்போது அமைச்சராக்கி விட்டது. ஆனால் இவரோ.

பழனிச்சாமிக்கு, அந்த அமைச்சர்களை மேற்கொண்டு பார்க்கப் பிடிக்கவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் மந்திரக் கோலில் ஒரு எண்ணை அழுத்தி, ‘டிஸ்கவரியில் தோன்றிய மிருகங்களைப் பார்த்தார். ராட்சத பாகற்காய் போன்ற காடு. அதன் மேனி முழுவதும் வியாபித்த துளிர்கள்போல் மரங்கள். புதர்க் குவியல்கள். அதன் சிவப்பு விதைகள் போன்ற சதுப்பு நிலக் குட்டைகள். அதே பாகற்காய் இரண்டாய்ப் பிளந்து சரித்து வைக்கப்பட்டதுபோன்ற பள்ளத்தாக்குகள்… சதுப்புநிலக்காட்டு கோதுமைச் செடிகளுக்குள் தக்கதும் மிக்கதும் இல்லாமல், சிங்கம் இவரைப் பார்க்கிறது. முன்பெல்லாம் இவரை “நீயும் நானும் ஒன்று. ஒரே ஒரு வித்தியாசம் நீ சைவம்’ என்பதுபோல் பார்க்கும் சிங்கம், இப்போது, அவரையே விழுங்கப் போவதுபோல் கோரப் பற்களைக் காட்டுகிறது. சடுகுடு பாடி வருகிறவனின் காலை வாருவதற்காக, பதுங்குகிற எதிரணி வீரன் போல், பவ்வியமாய்ப் பதுங்கும் புலியின் அழகு, இப்போது, அவருக்கு கோரமாகத் தெரிகிறது. ஆசிர்வதிப்பதுபோல் துதிக்கையை அரைவட்டமாய் மேலே துரக்கித் வைத்தபடி, ஒற்றைக் காலைத் துரக்கி நிற்கும் யானை இப்போது அவரை அதே தும்பிக்கையால் துரக்கி, காலில், அழுத்தப் போகிறது.

பழனிச்சாமி பதறிப்போனார். ‘என்னாச்சு எனக்கு? என்று பல தடவை தன்னைத்தானே பார்த்துக் கொண்டார். கேட்டுக் கொண்டார். எங்கேயாவது கால்போன போக்கில் நடந்து, மனம்போன போக்கில் நடக்க வேண்டும்போல் தோன்றியது.

அதற்குள், அழைப்பு மணியைக் கூட அடிக்காமல், நான்கு பேர் உரிமையோடு உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் பழனிச்சாமி ஆறடி மனிதரானார். மனம் ஆனந்தக் கூச்சலிட்டது. அவர்களை உட்காரச் சொல்லக்கட அவருக்குத் தோன்றவில்லை. அவர்கள்தான் உட்கார்ந்து, அவரை உட்காரும்படி கையாட்டினார்கள். புனிதாவைப் பார்த்துவிட்டுப் போன இ.ஏ.எஸ் மாப்பிள்ளை ககுமார் வந்திருக்கிறான். கம்பீரமான அமர்க்களப் பார்வை. ஆண்டான் தோற்றம். மை தடவியது போன்ற மெல்லிய மீசை, இன்னொருத்தர் அவனது சித்தப்பா. அரைகுறையாய் உரிக்கப்பட்ட தேங்காய்போல் ரோமக்கணைகளைக் காட்டிய முகம். இன்னொருத்தர், உடல் முடுக்கு இல்லாமல், வெறும் தோரணை முடுக்கு மட்டுமே கொண்டவர். ஒரு நடுத்தரம், கையில் ஆளுயுற மாலையுடன் உட்காராமல் நின்றார். சுவரில் சாய்ந்து அந்த மாலையையும் தன்மேல் சாத்திக் கொண்டார். அவர் இடுப்பில் பெரிய பெல்ட்.

பழனிச்சாமி, ‘பூமாரி என்று சொல்லி முடிக்கு முன்பே, வீட்டம்மா அவசர அவசரமாய் கைகளையே தலைக்கு சிப்பாக்கினார். ஒடி வந்து, தனக்கென்று மானசீகமாக கிழித்துக் கொண்ட ஒரு கோட்டைத் தாண்டாமல், அவர்களையே வாய்கொள்ளாச் சிரிப்பாய்ப் பார்த்தார். பக்கவாட்டு பால்கனியில் நின்ற புனிதா, க.குமாரின் கண்படும் வகையில் முகத்தை மட்டும் நீட்டிக் கொண்டாள். நீட்டியதை அப்படியே நாணத்தோடு நிறுத்திக் கொண்டாள். கடவுள் கைவிடவில்லை. தந்தை ஒதுக்கப்பட வில்லை. கனவுக் காட்சிகள் நினைவாகப் போகின்றன.

மாப்பிள்ளை இளைஞனும், அவனது சித்தப்பாவும் ஒருவரையொருவர் பொருள்படவோ, அல்லது போட்டியாகவோ பார்த்தார்கள். பிறகு இருவருமாய் எழுந்து, பெல்ட்காரரின் கையில் இருந்த ஆளுயர மாலையை வாங்கப் போனார்கள். அந்த பெல்டோ, அந்த ரோஜாப்பூ மாலையிலிருந்து, அதைச் கற்றிய தையிலையை எடுக்கப் போனார். முடியாது.போகவே, அவற்றைப் பிய்த்து சில இதழ்களையும் உதிர்த்தார். இலையைக் கட்டிய நூல் கயிற்றை, துண்டிக்க முடியாமல், தனது நீண்ட நெடிய பற்களால் கடித்துக் குதறினார் – நாய், அணில் வாலை, காலில் அழுத்திக் கொண்டு, தலையைக் கடிக்குமே அப்படி. இதனால் சரிகை நூல்களும், கிழிந்து இந்தாறு ரோஜாக்கள் கீழே விழுந்து, மாலை பொக்கை வாயைக் காட்டியது. ஈரப்பட்ட குழிகளாகவும் தோன்றியது. கையாளான பெல்ட்காரரை, பல்லைக் கடித்துப் பார்த்தபடியே, மாப்பிள்ளையும், அவன் சித்தப்பாவும், அந்த மாலையைத் துரக்கி, பழனிச்சாமியின் கழுத்தில் திணித்தார்கள். இந்தமாதிரி வரவேற்பை முன்பு ஏற்றுக்கொள்ளாத அவர், இப்போது புனிதாவிற்காக பொறுத்துக் கொண்டார். இதற்குள் பூமாரி, பலகாரத் தட்டுக்களை ஏந்தி வந்தாள். மாப்பிள்ளையை மகளின் சார்பிலும், தாய்மையின் பூரிப்பிலும் அள்ளிப் பருகிக் கொண்டே, சமையல் கட்டிற்குள் மீண்டும் ஓடினாள். பழனிச்சாமி அவர்களை நன்றியோடு பார்த்துக் கேட்டார்.

‘கல்யாணத்துக்கு நாள் பார்த்துட்டீங்களா? ஒரு டெலி போன் செய்துட்டு வந்திருக்கலாமே. பரவாயில்ல. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய சந்தர்ப்பங்களுலதான் மனதார மகிழ்ச்சி ஏற்படும். எனக்கு இப்போ ஏற்பட்டிருப்பது, அந்த வகையான மகிழ்ச்சி. ஆனந்தக் கூத்து. கல்யாணத்த உங்க ஊர்ல வைத்தாலும், இங்கே வரவேற்பு வைக்கனும்.’

சித்தப்பாக்காரர், அண்ணன் மகனை ஒரு தினுசாகவும், பழனிச்சாமியை இன்னொரு தினுசாகவும் பார்த்துவிட்டு, விவரம் சொன்னார்.

‘கல்யாணத்த தள்ளிப் போட்டுருக்கு. கவலைப் படாதீங்க. நிச்சயம் இவன்தான் மாப்பிள்ளை.ஒங்க மகள்தான் பொண்ணு. இப்பவே கல்யாணம் நடத்த முடியாம ஒரு இழவு விழுந்திட்டு எங்க ராமனாதபுரத்துல் நடந்த சாதிக் கலவரத்துல, எண் அண்ணன – இவனோட பெரியப்பாவ, அந்த சாதிப் பயலுக கொன்னுட்டானுக. பெண்பார்க்க வந்தப்போ நீங்கக்கூட கிண்டல் அடிச்சிங்களே! ‘ஒங்களுக்கு மீசை பெரிசா. முகம் பெரிசான்’னு கேட்டிங்களே. அவரு, வயலுல தன்னந்தனியா போகும்போது, அந்த சாதிப் பயலுக ஒரே போடா போட்டு கொன்னுட்டானுக. எங்கண்ணன் கையெடுத்துக் கும்பிட்டிருக்கார். அப்படியும் அந்தப் பயலுக விடல – அது அவங்களோட சாதிப் புத்தி.”

பழனிச்சாமி, இருக்கையிலிருந்து எழுந்தார். தேநீர் கோப்பைத் தட்டோடு வந்த பூமாரி, நடையை நிறுத்தி, நின்ற இடத்திலேயே நின்றாள். பால்கனியில் மாப்பிள்ளைக்கு மட்டும் முகம் காட்டிய புனிதா, அவர்களின் அருகே வந்து அம்மாவின் முதுகிற்கு பின்னால் நின்று, அவள் தோள் வழியாய் முகம் நீட்டினாள். மாப்பின்ளையின் கண்கள், அவன் கண்களை ஆற்றுப்படுத்தின. பழனிச்சாமி இருக்கையில் உட்காராமலே, வேதனையோடு பேசினார்.

“ஒரு நாய், இன்னொரு நாயைத் துரத்தும்போது, துரத்தப்பட்ட நாய், வாலை, காலுக்குள்ள விட்டாலோ, இல்லன்னா மல்லாக்கப் படுத்து நாலு காலையும் மேலத் துரக்குனாலோ, கடிக்கவந்த நாய், கடிக்காது. ஆனால் இந்த மனுசன் மட்டுந்தான், எதிரி கையெடுத்துக் கும்பிட்டாலும், கும்பிட்ட கைகையே வெட்டுவான். அந்தக் கொலகாரப்பயலுகள விடப்படாது.

‘கவலைப்படாதீக சம்பந்தி. அவனுகளுல இரண்டு பேரைக் காலிபண்ணிட்டோம். இன்னொருத்தனோட பிள்ளைத்தாச்சிப் பெண்டாட்டிய துடிக்கத் துடிக்க வெட்டிப் போட்டோம். ம்ற்றொருத்தனோட வயசான அம்மாவ ஒட ஒட வெட்டி தலையை மட்டும் எடுத்துக்கிட்டோம். இன்னும் ரெண்டுபேர்தான் பாக்கி. சிக்கிரமா முடிச்சிடுவோம்’.

பழனிச்சாமியின் புருவங்கள் மேலோங்கி, மோவாய் குனிந்தபோது, இ.ஆ.ப. மாப்பிள்ளை, மாமாவுக்கு ஆறுதல் சொன்னான். அதுவும் புனிதாவைப் பார்த்தபடியே, புதிய புறநானூற்று வீரனாய் சூளுரைத்தான்.

‘கவலைப்படாதீங்க மாமா. நானும் என் பங்குக்கு, நம்ம சாதிக்கு எவ்வளவோ செய்திருக்கேன். எங்கெல்லாம் நம்ம சாதி சிறுபான்மையா இருக்குதோ, அங்கெல்லாம் நம்ம சாதி போலீசு இன்ஸ்பெக்டர்களை போட வச்சேன். நம்ம சாதிப் பெரும்பான்மையா இருக்கிற இடங்களுல, அந்த சாதியில உதவாக்கரையா இருக்கிற தாசில்தார்களை நியமிக்க வச்சேன். அந்த சாதிக்காரப் பயல்கள கொலை செய்த நம்ம சாதி ஆட்கள் மேல நீயூசென்ஸ் கேஸ் போட வச்சேன். அந்த சாதியில கம்மா கத்துனவங்கள கொலை கேகல புக் பண்ண வச்சேன். அதோட நம்ம சாதி ஐ.ஏ.எஸ் காரங்ககிட்டயும், ஐ.பி.எஸ். காரங்ககிட்டயும் தொடர்பு வச்சு, இனிமேல் அந்த சாதிப் பயலுக ஏழேழு ஜெனரேசனுக்கும் தலையெடுக்க முடியாதபடி கடமை ஆற்றணுமுன்னு சொல்லியிருக்கேன்’.

‘ஒங்க மாப்பிள்ளைய கம்மா சொல்லப்படாது சம்பந்தி. நம்ம சாதியில ஆயிரம்பேர் செய்ய முடியாத காரியத்த, இவன் ஒருத்தனே செய்து முடிச்சிருக்கான், இவனுக்காக நாமெல்லாம் பெருமைப்படனும்’.

‘போங்க சித்தப்பா. என்னோட சமூகக் கடமைய்ைத்தான் நான் செய்தேன். செய்வேன்’.

மாப்பிள்ளை இ.ஏ.எஸ், புனிதாவைப் பார்த்து, பெருமிதமாகத் தலையாட்டியபோது, பழனிச்சாமி, ‘சமூகக்கடமை, சமூகக்கடமை என்று மாப்பிள்ளை ஆகப் போகிறவன் முழங்கிய வார்த்தைகளை, மனதுக்குள் முணுமுணுத்தார். பிறகு அவர்கள் வருகையின் காரணத்தை அறிவதுபோல், பார்வையால் தெரியப்படுத்தினார். உடனே வினாடி வினாவில் அதாரிட்டியான மாப்பிள்ளை விளக்கினான்.

‘இப்படிப்பட்ட கொலைகார சமயத்துல எதுக்காக மாலையும் கையுமா வந்தோமுன்னு நினைக்கீங்க. அப்படித் தானே மாமா – சித்தப்பா நீங்களேச் சொல்லுங்க’.

‘சொல்றேன். நம்ம சாதி பிரமுகர்கள் எல்லாரும், முந்தாநாள் சந்திச்சோம். இந்த சந்திப்புல சிதறிக்கிடக்கிற நம்ம சாதி அமைப்புகளோட தலைவர்களும் கலந்துகிட்டாங்க. இனிமேல் அந்தப் பயலுகள விட்டு வைக்கக் கூடாதுன்னு தீர்மானிச்சோம். இதுக்காக, ஒரு ஒருங்கிணைப்புப் பேரவையை உருவாக்கி இருக்கோம். அதுக்கு நீங்கதான் தலைவரா இருக்கனுமுன்னு, உங்க மாப்பிள்ளையான இந்த சப்-கலெக்டரு முன்மொழிஞ்சதும், ஒரே கைதட்டல், இனிமேல் நீங்கதான் எங்க தலைவர். உங்களுக்கு ஒரு கண்டசலா காரையும், ஜீப்பையும் கொடுத்திடுறோம். பாதுகாப்புக்கு நாலைஞ்சு பேர கொடுக்கோம். இவங்க ஜீப்ல நீங்க போகிற இடத்துக்கெல்லாம் வருவாங்க. எல்லாச் செலவும் பேரவை பொறுப்பு. பணம் ஒரு பிரச்சனை இல்ல. நீங்க தமிழ்நாடு முழுதும் சுற்றுப் பிரயாணம் செய்து நம்ம மக்களோட பேசனும், அவங்க ஏற்பாடு செய்கிற கூட்டங்களில் முழங்கணும். உங்க பேச்சை வெளியிடாத பத்திரிகையோ, தொலைக்காட்சியோ இருக்காது. இருக்கக்கூடாது. அந்த சாதிப் பயலுகள ரெண்டுல ஒண்னு பார்த்திடணும். உங்களுக்கு பதவி நீட்டிப்பு கொடுக்காத முதலமைச்சரே, உங்கள கூப்பிட்டு பேசற நிலைமையை ஏற்படுத்தணும்’.

பழனிச்சாமி, அருகே நின்ற புனிதாவை பொருட்படுத்தி, அவர்கள் பேசியதை அதிகமாய் பொருட்படுத்தாமல், போகிற போக்கில் பேசுவது போல் பேசினார்.

‘அரசியல்வாதி. அரசாங்க அதிகாரி. குறிப்பா இ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிங்க – கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், திரைப்படக் கலைஞர்கள் — இவங்களுக்கு சாதியே கூடாது. அப்படியே சாதி தேவைன்னா, அது ஒரே ஒரு சாதியாத்தான் இருக்கணும். அதுக்குப்பேர்தான் தமிழ்ச்சாதி, குறிப்பா அதிகாரிங்க. மக்களோட வரிப்பணத்துல சம்பளம் வாங்குறவங்க. இவங்க, எல்லா மக்களையும் ஒரே தட்டுல வச்சுதான் பார்க்கணும்’.

எதிர்கால மாப்பிள்ளை, எதிரி மாப்பிள்ளையாய் ஆனதுபோல் புனிதாவையும், பழனிச்சாமியையும் மாறி மாறியும், கோபம் கோபமாகவும் பார்த்தான். ஆனாலும் அவனைக் கையமர்த்திவிட்டு, சித்தப்பா பூசி மழுப்பினார்.

‘பதவியில் இருக்கும்போதுதான், உங்களால நம்ம சாதிக்கு, பைசா பிரயோசனம் கிடையாது. இப்போகட இவன் முகத்துக்காகத்தான் உங்கள தலைவரா நியமிச்சது. அதோட நீங்க ரிட்டையர்டு ஆகிட்டீங்க. அந்த சாதியில ரிட்டையர்டு ஆன்வங்க சொந்த சாதிக்கு கொம்பு சிவி விடும்போது, நீங்க இப்படி பிடிவாதம் பிடிக்கிறதுல நியாயம் இல்ல’.

‘நீங்க சொல்ற அதிகாரிங்க, மனச்சாட்சி இல்லாதவங்க மக்கள் விரோதிங்க. இப்போகட, எனக்குக் கிடைக்கிற ஒய்வுத் தொகை மக்களோட வரிப்பணத்துல இருந்துதான் வருது. இதனால எல்லா மக்களுமே எனக்கு வேண்டியவங்க’.

‘நிறுத்துங்க மாமா உங்களால முடியுமா. முடியாதா’.

‘முடியாது என்கிறத இதுக்குமேல எப்படி மாப்பிள்ளை சொல்றது’

‘எப்படியும் சொல்லுங்க. ஆனா மாப்பிள்ளன்னு மட்டும் சொல்லாதீங்க’.

பழனிச்சாமி, லேசாய் ஆடித்தான் போனார். சிறிது தொலைவில் நின்ற மனைவியையும், அவளை முண்டியடித்து முன்னால் வந்து நின்ற மகளையும் பார்த்தார். தாய்க்காரி கையெடுத்துக் கும்பிடுகிறாள். மகள்காரியோ தாயின் கும்பிட்டக் கைகளை, தனது கைக்குள் இழுத்துப் பிடித்து மறைக்கிறாள். வலது கரத்தை கீழே கொண்டுபோய் துடுப்பு விடுவதுபோல் அதை மேல்நோக்கி கொண்டுபோகிறாள். ‘அவங்க கிடக்காங்க. விட்டுத்தள்ளுங்க.”

பழனிச்சாமி, மகளை தாயாகப் பார்க்கிறார். ஆசிரியையாய் அனுமானிக்கிறார். அவருள் பழைய கல்லூரி மாணவன் கிளர்ந்தெழுகிறான். போராளித் துறவி சூளுரைக்கிறான். எதை இழந்தாலும் மனிதத் தன்மையை இழக்க விரும்பாத மாவீரனாய் ஆவேசிக்கிறான். வெற்றி பெறுவது மட்டுமல்ல சாதனை. வெற்றி பெறாமல் இருப்பதும் ஒரு சாதனைதான் என்று பெருமிதப் படுகிறான். அந்தப் பெருமிதம் மகளைப் பார்க்கப் பார்க்கக் கூடுகிறது.

பழனிச்சாமி, அவர்களைப் போகலாம் என்பதுபோல் பார்க்கிறார். உடனே அதுவரை பேசாத மூன்றாவது மனிதர், ‘இது தேறாத கேஸ்-ன்னு அப்பவேச் சொன்னேன். கேட்டிங்களா? வாங்கப்பா. நம்ம சாதியில இ.ஏ.எஸ் அதிகாரிங்க குறைவா. என்ன – கிறுக்கன்கிட்டல்லாம் வரப்படாதுப்பா’. என்று சொன்னபடியே, அவர்களின் முதுகுகளைத் தள்ளுகிறார்.

ஆவேசமாகப் பேசத்துடித்த புனிதாவை, பழனிச்சாமி கையமர்த்துகிறார். அதற்குள், வேண்டிவந்த விருந்தாளிகள், வேண்டாதவர்களாய் வெளியேறப் போகிறார்கள். பழனிச்சாமி கோபப்படாமலும், புன்னகைக்காமலும், அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்.

‘இந்தப் பிணமாலையை எடுத்துக்கிட்டுப் போங்க இதுல இருக்கிற ஒவ்வொரு இதழும், துண்டிக்கப்பட்ட ஒரு மனிதத் தலையாய் எனக்குத் தோணுது. இதனோட நிறம் மனித ரத்தக் கசிவாத் தெரியுது. தயவு செய்து எடுத்துட்டுப் போங்க’

ஆனாலும் அவர்கள், புதுமாலை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்ததுபோல் திரும்பிப் பார்க்காமலே நடக்கிறார்கள்.

– ஆனந்த விகடன் – தோல்வியில் வெற்றி என்ற தலைப்பில், 13-12-98 இதழில் பாரதியாரின் புதிய ஆத்திச்துடிக் கதையாய் பிரசுரமானது. (தன்மை இழவேல்)

– ஈச்சம்பாய் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1998, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *