கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 7,254 
 

உங்களைப் பயமுறுத்துவதற்காக இந்தக் கதையை எழுதவில்லை. உண்மையிலேயே பாம்பு வந்தது. அந்தப் பாம்பு வந்தது எங்கள் வீட்டுக்கல்ல. ஜசீலா அன்ரியின் வீட்டுக்கு. எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறமாக மூன்றாவதாக உள்ளது ஜசீலா அன்ரியின் வீடு.

இரவு ஒன்பது மணியைப்போல எனது அறையில் சற்று ஆற அமர்ந்திருந்தேன். அப்போதுதான் மனைவி ஓடிவந்து கூறினாள்.

‘ஜசீலா அன்ரி வீட்டுக்குள்ள ஒரு பாம்பு வந்திருக்கு.. உங்கள வரட்டாம்!”

எட்டு பத்து வயதுமான எனது பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்த புத்தகங்களை அந்தப்படியே போட்டுவிட்டு ஓடத் தொடங்கினார்கள். ஜசீலா அன்ரியின் வீடு நோக்கித்தான். அவர்களுக்கு இது விளையாட்டாயிருந்தது. (அதிலும் சின்னவன், ஒரு நாள் வீதி ஓரத்தில் போன குட்டிப் பாம்பு ஒன்றை வாலிற் பிடித்துத் தூக்கிவந்தான். ‘அப்பா நல்ல வடிவான குட்டிப் பாம்பு. பார்த்தீங்களா?” என்று! அந்தக் குட்டியும் என்ன நினைத்ததோ அவனைக் கடித்துப் பதம் பார்க்கவும் இல்லை.)

பாம்பு என்ற சொல்லைக் கேட்டதுமே எழுந்து மறுபக்கமாக ஓடும் உந்துதல் எனக்கு ஏற்பட்டது. எனினும் நான் இருந்த இடத்திலிருந்து அசையவில்லை. இப்படியான சந்தர்ப்பங்களிலாவது எனது வீரதீரங்களை மனைவிக்கு உணர்த்தவேண்டாமா? மனைவியின் முகத்தை அலட்சியமாகப் பார்த்தேன். ‘ஏதாவது ஒரு குட்டிப் பாம்பு அவர்கள் வீட்டுக்குள் வந்திருக்கலாம். சிறிய வகையறா பாம்புகள்தான் பொதுவாக இரவில் இந்தப் பக்கத்தில் புழங்குகின்றன. அதைக் கண்டு இவர்கள் வெருட்சியடைகிறார்கள். ஒரு பூனைக்குட்டியை விட்டாலே அதன் கதையை முடித்துவிடும். இதற்குப் போய் என்னைக் கூப்பிடுகிறார்களே!’ என்ற ரீதியிலான பார்வை!

‘என்ன பாம்பு?” என மனைவியிடம் கேட்டேன்.

‘தெரயாது. போய்ப் பாருங்கோ!”

எனக்குக் கொஞ்சம் தயக்கமாயிருந்தது.

‘என்னை எதுக்குக் கூப்பிடுகினம்?”

‘பாம்பை அடிக்கிறதுக்குத்தான்!”

எனக்குத் ‘திடுக்| என்றது. பாம்பு குட்டியாக இருந்தாலும் சரி, கிட்டியாக இருந்தாலும் சரி அடிக்கவேண்டியது நான்தான் என்றதும் கிடு நடுங்கியது. பாம்பு அடிப்பதில் நான் பெரிய நிபுணத்துவம் பெற்றவனும் அல்ல! (என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.)

‘ஏன் அவர் இல்லையா?”

நான் ‘அவர்| எனக் குறிப்பிட்டுக் கேட்டது ஜசீலா அன்ரியின் கணவரைத்தான். அவர் வீட்டில் இல்லைப்போலிருக்கிறது. அதனால்தான் பெண்கள் பயப்படுகிறார்கள்.

‘அவர் நிக்கிறார்! ஆனால் உங்களைத்தான் வரட்டாம்!” மனைவி இதைச் சற்றுப் பெருமையுடன் கூறுவது போலிருந்தது. பக்கத்து வீட்டு அன்ரியே தன் கணவரை விட என் புஜபலத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருப்பதை அறிய எனக்கு உஷார் ஏறியது.

நான் அவ்வப்போது ஒரு சில பாம்புகளை அடித்துக் கொன்றிருக்கிறேன் என்பது உண்மைதான். அவை ஏதோ தற்செயலாக நடந்த சம்பவங்கள் என்றுதான் கூறவேண்டும். சாரைப் பாம்பு, கோடாரிப் பாம்பு, பச்சைப் பாம்ப போன்ற பாதகமற்ற பாம்பு வகைகள் எங்கள் வீட்டுத் தோட்டத்துக்குள் வந்திருக்கின்றன. கோடை காலங்களில் வெளியே நிலச்சூடு அதிகமாக இருக்குமாகையால் குளிரிடம் தேடி வருவதாயிருக்கலாம். வந்தால் (என் பாடு) அதோகதிதான். அந்தப் பாம்மை அடிக்கிற அல்லது விரட்டுகிற பொறுப்பு குடும்பத் தலைவன் எனும் ரீதியில் என் தலையில் விழுந்துவிடும்.

சுற்றுச்சுவரைக் கொண்ட வளவுக்குள் கேற்றினூடாக பாம்பு நுழைந்துவிட்டால் திரும்பப் போகும் வழியை நினைவு வைத்திருக்காது. விரட்ட விரட்ட இந்தப் பக்கம் அந்தப் பக்கமாக ஓடும். பெடியளுக்கு அது நல்ல விளையாட்டாயிருக்கும். ஓடி ஓடி விரட்டுவார்கள்.

பாம்புகளை அடிப்பதிலுள்ள நுணுக்கம் பல தடவை அடித்து அனுபவம் பெற்றவனுக்குத்தான் தெரியும். தலைக்குக் குறிவைத்து ஓங்கினால் அடி வாலில் விழக்கூடும். அடிபடும் முன்னரே அது இடம் மாறிவிடும். ஓங்கிய அடி அதன் தலையிற் பதியக்கூடியதாக ஓர் அனுமானம் பெற்றிருக்கவேண்டும். தலையடி போடாவிட்டால் பாம்பு தப்பிவிடும். அடி வேண்டித் தப்பிய பாம்புகள் பிறகு தேடிவந்து கொத்துமாம்! (இப்படியொரு கதை காலம் காலமாய் வழங்கப்பட்டு வருகிறது.) இதனாற்தான் பலர் பாம்பு அடிக்கத் துணிவதில்லையோ? ஆனால் அடிக்கும்போது குறி தவறினால் பாம்புகள் மிரண்டு அடிக்கிறவனையே கடிக்கவும் கூடும். இவ்வாறு பாம்பு அடிக்கப் போய்த் துண்டைக் காணோம் துணியைக் காணோம் எனத் தப்பிப் பிழைத்து ஓடியவர்களின் கதைகளும் உண்டு. பச்சைப் பாம்புகளின் கதையே வேறு! மரக்கிளைகளில் புடலங்கொடி படர்ந்திருப்பதைப்போல் அது மறைந்திருந்திருக்கும். அதன் தலை பூ மொட்டுப் போலிருக்கும். அடிக்கப் போனால் பெரிதாக வாயைப் பிளக்கும். அது ரோஸ் வர்ணத்தில் ஒரு பூ பூத்தது போலிருக்கும். பிறகு அதை அடிக்க மனமே வராது!

இன்னும் நான் அறையிலிருந்து வெளிப்படாது இருக்கவே, மனைவி திரும்பவும் தேடி வந்தாள்.

‘பாவங்கள் அதுகள் பயப்படுதுகள். கெதியாய்ப் போங்கோ!” மனைவியின் பரிந்துரைக்கு மதிப்பளித்து அறையிலிருந்து வெளிப்பட்டு வந்தேன். ஏதாவது ஒரு தடி கிடைக்குமா எனத் தேடினேன். ஒரு பக்கத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்த கட்டையொன்றை மனைவி காட்டினாள். மனைவியின் முகத்தை ஏளனமாகப் பார்த்தேன். ‘இந்தப் பெரிய மரக்கட்டை எதுக்கு? (இவனை எவன் என்று நினைச்சீங்க?)” என்ற ஸ்டைலில் ஒரு கையாற் தூக்கக்கூடிய தடியொன்றை எடுத்துக்கொண்டு, ‘சரி இவ்வளவு நேரத்திற்குள் பாம்பு ஓடிப்போயிருக்கும்| என்ற தெம்புணர்வுடன் ஜசீலா அன்ரி வீட்டுக்குப் போக முற்பட்டேன். சாரத்தை மடித்து சண்டியன் கட்டாகக் கட்டிக்கொண்டு புறப்பட்டேன்.

ஜசீலா அன்ரி வீட்டில் அநேகமாக எங்கள் தெருவிலுள்ள பலரும் வந்திருந்தார்கள். ஒருசிலர் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். (இவர்கள் பாம்பு அடிக்கத் தடியைத் தேடிக்கொண்டிருக்கிறார்களோ… அல்லது பாம்பு ஓடி ஒதுங்கிவிட்டதோ.. அதைத் தேடுகிறார்களோ?) என்னைக் கண்டதும் விலகி வழிவிட்டார்கள். நான் யாரையும் கணக்கெடுக்கவில்லை.

‘எங்கை பாம்பு?” என ஜசீலா அன்ரியிடமே கேட்டேன்.

அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த ஜசீலா அன்ரி என் கிட்ட ஓடிவந்து அறைப் பக்கம் காட்டினாள்.

‘அந்தா… அந்த ஜன்னலிலை சுற்றிக்கொண்டிருக்கு!”

எனக்கு ஒன்றும் தெரியவில்லை. வெளிச்சம் அவ்வளவு இல்லை. உற்றுப் பார்த்தேன். யன்னலுக்கு அப்பால் ஒரு பக்கத்தில் ஜசீலா அன்ரியின் கணவர் ஒரு பெரிய தடியை நிலத்திலூன்றியபடி யன்னற் பக்கமாகவே பார்த்துக்கொண்டிருந்தார். நான் வந்தது கூட அவருக்குத் தெரியவில்லைப்போலிருக்கிறது. திரும்பிப் பார்க்கவுமில்லை. பாம்பு அடிக்கும் விஷயத்தில் தன் மனைவியிடம் பெயரெடுத்துவிடுவேனென என்மீது ஏதாவது குரோத உணர்வும் தோன்றியிருக்கலாம்! அவரது முகம் மிகவும் சோகமாகக் காணப்பட்டது. அவரது உடம்புக்கும் தோற்றத்துக்கும் பாம்பையல்ல, ஒரு யானையையே அடிக்கலாம்! ஆனால் மென்மையான இதயம் கொண்டவர். அதனாற் கவலைப்படுகிறார்.

எனது சின்ன மகன் கிட்ட ஓடிவந்தான்.

‘அந்தா பாருங்க அப்பா… பெரீசாய்..!”

‘ஸ்..ர்..ர்..” பெரியதாக சத்தம் கேட்டது. பாம்பு சீறும் சத்தத்தை அப்போதுதான் கேட்டேன். அது கோபம் கொண்டு சீறுகிறது. அடேயப்பா! பாம்பா அது?.. மலை!

மலைப்பாம்பு என்று சொல்வார்களே.. இது அந்த வகையாக இருக்குமோ! இது போன்ற பாம்பை மிருகக்காட்சிச்சாலையிற்தான் பார்த்திருக்கிறேன். வெங்கடாந்தி என்று ஒரு பாம்புக்கு குறிப்பிட்டிருப்பார்கள். இது அதுதானோ? சைஸ் அப்படி இருந்தது.

எனது கையிலிருந்த தடியை மெல்ல நழுவவிட்டேன்.

பாம்பு அசைந்து அசைந்து சீறிக்கொண்டிருந்ததே தவிர.. நகரவில்லை. ஜன்னற் கம்பிகளுள் மாட்டுப்பட்டுவிட்டதோ?

தன்னைச் சுற்றிலும் (தாக்குவதற்கு) ஆட்கள் நிற்பதை காலடி ஓசைகளிலிருந்து பாம்பு உணர்ந்துவிட்டது. அதனாற்தான் வெளியே இறங்கிவராமல் கோபம் கொண்டு சீறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தாக்குவதற்குத்தான் யாரும் தயாராயில்லை. (என்பது அதற்குப் புரியவில்லை).

ஜசீலா அன்ரி சற்றும் மனம் தளராமல் வேறு வீடுகளுக்குப் போய் செய்தியைச் சொல்லி யாராவது ஆண்களைக் கூட்டிவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்தத் தெருவில் பாம்பு அடிக்கக் கூடிய ஒரு ஆணாவாது இருக்கக்கூடுமல்லவா?

யாராவது ஒருவர் பாம்பை அடிப்பார்தானே என (மற்றவர்களைப் போலவே) நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் யாரும் அதற்குத் துணியக் காணோம்.

எல்லோருடைய முகங்களும் படு சீரியஸாகவே தென்பட்டன. பாம்பை எப்படியாவது அடித்து முடித்துவிடுபவர்கள் போல் காணப்பட்டார்கள். அடிப்பதற்கு ஆமான (பொருத்தமான) தடி கிடைக்காதவர்கள்போல் அங்கும் இங்கும் ஓடினார்கள். இன்ன மாதிரியான பெரிய தடியாக இருக்கவேண்டும். அடிக்கும் போது தடி முறிந்துவிடக்கூடாது போன்ற விடயங்களைப் பரிமாறிக்கொண்டார்கள். (இவர்களது உரையாடல்களில் நானும் கலந்துகொண்டேன்).

அது என்ன வகைப் பாம்பாக இருக்குமென்று ஒவ்வொருவரும் அபிப்பிராயம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ‘விரியன்” என்று சிலர் கூறினார்கள். இப்படி உடல் முழுவதும் செதில்களும் டயமன்ட் வடிவத்தில் முத்திரையும் உள்ள பாம்பு விரியன்தான் என வாதிட்டார்கள்.

‘அப்பா… இதுதான் அனா கொண்டாவா?” என்று சின்ன மகன் தனது சந்தேகத்தைக் கேட்டான்.

‘இல்ல அந்தப் பாம்பெல்லாம் இங்க இல்ல..”

எப்படி இருந்தாலும் இது பொல்லாத பாம்புதான். இது எங்கிருந்து இங்கு வந்தது?

ஜசீலா அன்ரி ஒரு சந்தேகத்தை வெளிப்படுத்தினார். பக்கத்தில் உள்ள வெறும் வளவு பற்றையும் புதருமாகக் கிடக்கிறது. முழங்கால் உயரத்துக்குப் புல் வளர்ந்திருக்கிறது. மாலை நேரம் பிள்ளைகள் கிரிக்கட் விளையாடியபோது பந்து அடிபட்டுப்போய் அந்தப் பக்கம் விழுந்துவிட்டது. இவர்கள் எல்லோரும் போய் பற்றையையும் புதரையும் கிண்டிக் கிளறித் தேடிப் பந்தை எடுத்திருக்கிறார்கள்.

‘அங்கேயிருந்துதான் பாம்பு வந்திருக்கும்… பாம்பு இந்தப் பிள்ளைகளின் காலில் மிதிபட்டிருக்கலாம். அப்படி மிதிபட்டால்… மிதித்தவரைத் தேடிப் பாம்பு வருமாம்! உண்மையா?… அதனாற்தான் பாம்பு இங்கு வந்ததா?” ஜசீலா அன்ரி தனத மகனை அணைத்தபடியே கலக்கத்துடன் கேட்டார். அவன் மிரள விழித்துக்கொண்டு நின்றான்.

‘இல்லை… இல்ல அதெல்லாம் பொய்க்கதை!.. பாம்புகளுக்கு அவ்வளவு நினைவாற்றலும் மோப்ப சக்தியும் இல்ல.. மிதிபடும்போது…தற்பாதுகாப்புக்காகக் கடித்தால் சரி… மற்றபடி தேடிவந்து மனிதரைக் கடித்து ருசி பார்க்காது..” பாம்புகளைப் பற்றிய மேதைமையான அறிவுள்ளவன் போலக் காட்டி ஜசீலா அன்ரியை ஆறுதற்படுத்தினேன்.

விளையாட்டு முடிந்து, பொழுதுபட வீட்டுக்கு வந்த சின்னமகன் என்னிடம் கூறியது இப்போது நினைவு வந்தது: ‘அப்பா… விளையாடயிக்க… பந்து அந்தப் பத்தைக்குள்ள விழுந்திட்டுது. நாங்கள் எல்லாருமாய் போய் புல்லுப் பற்றைகளையெல்லாம் விலத்திப் பார்த்து… ஒரு பந்தில்லை… நாலு பந்துகள் எடுத்து வந்திட்டம்!” அப்போதே அவனை எச்சரித்தேன். ‘அதுக்குள்ள பாம்பு… பூச்சி ஏதாவது கிடந்து கடித்துவிடும்… இனிமேல் அங்க போகவேண்டாம்” என்று. இப்போது அதை மீண்டும் நினைவூட்டினேன். ‘நீங்கள்தான் அந்தப் பாம்பை மிதித்திருக்கிறீங்கள்.. நல்ல காலம் கடி வேண்டாமல் தப்பியிட்டீங்கள்.” சற்று பயமுறுத்தலாகக் கூறினால் இனிமேல் அந்தபக்கம் போகமாட்டான் என்றுதான் திரும்பவும் அதையே கூறினேன்.

‘ஸ்..ர்..ர்..ர்” பாம்பு சீற்றம் அதிகரித்த உச்சத்தாயியில் சீறியது. அப்போது கடைக்காரக் கனகு வந்துசேர்ந்தார். அவரது திருநீற்றுக்குறி அந்த இரவிலும் பளிச்சிட்டு வெள்ளையாய்த் தெரிந்தது.

‘எங்கை? எங்கை பாம்பு?” எனக் கேட்டவாறே ஓடிவந்தார்.

ஆள் ஓடிவந்த வேகத்தைப் பார்;த்தால் எப்படியும் ஒரு முடிவு காண்பார் என்றே தோன்றியது. பரபரப்புடன் அங்கு போடப்பட்டிருந்த (நழுவவிடப்பட்டிருந்த) ஒவ்வொரு தடியாக எடுத்தார். அவருக்கு எதுவும் சரிப்பட்டு வரவில்லை.

‘இதுக்கு ஒரு பெரிய வாள் இருந்தாற்தான் நல்லது. சதக்கென்று ரெண்டு துண்டாக வெட்டிவிடலாம்!”

அவரது துணிச்சலான பேச்சு எனக்கு நம்பிக்கை அளித்தது. கொஞ்சம் ஊக்கமளித்தால் காரியத்தை மேற்கொள்வார் என நினைத்தேன்.

எனக்கு ஒரு யோசனை உதித்தது. எங்கள் வீட்டில் ஓர் உலக்கை இருக்கிறது. உரலில் அரிசி குத்துகிற சமாச்சாரமெல்லாம் இப்போது அருகிவிட்டதால், உலக்கை ஒரு பக்கமாகப் போடப்பட்டு தேடுவாரற்றுக் கிடக்கிறது. துரும்பும் பல்லுக் குத்த உதவும் என்று சொல்வார்கள். இது உலக்கையல்லவா? பாம்பு அடிக்க உதவாதா? அதைக் கொண்டு வந்து கனகுவிடம் கொடுத்தால் பாம்பின் கதையை முடித்துவிடுவார்.

‘கனகு! கொஞ்சம் பொறுங்கோ! உலக்கை ஒன்றிருக்கு.. கொண்டுவாறன்!” என்றவாறே ஓடத்தொடங்கினேன். கனகு இதை எதிர்பார்க்கவில்லை. சட்டென என்னைத் தடுத்து நிறுத்தினார். குரலைத் தாழ்த்தி எனக்கு மட்டும் கேட்கக்கூடியதாகச் சொன்னார்.

‘வேண்டாம்… விடுங்கோ! பாம்பை அடிக்கக்கூடாது… தோஷம்!”

அட, அப்படியொரு சங்கதி இருக்கிறதா? செத்தபிறகாவது பாம்புக்கு இரண்டு போடு போடலாம் என்ற எண்ணத்துடனிருந்த நான் அந்தக் கணமே அதைக் கைவிட்டேன்.

அக்கம் பக்க வீடுகளிலிருந்து வந்த பெண்கள் வீட்டுக்குள்ளும் வெளி ஓரமாகவும் நின்று எட்டி எட்டிப் பார்த்தார்கள். இந்தக் கட்டத்தில் ‘பாம்பை அடிக்க முடியாது| எனப் பின்வாங்குவது ஆண்மைத்தனமான செயலல்ல என்று எனக்குத் தோன்றியது.

‘யாரைப் பிடிக்கலாம்| என்ற யோசனையுடன் வெளியே தெருவுக்கு வந்தேன்.

பக்கத்து வீட்டு குணவர்த்தனா அங்கிள் வீட்டுக்காரர் தங்கள் வீட்டு வாசலில் கூடி நிற்பது மேர்க்கூரி வெளிச்சத்திற் தெரிந்தது. புத்த சமய தர்மத்தக்கு அமைய உயிர்களைக் கொல்வது ஆகாத செயலாகையால் இநதப் பக்கம் வருவதைத் தவிர்த்துக் கொண்டார்கள் என ஊகித்துக்கொண்டேன். அதிலும் அவர்கள் பாம்புகளைக் கொல்லவேமாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும்!

முன் வீட்டிலிருக்கும் சிஃபானும் அவரது நண்பரும் அப்போதுதான் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்கள். இவர்கள்தான் சரியான ஆட்கள் என்று எனக்குத் தோன்றியது. இளந்தாரிப் பெடியள்! துணிச்சலுடன் பாம்பை அடிக்கக் கூடியவர்கள். நான் அவர்களைக் கடித்துக்கொண்டேன். (மன்னிக்கவும் பிடித்துக் கொண்டேன்).

‘பாம்பொன்று வந்திருக்கு… கடிக்கவேண்டும்!” (மீண்டும் மன்னிக்க! நா தடுமாறுகிறது… நிலைம அப்படி… கடிக்கவேணும் என்பதை அடிக்கவேணும் எனத் திருத்திக்கொள்க.)

அவர்களை உள்ளே கூட்டிச்சென்றேன். ஒவ்வொரு புதிய முகம் வரும்போதும் அனைவரும் மிக எதிர்பார்ப்புடன் காணப்பட்டார்கள்.

பிள்ளைகள் ‘பாம்புக்கு அடி விழப்போகிறது!| எனக் கிட்ட ஓடிவருவார்கள். நான் அவர்களை அப்புறப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாயிருந்தேன். ‘ஸ் ர் ர் ர்!”

சிஃபான் (பாம்பைக் கண்டதும்) வந்த வேகத்திலேயே திரும்பினார்.

‘வீட்டுக்கு போயிட்டு வாறன்!”

அவரது சைக்கிள் தெருவில் நின்றது. அதை வீட்டில் விட்டு வரப் போகிறாராக்கும் என எண்ணினேன். அவர் போன திசையையே பார்த்துக்கொண்டு நின்றேன். சைக்கிளிலேயே திரும்பவந்தார். வந்து வெளிப்படையாகவே கூறினார்.

‘அந்தப் பாம்பை எங்களால அடிக்கேலாது.. வேற ஆளைக் கூட்டியிட்டு வாறன்.”

நான் அவரை அவநம்பிக்கையுடன் பார்த்தேன். ஆள் மெல்ல நழுவப் போகிறாரோ!

‘ஆரைக் கூட்டி வரப்போறீங்கள்?”

‘கசிப்புக் கடைப்பக்கம் யாரையாவது…” எனக் கூறிக் கொண்டே விரைவாகப் போனார் சிஃபான். அது நல்ல ஐடியாதான் என்று எனக்குப் பட்டது. சாராயம் போட்டு வெறியிலுள்ளவன் பயமறியமாட்டான்! (பாம்பு தற்செயலாகக் கடித்தாலும் அவனுக்கு விஷமும் ஏறாது!)

பார்த்துக் கொண்டேயிருக்க சிஃபான் சைக்களிற் திரும்ப வந்தார். கிட்டத்தட்ட அதே வேகத்தில் ஒருவன் ஓட்டமும் நடையுமாக வந்தான். உருக்கொண்டு வந்தவன்போல் காணப்பட்டான். முற்றத்திலிருந்து ஒரு தடியை எடுத்தான். அது ஒரு குட்டையான தடி. அதை ஒரு சுழற்றுச் சுழற்றி பரிசீலித்துக் கொண்டான். பாம்புக்குக் கிட்ட.. மிக அண்மையாகப் போனான். ஓங்கினான்.

‘ஸ்..ர்…ர்..ர்”

‘பொட்டக் இன்ட! (கொஞ்சம் பொறுங்க)” என்றேன். ‘இவன் வெறி மயக்கத்தில் செய்வது என்னவென்று அறியாமல் பாம்பை விரட்டிவிட்டால்… அது இங்கிருந்து கிளம்பினால் எங்கெங்கு போகுமோ.. எங்கள் வீட்டுக்குத்தான் போகுமோ…!| என்ற கவலை எனக்கு. அவன் ஓங்கிய கையைச் சோரவிட்டு என்னைத் திரும்பிப் பார்த்தான். இப்போது அவனே கோபத்திற் சீறுவான் போலிருந்தது! ‘அடித்தால் ஒரே அடியாக அடிக்க வேணும்! பாம்பு தப்பக் கூடாது!” சற்று அதிகாரத் தோரணையுடன்தான் கூறினேன்.

‘எனக்குத் தெரியாதா? இந்தாப்பாருங்க.. மாத்தையா..” கண் இமைக்கும் நேரத்தில் ஓங்கி ஒரே போடாகப் போட்டான். பாம்பு ‘தொப்|பென ஜன்னலிலிருந்து விழுந்தது. தலைக்கு சற்று இந்தப் பக்கமாக அடி விழுந்திருக்கிறது! இரத்தம் சிதறியது. பாம்பு மறுபக்கமாகப் பிரண்டு நெளிந்தது. பிறகு அசைவற்றுக் கிடந்தது.

உடனே ஜசீலா அன்ரியின் கணவர் பாய்ந்து இன்னும் சில அடிகளைப் போட்டார்.

‘பாம்பு செத்துப் போயிட்டுதா?” எனது சின்ன மகன் பக்கத்தில் நின்று கேட்டான். அவனது முகம் ஏங்கிப் போயிருந்தது.

அடித்தவன் பாம்பை அதன் வாலிற் பிடித்துத் தூக்கினான். ஒரு கையாற் தூக்கமுடியவில்லை. இரு கைகளாலும் தூக்கி உயர்த்திப் பிடித்தான். எல்லோரும் துணிச்சல் மேம்பட்டவர்களாக கிட்ட ஓடிவந்து பார்த்தார்கள். அதைத் தெருவுக்குக் கொண்டுசென்றான். அதன் தலை நிலத்தில் இழுபட்டுப்போனது. தெருவின் முனையில் பாம்பைப் போட்டான்.

‘இதைக் கொளுத்திவிட வேண்டும்.. இப்படியே விடக்கூடாது..” எனக் கூறியவாறு நெருப்பு மூட்ட ஆயத்தம் செய்தான். தீ பற்றியதும் பாம்பு இன்னும் புரண்டு துடித்தது.

சின்னவன் இந்தப் பக்கம், அந்தப் பக்கமாக நிலையின்றி ஓடி ஓடி பாம்பின் கதியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘இன்னும் சாகவில்லையா…. அப்பா? துடிக்குது?”

நான் இன்னொரு முறை கூறினேன். ‘பார்த்தீங்களா… எவ்வளவு பெரிய பாம்பு?.. இனிமேல் அந்தப் பத்தைக்குள் போக வேண்டாம்.. பந்து போனால் போகட்டும்.. நீங்கள் போக வேண்டாம்..”

பாம்பு நெருப்புடன் சங்கமித்து அடங்கிப்போவதை பார்த்துக்கொண்டேயிருந்த மகன் பெருமூச்செறிந்தான்.

‘அப்பா!” தொண்டை அடைத்துக்கொண்டவன் போல… மிகக் கரகரத்த குரலில் அழைத்தான்.

‘என்ன மகன்?”

‘நாங்க.. விளையாடயிக்க.. பந்து தேடிறதுக்கு போனனாங்கதானே…? நாங்கள் கரைச்சல்படுத்தின படியாலா… பாம்பு வெளியில வந்தது?”

அவனது முகத்தைப் பார்த்தேன். கண்களில் மிரட்சி தெரிந்தது. பிள்ளை பயந்துவிட்டான் என நினைத்தேன்.

‘இல்ல… மகன் நீங்க பயப்பட வேண்டாம்.. பாம்பு செத்திட்டிதுதானே?”¬¬

‘பாவம்.. அப்பா, அந்தப் பாம்பு..! பொல்லுகளோட ஆட்களெல்லாம் சுற்றி நிக்க.. எவ்வளவு நேரம்.. ஒரு பக்கமும் தப்பிப்போக வழியில்லாமல் நிண்டது..? அதை அடிச்சுக் கொண்டது பாவம்தானே?”

இதற்கு எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. கருணையும் கவலையும் கலந்து அந்தச் சிறிய கண்கள் கலங்குவதைக் கண்டேன்.

(மல்லிகை சஞ்சிகையிற் பிரசுரமானது – 2004)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *