பாத பூஜை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 14,932 
 

உலகைப் புரிந்து கொள்ள இயலாத, குழந்தைத் தனத்துடன் அவரையே ஆழ்ந்து நோக்கி மிரள மிரள உற்றுப் பார்த்தபடி, அவரிடம் கதை கேட்க, அவள் அமர்ந்திருக்கும் நேரம் சுகமான ஓர் அந்தி மாலைப் பொழுது. கோவில் மண்டபத்துக் கருங்கல் தூணருகே இறை வழிபாடு முடித்துக் கொண்டு வந்த தெய்வீக உயிர் சிற்பமாக அவர். அவரை நேரிலே பார்த்தால், , ஒழுக்கம் தவறாத அசல் பிராமண குலத்து உத்தம புருஷன் போல முகத்தில் தீர்க்கமான ஆதர்ஸக் களையுடன், ஒரு வழிபாட்டு நாயகன் போல் பிரசன்ன ஒளிக் கோலமாகப் பளிச்சென்று தோன்றுவார். அவரையே உலகமாக அறிந்து உணர்ந்து கொண்ட அவள் ஒரு புத்தி விளங்காத பேதைப் பெண்மட்டுமல்ல, பூப்படைந்து மலர்ந்து ஒளி விட்டுப் பிரகாசிக்க முடியாமல் போன ஓர் இருடியும் கூட அப்படியிருக்கிற அவளைக் கொஞ்சமும் மனம் கோணாது ஏற்று வாழ வைத்து கொண்டிருக்கிற அவர் ஒரு சமூகம் சார்ந்த கறைகளோடு கூடிய ஒரு சாராசரி மனிதரல்லர்.அவளுக்கு மட்டுமல்ல அவள் போன்ற ஊனப் பழு சுமக்கின்ற , தீனமுற்ற மனிதர்களுக்கெல்லாம் கடவுள் மாதிரி அவர்,

தமிழிலும் வடமொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பேரறிஞர் அவர் நந்தகுமாரென்று மிகவும் அழகான பெயர் அவருக்கு. பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர். அந்த மதுரசுந்தரி அவருக்குத் தூரத்து உறவு. மதுரா என்றே அவர் அவளை அன்பொழுக அழைப்பதுண்டு. அவர் அவளை மணம் முடித்தது சுய விருப்பதின் பேரிலேயே, அன்றி நிர்ப்பந்தத்தினாலல்ல. அப்படி மணம் முடிக்க நேர்ந்ததால்தான் அவள் மீது அவர் பொழிகின்ற அந்த அன்பு மழை.

அவளால் கண்டு உணர்ந்தறியக் கூடிய, முழு உலகமும் அவரேதான். அந்தி மயங்குகிற நேரத்தில், கோவில் மண்டபத்துக் கருங்கல் தூணருகே செதுக்கிய சிற்பம் போலச் சலனமின்றி, அமர்ந்தவாறே, அவளுக்கு அவர் கதை சொல்லிக் கொண்டிருக்கிற அழகைப் பார்க்க வேண்டும். அவர் மடியில் சாயாத குறையாக அவளின் உயிர்க் கொடி மிகவும் நெருக்கமாக அவர் மீது படர்ந்திருக்கும்.. அவர்களிடையே உணர்வுகள் ஒழிந்து போன, சாந்தி மயமான ஒரு தவக் கோலம் போல , அது பிடிபடும்.. உலகம் அதை எப்படி நம்புகிறதோ? அவரது மிக நெருங்கிய சீடனான சம்பந்தனைப் பொறுத்தவரை, விகாரம் ஒழிந்து போன நிர்மலமான ஒளியின் கடவுளாகவே அப்போது அந்நிலையில் அவரை அவன் உணர்வதுண்டு
வெள்ளை வெளேரென்று, செதுக்கி வார்த்த பளிங்குப் பொம்மை மாதிரி அவள் இருப்பாள். எனினும் உலகுடனான தொடர்பு ஆளாய் அவள் இயங்குவதற்கான உயிரற்ற வெறும் நிழல் பொம்மையே அவள்..அந்தப் பொம்மையை இயக்குவதற்கான , அதி சக்தி வாய்ந்த மந்திரத் திறவுகோல் அவரிடமே இருப்பதாக அவன் நம்புவான். அப்படிப்பட்ட ஒருவரின் பாத பூஜை காண்பதற்குத் தான் கொடுத்து வைத்திருப்பதாய் அவன் அடிக்கடி நினைப்பான்.

அவன் ஒரு பல்கலைக் கழக மாணவன். கலைப் பிரிவிலே படிப்பதால் சமஸ்கிருதத்தையே சிறப்புப் பாடமாகக் கொண்டிருந்தான். அதில் நன்கு தேர்ச்சி பெற மானஸீகமாக அவனுக்கு ஒரு குரு தேவைப்பட்டது. அப்படியொரு குருவாக வந்து சேர்ந்தவர்தான் இந்த நந்தகோபால்.

அவரிடம் இரு வருடங்களாக அவன் வட மொழி பயின்று வருகிறான்.. விடுமுறை நாட்களிலேதான் அதை அவனால் படிக்க முடிந்தது.

அந்தி நேரத்தில் அவர்கள் ஒன்று கூடி மனம் விட்டுப் பேசுவது போல் பாவனை காட்டும் , அந்த முருகன் கோவில் அவரின் பொறுப்பிலேயே இருந்தது. அதை நேர்மையாகவும் ஒழுங்கு தவறாமலும் கொண்டு நடத்துவதற்கான ஆளுமை பெற்ற ஒரு யோக புருஷனாகவே அவர் இருந்தார். ஒழுக்க நெறி தவறாத அசல் பிராமணகுலத்து உத்தம புருஷன் போல் கண்களில் தீட்சண்யமான ஒளியுடன், முகத்தில் ஆதர்ஸக் களை வடிய அவரைப் பார்க்கும் போதெல்லாம் கையெடுத்துக் கும்பிடவே தோன்றும்.

அக் கோவிலுக்கருகிலேயே அவர்களின் மாளிகை போன்ற பெரிய வீடும் இருந்தது. மதுரசுந்தரியின் சீதனச் சொத்தாகவே அந்த வீடும் கிடைத்தது..அங்கு சமையல் வேலை செய்யவும், பூந்தோட்டம் பராமரித்து வெளிவேலைகளைக் கவனித்துக் கொள்வதற்கும் ,ஆணும் பெண்ணுமாக இரு பணியாட்கள் இருந்தனர் நந்தகோபால் மீது நல்ல விசுவாசம் அவர்களுக்கு, மதுராவைப் பராமரிப்பதற்கே தனியாக ஓர் ஆள் தேவை.

அவள் தினமும் அரை குறையாகப் பட்டுப் புடவையே உடுத்துவாள். கழுத்திலும் கைகளிலுமாக நிறைய நகைகள் போட்டுக் கொண்டு வலம் வருவாள். எப்படி அழகு படுத்தினாலும் உயிர் இல்லாதது போல ஒரு பாவனைதான். அவள் சிரிப்பதே குறைவு பேசினாலும் அர்த்தம் பிடிபடாத குளறுபடி பாஷை தான். அப்படியென்றால் ஏன் இந்தக் கூட்டு இல்லறம்? அதை அவரிடம் தான் கேட்க வேண்டியிருந்தது. வாழ்வு மயமான வரட்டு உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டு விலகியிருக்கிற மனம் கொண்டவர்களுக்கே இது சாத்தியம். மெழுகினால் வார்க்கப்பட்ட வெறும் நிழற் பொம்மை போலிருக்கிற, அவளோடு அவர் வாழ்கிற வாழ்க்கைக்கு முன்னால், தான் எம்மாத்திரம் என்று சம்பந்தனுக்குப் படும். அவரிடம் படிக்க வரும் போதெல்லாம், இதற்கான ஆழமான அறிவையும் மனோபலத்தையும் ஒரு வரமாக அவரிடமே கேட்டுப் பெற வேண்டுமென்று அவன் விரும்பினான். வெளிப்படையாக அதைக் கேட்கவும் பயம்.

ஆனல் ஒன்று மட்டும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. புறப் பிரக்ஞையோடு உலக விவகாரங்களில் மூழ்கியிருப்பவனைத்தான், இந்த உலகம் நம்புகிறது. நந்தகோபால் மாதிரி மனசளவில், வாழ்ந்து கொண்டு பற்றற்ற நிலையில், துணிந்து வாழ்வையே வேள்வியாக்கி, வாழ்கிற எவனையும் இந்த உலகம் இனம் கண்டு கொள்ளாதது மட்டுமல்ல புறம் தள்ளி மறந்துவிடுமென்பதே, அவன் கண்டு தெளிந்த மிகப் பெரிய வாழ்க்கைச் சித்தாந்தமாகும்.

மதுரசுந்தரி போல, இருக்கிற ஊனம் விழுந்த மனிதர்களை இந்தச் சமூகம் விட்டு வைக்காது. கல்லெறிந்து துரத்தும். ஆனால் அவர்……………? உயிர்களை வாழ வைப்பதொன்றே அவரின் குறிக்கோள். அவர் போலாக வேண்டுமென்பதே சம்பந்தனின் நெடு நாள் கனவு அவன் படிப்பதெல்லாம் அதற்குத்தான். இதில் பணம் பதவி முக்கியமல்ல வாழ்க்கையை வேள்வியாக்க வேண்டும். அது ஒன்றே முக்கியம்.

எனினும் அவனின் அந்த நினைவுகளுக்கு மாறாக வாழ்க்கை துருவத்தில் நின்றே அவனை அழைப்பது போலப்படும். இரண்டுக்குமிடையேதான், எவ்வளவு பெரிய இடை வெளி. அவன் போன்ற இளைஞர்களுக்கு மனதில் தான் எத்தனை விதமான கனவுகள் பணம் மட்டுமே வந்தால்போதும் என்ற நினைப்பு வேறு வெறும் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய எல்லாம் செய்யலாம். வாழ்க்கையையே விலைக்கு வாங்க முடியுமெறுதான் எங்கள் இளைஞர்கள் நம்புகிறார்கள். சம்பந்தனால் அப்படி நினைக்க முடியவில்லை பணத்தை விட முக்கியம் உயர்ந்த வாழ்க்கைக் கோட்பாடுகள் உயர்ந்த சிந்தனை வளமான மனம், இவையெல்லாம் ஒழிந்தால் பேய் வாழ்க்கைதான். அவனுக்கு அது புரிந்தபடியால் தான் நந்தகோபாலிடம் வந்திருக்கிறான். அவர் சராசரி மனிதர்கள் நம்புவது போல புற வாழ்க்கையை நம்பியோ உணர்ச்சிகளின் பொருட்டோ வாழ்பவரல்லர் அவருள்ளே, இருக்கிற வாழ்க்கை யுகம், தடம் புரண்டு போகாத உயிர் நெறிகளையே கோட்பாடாகக் கொண்டு இயங்குவது அப்படி இயங்குவதாலேயே மதுரசுந்தரிக்கும் ஒரு வாழ்வு கிடைத்தது.. அவளை அப்படிச் சுமப்பதைக்கூட அவர் ஒரு பாரமாகக் கருதவில்லை அவரது இந்த உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்ட வாழ்க்கை வேள்வியில் இளைப்பாறுவது அவள் மட்டுமல்ல., அவனும் தான்., வாழ்க்கைச் சூடு தணிந்து மனம் குளிர்ந்து போயிருக்கிறான். அவரிடம் படிக்க வருகிற பொழுதுகளே, அவனை உச்சி குளிர்ந்து . மனம் சிலிர்க்க வைக்கும் தவப் பொழுதுகளாகும் அதை அவன் மனப்பூர்வமாகவே உணர்ந்திருக்கிறான்.

கடைசியாக அவரை அவன் சந்தித்தது கோவில் மண்டபத்தினுள்ளேதான், அப்போது அவர் தனியாகவே இருந்தார், மதுரசுந்தரி தூரத்தில் நின்று எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அதுதான் தருணமென்று அவன் அவரின் காலடியில் அமர்ந்தவாறேஅவரைக் கேட்டான்.

”ஐயா…..! எனக்கொரு சந்தேகம். பாடத்திலல்ல,” என்றான் புதிர் போடுகிற மாதிரி.

அவர் அவனை வினோதமாகப் பார்த்தவாறே சொன்னார்.

“நீ என்ன கேட்கப்போகிறாயென்று எனக்கு விளங்குது! சுந்தரியோடு இருக்கிறேனே . அதை பற்றித்தானே உன்ரை கேள்வியெல்லாம்?”

“மனதைப் படித்த மாதிரிச் சொல்லுறியளே. எப்படி ஐயா?”

“ எனக்குத் தெரியும் இன்றைக்குப் புதிசாய் நீ வேறு என்ன கேட்க முடியும் உன்ரை கண்ணை உறுத்துகிற விடயம் இது ஒன்று தானே. மதுரா ஆர்? மொட்டவிழாத ஒரு மலர். சரியாக உணர்கிற புத்தி கூட இல்லாத மகா பேதை அவள் மனசின் ஒளியாக நான். அவளுக்கு உலகமே நான் தான். எப்படி விட முடியும்? சொல்லு”

“அது தான் எப்படி என்று கேட்கிறன் உணர்ச்சியடங்கிய வைர மரமா நீங்கள்?”

“நீ என்னை வைரமென்கிறாய். வாழத் தெரியாத அசடு என்று உலகமே என்னைப் பார்த்துச் சிரிக்கிறது கல்லெறிகிறது நீ அதைக் கூடவா காணவில்லை?”

அதற்கு அவன் கூறினான்.

“நான் கண்டது உங்கடை மனதைத் தான். அதை மட்டும் தான்”

“நீ எனக்கொரு நல்ல சீடனாக இருப்பயென்று நான் நம்புகிறன்”

“நிச்சயம்………….”

அதற்குப் பிறகு அவர்கள் பேசவில்லை வாழ்க்கை பேசியது தூரத்தில் அதன் குரூரமான நிழல்கள் பட்டுப் பட்டுத் தெறித்தன அது விழுங்குகிற மனிதர்கள் குறித்து அவருடன் இருக்கும் போதே அவனுக்கு அந்தப் பயம் வந்தது அந்த நிழல் விழுக்காட்டிலிருந்து எழும்பவே தன்னைக் காப்பாற்றவே இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அவரின் கறை படாத குரு சந்நிதானம் போன்ற மிகப் பெரிய ஒளி தனக்காகக் கண் திறந்து காத்திருப்பதாய் அவன் மிகவும் உணர்ச்சி புல்லரித்தவண்ணம் நினைவு கூர்ந்தான்.

– மல்லிகை (மார்ச் 2010)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *