பாதை தெளிவானது..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 6,035 
 

இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாமா. .? – நிதானித்தாள் சுமதி.

இத்தனை நாட்களாகக் கண்டு கொள்ளாமல் இருந்ததிலினால்தான் ….

‘ மனைவி கண்டு கொள்ளவில்லை. அங்கீகரித்துக் கொண்டாள் ! என்கிற தவறான எண்ணம் தோன்றி, பயம் விலகி.. அவரை இரண்டு நாட்களாக அங்கேயே தங்க வைத்து விட்டது.!

குழந்தைகள், ‘ அப்பா எங்கேம்மா. .? எங்கே போயிருக்கார். .? என் வரலை. .? ‘ என்று கேட்க வைத்து விட்டது.

தவறை ஆரம்பத்திலேயே சுட்டி, தட்டிக் கேட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா. .?!

‘ கூடாது ! இன்னிமேலும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் நீயும், உன் குழந்தைகளும் நிர்கதியாய் ஆகிவிடுவீர்கள் ! ‘ என்று மனம் சொல்ல அவளுக்குத் திக்கென்றது.

‘ சண்டாளி ! நம் குடும்பத்தைக் கெடுக்க வந்தாளே. ..! ‘ – நினைக்கவே வெறுப்பாக இருந்தது.

பெயரென்ன. .. லட்சுமியும் லட்சுமி ! !

படித்தவள், கை நிறைய சம்பாதிப்பவள். … ஒரு நல்ல பிரம்மச்சாரியாய்ப் பார்த்துப் பிடித்துக் கொள்ளாமல், திருமணம் ஆனவரை வளைத்துப் போட்டுக் கொண்டு. .. ‘ நினைவு சுமதிக்குத் தொண்டைக் குழி கசந்தது.

ஆரம்பத்தில், அலுவலகப் பழக்கம் என்று நினைத்து இருந்து விட்டாள். அப்புறம்தான் அது பழக்கமில்லை. .. நெருக்கம் ! – என்பது தெரிய உறைந்து போனாள். சுதாரிப்பதற்குள் நிலைமை கையை மீறிப் போய் விட்டது.

இனி மேலும் தாமதிக்கலாமா. ? ?! கூடாது !

இப்போது இவள் கணவனுக்காக கலங்கவில்லை. தாம்பத்தியத்திற்காக ஏங்கவில்லை. இருபத்தெட்டு வயசுக்குள் மூன்று பிள்ளைகள். ஏகப்பட்ட சுகம் அனுபவித்தாகி விட்டது.

இவள் கவலைப்படுவதெல்லாம்… குடும்ப ஆளுமை, தலைமைக்கு ஒரு ஆண். பிள்ளைகளுக்கு நல்லவனாய் ஒரு தகப்பன். – இந்தக் காரணங்களுக்காத்தான் கணவனைக் கண்டிக்க வேண்டும், கட்டுக்குள் வைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாள்.

எதிர்காலத்தில் ஒரு நாள் குழந்தைகள். ..

‘ அப்பாவுக்கு இரண்டு பொண்டாட்டிகளாமே. .! அப்படின்னா. .. எங்களுக்கு இரண்டு அம்மாவா. .? ! ‘ என்று கேட்டு விடக்கூடாதே என்ற பயம், பரிதவிப்பு. உந்த. …

‘ இன்றைக்கு இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.! – சுமதி முடிவு செய்து கொண்டாள்.

இரண்டு நாட்களாக வராத கணவன் இன்றைக்கு வருவானென்று நிச்சயமாக இவளுக்குத் தெரியும். காரணம்…. ஆள் எப்படிப் போனாலும் சம்பளம் மட்டும் வீட்டிற்கு வந்து விடுமென்பது அவளுக்குப் புரியும்.

ஆமாம், இன்றைக்கு அவனுக்குச் சம்பள நாள். அதனால்தான் சுமதி காத்திருக்கிறாள்.

இரவு. …

குழந்தைகளெல்லாம் சாப்பிட்டுத் தூங்கிய பிறகுதான் ஜானகிராமன் தப்பே செய்யாதவன் மாதிரி சுவாதீனமாக வீட்டிற்குள் வந்தான்.

இவள் பின்னால் சென்றாள்.

” இது உங்களுக்கே நல்லா இருக்கா. .? ” – கேட்டாள்.

” எது. .? ” நாற்காலியில் அமர்ந்து திரும்பிப் பார்த்தான்.

” நீங்க அவளிடம் போறது. ..? ” சுமதி எதிரில் அமர்ந்தாள். நேரடியாக விசயத்திற்கு வந்தாள்.

” ஏன். ..”

‘ இவளுக்குத் தெரிந்த விசயம் தானே ! ‘ என்பதால் அவன் எந்தவித அலட்டல், அதிர்ச்சியுமில்லாமல் கேட்டான்.

” மூணு குழந்தைங்களைப் பெத்துட்டீங்க. முப்பது வயசாகுது. நாளைக்குக் குழந்தைங்க சிரிக்குமே என்கிற நினைப்பு இல்லையா. .? ” வார்த்தைகள் திநாதனாமாக வந்தாலும் கொஞ்சம் சூடாகவே வெளி வந்தது.

” குழந்தைங்க நினைக்கிறதா. .. நீ சொல்றே. .? ” அவன் இவளைக் கூர்ந்து பார்த்துத் திருப்பிக் கேட்டான்.

” அப்படித்தான் வச்சுக்குங்களேன். .! ” – இவளும் விடாமல் சொன்னாள். என்ன பயம். .? !

” இதோ பார் சுமதி ! நான் அவளை வச்சிருக்கிறதுனால உனக்கு ஏதாவது பாதிப்பா. . ? ”-ஜானகிராமன் எந்தவித பயம், பதற்றமில்லாமல் விசயத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகக் கேட்டான்.

” பாதிப்புன்னா. .? ! ” இவளும் அதே மனநிலைக்கு வந்து கேட்டாள்.

” உனக்கு ஏதாவது குறை வச்சிருக்கேனா. .?”

” குறை இல்லேங்குறதுக்காக உங்களைத் தப்பு செய்ய அனுமதிக்கச் சொல்றீங்களா. .? ”

” அனுமதிக்கச் சொல்லலை. கண்டுக்காம இரு சொல்றேன். ! ”

” என்னால அப்படி இருக்க முடியாது ! ”

” அப்போ என்னாலும் அவள் தொடர்பை விடமுடியாது ! ” உறுதியாகச் சொன்னான்.

சுமதி அதிர்ந்தாள். சிறிது நேரமா மெளனமாக இருந்தாள்.

” அப்போ என்ன செய்யலாம் என்கிறீங்க. .? ” குரலில் எந்தவித பிசிறுமில்லாமல் ஏறிட்டாள்.

” அவளைத் திருமணம் முடிக்கிறதாய் இருக்கேன் ! ” அவனும் நிதானமாகச் சொல்லி அவளுக்குள் இடியை இறக்கினான்.

” நல்லா யோசனைப் பண்ணித்தான் சொல்றீங்களா. .? ! ” நேரா அவன் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.

” நல்லா யோசனைப் பண்ணித்தான் சொல்றேன் ! ” அவனும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.

சுமதி உறைந்தாள்.

” இதோ பார் சுமதி ! அவள் அநாதை. தெரிந்தோ தெரியாமலோ அவளை நான் தொட்டுட்டேன். இப்போ விட்டால் பெண் பாவம் என்னைச் சும்மா விடுமா. .? ”

” நியாயம்தான். அதுக்காக என்னை நிர்கதியாய் விடுறீங்களே. இது பெண் பாவமில்லையா. .? இந்த பாவம் உங்களைச் சும்மா விடுமா. .? அதுவும் கட்டின மனைவி. உங்களுக்கு மூணு பிள்ளைகள் பெத்தவள். ! ”

” பாவம்தான்!! ” என்றவன் என்றவன்கொஞ்சம் கொஞ்சம் இடைவெளி விட்டு , ” இந்த பாவத்தையும் போக்க ஒரு வழி இருக்கு. ”

” என்ன. .? ”

” அவளையும் இங்கே கொண்டு வந்து குடும்பம் நடத்தி மூணு பேரும் ஒண்ணா இருப்போம் ! ”

” இது உங்களுக்கே நியாயமாகத் தெரியுதா. .? ”

” அதுக்காகத் தொட்டவளை விட்டு அந்தப் பாவத்தைச் சேர்த்துக்கச் சொல்றீயா. .? ”

” விட்டுத்தானாகணும். ..! ” கத்தினாள்.

” முடியாது !! ” அவனும் திருப்பிக் கத்தினான்.

‘ திட்டவட்டமான முடிவோடு இருக்கிறான். இனி திருத்த முடியாது. இனி வாதாடிப் பயனில்லை. ! ‘ சுமதிக்குத் தெளிவாகத் தெரிந்தது.

குடும்பம் என்பது என்ன. .? கணவன் என்பவன் யார். .? அவன் கடமைகள் என்னென்ன. .?

தொட்டுத் தாலிக் கட்டியப் பெண்ணுக்குப் பாதுகாப்பாய், பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய் சம்பாதித்துப் போட்டு குடும்பத்தைக் வளைத்துக் காத்து செல்பவனே கணவன். அவனே இப்படி பொறுப்பில்லாமல் தூக்கி ஏரிந்துவிட்டால். .. குடும்பம். .? !

போய்விட்டால் தன்னால் வாழமுடியாதென்று நினைக்கின்றானா. .?

குழந்தைகளை வைத்துக் காப்பாற்ற முடியாதென்று எண்ணுகிறானா. .?

கையாலாகதத்தனமாய் காலில் விழுந்து கதறி. ..

” நீங்க செய்யுறதெல்லாம் செய்யுங்க. எனக்குக் கல்லானாலும் கணவனாய். .. கொடுக்கிறதைக் கொடுத்துட்டு எங்கே , எப்படி வேணுமின்னாலும் இருங்க. . ” என்று சொல்லி சரணாகதி அடைய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றானா. .?

” இப்படி பேசுகிறவன், மோகத்திலிருப்பவன் காலில் வீழ்ந்தால். .? இன்றைக்குக் கொடுப்பான். நாளைக்கு கொடுக்காமல் கூட செல்வான். கேட்டால். . இதைத்தான் கொடுப்பேன், இப்படித்தான் கொடுப்பேன். விருப்பமிருந்தால் வாங்கிக்கோ இல்லாவிட்டால் போ. ..” என்று உதறி தள்ளி செல்ல மாட்டானென்று என்ன நிச்சயம். .?

அவளையும் கொண்டு வந்து குடும்பம் நடத்துவது எப்படி சரி. .?

வாழ்க்கையில் பங்கு. ஒருவனுக்கு இருவர் எப்படி சரி. .!? -சிறிது நேர யோசனைக்குப் பின் அவனைப் பார்த்தாள்.

” என்ன அப்படிப் பார்க்கிறே.! என்ன முடிவு. .? ” ஜானகிராமன் கேட்டான்.

” நீங்க தொட்டவளை விடமுடியாது. அதனால அவளைக் கண்டிப்பா கலியாணம் செய்துகொள்ளப் போறீங்களா. .? ” – ஆணித்தரமாகக் கேட்டாள் .

” ஆமா. .”

” ஆக. . ஒட்டுமொத்தமாப் போறீங்க. .? ”

” இல்லே. ..உன்னையும் காப்பாத்துவேன் ! ”

” தேவை இல்லே. !!..”

” என்ன சொல்றே..! ? ” – துணுக்குற்றான்.

” எனக்கு வாழத் தெரியும். நான் உழைச்சு என் புள்ளைகளைக் காப்பாத்துவேன். ! ”

” சுமதி !! ” – திடுக்கிட்டான்.

” உங்களுக்குப் பெண் பாவம் வேணாம். தொட்டவளைத் திருமணம் செய்துகிட்டு ஒட்டு மொத்தமாய் அவளோடு இருங்க. ”

” …………………….”

” என் தொடர்பு, பழக்க வழக்கம்ன்னு இங்கேயும் வரவேணாம். என் பாவமும் உங்களைச் சேரவேணாம். ”

” அப்புறம். ..? ” – அதிர்ச்சியாய்ப் பார்த்தான்.

” நமக்குள் ஏன் கோர்ட், விவாகரத்து. நான் விதவையாய் இருந்து, வாழ்ந்து என் புள்ளைங்களைக் காப்பாத்துவேன். ” சொல்லிச் சட்டென்று தன் கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றி மேசையில் வைத்துவிட்டு நெற்றிப் பொட்டை அழித்தாள்.

” சுமதி ! ” ஜானகிராமன் அலறினான்.

” உங்களுக்கு இதுதான் தண்டனை. விருப்பமிருந்தால் எடுத்துப் போங்க. இல்லாட்டி விட்டுப் போங்க. ஆனா. ..நான் கழட்டின தாலியை எடுத்து மீண்டும் அணிய மாட்டேன் ! இதுசத்தியம். இது தான் என் தெளிவான பாதை. தயவு செய்து குறுக்கே வராதீங்க. ! ” சொல்லி அறைக்குள் நுழைந்தாள்.

ஜானகிராமன் ஸ்தம்பித்தான். அப்படியே ஆடாமல் அசையாமல் ஆணி அடித்து நின்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *