கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 6,370 
 

எனக்கு வயது தற்பொழுது சுமார் ஐம்பத்தாறு இருக்கும். அதற்கு மேலாகவும் இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம். தோராயமாகத்தான் சொல்கிறேன் ஐம்பத்தாறு என்று. வாழ்க்கையில் பசியையும் பட்டினையையும் மட்டுமே தெரிந்து வைத்திருந்த என் அம்மாவிற்கு நாள் நட்சத்திரம் தெரிந்திருக்கவில்லை. அதனால்தான் என் பிறந்த நாளைக்கூட எழுதிவைப்பதற்கு அவள் மறந்துபோயிருக்கிறாள். அந்தளவிற்கு துப்பிருந்திருந்தால் என் அப்பன் இன்னொருத்தியைக் கூட்டிக் கொண்டு ஓடும்வரை சும்மா இருந்திருப்பாளா?.. அவன் ஓடித்தான் போய்விட்டானாம் நான் பிறப்பதற்கு முன்பே. அப்பன் ஓடிப்போனதிலிருந்து வறுமை ஒருபக்கம் எங்கள் குடும்பத்தைப் பிடித்து ஆட்டிப் படைத்தாலும் என்னை வளர்த்து பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்துப் பெரிய ஆளாய் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் என் அம்மா மனதில் நிறைந்திருந்தது. ஆனால் நான் வாய்ப் பேசமுடியாத காதுகேளாத ஒரு பிறவி என்பதை எனக்கு நான்கு வயது ஆகும்போதுதான் அவள் தெரிந்துகொண்டிருக்கிறாள். எப்படியும் பிள்ளை பேசிவிடும் என்று காத்துக்கொண்டிருந்தவளின் மனதில் ஏதோ ஒரு எண்ணம் உதிக்க, பக்கத்து நகரத்தில் இருந்த ஒரு அரசு மருத்துவமனைக்கு என்னைத் தூக்கிக்கொண்டு போயிருக்கிறாள். அங்கு “உன் மகனுக்கு வாய்ப் பேசவும் முடியாது.. காதும் கேட்காது” என்று கூறியிருக்கிறார்கள். அங்கேயே விழுந்து புரண்டு அழுதிருக்கிறாள் அம்மா. என்னதான் செய்தாலும் இக்குறைபாட்டைச் சரிசெய்ய முடியாது என்று மருத்துவர்கள் கைவிரிக்க, அவள் நொறுங்கிப் போயிருக்கிறாள். என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதாள் அம்மா. தன் கைகளால் என் அங்கமெல்லாம் தடவிக்கொடுத்தாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒன்றுமே கேட்கவில்லை. அவள் கண்களில் வழியும் நீரை மட்டும் என் பிஞ்சு விரல்கள் துடைத்து விட்டுக்கொண்டிருக்கின்றன. அவள் கூப்பிட்டபொழுதெல்லாம் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்த நான், திரும்பிப் பார்க்காமல் இருந்ததற்குப் பலமுறை அவள் கைகள் என் முதுகைப் பதம் பார்த்திருக்கின்றன. இப்போது அது அவளுக்கு நினைவுக்கு வந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை. என்னிடம் மன்னிப்பு கேட்பதுபோல் இருந்தன அவள் கண்கள். என் நிலையைப் புரிந்துகொண்ட அவள் எனக்குச் சொல்ல வருவதைச் சாடைகாட்டி எளிதாக விளக்கிவிடுமளவிற்குப் பக்குவப்பட்டிருந்தாள். நானும் என் எண்ணங்களையும் உள்ளக் கிடக்கைகளையும் அவளுக்கு எளிதாய்ச் சொல்லுமளவிற்குத் தயாராயிருந்தேன்.

பாவம் அம்மா. அவள் கனவைப் பூர்த்தி செய்யமுடியாத என்னை நினைத்துப் பல நாட்கள் இரவில் அழுதிருக்கிறாள். அவள் கண்களைத் துடைத்துவிட்டு, நானிருக்கிறேன்! நீ அழாதே அம்மா என்பதுபோல் பாவனைக் காட்டி அவளைச் சிரிக்க வைத்திருக்கிறேன். சற்று நேரத்தில் அந்த அழுகையிலிருந்து அவள் விடுபட்டுவிடுவாள். காதுகேளாத ஊமைகளுக்கான பள்ளிக்கூடம் சென்னையில் இருக்கிறதென்று எங்கள் பக்கத்து வீட்டு நடேசன் மாமா அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அவள் என்னை அங்கெல்லாம் அனுப்ப முடியாது என்று தீர்க்கமாக மறுத்துவிட்டாள். அவள் செய்ததிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. கட்டிய கணவனையும் பறிகொடுத்துவிட்டு பெற்ற ஒரு பிள்ளையையும் எங்கேயோ பட்டனத்திற்கு அனுப்பிவிட்டுத் தனிமையில் கிடந்து அழுவதற்கு அவள் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்காக என் படிப்பையும் அவள் கனவையும் தியாகம் செய்துவிட்டாள். எத்தனையோ கவலைகளையும் கனவுகளையும் எண்ணித் துடித்துக்கொண்டிருந்த என் அம்மாவின் இதயம் ஒருநாள் விடியற்காலையில் நின்றுபோயிருந்தது. அப்போது எனக்குப் பத்து வயது இருக்கலாம். என் வீட்டிற்கு முன் தென்னங்கீற்றில் பந்தல் போட்டிருந்தார்கள். அதற்குக் கீழே ஒரு கட்டிலைப் போட்டு அம்மாவைக் கிடத்தியிருந்தார்கள். அதில் அயர்ந்து தூங்குவதைப் போல கிடந்தாள் அம்மா. அவள் முகத்தில் மஞ்சள் பூசி பொட்டு வைத்திருந்தார்கள். தலைநிறைய பூ வைத்திருந்தார்கள். பார்ப்பதற்கு அழகாய் இருந்தாள். உயிரோடு இருக்கும்போது ஒருநாள்கூட அவள் அப்படியான தோற்றத்தில் இருந்ததில்லை. தெருவில் பசங்களோடு விளையாடிக்கொண்டிருந்த என்னைப் பிடித்துவந்து என்னென்னவோ செய்யச் சொன்னார்கள். கையில் கனையும் நெருப்புச் சட்டி ஒன்றைக் கொடுத்திருந்தனர். அன்றைக்கு அந்திப்பொழுதில் எங்கள் ஊரைவிட்டு என் அம்மா புறப்பட்டுவிட்டாள். எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்க்கிறேன். அவள் கட்டிப் போட்ட புடவை, இரவிக்கை போன்ற ஆடைகள் சிதறிக்கிடக்கின்றன. அவள் இரவு காய்ச்சி வைத்த கூழ், மீதமான சோற்றில் ஊற்றி வைத்த தண்ணீரோடு இருக்கும் கஞ்சி, மூச்சிவாடையடிக்கும் பழைய காரக்குழம்பு அப்படி அப்படியே கிடக்கின்றன. அம்மா இருந்தால் இப்படியா இருக்கும். ஒரு பொருள்கூட வீட்டில் சிதறிக்கிடக்காது. வீடு பார்ப்பதற்குச் சுத்தமாக அழகாக இருக்கும். எப்படியும் அம்மா திரும்பி வந்துவிடுவாள் என்கிற மனதோடு அந்த வீட்டிற்குள் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கும் என்னை, சென்னையில் கொத்தனார் வேலை செய்யும் நடேசன் மாமா, அவர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோய் படுக்கவைத்துக்கொள்கிறார். சரியாக அம்மா போய்ச் சேர்ந்து இருபதாவது நாளில் அவரின் கையைப் பிடித்துக்கொண்டு சென்னைக்குக் கிளம்பினேன்.

படிக்காத, வாய்ப் பேசமுடியாத, காதுகேளாத நான் என்ன? வாத்தியார் உத்தியோகமா பார்க்க முடியும். எல்லாமும் நடேசன் மாமாதான். கல்லெடுத்து கொடுப்பது, கலவை கலந்து கொடுப்பது, சிமெண்டு மூட்டை தூக்குவது, வேலையாட்களுக்குத் தேநீர் வாங்கிவந்து ஊற்றிக் கொடுப்பது உள்ளிட்ட எல்லா வேலைகளும் என்னைத் தேடித்தான் வரும். தொடக்கத்தில் அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வது சற்று கடினமாகத்தான் இருந்தது. என் வாழ்க்கையில் கிடைத்த முன்னேறுவதற்கான ஒரே வாய்ப்பு இதுதானே. விட்டுவிடமுடியுமா?… கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன் மாமாவை. அவரும் என்னை ஒரு சிஷ்யனாகவே ஏற்றுக்கொண்டார். அவர் வீட்டில்தான் சாப்பாடு, தங்குவது எல்லாம். அத்தை ரொம்பவும் நல்லவள். என் அம்மாவைப் போலவே என்னை அரவணைத்து நடத்தினாள். எனக்குப் பெண் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்ததுகூட அத்தையின் சொந்தத்திலிருந்துதான். யாரோடவும் அரட்டை அடிக்க முடியாத, யார் பேசுவதையும் கேட்க முடியாத நான், மாமா செய்யும் வேலைகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருப்பேன். நாளடைவில் அதிலிருக்கும் நுணுக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டேன். அவர் இல்லாதபோது கொலுரை எடுத்துக் கட்டுவலை போடுவது, பூச்சு வேலை செய்வது என்று பயிற்சியில் இறங்குவேன். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மாமா, ஒருநாள் எனக்கும் புதிதாக ஒரு கொலுரு, மணியாஸ்கட்டை, மட்டப்பலகை, தூக்குக்குண்டு வாங்கிக்கொடுத்து கொத்தனாராக்கிவிட்டார். என்னை ஒரு முழு வேலைக்காரனாக மாற்றிய மாமா, தன்னோடு வைத்துக்கொள்ளாமல் என்னை என் சொந்தக்காலில் நிற்க வேண்டும்படி வெளியேற்றிவிட்டார். அன்றையிலிருந்து எத்தனையோ வீடுகளைக் கட்டிமுடித்துவிட்டேன். என்னை நம்பித் தங்களின் புதுவீட்டுக் கனவுகளை என்னிடம் ஒப்படைத்த அந்த நல்ல உள்ளங்களை இந்தப் பூமியில் வாழும் கடவுள்கள் என்றுதான் சொல்லவேண்டும். எனக்கும் ஒரு சொந்த வீடு வாங்கிவிட்டேன். அந்த வீட்டின் நுழையாயிலில் என் அம்மாவின் பெயர்தான் கல்லில் பொறித்து பதிக்கப்பட்டிருக்கும். நீங்கள் எங்கள் வீட்டுப் பக்கம் எப்போதாவது வந்தால் பாருங்கள்.

வாய்ப்பேசவும் காது கேட்கும் திறனும் இல்லாதவனாக நான் இருந்தாலும் சிறுவயதில் என் அம்மா கொடுத்த பயிற்சிதான் என்னை இவ்வளவு பெரிய மனிதனாக உயர்த்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் நம்மைச் சுற்றி எவ்வளவு கெட்ட மனிதர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவர்களில் ஒருவர்தான் நடேசன் மாமா. அவர் இப்போது இந்த உலகத்தில் இல்லை. வயது முதிர்ந்த அத்தையை நான்தான் என்னோடு வைத்திருக்கிறேன். அவளுக்குக் குழந்தைகள் இல்லை. அந்தக் குறையெல்லாம் தெரியாமல் பார்த்துக்கொள்கிறாள் என் மனைவி. எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் மூன்று பேருக்கும் திருமணம் முடித்துவிட்டேன். என் ஓய்வு நேரங்களையெல்லாம் என் பேரப்பிள்ளைகளோடுதான் செலவிடுகிறேன். அவர்கள்கூட என்னோடு பேசப் பழகிக் கொண்டார்கள். எனக்கு மட்டும்தான் பேச வராதே தவிர, என் குடும்பத்தில் எல்லோரும் நன்றாகப் பேசக்கூடியவர்கள். என் மூத்த மகள் படிக்கும்போதே பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறாள். எனக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுத்தது அவள்தான். அவளால்தான் இந்தக் கதையை என்னால் எழுதமுடிகின்றது. இல்லையென்றால் எப்படி இவ்வளவு விலாவரியாக இன்னொருத்தரிடம் சொல்லி எழுத வைக்க முடியும். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்து நம்மை அச்சுறுத்தினாலும் மனது மட்டும் தெளிவாக இருந்தால் போதும் ஜெயித்துவிடலாம். அதற்கு என்னையே யாரும் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இன்னொரு விஷயம் உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேனே, ஒரு இரண்டு நிமிடம் பொறுங்கள்.. கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன்.

காத்திருந்தமைக்கு மிகவும் நன்றி. இப்போது சொல்லட்டுமா?.. எங்கள் பக்கத்துத் தெருவில் ஒரு பையன் இருக்கிறான். நல்ல ஒழுக்கமானவன். நல்ல என்றால் அவ்வளவு நல்லவன். பொறியியல் பட்டம்தான் முடித்திருக்கிறான். படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகூட ஆகவில்லை. இப்போதுதான் தெருவுக்கு நான்கு எஞ்சினியர்கள் உருவாகிக் கிடக்கிறார்களே. பிறகு எப்படி படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும். அவன் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்கவில்லையாம். பாவம் பையன். அவன் அப்பா என்ன சொன்னாரோ தெரியவில்லை. தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறான். ஒரு மாதமாக ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு இப்போதுதான் வீடுதிரும்பியிருக்கிறான். அவனைத்தான் இப்போது பார்க்கப் போகிறேன். என் வாழ்க்கைகூட அவனுக்கு ஒரு பாடமாக அமையலாம் அல்லவா?. என்னைப் பற்றி உங்களுக்குச் சொன்னதைத்தான் அவனுக்கும் சொல்லப் போகிறேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *