பாசத்தின் முகவரி அப்பா

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 8,235 
 

“”நம்ம அப்பா இன்னொரு மேரேஜ் பண்ணிட்டு நம்மை விட்டுட்டுப் போயிருவாரா பாபுண்ணா?” என்று ஏக்கப் பெருமூச்சுடன் தன் கேள்வியைத் தொடுத்தாள் மீனு.

“”இல்லைம்மா… நம்ம அப்பா நம்மை விட்டுட்டு எங்கேயுமே போகமாட்டார். இனிமே நாம மூணு பேர் மட்டுமே இந்த வீட்டுல இருக்கப் போறோம். சித்தின்னு உறவுமுறை சொல்லிட்டு யாரும் வீட்டுக்கு வரப் போறதில்லை. நீ கவலைப்படாம ஸ்கூலுக்குக் கிளம்பு. ஆட்டோ வந்தாச்சு பாரு” என்றான் பாபு.

பாசத்தின் முகவரி அப்பா

மீனுவை சமாதானப்படுத்துவதற்காக மட்டுமே அவ்வாறு சொன்னானே தவிர அவனுக்கும்கூட உள்ளூர சிறு பயம் இருந்துகொண்டேதான் இருந்தது. அம்மா இருதய நோயால் முப்பத்திரண்டு வயதிலேயே இறந்துவிட்டாள். இன்னும் அவள் இறந்து முப்பது நாள்கள்கூட முடியவில்லை. ஊரிலிருந்து வந்த பாட்டி அப்பாவிடம் பேசும்போதெல்லாம் இன்னொரு மேரேஜுக்கு அடிக்கோடு போட்டுக் கொண்டிருந்தாள். இது பதினோரு வயது மீனுவிற்கும் பதின்மூன்று வயது பாபுவிற்கும் மிகையான எரிச்சலைத் தந்தது. அப்பா ஆபீஸிலிருந்து வந்ததும் கட்டாயமாகப் பேசிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர் இருவரும்.

“”உனக்காக மட்டுமில்லை நரேன். உன் பிள்ளைகளோட நன்மைக்காகவும்தான் சொல்றேன். யோசிச்சுப் பாரு” என்றவாறு அன்று சாயங்காலம் பாட்டி நரேனிடம் காபி டம்ளரைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

இந்தக் காட்சி, வசனங்கள்தானே சமீப நாள்களாக தினமும் வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்கிற எரிச்சல் உணர்வோடு பிள்ளைகள் கம்மென்று இருந்தனர். தம் அப்பாவிடம் பேச எண்ணிய இருவருக்கும் வாயிலிருந்து சொற்கள் வரத் தயங்கின. இரவுப் பொழுது வரவே அனைவரும் உறங்கச் சென்றனர். அடுத்த நாள் ஸ்கூலுக்குச் சென்ற பாபு தன் நண்பனிடம் கேட்டான்.

“”திவாகர்… உங்க சித்தி உன்னை நல்லா வச்சுக்கறாங்களா?”

“”டேய்… உனக்கு எத்தனை தரம் சொல்றது? என் சித்தி என்னைப் பாடாய்ப்படுத்தறாங்கன்னு. ஏதாவது ஒரு வேலை சொல்லி என்னை ஏவி விட்டுட்டே இருப்பாங்க. நிம்மதியா உட்கார்ந்து படிக்க முடியாதுன்னா பார்த்துக் கோயேன்”.

“”என் அப்பாகிட்ட எப்படி பேசறதுன்னு ரொம்ப தயக்கமா இருக்குடா…”

“”நீ யோசிச்சேன்னு வையேன். உன்னோட எதிர்காலம் பாழாயிரும். நீ அடிமை வாழ்க்கைதான் வாழணும். இன்னொரு மேரேஜ் பண்ணிக்கக்கூடாதுன்னு உங்கப்பாகிட்ட தைரியமாச் சொல்லு”.

அன்று சாயங்காலம் ஸ்கூல் முடிந்து பாபுவும், மீனுவும் வீடு வந்து சேர்ந்தபோது பாட்டி மாடிக்குச் சென்றிருந்தாள். அம்மா இறந்து முப்பது நாள்கள் கழிந்ததும் பாட்டி ஊருக்குச் செல்வதாகச் சொல்லி இருந்தாள். இப்போது ஹாலில் இருந்தவாறு இவர்களை வரவேற்கும் அம்மா அங்கு இல்லை. போட்டோவில் மட்டுமே புன்னகைத்துக் கொண்டிருந்தாள். வீடு வெறிச்சோடிக் கிடந்தது.

தன் புத்தகப் பையை தொப்பென்று போட்ட மீனு அம்மா போட்டோவின் முன் நின்றாள். என்ன செய்வதென்றறியாது திகைத்த பாபுவும் தன் தங்கையின் அருகில் போய் நின்று கொண்டான்.

“”அம்மா… நீ பாட்டுக்கு எங்களை விட்டுட்டுப் போய்ட்ட. அப்பா இன்னொருத்தவங்களை மேரேஜ் பண்ணி கூட்டிட்டு வந்துருவாரோன்னு பயமா இருக்கும்மா” என்று கேவி அழ ஆரம்பித்தாள் மீனு.

“”இந்தா… திருநீறு பூசிக்கோ மீனு. உன் பயமெல்லாம் ஓடிப் போயிரும். நீ நினைக்கிற மாதிரி எதுவும் தப்பா நடக்காது” என்றவாறு திருநீறு எடுத்து மீனுவிற்குப் பூசிவிட்டான் பாபு.

“”அண்ணா… காலைல இருந்து எனக்கு தொண்டை வலிக்குது. இதுக்கு வெந்நீர் குடிச்சா இதமா இருக்கும்னு அம்மா சொல்வாங்க. கொஞ்சம் வெந்நீர் வச்சுக் கொடேன்”.

“”இதுவரைக்கும் நான் அடுப்புப் பக்கமே போனது இல்லையே மீனு. அப்பா வந்ததும் சொல்லி மாத்திரை வாங்கிடலாம். கொஞ்சம் பொறுத்துக்கோயேன்.”

“”இந்நேரம் அம்மா இருந்திருந்தா நான் சொன்ன நிமிஷத்துல வெந்நீர் கொண்டு வந்திருப்பாங்க”

“”நம்மோட தேவைகளை நிறைவேத்தித் தர சித்தி வருவாங்கன்னு பாட்டி சொன்னாங்க மீனு”.

“”ஐயோ… அண்ணா… இந்த சித்தி டாபிக் பத்தி பேசாதேயேன். எனக்குப் பிடிக்கலை.”

“”வீணா மனசைப் போட்டுக் குழப்பிக்காதீங்க. நான் உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு எங்கேயும் போயிர மாட்டேன். உங்கமேல சத்தியமா இன்னொரு மேரேஜ் பண்ணிக்கவே மாட்டேன்” என்று வீட்டினுள் நுழைந்த நரேன் கண்கலங்கச் சொன்னது பிள்ளைகளுக்குச் சற்று மனநிறைவைத் தந்தது.

ஆனால், அடுத்த நாளே நரேனின் ப்ரெண்ட் சத்யன் வந்து பேசியதைக் கேட்டபோது பிள்ளைகள் இருவரும் ரொம்பவே மனமொடிந்து போனார்கள்.

“”நரேன்… உன் பசங்களுக்கு என்ன விவரம் தெரியும் இந்த வயசுல? பேசாம நான் சொல்ற வரனை ஒத்துக்கோ. அந்தப் பொண்ணு நல்ல குடும்பத்துல பிறந்து வளர்ந்தவ. உன் பசங்களையும் நல்லா பார்த்துப்பா. நீ கட்டாயம் இன்னொரு மேரேஜ் பண்ணிக்கோ. உன்மேல் உள்ள அக்கறைல இதைச் சொல்றேன்”.

“”யோசிச்சுச் சொல்றேன். இப்ப நீ கிளம்பேன்” என்று நரேன் பதில் சொன்னது பிள்ளைகளுக்கு மனதிற்குள் சற்று பீதியைக் கிளப்பத்தான் செய்தது.

“”நீங்க ரெண்டு பேரும் நான் சொல்றதைக் கவனமாக் கேளுங்க. என்னை நீங்க நம்பலாம். எந்தக் காரணத்துக்காகவும் நான் இன்னொரு மேரேஜ் பண்ணிக்கவே மாட்டேன். எனக்கு ஆறுதல் வார்த்தை சொல்றவங்களுக்கு அனுசரணையா இருக்கட்டுமேன்னுதான் உங்க மனசுக்குப் பிடிக்காத முரணான வார்த்தைகளை அவங்களுக்குப் பதிலா சொல்ல வேண்டி இருக்கு. என்னோட குறிக்கோள் எல்லாம் உங்க ரெண்டு பேரையும் நல்லா படிக்க வைச்சு சமுதாயத்தில் ஓர் உயர்ந்த இடத்துக்குக் கொண்டு வரணும்ங்கிறதுதான். என் மனசுல உள்ள எண்ணங்கள் உங்களுக்குப் புரிஞ்சதுதானே?” என்று நரேன் கேட்டபோது பிள்ளைகள் மனசார நம்பினர்.

வருடங்கள் உருண்டோடின. மீனுவிற்கு மேரேஜ் ஆகி சென்னையில் செட்டில் ஆகிவிட்டாள். இப்போது பாபுவிற்கு மேரேஜ் என்பதால் கைக்குழந்தையுடன் மதுரைக்கு வந்திருந்தாள். பாபுவின் மேரேஜ் முடிந்து மீனு சென்னைக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தாள். பாபுவின் மனைவிக்கு ஹைதராபாத்தில் வேலை என்பதால் பாபுவும்கூட தனது வேலையை அவ்வூருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டான்.

“”அண்ணா… அப்பாவை உன்கூடவே அழைச்சிட்டுப் போயிருவதானே?” என நம்பிக்கை மேலிடக் கேட்டாள் மீனு.

“”சொந்தவீடு மதுரைல இருக்கறப்போ மாமா எதுக்காக அலையணும்? இங்கேயே இருந்தார்னா சொந்தபந்தம் இருக்கறதால பொழுதும் நல்லாப் போகுமே. நாம வந்து அப்பப்போ பார்த்துக்குவோம்” என்று முற்றுப்புள்ளி வைப்பதுபோல பேசினாள் பாபுவின் மனைவி.

“”ட்ரெயினுக்கு நேரமாச்சு. சீக்கிரம் கிளம்பு மீனு” என்று அவள் கணவன் சொல்லவே விடைபெறலானாள் மீனு.

“”அண்ணா… நாம் தப்பு பண்ணிட்டோமோன்னு தோணுது. நாற்பது வயசுலயே மனைவியை இழந்துட்டு நம் அப்பா துறவி மாதிரி நமக்காக வாழ்ந்துக்கிட்டு இருக்கார். அவர் இன்னொரு மேரேஜ் பண்றதுக்கு நாம் சம்மதிச்சு இருக்கணும். அதைத் தடுத்த மன உறுத்தல் இப்பவும் எனக்குள்ள இருக்கு.”

“”முடிஞ்சு போனதை நினைச்சு மனசைக் குழப்பிக்காத மீனு. நமக்காகத்தானே அப்பா தியாக வாழ்க்கை வாழ்ந்தார். நீ தினமும் அப்பாகிட்ட போனில் பேசு. நானும் அவரோட பேசறேன்” என்றபோது பாபுவிற்குக் கண் கலங்கியது.

அப்போது அங்கு நரேன் வந்துவிடவே எவ்வளவோ முயன்றும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாத மீனு, நரேனின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“”ஸாரிப்பா… ரொம்ப ஸாரி”

“”என்ன மீனு திடீர்னு… எதுக்கு ஸாரி? நீ என்ன தப்பு செஞ்சிட்டன்னு எனக்கு ஸாரி சொல்ற?” நரேன் பதறினான்.

“”அப்பா எங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்ங்கிறதுக்காக உங்க வாழ்க்கையைப் புதைச்சுட்டோம். நாங்க பெரிய தப்பு பண்ணிட்டோம். அப்பா… எனக்காக ஒரு உதவி செய்வீங்களா?” ஏக்கம் தொனிக்கக் கேட்டாள் மீனு.

“”சொல்லும்மா… செய்யறேன்” என்றான் நரேன்.

“”அப்பா… இப்போ நீங்க ஏன் மேரேஜ் பண்ணிக்கக் கூடாது? ப்ளீஸ்… பண்ணிக்கோங்களேன்” என்று மீனு சொன்னதைக் கேட்டு நரேன் மெலிதாகப் புன்னகைத்தான்.

“”விளையாட்டுக்காகச் சொல்லலைப்பா. சீரியஸா சொல்றேன். இனிமே உங்களுக்கு ஒரு துணை வேணும்னு என் மனசு சொல்லுது” என்று மீனு குற்ற உணர்வுடன் சொன்னாள்.

“”நானும் சீரியஸா பேசறேனே. எனக்கு என் வாழ்க்கையோட பாத்திரம் ரொம்பப் பிடிச்சிருக்கு மீனு. பல வருஷங்களுக்கு முன்னால மனைவி இறந்துட்டான்னதும் என் மனசு நொறுங்கித்தான் போச்சு. ஆனா, உங்க ரெண்டு பேருக்காகவும் என் மனசைப் பக்குவப்படுத்தி ஒரு போராட்ட வாழ்க்கைக்குத் தயாரானேன். பல இக்கட்டான சூழ்நிலைகள், பிரச்னைகளுக்கு மத்தியில் உங்களை நல்லபடியா வளர்த்து ஆளாக்கிட்டேன். இப்போ எனக்கு ஒரு துணை வேணும்னு நீ சொல்ற. எனக்குத் துணையா மத்தவங்க இருக்கறதைவிட மத்தவங்களுக்குத் துணையா நான் வாழணும்னு ஆசைப்படறேன். இதை மனசுல வைச்சு மனநிலை பாதிக்கப்பட்டவங்களுக்காக ஓர் இல்லம் தொடங்கப் போறேன். தங்களோட அடிப்படைத் தேவைகளைக்கூட புரிஞ்சுக்க இயலாத மனநோயாளிகளுக்கு பொறுமையா எடுத்துச்சொல்லி பாதுகாப்பு உணர்வு தரப் போறேன். என் எதிர்காலத் திட்டத்தில் ஏதேனும் குறைகள் இருக்கா மீனு?” என்று கேட்ட நரேனின் வார்த்தைகளில் பாசமும் பரிவும் பொங்கின.

“”இல்லைப்பா” என்று சொன்ன மீனுவிற்கு நரேனின் வார்த்தைகள் மந்திரமாய் ஒலித்தன.

– எஸ்.கீதா (அக்டோபர் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *