பழைய புகைப்படம்

1
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 8,067 
 

இப்போது எனக்கு பத்து வயதிருக்கும். மாமரத்தின் கீழ் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து என்னுடைய பாட்டி நிட்டிங் செய்து கொண்டிருந்தாள். கோடை காலத்தின் இறுதிக்காலம் என்பதால் மரத்திலிருந்து வீசும் காற்றில் இளம் சூடு கலந்திருந்தது. தோட்டத்தில் சூரியகாந்தி மலர்கள் பூத்திருந்தன. குளிர்காலத்திற்கான உல்லன் ஸ்கார்ப்பை பாட்டி பின்னிக் கொண்டிருந்தாள். வயதானவள் என்பதால் சாதாரண வெள்ளைப் புடவை கட்டியிருந்தாள். கண் பார்வை தெளிவாக இல்லையென்றாலும் கை விரல்கள் தடுமாற்றமின்றி ஊசிகளைத் துரிதமாக மாற்றி மாற்றி இயக்கிக் கொண்டிருந்தன. தலைமுடி வெண்மையாக இருந்தது. அவளது தோல்களிலும் சுருக்கம் காணப்பட்டது.

நடுப்பகல் வரை அருகே இருந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நான் வீடு திரும்பினேன். பகல் உணவை முடித்தவுடன் என் அம்மா கட்டிலுக்கடியில் வைத்திருந்த பழைய பெட்டியை வெளியே இழுத்தேன். அதனுள் பழைய புத்தகங்களும், அம்மா பயன்படுத்திய பழைய பொருள்களும்தான் நிரம்பியிருந்தன. பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணப் படங்கள் நிறைந்த புத்தகத்தைத் தவிர வேறு ஏதும் என்னைக் கவரவில்லை. அந்தப் புத்தகத்தை மட்டும் எடுத்துப் புரட்டியபோது, அதன் பக்கங்களுக்கு இடையே இருந்த பழைய புகைப்படமொன்று என்னைக் கவர்ந்தது.

பழைய புகைப்படம்அந்தப் புகைப்படம் சிறிது மஞ்சள் நிறத்தில் பழுப்படைந்து காணப்பட்டது. ஒரு பெண் சுவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தாள். ஆனால் பின்புறத்திலிருந்து யாரோ ஒருவர் சுவர் மீது ஏறுவதற்காக கைகளை ஊன்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. நின்று கொண்டிருந்த பெண்ணின் பக்கத்தில் நிறைய மலர்கள் மலர்ந்திருந்தன. ஆனால் அவை என்ன மலர்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. கூடவே ஒரு கொடியும் படர்ந்திருந்தது. அந்தப் புகைப்படத்தைக் கையில் எடுத்துக்கொண்டு “பாட்டி’ என்று அழைத்தபடியே தோட்டத்திற்கு ஓடினேன். “”இந்தப் புகைப்படத்தைப் பார். பழைய சாமான்கள் இருந்த பெட்டியிலிருந்து இதைக் கண்டெடுத்தேன். இது யாருடைய படம் பாட்டி?”

பாட்டியின் பக்கத்தில் கட்டிலில் எகிறி குதித்து அமர்ந்த என்னுடைய முதுகில் பாட்டி ஓங்கி ஓர் அறைவிட்டாள் “”பார், உன்னால் ஸ்டிச்சிங் கரைக்குத் தவறிவிட்டது. இன்னொருமுறை இப்படிச் செய்தால் இந்த ஸ்கார்ப்பை நீதான் முடித்துத் தர வேண்டியிருக்கும்”.

ஸ்கார்ப் பின்னுவது எப்படி? என்று கற்றுத் தருவதாகக் கூறி அடிக்கடி பாட்டி என்னைப் பயமுறுத்துவதுண்டு. இதெல்லாம் பையன்களின் வேலை அல்ல என்று சொல்லி மறுத்து விடுவேன். என்னுடைய குறும்புத்தனங்களுக்கு அது ஓர் எச்சரிக்கையாகவும் இருந்தது. ஒருமுறை அறையின் திரைச்சீலையைக் கிழித்துவிட்டேன் என்பதற்காக, பாட்டி ஊசிநூலைக் கொடுத்து தைக்கும்படி சொன்னாள். இரண்டு அங்குலம்வரை நான் தைத்த பின்னர் அம்மா அதை வாங்கிச் சென்று மீண்டும் சரியாகத் தைத்துக் கொடுத்தாள்.

என் கையிலிருந்த புகைப்படத்தை பாட்டி வாங்கிக் கொண்டாள். நீண்ட நேரம் இருவருமாகச் சேர்ந்து அந்தப் புகைப்படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்தப் பெண்ணுக்கு கூந்தல் நீளமாக இருந்தது. அவள் அணிந்திருந்த உடைகளும் இறுக்கமாக இல்லாமல் முழங்கால் வரையிலும், மேலாடை கைகளின் மணிக்கட்டு வரையிலும் நீண்டிருந்தன. கை நிறைய வளையல்களை அணிந்திருந்தாள். அவளது தோற்றம் முழுச் சுதந்திரத்துடன் எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதி வாங்கியதை போலிருந்தது. அவள் நிற்கும் விதமும், விரிந்த கைகளும் பரந்த இடுப்பும் அவளது முகத்தில் ஒருவித மர்மமான சிரிப்பை வெளிப்படுத்தியது.

“”புகைப்படத்தில் இருப்பது யார்?” என்று நான் கேட்டேன். “”ஒரு சிறு பெண்” பாட்டி சொன்னாள். “”இதை உன்னால் சொல்ல முடியாதா?”

“”ஆமாம். ஆனால் அந்தப் பெண் யாரென்று உனக்குத் தெரியுமா?”

“”ஆமாம். அவள் யாரென்று எனக்குத் தெரியும்” என்றாள் பாட்டி.

“”ஆனால் அவள் ஒரு முரட்டுத்தனமான பெண். அவளைப்பற்றி வேறு எதையும் உன்னிடம் சொல்ல மாட்டேன். அந்தப் புகைப்படம் பற்றி வேண்டுமானால் சொல்கிறேன். இந்தப் புகைப்படம் 60 ஆண்டுகளுக்கு முன்பு உன்னுடைய தாத்தா வீட்டில் எடுத்ததாகும். அந்தத் தோட்டத்து சுவருக்குப் பின்னால் உள்ள பாதை நகரத்துக்குச் செல்லும் பாதையாகும்”

“”அந்தக் கைகள் யாருடையது?” நான் கேட்டேன். “”சுவருக்குப் பின்னால் இருந்து உள்ளே வர முயற்சிக்கும் அந்தக் கைகள்?”

பாட்டி புகைப்படத்தை வெகு அருகாமையில் வைத்து ஓரக் கண்ணால் பார்த்தாள். பின்னர் தலையை அசைத்தாள். “”முதன்முறையாக நானும் இப்போதுதான் பார்க்கிறேன்” என்றாள். “”அநேகமாக அந்தக் கைகள் வேலைக்காரச் சிறுவனுடையதாக இருக்கலாம் அல்லது உன்னுடைய தாத்தாவின் கைகளாக இருக்கலாம்”.

“”தாத்தாவின் கைகள்போல் தெரியவில்லையே?” நான் சொன்னேன்.

“”மிகவும் மெலிந்தல்லவா காணப்படுகிறது?”

“”ஆமாம். இது 60 ஆண்டுகளுக்கு முந்தியது அல்லவா?”

“”இந்தப் புகைப்படம் எடுத்த பின்னால் அவன் அந்தச் சுவர் மீது ஏறி இருப்பானோ?”

“”இல்லை. யாராலும் அதன்மீது ஏற முடியாது. என்னால் சரியாக நினைவுப்படுத்த முடியவில்லை”.

“”இருந்தாலும் சரியாகவே நினைவுபடுத்திக் கூறுகிறாய் பாட்டி”.

“”ஆமாம் எனக்கு நினைவிருக்கிறது. எனக்கு நினைவிருக்கிறது. இந்தப் புகைப்படத்தில் இல்லாததும் நினைவுக்கு வருகிறது. அது ஓர் இளவேனில் காலம். சுற்றிலும் குளுமையான காற்று வீசிக் கொண்டிருந்தது. இப்போது வீசும் வெப்பக் காற்றைப்போல் இல்லை. அந்தப் பெண்ணின் காலடியில் பூத்துக் கிடக்கும் மலர்கள் “மெர்ரிகோல்ட்’ மலர்கள். அந்தக் கொடி “போகன் வில்லா’ கொடி. ஊதா நிறத்தில் மலர்கள் பூக்கக் கூடியவை. அந்தப் புகைப்படத்தில் அதன் நிறங்களை உன்னால் கண்டறிய முடியாது. இப்போதுகூட இளந்தென்றலையோ, மலர்களின் வாசனையையோ உன்னால் உணர முடியாது”.

“”அந்தப் பெண் யார்?” நான் கேட்டேன். “”அவளைப் பற்றிச் சொல்லுங்கள் பாட்டி”

“”அவள் ஒரு மூர்க்கத்தனமான பெண்” என்றாள் பாட்டி. “”அவள் அணிந்து கொண்டிருக்கும் அந்த அழகான உடையைப் பெற அவள் எவ்வளவு பிடிவாதம் பிடித்தாள் என்பது உனக்குத் தெரியாது”

“”அவள் அணிந்து கொண்டிருப்பது பிரமாதமான உடைகள் என்பது மட்டும் தெரிகிறது” நான் சொன்னேன்.

“”ஆமாம். பெரும்பாலான நேரங்களில் அவள் நல்ல உடை அணிவதே அபூர்வம். சேறு கலந்த குளத்தில் நீச்சலடிக்கச் செல்வாள். அங்கே நிறைய போக்கிரிச் சிறுவர்கள் இருப்பார்கள். இருந்தாலும் அவர்கள் அவளைக் கேலி செய்யப் பயப்படுவார்கள். ஏனெனில் தலைமுடியை இழுத்து அடிப்பாள். உடலில் நகத்தால் கீறி விடுவாள். எருமை மாட்டின் மீது ஏறி அமர்ந்து சுற்றுவாள்”.

“”பார்க்கும்போதே அவளது முரட்டுத்தனம் தெரிகிறது” என்றேன். “”அவளது மர்மமான சிரிப்பைப் பற்றிச் சொல்லும்போதே நினைத்தேன். எது வேண்டுமானாலும் எந்தச் சமயத்திலும் நடக்கலாம் என்றே தோன்றுகிறது”.

“”அப்படித்தான் நடந்தது” பாட்டி சொன்னாள். “”அதன் பிறகு அந்த உடைகளை அணிய அவளது அம்மா விடவில்லை. அந்த உடையுடனேயே நீச்சல் அடிக்கச் சென்றவள் அந்தச் சேற்றிலேயே அரை மணி நேரம் விழுந்து கிடந்தாள்”

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பாட்டியும் சிரித்தாள்.

“”யார் அந்தப் பெண்?” நான் கேட்டேன் “”அவள் யாரென்று நீ கட்டாயம் சொல்லியாக வேண்டும்”

“”இல்லை. என்னால் முடியாது. நிச்சயமாக உன்னிடம் சொல்ல மாட்டேன்”

அந்தப் புகைப்படத்தில் உள்ள பெண் பாட்டிதான் என்று எனக்குத் தெரியும். ஆனால் உண்மையை வரவழைக்க வேண்டுமென்பதற்காக தெரியாததுபோல நடித்தேன். பாட்டி சிரிக்கும்போது புகைப்படத்தில் அந்தப் பெண் சிரித்துக் கொண்டிருப்பது போலவே இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் பாட்டிக்கு இப்போது பற்கள் அவ்வளவாக இல்லை.

“”சொல்லு பாட்டி. யார் இந்தப் பெண்? சொல்லுங்கள்” என்றேன். மாட்டேன் என்று தலையசைத்த பாட்டி தொடர்ந்து பின்னல் வேலையில் ஈடுபட்டாள். என் கையிலிருந்த புகைப்படத்தைப் பார்த்தபடியே பாட்டியை மீண்டும் உற்றுப் பார்த்தேன். புகைப்படத்தில் உள்ள பெண்ணுக்கும் இந்தப் பாட்டியின் தோற்றத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? என்று பார்த்தேன். மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சியொன்று பறந்து வந்து பாட்டியின் கைகளில் இருந்த நிட்டிங் ஊசியின் ஒரு முனையின் மீது அமர்ந்தது. ஒரு விநாடி நிட்டிங் செய்வதை பாட்டி நிறுத்த, நான் அந்த வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்க முயற்சித்தேன். மீண்டும் பறக்கத் தொடங்கிய அந்த வண்ணத்துப் பூச்சி சூரியகாந்தி மலர் மீது சென்று அமர்ந்தது.

தலையைக் குனிந்தபடியே பாட்டி முணுமுணுப்பது கேட்டது “”எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. சுவரின் அப்பால் தெரியும் அந்தக் கைகள் யாருடையவையாக இருக்கும்?” கோடைகாலத்தின் பகல்பொழுதில் அவளது கைவிரல்கள் தொடர்ந்து நிசப்தமாக நிட்டிங் ஊசிகளை இயக்கிக் கொண்டிருந்தது.

– ரஸ்கின் பாண்ட் (தமிழில்: அ.குமார்) – ஜூலை 2015

Print Friendly, PDF & Email

1 thought on “பழைய புகைப்படம்

  1. குட் ஸ்டோரி பட் பைனல் ஆ யாரு அந்த போட்டோ ல இர்ருக்குறது ப்ளீஸ் சொல்லுங்க பாட்டி யா அது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *