தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 8,786 
 

இருபது வீடுகள் கொண்ட எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தள முதல் வீட்டில் குடியிருப்பவர் வாசன்.

நல்ல வேலையிலிருந்தபோது, இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த இளம் மனைவி துர்காவை, மார்பகப் புற்றுநோய்க்குத் தாரை வார்த்து, தாயில்லா பச்சிளம் குழந்தை திவ்யாவுக்காகத் “தாயுமான’வர். வேலையை விட்டுவிட்டு, முழுநேரத் தாயும் தந்தையுமானார்.

பழியாருடைய உதவியும் இல்லாமல், திவ்யாவை இருபத்தி நாலுமணி நேர கவனிப்பில், சமைப்பதிலிருந்து, பாத்திரம் கழுவித் துணி துவைப்பது, பள்ளி, மாலை நேர ட்யூஷனுக்கு அழைத்துச் செல்வது வரை, எல்லாம் செய்து, கவனித்து வளர்த்தார். வெறியோடு அவளை உருவாக்கி, மாநிலத்திலேயே ப்ளஸ் டூ தேர்வில் இரண்டாவது ரேங்க் வாங்கச் செய்து, முதல்வர் கையால் பரிசுகள் பெற்று, கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து “ஸ்காலர்ஷிப்’ வாங்குகிற நிலை வரை உயர்த்திவிட்டார்.

தன் பெண்ணின் வாழ்க்கைக்காக, இளம் வயதிலேயே மனைவியை இழந்தும்கூட, வேறு துணை தேடாது, தன் மகளை இமாலய சாதனைக்கு ஊக்குவித்த வாசன், ஏனோ மற்றவர்களிடம் பழகும் விதம் எதிர்மாறானது.

யார் வீட்டையும் அவர் மிதிக்கமாட்டார். யாரையும் தன் வீட்டுக்குள் அனுமதிக்கமாட்டார். குடியிருப்பு சங்க விஷயமாய், செயலாளர் போன்ற யாராவது அவர் வீட்டிற்குள் சென்றால், “நறுக்’ கென்று ஏடாகூடமாய்ப் பேசி, வெளியேறச் செய்துவிடுவார்.

குடியிருப்பிலுள்ள யார் வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும் பங்குகொள்ள மாட்டார். யாருமே அவர் அருகில் நெருங்காமல், அவரை விட்டுவிலகியே நின்றார்கள். தான் மட்டுமல்ல, தன் மகள் திவ்யாவையும் யாரிடமும் நெருங்கவிடாமல், அதிலும் குடியிருப்பில் வசிக்கும் அவள் வயதொத்த பெண்களிடம் பழகவே விடாமல் செய்திருந்தார்.

சின்னஞ்சிறு குழந்தைகளுக்குக்கூட அவரென்றால் சிம்ம சொப்பனம். விளையாடும்போது, ஜன்னல் வழியே பந்து அவர் வீட்டில் விழுந்துவிட்டால் அவ்வளவுதான். கடுமையான வார்த்தைகளால் திட்டுவார். பாவம், குழந்தைகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.

அவர் வீட்டு ஜன்னலுக்கு அருகில் தெரியாமல் யாராவது இருசக்கர வண்டிகளை நிறுத்திவிட்டால் போச்சு. டயரிலிருந்து காற்றைப் பிடுங்கிவிடுவார். யாராவது புதிதாய் வருபவர்கள் முதலில் கண்ணில்படும் வீடு என்பதால், முகவரி கேட்டு நுழைந்துவிட்டால் அவ்வளவுதான். முகம் தெரியாதவர்கள் என்றும் பாராது, வெறித்தனமாய்த் திட்டுவார். அவருடைய வசவுகளைத் தாங்காமல் அவர்கள் கண்ணீர் சிந்தும் எல்லைக்கே போய்விடுவர். தனக்கு மிகவும் பிடித்த சினிமா பாட்டுக்களைச் சி.டி.யில் போட்டு சத்தத்தைப் பெரிதாக்கி அற்பத்தனமாய் மகிழ்வார். பரிட்சைக்குப் படிக்கும் மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள் என யாரைப்பற்றியும் கவலைப்படமாட்டார்.

யாருக்கும் அவரைப் பிடிக்காதென்றாலும், அவர் மகள் திவ்யா, ப்ளஸ் டூவில் மாநில ரேங்க் வாங்கியுள்ளதை தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் பார்த்து, தயங்கித் தயங்கி, நாங்கள் நாலைந்து பேர் அவர் வீடு சென்று பாராட்டுகள் தெரிவித்தோம். அன்று மட்டும் சிடுசிடுக்காமல் ஒரு புன்னகையோடு எங்கள் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டார். இனிப்பும் கிடையாது, வாயால் “தேங்க்ஸý’ம் கிடையாது.

ஒருநாள் மாலை மங்கி, இரவு துவங்கிவிட்ட நேரம், வாசன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரரான ஓய்வு பெற்ற கணிதப் பேராசிரியர் கணேசன் வீட்டிலிருந்து உரத்தக் குரல்கள் கேட்டன.

பரபரப்போடு அந்த வீட்டுக்குப் போன போதுதான் விஷயம் தெரிந்தது. யாரோ ஒரு பெண், தண்ணீர் வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு பேராசிரியர் வீட்டில் நுழைந்து, தனியாக இருந்த வயதான அவர் மனைவியின் கழுத்திலிருந்த மூணு சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டாள். பேராசிரியர் மனைவியின் குரலைக் கேட்டு ஓடி வந்த வாசன், திருடியின் பின்னால் துரத்திக்கொண்டு ஓடியிருக்கிறார். பிடிக்க முடியவில்லை, தப்பித்துவிட்டாள். சிறிது நேரத்தில் மோப்ப நாயோடு போலீஸ் பட்டாளம் வந்தது. உதவி கமிஷனரே நேரில் விசாரிக்க வந்திருந்தார்.

“”திருட்டுப் பெண்ணின் அங்க அடையாளங்களைச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார் உதவி கமிஷனர்.

“”எனக்குப் பார்வை சரியில்ல… சரியாப் பார்க்க முடியலை… ஆனால் நான் அடிக்கடி பார்க்கற பெண்கள் யாருடைய சாயலும் இல்லை”- பேராசிரியர் மனைவி சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டார் வாசன்.

“”சார், நான் சொல்ல முடியும்”

“”நீங்க யார் சார்?”

“”நான் முதல் வீட்டில குடியிருக்கேன். என் பெயர் வாசன். இவங்க குரல் கொடுத்ததும், அந்தப் பெண்ணை தொரத்துனது நான்தான். சார், என் பெரியப்பா மகன்தான் உதயராஜ் ஐ.பி.எஸ்., தஞ்சாவூர்ல கூடுதல் கமிஷனராய் இருக்காரே…” அவ்வளவுதான் சுறுசுறுப்பானார் உதவி கமிஷனர்.

“”அடடே, அவர் என் குரு சார். சொல்லுங்க…குற்றவாளி எப்படி இருந்தாள்னு உங்களால சொல்ல முடியுமா?”

“”ஆமாம் சார். பார்க்கறதுக்கு, எங்க குடியிருப்புக்குத் தினமும் பூ கொடுக்க வரும் மேகலை மாதிரி இருந்தா…மேகலையோன்னு…”-வாசன்.

கூடியிருந்த எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியாய் இருந்தது.

மேகலையா…?

எங்கள் எல்லோருக்குமே பல ஆண்டுகளாய் பரிச்சயமானவள் மேகலை.

காலரா பரவிய ஒரு மழைக்காலத்தில் கணவனைப் பறிகொடுத்து, சீக்காளியான ஒரே மகளைக் காப்பாற்ற போராடி வாழ்பவள் மேகலை.

கேட்ட விலைக்கு, கொசுறாக கொஞ்சம் பூவைச் சேர்த்து முழம் போடுவாள். வாடிக்கையாளர் கொடுத்ததை வாங்கிக் கொள்வாள். எப்போதாவது, என்னைப் போன்ற ஒரு சிலரிடம் பணமுடையின்போது, “அட்வான்ஸ்’ கேட்பாள். அதுவும் கூனிக்குறுகிக்கொண்டுதான்.

வாசன், தன் மனைவியை இழந்து, சிரமப்பட்டு மகளை வளர்ப்பதை தெரிந்த மேகலை, அவர் மீது தனிப்பற்று வைத்திருந்தாள். தினமும் அவர் வீட்டில் வந்து, காசு பெறாமல் அரை முழம் மல்லிப்பூ தந்து, அவர் மனைவியின் புகைப்படத்துக்குப் போடச்சொல்வாள். இந்த இலவச கைங்கர்யத்தை ஒருநாளும் தவறவிடமாட்டாள். வீடு பூட்டியிருந்தால்கூட, கதவில் பூவை சொருகிவிட்டுப் போவாள். எதையும் எதிர் பார்க்க மாட்டாளென்றாலும், பண்டிகை நாட்களில் குடியிருப்பின் வீடுகளில் எல்லோரும் “ஸ்பெஷல் அயிட்டங்களை’ அவளுக்குத் தந்து திக்குமுக்காட வைப்பார்கள்.

மேகலையா…?

திருடினாளா…?

ஓடினாளா…?

-யாரும் நம்பவேயில்லை.

கூடுதல் கமிஷனர் உறவுக்காரர் வாசன் சொல்லிவிட்டாரே…போலீஸ் களத்தில் இறங்கியது. நாய்கள் மோப்பமிட்டன… கைரேகைகள் பதிவாகின.

மறுநாள். பூ விற்க மேகலை வரவில்லை. என்னை கவலை தொற்றிக்கொண்டது. மேகலைக்கு என்ன ஆயிற்றோ? என்று மனைவியிடம் புலம்பினேன்.

இரண்டு நாட்களாயிற்று, இரவு எட்டு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, மெயின் ரோடில் எதிர் பக்கம் யாரோ விந்தி விந்தி நடந்து வருவது தெருவிளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது. அதிர்ந்து போனேன்.

நான் நினைத்தபடியே விபரீதம் நடந்துவிட்டிருந்தது. மேகலையைச் தேடிச்சென்ற போலீஸôர் “விசாரித்தி’ருக்கிறார்கள். மிரட்டி, ரெண்டு தட்டுதட்டி…அவர்களுக்குப் புரிந்துவிட்டது. அவள் “அப்பாவி’ என்று. இருந்தும், அவளைத் தட்டியதில் காலில் வலி. மேகலைக் கண்ணீர் தளும்ப, “”பூ வாங்கக்கூட காசில்லைய்யா. ரெண்டு நாளா பூ விக்க முடியாம, வூட்டுல சோறு கூட ஆக்கலை. புள்ளையும் பட்டினி கிடக்கு” என்றதும் எனக்கு மனதைப் பிசைந்தது.

பாக்கெட்டிலிருந்து இருநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து மேகலையின் கையில் திணித்தேன். “”இது கடனுக்கு கொடுக்கிறதில்லை. நீ திருப்பித் தர வேண்டாம். போய் சமைச்சு சாப்பிடு, பிள்ளைக்கும் போடு…” என்றேன்.

இரண்டு நாட்கள் கழித்து, இரவில் பேராசிரியர் வீட்டுக்குப் போலீஸ் படை வந்தது. கூடவே ஒரு பெண்ணையும் அழைத்து வந்தது. ஆந்திரா திருட்டு கும்பலைச் சேர்ந்த அந்தப் பெண்தான் நகையைத் திருடினாள் என்றும், சென்னையின் பல ஏரியாக்களில் கை வைத்தாள் என்றும், அவளிடம் “விசாரித்து’விட்டு, கேஸ் முடிந்த பிறகு நகை கிடைக்குமென்றும் கூறினார் இன்ஸ்பெக்டர்.

போலீஸ் போனதும் அதுவரை அங்கு நின்றுகொண்டிருந்த வாசனைத் தேடினேன். ஆள் “அம்பேல்’ ஆகிவிட்டார்.

பரபரப்பு அடங்கிவிட்ட மறுநாள் இரவு, நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். கால்களை நொண்டியவாறே பூக்கூடையுடன் நுழைந்தாள் மேகலை. வாசன் வீட்டுக் கதவருகே சென்று நின்றவள், காலிங் பெல்லை அழுத்தினாள்.

ஏதோ நடக்கப் போகிறது, நறுக்கென்று நாக்கைப் பிடுங்கறார் போல மேகலை வாசனை கேட்கப் போகிறாள்- எதிர்பார்த்து காத்திருந்தேன்.

கதவைத் திறந்து வந்த வாசனின் முகம் மேகலையைப் பார்த்து அதிர்ச்சியுற்று வெளிறிப் போனது, ட்யூப்லைட் ஒளியில் நன்றாகத் தெரிந்தது.

“”ரொம்ப கஷ்டமாய் இருந்திச்சிங்கய்யா. உங்க ஊட்டு மகராசிக்கு வைக்க அஞ்சு நாளா பூவே கொடுக்கலைங்களா…இந்தாங்க வச்சிடுங்க” வட்ட வடிவ டீப்பாயில், அரை முழ மல்லிகைப்பூவை வைத்துவிட்டு எந்தப் பதிலையும் எதிர்பார்க்காமல் அடுத்த வீட்டுக்குக் கிளம்பினாள் மேகலை.

– சுதேவன் (டிசம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *