பரிதவிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 4,534 
 

ரிப்போர்ட் வந்தவுடன் அதிர்ந்து போனாள் சுருதி.

அதுவும் இரண்டு கிட்னியும் வேலை செய்யவில்லை என்று தெரிந்தவுடன் தன்னை அறியாமலேயே கண்ணீர் வடிந்தது சுருதிக்கு..

ரிப்போர்ட்டை கையில் வாங்கிக்கொண்டு ரிசப்ஷனில் அமர்ந்து விட்டாள். எப்படி இதை அம்மாவிடம் தெரிவிப்பது. அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள்.

அப்பா இல்லாத  தன்னையும் தன் தம்பியையும் அம்மா வளர்த்த விதமே தனி அழகுதான். கண்ணின் மணி போல எங்களைக் காத்தது….

சிறிது நேரம் யோசித்துவிட்டு, சரி நேரடியாக இதைப்பற்றி குருவிடம் பேசி விடலாம். அவனிடம் கலந்தாலோசித்து விட்டு இதைப் பற்றி அம்மாவிடம் பேசலாம் என்று குருவிற்கு போன் பண்ணினாள்.

பத்து நிமிடத்தில் குருவும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். அவள் கையில் ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு என்னாச்சு சுருதி என்று பதட்டத்துடன் கேட்டான்.

இரண்டு நிமிடம் உறைந்துபோய் மௌனத்தில் இருந்த சுருதியை உலுக்கினான் குரு.

கண்ணில் தாரை தாரையாக நீர் வடிய ரிப்போர்ட்டை அவனிடத்தில் தந்தாள் சுருதி . அவன் அதைப் பிரித்து பார்த்து விட்டு ஒன்றும் பேசாமல் அவள் கையை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டான்.

சுருதி இப்பதான் ரிப்போர்ட்டை வாங்கி இருப்பாய் என்று நினைக்கிறேன். வா.. இப்பொழுதே டாக்டரிடம் காட்டி விடலாம் என்று அவளை எழுப்பினான்.

கையைப் பிடித்துக்கொண்டு அவன் பின்னால் போனாள் சுருதி. டாக்டரைப் பார்க்க ஒரு மணி நேரம் காத்துக் கிடந்தார்கள். குரு அவளிடம் எதுவுமே பேசவில்லை. தன் கைக்குள் அவள் கையை வைத்து  ஆறுதலாகத் தடவிக் கொண்டிருந்தான். அந்த ஒரு மணி நேரம் ஒரு யுகமாகக் கடந்தது.

டாக்டர் ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு சுருதியிடம் , கவலைப்படாதமா.. இன்றைக்கு மருத்துவம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. நம்மால் ஆன முயற்சியைச் செய்து பார்க்கலாம். நிச்சயமாக  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கான முயற்சியை மேற்கொள்வோம்.

அதன் பின் நடந்ததெல்லாம் சுருதிக்கு ஒரு கனவு போல இருந்தது. பணம் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை . அவளுடைய தந்தை வைத்துவிட்டுப் போன வீட்டை விற்று அம்மாவைக் காப்பாற்றிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாள். பொறியியல் படிக்கும் தம்பிக்கு எந்த தொந்தரவும் தர அவள் விரும்பவில்லை. அவனிடம் ஆலோசிக்க கூட அவள் மனது இடம் தரவில்லை .சுமையைத் தன் தோளில் சுமக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.

சிறுநீரகம் கிடைப்பது என்ன அவ்வளவு எளிதா… திணறிப் போய் விட்டாள் சுருதி. தானே சிறுநீரகம் கொடுக்க முன் வந்தாள். தேவையான எல்லா டெஸ்டும் எடுத்து விட்டாள் .முடிவும் வந்துவிட்டது. அம்மாவுடைய உடம்புக்குத் தன் சிறுநீரகம் பொருந்தும் என்பதைத் தெரிந்துகொண்டாள்.

மனதுக்குள் பெரும் நிம்மதி.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் கண்ணீர் விட்டுக் கதறி அழுதாள் .எனக்கு சுமையைக் கொடுத்துவிட்டு ,அதை இறக்குவதற்கு வழியும் காட்டி விட்டாய் . அப்பா விநாயகா! உனக்கு நான் எப்படி நன்றி சொல்வேன் என்று சொல்லி தேம்பினாள்.

இந்த நல்ல செய்தியை குருவிடம் சொல்ல ஆசைப்பட்டாள். உடனே அவனுக்குப் போன் செய்தாள். குரு நான் உங்களைப் பார்க்க வந்துகிட்டு இருக்கேன். நீங்க ஆபீஸ்ல தானே இருக்கீங்க. நான் ஒரு இருபது நிமிடத்துல அங்க இருப்பேன் என்று அவன் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்து விட்டாள்.

குரு ஆபீஸ்க்கு வெளியில் காத்து நின்றான். வா காபி சாப்பிட்டுக்கொண்டே பேசலாம் அப்படின்னு சொல்லிட்டு பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

குரு ஆர்டர் பண்ற வரைக்கும் பொறுமையாக இருந்தாள். குரு மிக மகிழ்ச்சியான செய்தியை உங்ககிட்ட சொல்ல ஓடோடி வந்து இருக்கேன்.

என் கிட்னி அம்மாவுக்குப் பொருந்தும் என்று   ரிப்போர்ட் சொல்லுது. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். நான் கிட்னி கொடுக்க சம்மதம் சொல்லப் போறேன்..

ஒரு பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.

என்ன குரு… நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ பதில் ஒன்னும் சொல்லலையே.

சுருதி அம்மா எப்படி இருக்காங்க. அவங்க உடம்பு கிட்னி மாற்றத்தைத் தாங்குமா? இதுபற்றி டாக்டர் கிட்ட பேசிட்டியா? என்றான் குரு.

முகம் சிவக்க கோபத்துடன் அவனைப் பார்த்தாள் சுருதி. என்ன பேசுற குரு . அம்மாவோட உடம்பு நல்லா இருக்கிறதனாலதான் டாக்டர் ஆபரேஷனுக்கு ஆலோசனை சொல்றாரு. இப்ப போய் நீ இத பேசுறியே.

சுருதி நான் உன்னிடம் நேரடியாக பேசிடலாம் என்று நினைக்கிறேன்.

நம்ம கல்யாணம் நிச்சயம் ஆகி இரண்டு மாதம் ஆகிறது. அதுக்குள்ள அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது.

நீ கிட்னி கொடுத்தேன்னா நம்ம திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். நாளைக்கு நீ ஒரு குழந்தை பெத்துக்கணும் . வளர்க்கணும். இதை எப்படி எங்க வீட்டுல ஒத்துக்குவாங்க. ஏன் நானே ஒத்துக்க மாட்டேன்.

அம்மா வாழ்ந்து முடித்தவஙக. நம்ம இப்பதான் வாழ்க்கையைத் தொடங்க போகிறோம் . நல்லா யோசிச்சு பாரு. உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

குரு மன்னிச்சுக்கோங்க. நான் தவறான இடத்துக்கு வந்துட்டேன். நீங்க என்  ஆயுளுக்கும் துணை வருவீங்கன்னு நினைச்சேன். பரவாயில்லை . சரியான நேரத்தில் உங்களைப் புரிந்து கொள்ள  கடவுள் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்காரு.

குரு! நான் உங்களுக்கும் சொல்றேன். உங்க வீட்டுப் பெரியவர்களுக்கும் சொல்றேன் . என் கருத்தை மாத்திக்க முடியாது. எங்க அம்மாவுக்கு கிட்னி கொடுப்பதுதான் எனக்குப் பெருசு.  என் திருமணத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. உலகம் சிறியது. என்றாவது சந்தித்துக் கொள்வோம்.

துக்கம் தொண்டையை அடைக்க வேகமாக எழுந்து திரும்பிப் பார்க்காமல் நடந்தாள் சுருதி.

அம்மாவுக்கு ஆபரேஷன் முடிஞ்சு நாலு மாசம் ஆயிற்று. நானோ ரெண்டு மாசம் லீவு அப்புறம் ஆபீஸ் போக ஆரம்பிச்சாச்சு. மருந்து மாத்திரை எல்லாம் ரொட்டினா அம்மாவுக்குக் கொடுத்துட்டு ஆபீஸ்க்கு ரெண்டு நாளா போய் வருகிறாள் சுருதி. டச்சு அம்மா பூரணமாகக் குணமடையல்ல. வீக்கா இருக்கா. அம்மாவைப் பார்த்துக் கொள்ள வீட்டோட ஒரு நர்ஸ் போட்டாச்சு.

ஆபீஸ்ல லஞ்ச் ஹவர். சாப்பிட பிடிக்கல. மருந்து போடனுமே என்று

நினைத்துக்கொண்டு கேன்டீனுக்கு கிளம்பினாள். கேண்டீன்ல லைட்டா ஆர்டர் கொடுத்துவிட்டு சோம்பல் முறித்தபோது குரு வந்து கொண்டிருந்தான். இவளைப் பார்த்துக் கை ஆட்டிக்கொண்டே வந்தான்.
சுருதி எப்படி இருக்க. அம்மா எப்படி இருக்காங்க. வந்து பார்க்கணும் தான் நினைச்சேன். ரெண்டு மாசமா ஊர்ல இல்ல.

சுருதி பதில் பேசவில்லை.

என்ன உனக்கு கோபம் போகலையா சுருதி எனக்கு உன் மீது கோபமில்லை அந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் நான் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன். நீ சொல்வதும் சரிதான். உன் அம்மாவுக்கு கிட்னி நீ கொடுக்காமல் யார் கொடுக்க இயலும். நான் புரிஞ்சுகிட்டேன் .நான் உன்னை திருமணம் செய்து கொள்ள இப்பவே தயார். வீட்லயும் போராடி பெர்மிஷன் வாங்கி விட்டேன் .   அதை சொல்லத்தான் ஓடோடி வந்தேன். மகிழ்ச்சி தானே.

குரு தயவுசெய்து நீங்க இங்கு இருந்து போகலாம். எனக்கு இப்ப கல்யாணம் செய்து கொள்கின்ற மூடு இல்ல..அதுவும் உங்கள கல்யாணம் செய்து கொண்டு வாழ்வதற்கு எனக்கு இஷ்டமில்லை.கல்யாணம் இல்லாத வாழ்க்கையே சுகமா இருக்கும்னு நினைக்கிறேன்.

சுருதி இருகைகளையும் கூப்பி தலையசைத்தாள். தயவுசெய்து நீங்க போகலாம்.

முத்து இங்க வாங்க என்று அலுவலக உதவியாளரை அழைத்தாள். எனக்கு ஒரு உதவி செய்வியா? என்று கேட்டுக்கொண்டே  காபிக்கு ரூபாய் கொடுத்து அனுப்பினாள். நீங்க காபி சாப்பிட்டு எனக்கு ஒரு காபி வாங்கிக் கொண்டு வாங்க என்றாள்.

மனிதாபிமானத்தைத் தொலைத்த பின்பு உறவு எதற்கு? நட்பு எதற்கு?

நான் காதலுக்காக உயிரை விடும் யுவதி அல்ல. நான் சாதாரணமானவள். நான் அம்மா தம்பி என்ற வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதுவே சுகமாக இருக்கும் தயவு செய்து என் வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள் இன்னொரு முறை இது பற்றி நான் பேச விரும்பவில்லை . இருக்கையை விட்டு எழுந்து சென்று விட்டாள்.

குரு செய்வதறியாது விக்கித்து நின்றான். உடைந்த பானையை ஒட்டவைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தான். கண்ணில் நீர் வழிய அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

குறிப்பு: இக்கதை பெங்களூரிலே 15 நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தை அடிப்படையாக்க் கொண்டு எழுதப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *