கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 6,008 
 

‘சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு கூடப் பிறந்தவளைச் சந்திக்கப் போகிறோம் !’ என்கிற நினைப்பே துடிப்பாக இருந்தது சுகந்திக்கு.

தன்னிடமுள்ள மஞ்சள் துணிப்பை இறுக்கிப் பிடித்துக் கொண்டு பேருந்து ஏறினாள்.

ஊர் பேரைச் சொல்லி டிக்கட் எடுத்து அமர்ந்ததுமே அக்கா ஊரை அடைந்து விட்ட திருப்தி. இனம்புரியாத மகிழ்ச்சி. அப்படியே சன்னல் ஓர இருக்கையில் நன்றாக சாய்ந்து வெளியே வேடிக்கைப் பார்த்தாள். கட்டிடங்கள், மண், மரங்கள் என்று எல்லாமே பேருந்துவிற்குப் பின் ஓடி மறைந்தது. அப்படியே இவளுக்குள் அக்காளின் நினைவும் ஓடியது.

ஜானகி ஐந்து வயது மூத்தவளென்றாலும் தங்கை மீது அவளுக்கு அதிக பாசம். சிறுபிள்ளையாக இருக்கும் போது தூக்கி வைத்துக் கொஞ்சுவாள். வளர வளர தோழியானாள். அவளுக்கு ஒன்றென்றால் துடித்தாள். இவளும் அப்படித்தான். அம்மா – அப்பா கூட பெண் பிள்ளைகள் மீது பாசமாகத்தானிருந்தார்கள்.

கெடுத்தது காதல்.! படித்து வேலைக்குப் போய் ஏற்பட்டது. அலுவலக விசயமாக வெளியூர் செல்;கிறேன் என்று சொல்லிச் சென்றவளிடமிருந்து அடுத்த நாளே கடிதம் வந்தது.

‘அன்பு… அம்மா, அப்பா. இந்த கடிதம் உங்கள் கைக்குக் கிடைக்கும் முன்பே என் கழுத்தில் தாலி ஏறி இருக்கும்.

இது உங்கள் இருவருக்குமே எதிர்பாராத அதிர்ச்சி. அப்பாவை விட அம்மாவிற்கு அதிகம். காரணம், அம்மா தன் அண்ணன் மகன் சுரேசுக்கு என்னைக் கட்டி வைக்க ஆவல். அதனால்தான் அவருக்கென்றே என்னைச் சொல்லிச் சொல்லி வளர்த்தாள். அப்படிச் சொல்லச்; சொல்ல எனக்கு சுரேஷ் மீது ஆசையோ காதலோ வரவில்லை. மாறாக வெறுப்புதான் வந்தது. வளர வளர அந்த வெறுப்பு தீவிரமாகி…’பெற்றவர்கள் கைகாட்டிய பிள்ளையைத்தான் பெண் முடிக்க வேண்டுமா, தனக்கென்று மனம் கிடையாதா. பெற்றதாலும் வளர்த்ததாலும் பெற்றவர்கள் விருப்பு வெறுப்பிற்கு ஆளாகுவது எப்படி சரி. தவறு!’ என்று எண்ணம் தீவிரமாகி விட்டது. விளைவு?…. எனக்குப் பிடித்தவரைத் தேடி தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

அம்மா! என் காதல் திருமணம் உன் ஆசீர்வாதத்தால் அரங்கத்தில் நிறைவேறாது என்பது திண்ணம். அப்பா உன் கைப்பாவை. அவiரைச் சொல்லிக் குற்றமில்லை. அவர் அப்படியே வாழ்ந்தவர், வளர்ந்தவர். அப்படி இருக்கையில் உங்களோடு எதற்கு மல்லுக்கட்ட.? அதனால் கிளம்பி விட்டேன்.

அம்மா! திருமணம் எப்படி முடிந்தாலும் வாழ்க்கை அவரவர் கையில். நான் நன்றாக வாழ்வேன். எனக்கு வாய்த்தவர் மிகவும் நல்லவர். நீ மனம் மாறினால் சேர்வோம். மனித மனத்தின் ஆத்திரம், ஆவேசத்தை உத்தேசித்து எங்கள் முகவரி, கைபேசி எண்கள் தங்களுக்குத் தேவை இல்லை. கொடுக்கவில்லை. வணக்கம்.’ முடித்திருந்தாள்.

படித்து முடித்த அம்மா, அப்பா, சுகந்தி உள்பட உறைந்தார்கள்.

அம்மாவிற்கு….அண்ணன் அண்ணிக்கு என்ன சமாதானம் கூற….? என்று கூடுதல் இடி. அடுத்த நாளே அவர்கள் ஆவேசமாக நுழைந்தார்கள். அத்தைதான் கத்தினாள்.

”அந்த ஓடுகாலி எனக்கும் கடிதம் எழுதி இருக்காள். நான் காதலிச்சேன் கலியாணம் முடிச்சேன். என்னை மன்னிச்சிடுங்க. உங்க மனசுல என்னைப் பத்தி இருக்கும் மருமகள் ஆசையை விலக்கி உங்க பையனுக்கு நல்ல இடமாய் முடிங்க. எழுதி இருக்காள். இவள் எழுதினதால சின்ன வயசிலேர்ந்து இவதான் என் பொண்டாட்டின்னு மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டு வந்த என் பையன் மனசு மாறுமா ? அவ நல்லா இருப்பாளா? நாறிப்போவாள்.” ஆவேசப்பட்டாள்.

”சுரேஷ் நிலைமை கஷ்டம். அவன் மனசுல அப்படி ஒரு ஆசை வளர்ந்ததுக்கு நாமும் காரணம், குற்றவாளி. பெத்தவங்களாய் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்கிறது சரி.” என்று நியாயத்தைக் கூட இவர்களால் சொல்ல முடியவில்லை.

கத்தி கலாட்டா செய்து ஒரு வழியாய் அவர்கள் அடங்கி உறவே வேண்டாமென்று போனார்கள்.

இவர்களும் சுகந்திக்கு நல்ல இடமாகப் பார்த்து முடித்து…..முடிந்தார்கள்.

ஜானகி சென்றதிலிருந்து, ‘அக்கா எங்கு, எப்படி இருக்கிறாளோ!’ என்று உள்ளுக்குள் உறுத்தல் வருத்தமாய் இருந்த சுகந்திக்கு ஒரு நாள் தோழியிடமிருந்து திடீர் கைபேசி அழைப்பு.

உன் அக்காள் இன்ன இடத்தில் இப்படி இருக்கிறாள். அவளுக்குப் பத்து ஆறு வயதில் இரு ஆண் குழந்தைகள். விருப்பமிருந்தாள் பார். சொன்னாள்.

இதோ இவள் பயணம்.

மூன்று மணி நேர பயணத்திற்குப் பின் ஆட்டோ ஏறி…. விலாசத்தை அடைந்து அழைப்பு மணி அழுத்தினாள் சுகந்தி.

திறந்த சிவக்குமாருக்குத் தடுமாற்றம்.

”நீ…நீங்க……”

”ஜானகி கூடப்பிறந்த தங்கை சுகந்தி.!”

அவ்வளவுதான். ”ஜானகீ…….” அவன் இருந்த இடத்திலிருந்தே கூவினான்.

கணவன் குரல் கேட்டு வந்தவளுக்குத் தங்கையைப் பார்த்ததும் நிலைமை உண்மையா பொய்யா ? அதிர்ச்சி.

”சுகு….. ” ஓடிப்போய் கட்டிப் பிடித்து விம்மினாள். அடுத்த விநாடி இழந்த உறவை இருவருமே கண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தி தெளிந்தார்கள்.

அரை நாள் பேசோ பேசென்று பேசி குடும்ப விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

கடைசியாகத்தான், ”கையிலென்ன மஞ்சள் பை ?” ஜானகி கேட்டாள்.

”உனக்குச் சேர வேண்டிய பணம்.”

”புரியலை.?!”

”உன்னைப் பத்தினக் கலவரம் முடிஞ்சும் அம்மாவுக்கு ஆத்திரம் அடங்கலை. அப்பாவை இழுத்துப் போய் ‘அந்த ஓடுகால் நாய்க்கு ஒரு பைசா கூடாது!’ ன்னு ரெண்டு பேர் மொத்த சொத்தையும் என் பேர்ல எழுதி வைச்சாங்க. என்கிட்டேயும் ‘அக்காள் உறவு கூடாது. திரும்பி வந்தா பைசாகொடுக்கக் கூடாது!’ ன்னு கண்டிச்ச பிறகுதான் கொஞ்சம் மட்டுப்பட்டது. கண் ;மூடினாங்க.”

”அக்கா ! மனுசாள்குள்ளே உறவுதான் முக்கியம். ஆத்திரம் ஆவேசமெல்லாம் அற்பம். நாட்டுல எது நடக்கலை.?! மனுச வாழ்க்கையில நடந்ததுதான் திருப்பித் திருப்பி நடந்துக்கிட்டே இருக்கு. எதையும் சிறிசா எடுத்து தூசாய்த் தூக்கிப் போட்டு அடுத்த வேலையைப் பார்த்தால் நாட்டுல அநாவசிய கொலை, தற்கொலையெல்லாம் இருக்காது. என் புருசனுக்கும் என் மனசு. ஆயிரத்தான் இருந்தாலும் அடுத்தவங்க சொத்து நமக்கு வேணாம். பாதியைக் கொடுத்துடுன்னு சொன்னாரு. இந்தா பத்து லட்சத்துக்கான காசோலை. வீட்டையும் சொத்தையும் பாதியாய் எழுதனும். எப்போ அத்தானோட வர்றே ? ” பையிலிருந்து காசோலையை நீட்டி கேட்டாள்.

ஜானகி ஒரு நிமிடம் யோசித்து, ”என்னங்க …. !” அடுத்த அறையிலிருந்த கணவனை அழைத்தாள்.

”நமக்கு வேணாம். அது உன் தங்கச்சிக்கே நாம பரிசாய்க் கொடுத்ததாய் இருக்கட்டும்!” வந்துகொண்டே சொன்னான் சிவக்குமார்.

”ஆமாம். இதைத்தான் நான் சொல்ல அழைச்சேன். அவரே சொல்லிட்டார்.” சொன்னாள். ஜானகி.

”இல்லேக்கா. இது சரி இல்லே. எனக்குத் திருப்தியும் இல்லே. நானும் நல்லா இருக்கேன். இதை திருப்பி எடுத்துப் போனா அவர் திட்டுவார்.” சொன்னாள்.

‘என்ன மனம் !’ தம்பதிகள் மனதில் சுகந்தியும் அவள் கணவனும் உயர…ஜானகி கை நீட்டி காசோலையைப் பெற…..சுகந்தி முகத்தில் மலர்ச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *