கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 9,625 
 

தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த லோகாம்பாள், நேரமாகியிருக்குமோ என்ற கவலையில் எழுந்து அவசரமாக வெளியே வந்து வானத்தைப் பார்த்தாள். வெள்ளி முளைத்திருந்தது. “பேய் வந்து கண்ணெ அடச்சாப்ல தூங்கிப்புட்டனே” என்று சொன்னாள். வீட்டுக்குள் வந்து சிமினி விளக்கை ஏற்றினாள். பாயை விட்டு விலகித் தரையில் சுருண்டு கிடந்த குமாரை இழுத்துப் பாயில் போட்டாள். கால்களைப் பரப்பிக்கொண்டு பாவாடை விலகிக்கிடக்கத் தூங்கிக்கொண்டிருந்த ராணியைப் பார்த்தாள். “கழுத எப்பிடித் தூங்குது பாரு. துணி வெலகிறதுகூட தெரியாம” என்று சொல்லிவிட்டுப் பாவாடையை இழுத்துவிட்டுச் சரிசெய்தாள். போர்வையை எடுத்து நன்றாகப் போர்த்திவிட்டாள். விளக்கை எடுத்து வந்து குமாரினுடைய முகத்தையும் ராணியினுடைய முகத்தையும் ஆராய்வதுமாதிரி கூர்ந்து பார்த்தாள். முகத்தைத் தடவிக்கொடுத்தாள். தலையைக் கோதிவிட்டாள், கைகால்களைப் பிடித்துவிட்டாள்.

“சனியன் புடிச்ச பனி எதுக்குத்தான் இப்பிடி மழ பெய்யுறமாரி கொட்டுதோ” என்று சொன்ன லோகாம்பாள் பெருமாள் வீட்டுக்குப் பின்புறத்திற்குப் போய், மாடுகள் கட்டியிருந்த இடத்தில் கிடந்த சாணியை கைநிறைய அள்ளிக்கொண்டு வந்தாள். சாணியைக் கரைத்து வாசல் தெளித்தாள். வாசலைக் கூட்டினாள். கோலமாவு டப்பியை எடுத்து அவசரக் கோலம் ஒன்றைப் போட்டாள். பிறகு கரிக்கொட்டையை எடுத்துவந்து பல்விளக்க ஆரம்பித்தாள். “ஐஸ் கட்டிமாரி இருக்கே” என்று சொல்லிக்கொண்டு வாய்கொப்புளித்து முகம் கழுவினாள். பச்சைத்தண்ணீர் முகத்தில் பட்டதும்தான் தெரிந்தது குளிரின் கடுமை.

அம்மாசி வீட்டுக் கோழி கூவியது. லோகாம்பாளுக்கு விடிவதற்குள் காட்டுக்குப்போய்விட முடியுமா என்ற கவலை வந்தது. அவசர அவசரமாக வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். “எழுந்திருப்பா” என்று இரண்டு மூன்று முறை சொல்லியும் கட்டாயப்படுத்தியும் எழுந்திருக்காததால் குமாரை தூக்கி உட்காரவைத்தாள். ராணியையும் எழுப்பினாள். குமாரும் ராணியும் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்தனர். லோகாம்பாள் கத்துவது, திட்டுவது எதுவும் அவர்களுடைய காதில் விழவில்லை. “தூங்காதீங்க” என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய கைக்காரியங்களையும் செய்துகொண்டிருந்தாள். நேற்றிரவு படுக்கும்போது தண்ணீர் ஊற்றி வைத்திருந்த சோற்றை தூக்குப் போகணியில் ஊற்றினாள். பழந்துணி ஒன்றை எடுத்து அதில் ஒரு கைப்பிடி அளவு உப்பை அள்ளி வைத்து அதோடு ஏழுஎட்டு பட்ட மிளகாயையும் எடுத்து வைத்து முடிந்து தூக்குப் போகணியின் கைப்பிடியில் கட்டிவிட்டாள். பிறகு உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்த குமாரையும், ராணியையும் இழுத்து வந்து முகம் கழுவிவிட்டாள். குளிர்ந்த தண்ணீர் முகத்தில் பட்டதும் குமார் அழுதான். “எதுக்குடா அயிவுற? குளிருலயும் மழயிலயும், வெயிலுலயும் அடிப்பட்டாத்தான் ஒடம்பு தெடமா இருக்கும். மழ, வெயிலுக்கு ஒதுங்கி நிக்குறமாரியா ஒங்கப்பன் வச்சிட்டுப்போனான்? சோத்துப்பான ஒடஞ்சா மாத்துப்பான இல்லியே” என்று சொன்ன லோகாம்பாள் இருவருக்கும் முகத்தைத் துடைத்துவிட்டு ஆளுக்கொரு போர்வையைக் கொடுத்து போர்த்திக்கொள்ளச் சொன்னாள். தூக்குப்போகணியை கையிலெடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் “ஊட்டெ சாத்திப்புட்டு வெளிய வாங்க” என்று சொன்னாள். வீட்டுக்குப் பின்புறம் கட்டியிருந்த ஆட்டுக்குட்டியை அவிழ்த்து இழுத்துக்கொண்டு வந்தாள். சிணுங்கி அழுதுகொண்டே கதவைச் சாத்தினாள் ராணி. “வௌக்க நிறுத்தாம கதவ சாத்திறியே தடிக்கழுத” என்று சொல்லி ராணியை திட்டினாள். “இதெ புடிப்பா” என்று ஆட்டுக்குட்டியின் கழுத்துக் கயிறை குமாரிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் போய் விளக்கை அணைத்துவிட்டு வந்து கதவைச்சாத்தினாள். அப்போது அம்மாசி வீட்டுக்கோழி இரண்டாவது முறையாகக் கூவியது.

“வேகமா நடெங்க, விடியுறதுக்குள்ளார காட்டுக்குப் போவணும், பனி நப்புலியே வேலய முடிச்சாத்தான் உண்டு” என்று சொன்ன லோகாம்பாள் முதலில் நடக்க ஆரம்பித்தாள். அவளையடுத்து நடந்துகொண்டிருந்த குமாரும் ராணியும் லேசாக அழுதுகொண்டிருந்தனர். அவர்களுடைய அழுகையை லோகாம்பாள் பொருட்படுத்தவில்லை. அவளுடைய எண்ணமெல்லாம் விடிவதற்குள் காட்டுக்குப் போய்விட வேண்டும் என்பதில் தான் இருந்தது. அரைகாணி கொத்தமல்லியை நன்றாக வெயில் ஏறுவதற்குள் பிடுங்கிவிட முடியுமா என்று சந்தேகப்பட்டாள். முடியாது என்று தெரிந்ததும் வேகமாக நடக்க முயன்றாள். பனி ஈரத்தில் நனைந்திருக்கும் போது பிடுங்கினால்தான் கொத்தமல்லி உதிராமல் இருக்கும். வெயிலேறிய பிறகு பிடுங்கும்போதும், கீழே போடும்போதும் கொத்தமல்லி அதிகமாக உதிர்வதற்கு வாய்ப்புண்டு. அதனால் ஊருக்குள் யார் கொத்தமல்லி பிடுங்கினாலும் வெயில் ஏறுவதற்குள்ளாகவே பிடுங்கிவிடுவார்கள். பிடுங்குவது மட்டுமல்ல, அடிப்பதும்கூட இருட்டும்போது செங்குத்தாக அள்ளிவைத்து, நன்றாக பனியில் நனையவைத்து விடியற்காலையில்தான் பிணையைவிட்டு அடிப்பார்கள்.

தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. இருட்டிலும் பனியிலும் வீடுகள்கூட மங்கலாகத்தான் தெரிந்தது. அருகருகே நடந்தாலும் ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை. நிலவு இருந்தது. ஆனால் வெளிச்சமில்லை. முதல் தெருவைத்தாண்டி அடுத்த தெருவில் நடக்கும்போது தண்ணீர் எடுக்கக் கிணற்றுக்கு ஒரு பெண் கரும் பூதம்போல போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. தெருவின் முனை வீட்டில் வெளிச்சம் இருப்பது மாதிரி தெரிந்தது. “வேகமா நடெங்க. இங்கியே நேரத்த போக்கிட்டுப் போவ முடியாது. சாலாக்கு நடெ நடந்தா காட்டுல கெடக்குற வேல எப்பிடி ஆவும்?” என்று லோகாம்பாள் சொன்னதை ராணி காதில் போட்டுக் கொள்ளவில்லை. கண்களைத்தவிர உடலின் பிறபகுதிகளை வெளியே தெரியாமல் போர்த்திக்கொள்ள முயன்றுகொண்டிருந்தாள். குளிரில் வெடவெடவென்று நடுங்கிக் கொண்டு ஆட்டுக்குட்டியின் இழுப்பிற்கேற்றவாறு நடப்பதற்கு குமார் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தான்.

ஊரைத்தாண்டி காட்டுக்குப்போகும் வண்டிப்பாதையில் நடக்க ஆரம்பித்தபோதுதான் கடுமையான இருட்டு தெரிந்தது. எங்குப் பார்த்தாலும் ஒரே இருட்டாக இருந்தது. ராணியையும், குமாரையும் மட்டுமல்ல லோகாம்பாளையும் இருள் பயமுறுத்தியது. இருட்டில் பேய்பிடித்துக்கொள்ளுமோ என்ற பயத்தில் ராணிக்கும், குமாருக்கும் முன்பைவிட இப்போது கைகால்கள் அதிகமாக நடுங்க ஆரம்பித்தன. பயமாக இருக்கிறது என்று சொல்லக்கூட அவர்கள் பயந்தனர். சத்தம் கேட்டு பேய் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம். அவர்களுடைய பயத்தை அறிந்த லோகாம்பாள் “இதென்ன பெரிய இருட்டு? இந்தத் தடத்திலெ இன்னிக்கா நடக்குறோம்? தடம் தெரியாமப்போறதுக்கு? நடக்க நடக்க எல்லாம் சரியாப்போயிடும்” என்று சொன்னாள். என்ன காரணத்தாலோ பின்னால் யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள். முன்னாலும் பார்த்தாள். சனங்களின் வாடையே இருப்பது மாதிரி தெரியவில்லை. “கால பாத்து வச்சி வாங்க. பூச்சிப்பொட்டு கெடக்கும். கீய பாத்து நடக்கணும்” என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்தாள். பிறகு தனக்குத்தானே சொல்லிக் கொள்ளுவது மாதிரி “எட்டு, ஒம்போது வயசி புள்ளவோ பாவத்தக்கூட அந்தக் கடவுளு பாக்கலியே. அவன் நாசமாத்தான் போவான்” என்று சொன்னாள். வானத்தைப் பார்த்தாள். நிலவு பாடி சாய்ந்துவிட்டது.

ஓடையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீரில் கால்களை வைக்க முடியாது. குளிரும் என்று சொல்லி அழுத ராணியை லோகாம்பாள் தூக்கிக்கொண்டு நடந்தாள். குமாருக்கு, பனிக்கட்டியில் கால்களை வைத்து நடப்பதுமாதிரி இருந்தது. தண்ணீரை தாண்டிவிட்டாலும், தண்ணீரில் கால்களை வைத்தபிறகுதான் குளிர் அதிகமாக தெரிந்தது. கால்கள் நடுங்க ஆரம்பித்தது. ஆட்டுக்குட்டியைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடப்பதால் அவனால் சரியாகப் போர்த்திக்கொள்ளக்கூட முடியவில்லை. குளிரைவிட, இருட்டைவிட, பனியைவிட பெரிய தொந்தரவாக இருந்தது, ஆட்டுக்குட்டியும் பேய்ப்பிடித்துக்கொள்ளுமோ என்ற பயமும்தான். ஓடைப்பக்கம்தான் பேய்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்று பிள்ளைகள் சொன்னது நினைவுக்கு வந்ததும் அவனுக்கு நடக்கவே முடியவில்லை. குலை நடுங்கிற்று, அக்கம் பக்கத்தில் பார்க்கக்கூட அவனால் முடியவில்லை.

ஓடையைத்தாண்டி வாரிபோன்றிருந்த பாதையில் நடக்க ஆரம்பித்தனர். வாரியின் இரண்டு பக்கமும் ஆள் உயரத்திற்கு மேடாக இருந்தது. மேட்டில் இரண்டு பக்கமும் அடர்ந்த புதராக இருந்தது. புதருக்குள் பாம்பு இருக்குமோ, நடக்கிற பாதையில் பாம்பு படுத்திருக்குமோ என்ற பயத்தில் குமாருக்கும் ராணிக்கும் நடக்கவே கால்கள் கூசின. எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்ச உணர்வோடுதான் நடந்தனர். பயத்தை மறைக்க முயன்றனர். மறைப்பதற்கான வழிதான் தெரியவில்லை. அக்கம்பக்கத்தைப் பார்க்கவும் சுற்றுப்புறத்தைப் பார்க்கவும் முடியவில்லை. எங்கு பார்த்தாலும் இருட்டாக இருந்தது. இருளைத்தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. ராணி, குமார், லோகாம்பாள் மூவருமே இருட்டில் நகரும் கருத்த நிழல்களாகத்தான் தெரிந்தனர். லோகாம்பாள் மட்டும் எதற்கும் அஞ்சாதவள்மாதிரி பேயைப் போல வேகமாக நடந்து கொண்டிருந்தாள். அவளை இருள் அச்சமூட்டியதுமாதிரி தெரியவில்லை. பட்டப்பகலில் நடப்பதுமாதிரி கால் கூசாமல் நடந்து கொண்டிருந்தாள். ஆனால் அடிக்கடி பெருமூச்சுவிட்டாள். அதேமாதிரி அடிக்கடி தனக்குத்தானே முனகிக்கொண்டுமிருந்தாள்.

“ஐயோ அம்மா” என்று சொல்லி கத்திய ராணி சட்டென்று இடது காலைப் பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தாள். ஐயோ அம்மா என்று ராணி கத்தியதுதான் தாமதம். லோகாம்பாளுக்கு உயிரே நின்று விட்டது போலிருந்தது. என்ன நடந்ததோ என்று குலை பதறிப்போனவள் “என்னம்மா ஆச்சி?” என்று கேட்டுக்கொண்டே கீழே உட்கார்ந்தாள். “கல்லுகுத்திடுச்சி. ரத்தம் வருது பாரு” என்று சொல்லி ராணி அழுதாள். அப்போதுதான் லோகாம்பாளுக்கு போன உயிர் திரும்பி வந்தது மாதிரி இருந்தது? “இதுக்காடி உசுருப்போறாப்ல கத்துனவ? ஒரு நிமிசத்திலெ என்னோட கொலய வாங்கிப்புட்டியே, ராத்திரி நேரத்திலெ கத்தாத. காலக் காட்டு. எந்த எடத்திலடி?” என்று சொல்லி காலைப் பார்த்தாள்.

இருட்டில் காயம்பட்ட இடம் தெரியாததால் தடவிப் பார்த்தாள். கல் இடறி கட்டை விரலில் லேசாக சதைப் பிய்த்துக்கொண்டு வந்திருந்தது. “பாத்து வர்றதில்லெ. என்னாடி புள்ளெடி நீ? சரிசரி அயிவாத. ராத்திரியில அதுவும் இருட்டு வேளயிலெதான் உசுருப்போறப்ல கத்துவியா?” என்று சொல்லி திட்டி ரத்தம் வருகிற இடத்தில் குனிந்து பலமுறை ஊதிவிட்டாள். ரத்தம் வருவது நிற்காததால் நொய்மண்ணாக அள்ளி ரத்தம் வந்த இடத்தில் போட்டு சிறிது நேரம் பிடித்துக்கொண்டிருந்தாள். பிறகு “எயிந்திரு. கால தாங்கித்தாங்கி நடக்காம விசிறி நடெ” என்று சொல்லி ராணியைத் தூக்கி நிறுத்தி நடக்க வைத்தாள். அப்போது அவளுக்குக் கண்கள் கலங்கின. “ஒங்கப்பன் உசுரோட இருந்திருந்தா ஒங்களுக்கு ஏன் இந்தத் தலவிதி? ரொம்ப அவசரமின்னு அந்தாளு போயிச் சேந்துட்டான். செத்தவனப்பற்றிப் பேசி இனி என்னாத்துக்கு ஆவப்போவுது? ஒடஞ்ச சட்டி ஒலக்கி என்னிக்கி ஒதவியிருக்கு? கூலி ஆளுவச்சி புடுங்கலாம். நூரு ரூவா போவுமேன்னு ஒங்கள நேரம்காலம் இல்லாம இயித்து அடிக்கிறான். இது என்னோட சாவம்தான்” என்று சொன்னாள். வானத்தைப் பார்த்தாள். அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நட்சத்திரங்கள் இருந்தன. வானம் தெளிந்து கொண்டிருப்பது தெரிந்தது.

“ரொம்ப குளிருதும்மா” என்று சொன்ன ராணி தொடர்ந்து மூன்று நான்குமுறை தும்மினாள். பனி மூக்கை அடைப்பதுபோல இருக்கவே அடிக்கடி மூக்கை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். “மொதல்ல அப்பிடித்தான் தெரியும். நடக்க நடக்கக் குளிரு கொறஞ்சிப்போயிடும் பாரு. வேகமா நடந்தா குளிரு அவ்வளவா தெரியாது. மின்னெ இருந்த குளிரா இப்ப இருக்கு? கால தாங்கித்தாங்கி நடக்காத, தூக்கிவச்சி நட” என்று லோகாம்பாள் சொன்னாள். அப்போது மைனா ஒன்று ஒற்றையில் கத்திக்கொண்டு போயிற்று. ஊர்ப்பக்கமிருந்து நாய்குரைப்பது பக்கத்தில் குரைப்பதுமாதிரி கேட்டது. கிழக்குப் பக்கமிருந்து நரி ஒன்று ஊளையிடுவது கேட்டதும் குமார் “நரி எங்கிருந்தும்மா கத்துது?” என்று கேட்டான்.

“கீயக்காட்டுல இருந்துதான்.”

“அடப்புலயிருந்து எதுக்கு பூச்சிவோ இப்பிடி கத்துது?”

“விடியப்போவுதில்லெ. அதான் கத்துது.”

“விடியுறது அதுவுளுக்குத் தெரியுமா?”

“ஏன் தெரியாம?” என்று சொன்ன லோகாம்பாள் எந்தெந்த பூச்சிகள் எப்படியெப்படி கத்தும், பறக்கும், எந்தெந்த வண்டுகள், குருவிகள், பறவைகள் எப்படியெப்படியெல்லாம் கத்தும், பறக்கும். அதுவும் எந்தெந்த நேரத்தில் கத்தும், பறக்கும் என்பதையெல்லாம் சொல்ல ஆரம்பித்தாள். பனி, குளிர், உடல் நடுங்குவது, ஆட்டுக்குட்டி தாறுமாறாக இழுப்பது என்று எல்லாவற்றையும் மறந்துவிட்டு, பூச்சிகளைப்பற்றி, வண்டுகள், குருவிகள், பறவைகளைப் பற்றி, அவைகள் கத்தும், பறக்கும் விதத்தைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

“என்னம்மா சும்மாசும்மா மேல பாக்குற?” என்று குமார் கேட்டான். “விடியுறதுக்கு இன்னம் எம்மாம் நேரம் இருக்குன்னு பாத்தன்” என்று சொன்னாள். சிறிது நேரம் பேசாமல் இருந்தவள் தானாகவே வெள்ளி என்பது என்ன, அது முளைக்கும் போது நேரம் என்ன, வால் நட்சத்திரம் எது, அது எந்த இடத்தில் முளைக்கும், நிலவு எப்போது பாடி சாயும். நட்சத்திரங்கள் எந்தெந்த மாதங்களில் அதிகமாக தெரியும். நிலவு எப்போது அதிகமாக வெளிச்சத்துடன் இருக்கும் என்பதையெல்லாம் வரிசையாகச் சொல்ல ஆரம்பித்தாள். நட்சத்திரங்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்பதைவிட குமாரையும் ராணியையும் மலைப்பு தெரியாமல், பயத்தை அறியாமல் நடக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வந்தாள் லோகாம்பாள். அவளுடைய வாய் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தாலும் அவளுடைய கண்களும், மனமும் பாதையில் பூச்சி பொட்டு கிடக்கிறதா என்று பார்த்துக்கொண்டேயிருந்தது.

தலைப்பறத்தான் வாரி வந்ததும் லோகாம்பாள் பேசுவதை நிறுத்திவிட்டாள். காரணமின்றி அவளுடைய நெஞ்சு பதறிற்று. படபடப்பு உண்டாயிற்று. வேகமாக நடக்க முயன்றாள். அவள் நினைத்த அளவுக்கு அவளால் வேகமாக நடக்க முடியவில்லை. கருப்பன் சாவதற்கு முன்பு தலைப்பறத்தான் வாரி என்பது அவளுக்கு ஒரு அபசகுணமான இடமாக மட்டும் தான் இருந்தது. இப்போது அவளால் மறக்க முடியாத, வெறுக்கிற இடமாக மாறி இருந்தது. இப்போதுதான் என்றில்லை. அவளுக்குக் கல்யாணம் நிச்சயமான எட்டாவது நாளிலிருந்தே தலைப்பறத்தான் வாரி அச்சமூட்டுகிற இடமாக அவளுக்கு மாறிவிட்டது. அந்த இடத்தை கடக்கும்போதெல்லாம் அவளுக்கு குலைபதறிப்போகும், காரணமில்லாமல் பயமும் பதட்டமும் உண்டாகும். எதை எண்ணி ஒன்பது வருசமாக அச்சப்பட்டுக் கொண்டிருந்தாளோ அது இரண்டு மாதத்திற்கு முன்பு நடந்தேவிட்டது. அவளுடைய எண்ணமும் கவலையும்தான் நிஜமாகிவிட்டதோ என்னவோ. மனதிலிருக்கும் எண்ணம் பலிக்குமா?

லோகாம்பாளுக்கும் கருப்பனுக்கும் கல்யாணம் நிச்சயமாயிற்று. மாப்பிள்ளையும் பொண்ணும் ஒரே ஊர் என்பதால் இரண்டு வீட்டிலிருந்தும் ஒரே நாளில் கல்யாண ஜவுளி எடுக்கப்போனார்கள். திட்டக்குடியிலிருந்து வரும்போது பஸ்ஸைவிட்டு இறங்கி தலைப்பறத்தான் வாரி வழியாகத்தான் ஊருக்கு வரவேண்டும். தலைப்பறத்தான் வாரியில் ஏழு பேர் ஒன்றாக வந்து கொண்டிருக்கும்போது மேற்கு கரையிலிருந்த அடப்பிலிருந்து எட்டு பத்து அடி நீளமுள்ள கருநாகம் ஒன்று பாதையைக்கடந்து கிழக்கிலிருந்த அடைப்பிற்கு ஓடும்போது, அதைப் பார்த்து பயந்துபோய் பின்னால் ஓடும்போது கூரைப்புடவை, தாலி என்று கட்டி தலையில் தூக்கிக்கொண்டுவந்த மூட்டை கீழே விழுந்துவிட்டது. பாம்பு போனபிறகு சிறிதுநேரம் கழித்துத்தான் மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஊருக்கு வந்தார்கள். செய்தி ஊருக்குள் பரவியதுமே ஒருவர் தவறாமல் கல்யாணத்தை நிறுத்துவதுதான் நல்லது என்று சொன்னார்கள். லோகாம்பாள் வீட்டில்கூட தயங்கினார்கள். கருப்பன்தான் ஒரே பிடிவாதமாக நின்றான். ஜோசியரிடம் கேட்டதற்கு `தோச பரிகாரம்’ செய்துவிட்டால் சரியாகப்போய்விடும். இரண்டுபேருடைய ஜாதகத்திலும் குறைகள் என்று எதுவுமில்லை. ஜாதகப்பொருத்தம், ரட்சிப்பொருத்தம் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொன்னதால் பிள்ளையார் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்து ஒரு மண்டலம் நல்ல விளக்கு ஏற்றினார்கள். அதன் பிறகுதான் கல்யாணம் நடந்தது. ஆனால் தோசபரிகாரம் செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. இரண்டு மாதத்திற்கு முன்பு கருப்பன் செத்துவிட்டான். தலைப்பறத்தான் வாரிக்கு கிழக்கில் இருக்கும் அண்ணாமலை உடையார் வீட்டு கரும்பு வெட்டிக்கொண்டிருக்கும்போது சருகிற்குள்ளிருந்த பாம்பு கடித்து கருப்பன் செத்துவிட்டான். கருப்பன் செத்ததும் ஊரார்கள் கல்யாணத்தின்போது ஏற்பட்ட சகுணத்தடையை மீண்டும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதோடு தலைப்பறத்தான் வாரியைப்பற்றி கதைகதையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக கருப்பன் ஆவியாக சுற்றுவதாக கதைகட்டிவிட்டுவிட்டார்கள். இப்போது ஊருக்குள் தலைப்பறத்தான் வாரியைப்பற்றியும் கருப்பனுடைய ஆவியைப் பற்றியும் தான் பேச்சு. உச்சிப்பொழுதில் இளம்பெண்கள், தீட்டுக்காரப்பெண்கள் வந்தால் அவர்களுடன் கருப்பனும் ஓடைவரை வருகிறான் என்றும், தலைப்பறத்தான் வாரியிலோ, அதற்கு அருகிலோ எது நடந்தாலும் அது கருப்பனுடைய ஆவியின் விளையாட்டுத்தான் என்றும் பேச்சாகிவிட்டது. சாதாரணமாக ஆடு, மாடுகள் மிரண்டு ஓடினால், யாருக்காவது கால்இடறி ரத்தம் வந்தால், வண்டி குடைசாய்ந்தால், அச்சாணி முறிந்தால் அதற்கெல்லாம் கருப்பனுடைய ஆவிதான் காரணம் என்று சொல்கிறார்கள். லோகாம்பாளுக்கு ஒன்றையும் நம்ப முடியவில்லை. கருப்பன் செத்த அன்றே சாமி, தெய்வம், பேய், ஆவி என்றிருந்த எல்லா நம்பிக்கைகளும் அவளுடைய மனதிலிருந்து அழிந்துபோய் வெற்றிடம் உருவாகியிருந்தது. அந்த வெற்றிடத்தின் அளவு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.

தலைப்பறத்தான் வாரியில் நடக்கிற கெட்டகாரியங்கள் எல்லாவற்றுக்கும் கருப்பன்தான் காரணம் என்று ஊரார்கள் சொன்னதுமாதிரி, கருப்பன் பாம்பு கடித்து செத்ததற்கு ஊரார்களுடைய கண் ஓமல்தான் காரணம் என்று லோகாம்பாள் நினைத்தாள். ஊரில் எத்தனைபேர் செத்துக்கொண்டிருக்கிறார்கள்? அவர்களை எல்லாம் விட்டுவிட்டு கருப்பனை மட்டும் ஏன் வறுத்தெடுக்கிறார்கள் என்று எண்ணினாள். “அந்தாளு செத்ததும் தலவிதிதான். அந்தாளுக்கு அவசரஅவசரமா நான் ரெண்டு புள்ளெ பெத்ததும் தலவிதிதான். நண்டும் சிண்டுமாஇருக்கிற புள்ளிவுள நட்டெநடுராத்திரியிலெ இயித்துக்கிட்டு இப்பிடிப் போறதும் தலவிதிதான். விதி எப்பிடியோ அப்பிடித்தான் நடக்கும். அதை மீறிக்கிட்டு உசுரோட இருன்னா இருக்க முடியுமா? நான் இப்பிடி ஆவறதுக்கு நான் யாருக்கு என்னா பாவம் செஞ்சனோ தெரியல. அது கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஊராங்களுக்குக் கொடுக்கத் தெரியாது. ஆனா நல்லா கெடுக்கத் தெரியும். போக்கத்தவனுக்குப் போறதெல்லாம் பாததான்ங்கிற கதெதான் நம்பளுக்கு” என்று சொன்னாள். ராணி என்னவோ கேட்டாள். அவள் கேட்டதை காதில் வாங்காமல் தன்னுடைய நினைவிலேயே இருந்தாள் லோகாம்பாள். கருப்பன் செத்த பிறகு அதிகமாக அவள் தனக்குத்தானே பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டாள். சில நேரங்களில் அவளுடைய பேச்சில் பாதிகூட புரியாது. சிலநேரங்களில் அவளுடைய பேச்சு ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கும். இப்போதும் அப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது என்று ராணி நினைத்துக்கொண்டாள்.

இரண்டு பக்கமுமிருந்த அடைப்புகளிலிருந்தும் “உஷ்உஷ். கிரிச்கிரிச், ஊஷ் ஊஷ்” என்று பூச்சிகளும், வண்டுகளும், குருவிகளும் கத்திக்கொண்டிருந்தன. “என்னா குருவிம்மா கத்துது?” என்று குமார் கேட்டான். இரண்டு மூன்று குரலுக்குப் பிறகுதான் “என்னா கேட்டெ?” என்று லோகாம்பாள் கேட்டாள். அப்போது முன்னால் ஓட முயன்ற ஆட்டுக்குட்டியை பிடிப்பதில் மும்முரமாக இருந்தான் குமார். ஆட்டுக்குட்டியின்மீது அவனுக்கு எரிச்சல் உண்டாயிற்று. முதல் காரணம் தேவையில்லாமல் அந்தப்பக்கம் அது ஓட முயன்றுகொண்டிருப்பது. மற்றொரு காரணம் இந்த ஆட்டுக்குட்டியை வளர்த்து, அதை விற்று, அதிலிருந்து வரக்கூடிய பணத்தில் மூன்று நான்கு ஆட்டுக்குட்டிகளை வாங்கி, வளர்த்து, அவைகளை விற்று ராணி வயதுக்கு வரும்போது திரட்டி சுற்ற வேண்டும் என்று இந்த இரண்டு மாதமாக லோகாம்பாள் சொல்லிக்கொண்டிருந்தாள். ராணிக்கு திரட்டி சுற்ற தான் ஆடுமேய்க்க வேண்டுமா என்பதுதான் குமாரின் கோபத்திற்குக் காரணம்.

வாரிலிருந்து மேடேறி வரகு நிலத்தின் வழியே சென்ற ஒற்றையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தனர். வரகில் இறங்கியிருந்த பனி கால்களில் பட்டு அதிகக் குளிரை கொடுத்தது. வாரியில் நடந்தபோது இருந்த குளிரைவிட இப்போது அதிகமாகத் தெரிந்தது. லேசாகக் காற்று அடித்தால்போதும் பனிக்கட்டியை முகத்தில் வைத்ததுபோல் அவ்வளவு குளிராக இருந்தது. பயிர் நிலத்திற்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்ததுமே ஆட்டுக்குட்டியின் தொந்தரவு அதிகமாயிற்று. வரகில் வாயை வைக்க ஓயாமல் இழுத்துக்கொண்டேயிருந்தது. அவ்வாறு இழுக்கும்போதெல்லாம் அதனுடைய கழுத்தில் கட்டியிருந்த மணியின் சத்தம் காடு முழுவதும் கேட்டது. வரகு நிலத்தைத்தாண்டி சோளக்கொல்லைக்குள் நடக்க ஆரம்பித்தனர். சோளத்தட்டை ஒன்றரை ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்தது. இதுவரை இருந்ததைவிட சோளக்கொல்லைக்குள் அதிக இருட்டு இருப்பதுபோல தெரிந்தது. சோளக்கொல்லைக்குள் திருடர்கள் யாராவது இருப்பார்களோ, வழியை மறித்துக்கொண்டு அடிப்பார்களோ என்று குமார் ராணி மட்டுமல்ல லோகாம்பாளும் பயந்தாள். திருடனைப் பற்றி நினைத்ததுமே தன்னுடைய நிலத்தில விளைந்து நிற்கும் கொத்தமல்லி பற்றிய நினைவும் அவளுக்கு வந்தது. கொத்தமல்லியை யாராவது பிடுங்கிக் கொண்டு போயிருப்பார்களோ என்று சந்தேகப்பட்டாள். மூன்று நான்கு கட்டு கொத்தமல்லியைப் பிடுங்கிக்கொண்டு போய்விட்டால் அரை மூட்டை ஒருமூட்டை என்று கொத்தமல்லி போய்விடுமே என்று கவலைப்பட்டாள். காட்டில் அதிகமா திருட்டுப்போவது கடலையும் கொத்தமல்லியும்தான். சாயுங்காலம் பார்த்துவிட்டுப்போனாலும் மறுகாலையில் போய்ப்பார்த்தால் வட்டவட்டமாகப் பிடுங்கியிருப்பார்கள். காட்டில் காவலுக்கு என்று படுத்திருப்பவர்கள்தான் திருடுவார்கள். பிறருடைய காட்டில் திருடிக்கொண்டுபோய் தங்களுடைய நிலத்தில் போட்டுக்கொள்கிறவர்கள் யார்யார் என்று யோசித்தாள். பிறகு “வேகமா நடெங்க” என்று சொன்னாள். “திருட்டுக்கு ஏது இருட்டு” என்று சொன்னாள். சிறிதுநேரம் கழித்து “சோளத்தட்டயிலெ கால இடிச்சிக்காதீங்க. கால பாத்து நடக்கணும்” என்று சொன்னாள்.

சோளக்கொல்லையைத் தாண்டியதும் வரகு நிலம் வந்தது. அதைத்தாண்டியதும் கொத்தமல்லி நிலம் வந்தது. ஆனால் கொத்தமல்லி நிலத்தில் நடக்கக்கூடாது என்று வழியை மறித்து முள் அடைப்பு போட்டிருந்தது. அதனால் அடைப்பை ஒட்டியே நடந்தனர். வழியை மறித்து அடைப்புப் போட்டிருந்த சட்டித்தலை படையாச்சியை லோகாம்பாள் திட்டினாள். “நடக்கிற வழியிலெ முள்ளெப்போட்டு மறிக்கிறவன் நல்ல கதிக்குப்போவானா? இந்தமாரி செய்யுற பயலுவளத்தான் பெரியச்சாதிக்காரன்னு சொல்றானுவோ” லோகாம்பாள் மட்டுமல்ல ஊரிலுள்ள எல்லாருமே சட்டித்தலை படையாச்சியைத் திட்டினாலும், கரித்துக்கொட்டினாலும், சாபம் கொடுத்தாலும், அவனுக்கு இதுவரை காய்ச்சல், தலைவலி என்று ஒருநாளும் வந்ததில்லை. உடம்பு சரியில்லை என்று அவன் ஒரு நாளும் வீட்டில் படுத்திருந்தது கிடையாது. காலையில் இருட்டாக இருக்கும்போது காட்டுக்குப்போனால் சாயுங்காலம் நன்றாக இருட்டிய பிறகு தான் வீட்டுக்கு வருவான். இரவும் பகலும் காட்டுப்பூச்சி மாதிரி காட்டிலேயே கிடந்தாலும் இதுவரை அவனை சாதாரண அரணைகூட கடித்தது கிடையாது. அவனை பாம்பு கடிக்க வேண்டும் என்று ஊருக்குள் ஆசைப்படாதவர்கள், சாமியிடம் வேண்டிக்கொள்ளாதவர்கள் என்று ஒரு ஆள்பாக்கியிருக்க முடியாது. ஆனால் இதுவரை அவனை ஒரு முள்கூட குத்தியது கிடையாது. பயிர்காலத்தில் மட்டுமல்ல கோடைக்காலத்தில்கூட அவனுடைய நிலத்தில் ஆட்கள் நடக்கவோ ஆடுமாடுகள் மேயவோ விடமாட்டான். ஆட்களும் ஆடுமாடுகளும் நடந்துநடந்து நிலம் இறுகிப்போய்விடும். அதனால் ஏர் ஓட்டும்போது சிரமமாக இருக்கும் என்று சொல்லிக் கத்துவான். பயிர் நிலத்தில் ஆடுமாடுகள் நுழைந்துவிட்டால் அவ்வளவுதான். பயிரை மேய்ந்த ஆடு மாடுகளின் வாலை அறுத்துவிடுவான். இல்லை என்றால் ஒரு வாரத்திற்கு மோட்டார் கொட்டகையில் கட்டி வைத்துவிடுவான். ஆடு மாடுகளுக்கு உரியவர்களிடம் செய்தியையும் சொல்லமாட்டான். ஆடுமாடுகள் என்ன, அவன் போட்டிருக்கிற முள் வேலியைத்தாண்டி ஆட்கள் போனால்கூட சாட்டையால் தான் அடிப்பான். சின்னப்பிள்ளைகள் என்றால் அவனுடைய நிலத்தைச் சுற்றி பத்து இருபது முறை ஓடிவரச்சொல்வான். முடியாதென்றால் சாட்டையால்தான் அடிப்பான். கீழச்சாதி ஆட்கள், பிள்ளைகள் என்றால் அவனுடைய தண்டனை இரண்டு மடங்காகக் கூடிவிடும். பத்துப் பன்னிரெண்டு வயது இருக்கும்போது லோகாம்பாள் ஒருமுறை அவனுடைய நிலத்தில் நுழைந்து நடந்ததற்காக நிலத்தைச் சுற்றி ஓடிவரச்சொன்னான். அழுததும் சாட்டையால் அடித்து தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க வைத்தான். மோட்டாங்காட்டில் மட்டுமல்ல அவனுடைய வயலில் கூட ஒரு காக்கா குருவி நுழைய முடியாது. காட்டுக்குப் போகிறவர்கள் தண்ணீர் எடுப்பார்கள் என்பதற்காக கிணற்றுப்படிக்கட்டில் நெருஞ்சி முள்ளைப்போட்டு வைத்திருப்பான். முள்ளை எடுத்துவிட்டு யாராவது தண்ணீர் எடுத்தால் அவ்வளவுதான். குடத்தைப் பிடுங்கி கிணற்றுக்குள் போட்டுவிடுவான். கீழ்ச்சாதிக்காரர்கள் யாராவது தொட்டியில் தண்ணீர் எடுத்தாலோ, குடித்தாலோ கூழாங்கல்லை கொடுத்து வாயில் போட்டு கடிக்கச் சொல்வான். “இப்பிடிப்பட்டவனுக்கெல்லாம் சாவு வரமாட்டேங்குது பாரு” என்று சொன்னாள். பிறகு என்ன நினைத்தாளோ குமாரிடமும், ராணியிடமும் “நீங்க ஒருத்தங்க பண்டத்துக்கும் ஆசப்படாதீங்க. இன்னொருத்தங்க பொருள உசுருப்போனாலும் தொடாதீங்க” என்று சொன்னாள்.

தூரத்தில் பேச்சுக்குரல் கேட்டது. லோகாம்பாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்த நேரத்திற்கு எழுந்து வந்திருப்பார்கள் என்று சந்தேகப்பட்டாள். ஊருக்கு முன்னே தான்தான் காட்டுக்கு கிளம்பியதாக இதுவரை நினைத்துக் கொண்டிருந்தாள். தனக்கு முன்னே ஆட்கள் வந்திருப்பது தெரிந்ததும் அவளுக்கு சப்பென்றாகிவிட்டது. “எல்லாம் இந்த ஒரு மாசம்தான். காட்டுல இருக்கிறத ஊட்டுல கொண்டு போயி பதனமா சேக்காட்டி ஒருவருச பொயப்பு அம்போன்னு போயிடுமே” என்று சொன்னாள். மறுநொடியே தன்னுடைய நிலத்தைப்பற்றியும், அதில் விளைந்திருக்கும் கொத்தமல்லியைப் பற்றியும் யோசித்தாள். கருப்பனுக்கு சொந்தமாக அரைகாணி நிலம் மட்டும்தான் இருந்தது. அதில்தான் கடலைபோட்டுப் பிடுங்கிவிட்டு கொத்தமல்லி விதைத்திருந்தார்கள். கொத்தமல்லி விதைத்து பத்து இருபது நாட்களிலேயே கருப்பன் நிலத்தில் முளைத்திருக்கும் கொத்தமல்லியைப் பற்றி ஊருக்குள் ஒரே பேச்சாகிவிட்டது. அந்த அளவுக்கு செழிப்பாக முளைத்திருந்தது. சாதாரணமாக அரைகாணி நிலத்தில் நான்கு மூட்டை கொத்தமல்லி கிடைத்தாலே பெரிது. இந்த வருசம் கருப்பனுக்கு பத்து மூட்டை கிடைக்கும் என்று பேச்சாகிவிட்டது. லோகாம்பாள் கூட ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டுப்போனாள். கருப்பன் செத்ததும்தான் தெரிந்தது அது `சாவு வெள்ளாமை’ என்று. அதனால் கொஞ்ச நாட்களுக்கு காட்டிற்குப் போகவோ கொத்தமல்லியைப் பார்க்கவோ அவளுக்குப் பிடிக்காமல் போய்விட்டது. ஆனால் இந்த பத்து இருபது நாட்களாக அந்த அரைகாணி நிலம்தான் அவளுக்குத் தெய்வமாகத் தெரிந்தது. இரவும் பகலும் அந்த நிலத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். இனிமேல் கடலை, எள், கொத்தமல்லி என்று பணப்பயிர் விதைக்கக்கூடாது. சோற்றுக்கான வரகு, சோளம், கம்பு என்றுதான் பயிரிட வேண்டும். கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குக் கொடுத்தாலும் காட்டில் விளைந்ததுமாதிரி இருக்காது என்று நினைத்தாள். நிலமற்றவர்களுக்கு இரண்டு ஏக்கர் என்று அரசாங்கம் போன வாரம் கொடுத்தது. இவளுக்கு சொந்தமாக அரைகாணி இருந்ததால் அரசாங்கத்தின் இரண்டு ஏக்கர் நிலம் கிடைக்காமல் போய்விட்டது. “அரக்காணிதான் ஒலகத்துலியே இல்லாத பெரிய சொத்துன்னு பேர எயிதாம வுட்டுட்டானுகளே கொலகார பயளுவோ” என்று சொல்லி திட்டினாள். அடுத்த வருசத்திலிருந்து காட்டில் என்னென்ன பயிரிட வேண்டும். அவற்றை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் யோசித்துக் கொண்டே நடந்தாள். கருப்பன் இருந்தவரை இதுமாதிரி அவள் ஒருநாள்கூட யோசித்ததில்லை. அதேமாதிரி அவளுக்கு என்று ஆசைகள் எதுவும் இருந்ததில்லை. பெரிதாக ஆசைப்படவும் அவளுக்குத் தெரியாது. அதிகபட்சம் அவளுடைய ஆசைகள் எல்லாம் நல்ல சோறு சாப்பிட வேண்டும். நல்ல சேலை கட்ட வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அந்த ஆசைகள் இப்போது அவளிடமில்லை. ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரியபெரிய ஆசைகள் இப்போது அவளுக்கு வந்துவிட்டது. அவளைமாதிரி ஆசைகொண்ட பெண் இப்போது அந்த ஊரிலேயே இல்லை. அவளுடைய ஆசையிலேயே பெரிய ஆசையாக இருப்பது தன்னுடைய பிள்ளைகளுக்கு வயிறு நிறைய சோறு கிடைக்க வேண்டும் என்பதும், நோய்நொடி அண்டக்கூடாது என்பதும் தான். அதற்கடுத்து காடு நன்றாக விளைய வேண்டும் என்பது. அந்த ஆசைகள்தான் அவளுடைய இரவையும் பகலையும் வேகமாக நகர்த்திக்கொண்டிருந்தது. அந்த ஆசைகள் தான் இப்போது பனியையும், குளிரையும் அவளிடம் அண்டவிடாமல் தடுத்திருந்தது. அந்த ஆசைகள்தான் இருட்டிலும் நடப்பதற்கான தெம்பையும் பாதையையும் காட்டிக்கொண்டிருந்தது. ஆசைதான் இருட்டிலும் தங்குதடையின்றி, கால்கள் கூசாமல் பகலில் நடப்பதுமாதிரி நடக்க வைத்தது.

“விடியபோற நேரத்திலெ எதுக்குத்தான் இப்பிடி குளுந்த காத்து வீசுதோ, இந்தப் பனியிலயும் குளிருலயும் நடந்தா பெரியவங்களுக்கே ஒத்துக்காதே. புள்ளியோ வெறச்சிப்போயிடும்போல இருக்கே” என்று சொன்ன லோகாம்பாள் ஆட்டுக்குட்டியைப் பிடித்துக்கொண்டு நடந்துகொண்டிருந்த குமாரை கூர்ந்து பார்த்தாள். “தம்பி” என்று சொல்லி கூப்பிட்டாள். அவன் “என்னம்மா?” என்று கேட்டான். சொல்ல வந்ததை மறந்துவிட்டதுபோல பேசாமலிருந்தாள். சிறிதுநேரம் கழித்து தானாகவே “நீங்க ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்துக்குப் போகலன்னா வாத்தியாரு அடிப்பாரா?” என்று கேட்டாள். அவள் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் “இனிமே நான் பள்ளிக்கூடத்துக்குப் போவ மாட்டனாம்மா?” என்று குமார் கேட்டான்.

“ஒங்க தல எழுத்து எப்பிடி இருக்கோ, அது ஒங்கள படச்ச ஆண்டவனுக்குத்தான் தெரியும். பேனா புடிச்சி எயிதுறது மட்டும்தான் வேலயா? நாட்டுல உள்ளெ எல்லாருமே பேனா புடிக்கிற வேலக்கே போயிட்டா காட்டுல வேலெ செய்யறது யாரு? காட்டுல வேல செய்யாட்டி சோறு எப்பிடி திங்கிறது? எது இல்லன்னாலும் உசுரோட இருந்திடலாம். சோறு இல்லாம ஒரு நாளக்கி இருக்க முடியுமா? எம்மாம் பெரிய பணக்காரங்களா இருந்தாலும் அவுங்களும் வவுத்துக்குச் சோத்தத்தான தின்னாவணும். நமக்கு வேண்டியது சோறுதானே? கைகால நம்பு, காட்டெ நம்பு, கடவுளு தொண இருப்பான். நாம்ப மட்டுமா காட்டெ நம்பிக்கிட்டு இருக்கோம்? நாட்டுல எத்தனகோடி சனங்க காட்டெ சதம்னு நம்பிக்கிட்டு இருக்காங்க. ஆண மேயுற காட்டுல ஆடு மேயுறதுக்கு எடமில்லாமியா போவும்? கைகாலு தெடமா இருக்கணும். அதுதான் நம்பளுக்கு வேண்டியது. நோவுநொடி அண்டக்கூடாது. எல்லாத்துக்கும் மேல கடவுளு இருக்கான். காசு பணம் என்னாத்துக்கு ஆவும்? மெத்த மாளிகயில படுத்துத் தூங்குறவங்களும் ஒரு நாளக்கி சாவத்தான் போறாங்க. அவுங்க மட்டும் நூறு சம்பத்துக்கா வாயப்போறாங்க?” என்று சொன்னாள். சிறிது நேரம் பேசாமல் நடந்தாள். பிறகு அவளுக்கு என்ன தோன்றியதோ தனக்குத்தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னாள். “ஒங்க தலயில என்னா எயிதிருக்கோ, எய்தினபடிதான எல்லாம் நடக்கும். பால்குடி மறக்காதப் புள்ளிவுள ராத்திரியிலெ இப்பிடி இயித்துக்கிட்டு நடக்கும்படியா வச்சிப்புட்டானே பாயிம் கடவுளு, அவன் நல்லா இருப்பானா? என்னோட பாவம் அவன சும்மா வுடுன்னாலும் வுடுமா? முப்பித்திரெண்டு வயசிலியே என்னெ இப்பிடி பண்ணிப்புட்டானே சண்டாளன். அவன் எப்பிடி நல்லா இருப்பான்? அவன் நாசமத்துத்தான் போவான் பாரு. என்னோட பாவம் அவன கேக்காம வுடாது.”

லோகாம்பாளினுடைய பேச்சு குமாருக்கும் புரியவில்லை. ராணிக்கும் புரியவில்லை. புரிந்தாலும் அவளுடைய பேச்சைக் கேட்கிற மனநிலையில் அவர்கள் இல்லை. அவர்களுடைய மனமும் பார்வையும் வரகு நிலம், கொத்தமல்லி, சோளம், துவரை நிலம் என்று சுற்றிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நிலத்திற்குள்ளும் நடக்கும் போதும் அந்தந்தப் பயிர்களுடைய வாசனை வந்தது. எல்லா வாசனையையும்விட கொத்தமல்லி வாசனைதான் தூக்கலாக இருந்தது. இருட்டாக இருந்தாலும் வாசனையை வைத்தே அது என்ன பயிர் உள்ள நிலம் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. தூரத்திலுள்ள நிலங்களில் இருக்கும் பயிரைக்கூட வாசனையை வைத்தே கண்டுபிடிக்க முடிந்தது. கைகால்கள் விறைத்துப் போகும் அளவுக் குளிர் இருந்தாலும், பனியும் குளிரும் அவர்களை இப்போது ஒன்றும் செய்யவில்லை. வரகு, சோளம், துவரை, கொத்தமல்லி நிலங்களிடையே கிடந்த ஒற்றையடிப்பாதையில் இருளோடு இருளாக நடந்துகொண்டிருந்தனர். இருள் இப்போது அவர்களுக்கு பழகிவிட்டது. வானம் தெளிந்துகொண்டிருந்தது. நிலம் தெளிந்துகொண்டிருந்தது.

தன்னுடைய நிலத்திற்கு அருகில் வரவர லோகாம்பாளினுடைய நடையில் வேகம் கூடியது. ராணியும் குமாரும் அவளுடைய நடையின் வேகத்திற்கு ஈடுகொடுத்தனர். அவர்களுக்கும் நன்றாக விடிவதற்குள் தங்களுடைய நிலத்திற்குப்போய்விட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டிருந்தது. ஆட்டுக்குட்டிக்கூட ஓயாமல் முன்னோக்கி இழுத்துக்கொண்டே இருந்தது. புகைப்படலம்மாதிரி பனி இறங்குவது தெரிந்தது. போர்த்தியிருந்த போர்வைகூட லேசாக நனைந்துவிட்டிருந்தது. அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. விடிவதற்குள் தங்களுடைய காட்டில் அடியை வைத்துவிட வேண்டும் என்பதைத்தவிர மூவருக்கும் வேறு சிந்தனைகளில்லை.

தங்களுடைய நிலத்தின் சனி மூலையில் வந்து நின்றார்கள். “கிழக்கமா பாத்து கும்புட்டுட்டு மொத செடிய புடுங்குப்பா” என்று சொன்ன லோகாம்பாள், கிழக்குப் பக்கமாகப் பார்த்து கும்பிட்டாள். அவள் கும்பிடுவது மாதிரியே ராணியும் குமாரும் கும்பிட்டனர். ராணி முதலில் பிடுங்கிவிடக் கூடாது. தான் தான் முதலில் பிடுங்க வேண்டும் என்று தண்ணீரில் நனைத்து நட்டு வைத்ததுபோல பனியில் நனைந்திருந்த கொத்தமல்லிச் செடி ஒன்றைப் பிடுங்கினான் குமார். அடுத்தது பிடுங்க ஆரம்பித்தாள் ராணி. லோகாம்பாள் கிழக்கு பார்த்து கும்பிட்டவாறு நின்று கொண்டிருந்தாள்.

நிலம் நன்றாகத் தெளிந்துவிட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *