பனிச்சிறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 11,157 
 

“கார் பாலத்தின் இடது எல்லையில் போட்டிருந்த அலுமனிய தடுப்பை இடித்தும் நிற்காமல் தலைகீழாக கவிழ்ந்து, காற்றை விலக்கி, ஏரியின் மேல் படர்ந்து இறுகி இருந்த பனித் தகட்டை உடைத்துக் கொண்டு நீரில் மூழ்கிக் கொண்டிருந்தது.”

கார், தடுப்பை இடிக்கும் என்று தெரிந்தவுடனே ஸ்டீரிங்கை விட்டுவிட்டேன். கார் கட்டுப்பாடு இல்லாமல் மெதுவாக குலுங்கி வழுக்கி கொண்டிருந்தது. மிக விரைவாக சீட் பெல்டை விடுவித்துக்கொண்டு, பக்கத்திலிருந்த சீட்டை இறுக்கமாக பிடித்தபடி தலை, முகம், தோள்பட்டை என்று கணக்கில்லாமல் இடிவாங்கிக் கொண்டு, காருக்கு வெளியே என்ன நடக்கிறது என்று திரும்பிக்கூட பார்க்காமல் உருண்டு பிரண்டு ஒரே குறிக்கோளாக பின்னிருக்கைக்கு சென்றேன். அங்கு அமர்ந்திருந்த என் ஐந்து வயது மகள் சத்யாவின் சீட் பெல்டையும் விடுவித்து விட்டு, அவளை ஒரு கையால் எனக்குள் இறுக்கி அணைத்தபடி கதவை திறக்க மற்றொரு கையை கொண்டு போகும்போதே கால் மேலே எழுந்து நெஞ்சு அடைத்தது. நொடிபொழுதில் முன்னிருக்கையில் முட்டி கழுத்தெலும்பில் வலி மின்னி தெரித்தது. முன்னால் அதிவேகமாக வழுக்கிச் செல்லும் உடலை ஒரு கையால் முன்னிருக்கையை இறுக்கி பிடித்து தடுத்து நிறுத்தினேன். திடீரென்று பெரிய சத்தத்தோடு கார் ஏரியின் பனித் தகட்டை முட்டியதும் மெதுவாக நீருக்குள் செல்ல ஆரம்பித்தது. சுற்றிலும் இருந்த பனித் தகடு விரிசல் விட்டு விலகி விலகி மூச்சி விட்டு கொண்டிருந்தன. எனது ஒரு நிமிட செயலின்மையை சத்யாவின் ஓங்கி ஒலித்த அழுகை சத்தம் மீட்டது, அவளை பார்த்த என் கண்களும் உடைப்பெடுத்தது கண்ணீரால்.

என்னுடைய கழிவிரக்கத்தை கழுவில் ஏற்றிவிட்டு, உதவி, உதவி என்று கத்தியபடி கார் கதவை திறக்க முயற்சி செய்தேன். அதற்குள்ளாக சில்லென்று எலும்பை உருக்கும் நீரை காலில் உணர ஆரம்பித்தேன். பல நாள் பசிக்கொண்டு பனிச்சிறையிலிருந்து விடுதலையான நீர் காரில் நிறைந்திருந்த காற்றை தின்று கொண்டே இன்னும் இன்னும் என்று கேட்டப்படி தன் நாவால் இண்டு இடுக்கெல்லாம் துழாவி பிடித்து வேக வேகமாக முழுங்கிக் கொண்டிருந்தது. முடிந்தவரை சத்யாவை மேலே தூக்கி கையில் பிடித்து அணைத்துக்கொண்டே கார் கதவை திறக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் சத்யாவின் பாதுகாப்புக் கருதி பின்பக்க கதவில் சைல்ட் சேப்டி லாக் போட்டிருந்தது ஞாபகம் வந்தது.

முன்பக்கம் செல்ல முயற்சி செய்தால் கார் வேகமாக நீரில் அமிழ்ந்தது. என் சிந்தனைகள் maze ல் சிக்கிக்கொண்டது போல் தொலைந்து தொலைந்து தேடியது. நான் சோர்ந்துக் கொண்டிருந்தேன். பனி நீர் ரத்த நாளங்களை எல்லாம் உறைய செய்துக் கொண்டிருந்தது. கால்களும் கைகளும் அசைக்க முடியாமல் மறுத்து போனது, உதவிக்கு அழைக்க குரலும் எழும்பவில்லை. நுரையீரல் ஆக்ஸிஜனுக்காக தவித்து தவித்து ஹைட்ரஜன் டை ஆக்சிடை நிரப்பிக் கொண்டிருந்தது. வலது கை சத்யாவின் பிடியை நழுவவிட்டது….மீண்டும் மீண்டும் கல்லாக கனத்த கையை அசைத்து அவளை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். காதுக்குள் தண்ணீர் உள் புகுந்து “கொய்ங்….” என்று ஒரே சத்தம்………காது வலியில் அதிர்ந்தது. இடது கையை மெதுவாக எடுத்து காதுக்கு அருகில் உரசிய பனிக்கட்டியை தட்டி விட்டேன்.

அது நொறுங்கிய சத்தத்திலும், “அனிதா………….” என்ற சரணின் வேகமான அழைப்பிலும் அடித்து பிடித்து கொண்டு எழுந்தேன். நுரையீரல் ஆக்சிஜனை நிரப்ப அதி வேகமாக முயற்சி செய்து கொண்டிருந்தது. என்னை சுற்றிலும் நீரும் பனிகட்டியும் படர்ந்து இருந்தது…..வழுவழுப்பாக…..சத்யாவின் frozen பிளங்கட்டில் எல்சா சிரித்துக் கொண்டிருந்தாள். கால்கள் இரண்டும் சில்லிட்டிருந்தது, என் வுல்லன் பிளங்கட் முனை சரணின் கைவிரல்களில் அழுத்தமாக சிறை பட்டிருந்தது. சரண் காலடியில் அலாரம் கிளாக் பகுதி பகுதியாக சிதறி கிடந்தது. சுவாசம் மெல்ல மெல்ல சீராக ஆரம்பித்தது. மெதுவாக முன்னிருந்த சுவற்றை நோக்கி தலையை நிமிர்த்த, ஏழாம் எண்ணெய் எட்டி பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த சின்ன முள் பார்வையில் சிக்கிய நொடியில், முழி இரண்டும் பிதுங்கி வெளியே வந்து என்னை முந்திக் கொண்டு பாத்ரூமை நோக்கி உருண்டு ஓடியது.

சரணின் முகத்தை திரும்பியும் பார்க்காமல் அவசர அவசரமாக நானும் சத்யாவும் கிளம்பி ஸ்கூலுக்கு போக வெளியே வந்து பார்கிங் லாட்டை நோக்கி நடந்தோம். பனி கொட்டிக் கொண்டிருந்தது. இரவு முழுவதும் கொட்டிய பனியால் பார்வை தீண்டி செல்லும் இடங்கள் எல்லாம் வெண்மை, ஒரே அறையில் துளி இடமில்லாமல் அடுக்கி வைத்து ஒளியேற்றிய ப்லோரசன்ட் ட்யுப் லைட் போல் கண் கூசும் வெண்மை, வெண்மை, வெண்மையை தவிர வேறில்லை.

சத்யா மூச்சை இழுத்து விட்டு ……nice என்றபடி, விழும் பனி பூவின் வெண்மையை அவள் உள்ளங்கையில் ஏற்ற முயற்சி செய்த கொண்டே என்னோடு நடந்து வந்தாள். “Ma…see….oh i didn’t get it….see ma now….oh no….ma now….oh……” பனி சோம்பப்படியின் இழைகளை போல மிதந்து வந்து முகத்தில் பட்டு கரைந்து கொண்டிருந்தது. சரண், என் காரின் மேல் படிந்திருந்த பனியையும் சேர்த்து சுத்தம் செய்து விட்டு அலுவலகம் சென்றிருந்தார்கள். உதட்டை முந்திக்கொண்டு சரணிற்கு நன்றி சொன்னது மனது.

கார் கதவை திறந்து சத்யாவை பின்னிருக்கையில் அமரவைத்து சீட் பெல்டை போட்டு விட்டேன். சைல்ட் சேப்டி லாக்கை போடுவதா வேண்டாமா என்று பலமாக யோசித்து…. கடைசியில் போட்டுவிட்டே வந்து முன் பக்கம் இருக்கையில் அமர்ந்தேன்.

நானும் சீட் பெல்ட் போட்டு கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்து, காரை மெதுவாக ரிவர்ஸ் எடுத்து, பிரேக்கை அழுத்தி டிரைவிங் மோடுக்கு கொண்டு வந்து, ப்ரேகிலிருந்து காலை எடுத்து அக்சிலேடரை மெதுவாக அழுத்தினேன்…….. வண்டி ஒரு எட்டு போட்டு, பல சைபர் போட்டு கிரீச் சென்ற சத்தத்தோடு நின்றது. வலது கால் எப்பொழுது ப்ரேகிற்கு வந்தது என்று தெரியவில்லை. முகமெல்லாம் வியர்வை துளிகள். மூச்சியை இழுத்து விட்டு, கைகளின் நடுக்கத்தை ஸ்டீரிங்கை அழுந்த பிடித்து நிறுத்தினேன். வண்டியை மெதுவாக டையர் பதிந்திருந்த தடத்திலேயே ஓட்டிச்சென்று பார்கிங் லாட்டில் நிறுத்தி விட்டு, “mummy once more….once more” என்று காரில் இருந்து இறங்காமல் அடம் பிடித்த சத்யாவை hot cocoa குடிக்கலாம், snow man செய்யலாம் என்று ஆசைக்காட்டி குண்டுகட்டாக இரண்டு கைகளாலும் தூக்கி அணைத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தேன்……….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *