பத்து ரூபாய் கிடைக்குமா?

5
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 9,987 
 

அது ஒரு அழகான மாலைப்பொழுது சுரேஷ் பேருந்து நிறுத்தத்தில் கையில் துணிப்பையுடன் சென்னை செல்லும் பேருந்துக்காக காத்திருக்கிறான். பேருந்து வர தாமதம் ஆகிறது. அன்று நடந்த சம்பவங்களை அவனை அறியாமல் அவனது மனது திரும்ப அசை போடுகிறது. வாருங்கள் நாமும் என்ன நடந்தது என பார்க்கலாம்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தான் சுரேஷின் ஊர். சுரேஷ் அவ்வளவாக படிக்காவிட்டாலும் நன்கு தொழில் தெரிந்த எலக்ட்ரீசியன். தந்தை இறப்பிற்கு பிறகு படிப்ப்பை நிறுத்தி விட்டு 15 வயதிலயே வேலைக்கு சென்று தன்னுடைய குடும்ப சுமையை தாங்கியவன். இவனுக்கு ஒரு தங்கை இருந்தாள், குடும்ப சுமையை தன் தோளில் ஏந்தி எலக்ட்ரீசியன் வேலைக்கு ஹெல்பராக செல்ல துவங்கியவன் மூன்றே வருடங்களில் நல்ல முன்னேற்றம் கண்டான்.

சில வருடங்களிலேயே சொந்தமாக காண்ட்ராக்ட் எடுத்து சின்ன சின்ன வீடுகள், கட்டிடங்களுக்கு எலக்ட்ரிக்கல் வேலைகளை பார்க்க துவங்கினான். 3 பேருக்கு வேலை தரும் அளவிற்கு முன்னேறினான் தங்கையின் 19வது வயதில் மாப்பிள்ளை பார்த்து 20 சரவன் நகை போட்டு திருமணம் செய்து வைத்தான். தந்தை ஸ்தானத்தில் அனைத்தையும் முன்னின்று நடத்தினான்.

இவன் பெரிதாக படிக்காவிட்டாலும் தொழிலில் அந்த பகுதியில் நம்பர் 1 ஆளாக முன்னேறினான், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் சுரேஷுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி, பக்கத்து ஏரியாவை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகள் செல்வியை சுரேஷுக்கு திருமணம் முடித்து வைத்தார் அவனது தாய் வள்ளி. திருமணம் முடியும் போது மணமக்களின் வயது 23 மற்றும் 21,

இளம் தம்பதிகளாக சுரேஷ்-செல்வி இருவரும் தங்களது வாழ்வை கடவுள் மற்றும் முதுகுளத்தூர் மக்களின் ஆசியுடன் துவங்கினர். இல்லறம் மகிழ்ச்சியாக சென்றது தன் மனைவியின் மனம் கவர்ந்தவனாக மனைவிக்கு உண்மையாக நடந்து கொண்டான் சுரேஷ்.

அடுத்த வருடமே ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 24 வயதில் தந்தை ஆனான் சுரேஷ். ஒரு பக்கம் தொழிலில் நல்ல முன்னேற்றம் மறுபக்கம் அருமையான இல்லறம் இவை இரண்டும் ஒரு சேர அமைந்ததில் பலரும் சுரேஷ் மீது பொறாமை கொண்டார்கள் என்றே கூறலாம்.

முதுகுளத்தூர் மக்கள் மத்தியில் சுரேஷ் நல்ல பரிட்சயமான நபராக வலம் வர துவங்கினான், அனைவரிடமும் நன்மதிப்பை பெற்றான். தனது 26வது வயதில் இரண்டாவது முறை தந்தை ஆனான், பெண் குழந்தை பிறந்தது, “பொம்பள புள்ள பிறந்துடுச்சு இதுக்கப்புறம் இன்னும் பொறுப்பா நடந்துக்கனும்ப்பா” என்று சுரேஷின் தாய் அறிவுரை வழங்கினார். தனது மகன் கெட்டிக்காரன் என்பது அவருக்கு தெரியும் இருந்தாலும் பெயருக்கு அந்த அறிவுரையை வழங்கினார்.

சுரேஷ் தனது மகனுக்கு கோகுல் என்றும் மகளுக்கு பிரியா என்றும் பெயர் வைத்தான், கோகுல் தனது தந்தையை ஒரு ஹீரோவாகவே பார்த்தான். அந்தளவுக்கு அவன் நினைப்பதை வாங்கி தந்து எப்போதும் சிரித்த முகத்துடனே பாசம் வைத்து வளர்த்து வந்தான் சுரேஷ்.

பேரூராட்சி அலுவலக கட்டிடத்தின் எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்ட்டை தனக்கு தெரிந்த அந்த ஏரியா கவுன்சிலரின் சிபாரிசு மூலமாக சுரேஷ் கைப்பற்றினான், இதில் அவனுக்கும் அந்த கவுன்சிலருக்கும் நல்ல நெருக்கம் உண்டானது.

தனது பிள்ளைகளின் பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருந்தான் சுரேஷ். அவனது மகனின் 5வது பிறந்தநாளை சுற்றத்தார்கள் மற்றும் உறவினர்களை அழைத்து சிறப்பாக கொண்டாட திட்டமிட்டான். மரியாதைக்காக அந்த ஏரியா கவுன்சிலரையும் அழைத்தான்,

அனைவரும் கலந்து கொள்ள, பிறந்தநாள் விழா சிறப்பாக முடிந்தது, வந்திருந்தவர்கள் அனைவரையும் சிறப்பாக கவனித்தான், அந்த கவுன்சிலர் மதுப்பிரியர் என்பது இவனுக்கு தெரியும் அதனால் அவரையும் அவரது சகாக்களையும் அழைத்து கொண்டு ஊருக்கு வெளியே அழைத்து சென்று பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான். கவுன்சிலருடன் வந்தவர்கள் சுரேசை குடிக்க வற்புறுத்த “அய்யய்யோ அண்ணே நமக்கு இந்த பழக்கமெலாம் இல்லை அண்ணே” என்று மறுத்து விட்டான். ஒரு கட்டத்தில் கவுன்சிலர் கட்டாயப்படுத்த வேறு வழி தெரியாமல் முதன் முதலாக குடித்தும் விட்டான்.

குடித்து விட்டு எப்படியோ வீடு வந்து சேர்ந்து விட்டான் இரவு சாப்பிடாமல் தூங்க இவன் மீது இவன் மனைவிக்கு சந்தேகம் வந்து விட்டது, காலையில் எழுந்து தலைவலியுடன் “இனிமேல் இந்த கருமம் புடிச்ச குடியை நினைக்கவே கூடாது” என தனக்குள் முடிவு செய்து கொள்கிறான், வேலைக்கு சென்று விட்டான்.

ஆனால் அவனை அறியாமல் அவனது மனது அந்த போதையை விரும்ப துவங்கி விட்டது, அடுத்த நாளே மீண்டும் இரவு மது குடித்தான், மது குடித்து விட்டு கணவன் வீட்டுக்கு வருவதை உறுதி செய்து கொண்ட செல்வி காலையில் எழுந்ததும் “என்னங்க புது பழக்கம்?” என கேட்க, நண்பன் வீட்ல விசேஷம் அதனால் தான்.. இனி குடிக்க மாட்டேன் என உறுதிமொழி வழங்குகிறான்.

ஆனால் அவன் குடிப்பதை நிறுத்தவில்லை, தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது குடிப்பதை வாடிக்கையாக கொள்கிறான், மது வாடை வராமல் இருக்க குடித்தபின் ஏலக்காய், கிராம்பு இவற்றை வாயில் நன்றாக மென்று துப்பி விட்டு தண்ணீரில் வாயை கொப்புளித்து விட்டு வீட்டுக்கு சென்றான், இவனது மனைவியிடம் சிக்கவில்லை.

நாட்கள் செல்ல செல்ல இவனுக்கு குடிப்பழக்கம் மீதான ஆசை அதிகமாகி கொண்டே செல்கிறது, ஒருபுறம் மனைவி,குழந்தைகளிடம் இருந்து அவனை அறியாமல் அவனது மனது விலகி செல்கிறது. இரவில் மட்டுமே குடிக்க துவங்கியவன் இப்போது பகலிலும் குடிக்க ஆரம்பிக்கிறான்.

இதனால் தொழிலில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் சொன்ன நேரத்தில் வேலையை முடிக்க முடியாமலும், இவ்வளவு காலம் சம்பாதித்து வைத்திருந்த நல்ல பெயரை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க துவங்குகிறான்.

ஆனாலும் அவன் குடியை விட்ட பாடில்லை. ஒரு கட்டத்தில் வேலைக்கு செல்லாமல் வேலை ஆட்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு குடிப்பதை மட்டுமே வாடிக்கையாக கொள்கிறான், மகிழ்ச்சியாக சென்ற இல்லறம் இப்போது சண்டை சச்சரவுடன் செல்கிறது. இப்படி வேலைக்கு செல்லாமல் குடித்து கொண்டே இருந்தால் எந்த மனைவி தான் சும்மா இருப்பாள்

குடிப்பழக்கம் அதிகமாக அதிகமாக குடும்பத்திற்கு செலவுக்கு காசு தருவதை குறைக்க துவங்குகிறான், தன்னிடம் வேலை பார்க்கிறவர்களுக்கும் சம்பளம் தராமல் இழுத்தடிக்க துவங்குகிறான். கிடைக்கிற பணத்தை எல்லாம் குடித்தால் பிறகு எப்படி பணம் மிஞ்சும்???

இவன் மீதிருந்த மரியாதை அந்த பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்குகிறது, பலரிடமும் கடன் வாங்க துவங்குகிறான், ஒரு கட்டத்தில் இவனிடம் வேலை பார்த்து வந்த முத்து தனியாக தொழில் துவங்கி சென்று விட மற்ற வேலையாட்களும் முத்துவிடம் வேலைக்கு சேர்ந்து விட்டனர்.

13 வருடங்களாக இந்த தொழிலில் முதலாளியாக கொடிகட்டிப் பறந்த சுரேஷ் இப்போது இன்னொருவரின் கீழ் பணிபுரியும் தொழிலாளி ஆனான். ஆமாம் தனது சொந்த தொழிலை இழந்து இன்னொருவரிடம் வேலைக்கு சேர்ந்து தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தான்,

வேலை பார்த்த இடத்திலும் இவனது சேட்டைகள் தொடர்ந்தன, மணி 12 எப்போது ஆகும் என அவ்வப்பொழுது கடிகாரத்தை பார்த்து கொண்டிருப்பான் மணி 12 ஆனதும் முதலாளியிடம் சென்று “மகளுக்கு உடம்பு சரியில்லை, மனைவிக்கு காய்ச்சல், மகனுக்கு நோட்புக் வாங்கனும்” என எதையாவது பொய்யை சொல்லி 200 ரூபாய் பணம் கேட்பான், இவன் சொல்வதை நம்பி முதலாளி பணம் தந்ததும் உடனே நேராக ஒயின்ஷாப் சென்று நன்கு குடித்து விட்டு அதன் பிறகு அன்று வேலைக்கும் போகாமல் வீட்டுக்கும் செல்லாமல் எங்காவது தூங்குவான்.

மீண்டும் அடுத்த நாள் நல்லவன் போல அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு வேலைக்கு செல்வான். ஆனால் மணி மதியம் 12 ஆனதும் தனது வேலையை காட்ட துவங்கி விடுவான், முதலாளியும் அவ்வப்போது புத்திமதி சொல்லி பார்த்தார் கண்டிக்கவும் செய்தார், ஆனால் சுரேஷ் திருந்தியாதக தெரியவில்லை, இதனால் இனிமேல் நீ வேலைக்கு வர வேண்டாம் என நிறுத்தி விட்டார்,

இப்போது சுரேஷ் வருமானம் எதுவும் இல்லாமல் குடிக்க கையில் காசும் இல்லாமல் தவித்து வந்தான், வீட்டில் கிடைக்கிற பொருட்களை திருடி விற்று குடிப்பது, அக்கம் பக்கத்தினர் தெரிந்தவர்களிடம் பொய் சொல்லி கடன் வாங்கி குடிப்பது, என எப்படியாவது தினமும் குடித்து விடுவான்.

இவனிடம் போராடி பார்த்த மனைவி வேறு வழியில்லாமல் தனது தந்தையின் உதவியால் ஒரு தையல் இயந்திரம் வாங்கி தனக்கு தெரிந்த தையல் தொழில் மூலமாக பிள்ளைகளை வளர்த்து வந்தாள்,

இப்படியே வருடங்கள் சென்றது சுரேஷின் மகன் கோகுல் 10 வயதையும் மகள் பிரியா 8 வயதையும் தொட்டு விட்டனர், பிள்ளைகள் வளர்ந்தார்கள், செல்வி தனது உழைப்பால் பிள்ளைகளை வளர்த்து தன்னம்பிக்கையுடன் முன்னேற ஆரம்பித்தாள் ஆனால் சுரேஷ் இன்னும் மோசம் ஆனான். குடியை விட்ட பாடில்லை

அந்த ஊர் மக்கள் பலரும் சுரேஷை பார்த்து “எப்படி நல்லா இருந்த மனுஷன் இப்படி குடியால வீணா போயிட்டானே’னு” பரிதாபப்பட்டனர்.

அன்று கோகுல்-இன் 10வது பிறந்தநாள், தன் தாய் தைத்து தந்த புது துணியை போட்டு கொண்டு பள்ளி சென்று மாலையில் நண்பர்களுடன் வீடு திரும்பி கொண்டிருந்தான், அப்போது அவன் உடன் வந்த தோழன் “டேய் கோகுல் அவர் உங்கள் அப்பா தானே?” என எதிர் திசையை நோக்கி கையை நீட்டினான்

அந்த திசையை நோக்கி பார்த்த கோகுலுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, ஒரு ஒயின்ஷாப் வாசலில் நின்றபடி போகிற வருபவர்களிடம் “அண்ணே அண்ணே கட்டிங்-க்கு காசு பத்தல அண்ணே, ப்ளீஸ் ஒரு 10 ரூபாய் கிடைக்குமா” என பிச்சை எடுக்காத குறையாக கெஞ்சி கேட்டு கொண்டிருந்தான்

தன் தந்தை குடிக்க காசு இல்லாமல் பிச்சை எடுப்பதை கண்ட கோகுல் செய்வதறியாது வேகமாக வீட்டுக்குள் ஓடி கதறி அழ துவங்கினான், எந்த மகனுக்கு தான் கஷ்டமாக இருக்காது?? மற்ற வகுப்பு தோழர்கள் அவர்கள் தந்தையரை உயர்வாக பேசும்போது இவன் பல நாட்கள் இவன் தந்தையை நினைத்து வருத்தப்பட்டதுண்டு, ஆனாலும் என்றாவது ஒரு நாள் நம்ம அப்பா மாறி விடுவார், பழைய அப்பாவாக இருப்பார் என்கிற சிறிய நம்பிக்கை அவனிடம் இருந்தது

ஆனால் இன்று அவன் கண்ட காட்சி அவனது நம்பிக்கையை குழி தோண்டி புதைத்தது, பாவம் கோகுல் தனது பிறந்தநாள் அதுவுமாக ரொம்பவே அழுது விட்டான், அந்நேரம் அவனுக்கு ஆறுதல் சொல்ல அம்மா, தங்கை வீட்டில் இல்லை, அவர்கள் தாத்தா வீடு வரை சென்றிருந்தனர்,

அப்போது திடீரென ஏதோ சத்தம் இவன் துணிகள் வைத்திருந்த அறை பகுதியில் கேட்க, கோகுல் அந்த அறையை நோக்கி சென்றான், அங்கு சுரேஷ் எதையோ தேடி கொண்டிருந்தான் மகனுக்கு புரிந்து விட்டது “நம்ம 2 வருசமாக கிடைக்கிற காச உண்டியல்ல போட்டு வச்சுருந்த விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சு அதை திருட வந்திருக்காரு, நல்ல வேளை அதை எடுத்து வேற இடத்தில ஒழிச்சு வச்சாச்சு” என நிம்மதி அடைகிறான்

அங்கு நடந்த சிறிய உரையாடல்

கோகுல்: என்ன ப்பா தேடுற??

சுரேஷ்: இல்ல டா, இங்க தான் அப்பா காச வச்சேன், ஆனால் இப்ப காணோம்,

உள்ளே சென்று உண்டியலுடன் கோகுல் வருகிறான்

கோகுல்: அப்பா இதை தானே தேடுற??

சுரேஷ் “என்ன சொல்றதுனு தெரியாமல்” தலையை ஆமாம், இல்லை என்பது போல மாற்றி மாற்றி ஆட்டுகிறான்

கோகுல்: பரவாயில்லை ப்பா, எனக்கு தெரியும் நீ இதை எடுக்க தான் வந்த அப்படினு கொஞ்சம் பொறு

கோகுல் அந்த உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தை எண்ண துவங்குகிறான், சுரேஷுக்கு என்ன நடக்கிறது என புரியவில்லை, எது நடந்தால் என்ன நமக்கு குடிக்க காசு கிடைத்தால் சரி தான் என உள்ளுக்குள் ஆனந்தப்படுகிறான்,

இரண்டு வருடங்களாக தனக்கு தாத்தா,பாட்டி,அம்மா மூலமாக கிடைத்த தீபாவளி காசு, செலவுக்கு தந்த காசு அனைத்தையும் பொறுப்புடன் இந்த உண்டியலில் தான் சேர்த்து வைத்து வந்தான் கோகுல்

உண்டியலில் இருந்த பணத்தை எண்ணி முடித்து சுரேஷிடம் பணத்தை தருகிறான் “இந்தா ப்பா புடி இதுல 1470 ரூபாய் இருக்கு, இதை வச்சுக்க, சந்தோசமாக குடி” இப்படி சொன்னதும் சுரேஷுக்கு தலை கால் புரியவில்லை “இந்த காசை வைத்து 13 குவார்ட்டர் வாங்கலாம் என மனக்கணக்கு போட்டவாறே” ரொம்ப தேங்ஸ் டா மகனே அப்பா இந்த காசை ரெண்டு நாள்ல திருப்பி தந்துடுறேன் அம்மா கிட்ட சொல்லிடாத என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்

அப்போது கோகுல் சுரேஷிடம் “அப்பா உன் இஷ்டம் போல குடி ப்பா, அப்படியே கொஞ்சம் பூச்சி மருந்தும் வாங்கி குடிச்சிட்டு செத்துடு ப்பா, இல்லைனா இந்த காச வச்சு எங்காயவது கண் காணாத இடத்துக்கு போய் தொலைஞ்சுடு, நீ எங்களை ரொம்ப கஷ்டப்படுத்துற ப்பா, அம்மா பாவம் உன்னால நிம்மதி இல்லாமல் இருக்காங்க”என்று தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விட்டான்.

தன் மகனிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும் என சுரேஷ் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அப்படியே சிலை ஆகி போனான். இப்படி ஒரு வார்த்தை அவனிடம் இருந்து வருகிற அளவுக்கு தான் இவ்வளவு காலம் நடந்து கொண்டதை உணருகிறான்.

வீட்டின் உள் சென்று அவசர அவசரமாக ஒரு பையில் தனது துணிகளை எடுத்து கொண்டு எதுவும் பேசாமல் மகன் தந்த அந்த 1470 ரூபாயை எடுத்து கொண்டு வெளியே சென்று விடுகிறான், இவை அனைத்தையும் பார்த்தும் பார்க்காதது போல கோகுல் வீட்டிலேயே இருந்து விட்டான்

வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்த போது தான் அவனது பள்ளி பருவ நண்பன் ராஜா-வின் நினைவு வந்தது, ராஜா சென்னையில் நல்ல வேலையில் குடும்பத்துடன் வசிக்கிறான்,

ராஜாவை தொடர்பு கொண்டு தான் சென்னை வருவதாகவும் நாளை காலை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து தொடர்பு கொள்கிறேன் நீ வந்து என்னை கூட்டி செல் என்கிற தகவல் தெரிவித்து விட்டு. இப்போது பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கிறான்,

தனது கடந்த காலங்களையும், தனது பொறுப்பின்மையையும் எண்ணி ரொம்பவே வருத்தப்படுகிறான், தன் மனைவி, பிள்ளைகள் தன்னால் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பது அவனுக்கு இப்போது தான் புரிகிறது, கண்ணை மூடி யோசித்த வேளையில் பேருந்து வரும் சத்தம் கேட்டது

பேருந்தில் ஏறி மிகுந்த மன வருத்தத்துடன் சென்னை நோக்கி புறப்பட்டான். ஏனெனில் இவன் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்த மனைவியிடம் கூட சொல்லாமல் சென்னை செல்கிறான், காலையில் சென்னை சென்று சேர்ந்ததும் கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பொது தொலைபேசி மூலமாக நண்பனை தொடர்பு கொள்கிறான், ஏனெனில் இவனிடம் போன் கூட இல்லை, அதையும் விற்று குடித்து விட்டான்

தன் பால்ய சிநேகிதனை காண ஆவலுடன் வந்த ராஜாவுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது காலில் செருப்பு கூட இல்லாமல், அழுக்கு துணியுடனும், தாடியுடனும் பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் நின்றிருந்தான் சுரேஷ்,

ராஜாவிடம் சுரேஷ் குடியால் தன் வாழ்க்கயை தொலைத்த கதையை கூறி தனக்கு ஒரு வேலை வாங்கி தரும்படியும் இனிமேல் குடியை நினைத்து கூட பார்க்க மாட்டேன் என கண் கலங்குகிறான், சுரேஷின் நிலையை கண்டு பரிதாபப்பட்ட ராஜா உடனடியாக அவனை சலூன் கடை அழைத்து சென்று முடி வெட்டி, தாடியை மழித்து பிறகு குளிக்க வைத்து புது துணி வாங்கி உடுத்த செய்து, செருப்பு வாங்கி அணிய வைத்த பின்னரே தன் வீட்டுக்கு அழைத்து சென்றான்,

அடுத்த நாளே தனக்கு தெரிந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை வாங்கி தந்தான் ராஜா, மாதம் 12,000 ரூபாய் சம்பளம், தங்கும் இடம், உணவு இலவசம். கண்களில் நீர் ததும்ப ராஜாவை கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னான் சுரேஷ், வேலையில் சேர்ந்த சுரேஷ் தன் நிலையை உணர்ந்து நன்கு வேலை செய்தான் கொஞ்சம் கடினமான வேலை தான், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை, வருகிற காய்கறி மூட்டைகளை இறக்கி வைப்பது அவற்றை பிரித்து அடுக்குவது என வேலை பெண்டு கழறும்

இதனிடையே இரண்டு நாட்களாகியும் வீட்டுக்கு வராத கணவனை தேட துவங்குகிறாள் செல்வி,அக்கம் பக்கம் விசாரித்ததில் பலரிடம் இருந்து ஒரே மாதிரியான பதில் தான் வந்தது” உன் புருசன் எங்காயவது குடிச்சுட்டு விழுந்து கிடப்பான் மா, வீட்டுக்கு போ, அவனாகவே போதை தெளிஞ்சு வந்துடுவான்” இப்படி பதில்கள் வர செல்விக்கு மனது ரொம்பவே கஷ்டப்பட்டது ஒரு பக்கம் கோகுலுக்கு பயம் “எங்கே நான் சொன்னதால் அப்பா உண்மையில் பூச்சி மருந்தை குடித்து இறந்து விட்டாரோ” என பயந்து நடந்தவற்றை அம்மாவிடம் சொல்லி விட்டான்,

கோகுல் தன் கணவனிடம் இப்படி சொன்னது தெரிந்ததும் ஆத்திரத்தில் மகனை அடி பிய்த்து எடுத்து விட்டாள் செல்வி, அந்நேரம் சென்னையில் இருந்து போன் வந்தது எதிர்முனையில் பேசியது ராஜா” தங்கச்சி சுரேஷ் இங்க தான் மா இருக்கான்” என ஆரம்பித்து வேலை பார்க்கிற விஷயத்தை சொல்லி நீங்கள் பயப்பட வேண்டாம், இரண்டு மாதத்தில் வீட்டுக்கு வந்து விடுவான் என சொல்லி ஆறுதல் படுத்த, செல்வி அமைதியானாள்

4 மாதங்கள் சென்றன சுரேஷ் ஊருக்கு வரவேயில்லை. செல்வி அழுது புலம்பி கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள் “ஆத்தா தாயே என் வீட்டுக்காரர் பத்திரமாக வீடு வந்து சேர்ந்திடனும், அவர் பழைய படி மாறனும்” என தன் பாரத்தை முதுகுளத்தூரின் காவல் தெய்வமான செல்லியமனிடம் இறக்கி வைத்தாள்.

திடீரென ஒரு நாள் யாரோ வீட்டு கதவை தட்ட கோகுல் ஓடிப்போய் கதவை திறந்தான், எதுவும் பேச வாய் வராமல் அப்படியே நின்று விட்டான்.

வந்தது சுரேஷ் தான், ஆம் நன்றாக முடி வெட்டி நல்ல உடையில், கையில் திண்பண்டங்களுடனும், விளையாட்டு சாமான்களுடனும், புது துணிகளுடனும் தன் மனைவி, குழந்தைகளை பார்க்க 5 மாதம் கழித்து ஊருக்கு வந்திருந்தான் சுரேஷ், கணவனை கண்டதும் செல்விக்கு ஆனந்த கண்ணீர் வர “என்னங்க, ஏன் எங்கள விட்டுட்டு போனீங்க” என்றவாறே சுரேஷின் மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்,

குழந்தைகளும் அழ ஆரம்பித்து விட்டனர், அனைவரையும் தேற்றி தான் வாங்கி வந்த பொருட்களை கோகுலிடம் குடுத்து விளையாட சொல்லி விட்டு தன் மனைவி செல்வியிடம் தான் கஷ்டப்பட்டு உழைத்த 50,000 ரூபாய் பணத்தை தந்து “பொம்பள புள்ள பெத்துருக்கோம், இனிமேல் பொறுப்பா நடந்துக்குவேன், இந்தா இந்த காசுல ஏதாவது நகை எடு” என்று சொன்னதும் செல்விக்கு எல்லையில்லா மகிழ்ச்சி பழைய கணவனை கண்ட ஒரு ஆனந்தம். முதல் வேலையாக செல்லியமனுக்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்தினாள்

சுரேஷ் குளித்து முடித்து வீட்டின் வெளியே மகன் விளையாடுவதை பார்க்க சென்றான், அப்போது கோகுல்” இது மெட்ராசுல இருந்து எங்க அப்பா எனக்காக வாங்கிட்டு வந்த கிரிக்கெட் பேட் டா, எப்படி இருக்கு?” என தன் சக நண்பர்களிடம் காட்டி பெருமிதம் கொண்டான். இதை கண்ட சுரேஷுக்கு ரொம்பவே மகிழ்ச்சி ஏற்பட்டது.

சுரேஷ் முழுவதுமாக மாறியதில் அனனவருக்கும் மகிழ்ச்சி, வீட்டில் உள்ள அனைவரும் கலகலப்பாக இருந்த சயமத்தில் சுரேஷ் மீண்டும் சென்னைக்கு புறப்பட தயார் ஆனான், இது செல்விக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது “இங்கயே ஏதாவது வேலை தேடி கொள்ளலாம், இருங்கள்” என மனைவி, குழந்தைகள் கெஞ்சினர் அவர்களிடம் சுரேஷ்”நல்ல பெயரை சம்பாதிப்பது கடினம், ஆனால் அந்த பெயரை கெடுத்து கொள்வது மிக மிக எளிது”

அந்த வகையில் நான் இந்த ஊரில் எனக்கு இருந்த நல்ல பெயரை குடியால் கெடுத்து கொண்டேன், இனி நான் இதே ஊரிலேயே வேலை செய்தால் மற்றவர்கள் உடனே நம்பி வேலை தர மாட்டார்கள், பழைய ஒயின்ஷாப் சகவாசங்களும் தொல்லை தரும், ஆதலால் சில வருடங்கள் சென்னையில் இருந்து விட்டு அப்புறம் ஊர் வந்து விடுகிறேன், அது வரை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்கிறேன், தினமும் போனில் பேசிக்கொள்ளலாம், என மனைவிக்கு ஆறுதல் சொல்லி அவளை ஆசுவாசப்படுத்தி வீட்டிலிருந்து விடைபெற்று, பேருந்து நிறுத்தம் சென்று சென்னை செல்லும் பேருந்துக்காக காத்திருக்கிறான்.

அப்போது ஒரு நபர் இவனிடம் வருகிறார் “அண்ணே, கட்டிங் வாங்க காசு பத்தல ஒரு 10 ரூபாய் கிடைக்குமா?” என்று கேட்கிறார், தன்னை அறியாமல் சிரித்து விட்டு இல்லை என்கிறவாறு தலையை ஆட்டுகிறான் சுரேஷ். பேருந்தும் வருகிறது சென்னை கிளம்பினான் சுரேஷ். தன்னிலை அறியாமல் குடி குடி என்று சுற்றி திரிந்த தகப்பனை திருத்திய கோகுல்-ஐ நினைத்து தாய் செல்வி பெருமை கொண்டாள்.

Print Friendly, PDF & Email

5 thoughts on “பத்து ரூபாய் கிடைக்குமா?

  1. கதை மிக அருமை, எதார்த்தமாக இருந்தது
    நிறைய எழுதுங்கள், வாழ்த்துக்கள்,

  2. கதைக்கு காது கேட்க வைத்து விட்டார் கண்ணன் சவுந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *