தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 7,867 
 

“”என்ன மாமா திடீர்னு வந்திருக்கீங்க? எதுனாச்சும் முக்கியமான விஷயமா?”

“”ஆமாங்க போன தபா வந்தப்ப நீங்க எழுதுன மண்மேடுங்குற புஸ்தகத்த கொடுத்தீங்கள்ள… அத நேத்துத்துத்தான் படிச்சேன். அந்த புக்குல மண்மேடு கதையில அத்திப்பட்டுங்குற ஊரைப் பத்தி எழுதியிருக்கீங்கள்ள அது சம்பந்தமா தான் பேச வந்திருக்கேன். அந்த ஊர்ல இருந்தவங்க யாராச்சும் இருந்தா அவங்கள பாத்துப் பேசணும்”

“”அந்த ஊர்தான் நெய்வேலி சுரங்கமாயிடுச்சே… என்ன விஷயம்னு தெளிவா சொல்லுங்களேன்”

பதியைத் தேடி

“”உங்களுக்கே தெரியும் எங்க குலதெய்வத்தோட பதி எங்க இருக்குன்னு. நாங்க பல வருஷமா தேடிட்டிருக்கோம். ஒரு வருசத்துக்கு முந்தி தான் அது அத்திப்பள்ளியோ அத்திப்பட்டோன்னு ஒரு வயசானவர் மூலமா தெரிஞ்சுது. ஆனா அந்த ஊர் எங்க இருக்குன்னு தெரியலை. அதான் உங்க கதையில வர்றா அந்த ஊரா இருக்குமோ?”ன்னு.

“”மக்கள் அந்த ஊரைக் காலி பண்ணியே அம்பது வருஷமாயிடிச்சே. இப்ப யாரு இருப்பாங்க? எதுக்கும் வேலவன் சாரை கேட்டுப் பாக்கலாம். அவரோட சொந்த ஊரைப் பத்தின கதை தான் அது. ஆனா அவரு பிஸியா இல்ல இருப்பாரு. இன்னைக்கி வேற சனிக்கிழமை. அவரு ஆபீஸூக்கு வர்றாரோ? இல்லையோ? எதுக்கும் போன் செஞ்சு பார்க்கலாம்” சந்தேகத்துடன் போன் செய்தேன்.

“”வணக்கம் சார்… சந்திரசேகர் பேசறேன்”

“”வணக்கம் சந்துரு… என்ன செளக்கியமா?”

“”செளக்கியம் சார். தொந்தரவு செய்யறதுக்கு மன்னிக்கணும். ஊர்லேருந்து எங்க மாமா வந்திருக்கார். உங்க ஊர் பழையகூரைப்பேட்டைக்கு பக்கத்துல இருந்த அத்திப்பட்டுங்குற ஊரைப் பத்தி தெரியணுமாம். அங்க இருந்தவங்க, முக்கியமா வயசானவங்க யாராச்சும் இப்ப இருக்காங்கலான்னு கேட்டு வந்திருக்கார்”

“”உங்க கதைய படிச்சிட்டார் போலிருக்கே” சிரித்துக் கொண்டே கேட்டார்.

“”ஆமா சார்” என சிரித்துக் கொண்டே நானும் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன்.

“”நல்ல வேளையா போச்சு. இன்னைக்கு காலையிலே நானே விருத்தாசலம் போலாம்னு இருக்கேன். நீங்க ப்ரியா இருந்தா அவரையும் கூட்டிட்டு வாங்களேன். ஊர்ல எங்க அப்பாவையாச்சும் இல்ல, வேற யாரையாச்சும் விசாரிச்சா ஏதாச்சும் விவரம் கிடைக்கலாம்”

“”ஓகே சார் கண்டிப்பா வரேன்”

“”அப்ப பத்து மணிக்கு நான் வீட்லேர்ந்து கிளம்பும் போது போன் பண்றேன். நீங்க ஆபிஸர் காலனி பஸ் ஸ்டாண்ட் கிட்ட வந்துடுங்க. அங்க உங்களை பிக் அப் பண்ணிக்கிறேன்”.

விருத்தாசலத்திலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது புதுக்கூரைப்பேட்டை குடியிருப்பு. அங்கு தான் வேலவன் சாரின் அப்பா வீடு இருந்தது.

ஆர்ச்சைப் பார்த்ததும், “”சந்துரு இன்னைக்கு நினைப்பா ஆர்ச்சை போட்டோ எடுத்துக்கோங்க அடுத்த எடிசன் மண்மேடு வரும்போது இந்த படத்தையும் சேர்த்துக்கோங்க” நான் தலையாட்டினேன்.

ஏற்கெனவே வந்திருந்ததால் அவர் வீட்டில் அனைவருக்கும் என்னைத் தெரியும். அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள்.

வேலவன் சார் வந்த வேலையை ஞாபகப்படுத்தினார்.

“” அப்பா அத்திப்பட்டுல இருந்தவங்க யாராச்சும் தெரியுமா? அந்த ஊரைப் பத்தி இவங்களுக்கு விவரம் தெரியணுமாம். அதுக்காகத்தான் வந்திருக்காங்க” வேலவன் சாரின் அப்பா ஊர்த் தலைவராக இருந்தவர்

“”அத்திப்பட்டுல இருந்தவங்களோட வம்சாவளிங்க தான் ஒண்ணு ரெண்டு பேர் இருக்காங்க. இரு… இரு… துரைராஜ் இருக்கானே… அவனைக் கேட்டா தெரியும்.”

அதற்குள் வேலவன் சாரின் தம்பி, “”ஏம்பா அவங்க அம்மாவே இன்னும் உசிரோட தான இருக்கு”

“”அட ஆமா வேலவா, பூவாயி கிழவி இன்னும் உசிர பிடிச்சிக்கிட்டு கிடக்கு. இருபது இருபத்தஞ்சு வருஷமா கட்டிலோட கிடக்குதா. அது இருக்கறதே மறந்து போச்சு. நூறு வயசு இருக்கும். அதுக்கு அத கேட்டா எல்லா விவரமும் தெரியும். ஆனா பேசற நிலைமையில இருக்குதான்னு தெரியலை”

“”தம்பி சமையல் ரெடி ஆவறதுக்குள்ள வா போயிட்டு வந்துர்றலாம்” என வேலவன் சார் தன் தம்பியைப் பார்த்து கூப்பிட்டார்.

“”நீயும் வரணுமா? நான் வேணா கூட்டிட்டுப் போறேனே”

“”பரவாயில்ல. வா நானும் வர்றேன்”

பூவாயி பாட்டிக்கு தன் மகன் வயிற்றுப் பேத்தி வீட்டில் தான் ஜாகை. தனியே ஒரு ஓட்டு அறையில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தாள். நடமாட்டம் இல்லாததால் படுக்கையில் தான் ஒண்ணுக்கு ரெண்டுக்கு எல்லாம். அப்போது தான் வாராந்திர குளியல் முடிந்து புதிய சேலை போர்த்தி படுக்க வைத்திருந்தார்கள். வேலவன் சாரைப் பார்த்ததும் பரபரப்பாகி விட்டார்கள்.

“”ஐயா இருங்க வீட்டுலேருந்து பெஞ்சு எடுத்தாரேன்”

ஓட்டமும் நடையுமாகச் சென்று எடுத்து வந்தாள் அந்தப் பெண். அவளுக்கு அதிக சிரமம் வைக்க வேண்டாமே என்று நாங்கள் மூவரும் பாய் வாங்கி அதில் அமர்ந்து விட்டோம்.

“”பாட்டிக்கு காது கேக்குமா? பேச்சு வருமா?”

“”அதெல்லாம் நல்லா கேக்கும். பாம்பு காது. இன்னைக்கு தான் குளிச்சு கொஞ்ச நேரத்துக்கு முந்தி தான் இட்லி சாப்பிட்டு தெம்பா இருக்கு. பேச்சு எல்லாம் நல்லாவே பேசும் நடமாட்டம் தான் இல்ல” என்றாள் பேத்தி.

அதற்குள் துரைராஜும் வந்துவிட்டார்.

“”வாங்க… வாங்க” என எல்லோரையும் வரவேற்றபடி கட்டிலருகில் சென்று, “”அம்மா உன்னைப் பாக்க மெட்ராஸýல இருக்காரே தாடிக்காரர் பையன்… பெரிய ஆபீசர்… வந்திருக்காரு. கண்ணைத் துறந்து பாரு”

துரைராஜும் பேத்தியும் கிழவியை எங்கள் பக்கம் திருப்பினார்கள்.

“”யாரு வேலுவா?” என்று கணீரென்று குரல் வந்தது

இந்த குடுகுடு கிழவி எங்கே பேசப் போகிறது என்ற நினைத்திருந்த எனக்கு மகா அதிர்ச்சி..

அதற்குள் வேலவன் சார், “”என்ன பாட்டி செüக்கியமா?…”

“”நான் நல்லாயிருக்கேன்.. நீ நல்லாயிருக்கியா சாமி. ஊட்ல பொஞ்சாதி புள்ளைங்க செüக்கியமா… என்ன திடீர்னு கும்பலா என்ன பாக்க வந்திருக்கீங்க?”

வேலவன் சார் என்னை பார்க்க நான் மாமாவைப் பார்த்தேன்.

“”பாட்டியம்மா நான் சேலத்துக்கு பக்கத்துல எடப்பாடிங்குற ஊர்லேருந்து வர்றேன்”

“”பக்தரா? படையாச்சியா?”

பொளேரென்று என் நெற்றியில் அறைந்தது போலிருந்தது

மாமாவும் அதிர்ந்து போய், “”பக்தர் தான் பாட்டியம்மா?”

“”பக்தருல எந்த காணி?”

“”நாப்பது ஊட்டுக் காரங்க”

“”அப்படி ஒரு காணியா? சரியாச் சொல்லுங்க”

“”இல்லையில்ல நான் தான் தப்பா சொல்லிட்டேன். அந்தக் காணி இப்ப நாப்பது ஊட்டு காரங்கன்னும் சொல்றாங்க”

“”ஏன்? இப்ப நாப்பது குடும்பம் தான் இருக்கா?”

“”இல்லை எறநூறு முந்நூறு இருக்கும். ஆனா எப்படியோ அந்த பேரு வந்துடுச்சு”

“”இத்தனை வருஷமா இல்லாம இப்ப எதுக்கு என்ன பாக்க வந்தீங்க?”

“”எங்க குல தெய்வத்தோட பதி அத்திப்பட்டு இல்லைன்னா அத்திப்பள்ளிங்கற ஊர்ல இருக்குன்னு இப்ப தான் தெரிஞ்சுச்சு. அதான் உங்க ஊரா இருக்குமோ?ன்னு”

“”எங்க ஊரேதான் அத்திப்பட்டு தான். ஏன் எழுபது வருஷமா உங்க பங்காளிங்க சாமி செய்யலியா?”

“”இல்லையே… பத்து பதினைஞ்சு வருஷத்து ஒருக்கா செஞ்சுக்கிட்டு தான இருக்கோம்.”

“”எப்படி செஞ்சீங்க? பதியே தெரியாமா சாமி செஞ்சீங்களா?”

மாமா திருதிருவென விழித்தார்.

“”பதி தெரியாததால வைத்தீஸ்வரனை குலதெய்வமா நினைச்சி சாமி செஞ்சுக்கிட்டு வந்தோம். வருஷா வருஷம் பங்குனி பாசம் பங்காளிகளெல்லாம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து படையல் போடுவோம். சித்திரை வைகாசியில ஊர்ல பச்சை போடுவோம். ஆமா அத்திப்பட்டுதான் எங்க பதின்னு சொல்றீங்களே எங்க பங்காளிங்க சாமி செஞ்சது சம்பந்தமா எதாச்சும் உங்களுக்கு நினைவிருக்கா?”

“”ஏன் இல்லாம? எனக்கு நினைவு தெரிஞ்சு நான் வயசுக்கு வந்த வருஷத்துல உங்காளுங்க சாமி செய்சாங்க. அப்ப எனக்கு பதினைஞ்சு வயசு. உங்க ஊர்லேருந்து வண்டிக்கட்டிக்கிட்டு குடும்பம் குடும்பமா வந்தாங்க. வந்து எங்க ஊர்ல இருக்கற வீடுங்கள்ல தான் தங்குனாங்க. ஒரு வாரத்துக்கு ஊர்க்காரங்க யாரையும் சமைக்க விடலை. உங்காளுங்க தான் விருந்து சமைச்சு போட்டாங்க. ஊரே திருவிழாவா இருந்துச்சு. எங்கேயோ இருந்து வந்து எங்க ஊர்ல திருவிழா கொண்டாடுனது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. சாமி செஞ்சு முடிஞ்சு போறப்ப ஒரு சாக்குல எங்க ஊரு மண்ண எடுத்துக்கிட்டு போனாங்க. அடுத்த வருஷத்திலேருந்து அந்த மண்ணுலதான் லிங்கம் செஞ்சு பச்சை போடுவாங்கன்னு பெரியவங்க பேசிக்கிட்டாங்க”

சற்று மூச்சு விட்டு மீண்டும் தொடர்ந்த பாட்டி, “”அடுத்த தபா சாமி செய்ய வரும்போது எனக்கு முப்பது வயசிருக்கும். கல்யாணம் ஆயி துரைராஜ் அஞ்சு வயசு பையனா இருந்தான். ஆனா அப்ப சாமி செஞ்சு முடிச்சு போகும் போது எங்க ஊரு மண்ணை எடுத்துட்டுப் போகலை. ஏன்னு கேட்டப்ப போன தடவை எடுத்துட்டுப் போன மண்ண வச்சு பச்ச போட்ட ஒரு வருஷம் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி மண்ணையெல்லாம் கரைச்சிடுச்சி. அதனால அப்பலேர்ந்து ஊரு ஆத்து மண்ணையே லிங்கமா செஞ்சு படைக்கிறோம்னு சொன்னாங்க. ஆனா அதுக்கப்புறம் உங்க ஆளுங்க எங்க ஊருக்கு வரவேயில்லை ஒருவேளை நாடெல்லாம் இருந்த பஞ்சத்துனால உங்காளுங்களும் சாமி செய்யாம இருபது முப்பது வருஷம் விட்டிருக்கலாம். அதுக்கப்புறம் அந்த ஊரையே நெய்வேலி சுரங்கத்துக்கு எடுத்துக்கிட்டதால ஊர்ல இருந்தவங்களே ஊரை காலி பண்ணிட்டு திக்குக்கு ஒருத்தரா பொழைக்க போயிட்டோம். அதனால உங்க பதி இருக்குற இடத்தை மறந்திருப்பாங்க.”

“”அப்படித்தான் இருக்கணும். ஆமா எங்கள பத்தி இவ்வளவு தெரிஞ்சு நெனவு வச்சிருக்கீங்களே ஆச்சரியமா இருக்கு”

“”அதென்ன ஆச்சரியம்? நான் சமைஞ்ச வருஷத்துல சாமி செஞ்சீங்கள்ல… அப்ப எங்க வீட்டுக்கு வந்த உங்க பங்காளி குடும்பம் எங்கள அடுத்த வருஷம் பச்சை போடுறதுக்கு உங்க ஊருக்கு வரச் சொல்லி அழைச்சாங்க. நாங்களும் குடும்பத்தோட உங்க ஊருக்கு போயிருந்தோம். அங்க ஓடுமே அந்த ஆறு பேரு கூட ஆங்… சரபங்கா நதி… அதில நான் குளிச்சிட்டு அங்கன ஒரு சிவன் கோயில் இருக்குமே… சாமி பேரு கூட நல்ல பேரு ஆங் நஞ்சுண்டேஸ்வரர் அவரைக் கூட கும்பிட்டிருக்கேன். இப்ப ஆத்துல தண்ணி இருக்கா?”

“”இப்ப ஆத்துல சாயப்பட்டறை கழிவு தான் ஓடுது”

“”என்னமோப்பா இப்பயாச்சும் பதிய தேடணும்னு உங்களுக்கு தோணுச்சே? வந்தது தான் வந்த… எங்க ஊரு மண்ண ஒரு மூட்ட அள்ளிக்கிட்டு போயி இந்த வருஷமாச்சும் சாமி செய்யப் பாருங்க. அப்ப தான் உங்க பங்காளிகளும் ஊரும் அமோகமா இருப்பீங்க. அம்புட்டுதான் நான் சொல்வேன்”

பாட்டி யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் தானே திரும்பிப் படுத்துக் கொண்டது.

அனைவரிடமும் விடைபெற்று வேலவன் சாரின் வீட்டுக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டோம்.

“”நான் வேணா நெய்வேலி சேர்மன்கிட்ட பேசி பர்மிசன் வாங்கித் தரேன். உங்க ஊரு மண்ணை எடுத்துட்டு போறீங்களா?”

மாமாவின் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. சந்தோஷமாக தலையாட்டினார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் நானும் மாமாவும் நெய்வேலியில் இருந்தோம். வேலவன் சாரே தன் வண்டியில் எங்களை அனுப்பி வைத்தார். சேர்மனின் உத்தரவின் பேரில் நெய்வேலியில் அதிகாரிகள் எங்களை வரவேற்று மைன்ஸூக்கு அழைத்துச் சென்று அத்திப்பட்டு கிராமம் இருந்த நிலப்பகுதியைக் காட்டினார்கள்.

அந்த இடத்தை கண்டதும் மாமா சாமி வந்தவர் போலாகிவிட்டார். கண்களில் கண்ணீர் வழிய இரு கைகளையும் மேலே தூக்கி கும்பிட்டவாறு நடக்க ஆரம்பித்தார். நானும் கூட வந்த அதிகாரிகளும் அதிசயமாகப் பார்த்தோம். கண்களைத் திறக்காமல் கைகளை மேலே தூக்கியவாறு நூறு மீட்டர் தூரம் நடந்தவர் திடீரென ஓரிடத்தில் தடுக்கி விழுந்தார். நாங்கள் பதறிப் போய் அருகில் சென்றோம். ஆனால் அவர் விருட்டென எழுந்து உட்கார்ந்து அவர் விழுந்த போது அவரின் கைகள் குவிந்திருந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம் மற்ற இடங்களிலெல்லாம் பாறை போல் இறுகியிருந்த மண் அந்த இடத்தில் மட்டும் மணல் போல இளகியிருந்தது. அந்த இடத்திலிருந்த மண்ணை சாக்கில் நிரப்ப ஆரம்பித்தார். சாக்கு நிரம்பவும் இளகிய மண் காலியாகவும் சரியாக இருந்தது. அந்த இடத்தில் இப்போது உருவான பள்ளம் லிங்கம் புதையுண்டது போல் சரியாக இருந்தது. கண்ணால் பார்த்த என்னாலேயே நம்ப முடியவில்லை.

மாமா அங்கிருந்து மண் மூட்டையுடன் சேலம் பஸ் ஏறி விட்டார். நான் வேலவன் சார் வண்டியை விருத்தாசலம் அனுப்பி விட்டு, சென்னைக்கு பஸ் ஏறினேன். வீட்டிற்கு சென்று சேர இரவு பதினொன்றாகிவிட்டது.

காலை ஆறு மணிக்கு போன் அடித்தது. யாராயிருக்கும் என்று எடுத்தால் வேலவன் சார். ஞாயிற்றுக்கிழமை காலையில் போன் செய்கிறாரே? முக்கியமான விஷயமாக இருக்குமோ?

“”சார் வணக்கம்”

“”வணக்கம் சந்துரு தூக்கத்துல எழுப்பிட்டனா?”

“”பரவாயில்ல சார்… எதுனாச்சும் முக்கியமான விஷயமா?”

“”முக்கியமான விஷயம் மட்டுமில்ல. துக்கமான விஷயம். அதைவிட அதிசயமான விஷயம், நேத்து ராத்திரி பூவாயி பாட்டி செத்துப் போச்சு”

– கோ.சந்திரசேகரன் (செப்டம்பர் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *