படையல் துணி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 5,931 
 

துணிக்கடையிலேயே ஆரம்பித்துவிட்டது எனக்கும் என் மனைவிக்குமான முரண்.

தீபாவளி நெருக்கம். கடையில் கூட்ட கசகசப்பு. தரை தளத்தில் புடவையைத் தேர்வு செய்யத் தொடங்கியதுமே என் மனைவி, ”படைக்க ஒரு வேட்டி துண்டு எடுத்து வந்துடுங்க.” சொன்னாள். அவளால் மாடி ஏற முடியாது. முழங்கால், முட்டி வலி.

”வேணாம் பிரமிளா ! கைலி எடுத்துக்கலாம் !”

”கூடாது.! வேட்டி துண்டு வைச்சுதான் படைக்கனும்.” முகத்தைக் காட்டினாள்.

அடுத்த விநாடி எனக்கும் சுர் ஏறிவிட்டது. பொது இடத்தில் எப்படி காட்ட ? அப்படியே காட்டினாலும் அது அநாகரீகம். மனஸ்தாபம். மறு பேச்சு பேசாமல் அதே முகத்துடன் மாடி ஏறி…… வேண்டா வெறுப்பாய் ஒரு வேட்டி ஒரு துண்டு வாங்கி அப்படியே இறங்கினேன்.

என் முகத்தைப் பார்த்த அவளுக்கு என்னைப் புரிந்து விட்டது. அவளுக்குள்ளும் கோபம். வேறு பேச்சு ஏதும் பேசாமல் புடவை எடுத்தாள். நான் பணம் கொடுத்தேன்.

ஹீரோ வண்டியில் பேசாமல் ஏறி, பேசாமல் திரும்பினோம்.

வீடு வந்து உள்ளே நுழைந்ததுமே, ”ச்சே ! இந்த வீட்ல சாமின்னாலே சண்டை!” கையில் வைத்திருந்த துணிப்பைகளைத் தொப்பென்று போட்டு வெடித்தாள்.

எனக்குள்ளும் குமுறிக்கொண்டிருந்த கோபம். சட்டென்று பீரிட்டது.

”ஏய்! என்ன சொல்றே? நான் உன்னைச் சாமி கும்பிட வேணாம்ன்னு சொன்னேனா ? இல்லே…. நான் கும்பிடலை, நீயும் கும்பிட வேணாம்ன்னு கோயில் குளம்ன்னு அழைச்சுப் போகாம இருக்கேனா ?! தேவை இல்லாதது செய்ய வேணாம் என்கிறதுதான் என் புத்தி. தெரிஞ்சுக்கோ.”

எங்கள் சத்தம் கேட்டு அறையில் படித்துக்கொண்டிருந்த நிர்மல், விமல் மகன்கள் வெளியே வந்தார்;கள். பொறியியல் படிப்பு.

”எது தேவை இல்லாதது ? நரகாசூரனுக்கு வேட்டி வைச்சுதான் படைக்கனும் !” பிரமிளா கறாராய்க் கடுகடுத்தாள்.

”அவன் சொன்னானா ? அவன் கட்டி பார்த்திருக்கிறீயா ? அதான் ஐதீகமா ? யார் சொல்லிக் கொடுத்தது, எப்படி வந்தது. முன்னவங்க செய்ததுதான் ஐதீகம்ன்னா நீயும் அவர்களைப் போல் கம்பு, கேழ்வரகு தின்றீயா ? எந்த தெய்வம் படைச்சதை எடுத்துப் போய் கட்டிக்குது, திங்கிகுது. மனுசனுக்குத் தேவையானதைப் படைக்கிறோம் தின்கிறோம். இதுதான் நடைமுறை.”

”அப்பா இருந்தவரை படைச்ச வேட்டி, துண்டு உபயோகப்படுத்தினார். இப்போ அவர் இல்லே. அதனால் தேவை இல்லே. உபயோகப்படுத்தாதை ஏன் படைச்சு வைச்சு அடுக்கனும். இல்லே வயதானங்கவளைத் தேடிப் பிடிச்சுக் கொடுக்கனும். அப்படி கொடுத்தாலும் அவுங்க நிறை மனசோட வாங்குறாங்களா ? ஏதோ குறைன்னு நெனைச்சு அரை மனசா வாங்கிப் போய் கட்டிப்பாங்களோ தூக்கிப் போடுவாங்களோ யார் கண்டது. கைலி எடுத்தா எனக்கு உபயோகப்படும்ன்னுதான் எடுக்கச் சொன்னேன் நினைவு வைச்சுக்கோ.” சீறினேன்.

பதிலுக்கு பிரமிளா ஏதோ சொல்ல வாயெடுக்க……

”அட நிறுத்துங்க உங்க சண்டையை…. ” என்று நிர்மல் சொன்ன அடுத்த விநாடி…..

விமல், ”அப்பா ! நீங்க செத்தபிறகு அம்மா உங்க விருப்பத்தை நிறை வேத்துவாங்க. இப்போ தாத்தா ஆத்மா சாந்தி அடைய அம்மா ஆசை நிறைவேத்துங்க. வேட்டியை நாங்க உபயோகப்படுத்தறோம்.” சொன்னான்.

சரிதானே ! இருவரும் ஒரு சேர வாயடைத்து ஒருவரையொருவர் பார்த்தோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *