பசி படுத்தும் பாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 5,490 
 

“சீக்கிரம் அஞ்சலி..மணியாகிட்டு இருக்கு”இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து அமர்ந்தபடியே பரபரத்தான் மனோகரன்.

வாண்டுகள் அமுதனும்,அகிலனும் கூட ஏறியாகிவிட்டது..வீட்டைப்பூட்டிக்கொண்டு பின் சீட்டில் தொற்றிக்கொண்டாள் அஞ்சலி.

கோடை விடுமுறை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரபல சர்க்கஸ் கலைநிகழ்ச்சியை காண செல்கிறார்கள் மனோகரன் குடும்பத்தினர்.

மனோகரனுக்கு நகரின் பல இடங்களில் சாப்பாட்டு கடைகளும்,குளிர்பான கடைகளும் இருக்கின்றன.இருபது பேருக்கு சம்பளம் கொடுத்து,ஆயிரக்கணக்கில் தினசரி வருமானம் வந்தபோதிலும் பார்த்துப்பார்த்து செலவு செய்வதில் மனோகரன் நிபுணன்.

இதோ சர்க்கஸ் இடைவேளையில் கூட நொறுக்குத்தீனிகளுக்காக செலவு வைத்து மனோகரனை எரிச்சல் அடைய செய்துவிடக்கூடாது என்று அஞ்சலியே வாழைக்காய் சிப்ஸ்_சும் ,பிளாஸ்க்கில் காபியும் கொண்டு வந்துவிட்டாள்.

வண்ண வண்ண வளைவுத் தோரண வாயிலோடும்,பிரமாண்ட தூண்களோடும் ஆரவாரமாக வரவேற்றது சர்க்கஸ் கூடாரம்.

மிகப்பெரிய போகஸ் லைட் நூற்றி எண்பது டிகிரி கோணங்களில் சுழன்று ஒ ளியை உமிழ்ந்து அருகாமை கிராமங்களுக்கு சர்க்கஸ் கம்பெனி வந்திருப்பதை ஆகாயமார்க்கமாக விளம்பரப்படுத்தியது.

“நீங்க..உள்ளே போய் இடத்தை பார்த்து உட்காருங்க ..நான் பின்னாடியே வர்றேன்”என்று மனோகரன் சொல்ல,குதூகலத்தோடு ஓடிய குழந்தைகளை வழிமறித்தான் ஒருவன்.

அவனது கையில் விதவிதமான வண்ணங்கள்,வடிவங்களில் ஐஸ்கிரீம் கிண்ணங்கள் அடுக்கப்பட்ட டிரே இருந்தது.

“இந்தாங்க…ஆளுக்கு ஒன்னு சாப்பிடுங்க…பைசா வேண்டா…எல்லாம் டிக்கெட்ல சேர்ந்தி தான்..ம்..”அந்த இந்திக்கார பையன் சொல்ல..ஐஸ்கிரீம் கிண்ணத்தை கையில் வாங்கி அதிலிருந்து குழந்தைகள் ஆளுக்கொரு விள்ளல் வாயில் வைத்த நேரம்…..

“ம்…ஆளுக்கு பத்து ரூபா கொடுக்க…”குரல் தொனியும்,உடல் மொழியும் மாறி இந்திக்காரன் குரல் கொடுக்க…வாயில் வைத்த ஐஸ்கிரீம் எச்சிலோடு சேர்ந்து கரைந்து ஒழுக ..அழ ஆரம்பித்தார்கள்..குழந்தைகள்.

அந்தநேரம் சரியாக மனோகரனும்..அஞ்சலியும் உள்ளே நுழைய “அம்மா..பாருங்கம்மா..அந்த அண்ணன் கேட்காமலே ஐஸ்கிரீம் தந்துட்டு இப்ப காசு கேட்டு பயமுறுத்தறாங்கம்மா’..அழுகையோடு கூற.

“இது என்ன அநியாயம்..எங்க பசங்களுக்கு என்ன வாங்கித்தரனும்னு எங்களுக்கு தெரியாதா..?உன்னை யாரு கொடுக்கச் சொன்னது..வா உங்க மேனேஜர்கிட்ட..வர்றவங்களை இப்படி இன்சல்ட் பண்ண சொல்லி சம்பளம் கொடுக்கறாங்களா..உனக்கு…?”காட்டமான அஞ்சலி கேட்க..கையமர்த்திய மனோகரன் இருபது ரூபாயை அந்த ஐஸ்கிரீம் விற்கும் பையனிடம் கொடுத்துவிட…அனைவரும் காட்சிக்கூடத்திற்குள் சென்றனர்.

அஞ்சலிக்கு சர்க்கஸ் சாகஸங்களில் ஏனோ மனம் ஒட்டவில்லை…இரண்டரை மணிநேரம் மனக்குழப்பத்தோடு கழிந்தது.

வீடு திரும்பும்போது கேட்டேவிட்டாள்.

“என்னாச்சு..உங்களுக்கு..அஞ்சுரூபா செலவழிக்கவே ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பீங்க..அநியாயமா நம்ம புள்ளைங்க கிட்ட ஐஸ்கீரீமைக் கொடுத்து வழிபறி மாதிரி இருபது ரூவா கேட்கறான்..கடனேன்னு கொடுத்துட்டு வர்றீங்களே…”

அஞ்சலி இன்னிக்கு நான் பல கடைகளுக்கு முதலாளி..பலபேருக்கு பிழைப்பு கொடுக்கறவன்..ஆனா சின்ன வயசுல பஸ்ஸ்டாண்ட்ல பஸ்,பஸ்ஸா ஏறி சோன் பப்டியும் ,சோளப்பொரியும் வித்தவன்..”

“எந்த குழந்தை அழுதுன்னு பார்த்து அது முகத்துக்கு நேரா பொட்டலத்தை நீட்டுவேன்..அந்த குழந்தை வாங்கிகிட்டு அழுகையை நிறுத்திட்டா..எப்படியும் அந்தத்தாய் காசு கொடுத்துடுவா…!அது அப்ப வலியமா ஏமாற்றினதா எனக்கு தோணல..பத்துரூவா ஏவாரம் பார்த்தா எட்டணா எனக்கு கமிஷன் கிடைக்கும்..ஒருவேலை பசி போக்கிக்கலாம்னு தான் தோணுச்சு…அது மாதிரியான நிர்பந்தம் அந்த பையனுக்கும் இருந்திருக்கலாம் இல்லியா..?”என்றான் மனோகர்.

கணவனின் விளக்கத்தில் நெகிழ்ந்த அஞ்சலி ‘அதுசரி..கல்லுலயே நார் உரிச்சிருக்கான்னா…அந்த பையன் எதிர்காலத்துல ஜஸ் பேக்டரிக்கு ஓனர் ஆனாலும் ஆச்சர்யமில்லை’என்க வீடு சிரிப்பலையால் நிறைந்தது .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *