நொறுக்குத் தீனி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 3, 2022
பார்வையிட்டோர்: 2,568 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, மாமியாளும் – மருமகளும் இருந்தாங்க. ரெண்டு பேருமே கைம்பொண்டாட்டிக. சொத்து பூராவும் மாமியா பேருல இருக்கு. அதனால, மாமியா, மருமக மேல அதிகாரஞ் செய்ய ஆரம்பிச்சிட்டா.

மாமியா, நொறுக்குத் தீனி எக்கச் செக்கமாத் திம்பாளாம். எப்பப் பார்த்தாலும் திண்டுகிட்டே இருப்பாளாம். திங்கறத மருமகளுக்குத் தரவே மாட்டாளாம். மருமகளும் பொறுத்துப் – பொறுத்துப் பாத்திட்டு, ஒரு நாளக்கி, இவள நல்லா ஏமாத்தணும்ண்டு நெனச்சுக்கிட்டிருந்தா. இருக்கயில, மாமியா பயறு வேக வச்சிட்டு, கடைக்குப் போயிட்டா, போகவும்.

இந்தச் சமயம் பாத்து, பயறெல்லாத்தயும் மோந்து, பானக்குள்ள போட்டுக்கிட்டு மருமக தண்ணி எடுக்க ஆத்துக்குப் போயிட்டா. மாமியா வந்து பாக்கயில, வெந்துகிட்டிருந்த பயறக் காணம். ‘அடி பாதகத்தி! அவ வாயில மண்ணப்போட, பூராத்தயும் அள்ளிக்கிட்டுப் போயிட்டாளே! வரட்டும் பேசிக்கிறேண்டு, கோவத்தோட இருக்கா.

இங்க தண்ணியெடுக்கப் போனவ, ஆத்தங்கரயில இருந்த பிள்ளாரு கோயில்ல ஒக்காந்து திண்டுகிட்டிருக்கா. இதப் பாத்த பிள்ளாரு சாமி, மளிச்சிண்டு வெளிய தவ்வி, இவ முன்னால ஒக்காந்து, எனக்கு கொஞ்சம் குடுண்டு கேட்டுச்சு. இவ, தர மாட்டேண்ட்டு, பயறு பூராத்தயும் திண்டுபிட்டு, தண்ணிய எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்திட்டா. பயறு தர மாட்டேண்டதனால, பிள்ளாரு, அண்ணைக்கிருந்து கோயிலுக்குள்ள போகாம, வெளியவே ஒக்காந்துகிட்டிருந்திச்சு. அந்த பிள்ளாரு போகவே இல்ல. போக மாட்டேண்டுது.

ஊர்ல, சக்கிலியன விட்டுச் சாட்ட சொல்லிட்டாங்க. எப்டிண்டா – ஊர்ல இருக்ற எல்லாருந் தனித்தனியா வந்து, பிள்ளாரப்பன கோயிலுக்குள்ள போக வைக்கணும்ண்டு சக்கிலிய சாட்டுறர்.

அந்தப்படி, சின்னப் பிள்ளைக மொதல் பெரியாளுக வர இருக்ற ஆம்பள – பொம்பள எல்லாரும் வந்து, தனித்தனியா கும்பிட்டு வணங்கி. கோயிலுக்குள்ள போங்க பிள்ளாரேண்டு சொன்னாங்க. யாரு சொல்லுக்கும் பிள்ளாரு கட்டுப்பட மாட்டேங்குது. உள்ளயும் போக மாட்டேங்குது.

கடசியா, இன்னும் யாராவது வராம இருக்காங்களாண்டு பூசாரி கேட்டாரு. நொறுக்குத் தீனி திங்கிறவ, மருமக வல்லண்டு சொன்னாங்க.

சொல்லவும், அவளப் போயிக் கூட்டிட்டு வாங்கண்டு சொன்னாரு. சொல்லவும், கூட்டத்ல ஒரு ஆளப் போகச் சொன்னாங்க. சொல்லவும். ஒருத்த போயிக் கூட்டிக்கிட்டு வந்தா. அவ வாரா,

வந்தவ, நேரா கோயிலுக்கு முன்னால போனா. இவளப் பாத்திட்டு பிள்ளாரு பரக்கப் பரக்க முளிச்சுச்சு. கிட்டத்ல போனா. போயி, ‘பிள்ளாரே இப்ப ஒழுங்கா உள்ள போறியா இல்ல, ஓ….ம் புடுக்குல ஒரு எத்து எத்தவாண்டு சொன்னா . சொல்லவும், இவ இருக்ற சீருக்கு – எத்துனாலும் எத்துவாண்ட்டு, பிள்ளாரு, கோயிலுக்குள்ள போயிருச்சு. அவளுக்கு மாமியா மேல கோவம். பாவம் பிள்ளயாரு என்னா செய்வாரு.

இவ சத்தியப் பாராட்டி, அந்த ஊரு ஆளுக, இவ பேருல அந்தக் கோயில் நெலத்தப் பூராம் எழுதி வச்சுட்டாங்க.

இவளுக்கு ஒண்ணுமே புரியல. இவ்வளவு சொத்தக் குடுத்த பிள்ளாருக்கு, இவ்வளவூண்டு வெந்த பயறக் குடுக்க மாட்டமண்ட்டோமேண்டு மனசுக்குள்ள வெக்கப் பட்டாளாம்.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *