நேற்றைய தவறுகள்… இன்றையத் திருத்தங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 5,366 
 

வினிதா வீட்டில் துடைத்து வைத்தாற்போல் நாதிகள் இல்லை.

நானும் அவளும் வெகு அருகில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம்.

சில பல வருடங்களுக்குப் பிறகு…. சற்று முன்

இப்போதுதான் நானும் வினிதாவும் எதிர்பாராத விதமாக கடைத்தெருவில் சந்தித்தோம். இருவரும் தனித்தனி ஆளாக நின்றதால் அறிமுகப் புன்னகை.

” நலமா..? ” நான்தான் முதலில் விசாரித்தேன்.

” நலம் ” சுருக்கமான பதில்.

அப்புறம் நெருங்கி…

” எப்படி இங்கே…? ”

” இரண்டு வருடங்களாக வாசம். சொந்த வீடு…நீங்க…? ”

” ஒரு வருசமா…பூர்வீகம்.”

பின் ஜனரஞ்சக விசாரிப்புகளுக்குப் பின்…

” வீட்டுக்கு வாங்க…” அழைத்தாள்.

சென்றேன்.

காபி கொடுத்து ஒரு சில வார்த்தைகளுக்குப் பிறகு அடுத்து,, எங்களுக்குள் என்ன பேசுவதென்று தெரியவில்லை.

மௌனம். …!

இவளும் நானும் பால்ய கால் நண்பர்கள். கல்லூரிக்கு வந்து திருமணம் வரை வந்தவர்கள்.

எவரும் தடை போட்டு பிரிக்காமலிருந்தால் எங்களுக்குள் திருமணம் முடிந்திருக்கும்.

விதி…. முட்டுக்கட்டைப் போட்டு பிரித்துவிட்டது.

இருவருக்கும் திருமணம் வேறு வேறு இடங்களில் முடிந்து எதிரெதிர் திசைகளில் பயணமென்றாலும் என்னைப் பற்றி அவளுக்கும், அவளைப் பற்றி எனக்கும் சேதிகள் காதில் விழுந்து முக்கால்வாசி… விஷயம், விபரங்க ள் அத்துப்படி.

வினிதா நான்காண்டுகளுக்கு முன் கணவனை இழந்துவிட்டாள். இரு ஆண்பிள்ளைகள் ஆளாகி வெளிநாட்டில் வசிக்கின்றனர். தனியே வாழ்கிறாள்.

நானும் அப்படியே…!

நான் அவள் முகத்தைப் பார்த்தேன்.

” என்னப் பார்க்குறீங்க..? ” – அவளும் என் கண்களைச் சளைக்காமல் பார்த்து வெகு நேரத்திற்குப் பிறகு கேட்டாள்.

” ஓ…ஒன்னுமில்லே. பால்ய பழைய நினைவுகள்…”

”……………….”

” உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா..? ”

” இல்லே…”

” எனக்கிருக்கு..! ”

” என்ன…? ”

” நாம ரெண்டு பேரும் ஒரே ஊர்லேர்ந்து ஒண்ணா அரசாங்க பள்ளிக்கூடம் போனது. இப்போ என் மனசுல படம் ஓடுது.”

எனக்கும் வினிதாவிற்கும்…மூன்று வயது வித்தியாசம். அவள் ஒன்றாம் வகுப்பு. நான் மூன்றாம் வகுப்பு. இருவரும் புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு சேர்ந்து சென்றோம் அப்போது இவள் புள்ளிப் போட்ட சட்டையும், பூப்போட்ட பாவாடையும் அணிந்திருந்தாள். தலையில் குட்டையாய் இரட்டைச் சடைகள்.

நான் நீலக்கலர் டவுரசும். வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தேன். அவளுக்குள்ளும் அது படமாக ஓடியிருக்கும்போல….

” அப்புறம்…? ” என்னைப் பார்த்தாள்.

” நீயும் நானும் ஜட்டி போட்டுக்கிட்டு குளத்தங்கரை படிக்கட்டு உட்கார்ந்து குளிச்சது ஞாபகமிருக்கு. ”

” ஐயே….!!!…” வெட்கப்பட்டாள்.

” அப்புறம்…நாம கல்லூரியில் ஒண்ணா படிச்சது.”

”ம்ம்ம்…..”

” நாம சேர்ந்து போற, பேச்சு, பழக்கத்தை வைச்சு…. ஊர் ஒரு மாதிரியா பேசுனது. அதனால் கொஞ்சம் விலகி இரவில் சந்திச்சோம். ”

”……………………..”

” நாம முதன் முதலா எந்த ராத்திரி,எப்போ, எப்படி சந்திச்சோம்… .நினைவிருக்கா ..? ”

” ………………….”

” அன்னைக்கு…. அம்பது கிலோ மீட்டர் அப்பாலுள்ள நம்ம உறவுக்கார வீட்டுக் கலியாணம். அதில் கலந்துக்க நம்ம ரெண்டு பேர் அம்மா, அப்பாக்களும் முதல் நாள் சாயந்திரமே கிளம்பி போய்ட்டாங்க. உனக்குத் துணை பாட்டி. நான் தனி. கைபேசியில் கலந்து பேசி நீயும் நானும்… உன் வீட்டுல பாட்டி தூங்கிய பிறகு சந்திச்சோம். வயசுக்கோளாறு… படிச்சிருந்தும்…. அன்னைக்கு நாம் தவறிட்டோம். ஆர்வம்….அப்புறம்… சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அப்படி. உன் தாய்மாமன் பிடிவாதமாய் உன்னைக் கட்டிக்கணும்ன்னு ஒத்தக்கால்ல நிக்கிலேன்னா…. நம்ம திருமணம் முடிந்திருக்கும். விதி…” நிறுத்தினேன் .

அவள் வெகுநேரமாக தலைக்குனிந்து தரையைப் பார்த்தபடி இருந்தாள்.

” வினு….”

” சொல்லுங்க…? ”

” வயசு நமக்கு அம்பது, நாப்பத்தைந்தைத் தொட்டாலும் நீயும் நானும் அன்னைக்கு உள்ளது போலத்தான் இருக்கோம். சமய சந்தர்ப்பம் சாதகமா இருக்கு. நீ என்ன நினைக்கிறே..? ” அடிக்கண்ணால் பார்த்தேன்.

” வேணாம்…. ” மறுத்தாள்.

”ஏன்…?”

” தெரிந்து செய்யிறது தப்பு. தெரியாமல் செய்யிறது தவறு. தப்பு வேணாம் ! … நட்பாய் இருக்கலாம் …? ” என்றாள்.

எனக்கும் உரைத்தது.

மனசு நிச்சலமானது. முகம் மலர்ச்சியானது.

” ரொம்ப சரி வினிதா. ஒருவருக்கொருவர் உதவியாய் நல்ல நட்பாய் இருக்கலாம்.” என்றேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *