நேற்று வேறு இன்று வேறு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 19,187 
 

வினிதா தலைச்சன் பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறாள். முன்பைவிடக்கொஞ்சம் கறுத்து, கன்னத்தில் சதை வைத்துப் பூசினாற் போன்று இருந்தாள். பார்வதிக்கு அவள் ஒரே பெண். அதனால் பார்த்து பார்த்துச் செய்தாள்.

குங்குமப்பூ போட்ட பால், தினமும் ஒரு கீரை, பத்து மணிக்கு ஆரஞ்சு ஜூஸ், மதியம் மூன்று மணிக்குத் தக்காளி ஜூஸ் என்று, என்ன தான் பார்த்துச் செய்தாலும் அவள் தாய்மையின் பூரிப்பு உடலில் தான் தெரிந்ததே தவிர அவள் முகத்தில் இல்லை.

சதா அவள் கண்களில் ஒரு பயம். சூன்யமான பார்வை, சிரிக்கும் போது கூட அதில் உண்மையான மலர்ச்சி இல்லை. ஒருவேளை முதல் பிரசவம் என்பதால் பயப்படுகிறாளோ?

‘வினிதாவின் மாமியார் அப்படியொன்றும் ரொம்ப நல்லவள் அல்ல. இருந்தாற்போலிருந்து, பைத்தியக்காரத்தனமான பிடிவாதம் பிடிப்பாள் வரதட்சணையே வேண்டாமென்று சொல்லிவிட்டுத் திருமணம் முடிந்ததும் ‘அதை வாங்கி வா, இதை வாங்கிவா’ என்று சொன்னவள் தானே! இப்பொழுது ஏதாவது பெரிதாக நிபந்தனை போட்டிருப்பாளோ?

“வினி, குழந்தைக்கு இரண்டு பவுனில் செயினும், இரண்டு பவுனில் காப்பும், அரைப்பவுனில் மோதிரமும் போடலாம்னு இருக்கேன்.

“அதுக்கெல்லாம் இப்ப என்னம்மா அவசரம்? ஏதாவது வேணுமின்னா நான் கேட்கிறேன், ஆளை விடு” விருட்டென்று படுக்கையில் சாய்ந்து கொண்டாள் வினிதா.

பிரசவநாள் நெருங்க, நெருங்க வெளியில் சொல்ல முடியாத, விவரிக்க முடியாத உணர்ச்சிக் குவியலில் அவள் நெஞ்சு தடுமாறியது.

தயங்கித் தயங்கி அம்மாவிடம் அவளே சொன்னாள்.

“அம்மா எனக்குப் பிறப்பது ஆண் பிள்ளையாக இருந்தால் தான் நான் மாமியார் வீடு போக முடியும். பெண்ணாக இருந்தால் இங்கேயே இருக்க வேண்டியது தான்.”

“யார் அம்மா அப்படிச் சொன்னது?”

“என் மாமியார்!”

“அடிப்பாவி, அவ பெண்ணா, பேயா? இதென்ன கொடுமை?” அலறிவிட்டாள் பார்வதி. பின், “உன் கணவர் என்ன சொன்னார்?” நிதானமாகக் கேட்டாள்.

“அவர், அம்மா பேச்சுக்கு எதிராக எப்பொழுது பேசியிருக்கிறார்?” வினிதா எரிச்சலானாள்.

“வினிதா! இதுதான் உன் கவலையா? நீ கவலைப்படாதே! கடவுள் நம்மைக் கைவிட மாட்டார். உனக்கு ஆண் பிள்ளைதான் பிறக்கும்.” என்று உறுதியாகக் கூறினாள் பார்வதி.

மகளைத் தேற்றினாலும் உள்ளுக்குள்ளே பயமாக இருந்தது பார்வதிக்கு வினியின் மாமியார் குணம் தெரிந்தது தான். அவள் பிடிவாதம் பிடித்தால் பிடித்தது தான்.

இரண்டு வருடம் குழந்தை இல்லாமல் இருந்தாள். அப்படியே இருந்திருக்கலாமோ?

வலி கண்டதும் வினிதாவை ஆஸ்பத்திரியில் சேர்த்துத் தெய்வத்தையெல்லாம் வேண்டி நின்றாள் பார்வதி.

ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ‘குவா’ச் சத்தம் கேட்டதும், பார்வதி பதட்டத்துடன் அறையினுள் ஓடினாள்.

அதிர்ச்சியாலும், பயத்தாலும் மயக்கமாயிருந்தாள் வினிதா.
சுறுசுறுப்பாக இயங்கினாள் பார்வதி. பணம் கை மாறியது.
கண்விழித்த வினிதா முதலில் பக்கத்தில் பார்த்தாள். அதைக் கண்ணுற்ற பார்வதி அருகில் சென்று “வினிதா, ஆண் குழந்தைதான் பிறந்திருக்கு, என் பேரன் என் வயிற்றில் பால் வார்த்து விட்டான்.” என்று படபடப்பாகப் பேசினாள்.

“அம்மா, கடவுள் காப்பாத்தாவிட்டாலும் நீ என்னைக் காப்பாத்த வைச்சிடுவேன்னு எனக்குத் தெரியும் அம்மா.”

“என்…ன… சொ…ல்…றே வினிதா?”

“ஆமாம்மா, உண்மையைச் சொல்லு, இந்தக் குழந்தை என்னுடையது தானா?”

“ஏம்மா வினிதா இப்படிக் கேட்கிறே? உன் குழந்தை தான்” அவசரமாகச் சொன்னாள்.

“அம்மா, என் பெண் குழந்தையை யார் கிட்டக் கொடுத்தே? அந்தக் குழந்தையைக் கொண்டாம்மா?” கண்களில் நீர் வழியக் கேட்டாள்.

“அது… வந்து” சமாளித்தாள் பார்வதி.

“அம்மா, உன் பெண் நல்லா வாழணும்கிற உன் ஆசை நியாயமானதுதான். ஏன்னா நீ ஒரு தாய். அதே போல் என் பெண் நல்லாயிருக்கணும்னு நான் நினைக்கிறது தப்பில்லையே! அவர் என்னைத் தள்ளி வைச்சிடுவாரோன்னு பயந்து என் குழந்தையை நீ மாத்திட்டே. ஆனால், நான் உயிரோடு இருக்கிறவரையில் என் குழந்தை என்கிட்டதான் வளரணும்னு நான் நினைக்கிறேன். என் குழந்தை அனாதையா வளருவதை நான் விரும்பமாட்டேன். எனக்குப் பெண் குழந்தை தான் பிறக்கும்னு டாக்டர் பரிசோதனை மூலம் சொல்லிட்டார். அதை அழிச்சிடுன்னு என் கணவரும் சொன்னார். நான் மறுத்துட்டேன். நேற்று வரை அதை நினைச்சு வருத்தப்பட்டது உண்மைதான். ஆனால் இன்று நான் தாயாகிவிட்டேன் என்ன இடையூறு ஏற்பட்டாலும் என் குழந்தையை இழக்க நான் தயாராயில்லே. உனக்கும் நான் சுமையா இருக்கமாட்டேன். என் சொந்தக் காலில் நின்னு என் குழந்தையை நான் காப்பாற்றிக் கொள்கிறேன். ப்ளீஸ், சீக்கிரம் என் குழந்தையைக் கொண்டாம்மா நான் பார்க்கணும்” என்று தீர்மானமாகச் சொன்னாள் வினிதா.

பார்வதி அவசர அவசரமாக ஓடினாள் குழந்தையை மாற்ற.

– 18-05-1986

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *