கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 11,099 
 

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெறும் சிறுகதை

ஏழெட்டு மணிநேர பயணக் களைப்பிற்குப் பின் ஓட்டலைத் தேடிப் பிடித்து உள்ளே நுழைந்தவுடன் படுக்கையில் விழுந்தால் போதும் என்றிருந்தது. அலுப்பைத் தரும் நெடுநேர பேருந்துப் பயணம். உடலையே குலுக்கிப் போட்டது போல மோசமான சாலைகள். ஊமை வெயில். ஜன்னல் வழியாக அறையும் காற்று. உட்கார்ந்து வந்ததே ஓடிவந்ததைப் போன்ற களைப்பைத் தந்திருந்தது.

உள்ளே வந்தவுடனேயே அனைவரும் கழிப்பறைக்கே விரைய வேண்டியிருந்தாலும் மூன்று குழந்தைகள் முதலில். பிறகு ஐந்து பேரும் சோம்பல் முறித்துக்கொண்டு படுக்கையில் கிடைத்த இடத்தில் முதுகு சாய்த்து ஓய்வெடுத்தனர். வெளியூர் பிரயாணங்களில் பிரகாஷுக்கு இது பெரும் பிரச்சனை. ஐந்துபேருக்கு ஓர் அறையின் இரட்டைக் கட்டில் போதாது. இரண்டு அறை எடுக்கவும் முடியாது.

நெனப்புஉள்ளிணைப்புத் தொலைபேசி மூலமாக ஐந்து காபி ஆர்டர் செய்துவிட்டு பெட்டிகள் உட்பட சாமான்களை அடுக்கிவிட்டு காத்திருந்தான். அரைமணி நேரமாகியும் வராது போகவே மறுபடி நினைவூட்டினான். “”இன்னும் வர்லியா சார்..?” என்று கேட்ட ரிசப்ஷன் குரல். சிறிது மெüத்திற்குப் பின், “”சார் பத்து நிமிஷத்ல வந்துடும்” என்றது.

குழந்தைகளும் மனைவியும் அசதியில் தூங்கிவிட்டிருந்தனர். கட்டில் விளிம்பில் பக்கவாட்டில் திரும்பிப் படுத்துக் கொண்டான். ஒரு பென்சில் பாக்ஸில் அடுக்கப்பட்டதைப் போல அனைவரும் ஒரே கட்டிலில். கண்கள் தூக்கத்தில் செருக ஆரம்பித்தபோது “கர்ர்ர்ர்’ என்றொரு எரிச்சலூட்டும் அழைப்புமணி சப்தம் கேட்டு கதவைத் திறந்தான். ஒரு செவ்வகத் தட்டில் ஐந்து காபிகளுடன் ஓர் ஆள் நின்றிருந்தான்.

அவனிடம் “”என்னப்பா காலிங் பெல் இது? ஃபயர் என்ஜின் மாதிரி” என்றான்.

வந்த ஆள் எந்த பதிலோ முகபாவ மாற்றமோ இன்றி, “”காபியை வச்சிட்டு போறேன்” என்பதாக உள்ளே நுழைய முயல. “”இரு இரு” என்று நிறுத்தி தானே கையில் வாங்கிக் கொண்டவுடன் அவன் திரும்பிப் போனான்.

“”ஏம்பா.. இங்க சிவன் கோயில் எவ்ளோ தூரம் இருக்கு?” என்று விசாரித்தபோது அருகில் வந்து, “”எட்டு கிலோமீட்டர் சார். ஓட்டல் இருந்து இடது பக்கமா போனா மெடிக்கல் ஷாப் இருக்கு. அங்க நின்னு 32ஆம் நம்பர் டவுன் பஸ் ஏறி வாட்டர் டேங்க் ஸ்டாப்பிங்னு கேட்டு இறங்கிடுங்க. அங்கிருந்து நடந்தே போயிடலாம்” என்று விவரங்களைப் பொழிந்துவிட்டு, “”ரொம்ப பிரபலமான பெருமாள் கோயில் சார்” என்று சொல்லிவிட்டுப் போனான்.

அவன் பேசிவிட்டுப் போனது மழை விட்டமாதிரி இருந்தது. படுத்திருந்த பிள்ளைகளை எழுப்பி காபி கொடுத்தான். தலைவலிக்கு கண்களை இறுக்க மூடி துண்டைக் கட்டிப் படுத்திருந்த அவன் மனைவி எழுந்திருக்கவே இல்லை. அனைவரும் காப்பி குடித்து முடித்த பின் அவளை மறுபடி எழுப்ப. அலுத்துக் கொண்டு எழுந்தவள் பாதியளவு குடித்துவிட்டு “”சூடாவே இல்லை” என்று விமர்சித்துவிட்டு படுத்துக் கொண்டாள். பயணக் களைப்பில் அனைவரும் சட்டென உறங்கிவிட. பிரகாஷ் மட்டும் வெளியே சுற்ற வேண்டிய இடம், நேரம், வாகன வசதி இவற்றைப் பற்றி யோசித்தபடியே தானும் தூங்கிப் போனான். அசதி தந்த உறக்கம் எங்கோ இழுத்துச் சென்று சுகமாய்ப் புதைத்தது.

திடுமென “கர்ர்ர்ர்’ என்ற சப்தம். மறுபடி அழைப்புமணிதான். உறக்கம் கலைந்த யாராவது எழுந்திருப்பார்கள் என பேசாமல் படுத்திருந்தான். மறுபடி “கர்ர்ர்ர்’. மிகவும் கடுப்பாகி. எழுந்து போய் படாரென கதவைத் திறந்தான். அதே ஆள் கையில் காபிகளுடன் நின்றிருந்தான்.

“”என்னப்பா?” என்றான் மிக அலுப்புடன்

“”காபி ஆர்டர் பண்ணியிருந்தீங்க சார். கொண்டாந்திருக்கேன்” என்றான் பவ்யமாக.

“”அதான் அப்பவே குடுத்தியே”

“”இல்ல சார். நான் தரல்லியே. இப்பதான வரேன்”

“”அட நீதானப்பா குடுத்தே. நான் கூட அய்யாறு சிவன் கோவில் எவ்ளோ தூரம் இருக்குன்னு கேட்டேன். நீ பெருமாள் கோவிலுக்கு வழி சொன்னியே”

சொல்வதை சற்றும் பொருட்படுத்தாமல் நேராக வினயமாகப் பார்த்து, “”நான் இப்பதான சார் வரேன்” என்றான். இப்போது பிரகாஷின் கோபம் அதிகமானது. ஆனால் ஏனோ அடுத்த நொடியே அவனைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. கோபத்தின் அலையை அடக்கிக் கொண்டு.

“”சரி. என்ன ரூம் நம்பருக்கு கேட்டாங்க தெரியுமா? இது 4.. 1..0”

“”4 1 0 தான் சார்”

“”ஒருவேளை 4….01ஆ இருக்கப்போவுது. விசாரி”

“”4 01 க்கு அரைமணி நேரம் முன்னாடியே குடுத்தேன் சார். அதுவும் அஞ்சு காபி”

புகை படிந்த நிறத்தில் சிறிய பழுப்பான வற்றிய கண்கள். மழிக்கப்படாத ஓரிரு வார தாடி மீசை. தலைக்கு வைத்த தேவைக்கதிமான எண்ணெய் வழிந்து நெற்றி பளபளத்தது. நிகோடின் பற்கள். முன்னெப்போதோ நீல நிறமாய் இருந்திருக்கும் பேண்ட். சாயம்போன பழுப்புநிறச் சட்டையின் கடைசி இரு பித்தான்கள் பூட்டப்படவில்லை. கையில் தட்டை ஏந்திக்கொண்டு காபியை தந்துவிட்டுத்தான் நகருவேன் என்பதுபோல நின்றிருந்தான். முகம் இறுகி வார்க்கப்பட்டது போலிருந்தது. முகத்தில் எல்லா அவயங்களும் சரியாகவே இருந்தாலும் ஏதோ ஒரு குறையிருந்தாலும் முகம் சோபையற்றுப் போய்விடுகிறதே! முக அழகு என்பதெல்லாம் பொய்தான் போலிருக்கிறது.

“”இப்பதானப்பா குடுத்தே. அதுவும் நீதான் குடுத்தே. எத்தனை வாட்டி குடிக்கறது. இதோ பாரு”ன்னு லேசாக கதவைத் திறந்து மேசையில் இருந்த காலி கோப்பைகளைக் காட்டினான். அவன் கறாராக அவற்றைப் பார்த்துவிட்டு மறுபடியும் அப்படியே நின்றான். போர்வைக்குள்ளிருந்து மனைவியின் குரல் “”கதவை மூடுங்களேன்” என்றவுடன், “” நீ கொண்டு போயிடுப்பா” என்று சொல்லிக் கொண்டே கதவை மூடினான். ஆனால் கையில் தட்டுடன் அவன் அசையாமல் நின்றிருந்த விதம். நகர்ந்து சென்றிருக்கும்படியாகத் தோன்றவில்லை.

சற்று நேரம் கழித்து மறுபடி “கர்ர்ர்ர்’. முதல் ஒலிப்பிலேயே எரிச்சலாக எழுந்து, “”நல்ல ஓட்டலுக்கு வந்து சேந்தேன்” என்று முணுமுணுத்துக் கொண்டே படாரெனக் கதவைத் திறந்தான். அதே ஆள்.

“”சார் காபி கப்பெல்லாம் கொண்டு போகச் சொன்னீங்களாமே? ரிசப்ஷ்ன்ல”

“”நான் கூப்டவே இல்லியே. என்னப்பா இது? பத்து நிமிஷம் படுக்க விடமாட்டேங்றியே” என்றவன், “”சரி வந்தது வந்த.. எடுத்துட்டுப் போயிடு” என்று தட்டோடு காலிக் கோப்பைகளைக் கொடுத்தான்.

“”கோவிக்காதிங்க சார். கூப்டதாலதான் வந்தேன். தோ போயிடறேன்” என்று சொல்லிப்போனான். அவன் சொன்ன விதம். தான் சொன்னதே சரி என ஊர்ஜிதமாகிவிட்டது போன்ற நக்கலாகத் தோன்றியது. அவனிடம் வாக்குவாதம் செய்ய பொறுமையற்றவனாக. ரிசப்ஷனில் சென்று புகார் செய்ய வேண்டும் என்றும், மறுபடி இந்த ஓட்டலுக்கு வரவே கூடாது என்று முடிவுசெய்துவிட்டு கதவை மூடிப் படுத்துக் கொண்டான்.

மாலை சுமார் ஐந்து மணிக்கு மறுபடி கர்ர்ர்ர் என்று சப்தம் வர யாரும் எழுந்திருக்கவேயில்லை. இரண்டு மூன்றுமுறை அடித்துவிட்டு நின்றுவிட்டது. அப்போதுதான் அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்ற யோசனை குமிழ் உடைந்தது. அடிக்கடி கதவு திறக்கப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் வருகிறானோ? என்று சந்தேகம் புகைந்தது. சற்றே எம்பிப் பார்த்தபோது குழந்தைகளுக்கு அப்பால் படுத்திருந்த மனைவியின் கால் கொலுசுகள் வெளியே தெரிய, போர்வையைச் சரியாக இழுத்துவிட்டான்.

மாலை ஷாப்பிங் போகக் கிளம்பியபோது, “”காபி ஆர்டர் செய்யலாமா?” என்று பிரகாஷ் கேட்டபோது. அவன் மனைவி, “”ஐயய்யோ வேண்டவே வேண்டாம். வெளிய போய் குடிச்சிக்கலாம்” என்றாள். லிப்ட் வந்து திறந்தபோது அதே ஆள் கையில் பிளாஸ்க் வைத்தபடி நின்றுகொண்டிருந்தான். உள்ளே அனைவரும் நுழைந்த பின் 0 அழுத்தினான். தரைத் தளத்திற்கு இறங்கும் வரை தன் விரல் நகங்களைப் பார்த்துக் கொண்டே வந்தான். இவர்களை ஏற்கெனவே பார்த்ததுபோலவே காட்டிக் கொள்ளவில்லை. “என்ன ஒரு திமிர் இவனுக்கு?’ என்று பிரகாஷ் மனதுள் கறுவிக்கொண்டான்.

ரிசப்ஷனுக்கு வந்து, “”என்னப்பா ஓட்டல் இது. தர்ற காபி சூடே இல்லை. இதுல தூங்கவிடாம காலிங்பெல் வேற அடிச்சிட்டே இருக்காங்க” என்று புகாராகப் பேசினான். அங்கிருந்தவர், “”சாரி சார். இனிமே எந்தத் தொந்தரவும் இல்லாம பாத்துக்கறேன்” என்றான். அப்போது கடந்து போய்க் கொண்டிருந்த அந்த ஆள் சடக்கெனத் திரும்பி வந்து, “”சார் கோயிலுக்கா. 32ஆம் நம்பர் பஸ்” என்று ஆரம்பித்து மறுபடி அதே வழிகளை சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் விடுவிடுவென போய்க் கொண்டே இருந்தான். ஏதோ ஓர் எந்திரத்தனம் அவனுள் ஒரு சுருள் வில்லின் நெகிழ்வு போல இயங்கிக் கொண்டே இருக்கிறது என்று தோன்றியது. இந்த ஆள்தான் அடிக்கடி அழைப்புமணி அடித்து தொந்தரவு செய்வதாக புகாரிட நினைத்த பிரகாஷ் ஒரு கணம் தயங்கி, எதுவும் சொல்லாமல் வெளியே கிளம்பிப் போனான். அவனது இறுகிய முகமும் புகைநிறக் கண்களும் நிகோடின் பற்களும் அவன் மனதில் காரணமின்றி ஒட்டிக்கொண்டே வந்தது. தங்க மீனைப் போல கணநேர மறதிகளும் சதா ஒரு தேவையற்ற பதட்டமற்ற துடிதுடிப்பும் அவனுள் அலைவுற்றபடியே இருந்தன.

அனைவரும் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செலுத்தினர். பிரகாஷ் மனைவிக்கு விவரிக்க முடியாத பிரச்சனை இருந்தது. நன்றாகத்தான் இருக்கிறாள். ஆனால் எப்போதும் ஏதோ ஒரு கிலேசம். எதிலும் ஒரு திருப்தியின்மை. தனக்கு முன் எப்போதும் பார்வையை மறைக்கும் புகைமூட்டம் போல ஏதோ ஒன்று நகர்ந்துகொண்டே இருப்பதாகப் பிரமை. எதைச் செய்தாலும் அதன் பலன் அசம்பாவிதமாகவே வருமோ என்ற பயம். எதனாலும் சந்தோஷம் அடைய முடிவதில்லை. பலவித மருத்துவ ஆலோசனைகள் கேட்டாயிற்று. உறவினர் ஒருவர் சொல்லி ஜோசியகாரர் ஒருவரைப் பார்த்ததில் அவர் சொன்ன பரிகாரம்தான் இந்தக் கோயில் பயணம். பயணம் போகும்போதோ. }போன இடத்திலோ ஏதோ ஒரு சூட்சுமம் காட்டும். ஏதோ ஓர் அறிகுறி காட்டும். அப்புறம் நிம்மதிதான் என்று நம்பிக்கையூட்டியிருந்தார். அதெல்லாம் ஒன்றும் அவளுக்குப் புரியவில்லை. ஏதோ ஒரு திருப்திக்காகவே வந்திருந்தனர். சாமானியர்களின் வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது பட்டறிவுகளின் தேய்வுக்கும் அற்புதங்களின் மீதான நம்பிக்கைக்கும் உள்ள இனங்காணவியலா இடைவெளி பெர்முடா முக்கோணம் போன்றதுதான்.

கோயிலுக்குச் சென்று பிறகு வெளியே சற்று சுற்றிவிட்டு இரவு திரும்பியபோது அந்த ஆள் வாசலில்தான் நின்றுகொண்டிருந்தான். தாண்டிச் சென்ற இவர்களை யாரோ புது ஆள் போலப் பார்த்தான்.

பிரகாஷ் தன் 410 அறைக்குள் நுழைகையில் வராந்தா அருகே ஒரு பெண் நடைபாதையை துடைத்துக் கொண்டிருந்தாள். அவளிடம் சென்று “”ஏம்மா.. இந்த தாடி வச்ச ஆள் ஏன் கிறுக்கனாட்டம் இருக்கான்?” என்று கேட்டபோது, “”யாரு ஆறுமுகமா? ஐயோ! ரொம்ப நல்ல ஆள்தான் சார். கொஞ்சம் தெம்மாங்காட்டம் இருக்கும். அவ்ளோதான்” என்று அவனைப் பற்றி சொன்னாள். அந்த ஆளுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் இவனுடைய மறதி மற்றும் வினோதமான சுபாவத்திற்கு எந்த வேலையிலும் சரியாக ஒட்டுவதில்லை எனவும் இந்த ஓட்டல் முதலாளிதான் பரிதாபப்பட்டு வேலைக்கு வைத்திருப்பதாயும் சொன்னாள். அவனை வாடிக்கையாளர்களிடம் பேச விடுவதில்லை என்றாலும் சமயத்தில் தானே முன்வந்து செய்யும் வேலைகளில் சிலசமயம் ஏடாகூடம் ஆகிவிடுவதுண்டு என்றாள். “”அந்த ஆளு பொண்டாட்டி இவரை விட்டுட்டு ஒரு கொத்தனாரோட ஓடிப்போயிடுச்சு. இவரேதான் தன் அம்மாவை துணைக்கு வச்சிட்டு ரெண்டு புள்ளைங்களப் பாத்துகிறார்” என்றாள். உடைந்த குமிழ் கசிந்தது.

அப்போது அந்த ஆள் தட்டேந்திய காபி கோப்பைகளுடன் இவர்களை தாண்டிச் சென்று 410 அறை அழைப்பு மணியை அழுத்தினான். அவள் உடனே “”தே.. ஆறுமுக அண்ணே.. சார் இங்கதான இருக்காரு” என்றாள். அவன் “”காபி” என்று ஒரு வார்த்தையில் பதில் தந்தான். பிரகாஷ் அவனிடம் சென்று, “”குடுத்துட்டு போப்பா” என்று வாங்கிக் கொண்டான். அவனுடைய மற்றொரு பரிணாமத்தைப் பார்ப்பது போலிருந்தது அவனுக்கு. திரும்பிப் போனவனை நிறுத்தி ஆறுமுகம்..”” உனக்கு எந்த ஊரு?” என்றான்.

“”நத்தம் சார். இருபது கிலோமீட்டர் தூரம்தான்”

“”காலைல இருந்து இங்கயே சுத்திகிட்டு இருக்கியே. உனக்கு டியூட்டி நேரம் எப்போ?”

“”நான் இங்கயேதான் சார் இருப்பேன். எங்கியும் போவமாட்டேன். ஞாயித்துக்கிழமை மட்டும் சினேகாவையும் முத்துலட்சுமியையும் பாத்துட்டு வருவேன். காராபூந்தி பொட்டலம் வாங்கிட்டுபோய் குடுப்பேன்” என்று நிகோடின் பற்களும் கருநீல உதடுகளுமாய் சிரித்தான். முதன்முதலாக அவன் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிந்தது. எந்த உணர்ச்சியுமற்று இயந்திரமாய்த் திரிபவனுக்கும் தன் குழந்தைகள் என்றால் – அதுவும் தாயுமாகி பொத்திக் காப்பவனுக்கு எங்கிருந்து வருகிறது இந்த வாஞ்சை? மனைவி என்ன செய்கிறாள் என்று கேட்க நினைத்து கேள்வியை சுருட்டியடக்கிக் கொண்டு, “”பசங்க படிக்கறாங் ளா?” என்றபோது கையை முட்டிக்கும் கீழே இறக்கி அளவு காட்டி, “”சிநேகா இன்னும் சின்னது சார். பள்ளிக்கூடம் போவலை. முத்துலட்சுமி நாலாவது. திருக்குறள் நல்லா ஒப்பிப்பா” என்றான். நீண்டநாட்கள் பழகியவன் போல தன்னிடம் மகள்கள் பெயரைச் சொல்லி விவரிக்கும் அவன் மனதில் இருப்பது அப்பாவித்தனமா? பெருமையா? என்று பிரித்தறிய இயலவில்லை. ஆனால் அது பிரகாஷுக்குப் பிடித்திருந்தது. நெகிழ்ச்சியாக இருந்தது. உலகத்திற்கு அவன் எப்படித் தோன்றினாலும் . அவனுடைய பித்துக்குளி உலகில் அந்த இருவர்கள் மட்டுமே ஜீவித்திருக்கிறார்கள் என்று தோன்றியது. கண நேரம் என்றாலும் அதுதான் அவனுக்கு சந்தோஷமான கணம்.

“”இந்த வேலை..குடும்பம். பிள்ளைங்க.. எல்லாம சந்தோஷமா இருக்கா?” எனக் கேட்டபோது. “”ம்ம்” என்று அழுத்தமாகச் சொல்லி, “”சந்தோஷ்ம்னா என்னா? நெனப்புதாங்களே” என்றான். அது கேள்வியா அல்லது பதிலா என்று ஒருகணம் பிரித்தரிய முடிதபடி இருந்தது.

அவன்மேல் ஒரு பிரியம் உண்டானது. ஓர் ஐம்பது ருபாயை எடுத்துத் தந்தபோது “”வேணாம் சார்” என்று மறுத்தான். வற்புறுத்தியபோது “”வேணாம் சார் பெரியய்யயா பாத்தா வைவாறு” என்றான்.

“”நான் சொல்லிக்கறேன்” என்ற போதும் மறுத்தான்.

“”சரி. சிநேகாவுக்கும் முத்துலட்சுமிக்கும் காராபூந்தி பொட்டலம் வாங்கிக் குடு” என்றவுடன் மறுக்காமல் சட்டென சந்தோஷமாக வாங்கிக் கொண்டான்.

“”நாளைக்கு இருப்பீங்களா சார்? நான் புள்ளைங்களை கூப்டுட்டு வந்து காட்றேன்” என்றான். “”சரி” என்று புன்னகைத்தபடியே உள்ளே போய் கதவடைத்துக் கொண்ட பிரகாஷ் மனதில் என்னென்னவோ கதவுகள் திறந்து கொண்டன. உலகில் எத்தனை விதமான மனிதர்கள். எத்தனைவிதமான வாழ்க்கை. எத்தனை விதமான வலிகள். இந்த ஆள் வலியைக் கூட தெரிந்து கொள்ளாத உலகம் மறந்த தன் வாழ்க்கையில் தன்னை மிதக்கவிட்டுக் கொண்டு இருக்கிறான். கேள்வியற்றிருப்பவனுக்கு பூலோகம் சொர்க்கம்.

மறுநாள் காலை அறையைக் காலிசெய்து கொண்டு கிளம்புகையில் பிரகாஷ் அந்த ஆளைத் தேடினான். காணவில்லை. ஏனோ அவனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. வேறோர் ஆள் சாமான்களைக் கொண்டுபோய் ஆட்டோவில் வைத்துவிட்டிருந்தான். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாயிற்றா? என்று சரி பார்த்துக் கொண்டிருக்க, “”எல்லாம் ஆச்சு வாங்க” என்றாள் மனைவி. ஆட்டோவில் ஏறும் சமயம்.. “”சார் இருங்க” என்று ஒரு குரல் வரவேற்பகத்தில் இருந்து நிறுத்தியது. என்னவென்று விசாரிக்க அருகே போனபோது மனைவியும் உடன் வந்து, “”என்னவாம்?” என்றாள்.

“”நீங்க 410 ரும்தானே?”

“”ஆமாம். ஏன்?”

“”ரூம்ல ஏதோ விட்டுட்டிங்க போலிருக்கு. ஒரு நிமிஷம் இருங்க”

அப்போது அந்த ஆள்-ஆறுமுகம் – வந்து கொண்டிருக்க.. ரிசப்ஷனிலிருந்த மற்றொரு ஆள் “”ஏய்.. ஆறுமுகம்.. 401 ரூமுக்குப் போய் கூட்டிவிடச் சொன்னா எங்க போயிட்டே?” என்று கத்தினார்.

“”410 ரூம்தான் சார் போனேன். படுக்கை உதறினப்போ இந்த செயின் கிடந்தது. அதான் உடனே போன்ல கூப்ட்டு உங்ககிட்ட சொன்னேன்” என்றான். பிரகாஷ் மனைவியை வினாத்தனமாகப் பார்க்க. கழுத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டவள் அதிர்ந்தாள். வரவேற்பகத்தில் இருந்த ஆள் செயின் அவர்களுடையதுதானா? என்று அறிய சற்றே தயங்கியபோது. ஆறுமுகம் இடையிட்டு, “”சார் ரொம்ப நல்லவருப்பா” என்று சொல்லி புகைக்கறை படிந்த பற்கள் தெரிய சிரித்தான். பித்துக்குளி உலகிலிருந்து வந்த நிர்மலமான புன்னகை. அது யாருடைய புன்னகையோ?

பிரகாஷ் காமிராவில் தான் எடுத்திருந்த மனைவியின் போட்டோக்களில் நகையை அடையாளம் காட்டி பெற்றுக் கொண்டான். “”தாங்ஸ் ஆறுமுகம்” என்றான். அவனது நன்னம்பிக்கைக்கும் சேர்த்து.

“”சந்தோஷமா போய்ட்டு வாங்க சார். மறுபடி வந்தா இங்கயே வாங்க சார்” என்றான்.

அடுத்த நொடியே ஏதோ வைத்ததை மறந்துவிட்டது போல. விடுவிடுவென்று திரும்பிப் போனான். அநேகமாக. யாருடைய அறைக்கதைவையோ யாரோ என நினைத்து எதற்காகவோ தட்டக் கூடும்.

பிரகாஷ் மனதுக்குள் ஏனோ, என்னவோ சங்கடம் பண்ணியது.

– ஆகஸ்ட் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *