கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 9,622 
 

ஆவுடையப்பன் சாரை எனக்கு கடந்த பதினைந்து வருடங்களாக பழக்கம். அவருக்கு தற்போது வயது எழுபத்தி ஒன்பது. ஆனால் பார்ப்பதற்கு ஆறு அடி உயரத்தில் அறுபது வயதுக்குண்டான திடகாத்திரத்தோடு இருப்பார்.

இந்த வயதிலும் திம்மராஜபுரத்திலிருந்து பாளையங்கோட்டைக்கும், நெல்லை ஜங்க்ஷனுக்கும் அடிக்கடி சைக்கிளில் சென்று வருவார். அவருக்கு பி.பி., ஷுகர் போன்றவைகள் கிடையாது. தினசரி ஷேவ் செய்துகொண்டு, தலையை நேர்த்தியாகவாரி, பான்ட்ஸ் பவுடர் போட்டுக்கொண்டு மணக்க மணக்க இருப்பார். எப்போதும் வெள்ளை நிறத்தில்தான் உடைகள் அணிவார். புன்னகையுடன் இருப்பார். கணீரென்று தெளிவுடன் பேசுவார். நிறைய வாசிப்பார். வாசித்தல் மிக நல்ல பழக்கம். இறக்கும்வரை அதை எல்லோரும் தொடர வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.

அவர் தன் வீட்டில் ஏழு அடி உயரம், ஆறு அடி அகலத்தில் ஒரு பெரிய தேக்குமர பீரோவினாலான நூலகம் வைத்திருக்கிறார். பீரோ முகப்பின் பளபள கண்ணாடி வழியாகப் பார்த்தால் அந்த நூலகம் கம்பீரமாக காட்சிதரும். அதில் கிட்டத்தட்ட ஆயிரம் புத்தகங்கள் இருக்கும். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள் தவிர, மருத்துவம், ஆன்மிகம், உலக அரசியல் என்று விதவிதமான புத்தகங்கள் இருந்தன. அதிகம் படித்து நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற தேடல் அவருக்கு அதிகம்.

எல்லா புத்தகங்களையும் அவர் விலை கொடுத்துதான் வாங்குவார். நல்ல புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கி சேகரிப்பார். செலவைப்பற்றி யோசிக்க மாட்டார். புதிதாக புத்தகம் வாங்கியதும் அதன் பக்கங்களை தன் கட்டை விரல்களால் வேகமாக ஓடவிட்டு தன் முகத்தை அருகில் எடுத்துச்சென்று வாசனை பிடிப்பார். புதுப் புத்தகத்தின் வாசனை ரம்மியமானது என்பார். தன் பெயரை அட்டைக்கு அடுத்த பக்கத்தில் எழுதி, புத்தகம் வாங்கிய தேதியையும் தன் பெயருக்கு கீழே குறித்து வைப்பார். வாங்கிய புத்தகங்களை உடனே முனைப்புடன் படித்து முடித்துவிடுவார். பிறகு அவைகளை அழகாக அடுக்கி வைத்து பராமரிப்பார்.

சேகுவாரா, பெடல் காஸ்ட்ரோ போன்றவர்களைப் பற்றி நான் நிறைய தெரிந்து கொண்டது ஆவுடையப்பன் சார் வீட்டு நூலகத்தின் மூலமாகத்தான்.

எனக்கு வயது அறுபது. என் வீட்டின் முன்புறத் தெருவில் குடியிருக்கும் அவரின் நட்பும், அருகாமையும் கடந்த பதினைந்து வருடங்களாகத் தொடர்வது எனக்கு ஒரு பெரிய பலம்தான். அவரின் அறிமுகம் கிடைத்ததிலிருந்து நானும் ஆர்வத்துடன் அவருடைய நூலகத்திலிருந்து நிறைய புத்தகங்கள் எடுத்து படிக்க ஆரம்பித்தேன். முதன் முதலில் அவர் வீட்டுக்கு சென்றபோது அவர் அழகாக பராமரித்துவந்த நூலகத்தைப் பார்த்து சொக்கிப்போனேன். வீட்டினுள்ளேயே ஒரு நூலகம் என்பது பற்றி நான் அப்போது கற்பனைகூட செய்து பார்த்ததில்லை.

அதில் வைத்திருந்த சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்; தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள், மோகமுள்; சுந்தரராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை; நா.பாவின் குறிஞ்சிமலர்; ரா.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம், காலச்சக்கரம்; கி.ஜ.ராவின் கோபல்லபுரத்து மக்கள், கல்கியின் அனைத்து நாவல்கள் மற்றும் தனிமையில் வாழ்ந்து தற்கொலை செய்துகொண்ட ஸ்டெல்லாபுரூஸ் நாவல்கள் அனைத்தையும் பார்த்தபோது பிரமித்துப் போனேன்.

அவைகள் அனைத்தையும் அவரிடமிருந்து ஒவ்வொன்றாக வாங்கிச்சென்று தினமும் நிறைய படிக்க ஆரம்பித்தேன். அவர் பல வருடங்களுக்கு முன்பு வத்தலகுண்டு சென்று சி.சு.செல்லப்பாவை நேரில் பார்த்து பேசியதையும், பாளை வாய்க்கால் தெருவில் குடியிருந்த ரா.சு.நல்லபெருமாள் வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் அளவளாவியதையும் அடிக்கடி என்னிடம் மிகவும் சிலாகித்துச் சொல்வார்.

நிறைய படிப்பதால், தானும் ஒரு கதை எழுத வேண்டும் என்கிற அவா அவருக்கு நிறைய. ஆனால் எழுத உட்கார்ந்தால் அவரால் ஒருவரிக்கு மேல் எழுத வரவில்லையாம். அப்படியே எழுதினாலும், ‘மங்களம் காலையில் எழுந்தவுடன் காப்பி போட்டாள். பின்பு குளித்துவிட்டு இட்லி செய்தாள், சட்னி அரைத்து, சாம்பார் வைத்து’ என்று வரிசைக்கிரமமாக எழுதிவிட்டு பின்பு அதை எப்படி எங்கு கொண்டுபோய் முடிப்பது என்று தெரியவில்லையாம். கதை என்று எழுத ஆரம்பித்து கடைசியில் அது ஒரு மோசமான கட்டுரையாக முடிந்துவிடும் என்று சொல்லிவிட்டு என்னிடம் பெரிதாகச் சிரிப்பார்.

சிறுகதை என்றால் ஒரு ஓடும் பாம்பை அதன் நடுவில் பிடித்து தூக்குவது போன்றது. அதை நடுவிலிருந்து தூக்கியதால் பாம்பு எப்போது பிடித்தவனை கொத்திவிடுமோ என்கிற எதிர்பார்ப்பு எகிறும். அதேமாதிரிதான் ஒரு கதையையும் நடுவிலிருந்து ஆரம்பித்து, அடுத்து என்னவாகுமோ என்கிற எதிர்பார்ப்புடன் இருத்தல் வேண்டும் என்று சி.சு.செல்லப்பா அடிக்கடி சொல்வாராம்.

ஆவுடையப்பன் சார் ஒளிவு மறைவின்றி ரசனையுடன் பேசுவது எனக்கு ரொம்பப்பிடிக்கும். அவரை ஒரு ஆசானாகத்தான் நான் நினைத்து மரியாதை செலுத்துகிறேன். அவர் வீட்டுக்கு தினமும் சென்று அவருடன் பேசிக்கொண்டிருப்பேன்.

ஆங்…இன்னொன்று சொல்லவேண்டுமே, அவர் வீட்டுக்கு செல்லும்போது, சாரின் மனைவி காந்திமதியம்மாள் ஒரு தட்டில் வைத்து தினமும் எனக்கு சாப்பிடத்தரும் சிறுதானிய பண்டங்களும் அதைத் தொடர்ந்து தரப்படும் கருப்பட்டிக் காப்பியும் என் வாயில் வாசனையுடன் ஒட்டிக்கொள்ளும். அவைகளை நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு நான் ரசித்து சாப்பிடுவேன்.

அரட்டையடித்துவிட்டு அவரிடமிருந்து விடைபெற்று அவர் வீட்டை ஒட்டிச் செல்லும் முடுக்கு வழியாக என் வீட்டிற்கு நான் செல்லும்போது, என்னை வாசலுக்கு வந்து வழியனுப்பியதும், விறுவிறுவென தன் வீட்டின் உள்வழியாக கொல்லைப்புறம் வந்து வாழைமரத் தோட்ட காம்பவுன்டில் நின்றுகொண்டு என்னை எட்டிப்பார்த்து கையை ஆட்டி வாஞ்சையுடன் சிரிப்பார். அந்தப் பெரிய பச்சைநிற வாழை இலைகளின் மத்தியில் வெள்ளைச் சட்டையில் வரிசையான பற்களில் இவரின் பரிவான சிரிப்பு எனக்கு ஏனோ ஒரு முழுநிலவை ஞாபகப் படுத்தும். இது தினமும் நடக்கும் ஒரு செயல்.

“ஏன் சார் இப்படி எனக்கு தினமும் பாசத்தோடு வழியனுப்புவிழா ?” என்று

கேட்டால் “அவ்விதம் வாசல் மற்றும் கொல்லைப்புறத்தில் நின்று வழியனுப்பினால்தான் ஒரு அன்னியோன்னியம் கிடைக்கிறது” என்பார்.

ஆவுடைபப்பன் சார் இருபத்தியோரு வருடங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசாங்க ஆஸ்பத்திரியில் மார்ச்சுவரி சூப்பர்வைசராக வேலை பார்த்து ரிடையர் ஆனாராம். தினமும் எத்தனை பிணங்கள் வந்தன. அவைகளில் எத்தனை தற்கொலைகள், எத்தனை வெட்டு குத்துக்கள், எத்தனை விபத்துகள்; பிணங்கள் எப்போது உள்ளே வந்தன, எப்போது போஸ்ட்மார்ட்டம் நடந்தது, யார் டாக்டர், எப்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது என்று விலாவாரியாக கணக்கு வைத்துக்கொள்ள வேண்டுமாம்.

அந்தக் காலத்தில் தூத்துக்குடியில்தான் ரத்தக்களறி அதிகமாம். “கோட்டிக்காரப் பயலுவ அப்பல்லாம் தெருவில ஓடஓட விரட்டிக் கொல்வானுவ. . போஸ்ட்மார்ட்த்துக்கு இங்கன தூக்கிக்கிட்டு வந்துருவானுவ.” என்று அலுத்துக் கொள்வார்

முப்பத்தைந்து வருட சர்வீஸில் அடிக்கடி பிணங்களைப் பார்த்ததால் அவருக்கு இறப்பு என்பதே மரத்துப் போய்விட்டதாம். பணி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் முதலில் குளித்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பாராம்.

அன்றும் மதியம் அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு என்னிடம் பேச ஆரம்பித்தார்.

அவர் பேசுவது சில சமயங்களில் என் அறிவுக்கு எட்டாது. எனினும் அவர் வயது கருதி குறுக்கே கேள்வி கேட்காது நான் மரியாதையுடன் அதைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

“யோசித்துப்பாரு… எதுவுமே நம் விருப்பத்துடன் நடப்பதில்லை. என் பிறப்பு என் சம்மதத்துடன் நடக்கவில்லை. நான் பிறந்த பிள்ளைமார் ஜாதியும், இந்து மதமும் என்மீது திணிக்கப்பட்டவைகள். என்பெயர்கூட நான் வைத்துக் கொள்ளவில்லை. இந்தியாவில் பிறந்ததால் நான் இந்தியன். இவைகளில் நமக்கு என்ன கெட்டிக்காரத்தனமான பெருமை இருந்துவிட முடியும்?

“நாம் பிறந்ததும் நமக்கு தரப்பட்ட முதல் குளியலும், நாம் இறந்தபிறகு தரப்படும் கடைசி குளியலும் நமக்கு தெரிவதில்லை. டிக்கெட் இல்லாமல் செல்லும் நம் கடைசிப் பயணமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களால் நடத்தி வைக்கப்படுகிறது. நாம் சேர்த்துவைத்த சொத்துக்களோ, சொந்த

பந்தங்களோ நம்முடன் வருவதில்லை. பின் எதற்கு நமக்குள் நான் என்கிற அகந்தை?

“……………………”

“இயற்கையாக இயல்பாக வாழ்ந்து மடிந்தால் என்ன? கடவுளை மட்டும் நம்பினால் போதாதா? வாழ்க்கை என்னும் எதிர் நீச்சலில் எதற்காக ஜோசியம், ஜாதகம், ராசிபலன், பஞ்சாங்கம், சகுனம், வாஸ்து, சாமியார்கள் போன்ற அசிங்கமான அடர் பாசிச் செடிகளையும், சேற்றுத் தாமரைகளையும் நம்மைச் சுற்றிக் கொள்ள அனுமதித்து அல்லல்பட வேண்டும்? எதற்காக நாம் அவ்வளவு நேரத்தையும், பணத்தையும் அவைகளுக்கு செலவிடுகிறோம்?

“அறம் சார்ந்த வாழ்க்கை என்பவைகள் மறைந்து, தற்போது பொருள் அல்லது பணம் சார்ந்த வாழ்க்கையைத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?”

கேட்டுக் கொண்டிருந்த காந்திமதியம்மாள் இடைமறித்து “போதும் ரொம்ப அலட்டிக்காதீங்க..” என்றாள். ஆனால் சார் விடாமல் தொடர்ந்தார்.

“அந்தக் காலத்துல எங்கப்பா என்னை தினமும் பேப்பர் படிக்கச் சொல்வார். இப்ப காலைல எந்திரிச்சு பேப்பர் பாத்தா முதல் இரண்டு பக்கங்கள் கலரில் பொம்பளப்புள்ளைங்க படம்போட்டு முழுபக்க விளம்பரம் வருது. அனைத்தும் வியாபாரம். டி.வி பார்த்தா எல்லா சேனல்களிலும் பட்டை பட்டையாக விபூதி இட்டுக்கொண்டு ராசிபலன் சொல்லிக் கொண்டிருப்பான்கள். அவ்வளவும் கப்ஸா. ராசிபலன் சொன்னவன் கடைசியில் அவன் மொபைல் நம்பரை கொடுப்பான். அதைப் பார்த்து நம்மை மாதிரி நாலு பைத்தியங்கள் அவன் வீடு தேடிப்போவோம்.

அவனுக்கு நல்ல வரும்படி. இதே சேனல்களில் சனி, ஞாயிறுகளில் மட்டும் ராசிபலன் இருக்காது. நாம் இப்போது இருப்பது வணிகம் சார்ந்த உலகம். இதை நாம் அனைவரும் புரிந்துகொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் நம் நேரத்தையும் பணத்தையும் செலவிட வேண்டும்.” என்றார்.

அன்றும் கொல்லைப்புறம் வந்து பரிவான புன்னகையுடன் என்னை வழியனுப்பி வைத்தார்.

நடுவில் இரண்டு நாட்கள் என் மனைவியுடன் நான் குற்றாலம் சென்றிருந்தேன்.

அன்று மாலை நான் ஆவுடையப்பன் சார் வீட்டுக்குச் சென்றபோது காந்திமதியம்மாள் என்னிடம் பதட்டத்துடன் “சார் இன்னிக்கி காலைலதான் ஹைகிரவுண்ட் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனார்.” என்றாள்.

நான் பதறியடித்துக்கொண்டு அவரைப் பார்க்க என் ஸ்கூட்டரில் விரைந்தேன். அவருக்கு மிக மோசமான டெங்கு காய்ச்சல் என்று டாக்டர் சொன்னார்.

சாரின் ஒரே மகன் கார்த்தியும் டெல்லியிலிருந்து வந்திருந்தான். அவனை எனக்குத் தெரியும். அவனும் நானும் ஹாஸ்பிடலில் தங்கி சாரை உடனிருந்து கவனித்துக் கொண்டோம். ஆனாலும் அடுத்த ஐந்து நாட்களில் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு, முப்பத்தைந்து வருடங்களாக தான் வேலை பார்த்த அதே ஹைகிரவுண்ட் ஹாஸ்பிடலில் ஆவுடையப்பன் சார் மரணித்தார்.

அவரது ஈமச்சடங்கு முடிந்ததும் தாமிரபரணியில் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் அவர் வீட்டிற்கு அனைவரும் திரும்பி வந்தோம். வீட்டை தண்ணீரால் கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது கார்த்தி, “அம்மா நீ மொதல்ல நம்ம வீட்டை அடைச்சிகிட்டு இருக்கிற இந்தப் புத்தகங்களை தூக்கி எறி. பீரோ தேக்குமரம். அதை நல்ல விலைக்கு வித்திரு” என்று வெறுப்புடன் சொன்னான்.

நான் சுத்தமாக அதிர்ந்து போனேன்.

எனினும் அவனிடம் நிதானமாக, “கார்த்தி ப்ளீஸ்… புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அப்பா ஆசையுடன் வாங்கி முகர்ந்து பார்த்து பாசத்துடன் சேமித்த பொக்கிஷங்கள். எதையும் தூக்கி எறியாதீங்க. எல்லா புத்தகங்களையும் பீரோவோட நான் எடுத்துகிட்டு போறேன். எனக்கு குழந்தை கிடையாது. என் வீடு மிகப்பெரியது. அதன் நீளமான ரேழியில் வடக்குப்பக்கமாக உள்ளே நுழைய ஒரு கதவு இருக்கிறது. அதை நிரந்தரமாக திறந்து வைத்து அப்பா பெயர்ல ‘ஆவுடையப்பன் மெமோரியல் லைப்ரரி’ என்று ஒரு போர்டு போட்டு பொதுமக்களுக்காக ஒரு நல்ல நூலகம் திறந்து வைத்து, அதை நான் சாகும்வரை என் குழந்தையாக நினைத்து நல்லவிதமாக பராமரிக்கிறேன். இதற்கு நீ எவ்வளவு பணம் கேட்டாலும் தரேன்.”

கார்த்தி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“ஐயாம் சாரி அங்கிள்….வீட்டு இடத்தை அடைக்க வேண்டாம் என்கிற அர்த்தத்தில் நான் அப்படிச் சொன்னேன். எல்லாத்தையும் பீரோவோட அப்படியே நீங்க எடுத்துகிட்டு போங்க அங்கிள்… எங்களுக்கு எதுவும் பணம் தரவேண்டாம். என்னை தப்பா நினைக்காதீங்க.” என்றான்.

சிறுது நேரத்தில் இந்துக்கள் முறைப்படி சொல்லிக் கொள்ளாமல் என் வீட்டிற்கு கிளம்பினேன்.

வெளியே வெயில் உக்கிரமாக தகித்தது. வீட்டை ஒட்டிய முடுக்கு வழியாக திரும்பியபோது கொல்லைப்புற காம்பவுன்ட் அருகே ஒருகணம் நின்று திரும்பிப் பார்த்தேன். அங்கு வெறும் பச்சைநிற வாழைமர இலைகள்தான் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. என் முழுநிலவு அங்கு காணப்படவில்லை.

எனக்கு துக்கம் பீறிட்டது. துண்டினால் வாயைப் பொத்தியபடி உடம்பு குலுங்க சற்று நேரம் அங்கேயே நின்று அழுதேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “நூலகம்

  1. அன்புடையீர்,
    வணக்கம். நூலகம் சிறுகதை அருமை. நிறைய புத்தகங்கள் படித்ததுபோல் இருந்தது. மேலும் இச்சிறுகதை சிவலோக பதவி அடைந்த எனது அப்பாவை நினைவுபடுத்தியது. எனது அப்பாவும் அந்தக் காலத்தில் கல்கியில் முதன்முதலாக கல்கி எழுதிய அலைஓசை தொடர்கதைகள் முதல் கல்கி, ஆனந்தவிகடன் இதழ்களில் வந்த தொடர்கதையெல்லாம் பொறுமையாக சேர்த்து தைத்து வைத்திருக்கிறார். எனக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது எனது அப்பாவின் மினி நூலகம்தான் என்றால் மிகையாகாது. கதாசிரியர் திரு கண்ணன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். சிறுகதை இணையதள ஆசிரியருக்கு நன்றி.

    பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *