நூற் கண்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 9,423 
 

சிவராமன் அவசர அவசரமாக குளித்து ரெடியாகிக்கொண்டே வாட்சைப் பார்த்தால் மணி 7.30 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. ஆபிஸ் பேக், பால் பாத்திரத்துடன் வேகமாக வெளியே வந்து ஆத்தைப் பூட்டி பக்கத்தில் சியாமளா மாமியாத்து வாசற்படியில் சாவியையும் பால் பாத்திரத்தையும் வைத்தபடி “மாமி ஆபிஸ¤க்கு போயிட்டு வரேன் சாவியையும் பால் பாத்திரத்தையும் உள்ளே எடுத்து வச்சிகோங்கோ “என்று சத்தம் போட்டுக் கொண்டே தெருவில் தாவிக் குதித்து ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாண்டைப் பார்த்துப் போனான்.

சிவராமன் ஒரு வங்கி மேலாளர்.அவனது வங்கிக் கிளை பெரும்பாக்கம் என்ற ஒரு குக்ராமத்தில் உள்ளது. அந்தக் குக்ராமத்திற்கு காலை 7.30 க்கு ஒரு பஸ். அதைவிட்டால் பகல் 11.00 மணிக்குத் தான். அதனால்தான் நம்ம சிவராமன் அவ்வளவு பதற்றத்துடன் தெருவில் ஓடிக் கொண்டிருந்தான் ஓடிக் கொண்டிருந்த சிவராமன் எதிரில் ஒரு ஸ்கூட்டர் வந்து அவன் ஓட்டத்தை தடுப்பது போல் நின்றது. சிவராமன் திடுக்கிட்டு ஸ்கூட்டரைப் பார்ப்பதற்கு முன்பே அதில் அமர்ந்திருந்த ஹரி சிவராமனைப் பார்த்து “சார்! நீங்கள் எங்கே இந்தப் பக்கம்” என்றான்.ஹரியைப் பார்த்த சந்தோஷம் அவனிடம் பேசத் தூண்டினாலும் பஸ் போய்விடுமே என்ற பயத்தில் “ஹரி! எனக்கு 7.30 மணிக்கு பஸ். அதைப் பிடிக்கத்தான் அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறேன்” என்றவுடன் “சார்! வண்டியில் ஏறுங்கள். நான் ஒரு நொடியில் கொண்டு பஸ் ஸ்டாண்டில் விடுகிறேன்” என்றான் வண்டியில் போய்க்கொண்டிருக்கும் பொழுதே ஹரி “இந்த ஊரிலுள்ள நமது வங்கியின் கிளைக்கு மாற்றலாகி வந்து ஒரு வாரமாச்சு” என்றான். அடி சக்கை! அப்படியா! என்ற சிவராமன் “நான் அருகே இருக்கும் பெரும்பாக்கம் கிளையில் மேலாளராக இருக்கிறேன்” என்றான். பஸ் ஸ்டாண்ட் வந்து விட வண்டியில் இருந்து குதித்தொடிக் கொண்டே சாயந்திரம் ‘ப்ரேன்ச்க்கு’ வரேன்!என்று கூறினான். சிவராமனோடு பெரும்பாக்கம் கிளையில் வேலை பார்க்கும் சுந்தரம் பஸ்ஸின் ஜன்னல் வழியே கையசைக்க பஸ்ஸை அடையாளங்கண்டு சிவராமன் தாவி ஏறினான். கண்டெக்டர் சிவராமனுக்கு வணக்கம் சொன்னான். சிவராமன் சுந்தரம் அருகில் அமர்ந்தான். பயங்கரமாக மூச்சிரைத்தது சிவராமனுக்கு. ஏன் சார்? இப்படி ஓடி வந்தீர்கள். நாங்கள் உங்களை விட்டு விட்டுப் போவோமா! என்றான் கண்டெக்டர். சிவராமன் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக அந்த பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கின்றான். அந்த பஸ்ஸில் வரும் டிரைவர் கண்டெக்டர்களொடெல்லாம் நல்ல பழக்கம் குக்ராமக் கிளையென்றாலும் சிவராமன் மேலாளர் அல்லவா. அதனால் தனி மரியாதை கொடுப்பார்கள் சிவராமனின் மூச்சிறைப்பு நின்று கொஞ்சம் நிதானத்துக்கு வந்தவுடன்

சுந்தரம் சிவராமனிடம் “சார்! உங்களைக் கொண்டு விட்டாரே! ஹரி சார்! அவரை முன்பே தெரியுமா? என்று கேட்டான்.

“தெரியுமே “

“ எப்படி?”

“ நாங்கள் ஒன்றாக சென்னையில் வேலை பார்த்திருக்கின்றோம்.”

“ சார் சொல்லவேயிலலையே”

“எனக்கு இன்று தானே ஹரி இந்த ப் பக்கம் வந்திருப்பது தெரியும்

“சார்! ஹரி சார் நமது விழுப்புரம் கிளைக்கு மேலாளராக மாறி வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகி விட்டது

“அப்படியா! “ .

“அப்புறம் சார்! வில்லியனூர் ஸ்டாப் வீட்டுக் கலயாணத்திற்கு கட்டாயம் போக வேண்டும் கேஷ் சாவியை வாங்க ஏதாவது பக்கத்துக் கிளையிலிருந்து ஆளை ஏற்பாடு பண்ணி லீவும் தர வேண்டும்”

பெரும்பாக்கம் கிளை பெரும்பாக்கத்தில் கூடக் கிடையாது.கிளையின் லைசென்ஸ் தான் பெரும்பாக்கம். இருப்பது கீழப் பெரும்பாக்கத்தில். அதற்கு பெரும்பாக்கத்தில் இறங்கி 1 கிலோ மீட்டர் போக வேண்டும். ரோடு வசதி ஒன்றும் கிடையாது. ஒத்தையடிப் பாதைதான். அங்கு மொத்தமே இருபது வீடுகள் தான் அதில் ஒரே ஒரு வீடுதான் பெரிய வீடு அது முத்துப் படையாச்சியுடையது. பெரிய அரசியல் செல்வாக்குள்ளவராம். அவர் மு ய ற்சியில் தான் அங்கு வங்கிக் கிளை திறக்கப் பட்டிருகின்றது. பஸ் வசதியும் இல்லாததால் பக்கத்து கிரா மங்களிலிருந்தும் ஆட்கள் வரமாட்டார்கள்.கிளை திறந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகின்றது.வியாபாரம் ஒன்றும் அவ்வளவாகக் கிடையாது. சிவராமன் மேலாளர். சுந்தரம் காசாளர். ஜெயசீலன் என்று ஒரு கடை நிலை ஊழியன். ஒரு நகை ஆசாரி அப்பப்போ வந்து போவான். யாருக்கும் பெரிதாக எந்த வேலையும் கிடையாது. தினமும் போராடி வந்து கிளையைத் திறந்து மூடிப் போவதுதான் ஒரே வேலை. பாவம்! நம்ம சிவராமன் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேல் சலித்துக் கொண்டே சிரமப் பட்டு வந்து திறந்து மூடற வேலையை செய்து கொண்டிருக்கின்றான்.நல்லதோ பொல்லாதோ ஒரு நாள் லீவுக்கு அவர்கள் படும் பாடு அந்த ப்ரம்மனுக்குத் தான் தெரியும் சில சமயம் என்ன பகீரதப் ப்ரயத்தனம் பண்ணினாலும் காரியம் கைகூடாது. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் வாழ்க்கையே வெறுத்துவிடும். வங்கியில் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் சௌகரியமாக இருக்கும் பொழுது தங்களுக்கு மட்டும் ஏன் இந்த நரக வேதனை ? என்ற சுய வேறுப்பும் சுய பச்சாதாபமும் மேலோங்கும்.

1980 களில் செல் போன், கம்ப்யூட்டர் எல்லாம் கிடையாது. ஆபிஸில் தான் தொலைபேசி உண்டு. இல்லை யெனில் பொதுத் தொலைபேசியைத் தான் நாட வேண்டும். வசதி படைத்தவர்களின் வீடுகளில் மட்டும் தான் தொலை பேசி இருந்த காலமது.குக்ராமத்தில் உள்ள அவர்களது தொலைபேசி முக்காவாசி நாட்கள் வேலை செய்யாது. யோகமிருந்தால் எல்லாம் கூடிவந்து பதிலுக்கு ஆளும் கிடைத்து லீவும் கிடைக்கும். சென்னைப் பட்டினத்தில் வசதியான குடும்பத்தில் வளர்ந்த சிவராமனின் மனைவி வேறு அவனது கஷ்டங்களை புரிந்து கொள்ள விரும்பாமல் வாய்க்கு வந்தபடி பேசி வெறுப்பேத்துவாள். அது மட்டுமல்ல சிவராமனால் அவசரத்துக்குக் கூட லீவு போடுவது சிரமமாக இருப்பதை அறிந்தபின் குழந்தையுடன் தனியாக ப்லட்டில் குடியிருக்க முடியாது என்று தீர்மானமாக ச் சொல்லிவிட்டு வசதியான அவப்பா வீட்டிற்கே போய்விட்டாள். சிவராமன் ரொம்ப மானஸ்தன். அதற்கு பிறகு சென்னைக்குப் போவதை ரொம்பவும் குறைத்துக் கொண்டான். குழந்தை ஞாபகம் அதிகமாக வரும் பொழுது ம்ட்டும் போய்விட்டு அன்றே திரும்பிவிடுவான் விழுப்புரத்திற்கு.

எப்பொழுதும் போல் பஸ் பயணம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே சுந்தரம் தூங்க ஆரம்பித்து விட்டான்.சிவராமன் தான் பஸ்ஸில் தூங்கத்தெரியாமல் எதையாவது சிந்தித்துக் கொண்டே பயணிப்பான். அன்று ஹரியைப் பார்த்திருந்ததால் சிவராமனுக்கு பழைய நினைவுகள் மனத்திரையில் ஓட ஆரம்பித்தது. சிவராமன் ஒன்றும் பலரைப் போல் கணக்கராக வங்கியில் சேர்ந்து ஐந்தாறு வருடங்களுக்கு ப் பிறகு பதவி உயர்வு பெற்று அதிகாரியானவனில்லை. சிவராமன் நல்ல புத்திசாலி படிப்பிலும் எல்லாவற்றிலும் முதலில் வருபவன். அவன் வங்கி அதிகாரிகளுக்கான கடினமான தேர்வை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று வங்கியில் நேரடியாக அதிகாரியாக பணியில் சேர்ந்தவன் கற்பூர புத்தி. அவனது திறமையையும் வாடிக்கையாளர்களுக்கு மிகக் கனிவுடன் வேகமாக சேவை செய்யும் அழகையும் பார்த்து கிளை மேலாளர் அவனைப் பற்றி அடிக்கடி மேலதிகாரிகளுக்கு சொன்னதால் அவனுக்கு நல்ல பெயரும் மதிப்பும் கிடைத்தது. அவன் சேர்ந்து இரண்டு வருடங்களுக்குள்ளே அவனை மதுராந்தகம் கிளைக்கு மேலாளராக்கி கௌரவித்தது வங்கி நிர்வாகம்.சிவராமன் மேலாளர் பதவியை ஏற்றுக் கொள்ள த் தயங்கினான். மேலதிகாரிகள் அனைவரும் கொடுத்த தைரியத்தில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு அங்கு போய்ச் சேர்ந்தான். கிளையில் உள்ள அலுவலர்கள் அனைவரும் அன்புடனும் பாசத்துடனும் பழகவே சிவராமன் தன் திறமைகளை நன்கு பயன் படுத்துவதுடன் வளர்த்துக் கொள்ளவும் செய்தான். கிளையிலுள்ள அலுவலர்களில் பாதிப் பேர் ஹரியைப் போல் கல்லூரிப் படிப்பை அபோழுதுதான் முடித்துவிட்டு வங்கியில் சேர்ந்தவர்கள். இளரத்தம். எல்லோரும் ஒரே குடும்பம் போல் பழகினார்கள்.

வங்கியின் மாடியிலிருந்த அடசல்களை எல்லாம் ஒதுக்கி விட்டு அலுவலர்களின் வசதிக்காக தலைமையகத்தில் தனியாக வைத்திருக்கும் நிதியிலிருந்து ஒரு தொகையைப் பெற்று கேரம்,செஸ்,டேபிள் டென்னிஸ் எல்லாம் விளையாடத் தேவையான உபகரணங்களை வாங்கிப் போட்டு அலுவலர்களை உற்சாகப் படுத்தினான்.வங்கியின் திட்டங்களைஅலுவலர்களுக்குநன்கு விளக்கிக் கொடுத்து அவர்களைவாடிக்கையாளர்களுக்கு நல்ல முறையில் சேவை செய்ய ஊக்கப்படுத்தினான்ஆறு மாதத்தில் வங்கியின் வளர்ச்சி பல மடங்கு உயர்ந்து மேலதிகாரிகளூக்கு திருப்தியையும் சந்தோஷத்தையும் தந்தது.

சின்ன வயதில் வங்கி மேலாளராகி விட்டதால் சிவராமனுக்கு பெரிய இடங்களிலிருந்து ‘நான்’ ‘நீ’ என்று போட்டி போட்டுக் கொண்டு பெண் கொடுக்க பலர் முன் வந்தார்கள். சென்னையைச் சேர்ந்த ஒரு பெரிய வியாபாரியின் பெண்ணை எல்லோருக்கும் பிடிக்க கல்யாணமும் இனிதே நடந்தேறியது.

கல்யாணத்திற்கு வந்திருந்த பெரியவர் ஒருவர் ஒரு நூறு ரூபாய் நோட்டைக் காட்டி (1980 களில் அதுதான் பெரிய நோட்டு). இது என் கல்யாணப் பரிசு ஆனால் இதைப் பெற ஒரு நிபந்தனை என்று சொல்லிக் கொண்டே பையிலிருந்து ஒரு நூல் கண்டை எடுத்து அதன் ஒரு முனையை சிவராமனிடம் கொடுத்து இதை நீயும் உன் மனைவியும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள். மறு முனை என் கையில் இருக்கும். இந்த நூலை அறுத்துவிட்டால் உங்களுக்கு பரிசு 100 ரூபாய். தோற்றுவிட்டால் எல்லோரும் அளிக்கின்ற 10 ரூபாய்தான் என் பரிசும் சரியா! என்றார்..
நூலை அறுப்பதென்ன பெரிய கஷ்டமா! என்று சவாலை ஏற்றார்கள் சிவராமனும் அவன் புதுமனைவியும். அவர் நான் ஜூட் சொன்னவுடனே தான் போட்டியை ஆரம்பிக்கணும் என்றார். அவர் ரெடியாகி ஜூட் சொன்னதும் சிவராமன் தம்பதியர் நூலை இழுக்க அவர் தம்பதியரை நோக்கி நகர்ந்து நூல் தொய்வுடன் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.

அவர்கள் நகர்ந்து கொண்டே பிடித்திழுக்க அதற்கேற்ற மாதிரி அவரும் நகர நூல் அறுபடவேயில்லை. எல்லோரும் சிரித்தார்கள்.. அவர் இல்லறமும் இந்த நூல் போலத்தான். ஒருவர் இழுக்கும் போது மற்றவர் விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை என்ற நூல் அறுகவே செயயாது என்றார். பெரிய தத்துவத்தை எவ்வளவு எளிதாக நல்ல தருணத்தில் விளக்கி விட்டார் என்று பெருமையாக இருந்தது சிவராமனுக்கு சிவராமனின் புது மனைவி 100 ரூபாயைக் கேட்க நீங்கள் தான் நூலை அறுக்கலையே நாளை மறு நாள் அடுத்த கல்யாணமிருக்கிறது மதுரையில் என்று சொல்லி சிரித்துக் கொண்டே நூலையும் ரூபாயையும் சட்டைப் பையில் வைத்து க் கொண்டார்.கல்யாணம் முடிந்து ஆபிஸ் வந்த சிவராமன் எல்லோரிடமும் நூல் தத்துவத்தை விளக்கினான்.காரணம் அது அவனிடம் பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருந்தது.

அன்றும், எப்பவும் போல் மாலை 4 மணி பெரும்பாக்கத்தில் பஸ்ஸைப் பிடித்தார்க்ள் சிவராமனும் சுந்தரமும் அதை விட்டால் இரவு 8 மணிக்குத் தான் அதுதான் கடைசி பஸ். அது வந்தாலும் வரும் வராமலும் போகும். விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கிய சிவராமன் வீட்டிற்குப் போகாமல் அவர்களது விழுப்புரம் கிளையை நோக்கி சென்றான். சிவராமனைப் பார்த்த ஹரி அவனது அறையிலிருந்து வேகமாக வெளியே வந்து சிவராமனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற அதிகாரிகளும் அலுவலர்களும் ஆச்சரியப் பட்டுப் போனார்கள். ஒரு குக்கிராமத்து கிளை மேலாளருக்கு நகரக் கிளை மேலாளர் இந்த மாதிரி மரியாதை யெல்லாம் அளிப்பது பழக்கத்தில்லாதது. ஒரு பெரிய கிளையில் மேலாளராக இருக்கும் ஹரியை ஒருமையில் அழைப்பது நாகரிகமற்றது என்று கருதி சார்! எத்தனை குழந்தைகள்? குடும்பத்தை இங்கு கூட்டி வந்து விட்டீர்களா? என்று ஹரியிடம் கேள்விகளை அடுக்கினான் சிவராமன். உடனே ஹரி “என்ன சார்! என்னைப் போய் “சார்!” என்று அழைக்கின்றீர்கள். நான் எப்பொழுதும் உங்கள் பழைய ஹரி நீங்கள் எப்பொழுதும் என் அபிமான மேலாளர். என்னை ஒருமையில் அழைத்தால்தான் என்னால் பழைய நெருக்கத்தை உணர முடியும்” என்றான். கிளை அலுவலர் உள்ளே வந்து ஏதோ கேட்க பேச்சு தடைப்பட்டது. ஹரிக்கு சிவராமனுடன் தனியாக மனம் விட்டுப் பேச வேண்டுமென்று தோன்றியதால் சிவராமனைப் பார்த்து “சார்! இங்கு பூங்கா எதாவதிருக்கா? நாம் அங்கு போய் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வருவோமா?” என்றான். “இங்கு எதுவும் நல்ல முறையில் பராமரிக்கப் பட்டிருக்காது வேண்டுமானால் ரயில் நிலையத்திற்கு போவோம். பக்கம் தான் VRR காப்பி நன்றாக இருக்கும் சாப்பிட்டுவிட்டு நடைமேடையில் ஓரமாகப் போய் ஒரு பெஞ்சில் உடகார்ந்து பேசலாம்” என்றான் சிவராமன். இருவரும் வண்டியை எடுத்துக் கொண்டு போனார்கள். வடையும் காப்பியும் சாப்பிட்டு விட்டு பெஞ்சில் போய் உடகார்ந்தவுடன் ஹரி பழைய் கதைகளை முதலில் பேச ஆசைப்பட்டு “சார்! அந்த நூல் கண்டு கதை எனக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி அதனைப் பின்பற்றி வாழ நினைத்ததால் தான் என் குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. கல்யாணமானவுடனே என் மனைவியிடம் விளக்கமாகச் சொன்னது முதலில் இதைத்தான். உங்களுக்கு எப்பொழுதும் எங்கள் கோடானு கோடி நன்றிகள்” என்றான் இதைக் கேட்ட சிவராமன் ஹரியிடம்ரொம்ப நல்ல தத்துவம்தான். “என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால்தான் உங்கள் எல்லொரிடமும் பகிர்ந்து கொண்டேன் நீயும் உன் மனைவியும் சரியாகப்புரிந்து கொண்டதால் உங்கள் வாழ்க்கை இனிக்கிறது. ஆனால் என் விஷயத்தில் என் மனைவிக்கு சரியான புரிதல் இல்லை. ஒருவேளை அவள் அவர்கள் வீட்டில் ஒரே குழந்தையாய்ப் போனதாலும் வசதியான குடும்பத்தினவளாக இருந்ததால் மற்றவர்கள் அவளுக்காக விட்டுக் கொடுப்பதை மட்டுமே பார்த்து வாழ்ந்ததினாலோ என்னவோ எனது விட்டுக் கொடுத்தலை பெருந்தன்மை என்று எண்ணாமல் அது என் கையாலாகதத்தனம் என்று எண்ணுகின்றாள் என்பது ரொம்பவும் பின்னாளில்தான் எனக்குத் புரிந்தது. இங்கு மாற்றலாகி வந்தவுடன் வீடேல்லாம் பார்க்க வேண்டாம். என்னால் அந்த மாதிரி ஊர்களிலெலலாம் வாழமுடியாது.வேண்டுமானால் நீங்கள் சிக்கிரமே மாற்றல் வாங்கி சென்னை வந்து சேருங்கள். அது வரையிலும் நானும் குழந்தையும் சென்னையிலேயே இருக்கிறோம் என்று தீர்த்து சொல்லிவிட்டாள். நானும் இங்கு வந்து ஆறு வருடங்கள் ஆகப் போகிறது. மாற்றல் கிடைக்க மாட்டேங்கிறது. ஏன் ? லீவு கிடைப்பது கூட ரொம்ப க் கஷ்டம். ச்சே! நாம்பாட்டுக்க முட்டாள் தனமாக என் சோகக் கதையைப் புலம்பி நல்ல சூழ் நிலையை பாழாக்கிக் கொண்டிருக்கின்றேன். “ஆமாம்! உனக்கு எத்தனை குழந்தைகள்? என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்?” என்று கேட்டான் சிவராமன்.

“எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை. இங்குள்ள “சேக்ரட் ஹார்ட் கான்வெண்டில்” பர்ஸ்ட் ஸ்டான்டேர்டில் சேர்த்துவிட்டு அதற்கேதிரே இருக்கும் புதிய காலனியில் வீடு பார்த்து அவர்களைக் கூட்டி வந்துவிட்டேன் சார்!

“நீங்கள் எப்படி இந்தக் கிளைக்கு மேலளாராக வந்தீர்கள்? எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என் மனதை பிசைந்து கொண்டே இருக்கின்றது. உங்கள் திறமைக்கும் அறிவுக்கும் எங்க இருக்க வேண்டிய் உங்களைப் போயும் போயும் இந்த மாதிரிக் கிளையில் வைத்து உங்கள் அறிவையும் திறமையையும் மழுங்க அடிகின்றதே வங்கி நிர்வாகம் என்று நினைத்தால் என் நெஞ்சு விம்மி வெடித்துவிடும் போலிருக்கிறது. கோபமும் ஆத்திரமும் அப்படி வருகிறது. என்ன தான் நடந்தது? என்னிடம் சொல்லலாமா?” என்று கேட்டான் ஹரி.

“ஏதோ ! எல்லாம் என் நேரம் சரியில்லை என்றுதான் மனதைத் தேற்றிக் கொண்டு இறைவன் மேல் பாரத்தைப் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உன்னிடம் நடந்ததை சொல்வதற்கேன்ன!” என்று தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான் சிவராமன்.

ஹரி! நாமிருவரும் மதுராந்தகம் கிளையிலிருந்து மாற்றலாகிப் போனோமல்லவா. நீ பதவி உயர்வு பெற்று அதிகாரியாகி டில்லிக்குச் சென்றாய். நான் சென்னையில் கிழக்குத் தாம்பரம் கிளைக்கு மேலாளராகச் சென்றேன். அந்தக் கிளையில் நான் தான் வயதில் ரொம்ப ச் சிறியவன். அங்கிருந்த அலுவலர்கள், அதிகாரிகள் அனைவரும் ஏற்கனவே பல வருடங்களாக வேலை பார்த்து கொண்டிருப்பவர்கள் அதிலே மனித உருவில் ஒரு நச்சுப் பாம்பும் வேலை செய்து கொண்டிருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. அது ஒழுங்கினத்தின் மொத்த உருவம். தானும் வேலை செயயாது. மற்றவர்களையும் செய்ய விடாது. தன் சுய லாபத்திற்காக தொழிற் சங்கத்தில் ஈடுபாடு உள்ளது போல் நடித்து தொழிற் சங்கத் தலைவர்களை மயக்கி வைத்துக் கொண்டு எல்லோரையும் பயமுறுத்திக் கோண்டு உண்கின்ற வீட்டிற்கு ரெண்டகம் செய்து கொண்டு திரிந்து கொண்டிருந்தது.இஷ்டத்திற்கு வந்து போகும். ஏன்னு கேட்டால் தொழிற் சங்க வேலை என்று கூசாமல் பொய் சொல்லும்.ஒரு வேலையும் தெரியாது குட்டு வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தொழிற்சங்கத்தை காககா பிடித்து வைத்துக் கொண்டு வங்கி மேலாளருக்கு எப்படியெல்லாம் இடைஞ்சல் தராலமென்ற யோசனையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தது. அதனது நடவடிக்கைகள் பற்றி மேலதிகாரிகளிடம் சொன்னால் தொழிற் சங்கப் பொல்லாப்புகள் வரும் அதனால் ஒன்றும் செய்ய முடியாது. இதையெல்லாம் சமாளித்துத் தான் வங்கி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று சொல்லிவிட்டது வங்கி நிர்வாகம்

சரி! மற்றவர்களை உற்சாகப் படுத்தி வங்கியை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லலாம் என்று முயற்சித்தேன். ஆனால் அந்த விஷப் பாம்பு அலுவலர்களிடம் இந்த ப் பொடிப் பயல் நம்மெல்லாரையும் வேலை வாங்கி பதவி உயர்வு பெறப் பார்க்கின்றான் என்று பொறாமையை அவர்கள் மனதில் விதைத்து எல்லா விஷயங்களிலும் முட்டுக் கட்டை ப் போட்டுக் கொண்டே இருந்தது . பொறுக்க முடியாமல் ஒரு நாள் மற்ற அலுவலர்கள் முன்னிலையில் அது அன்று செய்த சின்ன வேலையில் கூட எவ்வளவு தவறுகள் இருக்கின்றது என்று பட்டியலிட்டுவிட்டேன். எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தாலும் யாரும் இதுவரை முகத்திற்கு நேர் அதனிடம் சொன்னதில்லை. அந்த நச்சுப் பாம்பு என்னைப் பழி வாங்க வேண்டும் என்று தீர்மானித்து திட்டம் தீட்டி வங்கியின் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக கடன் எதிர்பார்த்து வந்து வாய்வார்த்தையாக என்னால் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு வாடிக்கையாளரை வைத்து நாடகமாடி என்னைத் தரக் குறைவாகப் பேச வைத்து பின் கதையை ஜோடித்து அந்த வாடிக்கையாளரை வைத்து எனக்கு எதிராக புகார் பண்ண வைத்து விட்டது. சில தரங்கெட்ட வாடிக்கையாளர்களும் துணை. எல்லாம் தெரிந்திருந்தும் கிளை அலுவலர்களும் என் உதவிக்கு வரவில்லை. பொறாமையோ அல்லது அந்த நச்சுப் பாம்பினிடம் உள்ள பயமோ. . நிர்வாகத்திற்கு தொழிற் சங்கம் என்றாலே சிம்ம சொப்பனம் அல்லவா! அந்த நச்சுப் பாம்பு தொழிற் சங்கத்தின் உதவியுடன் ஏதாவது சங்கடங்களைக் கொடுக்குமோ என்ற பயத்தில் நிர்வாகம் என்னை தண்டிக்க முடிவு செய்தது. என்னை இந்த பாடாவதிக் கிளைக்கு மாற்றி விட்டார்கள். சரியான புரிதலில்லாததால் கல்யாணமாகியும் பிரம்மச்சாரி வாழ்க்கை வாழ்வதையும் சொல்லி வருத்தப் பட்டான்.

ஹரிக்கு கேட்க கஷ்டமாக இருந்தது. சார்! அந்தத் தத்துவத்தை நீங்கள் மிக ச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது.ஒருத்தர் மட்டுமே விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தால் மற்றவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவதை வேடிக்கையாக நினைத்து மேலும் மேலும் அந்த ஒருத்தர் இழுத்துக் கொண்டே பின்னோக்கி நகர்ந்தால் மேடு பள்ளம் தெரியாமல் விழ வேண்டியதாகத்தானே ஆகும்.இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு இருவரும் மாறி மாறி ஒருத்தர் மற்றவருக்கு விட்டுக் கொடுப்பதில் தான் இல்லறத்தில் திருப்தியும், சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கும். இருவருக்குள்ளும் ஒருவர் மற்றொருவருக்காக வாழ வேண்டும் என்ற விருப்பத்தை உருவாக்குவதில்தான் இல்லறத்தின் வெற்றியே அடங்கியிருக்கிறது. இதனை நீங்களும் புரிந்து கொண்டு உங்கள் மனைவிக்கும் கட்டாயமாகப் புரிய வையுங்கள் என்று முடித்தான் ஹரி.

சிவராமன் ஹரியை ரொம்பவும் பாராட்டினான். தத்துவத்தை மேலெழுந்தவாரியாகப் புரிந்து கொண்டதால் வாழ்க்கை என்னும் பாதையில் என் மனைவியை பள்ளத்தில் விழ வைத்து விழுந்துவிட்ட மனைவியைக் கணடு துன்பப்படுகின்றேன் என்பது இப்பொழுது நன்கு புரிகின்றது என்றான் சிவராமன்.

சார்! இருண்ட இரவுக்குப் பின் பிரகாசமான சூரிய ஒளியுடன் கூடிய பகல் வந்து தான் ஆக வேண்டும். இது இயற்கையின் நியதி. நான் டில்லியில் வேலை பார்க்கும் பொழுது எனக்கு மண்டல மேலாளராக இருந்த கிருஷ்ணன்சார் தான் தற்பொழுது நமது தலைமையகத்தில் மனித வள மேம்பாட்டுத் துறைக்கு தலைமைப் பொறுப்பேற்று வந்துள்ளார். நான் திறம்பட வேலை செய்து அவர் அபிமானத்தைப் பெற்றவன். அவரிடம் உங்களைப் பற்றிய எல்லா விபரங்களையும் கூறி அதோடு தாங்கள் மதுராந்தகக் கிளையில் உண்டாக்கிய அபார வளர்ச்சியைப் பற்றியும் சொல்லி உங்கள் பைலை புரட்ட வேண்டுவேன்.ஒரு வாரத்தில் எல்லாம் சுபமாக முடியும் என்றான் ஹரி.

சிவராமன் நன்றியோடு ஹரியைப் பார்க்க இருவரும் வீட்டிற்கு த் திரும்ப, வண்டி நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நகர்ந்தார்கள்.

ஒரு வாரத்தில் சிவராமனுக்கு சென்னைக்கு மாற்றலாகி உத்திரவு வந்தது. பெரும்பாக்கம் கிளையில் புது மேலாளர் பணியில் சேர்ந்தார். சிவராமன் மூட்டை முடிச்சுகளுடன் சென்னைக்குக் கிளம்பத் தன்னை ஆயத்தப் படுத்தி கொண்டிருப்பதற்கு இடையே சாக்லேட், பழங்கள் எலலாம் வாங்கிக் கொண்டு ஹரியின் வீட்டிற்கு சென்று அவன் குழந்தையை அன்போடு வாரி அணைத்து முத்தமிட்டான். ஹரியின் கையைப் பற்றிய சிவராமனால் பேச முடியவில்லை. இருவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *