நீ வேண்டாம் அப்பா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 12,874 
 

”அம்மா எனக்கு இந்த அப்பாவ பிடிக்கலமா? எப்போ பார்த்தாலும் குடிச்சிட்டு வந்து உன்னை அடிச்சிட்டு இருக்காரு.. அப்பாவ விட்டுட்டு நாம எங்கயாவது போயிடலாம் அம்மா ப்ளீஸ்மா.” பத்தாவது படிக்கும் சிறுமியான நிர்மலா அவளின் அம்மாவிடம் தினமும் இரவு பத்து மணிக்கு இப்படித்தான் புலம்பிக்கொண்டிருப்பாள்.

திருச்சிக்கு அருகேயுள்ள பொன்மலை இரயில்வே தொழிற்சாலையில் தினக்கூலியாக வேலைப்பார்க்கும் வேலாயுதம் தன் உடல் அலுப்புக்கு நிவாரணமாக தேடும் மருந்தகம் டாஸ்மாக் எனும் அரசு மதுபானக்கடை. தினக்கூலி என்றாலும் வருமானத்திற்கு குறைவு இல்லை. தினக்கூலியை சேர்த்து வைத்திருந்தால் இந்நேரம் வேலாயுதம் ஒரு இருசக்கர வாகனத்திற்கு சொந்தக்காரனாக இருந்திருக்கலாம். அல்லது ஒரு பெட்டிக்கடைக்கு முதலாளியாக கூட இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் உடல் நோவுகிறது என்பதற்காக தன்சுகத்திற்கு போதையேற்றி வீட்டிற்கு செல்பவன் தன் மனைவியிடம் இரவுச்சாப்பாடு சரியில்லை, இன்று வறுத்த கறி ஏன் இல்லை.. மீன் குழம்பு என்னாச்சு என ஏதாவது வம்பு செய்து சண்டையிழுப்பான். எதிர்த்து பேசினால் அடி..கட்டின மனைவியை அடிமையாகவே வைத்திருக்க விரும்பும் பெரும்பாலான சராசரி ஆண் மகன்களிலிருந்து வேலாயுதமும் விதிவிலக்கல்ல. தன் மகளுக்கு முன்பு இப்படி அநாகரீகமாக குடித்து விட்டு வருகிறோம் என்கிற நினைப்பு கூட இல்லாதவனாக இருக்கும் வேலாயுதம் தினமும் குடும்பச்செலவுக்கு என கொடுப்பது சொச்சம் தான். மொத்தத்தில் ஒரு மகளுக்கு தகப்பன் எனும் அருகதை அற்றவன். ஒரு பெண்ணுக்கு புருஷன் எனும் தகுதியற்றவன்.. ஒரு குடும்பத்திற்கு தலைவன் எனும் சொல்லுக்கே வக்கற்றவன்.

“அம்மா .. இன்னிக்கு அப்பா வந்து உன்னை அடிச்சா .. இப்போவே நான் வீட்டுவிட்டு வெளியே போயிடுவேன். ”

“ நிர்மலா… ஆம்பள துணையில்லாம நாம எங்கடி போவது? நான் சத்துணவு கூடத்துல வேல பார்த்து உன்னை படிக்க வைக்கிறேன். ஊருக்கும் பேருக்கும்.. எம் புருஷனும் வேலைக்கு போறாரான்னு சொல்லிட்டு நான் கெளரவமா வாழ்ந்துட்டு இருக்கேன் நிர்மலா.. உனக்கு எல்லாத்தையும் சொல்லி புரியவைக்க முடியாது.. “

” என்னமா புரியாது.. ? என்னமா பெரிய கெளரவம் ? இன்னிக்கு ஸ்கூல்ல ….எல்லாரோட அப்பாவ பத்தியும் டீச்சர் கேட்டாங்க….. தினேஷ் அப்பா போஸ்ட்மேன்.. சாருலதாவோட அப்பா பேங்க் செக்கியூரிட்டி.. ஹேமாவோட அப்பா போலீஸ் கான்ஸ்டபிளுன்னு ஆளுக்கு ஆள் அவங்க அப்பாவ பெருமையா சொல்லும் போது என் அப்பாவ பத்தி நான் என்னமா சொல்ல முடியும்.. ? இரயில்வே குடோன்ல வேல பார்க்கிறரான்னு சொன்னேன்… ‘யாரு குடிக்காரன் வேலாயுதமான்னு’ டீச்சர் கேக்கிறாங்க.. மானம் போகுதுமா ”

“ சரிடா நிர்மலா… என்னை என்ன பண்ண சொல்ற.?.. இந்த ஆள கட்டிக்கிட்டு நான் படுற அவஸ்தையை விட .. நீ கேக்கிற கேள்விதான் என்னய சாக அடிக்குது.. “

“ அம்மா .. அதான் நீ சம்பாதிக்கிறல.. எப்படியும் நீதான் இந்த வீட்டுக்கு வாடகை தர.. நீ தான் தினமும் சாப்பாடு செஞ்சி போடுற.. நீ தான் எனக்கு வேண்டியத பண்ற.. எல்லாம் நீதான் செய்றமா.. அப்புறமா அவரு எதுக்குமா நமக்கு..அப்பா வேண்டாமா.. அவர பார்த்தாலே வெறுப்பா இருக்கு….என்னால படிக்க முடியலமா… இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் அம்மா.. “

“எல்லாம் புரியுதுடி… ஆனா அவர விட்டு தனியா போனா ஊருல இருக்கிறவங்க தப்பா பேசுவாங்க.. புருஷன் இருக்குபோதே தனியா போறான்னு கேவலமா பேசுவாங்கடி….” நிர்மலாவின் அம்மா விசனத்தின் உச்சத்தில் கண்ணீர் விட்டு பேச.. அதற்கு மேல் நிர்மலாவினால் எதுவும் எதிர்த்து பேசமுடியவில்லை. பசியோடு படுக்கச் சென்றாள்.

சற்று நேரத்திற்கு பிறகு.. வழக்கத்திற்கு அதிகமான போதையுடன் வந்தான் வேலாயுதம்.. வழக்கமான மீன் வருவல்.. கோழிக்கறி கேட்டு சண்டையிட்டு தன் மனைவியை அடிக்க ஆரம்பித்தான்.. முடிந்தவரை பொறுத்துப்பார்த்த நிர்மலா…

“ அப்பா அம்மா மேல கைய வைக்காதே… இனி ஒரு அடி அடிச்சேன்னு வச்சிக்கோ… “ பொங்கியெழுந்த நிர்மலாவின் கையில் விறகுகட்டை.

“ ஹே.. ச்சீ பொட்டகழுதைக்கு என்ன திமிருப்பாரு.. ஏய் புள்ளயாடி வளர்த்து வச்சிக்கிற….” தன்னோட மகள் தன்னை அடிக்க ஆயுத்தமாகிவிட்டாள் என்கிற கடுப்பில் வேலாயுதம் கடுமையான தீயச்சொற்களை அள்ளி வீசினான்.

“ ஏய் ..என்னடி இது.. பெத்த அப்பாவ….பார்த்து.. “ அம்மாவின் கண்டிப்பையும் உதாசீனப்படுத்தி விட்டு… “ ஆமா அப்பா… என் அம்மாதான் என்னய வளர்த்தாங்க.. நீ எங்க வளர்த்த.. ? நீ எதுக்கு இங்க வர….. ? நீ யாரு என் அம்மாவ அடிக்க…? என் அம்மா என்ன நல்லவிதமா வளர்த்ததுனாலதான் உன்னய இன்னும் அப்பான்னு கூப்பிடுறேன்.. மருவாதையா சொல்றேன் அப்பா.. இன்னிக்கு ஓட குடிக்கிற நிறுத்தி ஒழங்கா இரு…….. இல்லன்னா.. நான் ஸ்கூலுக்கு போறதா.. இல்ல ஜெயிலுக்கு போறாதான்னு முடிவு பண்ணிக்கோ…. “

“ அடச்சீ சனியனே.. பேசுது பாரு.. எல்லாம் டிவி நாடகத்த பார்த்து கெட்டுபோச்சுங்க…. அடிங்….” திமிறினான் வேலாயுதம். திமிறிய வேகத்தில் கைப்பட்டு வீழ்ந்தாள் நிர்மலாவின் தாய்.. பலமாக தன் தந்தையை அடித்தாள் நிர்மலா..

போதையும் .. விறகு கட்டையால அடிவாங்கிய வலியாலும் துடிதுடித்தான் வேலாயுதம்…இரத்தம் வடிந்த தன் தந்தையை பார்த்து நிர்மலா “ அப்பா தயவுசெஞ்சி நீ செத்துப்போ.. செத்திடு அப்பா.. நீ எனக்கு வேணாம். நீ என் அம்மாக்கு வேணாம்.. நீ எதுக்கும் வேணாம்.. நான் படிக்கனும் பா.. கலெக்டர் ஆகணும் பா.. நீ செத்துபோ… செத்துபோ……….” என சொல்லியவாறு பலமாக தலையில் அடித்தாள் தன் குடிக்காரத் தந்தையை.

****
வருடங்கள் கழிந்தன. 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

தன் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடிய மாவட்ட ஆட்சியரின் தைரியத்தை காந்தியவாதிகளும் .. தேசத்திற்கு விடுதலை வாங்கித்தந்த தியாகிகளும் பெருமையோடு பாராட்டிக்கொண்டிருந்தனர்.

சுதந்திரதின விழா தொடங்கியது

தேசியக்கொடியை ஏற்றிவைத்த மாவட்ட ஆட்சியர்…. மகாத்மா காந்தியின் கொள்கைகளை எடுத்துரைத்து கம்பீரமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது சுற்றுசுவருக்கு வெளியே.. ஒரு சலசலப்பு…
மாவட்ட ஆட்சியரின் பார்வை சுற்றுசுவரைத் தாண்டிச்சென்றது. அங்கு ஒரு பிச்சைக்கார கிழவன். ஏதோ தகராறு செய்துக்கொண்டிருந்தான். இதை கவனித்தாலும் உரையை முழுவதுமாய் முடித்துவிட்டு தன் உதவியாளரிடம் “ அங்க என்ன பிரச்சினை? “

“ மேடம்… அந்த பிச்சைக்காரன் ஒரு பைத்தியம் மேடம்…உங்க அப்பான்னு சொல்லிட்டு உள்ள வர பார்த்தான்.. அதான்.. நாலு அடி அடிச்சி போலீஸ் துரத்திவிட்டாங்க ”

“ என்னோட அப்பாவா? பேரு என்னான்னு சொன்னாரா ? “

“வேலாயுதம் மேடம்.. “ உதவியாளர் சொன்னதும் ..திடுக்கிட்ட கலெக்டர்.. பின்பு அமைதியாக கேட்டார்.

“ ஓ குடிக்கார வேலாயுதமா ? “

“ ஆமா ஆமா அப்படித்தான் ஜனங்க சொல்வாங்க மேடம்.. உங்களுக்கு எப்படித்தெரியும்… ? “

“ ம்ம் தெரியும்…சின்னவயசில திருச்சியில தான படிச்சேன்… “ என கண்ணில் வழிந்த நீரை விரலால் அணைப்போட்டு தடுத்து.. தன் அம்மாவை பார்க்க கிளம்பினார் திருச்சி மாவட்ட ஆட்சியர் செல்வி. நிர்மலா.

” செத்துப்போ அப்பா.. நீ செத்துப்போ… ” பத்தாம் வகுப்பு படிக்கும் போது தன் தந்தையை அடித்த நிர்மலா கலெக்டரின் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருக்கிறது தமிழகத்தின் சில வீடுகளில்.. இன்னுமும் கூட…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *