நீயும் கூட ஒரு தாய் தான்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 8,720 
 

“ …ஹலோ!…விஜயா பேங்க் பிராஞ்சா?…”

“ ஆமாம்! உங்களுக்கு யார் வேண்டும்?…”

“ மேனேஜர் ரமா மேடத்திடம் அவசரமாப் பேசவேண்டும்!..”

டெலிபோன் ஆபரேட்டர் மேனேஜர் ரூமுற்கு லைன் கொடுக்கிறார்.

“ எஸ் மேனேஜர் ஸ்பீங்கிங்!…”

“ மேடம் நான் மெட்ராஸிருந்து கௌதம் பிரண்ட் பிரகாஷ் பேசுகிறேன்!…… வந்து….வந்து,,,” குரலில் ஒரே பதட்டம்!

“ என்னப்பா…கௌதமிற்கு என்ன?..” பதட்டம் இடம் மாறி விட்டது!

“ மேடம்!… கௌதம் இரண்டு நாளா வேலைக்குப் போகவில்லை!…கடுமையான காய்ச்சல்… தலை வலி, வாந்தி… உடம்பு வலி எல்லாம் இருந்தது…நானும் அவன் ரூம் மெட் ஸ்ரீதரும் பக்கத்தில் இருக்கும் டாக்டரிடம் அழைத்துப் போனோம்….அவர் இந்த காய்ச்சல் டெங்குவாக இருக்கும் என்று அபிப்பிராயப் படுகிறார்… உடனே ஹாஸ்பெட்டலில் சேர்த்து டிரீட்மெண்ட் கொடுப்பது தான் நல்லது என்று சொல்கிறார்….நாங்க என்ன செய்யட்டும்?…நீங்களும் அங்கிளும் உடனே இங்கு புறப்பட்டு வந்தால் நல்லது என்று நினைக்கிறேன்!..”

இரண்டு நிமிடம் அமைதி.

“ பிரகாஷ்!…நீ ஒரு வேலை செய்!…கௌதமிற்கு இப்ப டாக்டர் காய்ச்சலுக்கு கொடுத்த மருந்துகளை கொடுத்து விட்டு, உடனே ஒரு டாக்ஸி பிடித்து நீயும் ஸ்ரீதரும் அவனை கோயமுத்தூர் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள்!….பிளீஸ்!… இங்கு எங்களுக்கு தெரிந்த மருத்துவ மனையில் சேர்த்து கவனித்துக் கொள்வது தான் வசதியாக இருக்கும்!..”

“ சரிங்க மேடம்!,,,,இன்னும் அரை மணியில் கிளம்பி விடுகிறோம்!…”

ரமா கோவையில் விஜயா வங்கி கிளை ஒன்றில் மானேஜராக பணியாற்றி வருகிறார். அவர் கணவர் மாணிக்க வாசகரும் கோவை இந்தியன் வங்கி கிளையில் ஒன்றில் மேனேஜராகப் பணியாற்றி வருகிறார். அவர்களின் சொந்த ஊர் கோயமுத்தூர் தான்! சொந்த வீடு மற்றும் அனைத்து வசதிகளும், செல்வாக்கும் அவர்களுக்கு கோயமுத்தூரில் உண்டு!

அவர்களின் ஒரே மகன் தான் கௌதம்! அம்மா செல்லம்!. பி.ஈ. முதல் வகுப்பு. கடைசி வருஷம் படிக்கும் பொழுதே, சென்னையில் இருக்கும் ஒரு பிரபல ஐ,டி. கம்பெனி கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வு செய்யப் பட்டு விட்டான்.

டிகிரி முடித்தவுடன் சென்னைக்குப் போய் அந்த கம்பெனியில் சேர்ந்து விட்டான். கம்பெனிக்கு அருகில் சகல வசதிகளும் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் ஒரு வீடு எடுத்து, அவன் கம்பெனியில் கூட வேலை செய்யும் ஸ்ரீதர் என்ற நண்பரோடு தங்கியிருக்கிறான்.

ஒவ்வொரு சனிக்கிழமை இரவு சென்னையியிலிருந்து கோவைக்கும், ஞாயிறு இரவு கோவையிலிருந்து சென்னைக்கும் நீலகிரி எக்ஸ்பிரஸில் முதல் வகுப்பில் டிக்கெட் கௌதமிற்கு ரிசர்வ் செய்யப் பட்டிருக்கும்!

ஒரு லீவில் கூட அவன் சென்னையில் இருந்ததில்லை! ஞாயிறு அம்மாவை பார்க்காவிட்டால் கௌதம் துடித்துப் போய் விடுவான்.

அதே சமயம் ரமாவும் சரி, மாணிக்க வாசகரும் சரி கௌதமிற்கு செல்லம் கொடுத்து அன்பு செலுத்தியிருந்தாலும், அறிவும் ஒழுக்கமுள்ள பிள்ளையாக வளர்த்திருந்தார்கள்!

தனக்குத் தேவையான எந்தப் பொருள் வாங்குவதாக இருந்தாலும் அம்மா அப்பா அனுமதியோடுதான் வாங்குவான்.

ரமாவுக்கு கௌதம் என்றால் உயிர். ரமாவின் பொழுது போக்கு பேஸ் புக், வாட்ஸ் அப் தான்!

இரண்டையுமே நல்ல தகவல்களுக்குத்தான் அவள் பயன் படுத்துவது வழக்கம்! இருந்த பொழுதும் கொஞ்ச காலமாக வந்து விழும் தகவல்கள் எல்லாம் டெங்கு காய்ச்சல் பற்றித் தான்!

ஆங்கில மருத்துவத்தில் டெங்குவிற்கு மருந்தே இல்லை! நில வேம்பு கசாயத்தை விட்டால் அந்த காய்ச்சலைக் குணப் படுத்த வேறு வழியே இல்லை! என்று ஆயிரக் கணக்கான பதிவுகள்! கிட்டத்தட்ட முக நூலில் கணக்கு வைத்திருக்கும் எல்லோருமே எம்.பி.பி.எஸ், எம்.டி, எம்.எஸ் டாக்டராக மாறி ஆளுக்கு ஒரு பதிவு போட்டு பயமுறுத்துகிறார்கள்!

ஆளும் கட்சியைப் பிடிக்காத முக நூல் நண்பர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போடும் பதிவுகள் கொலை மிரட்டல்களாக இருக்கிறது! அந்தப் பதிவுகளைப் படிக்கும் பொழுது காலரா நோய் எல்லாம் சாதாரணமாகப் போய் விட்டது!

அதை எல்லாம் பார்த்து பயந்து போன ரமாவுக்கு கொசு இல்லாத நாட்டிற்குப் போய் விட்டால் தேவலை என்று தோன்றியது!

வாட்ஸ் அப்., பேஸ் புக் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு, செய்தி தாள்களைப் பிரித்தால், ‘வாட்ஸ் அப்’பே தேவலை என்று தோன்றியது!

எதிர்கட்சி தலைவர்கள் டெங்கு காய்ச்சலால் இறந்தவர்கள் வீடுகளை தேடித் தேடிப் போய் சாவு வீட்டில் இருந்து பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்!

தமிழ் நாட்டில் சாவு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டது! மாநில அரசு தவறாக கணக்குச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறது! டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களை மருத்துவ மனையில் தரையில் வரிசையாகப் போட்டிருக்கிறார்கள்! மருத்துவ வசதி செய்வதில் அரசுக்கு அக்கறை கிடையாது!

இப்படி பட்ட பேட்டிகள் கொடுத்து மக்களை பயப்படுத்தியே கொன்று விடுவார்கள் போலிருக்கிறது!

சரி, டி.வி.யில் செய்தி பார்க்கலாம் என்று டி.வி. செய்திச் சேனலுக்குப் போனால், அங்கும் கிராமங்களில் டெங்கு காய்ச்சலால் உயிர் இழந்தவர்கள் வீடுகளுக்குப் போய் இறந்தவர்கள் வீட்டுப் பெண்கள் தலை விரி கோலமாக மார்பில் அடித்துக் கொண்டு அழுவதையைக் காட்டுகிறார்கள்!

மொத்தத்தில் இந்த டெங்கு என்ற வார்த்தையைக் கேட்டாலே தமிழ் நாட்டில் எல்லோருடைய மனசில் ஒரு பீதியை உருவாக்கி விட்டார்கள்!

படித்து நல்ல வேலையில் இருந்தாலும் ரமாவும் ஒரு சாதாரணப் பெண் தானே! அதுவும் தன் உயிருக்கு மேலான ஒரே மகன் கௌதம் அந்த டெங்குவால் பாதிக்கப் பட்டுள்ளான் என்று கேள்விப்பட்டவுடன் பாதி உயிர் போய் விட்டது!

கௌதம் வந்த கால் டாக்ஸி சரியாக மாலை ஆறு மணிக்கு வீட்டிற்கு முன்னால் வந்து நின்றது. அதிலிருந்து உடனே ஸ்ரீதரும், பிரகாஷூம் வெளி வந்தார்கள்.

வாசலிலேய தயாராக காத்துக் கொண்டிருந்தார்கள் ரமாவும், மாணிக்க வாசகமும்!

“ ஸ்ரீதர்!….டாக்ஸியை அப்படியே அவிநாசி ரோட்டில் உள்ள டாக்டர் சுந்தர் நர்ஸிங் ஹோமிற்கு விடச் சொல்லு…. நாங்கள் முன்னால் போகிறோம் நீங்க எங்க பின்னால் வாங்க….அங்கு தான் கௌதமிற்கு டிரீட்மெண்ட்டுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்…….”.

ரமாவும், மாணிக்கவாசகமும் காரில் ஏறி அவிநாசி ரோட்டிற்குப் பறந்தார்கள்.

சிறிது நேரத்திதில் சுந்தர் நர்ஸிங் ஹோமில் ஒரு ஸ்பெஷல் வார்டில் ஒரு டீலக்ஸ் ரூமில் கௌதம் அட்மிட் செய்யப் பட்டான்.

ரமாவும், மாணிக்க வாசகமும் உடனே போய் சீப் டாக்டரைப் பாரத்தார்கள். ரூமில் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் உதவியாளர்கள் என்று ஒரே பரபரப்பு.

அனைத்து டெஸ்ட்களும் எடுக்கப் பட்டன. விரைவில் பிளட் டெஸ்ட் ரிசல்ட் வந்தது.

கௌதமின் ரத்தத்தில் தட்டணுக்கள் (PLATELEDS) ஒரு லட்சத்தி ஐந்தாயிரம் மட்டும் இருக்கிறதாம்!

உடனே டிரிப்ஸ் ஏற்ற ஏற்பாடு செய்யப் பட்டது

“ டாக்டர்!….கௌதம்மிற்கு இப்ப எப்படி இருக்கிறது?..”

“ மேடம்!…. சாதாரணமாக பிளட்டில் பிளேட்லெட்ஸ் 11|2 லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும்….. சற்று குறைந்திருக்கு…வெறும் வைரஸ் ப்பீவராகக் கூட இருக்கலாம்…. பயப்பட தேவையில்லை!………….” என்று சொல்லி விட்டுப் போனார்.

ரமா அதன் பிறகு தான் சரியாக மூச்சு விட ஆரம்பித்தாள். கௌதம் அம்மா, அப்பா தன் பக்கத்தில் கூடவே இருப்பதைப் பார்த்தவுடன் தெம்பு வந்து விட்டது.

கையில் செல்போனை வைத்து நோண்டிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கு ஒரு முறை கேண்டீனில் இருந்து மாதுளை, கிர்ணி, ஆப்பிள் என்று வித விதமான ஜூஸ்கள் கொண்டு வர ரமா போனில் உத்திரவிட்டிருந்தாள்.

மாணிக்க வாசகம் வெளியில் போய் நில வேம்பு கசாயம், பப்பாளி சாறு என்று தனித் தனியாக இரண்டு பாட்டில்கள் கொண்டு வந்து, கௌதமை குடிக்கச் சொன்னார்.

“ அம்மா!…எனக்கு இந்த கசாயம் எல்லாம் வேண்டாம்!….பிளீஸ்!… ஒரே கசப்பாக இருக்கிறது!…”

“ சொன்னக் கேளு!…. இந்த டெங்குவுக்கு நில வேம்பு கசாயத்தில் தான் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதாம்!… நம்ம அரசாங்கமே பல இடங்களில் மக்களுக்கு இதைத் தான் கொடுக்க ஏற்பாடு செய்திருங்கிறாங்க!…இன்றைய பேப்பரில் இனிமேல் கோவிலுக்குப் போகும் பக்தர்களுக்கு கூட இதை பிரசாதமா கொடுக்கப் போறதாப் போட்டிருக்கு!…அதனால் பேசாமல் கசாயத்தை கண்ணை மூடிக் கொண்டு குடி!…….உனக்கு தட்டணுக்கள் வேறு குறைந்திருக்கிறதாம்……..ரத்த த்தில் தட்டணுக்கள் அதிகரிக்கக் கூடிய பவர் இந்த பப்பாளி சாறுக்கு மட்டுமே உண்டு என்று அனைத்து சித்த மருத்துவர்களும் சொல்லறாங்க…அதோடு அடிக்கடி ஆங்கில வைத்தியத்தில் வேறு இதற்கு சரியான மருந்து இல்லை என்று பலர் சொல்லறாங்க….அதனாலே சைடிலே இதையெல்லாம் ஒரு பாதுகாப்புக்குச் சேர்த்துக் கொள்வது தான் நல்லது!…” என்று அப்பா ஒரு பிரசங்கமே செய்தார்.

கௌதமிற்கு வேறு வழி தெரிய வில்லை! அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு செல்போனில் மிக மெதுவாக நண்பர்களிடம் பேசிக் கொண்டும், எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டும் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.

மறுநாள். காலை ஆறுமணிக்கு ஒரு நர்ஸ் வந்து பிளட் சாம்பிள் எடுத்துக் கொண்டு போனாள்.

ஒன்பது மணிக்கு பிளட் ரிசல்ட்டோடு டாக்டர் ரூமிற்கு வந்தார்.

“ மேடம்!… பிளேட்லெட்ஸ் குறைந்து கொண்டே போகிறது….நீங்க பிளட் டோனர் நாலு பேர்களுக்கு உடனே ஏற்பாடு செய்யுங்க!…” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

“ டாக்டர்!… நீங்க என்ன சொல்லறீங்க? இப்ப பிளேட்லெட்ஸ் எவ்வளவு இருக்கு?…”

“ மேடம்!..இப்ப அறுபதாயிரம் தான் இருக்கு! மேலும் குறைய வாய்ப்பு இருக்கு!. …முதலில் வைரஸ் பீவராக இருக்கும் என்று நினைச்சோம்!…பிளேட்லெட்ஸ் வேகமாக இறங்குவதைப் பார்த்து இது டெங்கு ஜூரம் என்று உறுதியாகிறது .…அதனால் உடனே பிளட் தேவைப் படுகிறது… நீங்க உடனே இன்று நாலு டோனர்களுக்கு ஏற்பாடு செய்யுங்க! டெங்கு ஜூரம் வந்தா பிளேட்லெட்ஸ் முதலில் குறைந்து தான் மறுபடியும் ஏறும்! பயப்படத் தேவை இல்லை ..”

உடனே மாணிக்கவாசகர் வெளியில் புறப்பட்டுப் போனார். ரமா தன் அலுவலகத் தோழிகள் பலருக்கு மாற்றி மாற்றிப் போன் செய்தாள்.

உடனே ஒரு மணி நேரத்தில் பிளட் டோனர்கள் நாலு பேர் ரூமிற்கே வந்து விட்டார்கள். மாணிக்க வாசகர் அவர்களை லேப்பிற்கு அழைத்துக் கொண்டு போனார்.

அவர்கள் கூடவே மாணிக்கவாசகரும் போனார். அவர்களிடம் பிளட் எடுத்த பின், அவர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பி விட்டு, ஒருமணி நேரம் கழித்து வந்தார்.

நான்கு மணிக்கு டாக்டர் நர்ஸ்கள் புடை சூழ வந்தார். ஒரு நர்ஸ் கைகளில் பிளேட்லெட்ஸ் நான்கு வைத்திருந்தார்

டாக்டர் டிரிப்ஸில் மூலம் அதை செலுத்தச் சொன்னார். உடனே நர்ஸ் அந்த வேலையை செய்து முடித்தார்.

“ டாக்டர்!….எப்படி இருக்கு?…” ரமாவின் குரலில் சுரத்தில்லை! கண்கள் கலங்கியிருந்தன.

“ பிளேட்லெட்ஸ் செலுத்துவதால் இனி பயமில்லை!… எதற்கும் இன்னும் நாலு டோனர்களை நாளைக்கு வரச் சொல்லி விடுங்கள்!.”

“ டாக்டர் ….. மீண்டுமா?…..”

“ ஆமாம் மேடம்!.. டெங்கு காய்ச்சலுக்கு பிளேட்லெட்ஸ் மள மளவென்று குறைந்து கொண்டு போய் கடைசியாகத்தான் மீண்டும் ஏறும்! இன்று அறுபதாயிரம் இருக்கு…. நாளைக்கு மேலும் குறையலாம்… அதனால் முன்னெச்சரிக்கையாக நாம் அதை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்….பயப் பட வேண்டாம்!…..”

டாக்டர் போய் விட்டார். ரமாவின் கண்களில் கண்ணீர் சொட்டுச் சொச்சாக விழுந்தது. அதை கௌதம் பார்ப்பதற்குள் துடைத்துக் கொண்டாள்.

கௌதமிற்கு உடல் சோர்வோடு மனச்சோர்வும் சேர்ந்து கொண்டது! தான் அபாய கட்டத்தில் இருப்பதை உணர்ந்து கொண்டான்.

“ அம்மா!….என்னுடைய பெஸ்ட் பிரண்ட்க்கு போன் செய்து நாளைக்கு வரச் சொல்லட்டுமா?…எனக்குப் பார்க்க வேண்டும் போலிருக்கு!…”

“ இதற்கென்ன?…தாராளமா வரச் சொல்!…அவர்களிடம் கண்டதைச் சொல்லி பயப் படுத்தி விடாதே!….”

“ சரியம்மா!..”

அதற்குப் பின் கௌதம் போனில் நீண்ட நேரம் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். பேசி முடித்து விட்டு ஜூஸ் கேட்டு வாங்கிக் குடித்தான்.

மாணிக்க வாசகம் குல தெய்வம் வேறு…ரமாவின் குல தெய்வம் வேறு…இருவரும் தங்கள் தங்கள் குல தெய்வங்களிடம் வேண்டிக் கொண்டார்கள். திருப்பதியிலிருந்து மதுரை மீனாட்சி வரை கௌதம் குணமாகி வந்தால் அதைச் செய்கிறேன்…இதைச் செய்கிறேன் என்று நிறைய வேண்டுதல் செய்து கொண்டே அன்றைய பொழுதைக் கழித்தார்கள்!

மறு நாள் காலை ஆறு மணிக்கே ஒரு நர்ஸ் வந்து டெஸ்டுக்காக பிளட் சாம்பிள் எடுத்துக் கொண்டு போனார்.

டாக்டர் ஒன்பது ஐம்பதுக்கு வந்தார்.

“ மேடம்! டோனர்களுக்குச் சொல்லியிருக்கிறீர்களா?…இன்று பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை பதினைந்தாயிரத்திற்கு வந்து விட்டது!…உடனே இன்றும் நாலு டோனர்களின் பிளேட்லெட்ஸ் உடம்பில் ஏற்ற வேண்டும்……”

“ என்ன டாக்டர்!….. இன்றும் இப்படி சொல்லி பயமுறுத்துகிறீங்க?…”

“ டெங்கு காய்ச்சலால் பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை இறங்கினால் கிழே இறங்க ஆரம்பித்தால் ஏழு நாட்கள் வரை இறங்கி விட்டு, அதன் பிறகு ஒரு நிலை படுத்திக் கொண்டு மேலே ஏறத் தொடங்கி விடும்!… இன்று ஏழாவது நாள்….இதற்கு மேல் இறங்காது….நாளையிலிருந்து ஏறத் தொடங்கி விடும்….இன்று ஒரு நாலு டோனர்களின் பிளேட்லெட்ஸை ஏற்றி விட்டால் போதும் என்று நினைக்கிறோம்!…நீங்க தைரியமாக இருங்க!… என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

அது ஸ்பெஷல் வார்டில் டிலக்ஸ் ரூம். நோயாளிக்கு தனியறை. அதை அடுத்து அட்டாஸ்டு பாத் ரூம். நோயாளியின் ரூமிற்கு முன்னதாக அட்டெண்டர்கள் தங்குவதற்கான அறை. அதில் டி.வி. போன்., கட்டில், நாலு சேர்கள் என்று வசதியாகத் தான் இருந்தன.

அந்த ரூமிற்கும் நோயாளியின் ரூமிற்கும் இடையில் உள்ள கதவை முக்கால்வாசி மூடி விட்டு, அட்டெண்டர் ரூமில் ரமாவும், மாணிக்க வாசகரும் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த ரூமில் இருந்த டிவி.யில் செய்தி சேனலில் டெங்குவால் எந்த எந்த மாவட்டங்களில் எத்தனை உயிர் இழப்புகள் ஏற்பட்டன என்ற விபரமும் அதற்கு எதிர் கட்சி தகைவர்களின் கருத்துக்களையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மாணிக்க வாசகம் கோபமாக டி.வி.யை நிறுத்தி விட்டு, டோனர்களுக்காக நண்பர்களுக்கு போன் செய்து கொண்டிருந்தார்.

ரமா சோகமாக உட்கார்ந்திருந்தாள். அந்த நேரத்தில் வெளிக் கதவை யாரோ மெதுவாக தட்டினார்கள்.

நர்ஸாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு “கம்….இன்!…” என்று ரமா சொன்னாள். ஒரு காலத்தில் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பாரம்பரிய உடையாக இருந்த சல்வார் கமீஸ் உடையில் உள்ளே வந்ததோ ஒரு தேவதை.

நல்ல சிவப்பு நிறம். களையான முகம். நல்ல உயரம். கச்சிதமான உடல்வாகு. அற்புதமான வளைவுகள் பொருத்தமான உடைத் தேர்வு. கழுத்தில் ஒரே தங்கச் சங்கிலி.

ரமாவிற்கு உறவிலோ, நட்புகளிலோ இது போன்ற பெண் இல்லை. தவறுதலாக யாரோ இந்த ரூமிற்கு வந்து விட்டார்கள் என்ற நினைப்பில் ரமா, “.யாரைப் பார்க்க வேண்டும்?…” என்று கேட்டாள்.

“ ஆண்டி!… கௌதமைப் பார்க்க வேண்டும்…. அவன் இந்த ரூமில் இருப்பதாகச் சொன்னார்கள்!…”

ரமாவுக்கு ஒன்றும் புரியவில்லை! சாத்தியிருந்த கதவை சற்று திறந்து

“ கௌதம் அங்கு படுத்திருக்கிறான்…” என்று காட்டினாள்.

உடனே அந்தப் பெண் வேகமாகப் போய், ஒரு சேரை கௌதம் ‘பெட்’க்கு பக்கத்தில் இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள்.

“ கௌதம்!….என்னாச்சு?….துவைத்துக் காயப் போட்ட துணி மாதிரி இப்படி படுக்கையில் கிடக்கிறே!….” என்று பதறிப் போய் கௌதமின் கைகளைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.

அவள் கண்களிலிருந்து அருவியாக கண்ணீர் கொட்டியது!

“ உஷ்!…ஸ்டெல்லா சற்று அமைதியாக இரு….பக்கத்து ரூமில் அம்மா அப்பா இருக்கிறாங்க…இதற்காகத் தான் உனக்கு தகவல் தராமல் இருந்தேன்!…”

“பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை பதினைந்தாயிரத்திற்கு வந்து விட்டது!.. என்று பேசிக் கொள்கிறாங்க…எனக்குப் பயமாக இருக்கு!…”

“பயப்படத் தேலையில்லே!…..டிரீட்மெண்ட் சரியாகத் தான் போய் கொண்டிருக்கிறது…டெங்கு காய்ச்சலுக்கு அது தட்டணுக்கள் மிகவும் கீழே இறங்கி, எழு நாட்களுக்குப் பிறகு மேலே ஏற ஆரம்பித்து விடும்!…இன்று ஏழாம் நாள். இனி இறங்காது என்று நினைக்கிறேன். இன்றும் அப்பா அம்மா டொனர்களுக்குத் தான் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்!…இன்னும் இரண்டு மணி நேரத்தில் நாலு டோனர்களின் பிளேட்லெட்ஸ் ஏற்ற ஆரம்பித்து விடுவார்கள்!..”

“ என் பிளட் கூட ஏ பாஸிட்வ் தான்!… அந்த பிளட் குரூப் உள்ள ஐந்தாறு தோழிகள் இங்கு தான் இருக்கிறார்கள்… நான் வராண்டாவுக்குப் போய் அவர்களை எல்லாம் உடனே இங்கே வரச் சொல்கிறேன்!….” என்னு சொல்லி விட்டு வாராண்டாவுக்குப் போய் அவளின் தோழிகளை மாற்றி மாற்றி கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த அனைத்தையும் மாணிக்க வாசகமும் ரமாவும் கேட்டுக் கொண்டு தானிருந்தார்கள். ஓரளவுக்குப் புரிந்ததால் அவர்கள் சிலையாக மாறி அப்படியே சிறிது நேரம் உட்கார்ந்து விட்டார்கள்!

அதுவும் ஸ்டெல்லா என்ற வார்த்தை நெஞ்சில் ஆணி அடித்தது போல் பதிந்து விட்டது.

அவர்கள் மிகவும் கட்டுபாட்டை கடைப் பிடிக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்! அவர்களின் நெருங்கிய உறவில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணப் பெண் அவர்கள் ஜாதியில் வேறு ஒரு உட்பிரிவை சேர்ந்தவர்கள் என்று தெரிந்து, உறவுக் பெண்கள் அதைப் பேசிப் பேசித் சிரித்தது ரமாவின் நினைவுக்கு வந்தது!

அந்தப் பெண் போனவுடன் வேகமாக கௌதம் படுக்கைக்கு அருகில் போனாள் ரமா!

“ அம்மா!….என்னை மன்னிச்சிடுங்க அம்மா….ஸ்டெல்லா என் காலேஜ்மெட் அவளும் இங்கு ஐ.டி, கம்பெனியில் தான் வேலை செய்கிறாள்.… நாங்க உயிருக்கு உயிராய் விரும்புகிறோம்!…நம் குடும்ப நிலை எல்லாம் ஸ்டெல்லாவுக்குத் தெரியும்!…எங்களால் உங்க கௌரவம் பாதிக்கும் என்று தான் நாங்கள் வெளியில் சொல்ல முடியவில்லை!…நான் உங்க மேல் வைத்திருக்கும் பாசம் அவளுக்குத் தெரியும்…உங்க விருப்பம் இல்லாமல் நாங்க எதையும் செய்து விட மாட்டோம்!… ஸ்டெல்லா ரொம்ப நல்லவ அம்மா!… நேரம் வரும் பொழுது உங்கம்மா அம்மாவிடம் பேசிப் பார்க்கிறேன்… அவர்களுக்கு சம்மதம் இல்லை என்று சொல்லி விட்டால் நாம் நண்பர்களாகவே பிரிந்து விடுவோம் கௌதம் என்று தான் என்னிடம் சொல்லியிருக்கிறாள்… என்னால் அவள் இல்லாமல் இருக்க முடியாது என்று என்று நினைக்கிறேன்… எனக்கு டெங்கு தீவரமாகி தட்டணுக்கள் ஒரு லட்சத்து இருபதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் வந்து மேலும் பதினைந்தாயிரமாக குறைந்து கொண்டே போகிறது!… வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும் எனக்கு சாவு நெருங்கிக் கொண்டிருப்தாகத் தோன்றியது…சாகும் முன் ஒரு முறையாவத் ஸ்டெல்லா முகத்தை பார்க்க ஆசையாக இருந்தது…. அதனால் தான் அவளை இங்கு வரச் சொன்னேன்…. நீங்க என்ன சொன்னாலும் அவள் கேட்பாள்….…ஏன் என்றால் நீங்க என் உயிர் என்று அவளுக்குத் தெரியும்!…”

“ அர்த்தம் இல்லாமல் அசட்டுத் தனமாக எதையும் பேசாதே!…ஆம்பிளை இவ்வளவு கோழையாக இருக்கக் கூடாது!…”

அதற்குள் ஐந்தாறு தொழிகள் புடை சூழ ஸ்டெல்லா உள்ளே நுழைந்தாள்.

“அங்கிள்… இவர்கள் எல்லாம் பிளட் டோனர்கள் தான்… எங்களை சீக்கிரம் லேப் பிற்கு கூட்டிக் கொண்டு போங்க! ….

மாணிக்க வாசகம் அவர்களை ‘லேப்’பிற்கு அழைத்துக் கொண்டு போனார்.

இரண்டு மணி நேரம் கழித்து எல்லோரும் ரூமிற்கு வந்து கௌதமிடம் சொல்லி விட்டுப் போனார்கள்! ரமா எல்லோருக்கும் நன்றி சொன்னாள்.

ஸ்டெல்லா மட்டும் டாக்டர் வரும் வரை இருந்தாள்.

டாக்டர் வந்தார். கூடவே வந்த நர்ஸ்கள் டிரிப்ஸில் போய் கொண்டிருந்த குளுக்கோஸை எடுத்து விட்டு பிளேட்லெட்ஸை செலுத்தச் செய்தார்கள்!

டாக்டர் கௌதமை ஒரு முறை செக் பண்ணி விட்டு, “ மேடம்!….நாளைக்கே பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை அதிகமாகி விடும்!…நாளை மறு நாள் நீங்க வீட்டிற்கே கூட்டிக் கொண்டு போகலாம்!…இனி தைரியமாக அவரவர் வேலையைப் பாருங்க!…” என்றார் சிரித்துக் கொண்டே!

கௌதம் முகத்தில் ஒரு களை வந்து விட்டது! ஸ்டெல்லா முகத்திலும் ஒரு தெளிவு வந்து விட்டது!

“ஆண்டி!…….நான் போய் வருகிறேன்!…கௌதமை நன்கு பார்த்துக் கொள்ளுங்க!…அவன் குழந்தை மாதிரி!…அவன் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்று ‘சர்ச்’க்குப் போய் கர்த்தரிடம் வேண்டிக் கொண்டு தான் இங்கு வந்தேன்…அவன் உயிரோடு இருந்தால் தானே நானும் உயிரோடு இருக்க முடியும்!…கர்த்தரின் ஆசியில் அவன் பிழைத்துக் கொண்டான். எனக்கு அது போதும்! அவன் ஒரு போதும் உங்களுக்குப் பிரியமில்லாததைச் செய்ய மாட்டான்….…உங்கள் வளர்ப்பு அப்படி!..உங்களைப் பற்றி அவன் நிறையச் சொல்லியிருக்கிறான்….அவனுக்கு எது நல்லதோ அதைத் தான் நீங்க செய்வீங்க என்று நாங்களும் நம்புகிறோம்!………கௌதம் இனியாவது நீ தைரியமாக இரு…குழந்தை மாதிரி புலம்பாதே!…. உங்கள் குல தெய்வத்தின் துணையும், எங்க கர்த்தரின் ஆசியும் நமக்கு என்றும் இருக்கும்…உடம்பை கவனித்துக் கொள்!….…” என்று சொல்லி விட்டு ஸ்டெல்லா கிளம்பி விட்டாள். வராண்டா முடியும் வரை வந்த ரமா, ஸ்டெல்லாவின் கைகளைப் அன்பாகப் பிடித்து “ நீ ரொம்ப புத்திசாலியாக இருக்கிறாய்….நீயும் கூட கௌதமிற்கு ஒரு தாய் தான்!…தாயையும் பிள்ளையும் பிரிப்பது பாவம் என்று எனக்குத் தெரியும் ……போய் வாம்மா!…” என்று வழி அனுப்பி வைத்தாள்.

– பிப்ரவரி 9-15 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *