நிழல் யுத்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 13,701 
 

சண்டை என்ற விரும்பத் தகாத வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்டுக் கேட்டே மனம் சலித்துப் போயிருந்த நேரமது . கேட்பது மட்டுமல்ல. இதற்கப்பால் கண் முன்னாலேயே குரூர முகம் கொண்டு கருகி விழும் தாய் மண்ணின் சோக விழுக்காடுகளையே ஒன்றும் விடாமல் நிதர்ஸனமாக எதிர் கொண்டு செத்துப் பிழைக்கின்ற பாவப்பட்ட கலி பீடித்த தமிழர்களினிடையே, , அந்தக் கலித் தீட்டு மட்டுமல்ல அதற்கும் மேலாக வாழ்க்கை சார்பான ஒட்டு மொத்த பாவ விழுக்காடுகளின் முழுவெளிப்பாடுமாய் தனது இருப்புகள் இருளின் கறை குடித்து உயிர் வரண்டு தீப்பற்றியெரியும் ஒரு பாலைவனத்தில் சுடுகாடாய் வெறிச்சோடியிருப்பதை பாவம் அவள் மட்டுமே அறிவாள்.

இதை ஊர் அறியப் பிரகடனப்படுத்தி வாய் விட்டு அழுவதை என்றைக்குமே அவள் விரும்பியதில்லை அவளுக்குத் தெரியும் அதை விடப் பெருஞ்சோகம் இந்த மண்ணினுடைய இழப்புகள். யார் செய்த பாவமோ? யார் இட்ட சாபமோ? இந்த ஓயாத சண்டை காரணமாக தமிழன் நடுத் தெருவுக்கு வந்து விட்டான். பூர்வீகமே அறியாமல் எங்கோ அந்நிய நாட்டில் வேரூன்றி வளர்ந்து வரும் இளந் தலைமுறையினரை மறந்துவிட்டு நாமெல்லம் கூடிக் களிக்கவா இந்தத் தமிழ் வேதம்?

வேதமென்ற கதையெல்லாம் .இனி எதற்கு? புதையுண்டு போன மண் போனது போனதுதான்/. அவளுக்கு, அதாவது வாழ்வின் துருப்பிடித்து ஒளி விடுபட்டுக் கிடக்கிற இந்த அருள்மொழிக்கு அதைப் பற்றிய கவலை இயல்பானது .அருள் என்று தான் அவளை எல்லோரும் அழைக்கிறார்கள் அதற்கேற்ப தன்னலம் ஒழிந்து போன விசாலமான பரந்த அன்பு மனம் அவளுக்கு.

கல்யாணமாகி என்றைக்குமே அவள் சந்தோஷத் தேர் ஏறிப் போனதில்லை ஒளிப் பாதையில் சந்தோஷத் தேர் ஓட இயலாமற் போன இடறிச் சரித்து விட்டுப் போகிற நெருடல்கள் மிகுந்த வாழ்க்கைச் சோகம் அவளுடையது. மனதாலோ உணர்வுகளாலோ அவளுடன் ஒன்றுபட்டு உயிர் கலக்காமல் அவள் கணவன் துருவத்தில் மறை பொருளாக நின்ற வண்ணம்,, உடல்ரீதியாக அவளோடு வாழ்ந்து தீர்த்த உச்சக் கட்ட பலனாய் அவளுக்குக் கிடைத்த பரிசு பொன்னான ஆறு குழந்தகள் மட்டும் தான். தலைவன் துணையின்றி அவர்களை வளர்த்து ஆளாக்க அவள் பட்டபாடும் சிரமங்களும் கடவுளுக்கே வெளிச்சம். பெரியவள் மாலாவிற்கு வயது இருபதாகிறது கண்களில் காட்சி மனதில், கல்யாணக் களை கட்டுகிற வயசு. ஆனாலுமென்ன. அந்தக் கனவு நிலையை விட்டு அவள் நெடுந்தூரம் போய் ஒரு யுகமாகிறது. பொறுப்புகளை விட்டு எதிலுமே பட்டுக் கொள்ள விரும்பாத ஒரு புறம்போக்கு மனிதராய் விலகி நிற்கிற அப்பாவை நினைத்து அவள் படிப்பதையே பாதியில் நிறுத்தி விட்டு அம்மாவின் சுமையைக் குறைப்பதற்காக, அவள் வேலை தேடும் படலம் இன்னும் முற்றுப் பெறவில்லை அதுவும் சண்டை நடைபெறுகிற ஒரு வெறும் மண்ணில், அவள் எதிர்பார்க்கிற மாதிரி ஒரு வேலை கிடைக்குமா? ஏ எல் மட்டுமே படித்த அவளுக்கு அப்படியென்ன பெரிய வேலை கிடைத்து விடப்போகிறது? எதுவாயிருந்தாலும் சரி/ சின்ன மட்டமான வேலையாக இருந்தாலும் சரி அப்பா ஒழுங்காக இல்லாத ஒரு வீட்டில் கூலி வேலைக்குப் போயாவது தாயின் சுமையைக் குறைக்க வேண்டுமென அவள் விரும்புகிறாள். ,அதிலேயும் இன்னொரு மனக்கஷ்டம். அவளுக்கு நேரே இளையவளான பவானியே இப்போது அவர்களுக்குப் பெரும் பிரச்சனை.

அவள் படித்து முன்னேறி வாழ்கிற வயதில், மனநலம் பாதிக்கப்பட்டு நிலை சரிந்து கிடக்கிறாள். அவளைக் குணப்படுத்தி நல்ல நிலைக்குக் கொண்டு வர அம்மா தினமும் தீக்குளித்துச் சாகிறாள். அப்பாவின் எதிர்மறையான நடத்தைக் கோளாறுகளுக்கு முகம் கொடுத்தே மிகவும் நொந்து போயிருக்கிற அவளை மேலும் புடம் போட்டுப் பதம் பார்க்கவே அவளுக்கு இது ஒரு கசப்பான அனுபவம் பவானியை மையமாக, வைத்துச் சுவாலை விட்டு எரிகின்ற இந்த அக்கினிக் குண்டம் நடுவேதான்.

மாலாவும். பவானியைப் பற்றிய அதிகளவு கவலையும் கரிசனையும் அம்மாவுக்கு அடுத்தபடியாக அவளுக்குத் தான். பவானிக்கு அடுத்தது இன்னுமொரு சுட்டித் தங்கை மலர் அவளுக்குப் பத்து வயதுதானாகிறது தமிழ்ப் பள்ளிக்கூடத்திலேதான் படிப்பெல்லாம். கூடவே சின்னத் தம்பிமாரும் போவார்கள் அவர்கள் உலகம் வேறு அப்பா இந்த உலகத்தைக் கண் கொண்டு பார்ப்பதேயில்லை வாசிகசாலைக்குப் பேப்பர் மேயப் போய் விடுவார். அவருக்கு வாழ்க்கைப்பட்டு அருள் இழப்புகள் நிறையக் கண்ட போதிலும், இன்னும் அவள் எல்லாம் துறந்து துறவியாகி விடவில்லை கண்ணை மூடிக் கொண்டு தபஸ்வினி மாதிரி ஒரு வாழ்க்கைத் தவம் அவள் மனசில். அதுவும் ஒரு போர்ச் சூழலில் தினம் தினம்
குண்டு மழை நடுவேதான் அந்த வாழ்க்கைத் தவம். தொன்னூறாம் ஆண்டு அது கூட நிகழாமல் வீட்டை விட்டு இடம் பெயர்ந்து ,அவர்கள் கொழும்பு போக நேர்ந்தது.

பலாலி இராணுவ முகாமிற்கு அருகே சிறிது தூரம் தள்ளி அவர்கள் கிராமம் இருந்ததால் நிம்மதியாக அங்கு நிலை கொண்டு இருக்க முடியவில்லை. உயிர் தப்பினால் போதும் என்ற நிலை தான் ஆனால் கொழும்பு போய் என்ன செய்வது?
இருக்க வீடு கிடைக்க வேண்டுமே அதுவும் வாடகை வீடெடுப்பதென்றால் சும்மாவா? அட்வான்ஸ் கொடுப்பதற்கே நிறையப் பணம் வேண்டுமே அப்பாவின் அரை குறை பென்ஷனில் இதெல்லாம் நடக்கிற காரியமா? கடவுள் மாதிரி ஒரு மனிதர். அருளின் தங்கை புருஷன் நடேசன். அவர் தயவில் கொட்டாஞ்சேனையில் அவர்களுக்கொரு .அடைப்புப் போல ஓர் அனெக்ஸ் வீடு. ஓர் அறை ஒரு சின்னக் ஹால். அவ்வளவு தான் அதற்குக் கூட அவர்களுக்கு வக்கில்லை.

அப்பா எல்லாவற்றையும் சீரழித்துத் துவம்சம் செய்த பின் சித்தப்பா துணை மட்டும் இல்லாமற் போயிருந்தால் இந்தக் கொழும்பு வாழ்க்கையே வெறும் பகற்கனவுதான் அவர்களுக்கு. சண்டை அவர்களை விழுங்கியிருக்கும். சித்தி அதைவிடப் பெரிய உதவியெல்லாம் செய்வதுண்டு அதனாலே அவர்களை நம்பி எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? சொந்தக் காலில் நிற்க வேண்டாமா? தினமும் மாலாவின் பொழுது வேலை தேடும் படலத்திலேயே கழிந்தது. எத்தனையோ நேர்முகத் தேர்வுகளுக்கெல்லாம் போய் வந்திருப்பாள் வீண் அலைச்சல் தான் மிஞ்சியது . எதற்கும் சிபார்சு இல்லாமல் சரி வராது என்று பட்டது.

அதைப் பற்றிய பெரும் மனக் கவலையோடு மாலா இருந்த போது ஒரு தினம் அம்மா சொன்னாள்.

“ கவலைப்படாதை மாலா. நானொரு வழி சொல்லுறன் கேட்பியே?”
“சொல்லுங்கோவம்மா”

“உனக்குச் சின்னத்துரையைத் தெரியுந்தானே”

“ஓம், தெரியும் ஊரிலேயும் கண்டனான் அந்தாளுக்கென்ன?

“அவர் மனம் வைச்சால் உனக்கு வேலை நிச்சயம் கிடைக்கும்”
“எப்படியம்மா?”

பொறு. வடிவாய்ச் சொல்லுறன் அவர் இஞ்சையொரு தேயிலைக் கொம்பனி முதலாளியெண்டு கேள்விப்பட்டனான். ஒருக்கால் அவரைப் போய்ச் சந்திச்சிட்டு வரட்டே?”

“நல்லாய்ச் செய்யுங்கோ ஆனால் கிடைக்க வேணுமே”

“எல்லாம் கிடைக்கும்.. நீ பேசாமல் இரு“

அதற்குப் பிறகு மாலா ஒன்றும் கூறாமல் மெளனமாகவே இருந்தாள் எனினும் உள்ளூர ஒரு தீ எரியத் தான் செய்தது சின்னத்துரையை இலக்கு வைத்து அம்மாவினுடைய இந்தப் பயணம் எதில் போய் முடியுமென்று அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது அவர் எப்படிப்பட்டவரோ? யாருக்குத் தெரியும்? அதிலும் உறவில்லாத ஓர் அந்நியர் அவர். பல சமயங்களில் உறவு மனிதர்களே கை கொடுக்காமல் அடி சறுக்கும் போது, அம்மா நம்பிப் போவது போல அவர் அன்பு இதில் எடுபடுமா அல்லது அடி சறுக்குமா? தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்.

சின்னத்துரையின் வீடு வெள்ளவத்தையில் இருந்தது. கொட்டாஞ்சேனையிலிருந்து நெடுந்தூரப் பயணம் . அதுவும் பஸ்ஸில் போய்ப் பழக்கமில்லாத அம்மா போகப் போகிறாள்.

அதை நினைத்துக் கொண்டு திடுமென்று மாலா குரலை உயர்த்திச் சொன்னாள்.

“அம்மா அப்பாவோடு போறது தானே”

“நல்லாய்ச் சொன்னாய் அந்தாளோ? உது நடக்காது. நான் போட்டு வாறன்”

அவள்கேட்டாள்.

“அப்ப எதற்குத் தான் அந்தாளை?

”உதுக்கு நான் மறு மொழி சொல்ல வேணுமே? என்ரை வாயைக் கிளறாதை”
மாலாவுக்கு மிகப் பெரிய மன வருத்தத்தையும் மீறி வாய் விட்டுச் சிரிக்க வேண்டும் போல் தோன்றியது அப்பாவுக்கும் அந்தக் குரல் கேட்டிருக்கும். காற்றில் அலை பாய்கிற அம்மாவின் அதிக பட்சமான சோகக்குரல். அதன் வழி வந்த துயர நெருப்பு அணையாத நிலையிலேயே. வெள்ளவத்தைக்குப் போய் சின்னத்துரையைச் சந்த்தித்துவிட்டு, மீண்டும் அம்மா களைத்துப் போய் வந்திருக்கி|றாள். அதையும் மீறி ஒரு மகிழ்ச்சி ஒளி அவள் முகத்தில் மின்னலிடுவதை மாலா நேரில் தரிசிக்க நேர்ந்தது.. அதை வெளிக்காட்டாமல் அவள் சுருதி ஏறிக் கேட்டாள்.

“என்னவாம் சின்னத்துரையென்ற அந்தப் பெரிய மனிதர்?”

“என்ன இப்படிக் கேட்கிறாய் முதலில் லைட்டைப் போடு இருட்டிலை என்ன செய்கிறாய்?

”நான் சொல்லுறன்”

“அம்மா இந்த இருட்டு மட்டுமில்லை எல்லா இருட்டும் என்னோடுதான்“

“அது தான் உன் முகம் பார்த்து விளக்கு வந்திட்டுதே. எல்லாம் சரி வரும்”

“எப்படியம்மா?”

“சின்னத்துரையர் ஓம் சொல்லிப் போட்டார். கிளைக் கொம்பனியிலை உன்னைப் போடுவாராம். எதுக்கும் முதலில் நீ போய் அவரைப் பார்க்க வேணும்”

“அது எதுக்கு? எனக்கு இன்னுமொரு நேர்முகப்பரீட்சையோ?”

“இருக்கட்டுமே. அது சும்மா பேருக்கு. நிச்சயம் உனக்கு அவர் வேலை தருவார்”

அதன் பிறகு மாலாவுக்கு அவர் மீது அதீத நம்பிக்கை பிறந்தது. அவர் கேட்டுக் கொண்ட பிரகாரம் கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது கம்பனியில் மறு நாள் தன் பயாடேட்டா சகிதம் அவரைச் சந்திக்கப் போனாள் அவள். மிகவும் பெரிய ஒரு தேயிலைக் கம்பனி தான் அது. அதற்கு நிர்வாக மனேஜராக அவர் பதவி அங்கு கொடிகட்டிப் பறப்பதாய் அவளுக்கு உணர்வு தட்டிற்று. இந்த உணர்வு மயக்கம் தீராத நிலையிலேயே அவரின் கேள்விகளை அவள் பயத்துடனே எதிர் கொள்ள நேர்ந்தது. என்ன பெரிய கேள்விகள்”? வழக்கமான கேள்விச் சரங்கள் தாம்.. அதில் முத்துக் குளிக்கிற நிலைமை அவளுக்கு. ஆங்கிலம் அவளுக்குச் சரளமாகப் பேச வரும் அவர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகள் அத்தனைக்கும் அவள் பதில் பிழையின்றிச் சரளமாகவே வந்தது.. முடிவில் அவர் சொன்னார் திடமாக.

“நீர் போம்… நியமனக் கடிதம் விரைவில் வீடு தேடி வரும்”

அவள் அவரின் அந்தப் பொய்த்து போகாத அன்புக் கருணை பொங்கி வழிகிற மிகவும் புனிதமான சத்திய வாக்கை நம்பி, வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கத் தொடங்கி இன்று நேற்றல்ல நீண்ட ஒரு யுகம் போலாகிறது அந்த வரட்சியான காலக் கணக்கு . அவள் எதிர்பார்த்தமாதிரியோ அம்மா போட்ட கணக்கின்படியோ கடைசிவரை அது வரவேயில்லை சின்னத்துரையென்ற அந்த மாமனிதர் இப்படி அவள் நெஞ்சில் குத்தி ஏமாற்றிவிட்டதற்கு நியாயமான எந்த ஒரு காரணத்தையும் அவளால் வெறும் ஊகமாகக் கூட அறிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு காரணம் இருக்கத் தான் வேண்டும்.அது என்ன?

இதைப் பற்றி நிறைய யோசித்து, நீண்ட நாட்ளுக்கு மேலாக அவள் பொறுமையிழந்து காத்துக் கொண்டிருந்த போது, அம்மா ஒரு நாள் வெளியே போய் அலைந்த, களைப்புடன் அதிர்ச்சியான திடுக்கிடும் ஒரு செய்தியோடு வந்து சேர்ந்தாள்.

வாசற்படியில் தடுக்கி விழாத குறையாக நிலை குலைந்து தடுமாறி அவள் உள்ளே நுழைகிற போது, எதிர் நின்று அவளைத் தாங்கியபடி மாலா அவசரமாகக் குரலை உயர்த்திக் கேட்டாள்.

“என்னம்மா அந்தரப்பட்டு வாறியள்? வழியிலை ஏதும் விபரீதமாய் நடந்து போச்சே?

“என்னத்தைச் சொல்ல! நடந்த இந்த அநியாயத்தைக் கேட்டால் நீ தாங்குவியே?”
அப்படியென்ன பெரிய அநியாயம் எனக்குத் தெரியாமல்? எதென்றாலும் நான் கேட்கிறன் . பதட்டப்படாமல் சொல்லுங்கோ”

“தாஸனைத் தெரியுமல்லே“

“ஆர் தாஸன்?

“என்ன தெரியாத மாதிரிக் கதை விடுறாய்? எங்களுக்கு அவன் சொந்தம் கூட. எப்ப பார்த்தாலும் சிரிப்புக் களை வடிகிற பளிச்சென்ற முகம் அவனுக்கு எல்லாம் பாசாங்கு.. எங்கை கல்யாண வீடென்றாலும் பட்டு வேட்டி சால்வையோடு நெற்றியிலே சந்தனப் பொட்டுப் பளிச்சிட கெளரவமான ஒரு பெரிய மனிசன் மாதிரி வந்து நிப்பான்.. ஆனால் அவன் செய்த காரியம் தான் இப்ப உன்னை முதுகிலை குத்திச் சரித்து விட்டிருக்கு“

“என்னம்மா சொல்லுறயள்?”

“வாற வழியிலை அவன்ரை மனுசி ராணியைப் பார்த்தனான். . அவள் சொன்னாள் நாலைஞ்சு மாதங்களுக்கு முன்பு சின்னத்துரை தாஸனிட்டை எங்களைப் எங்களைப் பற்றிக் கேட்டவராம் அவன் அப்படி என்ன சொன்னானோ தெரியேலை அதுதான் உனக்கு அவர் வேலை தரேலை”

“எனக்குப் புரியுதம்மா அவன் என்ன சொல்லியிருப்பானென்று நான் சொல்லுறன் .பவானிக்கல்ல, எனக்குத்தான் விசர் என்று சொல்லியிருப்பான்.. இது படுமோசமான ஒரு செயலில்லையா? போயும் போயும் அவனுக்கா கழுத்தில் விழுந்த இந்தப் பூமாலை?’

அதற்கு அருள் சொன்னாள் மிகுந்த தார்மீகச் சினத்தோடு உணர்ச்சிகொண்டு அவள் பேசுவதை மனம் கனத்துக் கேட்டவாறே மாலா வெறும் வானத்தையே பார்த்து வெறித்துக் கொண்டிருந்தாள்.

“இப்ப ஒரு நிழல் மாதிரி அவன் உருவம் கண்ணை வந்து குத்துது. அவன் உயிரே இல்லாமற் போன வெறும் நிழல் தான். இப்படி மனுசனில்லாமல் போன நிழல் யுத்தம் என்னனைச் சுற்றி எப்பதான் நடக்காமல் விடேலை? மனிச முகமிழந்த வெறும் நிழல்கள் மாதிரி இவர்கள். நிழலுக்கு வாழ்க்கைப்பட்டு அழிஞ்சு போனது மட்டுமில்லை. இன்னொரு நிழலை எதிர் கொண்டு சாகிற நிலைமையா எனக்கு? இதை அப்படியே மறந்து விடுறது தான் உனக்கும் நல்லது”

அப்போது மாலா கொஞ்சம் கடுப்பாகவே சொன்னாள்.

“அதெப்படியம்மா விட முடியும்? அவன் உறுத்துகின்ற நிழலாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதுக்காக விட முடியுமே?”

“விடத் தான் வேணும். அவனோடு முட்டி மோதிச் சரிய உன்னாலை முடியுமே?”

“அப்ப வெறும் நிழல் யுத்தம் தானா அவனோடு எங்களுக்கு?

வேறு என்ன வழி?

மாலாவுக்குப் புரிந்தது அம்மாவுக்கு இப்படியான நிழல் யுத்தம் மிகவும் பரிச்சயமான ஒன்றுதான். இதைத் தானும் பழக வேண்டுமென அவள் அதை ஒரு சங்கற்பமாக ஏற்கத் துணிந்த பின், மெளனமே அதற்கு ஒரு பிரகடன சாட்சி மொழியாக அங்கு வெளிச்சம் கொண்டு நிலவுவது அம்மாவுக்கும் சேர்த்துத் தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *