நிறம் மாறும் மனசு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 12,723 
 

“”அய்யா உங்களைப் பார்க்க ஒரு அய்யா வந்திருக்காக… மேனேஜர் அய்யா உங்களை கையோட அழைச்சிட்டு வரச் சொன்னாங்க…” என்ற காமாட்சியின் பின்னாலேயே நடந்தார் அவர்.

“”அய்யா கிட்ட ஒண்ணு கேட்கலாமுங்களா”

“”கேளேன் காமாட்சி”

“”ஏன்யா, நீங்க இந்த இல்லத்தை விட்டுட்டுப் போறீங்களாமே… நிஜமா…”

நிறம் மாறும் மனசு

அவர் சிரித்துக் கொண்டே, “” நீ சொல்லு காமாட்சி இருக்கட்டுமா… போகட்டும்மா?”

“”நீங்க தா முடிவு பண்ணனும். ஆனா, ஒண்ணு, நீங்க இல்லைன்னா… இந்த இல்லத்துலே… இந்த இல்லத்துலே…” என்று எதையோ சொல்ல வந்து தொண்டையை அடைக்க பாதியிலேயே நிறுத்தினாள்.

அதற்குள் அலுவலக அறை சமீபித்துவிட்டது. காமாட்சி ஏதும் பேசாமல் கண்களைத் துடைத்துக்கொண்டு அகன்று போனாள்.

உள்ளேயிருந்து,

“”வாங்க… வாங்க… என்ன ஸார் இது, இங்கே வந்திட்டேள்… நன்னாயிருக்கேளா…” என்ற வக்கீல் நரசய்யரின் வெண்கலக் குரல் வரவேற்றது.

“”வாங்க… வக்கீல் ஸார். என்ன இத்தனை தூரம்?”

இருவரும் உள்ளே நுழைந்து இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

“”ஆமா… நான் இங்கே இருக்கிறது…?” என்று கேள்வியாக நிறுத்த.

“”உங்க மகன்தான் சொன்னார். உங்க மனைவி ஆக்ஸிடெண்ட் கேஸ்ல நம்ம பக்கம் தீர்ப்பாயிருச்சு… போன்ல ட்ரை பண்ணேன். கிடைக்கல்லே… சரி நேராகவே வந்து உங்களைப் பார்த்துட்டு, விஷயத்தையும் சொல்லிட்டு சில பேப்பர்ஸ்ல கையெழுத்து வாங்கிடலாமேன்னு ஆத்துக்கு போயிருந்தேன். உங்க மகன் நீங்க இங்க வந்திட்டதா சொன்னார். உங்க டாட்டர் – இன் – லா கண்ணுலே ஜலம்விட்டு அழறா. என்னதான் மனஸ்தாபம்னாலும்… நீங்க அவாளை இன்ஸல்ட் பண்றாப்போல இப்படி ஹோமுக்கு வந்திருக்கப்படாது”

“”ம்… ம்… போகட்டும்! விடுங்க! என் மகனுக்கு பணவிஷயம் தெரியுமா…?” என்றார்.

“”ஜஸ்ட் பேச்சு வாக்குலே தெரிஞ்சிண்டார். 17 லட்சம் சாங்ஷன் ஆகியிருக்குண்ணதும், அவர், அழாத குறைதான். பாருங்க ஸார்… இப்படி கோச்சுண்டு ஹோமுக்கு போயிட்டார்ன்னு விசனப்பட்டார். அப்பறம்தான் இந்த அட்ரûஸ தந்தார்” என்றவர். மேன்மேலும் ஏதேதோ பேசிக் கொண்டே கையோடு கொண்டு வந்த தஸ்தாவேஜுகளில் அவரிடம் கையெழுத்தும் வாங்கிக் கொண்டு அவர் கிளம்பினார்.

“ஓ… அதுதான் நேற்று மகனும், மருமகளும், இங்கு வந்தார்களோ…’ அவர் யோசனையில் ஆழ்ந்தார்.

மருமகள் நிரஞ்சனா, “மாமா… நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்; மனசுலே ஒண்ணும் வச்சுக்காதீங்க. பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சிடுங்க. மன்னிச்சதுக்கு அடையாளமா நீங்க வீட்டுக்கு வந்திடணும். நீங்க இல்லாமே வீடே “வெறிச்’சோடி கிடக்கு மாமா…’ என்று கண்ணீர் மல்க, கைகூப்பி நின்ற காட்சி மீண்டும் மனசுக்குள் ரீப்ளே ஆனது…

இந்தப் பணம் இவ்வளவு பெரும் தொகையாக வரும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. ரொம்ப ஏன், அவரே அதை மறந்தே போய் விட்டிருந்தார். ஒரு விசேஷத்துக்கு போய்விட்டு, அவரும், அவர் மனைவியும் காரில் திரும்புகையில், எதிரே வந்த அந்த ஏ.ஸி. பஸ் தறிகெட்டு ஓடி காரில் மோதி இருவருமே படுகாயமடைந்தனர். சிகிச்சையளித்தும் பலனின்று மனைவி இறந்து போய்விட, இவருக்கு முதுகுத்தண்டில் அடிப்பட்டதில் பல மாதங்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய நிலை. நிர்வாகம் தானாகவே மகனின் கைக்கு வந்தது போல, வீட்டு நிர்வாகமோ, மருமகள் நிரஞ்சனா வசம் சென்றது.

ஓரளவு குணமாகி வீடு வந்த போதும். அவரால் தன் வேலைகளை தன்னால் செய்து கொள்ள முடியாமல் சிரமப்பட்டார். அதுவரை வாழ்க்கையில் ஒரு சக்ரவர்த்தியாகவே இருந்து பழக்கப்பட்டவர் அவர். இந்தப் புதிய வாழ்க்கை. புதிய கசப்பான பல விஷயங்களைக் கற்றுத் தந்தது. புதிய உண்மைகளை எடுத்து முன்னால் வைத்தது.

வயதான சமயத்தில் தன் மனைவியின் எதிர்பாராத மரணமே அவர் ஜீவனில் பாதியை தொலைத்துவிட்டது. நேசத்துக்கும். பாசத்துக்கும் ஏங்கிய அவருக்கு அலட்சியமும் அக்கறையின்மையும், பெரிய மரண அடியாக இருந்தது. உடலும் மனசும் நைந்து போய் கிடந்தது. மருமகளின் நிராகரிப்பும், உதாசீனமும் அவரை குழப்பித் தவிக்க வைத்தது. அவர் வேண்டாத சுமையாக நிரஞ்சனாவாலும் நிரஞ்சனாவின் குடும்பத்தாராலும் நடத்தப்பட்டார்.

மகனும் அதை ஆமோதிப்பது போலவே நடந்து கொள்வதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

அவருடைய உடல் நிலைகாரணமாக, அவருடைய பிரசன்னமே அவர்களுக்கு அவமானகரமாக இருப்பதை அவர் உணர்ந்தபோது குழந்தையைப் போல தவித்தார். கூனிக் குறுகலானார். உயிரோடு இருப்பதே பெருந்தண்டனையாக, சுமையாக எண்ணிக் குமைந்தார்.

திடீரென்று, ஒருநாள் மகன், இந்த இல்லத்தில் சேர்த்துவிட்டு, பணத்தைக் கட்டிவிட்டு, போனபோது அடிப்பட்ட பறவைபோல வேதனையை உணர்ந்தார். இன்றுகூட அந்த

நினைவு பசுமையாய் அப்படியே இருந்தது.

கொஞ்சம், கொஞ்சமாக நிஜத்தைப் புரிந்து கொண்டு, சுய பச்சாதாபத்தை விலக்கி வைத்து மெல்ல மெல்ல, இல்லத்தில் பொருந்திய மனசும், உடலும் மெல்ல வசத்துக்கு வரும்போது,

தான் மட்டுமல்ல, இங்கே தனிமரம் தோப்பாகி கிடக்கும் நிதர்சனம் புரிந்தது. இளமையையும், பணத்தையும், ஆரோக்கியத்தையும் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்காகவே தொலைத்துவிட்டு, முதுமையில், சப்பிப்போட்ட கொட்டையாய் எறியப்பட்டுவிட்ட கேவலம் புரிந்தது. நேசம் தேடி தவிக்கும் அந்த விநோதமான மாயாலோகம் அவரையும் கைநீட்டி, கண்சிமிட்டி அழைத்தது.

அவர் நிதானித்தார். சுதாரித்துக் கொண்டார். பிஸினஸ்மேன் இல்லையா. இயற்கையாகவே கணக்கு போடுபவர். மெதுவாக இல்லத்தின் மேற்பார்வை பொறுப்பை பங்கு போட்டுக் கொண்டார். இயல்பாகவே அந்த இல்லத்தையும், அங்குள்ளவர்களையும், மேம்படுத்த இதுதான் முடிவென்றானபின் – அதையே எண்ணி அவதி படாமல், முன்னால் விரிந்துகிடக்கும் வாழ்க்கையை காண முனைந்தார். அவருடைய வியாபார மூளை வழிவகுத்தது…

தியானம், யோகா ஆன்மிக நிகழ்வுகள் என்று பல மாற்றங்களை கொண்டு வந்தார். கூடவே, சும்மாகிடந்த நிலத்தில் தோட்டம், விளையாட்டு, கூடவே கைவினைப் பொருட்கள் செய்ய, கற்க அவற்றை விற்க என்று வேறு பாதையை வெளிச்சத்தைக் காட்டினார்.

“”நம்முடைய வாழ்வு, நம் கையில்”, நம் சந்தோஷம் நமக்குள்ளே என்ற எண்ணங்களை விதைத்தார். அந்த விதைகள் மெல்ல மெல்ல வெளியே வர நாள் பிடித்தாலும் “பச்சக்’சென்று உயிரோட்டமாய் வெளியே வந்தது… தங்களுக்கென்று வாழவும், நேரமும், கலைகளும் இன்னும் பிறவும் உள்ளன என்பது புரிந்த போது… வாழ்க்கை இனிமை சொட்டியது. ஒவ்வொருநாளும் சுமையாய் விடிந்துபோய் சுறுசுறுப்பாய் விடிந்தது. கூடவே, மகிழ்ச்சியை கையை பிடித்து கூட்டி வந்தது.

முதியோர் இல்லம் – இளையோர் இல்லமாக மாறியது.

மகனும், மருமகளும் வந்து பேசிவிட்டு சென்றதுமுதலே இல்லத்தில் சுரத்து குறைந்தாற்போல தோன்றியது. காமாட்சி. கெம்பண்ணா, சின்னதாயி, பொன்னு, மேனேஜர்… ஏன் மற்ற கூட இருப்பவர்கள் கூட ஏதோ அவஸ்தையுடன் நடமாடுவதாகத் தோன்றியது.

அவர் நெடுமூச்சு விட்டார்…

“”அப்பா, போலாமா…?”

“”என்ன மாமா. அப்படியே கிடக்கு. பேக்கிங் பண்ணலையா” நிரஞ்சனா அன்பாக கேட்டாள்.

“”எதுக்குமா? எனக்கு இங்கேயே பிடிமானம் வந்திட்டு – இப்படியே இருந்திட்டு போறேனே…”

அந்த பக்கமாக போய்க் கொண்டிருந்த மேனேஜரை அழைத்தாள் நிரஞ்சனா,

“”ஸார்… நீங்களே சொல்லுங்க… ஏதோ, கெட்டகாலம்பிரிச்சு வச்சிட்டது… அதுக்காக காலத்துக்கும் பிரிஞ்சேதான் இருக்கணுமா. நீர் அடிச்சு, நீர் விலகுமா என்ன?” என்றவள் விம்மினாள், பிறகு, “”நீங்களே சொல்லுங்க ஸார்… ஊரு என்ன பேசும்? என்னைத்தானே வாயிலே போட்டு மெல்லும். மாமானரை துரத்திட்ட ராட்சஸின்னு… இந்தப் பொல்லாப்பு வேணுமா ஸார்?” என்று நியாயம் கேட்டு கண்களை கசக்கினாள்…

“”ஆமாம்மா… நீங்க சொல்றது வாஸ்தவம்தான். நாங்களும் ஸாரைவிட்டு பிரிஞ்சு எப்படி இருக்கப் போறோமோ. தங்கமான மனசு – இவர் வந்த பொறவு இல்லாமே மாறிப்போயிடுச்சு… அதுமட்டுமில்லே… இந்த மனசு யாருக்குமா வரும்…? வந்த பணத்தை இந்த இல்லத்துக்கும், அநாதை பிள்ளைகள் இல்லத்துக்குமா பாதிபாதியா பிரிச்சு எழுதிவச்சிட்டாரே… இவ்ளோ பெரிய மனசு யாருக்குமா வரும்? யாருக்கு வரும்…? மேனேஜர் நெக்குருகி பேச, தம்பதியர் ஏக காலத்தில் கிரீச்சிட்டனர்.

“”என்னது?”

“”என்ன சொல்றீங்க!”

“”ஆமாம்மா… உங்களுக்கு தெரிய நியாயமில்லை… இப்போதான் எல்லா ஏற்பாடு

களையும் செய்து முடிச்சிட்டு இளைப்பாற

வந்தார்.

“”இதென்ன அநியாயமாயிருக்கு?” நிரஞ்சனா கத்தினாள்.

“”என்னப்பா… இது நிஜமா?”

“”நிஜம்தான்! தானா வந்தது… தர்மத்துக்கு எழுதி வைச்சிட்டேன்”

“”தர்மத்துக்கு எழுதறதா..? யாரைகேட்டு எழுதுனீங்க – புள்ளையில்லாத சொத்தா இது…? பெத்தபுள்ள இல்லே! பெத்த புள்ளைய ஒரு வார்த்தை கேட்க வேணாம்… ச்சீசீ… நீயெல்லாம் மனுஷனாய்யா… 17 லட்சம்… சுளையா 17 லட்சம்… தானா வந்த காசாம்! கர்ணமகாராஜா தர்மம் பண்ணிட்டாராம்… நாய் வித்த காசு குரைக்குமாய்யா? உன்னை இப்படி அநாதை மாதிரி ஏஜ்டு ஹோம்ல போட்டு இருக்கும் போதே – இப்படி இருக்கிறீயே… எத்தனை தைரியம்? 17 லட்சத்தை வள்ளிசா எழுதிவைக்க எப்படிய்யா மனசு வந்தது…. நீ… நீ… நாசமா போக… நிரஞ்சனா சன்னத்தம் வந்தது போல மரியாதையை பறக்கவிட்டு, ஏக வசனத்தில் இரைய, மேனேஜர் அரண்டு போனார்.

“”நிரஞ்சனா… அது என் மனைவியை காவு வாங்கிட்டு வந்த பணம். அது தர்மத்துக்கு போறதுதான் நியாயம்…”

ஆஹாஹ்ஹா… நியாயம்… பெரீய்…ய்..ய்..ய நியாயத்தை கண்டுட்டார்… பெரிய நியாதிபதி…

உங்களுக்கு பொண்டாட்டினா.. இதோ இவருக்கு அம்மா இல்லையா? அம்மா செத்துவந்த பணத்துலே இவருக்கு உரிமையில்லையா? பாதிப்பணம் வந்தாகணும். முதல்லே நிறுத்துங்க அந்த ஏற்பாட்டை”

“”முடியாது… நிரஞ்சனா… கோடிக்கணக்கான சொத்தை கொடுத்தாச்சு… பிஸினஸ், வீடு, தோட்டம், நகைகள் பாங்கல பணம் எல்லாமே கொடுத்தாச்சு… இது முழுக்க முழுக்க என் பணம்!. என் மனைவியின் பணம். என் இஷ்டப்படி செஞ்சாச்சு… நீங்க போகலாம்” அவரையே வெறித்தாள்…

“”இன்னும் என்ன மரம் மாதிரி நிண்ணுகிட்டு, கிளம்புங்க…” என்று பூமியை உதைத்தாவளாய் கணவனின் கையை இழுத்துக் கொண்டு நகர்ந்தாள்.

“”அம்மா… அம்மா… ஸாரை அழைச்சிட்டு போகலையாம்மா…?” என்று பின்னாலேயே ஓடிவந்த மேனேஜரை நின்று கண்ணால் எரித்தவள்.

“” இந்த வெத்து ஆளு! இனிமே எதுக்குய்யா? இங்கேயே கிடக்கட்டும்!” என்று சீறிவிட்டு, அவரை பார்த்து, சொடக்கு போட்டு,

“” செத்தாலும் இனி நீ அநாதை பொணம்தான்யா… பெத்த புள்ளை கொள்ளி போடவரமாட்டார்…” என்று சொன்னவள்..

“”என்ன பார்வை… ம்.. நடங்க!” என்று கனவனை விரட்ட, அவனும் அவள் இழுத்த இழுப்புக்கு போனான்…

அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போய் நிற்க, இவர் வாய்விட்டு சிரித்தார்!

– நவம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *