நிஜமிழந்த நிழல்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 8,018 
 

இன்று காலையிலிருந்தே ஷண்முகத்திற்கு ஏதோ மனதே சரியில்லை. மனைவி ரேணுகூட கேட்டுவிட்டாள் “இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு” என்று. அமெரிக்காவிலிருந்தாலும் மனசு என்னவோ இன்னிக்கு இந்தியாவையும் அம்மாவையுமே சுற்றிவருகிறது. அடுத்தமாதம் எப்படியாவது இந்தியாக்கு ஒருமுறை போக முயற்சிப் பண்ணணுமென்று நினைத்துக்கொண்டான்.

அலுவலகம் வந்தவுடன் கார் பார்க் பண்ணும் இட்த்தில் நிறுத்திவிட்டு, பையை கையில் எடுத்துக்கொண்டு இறங்கி நடந்தவன் வழியில் இருந்த படியில் கால் தவறினான். தவறி, கீழே விழ இருந்தவனை யாரோ தாங்கிப்பிடித்த்துபோல் நின்றான். தூரத்திலிருந்து ஒரு குரல், அவன் நண்பன் ஃப்லிப் “ஹெய், ஷண்முக், வாட் ஹாப்ண்ட்” என்று ஓடி வந்தான். “நத்திங்” என்று சமாளித்து நடந்தான். இங்கு எல்லோருக்கும் அவன் ஷண்முக்தான். அம்மா அழகாக அவனை அப்பா,ஷண்முகம் என்று கூப்பிடுவாள். இவனுக்கு சின்னவயசில் தன் பேரை நினைத்துக் கோபமாக வரும். அம்மாவிடம் “ஏம்மா, காலேஜில் ஒவ்வொருத்தன் பேரும் எவ்வளவு மாடர்னாக இருக்குத் தெரியுமா? நீ இன்னும் அதை நீட்டி அப்பா ஷண்முகன்னு கூப்பிடறே என்பான். அதற்கு அம்மா, பெத்தவங்களுக்கு எப்போதும் பிள்ளைங்க ஞாபகம்தான் இருக்கும். பிள்ளைங்களுக்கு சாமி பேரை வைச்சா அவங்க போற காலத்துல உங்கப்பேரை சொல்லிண்டே இருப்பாங்க இல்லையா, சாமி பேரா இருக்கறதுனால போற வழிக்கு புண்ணியமா இருக்கும்பா என்பாள். இப்பொழுது அப்பா பேரையும் சேர்த்து நீட்டமாக ஷண்முக சுந்தர வடிவேல்.

அலுவலகத்திலிருந்து திரும்பும்போது கைப்பேசி சிணுங்கியது. ரேணுதான். இந்தியாவில் கிராமத்தில் இவன் அம்மா தவறிவிட்டதாக. ஒருகணம் தடுமாறி, பின் அடுத்தடுத்து செய்யவேண்டியவைகளைச் செய்து, இப்பொழுது துபாய் செல்லும் விமானத்தில் இருக்கிறான். ரேணுவுக்கும் அவன் பிள்ளைக்கும் உடனே விமான டிக்கெட் கிடைக்கவில்லை.

விமானத்தில் ஏறும்வரை இல்லாத நினைவுகள் எல்லாம் இப்பொழுது மொத்தமாக மனதில் ஏறி அவனைத் தடுமாறவைத்தன. கண்ணைமூடி இருக்கையில் சாய்ந்துகொண்டான். விமானம் மேகத்திற்கு இடையே மிதந்து கொண்டிருந்தது. மனதில் அம்மாவைப் பற்றிய நினைவு ஒவ்வொன்றாக மிதந்து வந்தது.

“அம்மா” மனதின் வலி தாங்கமுடியாமல் அரற்றினான்.

கும்பகோணம் அருகே கருப்பூர் கிராமம். அழகான வயல்வெளிகளும், ஆறும், குளமும் அமைந்த ஊர். ஷண்முகத்தின் வீடு ஊருக்கு நடுவில் இருக்கும் தெருவில் இருந்தது. தெருவின் ஒருமுனையில் ஒரு சிவன் கோவில். மறுபுறம் ரோடு இரண்டாகப்பிரியும். இடதுபுறம் திரும்பினால் பஸ்ஸ்டாப். வலதுபுறம் திரும்பினால் வீராங்குளம். அதில் எப்போதும் தண்ணீர் இருக்கும். குளத்திற்கு நேரே ஒரு கடை. அந்தக்கிராமவாசிகள் எல்லோரும் அந்தக்கடையில்தான் வீட்டிற்கு வேண்டிய சாமான் வாங்கவேண்டியிருக்கும். வீட்டின் பின்புறம் தோட்டத்திலிருந்து பார்த்தால் மெயின்ரோடு தெரியும். ஷண்முகத்தின் அப்பா அந்த ஊரில் நஞ்சை, புஞ்சை நிலங்களுக்குச் சொந்தக்காரர். ஆனால் ஷண்முகம் ஏழாவது படித்துக்கொண்டிருக்கும்போதே ஒருவாரம் காய்ச்சலில் படுத்தவர் பிறகு எழுந்திருக்கவில்லை. ஷண்முகம் ஒரே பையன். சரியான நிர்வாகம் இல்லாததால் முக்கால்வாசி சொத்து கரைந்தது. மிஞ்சியது ஒரு வீடும் சிறிது நிலமும். ஷண்முகம் கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பு முடித்து, தஞ்சையில் மேற்கொண்டு கல்லூரிப் படிப்பை முடித்தான். அதுவரை அம்மா எப்படியோ தனியாகச் செலவைச் சமாளித்து வந்தாள். அவளுக்குத் தூக்கத்திலும், விழிப்பிலும் நினைவு ஷண்முகம்தான்.

விமானம் துபாய் வந்துசேர்ந்தது. இன்னும் 6 மணிநேரம் அடுத்தவிமானத்திற்குக் காத்திருக்கவேண்டும். கரூப்பூருக்குப் தொலைபேசியில் தொடர்புகொண்டான். அம்மாவுக்கு மிகவும் உதவியாக இருந்த ஓய்வுப்பெற்ற பள்ளிவாத்தியார் சுவாமிநாதன் ஸார்தான் பேசினார். செய்திருக்கும் ஏற்பாடுகளைச்சொன்னார். இன்னும் சென்னை போய்ச்சேர எப்படியும் குறைந்தது 10 மணிநேரம் ஆகும். பிறகு அங்கிருந்து கும்பகோணம் பிறகு கருப்பூர். ஷண்முகம் பெருமூச்சு விட்டான்.

சுவாமிநாதன் ஸார்தான் அம்மா இருக்கும்போது செலவுக்கு இவன் அனுப்பும் டாலரை மாற்றி அம்மாவுக்குக் கொடுப்பார். இன்னும் பலவகையிலும் உதவியாக இருந்தவர். சொந்தங்கள் இருந்தும் பிரயோசனமில்லாமல் போகும்போது இந்தமாதிரி சில மனிதர்கள் உதவுகிறார்கள்.

படிப்பு முடிந்ததும் சென்னையில் ஒரு நல்ல வேலையில் சேர்ந்தான். அப்பொழுது வெளிநாடு செல்லும் எண்ணமெல்லாம் இல்லை. அம்மாவுக்கு முதல் மாதச்சம்பளத்தில் ஒரு புடவை வாங்கிக்கொண்டு போனான். இளம்பச்சை நிறத்தில் கறுப்பிலும், சிவப்பிலும் நட்சத்திரங்களாகப் போட்டிருக்கும். வெறும் நூல் புடவைதான். ஆனால் அன்று அம்மாவின் முகத்தில் பார்த்த சந்தோஷம் இப்பொழுது நினைத்தாலும் மனது வெதும்புகிறது.

அந்தப்புடவையை மிகவும் பத்திரமாக.வைத்திருந்தாள். அதற்குப்பின் ஷண்முகம் ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும்போதும் அந்தப்புடவையை எடுத்துக் காட்டிவிட்டு பெட்டிக்குள் வைப்பாள். oஒருவருடம் கழித்து வெளிநாடு ஆசை வந்தது. அம்மா எவ்வளவோ தடுத்துப்பார்த்தாள். வெளிநாடு மோகத்தில் அம்மாவின் சொல் காதில் விழவில்லை. அம்மா அழுதுகொண்டே வழியனுப்பி வைத்தாள். இன்னும் அம்மாவின் அந்த உயிரே தன்னை விட்டுப் பிரிந்து போவதுபோன்ற முகபாவம் கண்முன் நிற்கிறது. அப்பொழுது அது ஒன்றும் அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.

சென்னை விமானநிலையத்தில் தரையைத் தொட்டது விமானம். விமானநிலையத்திலிருந்தே கார் ஏற்பாடு செய்துகொண்டு பயணத்தைத் தொடர்ந்தான்.

சென்னையில் தன்னுடன் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த பெண், ரேணு இவனைப்போலவே அமெரிக்கா வந்தவள் மனைவியானாள். வெளிநாடு வந்தப்பிறகு ஒருமுறை இந்தியா வந்தான். அதற்குப்பிறகு இப்பொழுதுதான்.

கரூப்பூர் வந்துவிட்டது. அம்மா முன்பு இவனை பஸ்ஸேற்றி வழியனுப்ப நின்றிருந்த அந்தப்பாலமும் வந்துவிட்டது. அம்மா அந்தப்பாலத்தின் மேல் நின்றிருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது.

எல்லாம் முடிந்துவிட்டது. அன்று இரவும் போனது. அந்தக் கிராமத்தின் நடவடிக்கைகள் வழக்கம்போல் தொடர்ந்தது. அவனுக்குத்தான் எல்லாம் வெறுமையாகத்தோன்றியது. யாரோ இருவர் அவன் இருப்பதை அறியாமல் பேசிக்கொண்டு போனார்கள். அவன் அம்மாவைப்பற்றி, அவனைப்பற்றி. “இனி என்னப்பா, அவன் பாட்டுக்கு வீட்டைவித்துட்டு போயிடுவான். பாவம் அந்த அம்மாதான் அவனையே நினைச்சுட்டு இருந்தது. இனிமேல் இந்தியாக்கு வரவேண்டிய வேலையே இல்லை.” என்று. அவன் அப்பொழுதுதான் தன் சொந்த நாட்டிலேயே ஒரு அகதியைப்போல் அனாதையாக உணர்ந்தான். உணர்வே இல்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வந்து நடந்தான். அவன் கால்கள் வீராங்குளத்தருகில் வந்து நின்றது. குளத்தையே வெறித்துப்பார்த்தவன் கண்ணில் அந்தத்துணி பட்டது. அம்மாவுக்கு அவன் வாங்கிக்கொடுத்த அதே புடவை. நீரில் மிதந்து கொண்டிருந்தது. அம்மா போவதற்குமுன் தன் நினைவில்லாமல் படுக்கையில் இருந்த காலத்தில் எதற்காகவோ அந்தப்புடவை உபயோகப்பட்டிருக்கிறது. கிழிந்தநிலையில் நீரில் மிதந்து கொண்டிருந்தது. தன்னையறியாமல் நீரில் இறங்கியவன் அந்தப் புடவையைக் கையிலெடுத்தவன் அதை நெஞ்சில் வைத்துக்கொண்டு ஓவெனக் கதறினான்.

Print Friendly, PDF & Email

1 thought on “நிஜமிழந்த நிழல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *