நாலு பேரு கூடி வாழ்த்த…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,008 
 

பிலால் சொன்ன அந்த நல்ல சேதியைக் கேட்டதும், அவரை நெஞ்சோடு அணைத்து, முஸாபா செய்தார் அப்துல்லா.

“நல்ல சேதி சொன்னீங்க பிலால்… அல்லாவுடைய கருணை, இப்பதான் நம்ம மேல பட்டிருக்கு… என் மகள் யாஸ்மீனைவிட, உங்க மகள் ஆயிசா, இரண்டு வயசு மூப்பு… ஆனா, என் மகளுக்கு நிக்காஹ் முடிவாயிடுச்சு; உங்க மகளுக்கு ஆகலையேன்னு, நான் அல்லா கிட்ட மன்றாடிட்டு இருந்தேன்… அதுல பாருங்க, அல்லா என்னுடைய துவாவை நிறைவேத்தி தந்துட்டான்.”

உண்மையான நண்பனின் சந்தோஷம் மட்டுமல்லாது, பிலாலும், அப்துல்லாவும், நினைவு தெரிந்த நாள்தொட்டு நண்பர்கள். பொருளாதார ரீதியில், இருவருக்கும் இடையில் பலத்த ஏற்றத்தாழ்வு இருந்தாலும், அவர்களுடைய நட்பில் எந்த பின்னடைவும், பலகீனமும் இதுவரைக்கும் வந்ததே இல்லை.

நாலு பேரு கூடி வாழ்த்த...“பிலால் வாய்யா… எனக்கு சாப்பாடு வாங்கிக்குடு. வழக்கம் போல நானெல்லாம் பில் குடுக்க மாட்டேன். நீ தான் தரணும்.”

காரில் இருந்து இறங்கி, நண்பரின் தோள்மீது கைபோட்டு அணைத்தபடி, இருவதும் ஓட்டலை அடைந்தனர்.

“ம்… சொல்லு… இந்த இடத்தை எப்படி முடிச்சீர்?”

“அல்லாவோட கருணைதான் அப்துல்லா… பையன் நல்ல வேலையில் இருக்கான். கை நிறைய சம்பாதிக்கிறான். பையனோட அம்மா, நிக்காவை நல்லபடியா நடத்தி தரணும்ன்னு சொல்லுது,” இயல்பான தகப்பனின் கவலையில் கூறினார் பிலால்.

ஓட்டலில் அவ்வளவாய் கூட்டமில்லை. இவர்களுக்கு பக்கத்தில், ஓரிருவர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“திருமண விஷயங்களில் வீண் செலவோ, ஆடம்பரமோ கூடாதுன்னு நம்முடைய மார்க்கம் வலியுறுத்தி சொன்னாலும், வாழ்க்கையில் நடக்குற மிகப்பெரிய சந்தோஷம்ங்கிற கணக்குல, அதை நல்லபடியா நடத்தி பார்க்கணும்ங்கிற ஆசையை, நாம தப்புன்னு ஒதுக்கிட முடியாது. ஆனா, நம்மால முடியணுமே… ஆனா, நீ எதுக்கும் துயரப்பட்டுக்காத பிலால்… ஆண்டவன் எல்லாத்தையும் சுலபமாக்கி தருவான்.”

பரோட்டாவை, குருமாவில் தோய்த்து மென்றபடி, நண்பருக்கு ஆறுதல் கூறினார் அப்துல்லா.

“இதுல இன்னொரு சங்கடமும் இருக்கு அப்துல்லா… அவங்க நிக்காவை நடத்தச்சொல்ற தேதி, நம்ம யாஸ்மீனுடைய நிக்காஹ் தேதியை தான்… எனக்கு அத நினைச்சு தர்மசங்கடமாயிடுச்சு… நான் எத்தனை எடுத்து கூறியும், அவங்க கேக்குறதா இல்ல. யாஸ்மீன், நான் தூக்கி வளர்த்த குழந்தை. அதோட நிக்காவில், நான் ஓடியாடி வேலை பார்க்க வேணாமா அப்துல்லா?”

ஆதங்கமாய் நண்பரின் முகம் பார்த்து கேட்டார். வாயில் வைத்த பரோட்டா, தொண்டையை தாண்டி இறங்க மறுத்தது அப்துல்லாவிற்கு.

“நான் வேணா அவங்கக்கிட்ட பேசி பாக்கட்டுமா பிலால்… நேத்துன்னு பார்த்து, நான், மரம் வாங்கறதுக்கு தூத்துக்குடி போயிட்டேன்.”

இருவருடைய அன்யோன்யமும், நட்பும், பொருளாதாரம் கடந்த அன்பின் ஆதாரமும், அவர்களுக்கு எதிரில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சாதிக்மியாவின் கவனத்தை கவர்ந்தது.
அவர் எழுந்து வந்து, சலாம் சொல்லி, தம்மை அறிமுகம் செய்தார்.

“நீங்க விரும்பினா, உங்களுடைய பிரச்னைக்கு நான் ஒரு உபாயம் சொல்லட்டுமா?”

இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி, மெதுவாய் தலை அசைத்தனர்.

“ஒரு ஆச்சரியமான உண்மை என்னான்னா, நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்ட அதே தேதியில தான், என்னோட கடைசி மகள் பஹிமாவுடைய நிக்காவும் முடிவாயிருக்கு. உங்க அன்யோன் யமும், அன்பும் என்னை மெய்சிலிர்க்க வைக்குது. நம்ம மூணு பெண் களுடைய நிக்காவையும், ஒரே மண்டபத்துல செஞ்சா என்னன்னு தோணுது…”

“பளீர்’ என ஆயிரம் மின்னல் வெட்டிய தாக்கத்தை ஏற்படுத்தியது, அவருடைய யோசனை. இது, எத்தனை தூரம் சாத்தியப்படும்… கை அலம்பிவிட்டு வந்த அப்துல்லா. சாதிக்மியாவை கூர்மையாய் பார்த்தபடி, நிமிர்ந்து அமர்ந்தார்.

“ஆமாம் அப்துல்லா பாய்… நம்முடைய பெண்களுடைய நல்வாழ்விற்கு, துவா செய்றவங்க எண்ணிக்கை மூணு மடங்காகும். இன்னும் புது”புதுசாய் பலருடைய அறிமுகமும், நமக்கு கிடைக்கும். தவிரவும், விலைவாசி எகிறி கிடக்கிற இன்றைய நாளுல, இது மாதிரி கூட்டு திருமணங்களை ஒரே இடத்துல நடத்தறப்போ, கணிசமான பணத்துல அற்புதமான திருமணங்களை, நம்முடைய குழந்தைகளுக்கு நடத்தி பார்க்கலாம். பணக்காரன், ஏழைங்கற வித்தியாசம் இல்லாம, எல்லா திருமணங்களிலும் கூட்டம் நிரம்பி வழியும்.”

அவர் சொல், இனிப்பாய் தான் இருந்தது. ஆனாலும், மனசுக்குள் ஒரு நெருடல்!

பிலாலும், அப்துல்லாவும் யோசனையாக அமர்ந்திருந்தனர்.

“நான் சொன்ன விஷயங்களை யோசிங்க… வீட்டுல கலந்து பேசுங்க. இது, என்னோட நம்பர். எந்த முடிவானாலும் பரவாயில்ல. போன் செய்து சொல்லுங்க. ஆனாலும், நாமெல்லாம் ஒரு சமூக மாற்றத்திற்கான முன்னோடியா இருக்கப் போறோம்ங்கறதை நீங்க மறந்துடாதீங்க.” என்று சொல்லி கிளம்பினார்.

அவருடைய வலிமையான வார்த்தைகள், மனசுக்குள் சம்மட்டி அடித்தது.

பல ஆயிரம் ரூபாய் மண்டபத்திற்கு கொடுத்து, லட்சக் கணக்கில் செலவு செய்து சாப்பாடு போட்டு, திருமணம் நடத்தக் கூடிய நிலை யிலா, பிலால் போன்றவர் கள் இருக்கின் றனர். ஆனால், ஆசை என்பது எல்லாருக்கும் பொது தானே…

இது போன்ற கூட்டுத் திருமணங்கள், எத்தனை ஆரோக்கியமானது. செய்து பார்த்தால் தான் என்ன? நல்ல தென்றால் உலகம் பின்பற்றட்டும். இல்லா விட்டால், எது குறையப் போகிறது?

பிலாலும், அப்துல்லாவும், சாதிக்மியாவின் பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த போது தான், அவருடைய முற்போக்கு சிந்தனையின் வேர், அவருடைய பத்திரிகை தான் என்று புரிந்தது.

அவர்களுடைய சம்மதம் அறிந்து, சாதிக் வெகுவாய் இன்பம் அடைந்தார்.

“அல்லாவுடைய விருப்பம் இதுதான் போலிருக்கு. அதுனால தான், அன்றைக்கு யதேட்சையா ஓட்டலுக்கு வந்த நான், உங்களுடைய பேச்சைக்கேட்டு, என்னுடைய கருத்தை சொல்ல முடிந்தது. அப்துல்லா பாய்… இந்த முயற்சியால், நமக்கு சில பின்னடைவுகள் வரலாம். ஆனா, அதுக்காக சோர்ந்து போயிடாம, நாம ஜெயிச்சு காட்டணும். இன்ஷா அல்லாஹ்…”

பத்திரிகை அடிப்பதில் இருந்து, அத்தனை செலவுகளும் மூன்றாய் பங்கிட முடிவானது. பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்த அப்துல்லாவும், சாதிக்மியாவும், தங்கள் பங்கை கூடுதலாய் தருவதாய் முடிவானது.

வெகு குறைவான தொகையில், இத்தனை பெரிய மண்டபத்தில், திருமணம் என்பது கனவு போல் விரிந்தது பிலாலுக்கு.

நிக்காஹ் நாளும் வந்து விட்டது.

மூன்று பெண்களின் தந்தைகளும், மூன்று பையனின் தந்தைகளும், பொதுவாய் வாசலில் நின்று வரவேற்றனர். தன் வீட்டு உறவுகள், பிறருடைய உறவுகள் என்று, உத்தேசம் பாராமல்!

நிக்காஹ் மண்டபமே, ஆட்களால் பிதுங்கி வழிந்தது. அறிந்தவர், அறியாதவர்கள் என்று அனைவருமே, சலாமை பரிமாறி, ஒருவருக்கொருவர் நண்பர்களாயினர்.

எல்லாருடைய வாயும், இந்த வித்தியாசமான நிக்காவை பற்றிய பேச்சாகவே இருந்தது.

வந்தர்களில் பலர், அடுத்தடுத்த திருமணங்களுக்கு அடித்தளமாய், தங்களுடைய பெண்கள், பிள்ளைகளைப் பற்றிய குறிப்புகளை பரிமாறினர்.

வியப்பும், வெறுப்பாய் நிக்காஹ் மண்டபத்தில், பல்வேறு பேச்சுகள் நிலவியது; இந்த திருமணத்தைப் பற்றி!

“ஆயிரம் சொல்லு சாதிக்மியா… பெரியவங்க பேச்சுல அர்த்தமில்லாம இருக்காது… ஒரே நேரத்துல ரெண்டு பொண்ணும், மாப்பிள்ளையும் முகம் பார்க்க கூடாதுன்னு சொல்வாங்க… இதுல ஏதாவது நடந்து, கஷ்டப்படறது நம்ம பொண்ணா இருந்துட்டா என்ன பண்றது?”

உறவுப் பெரியவர் ஒருவர் எடுத்துச் சொல்ல, அதை ஆமோதிப்பது போல் உடன் நின்ற சிலர் ஆமோதித்தனர்.

துளி கூட குழம்பவில்லை சாதிக்மியா. மென்மையாய் சிரித்தார்.

“பஹீர் பாய்… உங்களுடைய அக்கறை எனக்கு புரியுது. ஆனால், மூடப்பழக்க வழக்கத்திற்கு ஆதரவான எந்த நடவடிக்கையையும், நாம ஆதரிக்க கூடாதில்லையா. அது தானே இஸ்லாம்… நிச்சயமா நம்முடைய பெரியவங்க சொன்ன செய்திகள்ல, அர்த்தமில்லாம இருக்காது. இரண்டு திருமணங்களை ஒரே இடத்துல செய்யும் போது, இரண்டு வீட்டு சம்பந்திகளையும் சரிவர கவனிக்க முடியாது. இதுனால, அவங்களுக்குள்ள ஈகோ பிரச்னை ஏற்படும். சம்பந்தப்பட்ட அந்த பெண்ணுடைய வாழ்க்கையில பிரச்னை ஏற்படும்ன்னு, இது சொல்லப்பட்டிருக்கும்.

“தவிரவும், இன்றைய பொருளாதார சிக்கல்கள் நிறைந்த காலக் கட்டத்துல, இதுபோன்ற செய்திகளை ஆராயக்கூட நேரமில்லை பஹீர்பாய்.” யதார்த்தத்தை எடுத்துச் கூறினார். அனைவரும் அமைதியாயினர்.

“முடிவா ஒண்ணு சொல்றேன்… நிக்காஹ் போன்ற நிகழ்வுகளுக்கு பத்துபேரை அழைக்கிறது, மணமக்களுக்கு அவங்க வாழ்த்துக்கள் கிடைக்கணும்ன்னு தான்… நூறு பேர் வாழ்த்தற இடத்துல, நானூறு பேர் நின்னு வாழ்த்தினா, நம்மோட குழந்தைகளுக்கு இறைவனுடைய பரிபூரண நல்லாசியும் கிடைக்குமில்லையா… இத்தனை நல்ல உள்ளங்கள் கூடி வாழ்த்தும் போது, நிச்சயம் அங்கே எந்தக் கெடுதியும் ஏற்படாது…”

நிச்சயமாய் நாலு பேர் வாழ்த்த, ஒரு நல்ல காரியம் நடந்தேறியது. வாழ்த்து மணமக்களுக்கு மட்டுமல்ல; ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கி வைத்த, பிலால், அப்துல்லா, சாதிக்மியா ஆகியோருக்கும் சேர்த்துதான்!

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *