நான் விற்பனைக்கல்ல…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 9,964 
 

டிராக்டரின் இரும்புக் கலப்பைகள் என் நிலத்தாயை ஆழ உழுதபோது எனக்கு ஏற்பட்ட வலி, இதுவரை நான் உணராத வலி. அப்படி வலித்தது. இரும்புக் கலப்பைகளுக்குள் தக்காளிப் பழங்களோடு தக்காளிச் செடிகளும் குற்றுயிரும் குலை உயிருமாக மண்ணுக்குள் புதைகின்றபோதே மனசும் புதைந்து கொண்டிருந்தது.

மண்டையைப் பிளக்கும் வெயில் உடம்பைப் பிழிந்து வியர்வையை அருவியாக்கிக் கொட்டிக் கொண்டிருந்தது. அந்தப் புழுக்கம் என் உடம்புக்கு பழகிப் போன ஒன்றாக இருந்தது. ஆனால் திரண்டு நிற்கும் கண்ணீருக்குள் கண்கள் மூழ்கி அந்தக் காட்சியை என்னைக் காணவிடாமல் கலங்கடித்துக் கொண்டிருந்தன.

நான் விற்பனைக்கல்லஎன்ன செய்ய…. உழுதவன் பார்த்த கணக்கு உருப்படியாகவில்லை. மூன்று மாதங்கள் உழைப்பு கருகி விட்டது. ஆயிரம் அடிக்கு கீழே உள்ள நிலத்தடி நீரை இரண்டு நீர் மூழ்கி மோட்டார் வைத்து நிலத்திற்கு மேலே ஒரு மோட்டார் வைத்து எடுத்து செய்கிற விவசாயம் என்னுடையது. கடவுள் புண்ணியத்தில் கரண்ட் மட்டும் அரசின் தயவால் இலவசம். அதற்கும் பணம் கொடுக்க வேணடிய நிலை இருந்தால், அய்யோ… என்று தலையில் கையை வைத்துக் கொண்டு போய் விடலாம்.

இரண்டு ஏக்கர் நிலம். இரண்டு தடவை உழவேண்டும். அதற்கு டிராக்டர் கூலி நான்கு மணி நேரத்திற்கு மூவாயிரம்… தொழு உரம் எட்டு டன். அதற்கு பத்தாயிரம்… அப்புறம் பாத்தி பிடிக்க இரண்டாயிரம்…. விதை இருநூறு கிராம். வீரிய ஒட்டு ரகம் ஐயாயிரம்… அந்த விதையை பாவி நாற்றங்காலாக உருவெடுக்க இருபத்தைந்து நாள்… அப்புறம், அதை நடவு செய்ய கூலி இரண்டாயிரம்… களை எடுக்க, மருந்தடிக்க, இப்படி தொட்டதுக்கெல்லாம் செலவு செஞ்சாத்தான் இரண்டு மாதம் கழித்து தக்காளி விளைச்சல் பார்க்க முடியும்… விதை பாவியதிலிருந்து விளைச்சல் பார்க்கிற வரைக்கும் ஒவ்வொன்றும் விவசாயிக்கு, பிரசவம் தான்.

இரண்டு மாதங்கள் பதினைந்து நாளைக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் தக்காளி பறிக்கலாம். அதற்கும் கூலி ஆள் விட வேண்டும். ஏக்கருக்கு மூன்று பேர் வேண்டும். எல்லாம் முடிஞ்சு இரண்டாயிரம் கிலோ முதல் விளைச்சலாக வந்து காரைக்குடி சந்தைக்குக் கொண்டு போனேன். கிலோ அஞ்சு ரூபாய்க்கு மேலே போகலை…. முதல் வருமானம் பத்தாயிரம் ரூபாயோடு வந்தேன். அப்புறம் நூறு கிலோ, இருநூறு கிலோன்னு பறிக்க முடிஞ்சது…. நேற்று வரைக்கும் அஞ்சு ரூபாய்க்கு போன தக்காளி இன்று கிலோ இரண்டு ரூபாய்க்கு எடுக்கிறேன்னு சொன்னான். பறிக்கிற ஆள் கூலிக்குக் கூட தக்காளி விலை போகலை… அதனால் தான் அப்படியே டிராக்டரை விட்டு உழுது போடுவோம்… கோடை மழை பெய்தால் அடுத்த உழவுக்கு சரியாக இருக்குமேன்னு நினைத்து உழச் சொன்னேன்.

நூறுநாள் வேலைத் திட்டம் வந்தாலும் வந்துச்சு…. ஆரம்பத்தில் இருநூறு ரூபாய் வாங்கினவங்க இப்போது இருநூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தாத்தான் தக்காளி பறிக்க வர்றேன்னு சொல்றாங்க… இருநூறு கிலோ தக்காளி பறிக்க கூலி எழுநூற்று ஐம்பது ரூபாய்…. அந்த தக்காளிக்கு மார்க்கெட்டுல விலை நானூறு ரூபாய்தான். கமிஷன் ஏஜெண்ட் கிட்டக் கேட்டால்….. “”தக்காளி விளைச்சல் அதிகம்…. மார்க்கெட்டுக்கு அதிகமாக வர்றதாலே விலை போகலை”ன்னு சொல்றான்….

எப்படியிருக்கு… நினைச்சுப் பாருங்க… இப்படி விவசாயம் பண்ற நான் கேனப்பயலாத் தானே உங்க பார்வைக்குத் தெரிவேன்… உங்களுக்கு மட்டுமா… என் மகனுக்கும்தான்….

“”நிலப் பத்திரத்தையும், வீட்டுப் பத்திரத்தையும் எடுத்து வையுங்க… சனி, ஞாயிறு நான் மட்டும் ஊருக்கு வர்றேன்… நான் திரும்பும் போது என்னோடு நீங்களும், அம்மாவும் வீட்டைப் பூட்டிட்டு சென்னைக்கு வர்றீங்க… அவ்வளவுதான்…” போனை பேசிவிட்டு வைத்து விட்டான்.. “நான் என்ன நினைக்கிறேன்… என்ன விரும்புறேன்…’ என்று பதில் தெரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை.

விவசாயத்திற்கு இயந்திரங்கள் வந்தவுடன் மனிதர்கள் இயந்திரங்களாக மாறிப் போனார்கள். அறுபது வருடங்களுக்கு முன்னால் திரும்பிப் பார்க்கிறேன். அப்போது எனக்கு பத்து, பன்னிரெண்டு வயது இருக்கும். அப்பவே காலை ஆறு மணிக்கே தோட்ட வேலைக்கு அப்பா என்னைக் கூட்டிக் கொண்டு போய் விடுவார். இரண்டு ஏக்கர் நிலத்தை உழவு செய்ய மூணு ஏர்கள் விடுவார்கள். எப்போதும் அப்பாதான் முதல் ஏராக உழுவார். அதற்குப் பின்னால்தான் கூலிக்காக வெளியிலிருந்து வந்த இரண்டு ஏர்களும் செல்வார்கள். நான் போகும் அன்று அப்பா கடைசி ஏராகவும், கூலி ஆட்கள் அடுத்து நானும், எனக்குப் பின்னால் அப்பாவுமாக நான்கு ஏர்கள் உழுவோம். எனக்கு கற்றுக் கொடுக்கத்தான் இந்த ஏற்பாடு.

விதை பாவுவது, பாத்தி கட்டுவது, நாற்று நடுவது, களை எடுப்பது எல்லா வேலையும் எனக்குத் தெரியும். இருபத்தைந்து வயதில் நான் முழு விவசாயி ஆகிப் போனேனே தவிர, நான் படித்தது அந்தக் காலத்து பத்தாம் கிளாஸ் அவ்வளவுதான். அதனால் தான் என் மகனை விவசாயத்தின் பக்கமே தலைவைத்துப் படுக்க விடாமல் பட்டணத்திலேயே பணம் கட்டி படிக்க வைத்து முன்னேற்றி விட்டேன். நான் எந்தப் பட்டணத்தைப் பார்த்திருக்கிறேன்? எல்லாமே அவனுடைய தன் முயற்சி. செலவுக்குப் பணம் கேட்டு வருவான். கொடுப்பதோடு சரி. புத்தியுள்ள பிள்ளை. நல்லா வந்துட்டான். இப்போது அவன் கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருக்கிறான். அவன் மனைவியும் அதே வேலைதான்.

அவனாக லீவு நேரத்தில் குடும்பத்தோடு வந்து நான்கைந்து நாட்கள் இந்த கிராமத்தில் தங்கி விட்டுப் போவான். அதற்கே என்னுடைய பேரப் பிள்ளைகள் இரண்டும் வசதியில்லாத கிராமத்தைக் கண்டு நெளிவாங்க…

“”அப்பா… எப்பப்பா ஊருக்கு…?” என்று நச்சரித்து விடுவார்கள். ஆனால் அந்தப் பிள்ளைகளுக்கு ஒரே மகிழ்ச்சி…. தக்காளி எப்படி செடியில் விளையுது… கரும்புத் தோட்டம்…. புடலை பந்தல்… இப்படி பார்க்கும் போது, “”ஐ…” என்ற சத்தத்தோடு தொட்டு மகிழ்வார்கள். எனக்கு அது மகிழ்ச்சியாகத் தெரியும். பேரப் பிள்ளைகள் வந்தால் வீட்டில் தங்க மாட்டார்கள்… தோட்டத்தில்தான் பொழுதைக் கழிக்க நினைப்பார்கள்.

வயலில் நடுகிற நாற்றுக்கு காட்டுகிற அக்கறையை எந்த விவசாயியும் தான் பெற்ற பிள்ளைகளுக்கு காட்டமாட்டான். ஆனால் நான் அக்கறை காட்டினேன். அதுதான் இந்த வயசான காலத்திலே விழுதுகள் வேரைத் தாங்க நினைக்குது…

சரி… இந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை பட்டணம்… அதுவும் எப்படி இருக்குதுன்னுதான் பார்ப்போமோ….

கோடை காலமாக வேற இருக்கு…. இந்த வருஷம் மழை வேற பெய்யலை… நிலத்தடி நீர் மட்டம் குறைஞ்சு மோட்டார் இழுவை பத்தலை… ஒரு மாதம் கழிச்சு விவசாயத்தை ஆரம்பிக்கலாம்னு அதுவரை போறேன்…

“நிலமழகிய மங்கலம்’ – பெயருக்கு ஏற்றாற்போல் அழகான சோலையுள்ள இந்தக் கிராமத்தை விட்டு முதன் முறையாக வெளியேறப் போகிறேன். இன்று வெள்ளிக் கிழமை. நாளை காலை வெங்கடேசன் வந்து விடுவான். சென்னை சென்று விட்டு வரும் போது இந்த நிலம், இந்த வீடு எனக்குச் சொந்தமாக இருக்குமா? என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அழுகை எனக்கு முட்டிக் கொண்டு நின்றது.

பச்சை பசேலென இருந்த தோட்டத்தை சமப்படுத்தி கட்டாந்தரையாக்கி விட்டு பணம் கேட்டு என் எதிரே வந்து நின்றான் டிராக்டர் டிரைவர். பதினைந்து நூறு ரூபாய் தாள்களை எண்ணிக் கொடுத்தேன். தோளில் கிடந்த துண்டை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அப்படியே நிலத்தில் குத்துக் காலிட்டு உட்கார்ந்தேன். உலர்ந்து கிடந்த செம்மண்ணை இரண்டு கைகளாலும் அள்ளினேன். கைவிரல்களின் இடுக்குகள் வழியே மெதுவாகச் சிதற விட்டேன்.

“உனக்கும் எனக்குமான சொந்தம் இன்னும் எத்தனை நாளைக்கு… ஒரு மாசமோ… இரண்டு மாதமோ தான்… உன்னை இழந்து விலகப் போகிறேன்… எனக்குப் பின்னால் நீ நித்தம் நித்தம் செத்து பிழைக்கும் விவசாயமா… இல்லை நிரந்தரமாக செத்துப் போகும் பிளாட்டாகவா… கட்டிடமாகவா.. எனக்குத் தெரியாது… உனக்குச் சொந்தமில்லாத வியர்வையை உன்மீது தெளித்து வாழ்ந்திருக்கிறேன்… இப்போதும் உனக்குச் சொந்தமில்லாத உன்மீது ஒருமுறை கூட தெரித்து விழாத என் கண்ணீரை தெளித்து விடை பெறப் போகிறேன்… மன்னித்து விடு…’ விம்மிக் கொண்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்ட போது வாய் மட்டும் விரிந்து எச்சிலை வெளிக்காட்டியது… கண்ணீர் நிலத்தில் விழுந்து காய்ந்தது.

மடியிலிருந்த துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன்.. மதியம் சாப்பிட முடியவில்லை… வீட்டுத் திண்ணையில் படுத்த போது உறக்கம் வராத தவிப்பு.. பீரோவில் எப்போதோ வைத்த பத்திரங்களை சாயங்காலம் தேடி எடுத்து அரை மனதோடு பத்திரப்படுத்தி வைத்தேன். விடியும் பொழுது நல்ல பொழுதாக வெங்கடேசனின் மனமாற்றச் செய்தியோடு விடிய வேண்டும் என்ற நம்பிக்கையோடு அன்று இரவு படுக்கைக்குப் போனேன்.

வயல்காட்டிற்கு போய் விட்டு வந்து படுக்கும் ஒவ்வொரு நாளும் அடித்துப் போட்டதைப் போல் அசத்தும் உறக்கம் அன்று புரண்டு புரண்டு படுத்தாலும் வரவில்லை.

விடியற்காலையில் வீடு வந்து சேர்ந்த வெங்கடேசனின் பிடிவாதம் நிலப் பத்திரப் பையோடு என்னைச் சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்து, இரண்டு நாட்களை வழியனுப்பி வைத்திருந்தது.

அடுக்குமாடி வீடு… குளு குளு அறை, எதற்கும் வீட்டை விட்டு வெளியே வராத அளவிற்கு வசதிகளோடு உள்பக்கமாக வீட்டை பூட்டிக் கொண்ட வாழ்க்கை… மகனும் மருமகளும் வேலைக்குப் போன பின்பு பேரப்பிள்ளைகளும், டி.வி.யும்தான் உலகமாக இருந்தது. இரண்டு நாட்கள் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மூன்றாவது நாள் என்னால் இருக்க முடியவில்லை.

“”வெங்கி…”

“”என்னப்பா…?”

“”வய வரப்புன்னு சுத்திகிட்டே இருந்த உடம்பு… வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்க முடியலை… அது என்னப்பா… வெளிக்காற்றே வராமல் குளுகுளுன்னு அது நமக்கு சரியா வரலை… எங்கேயாவது காலாற நடந்துட்டு வர்றேன்”

நான் புறப்படத் தயாரானேன்.

“”அப்ப ஒண்ணு செய்யுங்க அப்பா…”

“”நீங்க…. தனியா போக வேண்டாம்… உங்க பேரன் முகிலனை கூட்டிட்டு போங்க..

கடைக்கு சாமான்கள் வாங்க போறான். அவனோட நீங்களும் போயிட்டு வாங்க.. அதற்குள் நிலம் சம்பந்தமாக ஆள் வந்திருவாங்க.. நம்ம ஊருக்கு பக்கத்து ஊர்காரங்கதான்… வெள்ளையபுரம்… சீக்கிரம் வந்து விடுங்க…”

பெரிய கடை வீதி… நடந்து போகும் போதே ஒவ்வொன்றாக காட்டிக் கொண்டு போனான் பத்தாம் வகுப்பு படிக்கும் பேரன் முகிலன்.

தெருவோரத்தில் சோபாக்களும், சேர்களும், அலங்கார பொம்மைகளுமாக இருந்தன.

நான்கைந்து நைந்து போன வடமாநில மனிதர்கள் அதை விற்கும் வியாபாரிகளாகத் தெரிந்தனர்.

“”முகிலா….” என்று தான் சொன்னேன்.

“”இதெல்லாம் பணக்கார வீடுகளில் வைக்கிற அலங்கார பொருட்கள் தாத்தா…”

அதை சிறிது நேரம் நின்று பார்த்தேன். அழகழகாக இருந்தன.

ஒரு இடத்தில் சாலையின் இரண்டு புறங்களிலும் தள்ளுவண்டிகளில் காய்கறி கடைகள், அடர்த்தியான மரங்களோ, விவசாய நிலங்களோ இல்லாத அந்த நகரத்தில் பச்சை பசேலென காய்கறிகள் அடுக்கி வைத்திருந்தார்கள் வியாபாரிகள்.

முகிலன் ஒரு தள்ளுவண்டி அருகில் போனான்.

தக்காளிகளைப் பொறுக்கி எடுத்து இரண்டு கிலோ போடச் சொன்னான். அந்தக் கடைக்காரன் என் மகன் குடும்பத்திற்குப் பழக்கப்பட்டவன் போலத் தெரிந்தது.

“”எப்பவும் அப்பா வருவாரு… இன்னைக்கு நீங்களா….?” என்று கேட்டான்.

தக்காளிகளை வாங்கிக் கொண்டு, “”எவ்வளவு?” என்று கேட்டான்.

“”கிலோ நாற்பது… எண்பது ரூபாய் கொடுங்க..”

“”கிலோ நாற்பதா…” எனக்கு நெஞ்சடைத்தது.

“”என்னப்பா… நாற்பது சொல்றே…?” நான் கேட்டேன்.

“”என்ன செய்யுறது… மழை இல்லை… விவசாயம் இல்லை… தக்காளி விளைச்சல் குறைஞ்சு போச்சு… வரத்து குறைவு…”

கடைக்காரன் எனக்கு விவசாயம் பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்.

நான் பேசாமல் நகர்ந்தேன்.

“”ஏம்பா… பத்து ரூபாய் குறைச்சு வாங்கலாமில்லே…?”

“”தாத்தா… இது கிராமமில்லே… டவுன்… அவன் சொல்றது தான் விலை. விலை குறைச்சுக் கேட்டா நம்மை ஏற இறங்கப் பார்ப்பான்”

அடுத்தது ஒரு உயரமான கட்டிடத்திற்கு அழைத்துப் போனான்.

“”தாத்தா… இது ஷாப்பிங் மால்…”

“”அப்படின்னா?”

“”இங்கே சினிமா தியேட்டர், ஹோட்டல், மளிகை கடை, காய்கறி கடை எல்லாமே இருக்கு…”

உள்ளே நுழைந்தபோது, குளு குளு காற்று வரவேற்றது. எதிரே இருந்த கடைக்குள் போனோம்.

ஒரு பெரியகடை முழுவதும் எல்லாவிதமான பழங்களும், காய்கறிகளும் அழகாக அடுக்கி வைத்திருந்தனர்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தோட்டத்தில் பறிக்கிறபோது கூட இவ்வளவு அழகாக இருந்ததில்லை காய்கள்… அவ்வளவு அழகாக இருந்தன.

தள்ளுவண்டியை எடுத்துக் கொண்டு முகிலன் செல்ல பின்னால் சென்றேன்.

நான்கைந்து மாம்பழங்களும், ஆப்பிள்களும் வண்டியில் எடுத்துப் போட்டான். ஓரிடத்தில் எடை போட்டு பணத்தை கொடுத்து வாங்கிக் கொண்டு வெளியில் வந்தோம்.

“”என்ன தாத்தா…. ஆச்சரியமாக இருக்கா?”

“”ஆமாம்… பணக்காரங்க வீட்டிலே இருக்க வேண்டிய பொருட்களை வீதியிலே விற்கிறாங்க… சாதாரண ஏழை மக்களும் வாங்குற சாப்பிடும் பொருட்களை குளு குளு அறையில் வைச்சிருக்காங்க… ஆச்சரியம் தானே?”

இரண்டு மணி நேரம் சுற்றி விட்டு வீடு வந்தபோது வீட்டிற்குள் இரண்டு பேர் உட்கார்ந்து என் மகனுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான்.

“”அப்பா பேர்ல தான் இருக்கு…” அவர்களிடம் என் மகன் சொன்ன போது எனக்குப் புரிந்தது. நான் எதுவும் பேசவில்லை.

“”ஒரு நல்ல நாளாகப் பார்ப்போம்.. போயிட்டு பேசுகிறேன்”

அவர்கள் விடை பெற்றார்கள்.

“”வீடு மட்டும் இருக்கட்டும்… தோட்டத்தை பத்து லட்சத்துக்குப் பேசியிருக்கிறேன். நீங்க சரின்னு சொன்னா… விற்று விடுவோம். எனக்குச் சரி…” என்றான் வெங்கடேசன்.

“”நான் உயிரோடு இருக்கும்வரை தோட்டத்தை விற்க வேண்டாம்பா…”

“”என்னப்பா… சொல்றீங்க…?”

“”இன்னும் பத்து வருஷம் கழித்து உங்க எல்லோருடைய கைகளிலும், நீங்க மடியிலும், கைகளிலும் வைச்சு படம் காட்டுறீங்களே… அதுதான்.. அதுக்குப் பேரென்ன…?” பெயர் தெரியாமல் நான் இழுத்தேன்.

“”கம்ப்யூட்டரா…” மகன் கேட்டான்.

“”ஆமா… அது தான்.. அதுவும் உங்க கைநிறைய பணமும் இருக்கும்… ஆனால் கத்திரிக்காயும், தக்காளியும் இருக்காது… அது என்னை மாதிரி ஆட்களால் தான் தர முடியும்.. உங்களால் முடியாது… என் வழியிலேயே நான் போறேன்.. என்னை விட்டு விடு… என்னை விற்று விடாதே….”

நிலப் பத்திரத்தை வாங்கிக் கொண்டேன். அன்று இரவே கிராமத்திற்கு திரும்ப பஸ்ஸில் ஏற்றி விடச் சொன்னேன் நான்.

– குன்றக்குடி கி.சிங்காரவடிவேல் (அக்டோபர் 2013)

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *