நான் புகழேந்தி பேசுகிறேன்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 7,490 
 

நான் செத்துப் போய்விட்டேனாம். ஆம். என் உடலிலிருந்து உயிர் தனியே பிரிந்து பறந்து போய்விட்டது. உடம்பு பாரமில்லாமல், ஆவி உருவில் காற்றைப் போல் உலா வருவது சுகமாக இருக்கிறது. கீழே என் ஸ்தூல உடல் கிடத்தப்பட்டிருக்கிறது.

நான் புகழேந்தி பேசுகிறேன்“”நேற்று ராத்திரிகூட நல்லா இருந்தியே. நல்லாத்தானே பேசிட்டிருந்தே. நாளை உன் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளரைப் பார்த்து அதற்கு பணம் கேட்கணும்னுகூட சொல்லிட்டிருந்தியே. வழக்கம் போல காபி போட்டு எடுத்துட்டு வந்து எழுப்பினால் எழுந்திருக்கவில்லையே” மனைவியின் புலம்பல். உடம்பு சில்லிட்டுப் போயிருந்தது. உயிர் போயிடுத்துன்னு தெரிந்தாலும் சவக்களை இல்லாமல் தூங்குவது போல் இருந்ததால் ஒரு சின்ன சந்தேகம், உயிர் இருக்கலாமோன்னு அருகில் உள்ள டாக்டரை அழைத்து வந்து பார்த்தால், “”தூக்கத்திலேயே உயிர் போய்விட்டது. நல்ல புண்ணிய ஆத்மா” என்று கூறிச் சென்றுவிட்டார். உறவினர்கள் வந்து சடலத்தை எரிப்பது வரை, உடலைப் பாதுகாக்க கண்ணாடிப் பெட்டி வரவழைக்கப்பட்டு விட்டது. விளக்கேற்றி வைத்திருக்கிறார்கள். உறவினர்கள், நண்பர்கள் என்று பலருக்கும் போனில் தகவல் பறந்தது. என் நண்பர் ஒருவர் மாலையுடன் வந்து முதல் மாலை கண்ணாடிப் பெட்டி மேல் போடப்பட்டது.

இந்தக் காலத்தில், அதுவும் நகரத்தில் கிராமத்தைப் போல் ஒப்பாரி வைப்பதில்லை. கண் கலங்குவதோடு சரி. அல்லது போயிட்டியே என்று லேசாக கதறுவதுடன் சரி. அவ்வளவுதான். நான் ஆவி வடிவில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் எங்கும் போய்விடவில்லை. இங்குதான் என் வீட்டில்தான் ஆவி உருவில் உள்ளேன் என்று சொல்கிறேன். ஆனால் என் குரல் எனக்கே கேட்காது. அவர்களுக்கு எப்படிக் கேட்கும்? ஒருவேளை என் குரல் கேட்டால் நிச்சயம் பயந்து போய்விடலாம். அல்லது நான் சாகவில்லை உயிருடன்தான் இருக்கிறேன் என்றுகூட நினைத்துவிடலாம்.

இறந்த பின்தான் பேரினை நீக்கி பிணமென்று பெயர் சூட்டி விடுகிறார்களே.

ஐயர் சாஸ்திரிகள் வரவழைக்கப்பட்டார். ஏதோ மந்திரங்களைச் சொல்லி இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

கடைசி யாத்திரையாக வேனில் ஏற்ற அமரர் ஊர்தியும் வந்துவிட்டது. என் உடல் மின் மயானம் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. 3 முதல் 4 மணி வரை என்று அதற்கும் நேரம் ஒதுக்கியிருந்தார்கள்.

அந்த நேரத்தில் பேக்கரியில் தணல் அடுப்பில் ரொட்டியை உள்ளே தள்ளுவது போல், என் உடல் தள்ளப்பட்டது.

ஒரு மணி நேரத்தில் என் அஸ்தியை பேரன் பெற்றுக் கொண்டான். ஆம், எனக்கு பிள்ளைகள் கிடையாது. ஒரே ஒரு மகள் மட்டும்தான். அவன் மகள் வழிப்பேரன். “ஹாய் தாத்தா’ என்பதுதான் தினமும் சந்திக்கும்போது கூறும் வார்த்தை. ஏதாவது கட்டுரை எழுதும்படி பள்ளியில் கேட்டிருந்தால் உதவிக்கு என்னிடம்தான் வருவான். பலமுறை நான் எழுதித் தந்த கட்டுரைக்குப் பரிசு, பேச்சுப் போட்டியில் பரிசு, எல்லாம் வாங்கியுள்ளான். தாத்தாவிடம் நெருக்கமும் இல்லை. அதே சமயத்தில் வெறுக்கவும் இல்லை. பாவம் எப்போது பார்த்தாலும் ஹோம் ஒர்க்தான். விளையாடக்கூட நேரம் இல்லாமல் படிப்பு படிப்பு என்று இருப்பதும் இது தவிர, டியூஷன் என்று அவன் பெற்றோர்கள் அவனைப் பிழிந்து எடுத்தனர் என்றுதான் சொல்வேன். எங்கள் காலத்தில் எல்லாம் இப்படி சிரமப்படவில்லை. விளையாட்டாகவே படித்தோம். விளையாட்டுக்கும் நேரம் கிடைத்தது. அதில் ஒரே கஷ்டம். விளையாடப் போய் அடிக்கடி கை கால்களில் அடிபட்டுக் கொண்டு விடுவோம். அதனால் பெற்றோர்கள் விளையாடப் போகாதே என்று தடுப்பார்கள். நாங்களா கேட்போம்? விளையாட்டு தொடரத்தான் செய்யும். இப்போது டிவி முன் அமர்ந்திருப்பதுதான் விளையாட்டு போலும்.

நான் பேச ஆரம்பித்தால் இப்படித்தான் எங்கேயோ போய்விடுவேன்.

அஸ்தி கலசத்தை சமுத்திரத்தில் கரைத்துவிட்டு வீடு திரும்பிவிட்டனர். என் படத்தைப் பெரிதாக்கி பிரேம் செய்து மாலை சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது. என் உடல் இல்லாவிட்டாலும் உருவமாவது இருக்கட்டுமே என்று சிறிய சந்தோஷம் போலும்.

என் படுக்கை தலையணை எல்லாம் வீதியில் எறியப்பட்டது. அதற்கென்று காத்திருந்தது போல் அதையும் ஒருவர் உடன் எடுத்துச் சென்றுவிட்டதுதான் ஆச்சர்யம். யாரோ ஒருவர் மெத்தையில் நிறைய பணத்தை பதுக்கி வைத்திருந்தாராம். அது போல் என் மெத்தையிலும் ஏதாவது பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என்று மெத்தையை கிழித்துப் பார்ப்பார்களா? தெரியவில்லை.

நல்லவேளை நான் படிப்பதற்காக ஆசையாக சேர்த்து வைத்த புத்தகங்கள், எழுதி வைத்துள்ள அரைகுறை கதை கட்டுரைகளின் ஸ்கிரிப்ட்களை எதுவும் செய்யவில்லை. ஒருவேளை மெதுவாக பின்னால் எதுவும் செய்யலாம். புத்தகங்களை நிச்சயம் ரோட்டில் போட மனம் வராது. பழைய பேப்பர்காரனுக்கு எடைக்குப் போட்டுவிடத்தான் நினைப்பார்கள்.

எனக்கு சொர்க்கமா? நரகமா? என்று சித்திரபுத்திரன் எனது பேரேட்டைப் பார்த்துதான் சொல்ல வேண்டும் போலும், அதுவரை என் வீட்டைத்தான் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். பசி, தாகம், வலி வேதனை என்று எந்த உபாதையும் இல்லாததுதான் பெரும் ஆறுதல். மனதில் ஒரே சந்தோஷம்தான். இப்படி இருக்கும்போது சாவைக் கண்டு ஏன்தான் அஞ்சுகிறார்கள்? என்று தெரியவில்லை.

10வது நாளோ, 13வது நாளோ காரியம் என்று ஏதோ குளக்கரையில் செய்தார்கள். எங்களுக்கு இங்கு நாட்கள் கிழமை கிடையாது போல் தோன்றுகிறது. இத்துடன் எனக்கான கிரியைகள் முடிந்துவிட்டன. இனிமேல் அடுத்த ஆண்டு இதே நாளில் திதி கொடுப்பார்கள். வருடத்திற்கு ஒருநாளாவது நினைக்கிறார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

டிவியில் தொடர் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். மனதில் துக்கம் இருந்தாலும். டிவி சீரியல் பார்த்து அவர்களுக்காகவும் துக்கப்பட வேண்டுமே. கண்ணீர் சிந்த வேண்டுமே. அது தடைப்படக் கூடாதே!

நான் எழுத்தாளன் என்பதால், தினசரிகளுக்கு மறைவுச் செய்தியை அனுப்பியிருக்கலாம். ஏனோ அனுப்பவில்லை. அதனால் என் மறைவுச் செய்தி தினசரியில் கூட வெளியாகவில்லை. பணம் கட்டி காலமானார் பகுதியில் விளம்பரம் கூட செய்யவில்லை. அது அவசியமில்லை என்று நினைத்திருக்கலாம். நான் ஆசிரியர் குழுவில் உள்ள ஒரு மாதப் பத்திரிகையில் மட்டும் காலமானார் செய்தியை கட்டம் கட்டி புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள். அதன் மூலம்தான் அதைப் பார்ப்பவர்களுக்கு என் மறைவுச் செய்தி தெரியும். பார்க்காதவர்கள் நான் இன்னும் உயிருடன் இருப்பதாகத்தான் நினைத்துக் கொள்ளக்கூடும். எப்படி நினைத்தால் எனக்கென்ன?

இன்னும் எனக்கு சொர்க்கமா? நரகமா? என்பது தெரியவில்லை. அது தெரியும் வரை எங்கு வேண்டுமானாலும் தாராளமாகச் சுற்றி வரலாம். சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.

சொர்க்கமோ நரகமோ எங்கு சென்றாலும் அங்கு எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யாரேனும் இருக்கக்கூடும். அவர்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். தெரிந்த எழுத்தாளர்கள் பெயர்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தேன். அமரர் கல்கியைப் பார்க்க வேண்டும் நான் விரும்பிப் படிக்கும் மு.வ.வைப் பார்க்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

அவர்கள் எங்கிருப்பார்கள் என்று சித்திரபுத்திரனைத்தான் கேட்க வேண்டும். ஒருவேளை மறுபிறவி எடுத்து பூமியில் பிறந்திருக்கலாம். அல்லது மறுபிறவியே இல்லாத முக்தி நிலையடைந்திருக்கலாம்.

“”எனக்கு மறுபிறவி உண்டா?” என்று கேட்டேன்.

“” நிச்சயம் நீ பூமியில் மறுபடியும் பிறப்பாய். ஏனெனில் நீ உன் நிறைவேறாத ஆசையுடன் இங்கு வந்து விட்டாய். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள மறுபடியும் பிறப்பாய்” என்றனர் என் கணக்கைப் பார்த்தவர்.

எனக்கு நிறைவேறாத ஆசைகளா நினைத்துப் பார்த்தேன். லேசாக நினைவுக்கு வருகிறது.

நிறைய வார மாத இதழ்களில் அறிவிக்கப்படும் போட்டிக்கு கதை அனுப்பி கலந்து கொண்டேன். ஒரு முறையும் மூன்றாவது பரிசுகூட கிடைக்கவில்லை. பரிசுதான் கிடைக்காவிட்டாலும், கதை பிரசுரத்திற்கும் தேர்வாகவில்லை. பத்திரிகையில் பிரசுரமாகும் கதைகளை விட என் கதை எந்த விதத்திலும் மோசமில்லை. ஆனால் ஏனோ பிரசுர வாய்ப்பைப் பெறவில்லை. சிறந்த நூல்களுக்கு பரிசு என்று போட்டி அறிவிப்பார்கள். பல பதிப்பகங்களில் 75 நூல்களுக்கு மேல் எனது நூல்கள் வெளிவந்துள்ளன. போட்டி அறிவிக்கும்போதெல்லாம், 2, 3, பிரதிகளை தமிழ் வளர்ச்சிக்கு 5 பிரதிகள். கூரியரில் அனுப்பியதுதான் மிச்சம். ஒருமுறை கூட எந்தப் பரிசும் கிடைக்கவில்லை. பரிசுத் தொகைக்காக நான் ஆசைப்படவில்லை. என் எழுத்துக்கு ஒரு கெüரவம் கிடைக்கட்டுமே என்றுதான் ஆசைப்பட்டேன். இதுதான் என் நிறைவேறாத ஆசைகள். வேறு எந்த ஆசையும் இல்லை என்று உறுதியாகச் சொல்வேன்.

இதற்காகவா மீண்டும் பிறக்க வேண்டும்? மீண்டும் இந்த ஏமாற்றங்களை, தோல்விகளை அனுபவிக்க வேண்டுமா. வேண்டாவே வேண்டாம் என்று இப்போது நினைத்து என்ன பயன்? அப்போது நினைத்தற்கு தண்டனை அனுபவித்துத்தான் தீரவேண்டுமாம்.

கடவுளே மீண்டும் பிறவாமை வேண்டும். பிறந்தாலும் உன்னை மறவாமை வேண்டும் என்பதைப் படித்திருந்தாலும் அதை மறந்துவிட்டேனே!

“நீ இன்னும் சிறிது நாள் பூமியில் ஆவியுருவில் உலவி வரலாம்’ என்று எனக்கு அனுமதி கிடைத்தபோது, என் பணி நிமித்தம் பல ஊர்களில் பணியாற்றியுள்ளேன். அந்தந்த இடங்களை மீண்டும் போய்ப் பார்த்து வர வேண்டும் என்று ஆசை எழுந்தது. இப்போதுதான் டிக்கெட் ரிசர்வ் செய்து பயணம் செய்ய வேண்டிய அவஸ்தை கிடையாதே. நினைத்தால், நினைத்தவுடன் நினைத்த இடத்திற்கு சென்று விடலாமே! எங்கெங்கு பணியாற்றி குடியிருந்தேனோ அந்த ஊர்களுக்கெல்லாம் பைசா செலவில்லாமல், நினைத்தவுடன் அந்த இடத்தை அடைந்து பார்க்க முடிந்தது மட்டும் ஒரே லாபம். எல்லா இடங்களும் எவ்வளவோ மாறியிருந்தன. நிச்சயமாக இது முன்பு நான் இருந்த பார்த்த ஊர் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றியது அவ்வளவு மாறுதல். மாறுதல் என்ன மாறுதல்? எங்கெங்கும் கட்டிடங்கள்தான். நான் பார்த்த பல மரங்கள் காணாமற் போயிருந்தன. மரம் மட்டுமா, ஏரி, குளம், கால்வாய், ஆறு எல்லாமே காணாமல் போயிருந்தன. பல இடங்கள் வீட்டுமனைகளாக்கப்பட்டு கல் பதித்திருந்தார்கள். எனக்கு ஏனோ கல்லறை நினைவுதான் வந்தது.

கல்லறையில் பயிரிடவோ, குடியேறவோ முடியாது. இப்படி எல்லா நிலங்களும் வீட்டு மனைகளாகிவிட்டால்… பயிரிட நிலம் ஏது? எதைச் சாப்பிடுவார்கள் என்று நினைக்கத் தோன்றியது. அது அவர்கள் கவலை. அதைப் பற்றி நான் ஏன் இனி கவலைப்பட வேண்டும்?

இங்கு இன்னும் யார் யாரைச் சந்திக்கலாம் என மீண்டும் ஒரு பட்டியல் மனதில் ஓடியது.

என் நூலை வெளியிட்டு பணம் தராத பதிப்பாளர், என் கையெழுத்துப் பிரதியை தன் பெயரில் வெளியிட்டுக் கொண்ட பதிப்பாளர், என்னிடம் கடன் பெற்று கடனைத் திருப்பித்தராத, பணம் இருந்தும் கொடுக்க மனம் வராத கடன்காரர்கள், (நானா? அவனா? என்றும் ஒரு சந்தேகம்) ஞாபகம் வருகிறது. வீட்டில் வாடகைக்கு குடி வந்துவிட்டு, வாடகைப் பாக்கி தராமல், சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்ட என் வீட்டு குடித்தனக்காரர்கள், பஸ்ஸில் என் பர்ûஸ பிக்பாக்கெட் அடித்தவர்கள், ரயில் பயணத்தின்போது என் சூட்கேûஸ மாற்றி எடுத்துச் சென்றவர்களைச் சந்தித்து நறுக்கென்று ஒருகேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உடல் மட்டும் இல்லாவிட்டாலும், மனம் உள்ளதே. நினைவுகள் உள்ளதே. அதனால்தான் நினைவே ஒரு சுமை என்றார்களோ?

எனக்கு ஒரே ஒரு சலுகை உண்டாம். பூமியில் மறுபடியும் யாரிடத்தில் எங்கு பிறக்கலாம் என்பது என் இஷ்டம்தானாம். அதற்கு தடை ஏதும் கிடையாதாம்.

நான் சற்று வசதியான குடும்பத்தில் பிறந்து கஷ்டம் தெரியாமல் வளர்ந்தவன். பசி என்ன என்று கூட தெரியாது.

அதனால் இந்த முறை ஒரு ஏழையாகப் பிறக்க வேண்டும். கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும். பசி எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

வசதியான குடும்பத்தில் பிறந்தாலும், உறவினர்கள் நண்பர்கள் வசதியாக இருந்தாலும் எவ்வளவு போட்டி பொறாமைகள்… வயிற்றெரிச்சல்கள்.

“”உனக்கென்ன ஒரே பெண் கவலையே இல்லை. உனக்கு நல்ல மருமகன் கிடைத்திருக்கிறான். சொந்த வீடு. வீட்டு வாடகையும் வருகிறது. உனக்கு என்ன கவலை?” என்று என்னைப் பற்றி உறவினர்கள் நண்பர்கள் கவலைப்பட்டார்கள்.

அதனால் பணக்கார வீடு வேண்டாம். ஏழைக் குடும்பம் பிளாட்பார குடும்பமாக இருந்தாலும் சரி என்று முடிவு செய்தேன்.

நான் என் சுயசரிதையை நண்பர் கேட்டுக் கொண்டபடி எழுதினேன். அந்த நூல் வெளியானதைப் பார்க்க கொடுத்து வைக்கவில்லை. நூலக ஆர்டர் கிடைத்தால்தான் அச்சிடுவார்களாம். அதனால் டம்மி பிரதியாகவே உள்ளது. நூலக ஆர்டர் கிடைத்து அச்சிட்டால் நூல் சில நூலக அலமாரிகளிலாவது அது தூங்கும். அந்த பாக்கியம் என் நூலுக்குக் கிடைக்குமோ? கிடைக்காதோ? தெரியவில்லை.

என் வீட்டில் இன்னமும் என்னை நினைப்பார்களா? என்று ஒரு சந்தேகம். நினைக்காமல் இருக்க முடியாது. நான் நிறைய சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன். நிச்சயம் இரண்டு தலைமுறைக்குப் போதும். அதனால் நிச்சயம் நினைப்பார்கள் என்று ஆறுதலடைந்தேன். நினைக்காவிட்டால்தான் என்ன? அந்த நிலையைத்தான் தாண்டி வந்தாயிற்றே?

என் ஆசைப்படியே. ஒரு பிளாட்பார குடும்பத்தில் பிறக்க நினைத்து அங்கு கருப்பை வாசம் ஆரம்பமாகிவிட்டது. கருப்பையில் இருக்கும்போது எல்லா நினைவுகளும் பூர்வஜென்ம வாசனை அப்படியே இருந்தது. பூமியில் பிறந்த பின்புதான் எல்லாம் உடனடியாக மறந்து விடுமாம். அதுவும் பலவகையில் நல்லதுதான். இதோ பூமியில் மறுபடி பிறந்து விட்டேன்.

“”கருப்பாயிக்கு ஆம்பளைப் புள்ளை பிறந்திருக்கிறது” என்று என் மறுபிறப்புக்கு கட்டியம் கூறினார்கள்.

இதோ நான் வாய்விட்டு “வீல் வீல்’ என்று அழ ஆரம்பித்து விட்டேன்.

பிறந்த குழந்தை அழுவதைக் கேட்கத்தான் இந்த ஜனங்களுக்கு எவ்வளவு சந்தோஷம்?

– மயிலை மாதவன் (செப்டம்பர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *