நாகபாம்பு மனைவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2017
பார்வையிட்டோர்: 7,915 
 

மனித நடமாட்டமில்லாத ஒற்றையடிப் பாதையில் நான் தனியாக நடந்து போனேன். நிறைய பிசாசுப் பூக்கள் இருந்தன. பிசாசுப்பூக்கள் காற்றில் சலசலத்ததும்ää பூமணம் நாசியைத் துளைத்ததும் நான் ஆடிப்போனேன். சிறுவயதில் பிசாசுக்குப் பயந்து ஓடியதைப்போல் வேகமாக நடந்தேன். முடியவில்லை; தள்ளாடினேன். நூறுக்கு மேல் துடிப்பு ஏறியிருக்கும்; இதயமடித்திடும் ஒலி கேட்டது. இருமருங்கிலும் அடர்ந்த காட்டுமரங்கள். காற்றோடு பேசுவதும், பாம்புகள் கிசுகிசுப்பதும், படர்ந்தகொடிகள் நளினத்துடன் ஆடுவதும், ஐயகோ! கதை கேட்பவளே, ஒளியிலும் கடிதாக என்விழிகளுக்கு தென்படு! நான் அச்சத்தால் விதிர்விதிர்த்துப் போயிருக்கிறேன் என்று கூவினேன். எவ்வளவு கூவிடினும் கதை கேட்பவள் கண்களுக்குத் தென்படாள். அவள் குடியிருப்பதோ தொலைதூரம், வனாந்தரத்தின் அந்தக் கோடி; நான் நடந்தேன்.

கடவுளே நான் களைக்கக்கூடாது. கதை கேட்கும் பெண்மணியை நான் கண்டே ஆகவேண்டும். என் காயப்பட்ட உள்ளத்திலே புதைந்து போயிருக்கும் துயரங்களையெல்லாம் அவளிடம் கொட்டித்தீர்த்து விடவேண்டும். உன் பாதங்கள் வீங்கினாலும் நட! நட! நட!

“கௌரவ பெண்மணி அவர்களே, கதை கேட்பவள் என்று சொல்வது உங்களைத்தானே”

“நிச்சயம் நான்தான், இந்த வனாந்தரத்திலே என்னைத் தவிர வேறு யாருமே வாழவில்லை”

“உங்கள் தொழிலே புதுமையாக இருக்கிறது. என் மனதிலிருக்கும் சந்தேகத்தைக் கேட்கலாமா அம்மணி”

“தாராளமாகக் கேளுங்கள்”

“மற்றவர்களுடைய துயரங்களையும், சோதனைகளையும் நீங்கள் கேட்பதால் உங்களுக்கு அப்படியென்ன மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது?” என்று கேட்டேன் நான்.

பெண்மணி சிரித்தாளா அல்லது என் கேள்விக்குப் பதிலாக அழுதாளா அல்லது அழுது சிரித்தாளா அல்லது சிரித்து அழுதாளா என்று எனக்குத் தெரியாது. அவள் சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு “நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்” என்று கேட்டாள்.

“என்னுடைய கதையை உங்களிடம் சொல்லி என் மனப் பாரத்தை இறக்கி வைக்கலாமென்று தான்”

“அதுதான் என் நோக்கமும். பிறரின் துயரத்தைக் குறைக்க முடியுமாக இருந்தால், அதனால் அவர்கள் மகிழ்ச்;சியடைவதாக இருந்தால் நானும் மகிழ்ச்சியடைவேன்”

“கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது”

“ஆனால் அதிலே என்னுடைய சுயநலமும் கலந்திருக்கிறது”

“சொல்லுங்கள்”

“என்னுடைய துயரங்களையும் சொல்வேன். உங்கள் கதையையும்; கேட்பேன்”

“உங்களுக்கும் துயரமா?”

“இந்த வனாந்தரத்துக்கு வந்து 30 வருடங்களாகி விட்டன. கிழங்குகளையும் பழங்களையும் சாப்பிட்டு தனியாக வாழ்கிறேன். எதுவும் கிடைக்காவிட்டால் பசியோடு காலத்தைப் போக்கி விடுகிறேன். இது சந்தோஷமான வாழ்கையென்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று தேம்ப ஆரம்பித்தாள் பெண்மணி.

“என் கதையை விடத் துயரம் தான். கதையை நான் சொல்லாமல் விடுகிறேன்”

“இவ்வளவு வந்து விட்டு வெறும் கையோடு செல்லவா போகிறீர்கள்? அப்படியல்லää சொல்லுங்கள். உங்கள் மனப்பாரம் குறைந்தால் நான் மிகப் பெரிய சந்தோஷத்தை அடைவேன்.”

“ம்..” என்று ஆரம்பித்தேன் நான்.

“ஆனால் ஒரு நிபந்தனை…”

“சொல்லுங்கள்”

“இங்கே பொய் பேசக்கூடாது. எப்படிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும்”

“தங்கள் நிபந்தனையை ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய கதை நெடுங்கதை. உங்களுக்கு முழுசாகக் கேட்க நேரமிருக்குமோ தெரியாது”

“உங்கள் கதையை முழுமையாகச் சொல்லலாம். என் தொழிலே கதைகேட்பது தான்”

“நான் சொல்லப்போகும் கதை என் மனைவியைப் பற்றிய கதை. அவள் கெட்டவள்” என்று பீடிகையுடன் ஆரம்பித்தேன் நான்.

“பயப்பட வேண்டாம். நான் கதை கேட்பவள் மட்டுமே. நீங்கள் எதையும் வெளிப்படையாகப் பேசலாம். மனிதர்கள் என்றாலே அப்படித்தான். நான் யாரையும் தவறாக எண்ணுவதில்லை” என்றாள் பெண்மணி.

“கல்யாணமென்றால் நட்சத்திரம் உதிர்க்கும் பூவிதழ்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். நானும் திருமணம் செய்தேன். கடைசியில் என் வாழ்க்கை வானம் தூக்கி எறிந்த எரிகற்கள் போல ஆகிவிட்டது” என்றேன் நான்.

“என்ன நடந்தது?”

“என் மனைவி என்னைப் புரிந்து கொள்ளவில்லை. என் ஆசைகளை, விருப்பங்களை அறிந்து கொள்ளhமல் அவள் நடந்தாள். கனவானாக அவள் என்னை நடத்தாவிட்டால் பரவாயில்லை. கணவனாகக் கூட அவள் என்னை மதிக்கவில்லை. சந்தோஷமேயில்லாமல் வாழ்க்கை நடத்தினேன் நான்”

“அப்படி மோசமானவளா அவள்?”

“அவளைப்பற்றி உங்களுக்குத் தெரியாது. அவள் பாம்புப் பேய் பிடித்து அலைந்தாள்”

“பாம்புப் பேயா?”

“நடந்ததைச் சொல்கிறேன் கேளுங்கள், நீங்கள் நம்பவே மாட்டீர்கள். திருமணம் முடித்து மூன்று மாதங்களில் ஆரம்பமானது. ஒருநாள் அதிகாலையில் வீட்டுக்கு வெளியே சப்தம் கேட்டது. படுக்கையைப் பார்க்க மனைவியைக் காணவில்லை. வெளியே சென்று பார்த்தபோது முற்றத்தில் பாம்பாட்டி மகுடி ஊதிக் கொண்டிருக்க பாம்பு படமெடுத்து ஆடியது. மனைவியைப் பார்த்தேன். அவளும் பாம்பைப்போல நளினமெடுத்து ஆடிக் கொண்டிருந்தாள்”

“அற்புதம்.. அற்புதம்..”

“அற்புதமில்லை அசிங்கம். நான் கூனிக்குறுகிப் போய் இது என்ன கேவலமான நடனம் என்று கோபமாகக் கேட்க பாம்பு படமெடுத்தாடுவதைப் பார்த்தீர்களா? எவ்வளவு நளினம்! எத்துணை அழகு நீங்களும் ரசியுங்களேன்” என்று செல்லமாக விகசித்தாள் மனைவி.

“சுற்றிப் பார்த்தாயா? உன்னை எத்தனை பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? பாம்பு படமெடுத்தாடுவது அழகான விஷயமா? என்னையும் ரசிக்கச் சொல்கிறாயா? எனக்கும் மூளை பிசகிவிட்டது என்று நினைத்தாயா?” என்று வெஞ்சினத்துடன் பேசிக் கொண்டே போனேன் நான்.

“ஆத்திரப்படுவதற்கு இதிலே என்ன இருக்கிறது? இயற்கையிலுள்ள எல்லா விஷயங்களும் அழகானவை, பிரமிக்கத்தக்க அளவுக்கு அற்புதமானவை. அவற்றை நாம் ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தாள் அவள்.

‘பாம்புகள் மீது இத்துணை அதீத பிரமை வைத்திருக்கிறாயே. பாம்பை சமைத்துத் தந்தால் சாப்பிடுவாயா?’ என்று நான் கோபத்தை அடக்கவொண்ணாமல் கேட்டேன். அவ்வளவு தான், வெறுப்புமிழ என்னைப் பார்த்தாளே பார்வை. சிலகணங்கள் தான், வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டாள் அவள்.

நிற்கவே நிற்காத, நிறுத்தவே முடியாத வாந்தி. குடல் குலைகுலையாக வெளியே வந்துவிடுமோ என்ற அளவிற்கு வாந்தி. நான் நன்றாகப் பயந்து போய் வாந்தியை நிறுத்திவிடு நிறுத்திவிடு என்று பதட்டத்துடன் கூச்சலிட்டேன். அவளால் பேசமுடியவில்லை. வாந்தி வந்து கொண்டேயிருந்தது.

நான் டாக்டரிடம் ஓட ‘உங்கள் மனைவி கர்ப்பமாயிருக்கிறாள்’ என்று டாக்டர் சொல்லவும் நான் அளவற்ற மகிழ்சியடைந்தேன். என்றாலும் மனதிற்குள் மெல்லிய கோபமிருந்தது. நான் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் டாக்டரிடம் ஒப்புவித்தேன்.

‘இந்த விஷயத்தை ஏன் குழந்தைத்தனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது?’ என்று என்னிடம் கேள்வியைத் திருப்பிப் போட்டார் டாக்டர்.

தினங்கள் அமைதியாகக் கழிந்தன என்றாலும் அலுமாரியை அவள் அடிக்கடி திறந்து மூடுவதை அவதானித்த எனக்கு சுருக்கென்றது. ஏதோ பார்க்கக் கூடாத ஒன்று உள்ளேயிருப்பதாக உள்ளுணர்வு கூறவே மனைவி இல்லாத நேரம் அலுமாரியைத் திறந்;த நான் அதிர்ச்சியடைந்தேன்.

உள்ளே நிறையப் புகைப்படங்கள், ஓவியங்கள், குறிப்புகள், பட விளக்கங்கள், கட்டுரைகள், விஞ்ஞானக் குறியீடுகள். அத்தனையும் சர்ப்பங்கள் சம்பந்தமான விவரத் திரட்டுகள்; கருநீலம், கபிலம், பச்சை, செம்மஞ்சள் என்று வர்ணக்கலவையில் தோய்த்த பாம்புகளின் தலையோவியங்கள். எனக்கு மயக்கம் வந்துவிடும் போலிருந்தது.

பொறுக்க முடியாமல் அத்தனையையும் குவித்து தீயிட்டுப் பொசுக்கிய நான் நண்பனிடம் மனைவியைத் தண்டிக்க ஆலோசனை கேட்க மனைவியைத் தண்டிக்க வேண்டிய காரணம் எதுவுமில்லை. கர்ப்ப காலத்திலே உண்டாகக் கூடிய Pueberal psychosis என்றொரு நோய் இருக்கிறது. அந்த நோய் காரணமாக அவள் இப்படி நடந்து கொண்டிருக்கலாம். எனவே மனைவியை உளநோய் வைத்திய நிபுணரிடம் அழைத்துச் செல்லுமாறு உபதேசித்தான் நண்பன்.

அவளைப் பரிசோதித்த உளவியல் நிபுணர் ‘உங்கள் மனைவி எந்தவித உளநோயாலும் பீடிக்கப்படவில்லை. அவள் சாதாரண பெண்ணாகத் தான் இருக்கிறாள். அவளுக்கு பாம்புகளை நிறையப் பிடிக்கிறது. அவ்வளவுதான்’ என்றார்.

‘டாக்டர் அவள் சாதாரண பெண் என்று நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். என் மனைவியை ஆழ்நிலைத் தூக்கத்திற்கு உட்படுத்தி சிறு பிராயத்தில் பாம்பு சம்பந்தப்பட்ட அசம்பாவிதங்கள் எதுவும் நடந்திருக்கலாமோ என்று பார்க்க முடியாதா டாக்டர்?’

‘நீங்கள் அபாரமான கற்பனைவாதி, அனாவசியமாக சந்தேகப்படுகிறீர்கள். உங்கள் மனைவியை ஆழ்நிலைத் தூக்கத்திற்கு உட்படுத்த வேண்டிய எந்தத் தேவையும் இப்போதைக்கில்லை. கர்ப்பிணியான அவளுக்கு அது நல்லதுமல்ல. நீங்கள் கவலைப்படாமல் வீடு செல்லுங்கள்’ என்று என் தோளில் தட்டியவாறே சொன்ன டாக்டர் ‘அது சரி வேதாளம் என்றால் உங்களுக்கு நல்ல விருப்பம் போல’ என்று போனாம்போக்கில் சொன்னார்.

‘எப்படி டாக்டர் கண்டுபிடித்தீர்கள்?’

‘உங்கள் ரீஷேர்ட்டைப் பார்த்துத்தான். அதிலே வேதாளம் ஒன்று பறந்து செல்கிறது. அதற்குக் கீழே சுலோகம்- என் இதயத்தைக் தொட்ட வேதாளமே. நான் சிரித்தேன்.

‘அது என்னவென்றால் நான் சீனத் தூதரகத்தில் கொஞ்சநாள் பணியாற்றியதால் வேதாளம் எனக்கு பிடித்தது’

‘நீங்கள் வேதாளத்தை விரும்பும்போது உங்கள் மனைவி ஏன் சர்ப்பத்தை விரும்பக்கூடாது?’ என்று கேட்டுவிட்டு டாக்டர் என்னைப் பார்தது புன்னகைத்தார். அவர் ஏதோவொன்றை மறைக்க முயல்வது போல் எனக்குத் தோன்றிற்று.

என்னுடைய மனைவி சூனியக்காரியாக இருப்பாளோ? பாம்புகளை வசியப்படுத்தி எதிரிகளை கொல்வதற்காக ஏவிவிடும் சூனியக்காரிகளைப் பற்றி நிறைய நான் கேள்விப் பட்டிருந்தேன். இவளும் அப்படியான ஒருத்தியாக இருப்பாளோ? என்னைக் கொல்ல முயற்சிக்கிறாளோ? என்று எல்லாக் கேள்விகளும் என்மனதைக் குடைந்து ஆட்டிப்படைத்தன.

ஓன்பது மாதங்கள் கழித்து என் மனைவிக்கு ஆண்மகவு ஒன்று பிறந்தது. நான் பயந்ததுபோல் பாம்பாகவோ வேதாளமாகவோ இல்லாமல் குழந்தை இலட்சணமாக கொழுகொழுவென்று இருந்தது. என் மனைவி குழந்தையுடன் ஒன்றிவிட்டாள். நானும் ஒன்றிவிட்டேன். அவள் பாம்பு காண்டத்திலிருந்து மீண்டு விட்டாள் என்ற மகிழ்ச்சித் திளைப்பில் நானிருந்தாலும் அந்த மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்லை.

குழந்தையின் பிறந்ததினத்திற்கு என்னுடைய நண்பனையும் அழைத்திருந்தேன். அவன் பல்கலைக்கழகத்திலே விலங்கியல் விரிவுரையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தான். வண்ணவணணமாகச் செய்யப்பட்ட பிறந்தநாள் கேக்கை சுற்றிச் சுற்றி அவன் வலம் வந்து கொண்டிருக்கவே ‘நீ குட்டிபோட்ட பூனையா?’ என்று கேட்டேன் நான்.

“கேக் மிகமிக அழகாத்தான் இருக்கிறது”

“நன்றி”

“கேக்கை நீ நன்றாக அவதானித்தாயா?”

‘குழந்தையின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. நஜாநஜா வேறென்ன?’

‘சொல்கிறேனென்று கோபித்துக் கொள்ளாதே, எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் கேக்கின் வடிவம் நாகப்பாம்பின் தலையைப் போலிருக்கிறது. அதுதான் சுற்றிச் சுற்றிப் பார்த்தேன்’ என்றான் நண்பன். என் முகம் போனபோக்கைக் பார்க்கவேண்டுமே எட்டுக்கோணலாக.

‘குழந்தையின் பெயர் நஜாநஜா தானே’

“அதுதான் கேக்மீது அழகாகப் போடப்பட்டிருந்ததே?”

“யார் இந்தப் பெயரை வைத்தது?”

“மனைவி தான் இந்தப் பெயரைத் தெரிவுசெய்து தந்தாள். அழகாக இருந்தது. நானும் ஒத்துக்கொண்டேன்” என்றேன் நான்.

என்னை ஒதுக்குப்புறத்திற்கு அழைத்துச் சென்ற நண்பன், ‘என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளாதே உன் மனைவியிடம் ஏதோவொரு கோளாறு இருக்கிறது. நல்ல டாக்டர் ஒருவரிடம் காட்டி சரி செய்துகொள்வது நல்லது’ என்றான் கிசுகிசுத்த குரலில். நான் முகம் கறுத்துப் போனவனாக அவனைப் பார்த்தேன்.

‘ஏன் அவள் ஏதும் தவறு செய்துவிட்டாளா? உன்னை நன்றாக உபசரிக்கவில்லையா?’

“அப்படியொன்றுமல்ல, நஜாநஜா என்பது நாகபாம்பின் விஞ்ஞானப்பெயர். கேக்குக்கூட நாகபாம்பு வடிவத்தில் இருக்கிறது. எனக்கென்றால் இந்த இரண்டிற்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல் தோன்றுகிறது” என்றான் அவன்.

அன்றிரவு எனக்கு தூக்கமே வரவில்லை. நடுநசியில் படுக்கையை விட்டெழுந்து வீட்டுச் சாமான்களைத் தாறுமாறாக அங்குமிங்கும் வீசியெறிந்த நான் அலங்கார பூச்சாடிகளையெல்லாம் கீழேபோட்டு உடைத்தேன்; கதவுகள் மீது முஷ்டிகளால் தாக்கினேன்.

தூக்கக் கலக்கத்தில் எழுந்த மனைவி ‘இங்கே என்ன நடக்கிறது? உங்களுக்கு பைத்தியமா பிடித்துவிட்டது?’ என்று கேட்டாள். உன்னைப் பாம்புப் பிசாசு பிடித்து ஆட்டுகிறது, என்னைப் பைத்தியம் பிடித்து ஆட்டுகிறது’ என்றேன் நான் கோபத்துடன்.

‘எனக்கென்றால் நீங்கள் பேசுவது ஒன்றும் புரியவேயில்லை’

“எதற்காக பிறந்தநாள் கேக்கை நாகபாம்பு வடிவத்தில் செய்தாய்? என்று என் நண்பன் கேட்கிறான். நான் எப்படி கூனிக்குறுகி அவமானப்போட்டு போனேன் தெரியுமா?”

“நீங்கள் ஏதேதோ வீணான கற்பனையில் பிதற்றுகிறீர்கள். நன்றாகப் பார்த்தீர்களா? அது ஓர்கிட்மலர் வடிவத்தில் இருக்கிறது. என்னுடைய தோழிகள் எல்லோரும் பெருமையாக என்னைப் பாராட்டினார்கள். உங்கள் நண்பருக்கு அப்படித் தோன்றியதற்கு நான் என்ன செய்யமுடியும்?”

“சரி அப்படியே இருந்து விட்டுப்போகட்டும், குழந்தைக்கு ஏன் நாகப்பாம்பின் பெயரைத் தெரிவு செய்துகொண்டு வந்தாய்?”

“என்ன உளறுகிறீர்கள்?”

“நான் உளறுகிறேனா? என்னிடம் நாடகமாடாதே, நஜாநஜா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? நாகபாம்பு’’

“எனக்கு இந்த அர்த்தமெல்லாம் நிச்சயமாகத் தெரியாது. இந்தப் பெயரை வைக்கச் சொன்னதே எங்கள் வீட்டிற்கு வந்த உங்கள் அரேபிய நண்பர் தான். நீங்களும் அதற்குச் சரியென்று தலையாட்டினீர்கள். இப்பொது என்னவென்றால் நடந்தது எல்லாவற்றையும் சுத்தமாக மறந்துவீட்டீர்கள்;’’ என்றாள் மனைவி.

அவள் எவ்வளவுதான் சொன்னாலும் இவளின் சாக்குப் போக்கை ஏற்றுக்கொள்ள நான் முட்டாள் அல்ல. அன்றைய இரவு எங்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட விரிசல் வாழ்க்கை அத்திவாரத்தையே தகர்ப்பதற்காக போடப்பட்ட அடித்தளம் என்று நான் திடமாக நம்பினேன். இன்னும் அவிழ்க்க முடியாத என்னென்ன முடிச்சுக்களை இவள் புதைத்;து வைத்திருக்கிறாளோ? குழந்தை வளரவளர விளையாட்டுச் சாமான்கள் என்ற தோரணையில் பாம்புப் பொம்மைகளை வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தாள் மனைவி.

நான் வாங்கிக்கொடுத்த கரடிப் பொம்iமைகளையும், பார்பிப் பொம்மைகளையும் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறிந்த சிறுமி பாம்புப் பொம்மை என்றால் விரும்பி விளையாடினாள். என் குழந்தையையும் நீ கெடுத்துவிட்டாய் என்று மனைவியை கடிந்தேன். எல்லாம் ஒருநாள் முடிவுக்கு வரும் என்று சொல்வதைப்போல் எல்லாம் ஒருநாள் முடிவுக்கு வந்தது. நான் கதையை நிறுத்திவிட்டு பெண்மணியைப் பார்த்தேன். அவள் கண்களை மூடியிருந்தாள். தூங்கிவிட்டாளா?

“பெண்மணி” என்று நான் மெதுவாக அழைக்க “நான் தூங்கவில்லை. உங்கள் கதையை அட்சரம் பிசகாமல் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். அலுப்பாக இருந்தால் பக்கத்தில் நீரோடை இருக்கிறது. போய் நீராடிவிட்டு வாருங்கள்” என்றாள் பெண்மணி.

‘நீங்கள் சொல்வதும் நல்ல யோசனைதான். உடம்பிற்கும் மனதிற்கும் உற்சாகமாகவும் இருக்கும்…’ என்று நான் சொல்ல ஆமாம் ஆமாம் என்று தலையாட்டியவள் ‘உடம்பில் புத்துணர்ச்சி ஏற்பட்டால் எல்லாக் கவலைகளும் பறந்துவிடும்’ என்றாள்.

‘நீரோடை எந்தப் பக்கம் இருக்கிறது?’

“சூரியனின் திசையைப் பார்த்துக் கொண்டே செல்லுங்கள். இருநூறுமீற்றர் தூரம் போனால் கற்பாறை வரும். அந்தக் கற்பாறைக்கு பாம்புக் கற்பாறை என்று பெயர். அந்தக் கற்பாறையோடு ஒட்டினாற்போல் நீரோடையைக் காணலாம்’ என்றாள் பெண்மணி.

இது என்னடா, மீண்டும் பாம்பா? காலைச் சுற்றிய பாம்பு உன்னைக் கடிக்காமல் செல்ல மாட்டேன் என்று அடம்பிடிப்பது போல் எனக்குத் தோன்றிற்று. பாம்புக் கற்பாறைக்கருகில் இருந்த நாகமரத்திற்குக் கீழே நாவற் பழங்கள் சிதறிக் கிடந்தன. பாடசாலைப் பிராயத்தில் நண்பர்களோடு சேர்ந்து நாவற்பழங்கள் சாப்பிட்ட ஞாபகத்தோடு நாவற்பழங்களைப் பொறுக்க ஆரம்பித்தேன். பெண்மணிக்காகவும் கொஞ்சம் பழங்களைச் சேகரித்துக் கொண்டேன்.

நான் கொடுத்த நாவற்பழங்களை பெண்மணி மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.

‘எனக்கு நாவற்பழங்கள் மீது அவ்வளவாக விருப்பம் கிடையாது. நீங்கள் அன்புடன் தருவதால் நான் சாப்பிடுகிறேன்’ என்றாள் பெண்மணி.

‘நீங்கள் சொல்வதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை’

‘வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டுமென்றால் எல்லாச் சின்ன விஷயங்களுக்கும் அர்த்தம் தேடிக்கொண்டிருக்கக் கூடாது. சின்னச்சின்ன முட்டாள்தனங்களையும் செய்யவேண்டும். அவைகளை ரசிக்கக் கற்றுக்கொள்ளவும் வேண்டும்’

‘முட்டாள் என்று சொல்லமாட்டார்களா?’

‘இப்போது நான் உங்கள் வாழ்க்கைக் கதைக்கு காதுகொடுத்துக் கொண்டிருக்கிறேனே. அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று யோசித்துப் பார்த்தீர்களா? உங்கள் கதையை என்னிடம் சொல்வதன் மூலம் நீங்கள் சந்தோஷமடைகிறீர்கள் என்றால் அந்த முட்டாள்தனத்தை நான் மனசார செய்ய விரும்புகிறேன்’ என்றாள் பெண்மணி.

“அப்படியென்றால் கதை சொல்வதை நிறுத்திவிடவா?”

‘இல்லையில்லை. அப்படி அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டாம். நீங்கள் சொல்லுங்கள். நான் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருக்கிறேன்’

“நன்றி, எங்கே நிறுத்தினேன்? திருப்பத்தில்… அந்தத் திருப்பம் என்னவென்றால் நான் வீட்டுக்கு பேயோட்டியை அழைத்துவந்தேன்”

“ஓ! நல்லதொரு திருப்பம் தான். அதுசரி எதற்காகப் பேயோட்டி?”

“நான் டாக்டர்களை மலைபோல் நம்பினாலும் அவர்களால் என் மனைவியின் நோயைக் கண்டுபிடிக்கத் தெரியவில்லை. அதனால்தான் பேயோட்டியை கூட்டிக்கொண்டு வந்து மனைவியைப் பீடித்துள்ள பாம்புப் பேயை ஓட்டநினைத்தேன்”

“ம்.. மேலே சொல்லுங்கள்”

“பேயோட்டி சரியான கெட்டிக்காரன். என் மனைவிக்கு என்ன நடந்தது என்பதை அவன்தான் சரியாக கண்டுபிடித்துச் சொன்னான்”

“என்ன நடந்தது?”

“என் மனைவி அவளுடைய தாயாரின் வயிற்றில் குழந்தையாக இருக்கும்போது தாயார் விறகு வெட்ட காட்டிற்கு தனியாகப் போயிருக்கிறாள். போகின்ற வழியிலே தற்செயலாக அவள் ஒருநாகத்தை மிதிக்க அது அவளைத் தீண்டியிருக்கிறது. அவள் உயிர்பிழைத்து விட்டாள். நாகப்பாம்பை ஊரார் அடித்துக் கொன்றிருக்கிறார்கள். இறந்த நாகத்தின் ஆவிதான் என் மனைவியின் உடலில் புகுந்து படாதபாடுபடுத்தியது”

“மிகவும் சுவையான கதை”

“பேயோட்டி மந்திரங்களை உச்சாடனம் செய்து மனைவியின் உடம்பில் புகுந்திருந்த நாக பாம்புப்பேயை எப்படியோ ஓட்டிவிட்டான். அதற்குப் பிறகு மனiவி பாம்பைப் பற்றி பேசாததால் நானும் மகிழ்சியாக இருந்தேன்; மனைவியும் சந்தோஷமாக இருந்தாள்; என்மகளும் சந்தோஷமாக இருந்தாள்”

நான் கதையைச் சற்றுநேரம் நிறுத்தினேன். காரணம் பெண்மணி எனக்கு கோப்பி போட்டுக்கொண்டு வந்தாள். நறுமணத்துடன் சூடாக ஆவிபறக்கும் கோப்பி. கொஞ்சம் கசப்பு கலந்திருத்தாலும் அது கமகமவென்று சுவையாக இருந்தது. எனக்குப் பிடித்தமான பானம்.

“ஆஹh கமகமவென்று இருக்கிறது. என்னுடைய விருப்பங்களை அறிந்துகொண்ட மிகச்சிறந்த பெண்மணி நீங்கள்” என்றேன். அவள் பதில் பேசவில்லை. நான் கொண்டுவந்த பெட்டியைத் திறந்தேன்.

‘இது என்ன பெட்டி?’ என்று பெண்மணி ஆச்சரியத்துடன் கேட்க நான் காட்டினேன். கடிதங்கள், தஸ்தாவேஜுகள், ஓவியங்கள், ஆவணங்கள், புகைப்படங்கள், பொம்மைகள் என்று பெட்டி நிறையைச் சாமான்கள்.

“இவையெல்லாம் என்ன?”

“என்னுடைய மனைவியின் நடத்தையை நிரூபிப்பதற்காகக் கொண்டுவந்த ஆதாரங்கள் தான் இவைகள்”

“அடக் கடவுளே, உங்கள் மனைவி தந்த பரிசுப் பொருட்கள் என்றல்லவா நான் நினைத்தேன்”

“அவற்றையெல்லாம் தூக்கியெறிந்து விட்டேன்”

“ஏன்?”

“என் மனைவியின் ஞாபகங்கள் அத்தனையையும் என் உள்ளத்திலிருந்து முற்றாகத் துடைத்து விட்டேன். அதன்பிறகு எதற்கு பரிசுப்பொருட்கள்?”

‘ திருமண போட்டோ கூடவா இல்லை?’

‘அதனையும் எரித்து விட்டேன்’

‘கணவன் என்பதற்கு அச்சொட்டான வரைவிலக்கணம் நீங்கள்’ என்று பெண்மணி சிரிக்க நானும் சிரித்துக் கொண்டே பெட்டிக்குள்ளிலிருந்த கடதாசியை அவளிடம் நீட்டினேன். ஓர் அழகான பூரண நிலவு. அந்த நிலவுக்குள் சிரித்தவாறே நான். நிலவை விழுங்குவதற்காக ஆவென வாயைப் பிளந்தவாறு கர்ணகடூர முகமுள்ள சர்ப்பம் காத்திருக்கிறது. அது என் மனைவி. முப்பது வருடங்களுக்கு முன் நான் வரைந்த ஓவியம்.

‘பெண்மணியேஇ இந்த ஓவியத்தைப் பார்த்தீர்களா? இப்படித் தான் அப்போது என் நிலைமை இருந்தது’

பெண்மணி இமைவெட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். ஆழமான அமைதி. கதை, பேச்சு எதுவுமே இல்லை. நான் கதையைத் தொடர்ந்தேன்.

‘எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பு வைப்பதைப் போல் ஜனவரி முதலாந் திகதி புத்தாண்டு தினத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது இரண்டாவது குழந்தை பிறந்து சரியாக ஆறுமாதம். நான் தின்பண்டப் பொதிகளைச் சுமந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவேளை மனைவி டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘என்ன படம்?’ என்று நான் கேட்டேன்.

‘புரபஷர் அனகொண்டா. அற்புதமான திரைக்கதை, பேராசிரியரால் கொல்லப்பட்ட மலைப் பாம்பு ஆவியாகி பேராசிரியரின் உடலிற்குள் புகுந்து கொண்டு ஆட்டிப் படைக்கும் கதை’

‘இந்த நல்ல நாளில் இப்படியொரு சினிமா தேவைதானா?’

’உங்களுக்கு விருப்பமில்லையென்றால் பார்க்காதீர்கள்’

‘மூத்தவன் எங்கே?’

‘விளையாடப் போய்விட்டான்’

‘குழந்தை?’

‘படுக்கையறைக்குள் பொம்மைகளொடு விளையாடுகிறது’ என்றாள் மனைவி.

நான் படுக்கையறைக்குள் நுழைந்தபோது கண்டேன் காட்சி, குழந்தை மூர்ச்சையாகிக் கிடந்தது. பொம்மை ஒருபுறம் கிடக்க, மூலையிலே பாம்பு சுருண்டு படுத்திருந்தது. குழந்தை உயிர் பிழைக்கவும் முடியும், இறந்துபோகவும் முடியும் ஐம்பதுக்கு ஐம்பது என்று டாக்டர் பயமுறுத்தி குழந்தை எப்படியோ உயிர் பிழைத்தாலும் என் ரௌங்காரம் கட்டுமீறியது.

டீவிடி பிளேயர், தொலைக்காட்சிப் பெட்டி, வரவேற்பறை அலங்காரச் சாமான்கள் என்று எல்லாவற்றையும் நிலத்திலே தூக்கி அடித்த நான் ‘பாம்புபாம்பு என்று பாலூட்டி வளர்த்தாயேää பார்த்தாயா பாம்பினால் நேர்ந்த கொடுமை….’ என்று ஏதோதோ பேசிக்கொண்டே போனேன். அவளும் ஏதோ பேசிக்கொண்டே போனாள். அவள் சொல்வதையெல்லாம் கேட்கின்ற நிலைமையில் இருக்காமல் நிதானமிழந்த நான் அவளுடைய கன்னத்திலே பளாரென்று அறைந்தேன்; அடித்தேன். அவள் கீழே விழுந்தாள்.

அப்போதும் கைகள் வலிக்கும்வரை அடித்துக் கொண்டேயிருந்தேன். மனைவியின் உதடுகள், கன்னங்கள் வீங்கின. முரசிலிருந்து இரத்தம் கசிந்தது. மேனிமுழுவதும் கண்டல்காயங்கள். அவள் கதறினாள்; கதறினாள்; கதறிக்கொண்டேயிருந்தாள். அப்போதும் என் சினம் தணியவேயில்லை.

கதையை நிறுத்தி ‘கதை முடிந்துவிட்டது’ என்றேன் நான்.

‘என்ன திடுதிடுப்பென்று கதையை முடித்துவிட்டீர்கள். இன்னும் எவ்வளவோ சொல்ல வேண்டியிருக்கிறதே’ என்றாள் பெண்மணி.

‘இல்லை கதை இவ்வளவுதான். இதற்குமேலே வரும் சரிதம் வெறும் விவாகரத்துப் படலம் தான். எந்தச் சுவையும் இருக்காது’

‘…….’

‘நான் அவளை அடித்தது நூற்றுக்கு நூறு சரிதானே’

‘கதை கேட்பதுதான் என் தொழில், தீர்ப்புச் சொல்லுவதல்ல. ஆனால் நியாயம் சொல்லுவேன். அதற்கு இயற்கை நீதிக் கோட்பாடொன்று இருக்கிறது. அதன் படி மற்றப் பக்கத்து நியாயங்களையும் கேட்க வேண்டும். அது பிசாசாக இருந்தாலும் சரியே’

‘அவள் தான் இங்கு இல்லையே’

‘உங்கள் மனைவி சார்பாக நான் உங்களிடம் கொஞ்சம் கேள்விகள் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள், ஒரு நிபந்தனை. ஒளிவுமறைவு இல்லாமல் பதில்கூறவேண்டும்’

‘கேளுங்கள்’

‘உங்கள் மனைவி எப்போதாவது பாம்பு வளர்த்திருக்கிறாளா?’

‘இல்லை’

‘பாம்புக்கு பாலூட்டியிருக்கிறாளா?’

‘இல்லை’

‘அவள் பாம்புடன் குழந்தையை விளையாடச் சொன்னாளா?’

‘இல்லை’

‘உங்கள் வீட்டுக்கு எப்போதாவது அவளுடைய பாம்பு வந்திருக்கிறதா?’

‘இல்லை’

‘அப்படியானால் பாம்பு குழந்தையைத் தீண்டியதற்கும் உங்கள் மனைவிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’

‘ஆமாம்’

‘உங்கள் மனைவி விரும்பி அருந்தும் பானம் எது என்று தெரியுமா?’

‘தெரியாது’

‘உங்கள் மனைவிக்கு விருப்பான ஆடை எது என்று தெரியுமh?’

‘தெரியாது’

‘உங்கள் மனைவி எந்தக் கடையில் காலணி வாங்குவாள் என்று தெரியுமா?’

‘தெரியாது’

‘சரி போகட்டும். உங்கள் மனைவி காலை எத்தனை மணிக்கு படுக்கையை விட்டு எழுவாள் என்ற விஷயம் தெரியுமா?’

‘தெரியாது’

‘எத்தனை வருடங்கள் அவளோடு வாழ்ந்தீர்கள்?’

‘பத்து வருடங்கள்’

‘இத்தனை வருடங்களும் நீங்கள் உங்கள் மனைவியைப் புரிந்துகொள்ள அவளுடைய விருப்பங்களை, ஆசைகளைப் புரிந்துகொள்ள ஏன் முயற்சி செய்யவில்லை?’

‘மனைவி என்பவள்தான் கணவனுடைய விருப்பங்களைப் புரிந்துகொண்டு அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும்’

‘இப்படி யார் சொன்னது?’

‘பரம்பரை பரம்பரையாக நாங்கள் பின்பற்றி வருகின்ற வாழ்கைநெறி’

‘சரி நீங்கள் சொல்வது சரியனெ;றே வைத்துக் கொள்வோம். அவள் அப்படி உங்கள் விருப்பங்களைப் புரிந்து கொண்டு நடந்தாளா?’

‘நிச்சயமாக நீங்கள் போட்டுத் தந்தீர்களே சுவையான காப்பி. அது மாதிரி போட்டுத் தருவாள். எந்தெந்த நாட்களில் என்னென்ன ஆடைகளை நான் அணிவேன் என்று அவளுக்குத் தெரியும். அதன்படியே ஆடைகளைத் தயார் செய்வாள். காலை ஆகாரம் சமைப்பாள். சப்பாத்துக்கு பொலிஷ் போட்டுத் தருவாள்..’ என்று அடுக்கிக் கொண்டே போனேன் நான்.

‘அவள் உங்கள் வேலைக்காரி மாதிரி இருந்தாள்.

‘ஓரளவுக்கு அப்படியென்றும் சொல்லலாம். மற்ற மனைவிமார்களுக்கு ஆதர்ஷமாக அவள் நடந்து கொண்டாள்’

‘எஜமானாகிய நீங்கள் வேலைக்காரிக்கு கூலி கொடுப்பதைப்பற்றி எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?’

‘விகடமாகப் பேசாதீர்கள். கணவன் மரணமடைந்தபின் எல்லாச் சொத்துக்களும் மனைவிக்குத் தானே போய்ச் சேரப்போகிறது’

‘நீங்கள் மரணமடையும் வரை அவள் கூலிக்காகக் காத்திருந்து அதற்குப் பிறகுதான் அவள் வாழ்க்கையே ஆரம்பமாகப் போகிறது’

‘அவள் ஜாலியாக வாழட்டுமே யார் கேட்கப் போகிறார்கள்?’

‘ஓஹோ..கிழவியான பின் ஜாலியான வாழ்க்கை?’

‘….’

‘உங்கள் மனைவி பைத்தியக்காரியா?’

‘இல்லையில்லை’

‘பைத்தியக்காரி மாதிரி நடந்து கொண்டிருக்கிறாளா?’

‘உங்கள் கேள்வியின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை’

‘அதாவது வீட்டுச் சாமான்களை வீசி எறிந்திருக்கிறாளா? உடைத்திருக்கிறாளா? முகம் பார்க்கும் கண்ணாடியை நிலத்தில் போட்டு அடித்திருக்கிறாளா? வீட்டுக் கதவுகளை ஓங்கி உதைத்திருக்கிறாளா? சாப்பாட்டுப் பீங்கானை நாய்க்குப் போட்டிருக்கிறாளா?’

‘இல்லை, இல்லவேயில்லை’

‘நீங்கள் அத்தனை கைங்கரியங்களையும் செய்திருக்கிறீர்கள்’

‘………..’

‘சரி.. அடுத்த வினா. நீங்கள் செய்த தவறுக்காக மனைவி உங்கள் கன்னத்தில் அறைந்தால் அச்செயலை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வீர்கள்?’

‘மனைவி கணவனை அடிப்பதா? எவ்வளவு பாரதூரமான குற்றம்! அன்றைக்கே அவளை நீதிமன்றக் கூண்டிலேற்றி விவாகரத்து கேட்டிருப்பேன்’

‘முரட்டுத்தனமாக நீங்கள் மனைவியைத் தாக்குவது மட்டும் எவ்வாறு நீதியாகும்? அவளுடைய பல்லையும் உடைத்திருக்கிறீர்கள். குற்றவியல் கோவையின் படி இது குற்றம். உங்கள் மனைவி உங்களுக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு செய்தாளா?’

‘இப்படி இடக்கு முடக்காகக் கேட்டால் என்னபதில் சொல்வது? மனைவிமார்களைத் திருத்துவதற்காக கணவன்மார்கள் பின்பற்றி வந்த வழிமுறைதான் இது. நான் அவளை அடித்துவிட்டு சும்மா இருந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? டாக்டரிடம் அவளை அழைத்துச் சென்றேன். காயங்களுக்கு மருந்திட்டேன். அவளுடைய மேனிக்கு ஒத்தடம் போட்டேன்’

‘காயங்களுக்கு மருந்திட்டீர்கள் சரி. உள்ளத்தில் ஏற்பட்ட காயத்திற்கு உங்களால் சிகிச்சையளிக்க முடிந்ததா?’

பெண்மணி பைண்டு செய்யப்பட்ட பைலை என் முன்னாலே போட்டாள்.

‘முடியுமானால் படித்துப் பாருங்கள். உங்களுடைய வியாதி சம்பந்தமான தஸ்தாவேஜ்கள். எப்போதும் மனைவியை சந்தேகப்பட்டுக் கொண்டே இருக்கும் வியாதி. மனைவிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணக் கருவிலேயே உங்கள் வாழ்க்கை முழுவதும் கழிந்தது. உங்கள் மனைவி உங்களைப் பல தடவை உளவியல் நிபுணரிடம் கொண்டு போயிருக்கிறாள். ஆனால் கடைசிவரை உங்களைக் குணமாக்க முடியாமலேயே போய்விட்டது’ என்றாள் பெண்மணி; உண்மைதான் பேசினாள். நான் பேசாமல் இருந்தேன்.

‘நீங்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது அவளை மனுஷியாக நடத்தியிருக்கிறீர்களா?’

‘……….’

‘இல்லை என்பதுதானே பதில்’

‘ஆமாம், என் மனைவி நல்ல பெண்மணி. அவள் அன்பைச் சொரிந்தாள். நான்தான் முரண்டு பிடிக்கும் முரட்டுக் கணவனாக நடந்திருக்கிறேன். இப்போதே செல்கிறேன். நடந்தவை எல்லாவற்றிக்குமாக நான் அவளிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்’ என்றேன் நான் தழுததழுத்த குரலில்.

‘இன்று எத்தனை தடவை உங்கள் மனைவி நல்ல பெண்மணி என்று சொல்லியிருக்கிறீர்கள். வாழ்கையில் ஒரு தடவையாவது இதனை உங்கள் மனைவியிடம் சொல்லியிருந்தால் அவள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள்’ என்று சொன்ன பெண்மணி ஆரஞ்சுநிறமான ஒரு பெட்டியைத் திறந்தாள்.

பெட்டி நிறைய பரிசுப் பொருட்கள். அத்தனை பரிசுப் பொருட்களையும் அவள் மேசை மீது கொட்டினாள். அழகான கைக்கடிகாரம், மெஜண்டாநிற குதிக்காலணி; இரட்டை ரோஜா பதித்த மோதிரம், முயல் வடிவத்திலமைந்த கொண்டைஊசி, இரட்டைவட்ட வளையல், இத்தியாதி,இத்தியாதி.

‘இந்தப் பரிசுப் பொருட்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?’

‘நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக இருந்த நாட்களில் மனைவிக்குப் பரிசாகக் கொடுத்த அன்பளிப்புப் பொருட்கள்’

‘நீங்கள் இலகுவாக அவளுடைய ஞாபகங்களை உங்கள் உள்ளத்திலிருந்து துடைத்தெறிந்து விட்டீர்கள். அவள் அன்பளிப்பாகத் தந்தவைகளையும் எரித்துப் பொசுக்கி விட்டீர்கள். உங்கள்; மனைவியோ இத்தனை வருடங்கள் கழிந்தபின்னரும் உங்கள் ஞாபகமாகவே வாழ்கிறாள். உங்களுக்காகவே வாழ்கிறாள்’

‘நான் இப்போதே பார்க்க வேண்டும், கதறிக்கதறி அழவேண்டும், அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று தழுதழுத்த குரலில் கூறினேன் நான்.

‘எல்லாமே முடிந்து விட்டது. நீங்கள் அவளை விவாகரத்துச் செய்து முப்பது வருடங்களாகி விட்டன. அவள் எப்போதோ உள்ளத்தால் செத்துவிட்டாள்’ என்று சொன்ன பெண்மணி விசும்பினாள்.

‘அதற்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?’ என்று நான் ஆச்சரியத்துடன் கேட்க “நான்தான் உங்கள் மனைவி’ என்று சொன்னாள் பெண்மணி.

– சொர்க்கபுரிச் சங்கதி சிறுகதைத் தொகுதியில் இக்கதை உண்டு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *