கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2013
பார்வையிட்டோர்: 10,502 
 

Хороший конец : நல்ல முடிவு
மூலம் : அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி

ல்யுபோவ் க்ரிகோரியேவ்னா , சொல்லக்கூடிய அளவுக்கு, சற்றே கொழுகொழுப்பான பெண்மணி, நாற்பதைத் தொட்டிருப்பவர், திருமண ஏற்பாட்டாளர், அது மட்டுமல்லாது காதும்காதும் வைத்தது போல சொல்லக் கூடிய பல வேலைகளைச் செய்பவர். தற்போது ஸ்டைட்ச்கின், ரயில்வே தலைமைக் காவலர், விடுமுறையில் இருக்கும் ஒரு நாளில் அவரைக் காண வந்திருந்தாள். ஸ்டைட்ச்கின், ஓரளவுக்குப் பரபரப்பாக, ஆனால், எப்போதும் இருப்பது போல இறுக்கமான முகத்துடன் சுருட்டைப் புகைத்தவாறே அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தார்.

“உங்களைப் பார்த்ததில ரொம்ப மகிழ்ச்சி. செம்யோன் இவநோவித்ச் தான் உங்களைப் பார்க்கச் சொன்னார். என்னோட வாழ்க்கையில சந்தோசத்தைக் கெடுக்கிற ஒரு முக்கியமான தடங்கலைப் போக்குறதுக்கு நீங்க உதவி செய்வீங்கன்னு சொன்னார். இங்க பாருங்க ,ல்யுபோவ் க்ரிகோரியேவ்னா, எனக்கு ஐம்பது வயசாகுது. இந்த வயசில எல்லாருக்கும் வளர்ந்த குழந்தைங்க இருக்கும், என்னுடைய நிலைமை இப்ப பாதுகாப்பானது. இருந்தாலும், எனக்குன்னு ஒரு மனைவியும் குழந்தைகளும் வேணும்னு நான் நினைக்கிறேன். நான் உங்க கிட்ட என்ன சொல்றேன்னா எனக்குப் போதுமான அளவுக்கு சம்பளம் வருது, அதோடல்லாமல் என் வாழும் முறையால கொஞ்சம் பணத்தை வங்கியில போட்டும் வச்சிருக்கேன். நான் எதார்த்தமான அமைதியான மனிதன். கட்டுப் பாடான வாழ்க்கையை வாழ்ந்திட்டு வர்றேன். என் வாழ்க்கை மத்தவங்களுக்கு எடுத்துக்காட்டு போல இருக்கு.

“ஆனால், எனக்கிருக்கிற குறை என்னன்னா, எனக்குன்னு ஒரு வாழ்க்கைத் துணை இல்லை, ஒரு குடும்ப வாழ்க்கை இல்லை. எதோ அகதியாட்டம் திரியறேன், எந்த நிம்மதியும் இல்லாமல் நாடோடியைப் போல ஒவ்வொரு இடமாப் போறேன். எனக்குன்னு ஆறுதல் கூற யாரும் இல்லை. எனக்கு உடம்பு சரியில்லைன்னா, தண்ணி கொடுக்கக் கூட ஆள் இல்லை, இப்படியே சொல்லிக் கொண்டு போலாம். இதை எல்லாம் விட, ல்யுபோவ் க்ரிகோரியேவ்னா, கல்யாணமான ஆண்களுக்கு சமுதாயத்தில இருக்கிற மரியாதை பிரம்மச்சாரிங்களுக்குக் கிடையாது. நான் படிச்சவன், பணம் இருக்கு, ஆனால் ஒரு விதத்தில என்னைப் பாருங்க, நான் யார்? சொந்த பந்தங்கள் இல்லாத மனிதன். போலிஷ் சன்னியாசிகளைக் காட்டிலும் பரவாயில்லாமல் இருக்கேன். அதனாலதான் நான் திருமண வாழ்க்கையில நுழைஞ்சிரலாமுன்னு இருக்கேன். அதாவது தகுந்த பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் செஞ்சுக்கலாமுன்னு.”

“நல்ல செய்தி தான்”, பெருமூச்சுடன் திருமண ஏற்பாட்டாளர் சொன்னாள்.

“நான் தனியானவன். இந்த நகரத்தில எனக்கு யாரையும் தெரியாது. இங்கிருக்கிற எல்லாருமே எனக்குப் புதியவங்க, நான் எங்க போறது, யார் கிட்டக் கேட்கிறது ? அதனால தான் செம்யோன் இவநோவித்ச், மத்தவங்களுக்குச் சந்தோசம் தரக்கூடிய இந்த வேலையில இருக்கிற உங்களைப் பார்க்க ஆலோசனை சொன்னார். அதனாலதான், ல்யுபோவ் க்ரிகோரியேவ்னா, என்னோட வருங்கால வாழ்க்கையைச் சரி செய்யறதுக்கு , உங்க உதவி வேணும்னு ரொம்ப வேண்டிக்கிறேன். இந்த நகரத்தில இருக்கிற கல்யாணம் பண்ணிக்கிற மாதிரியான நிறையப் பெண்களை உங்களுக்குத் தெரியும், எனக்கு உதவி செய்யறது உங்களுக்கு சுலபமா இருக்கும்னு நினைக்கிறேன்.”

“என்னால முடியும்…….”

“கொஞ்சம் வைன் சாப்பிடுறீங்களா?”

பழக்கப்பட்டவள் ஆனதால் குவளையை உயர்த்தி வாயருகே கொண்டு சென்று கண் இமைக்காமல் ஒரே மடக்கில் குடித்தால்.

“என்னால முடியும்,”, திரும்பவும் சொன்னாள், “எந்த மாதிரிப் பொண்ணு உங்களுக்குப் பிடிக்கும், நிகோலாய் நிகொலயித்ச்?”

“எனக்குப் பிடிக்கனுமா? பொண்ணோட விதி என்கிட்ட அனுப்புது.”

“சரி, அது உங்க விதிப் படி ஆகட்டும், ஆனால் ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருப்பம் இருக்கும் உங்களுக்கே தெரியும். ஒரு சிலருக்குக் கருப்பு பிடிக்கும் ஒரு சிலருக்கு சிவப்பான பொண்ணு பிடிக்கும். ”

“பாருங்க, ல்யுபோவ் க்ரிகோரியேவ்னா,” ஸ்டைட்ச்கின், பெருமூச்சுடன் அமைதியாகச் சொன்னார், “நான் வந்து எதார்த்தமானவன், என்னைப் பொறுத்த அளவுக்கு அழகு வெளித்தோற்றம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். உங்களுக்கே தெரியும் அழகுங்கிறது குவளையோ தட்டோ அல்ல, அழகான மனைவி பல நேரங்களில ஆயாசத்தைத் தான் கொடுப்பாள். நான் ஒரு பொண்ணை என்ன கண்ணோட்டத்துடன் பார்க்கிறேன்னா , வெளியில எப்படித் தெரிகிறாள் அப்படீன்னு இல்லை, அவள் மனசுல எப்படி இருக்கிறாள் அப்படீன்னு தான். அவளுக்குன்னு ஒரு மனசு அப்புறம் சகல தகுதிகளும். இன்னும் கொஞ்சம் வைன்…. ஒத்துக் கொள்ளக் கூடியது தான், ஒருத்தனுடைய மனைவி கொழுக்குன்னு இருக்க வேண்டியது தான். ஆனால் ரெண்டு பேரின் சந்தோசத்துக்கு அதுமட்டும் போதாது , அறிவும் முக்கியம். உள்ளதைச் சொன்னா, ஒரு பொண்ணுக்கு அறிவு தேவை இல்லை, இருந்துதுன்னா தன்னைப் பற்றி அவள் பெருமைப் பட்டுக் கொண்டே இருப்பாள். எல்லா வகையான யோசனையையும் மண்டைக்குள்ள வச்சுக்குவா. படிக்காமல் இந்தக் காலத்தில இருக்க முடியாது, உண்மைதான், ஆனால் படிப்புங்கிறது வேற. பெருமைதான், மனைவி பிரெஞ்சு பேசுறாள், ஜேர்மன் பேசுறாள் அப்படீங்கறது, ரொம்பப் பெருமை. ஆனால் அதுல என்ன பிரயோசனம் சட்டைக்கு பட்டன் வைக்கத் தெரியலைன்னா? நான் படிச்சவன், உங்களோட இங்க இருக்கிற மாதிரித்தான், இளவரசன் கனிதேளின் வந்தாலும் இருப்பேன்.
என்னோட பழக்க வழக்கங்க எல்லாம் சாதாரணமானது. நான் விரும்பறது எல்லாம் ஒரு சாதாரணப் பொண்ணைத் தான் , பேரழகியை அல்ல. அதை எல்லாம் விட அவள் என்னை மதிக்கணும், அதே மாதிரி அவளை நான் சந்தோசமா வச்சுக்கணும்.”

“நிச்சயமா.”

“சரி, இப்ப முக்கியமானது என்னன்னா… எனக்குப் பணக்காரப் பொண்ணுங்க வேண்டாம். பணத்துக்கு ஆசைப் பட்டு கட்டிக்கிற அளவுக்கு நான் மோசமானவன் இல்லை. வீட்டோட மாப்பிள்ளையா இருக்க விருப்பம் இல்லை. அவளைக் கண்கலங்காம வச்சுக்கணும், அதை அவள் உணரனும். ஆனால் ஏழைப் பொண்ணும் எனக்கு வேண்டாம். நான் ஒன்னும் தியாகி அல்ல, வாழ்க்கை கொடுக்கிறதுக்கு. அதனால ஏழைப் பொண்ணை ஏத்துக்க முடியாது. உங்களுக்கே தெரியும் விலை வாசி எல்லாம் ஏறிப் போச்சு, பிற்பாடு குழந்தைங்க வந்துடும். ”

“வரதட்சணையோடு வர்ற பொண்ணு பாக்கலாம்,” திருமண ஏற்பாட்டாளர் சொன்னாள்.

“இன்னும் ஒரு குவளை வைன்…”
ஐந்து நிமிடங்கள் கடந்தது.

திருமண ஏற்பாட்டாளர் பெரு மூச்சு விட்டாள், தலைமைக் காவலரை ஏற இறங்கப் பார்த்தாள்.

“சரி, இப்ப நீங்க சொல்லுங்க. எனக்கு சில பேரங்கள் இருக்கு. ஒருத்தி பிரெஞ்சுக்காரி இன்னொருத்தி கிரேக்கக்காரி. பணமும் இருக்கு.”
சிறிது யோசனைக்குப் பிறகு ஸ்டைட்ச்கின் சொன்னார்:

“வேண்டாம், நன்றி. உங்க வசதிக்காக என்னைக் கேட்க விடுங்க. ஒரு பொண்ணுக்கு நீங்க எவ்வளவு கேட்பீங்க?”

“நான் பெரியதா ஒன்னும் கேட்கறது இல்லை. இருபத்தி ஐந்து ரூபிள்கள் அப்புறம் வழக்கம் போல ஒரு செட் துணி , நான் கண்டிப்பா உங்களுக்கு நன்றி சொல்வேன். ஆனால் வரதட்சனையின்னு சொன்னா அது வேற கணக்கு. ”

ஸ்டைட்ச்கின் தனது நெஞ்சின் மீது கைகளைக் கட்டிக் கொண்டு அமைதியானார். சில நிமிடங்கள் அமைதிக்குப் பிறகு சொன்னார்:
“அது அதிகம் தானே…”

“இல்லை, அதிகமானது அல்ல, நிகோலாய் நிகொலயித்ச். அந்தக் காலத்தில நிறைய கல்யாணங்கள் நடந்தது, குறைந்த காசுக்குப் பண்ணிக் கொடுத்தோம், இப்பப் பாருங்க என்ன பெரிசா நாங்க சம்பாதிக்கிறோம் ? ஐம்பது ரூபிள்கள் சம்பாதிச்சாலே இப்பப் பெரிசு தான் தெரிஞ்சுக்கிங்க. அதுவும் கல்யாணங்களில் மட்டுமல்ல.”

ஸ்டைட்ச்கின் திருமண ஏற்பாட்டாளரை அதிசயமாகப் பார்த்தார், தோள்களைக் குலுக்கிக் கொண்டார்.

“ம்ம்ம்.. ஐம்பது ரூபிள்கள் கொஞ்சம்னு சொல்றீங்களா?” கேட்டார்.

“ஆமாம், கொஞ்சம் தான். அந்தக் காலத்தில நாங்க நூறு ரூபிளுக்கும் மேல சம்பதிச்சோம்.”

“ம்ம்ம்… இந்த வேலையில இவ்வளவு சம்பாதிக்க முடியும்னும் நான் நினைச்சுக் கூடப் பாக்கலை. ஐம்பது ரூபிள்கள். எல்லாராலையும் அப்படிச் சம்பாதிக்க முடியாது. இன்னும் கொஞ்சம் வைன் எடுத்துக்கங்க…”

திருமண ஏற்பாட்டாளர், கண்ணிமைக்காமல் கோப்பையைக் காலி செய்தாள். ஸ்டைட்ச்கின் அவளை உச்சி முதல் பாதம் வரை அமைதியாகப் பார்த்துவிட்டு சொன்னார்:
“ஐம்பது ரூபிள்கள். அப்படீன்னா வருஷத்துக்கு அறுநூறு ரூபிள்கள். இன்னும் கொஞ்சம் குடிங்க..இந்த வருமானம் இருக்கிற போது, பாருங்க, ல்யுபோவ் க்ரிகோரியேவ்னா, உங்களுக்கு என்ன கஷ்டம் நீங்களே ஒரு மாப்பிள்ளையைத் தேடிக்கிறதுக்கு?”

“எனக்கா,” அவள் சிரித்தாள், “நான் வயசானவள்.”

“அப்படிச் சொல்லாதீங்க. உங்களுக்கு என்ன? அழகா இருக்கீங்க. வடிவான முகம். சிவப்பா இருக்கீங்க. அப்புறம் எல்லாம் இருக்கு உங்க கிட்டே. ”

திருமண ஏற்பாட்டாளர் தர்ம சங்கடத்தில் இருந்தாள். ஸ்டைட்ச்கின்னும் தர்ம சங்கடத்தில் இருந்தார், அவள் அருகில் அமர்ந்தார்.

“இப்பவும் நீங்க கவர்ச்சியாகத் தான் இருக்கீங்க. ” அவர் சொன்னார்; “உங்களுக்கு ஒரு எதார்த்தமான, நல்ல கணவன் அமைஞ்சா உங்க சம்பாத்தியத்தோட சந்தோசமா இருக்கலாம்.”

“என்ன பேசறீங்கன்னு உங்களுக்குத் தெரியுதா, நிகோலாய் நிகொலயித்ச் ?”

“ஆமாம், கெட்டது ஒன்னும் சொல்லலையே…”

அமைதியாகச் சில நேரம் சென்றது. ஸ்டைட்ச்கின் சத்தமாக மூக்கைச் சிந்தினார். திருமண ஏற்பாட்டாளருக்கு முகம் சிவந்திருந்தது,வெட்கத்துடன் அவரப் பார்த்துக் கேட்டாள்:
“அப்புறம் நீங்க எவ்வளவு சம்பாதிக்கிறீங்க, நிகோலாய் நிகொலயித்ச்?”

“நானா? எழுபத்தி ஐந்து ரூபிள்கள், அதல்லாமல் டிப்ஸ்…. அப்புறம் நாங்க முயல்களாலையும் ஆதாயம் அடைவோம்.”

“வேட்டைக்குப் போவீங்களா?”

“இல்லை. எங்களுக்குள்ளே நாங்க சொல்லுவோம் டிக்கெட் வாங்காம வர்ற பயணிகளை முயல்கள்னு.”

இன்னொரு நிமிடமும் அமைதியாகச் சென்றது. ஸ்டைட்ச்கின் எழுந்து அந்த அறையில் பெரிய எதிர்பார்ப்புடன் நடந்தார்.

“எனக்கு இளம் மனைவி வேண்டாம்,” அவர் சொன்னார். “நான் நடுவயசுக்காரன், எந்த மாதிரி எதிர்பார்க்கிறேன் என்றால்…. உங்களை மாதிரி….”

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது….” தனது சிவந்த முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு களிப்புடன் சிரித்தாள்.

“இதுல ரொம்ப யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு? என் மனசுல நீங்க இருக்கீங்க, உங்களது தகுதி எனக்குப் போதுமானதா இருக்கு. நான் எதார்த்தமானவன், அமைதியானவன் , நீங்க என்னை விரும்பினால்….இதை விட எது சிறந்தது? என்னை நீங்க அனுமதிக்கணும் உங்களைக் கல்யாணம் செஞ்சுக்க கேட்கிறதுக்கு.”

திருமண ஏற்பாட்டாளர் ஒரு துளி கண்ணீர் விட்டால், சிரித்தாள், அவளது ஒப்புதலைத் தெரிவிப்பது போல ஸ்டைட்ச்கினின் கோப்பையை மெல்ல இடித்தாள்.

“நல்லது,” மகிழ்ச்சியான ரயில்வே காவலாளி சொன்னார், “இப்பொழுது எந்த மாதிரி வாழ்க்கையை நான் உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் அப்படீன்னு சொல்ல என்னை நீ அனுமதிக்கணும் …. நான் கறாரான, எதார்த்தமான, மரியாதைக்குரிய மனிதன். பெருந்தன்மையா எல்லாத்தையும் எடுத்துக்குவேன். என் மனைவியும் கறாரா இருக்கணும், அப்புறம் புரிஞ்சுக்கணும் அவளது சேவை இந்த உலகத்திலேயே எனக்குத் தான்னு.”

அவர் உட்கார்ந்தார், நீண்டதாக மூச்சு ஒன்றை விட்டார், அப்புறம் தனது மணமகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவளிடம் குடும்பப் பொறுப்பு, மனைவியின் கடமைகள் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

– பெப்ரவரி 19, 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *