நயன மொழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 7,832 
 

‘படார்’ என கீழே விழுந்தான் கயிறு அறுந்துவிட்டது போலும் இடுப்பு முறிந்திருக்ககூடும் ஆனால் அது நடக்கவில்லை கொஞ்சம் வருத்தம் தான் கார்க்கிக்கு “என்னாடா இது சாவு கூட நமக்கு சதி பண்ணுது தூக்குல தொங்கி போய் சேரலாம்னா இப்படி ஆயிருச்சு… ச்சீ”.

என தன்னை தானே நொந்து கொண்டு புலம்பினான். நள்ளிரவு இரண்டு மணி இருக்கும் சாகவும் முடியாமல் தூங்கவும் முடியாமல் தத்தளித்தான். இவன் புலம்பலை பார்த்தவர்களுக்கு இவன் செத்தே போய்ருக்கலாம் என்று தான் தோன்றும் ஆனால் அதற்கும் ஒரு கொடுப்பனை வேண்டுமே அது தான் இவனுக்கு வாய்க்கவில்லையே. இவன் செத்தாலும் இவனுக்காக கண்ணீர் சிந்த ஆளில்லாத போது இவன் வாழ்ந்து யாருக்கென்ன லாபம் ஒருவேளை இவன் நண்பர்கள் அருகில் இருந்திருந்தால் அந்த அபிப்ராயத்தை மாற்றிக்கொண்டிருப்பானோ என்னவோ அதற்கும் கொடுத்து வைக்கவில்லை இருவரும் குடும்பஸ்தன் ஆகிவிட்டார்கள்.

செய்து வந்த வேலையும் இல்லை காதலித்த காதலியும் இல்லை. கல்யாணம் செய்து வைக்ககூட ஆளில்லை என விரக்தியினால் தான் சாகவும் துணிந்தான் ஆனால் சாவுக்கு கூட இவனை கண்டால் பிடிக்கவில்லை என்ன காரணமோ யாருக்கு தெரியும்.

புலம்பி கொண்டே தூங்கிவிட்டான் விடியலும் வந்தது கதவை தட்டியது திறந்து பார்த்தான் பக்கத்து வீட்டு நாரயணன் தான் அது “தம்பி! குடும்பத்தோட திருப்பதி போரோம், வர நாலஞ்சு நாள் ஆகும் யாரவது கேட்டாங்கனா சொல்லிருங்க தபால் வந்தாலும் வாங்கி வைங்க தம்பி” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

“இது வேரயா” என தலையில் அடித்து கொண்டு உள்ளே போனான், கைப்பேசி அழைத்தது அழைப்பில் அவன் நண்பன்.

“என்னடா எப்படி இருக்க? பேசி ரொம்ப நாளாச்சு, நல்லா இருக்கியா!”

“நேத்து நான் சூசைடு பண்ண டிரை பண்ணேன்”

கரகரத்த குரலில் “என்ன என்ன சொன்ன”

“தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி பண்ணேன் கயிறு அருந்துறுச்சு”

கோவமாக “டேய்! நீ என்ன லூசா இப்ப எதுக்கு நீ இப்படிலாம் பண்ணிட்டு இருக்க?”

“என்னால முடிலடா காதலிச்சவலும் வேணாம்னு வேரொருத்தன கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா இருந்த வேலையயையும் தூக்கிட்டாய்ங்க இனி என்னடா பண்றது நான் இந்த உலகத்துல இருந்து என்ன பண்ண போறேன்”

“டேய் சாவு எல்லாருக்கும் வர தான் போது அது எப்ப வருதுனு தெரியாம இருக்கறதுல தான் சுவாரஸ்யமே…. உன்ன வாரி அனச்சுக்க அவன் விரும்பல அதுனால நீ இந்த பூமிக்கு பாராமா இருந்து தான் ஆகனும். முட்டாள்தனமா யோசிக்காம வேற வேலைய தேடு”

“நீ எவ்ளோ சொன்னாலும் என் மனசு ஆற மாட்டேங்குது. எனக்கு மட்டும் ஏன்டா இப்படி நடக்குது”

“டேய் எல்லாரும் இங்க நொம்பலத்துல தான்டா இருக்கோம் இதலாம் சமாளிச்சுட்டு தான்டா முன்னேறனும்… ரோட்ல போய் ஒவ்வொருத்தன் முகத்தையும் பாரு ஆயிரம் கத சொல்லும்”

“இருந்தாலும் எனக்கு வந்த தனிமையும் வெறுமையும் என்ன கொல்லுதுடா!”

“இங்க பாரு ஒன்னுமில்ல சௌஹந்திய அவுங்க அம்மாகிட்ட சொல்லி உனக்கு நல்ல பொன்னா பாக்க சொல்லிருக்க அடுத்த மாசம் நாங்க இந்தியா வரோம் வந்து உன் கல்யாணத்த முடிச்சிட்டு தான் மறுவேளை சரியா… அதுவரைக்கும் மனச போட்டு குழப்பிக்காமா டூரு கீரு போய்ட்டு வா நம்ம படிக்கும் போது போவம்ல அங்கலாம் போ”

“ம்ஹூம்”

“டேய் சொல்ரத கேளு போய்ட்டு வா நாங்க ஊருக்கு வரதுக்கும் நீ போய்ட்டு வரதுக்கும் கரக்டா இருக்கும்… பணம் இருக்க இல்லனா அம்மாகிட்ட வாங்கிகோ”

“இல்ல அதலாம் இருக்கு”

“சரி பாத்துக்க நான் நாளைக்கு பண்றேன் பாய்”

“ம்ம் சரிடா பாய்”

வெகுவாக யோசித்தான் “ம்ம் அவன் சொல்றத தான் கேட்போமே, அங்க பேனானாச்சும் எதாவது வழி கிடைக்குதானு பார்ப்போம், போய் சேர்றதுக்கு” என முனுமுனுத்தான்

கையில் இருந்த பணத்தையெல்லாம் அள்ளி போட்டுக் கொண்டு கிளம்பினான்.

மறுமுனையில் ராதா கதறி கொண்டிருந்தாள் “ஏங்க நமக்கு தான் குழந்த பொறக்க போதுல அப்புறம் இது எதுக்குங்க நமக்கு, பேசாமா இத எங்காயவது அனுப்பிவிடுங்க”

“ஏய் பாவம்டி வாயில்லா பூச்சி அதுப்பாட்டுக்கு இங்க இருக்கட்டுமேடி” என்றான் ரங்கநாதன்.

“முடியவே முடியாது எனக்கு இது இங்க இருக்ககூடாது எங்காயவது போய் தள்ளிவிட்டு வாங்க”

இருவரின் சம்பாஷனைகளும் கண்மணிக்கு புரிந்துவிட்டது போலும் வெளியே சென்றாள் சில வேடிக்கை மனிதர்களை பார்த்து கொண்டிருந்தாள் மறுபடியும் உள்ளே சென்று ஒரு ஓரமாக அமர்ந்தாள் இன்னும் அதே பேச்சுதான் “நம்மள பிடிக்கல போல” என்று தனக்குள்ளே பேசி கொண்டாள்.

“சரி சரி கொண்டு போய் விட்டுரேன் நீ கொஞ்சம் வாய மூடுறியா தாயே” என அலுத்து கொண்டான் ரங்கன்.

எங்கே கொண்டு போய் விடுவது என ரங்கனுக்கு குழப்பம் எங்காவது போய் தொலைச்சுட்டு தான் வரனும் என முடிவு கட்டினான்.

“கண்மணி! வா போலாம் அப்பா உன்ன வெளிய கூட்டிட்டு போரேன்”

அதற்கு என்ன தெரியும் வாய் பேச தெரியாத ஒரு அற்ப ஜீவன் ஆனால் இரண்டு கண்கள் இருக்கிறதே அதில் எல்லாம் தெரிகிறதே கண்மணியின் கண்களில் நீர் தேங்கியது இருந்தும் தந்தை சொல் கேட்டு பின்னே ஓடியது.

இரவு பத்தாகிவிட்டது இருவரும் காரில் ஏறி புறப்பட்டனர். வழியில் எங்கே விடுவதென ரங்கனுக்கு ஒரே குழப்பம். சட்டேன இவர்களை கடந்து சென்றது பேருந்து. காரும் சரிசமமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. பேருந்தின் ஜன்னல் வழியே ஒன்று அடிக்கடி எட்டிப்பார்த்தது பின்பு முற்றுமாக தலையை நீட்டிவிட்டது.

இப்பனாச்சும் நமக்கு சாவு வருதானு பாப்போம் என ஜன்னலின் வழியே பார்த்தபடி எண்ணி கொண்டிருந்தது.

“டேய் சாவனும்னா ரோட்ல வந்து சாவுடா” என கார்க்கியை பார்த்து முனங்கினான் ரங்கன் அப்போது தான் பேருந்தை கவனித்தான் பேசாமா இங்க கொண்டு போய்விட்டுறுவோம் இது தான் கரக்ட் என பேருந்தை துரத்தினான்.

நள்ளிரவு ஒரு மணி இருக்கும் பேருந்து திருப்பதி பேருந்து நிலையத்தை அடைந்தது. நள்ளிரவானாலும் ஜனகூட்டம் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன எதோ ஒரு தேடலுக்காக தான் அத்தனை கூட்டமும் சுற்றி கொண்டிருக்கிறது.

ஒரே களைப்பு கார்க்கி பேருந்து நிலையத்திலே அமர்ந்துவிட்டான் பக்கத்தில் குஜராத்தி மராத்தி என வட வாடை கொஞ்சம் தெலுங்கு வாடையும் அடித்தது.

ரங்கனும் பேருந்து நிலையத்திற்கருகே காரை நிறுத்தினான். கண்மணியை அழைத்து கொண்டு நிலையத்தை நிலை கொள்ளாமல் சுற்றினான். அப்போது கழட்டிவிடலாம் இப்போது ஏமாற்றிவிடலாம் என நப்பாசையில் இருந்தான் ரங்கன் ஆனால் கண்மனிக்கு கொஞ்சம் புத்தி கூர்மை அதிகம் அவன் நடையசைவை அப்படியே கவனித்து பின் தொடர்ந்தாள். இருந்தாலும் ரங்கனுக்கு அடித்தது யோகம் மூன்று பேருந்துகள் உள்ளே வந்தன. ஜனகூட்டம் முந்தியடித்து வந்தது அதற்குள் நுழைந்தான் கண்மணியும் நுழைந்தாள். ஒருகட்டத்தில் கண்மணி நம்மள தான் பிடிக்கலயே என்ற தன்னிலை உணர்ந்தாள். கூட்டம் மெள்ள கரைந்தது ரங்கனை காணவில்லை கண்மணி மட்டும் அங்கும் இங்குமாக அலைந்தாள். பேருந்து நிலையத்தையே சல்லடையிட்டு தேடினாள் கார் நிறுத்திய இடத்தில் கூட தேடிவிட்டால் ஆனால் எங்கும் காணவில்லை. கண்கள் சுறுங்கின கண்ணீர் பெருக்கெடுத்தது கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்துவிட்டாள் அவளும் என்னதான் செய்வாள் அவளுக்கு தான் தெரியுமே அதனால் தான் அப்பா இங்கு கொண்டு வந்து நம்மை விட்டுவிட்டார் இனி நாம் யாரும் இல்லாத அனாதை சோறு போட்டு அரவனைக்க எந்த நாதியுமில்லை. அவன் விட்டு சென்றதில் தவறொன்றுமில்லை பெற்றால் தானே பிள்ளை, நாட்டில் அநேகம் பேர் இப்படி தான் செய்கிறார்கள் அதில் ரங்கன் மட்டும் விதிவிலக்கா என்ன? இனி யாரை தேடியும் பிரயோஜனமில்லை என தனக்குதானே ஆறுதல் கூறிகொண்டாள்.

கதிரவன் கண்விழித்த நேரம், இன்னும் ஓயவில்லை மக்கள் கூட்டம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது திருப்பதி.

கார்க்கிக்கு முழிப்பு வந்தது தலைமாட்டில் கண்மணி உறங்கி கொண்டிருந்தாள் அவளை பார்த்த கணமே சட்டென எழுந்தான் அவன் எழுந்த அதிர்வு அவளையும் எழுப்பிவிட்டது. கார்க்கி தன்னைதானே ஆசுவாசப்படுத்தி கொண்டான். பையில் இருந்த வாட்டர் பாட்டிலில் வாயை கொப்பளித்து விட்டு ஒரு டீயும் பிஸ்கெட் பாக்கெட்டும் வாங்கி அங்கிருந்த பயணிகள் இருக்கையில் அமர்ந்தான் மெள்ள கண்மணியும் அவனை நொக்கி வந்தாள். அவனையே கண் கொட்ட பார்த்து கொண்டிருந்தாள். பாவம் பசி போலும் இரண்டு பிஸ்கட்டுகளை கொடுத்தான் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் பார்த்தாள் இன்னும் ரெண்டு கிடைத்தது.

ஏனோ தெரியவில்லை அவள் மீது இவனுக்கு அவ்வளவு கரிசனம் ஏதோ பெற்றெடுத்த பிள்ளையை போல ஆனார் அவளுக்குஅப்படி ஒரு நினைப்பு இல்லை இருக்கவும் வாய்ப்பில்லை. கண்மணி அவனையே சுற்றி சுற்றி வந்தாள் அவனுக்கும் ஒருவாறு கண்மணியை பிடித்திருந்தது கூட்டி கொண்டு போய் வளர்க்கலாம் என்று தோன்றியது “ஆனா அவனுக்கு பொறுக்காதே” என மலை உச்சியை பார்த்தான்.

அவளுக்கும் இவன் மேல் அளவு கடந்த அக்கறை தான், இரண்டு பேருந்துக்கு நடுவில் எலியை போல் சிக்கி சனநேரம் போய் சேர்ந்திருப்பான் ஆனால் அவள் குறுக்கிட்டு ஓட்டுனரை அலற வைத்தாள். ஒரு வழியாக இவன் வெறுமையும் தனிமையும் அவளால் மறைந்தது.

கார்க்கி இப்போது தயாராகினான், “மலைக்கு பஸ்ஸில் போகலாமா அல்லது நடைபாதை வழியாக போலாமா” என்று ஒரு சின்ன குழப்பம். பிறகு “சீக்கிரம் மலைக்கு போய் என்ன செய்ய போரோம்” என்று மலைபாதை வழியா போலாம் என முடிவெடுத்து நகர்ந்தான்.

திருப்பதி அருகிலுள்ளஅலிபிரி சோதனை சாவடியை நெருங்கினான் அதுவரை கண்மணியும் அவனை பின் தொடர்ந்து வந்தவள் இப்போது காணவில்லை அவனுக்கு ஒன்றும் புரியவில்லை மேலும் சோதனை சாவடியில் சோதனைகளை முடித்து கொண்டு மலைபாதையில் ஏற தயாரானான். ஒரு நிமிடம் திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தான் கண்மணியை காணவில்லை.

எங்கே போனதென்று தெரியவில்லை ஏனோ அவனுக்கு இனம்புரியாத பினைப்பு உண்மையிலே அது ஒரு இனம்புரியாத நயன மொழி. இருவருக்கும் பூர்வ ஜென்ம பந்தமாக இருக்கலாம். அந்த ஏகாந்த பார்வை, கண்கள் பேசும் நயன மொழி அந்த ஆத்மார்த்தமான உடல்மொழி என அவள் கனிவான சம்பாஷனை அவனை என்னனமோ செய்தது. காலையில் அவன் காலை சுற்றியே வந்து கொண்டிருந்தவள் இப்போது காணவில்லை. நிரந்திரமற்ற வாழ்வில் நிரந்திரமான உறவுகள் கிடைக்க ஏங்குவது நியாயமில்லை தானே.

இன்னும் சுமார் பத்து கிலோ மீட்டர் இருக்கிறது ஏழுமலையானை தரிசிக்க ஆகயால் மெள்ள நடக்க தொடங்கினான் ஒவ்வொன்றாக ரசிக்க தொடங்கினான். ரசனை இல்லாதவன் மனிதனே இல்லை தானே? சக பாதசாரிகளை பச்சையிலைகளை பொன் மேகங்களை வண்ணத்து பூச்சிகளை கலைநயமிக்க சின்னஞ்சிறிய வேலைபாடுகளை கண்டு மெய்சிலிர்த்தான்.

நேற்று நடந்ததிலுருந்து மீண்டு வந்தாலும் ஏதோ ஒரு தனிமை அவனை வாட்டி கொண்டே தான் இருந்தது. ஒய்வு அறை வந்ததும் அவன் உடல் ஓய்வு கொண்டது ஆனால் அவன் மனம் நிலை கொள்ளவில்லை. மலை ஏற தொடங்கினான் பாபவிநாசனம் வந்தவுடன் ஒரு குளியல் பின்பு அண்ண பிரசாதம் கொஞ்சம் இனிமையான பாடல்கள் என புங்கை மரத்தடியில் குயிலின் இனிய கீதங்களோடு அந்த மெல்லிய தருணங்களை ரசித்தான். திடிரென கண்மணி அவன் பின்னாலிருந்து வந்தாள் கொஞ்சம் ஆச்சர்யம் தான். இப்போது அவன் இதழோரம் ஒரு சிறிய புன்னகை. நமக்காக இறைவன் கொடுத்த வரமா என்ன “கூட்டிட்டு போய் நம்மளே வளர்த்துகளாமா, யாரவது வந்து கேட்டா? தேடுனா? தொலைச்சுட்டு போயிருந்தா? நம்மளயே சுத்தி சுத்தி வருதே”

“ஏய் உன் பேரு என்ன, என்கூட வர்றியா” அவளுக்கு தான் பேச வராதே பேசாவிட்டால் என்ன அந்த கண்கள் பேசிய நயன பாஷை தான் அவளுக்கு புரியுமே மெள்ள அவன் அருகில் வந்து தலையசைத்து பக்கத்தில் உட்கார்ந்துகொண்டது.

“ஏய் மணி ஏய் மணி” என ஒரு குரல் கூக்குரலிட்டு கொண்டே வந்தது கண்மணியை பார்த்து “ஏய் இங்க வந்துட்டியா” என வாயேடுக்கும் போது காரக்கியை பார்த்து கொஞ்சம் திடுக்கிட்டாள் அந்த இளம்பெண். அவளுக்கு எப்படி பேர் தெரியும் கண்மணியும் சொல்லியிருக்க முடியாது ஒருவேளை அவளுக்கு பிடித்த பெயராக இருக்கலாம் ம்ம்.

“நீங்க தான் கூட்டிட்டு வந்தீங்களா!” என்றாள்

“இல்லங்க நான் இல்ல”

“இல்ல காலைல இருந்து திரு திருனு முழிச்சிட்டு இருந்துச்சா, அதான் கேட்டேன்”

“இல்லங்க எனக்கு எதும் சம்பந்தமில்ல”

“ஃப் யூ டோன்ட் மைன்டு நான் கூட்டிட்டு..”

என இழுத்தாள்.

“தாராளமா” என வாய் வார்த்தையாக சொன்னான்.

“யார யாரு தாரைவார்க்குறீங்க” என்ற தொனியில் கண்மணி அவர்கள் உரையாடலை பார்த்து கொண்டிருந்தாள்.

ஏனோ கண்மணிக்கு கார்க்கியை பிரிய மனமில்லை. அவனுக்கோ அவளை பிரிய மனமில்லை அவள் பேச்சு அவள் கண்கள் என அவனை மறுபடியும் காதலெனும் கடலில் தள்ளப்பார்த்தது. அவளுக்கும் கூட இவனை எங்கோ பார்த்த ஞாபகம் ஒருவேளை அவனை புகைப்படத்தில் பார்த்திருப்பாள் அதை அவள் தாயே காட்டியிருப்பாள்.

“ஏதோ நமக்கு கடவுள் வரம் கொடுத்தான்னு நினச்சோம் ம்ஹூம்” என மனதிற்குளே நினைத்து கொண்டு மேலே செல்ல ஆயத்தமானான்.

அநேகமாக வந்து சேர்ந்துவிட்டான் ‘ஆஹா என்ன அழகு’ மேலேயும் மக்கள் கூட்டம் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருக்கிறார்கள் யாரை தேடுகிறார்களோ ஒருவேளை அந்த பாலாஜியையா! அவனை தேட சன்னதிக்கு தானே செல்ல வேண்டும்.

இயற்கையின் கொள்ளை அழகும் அந்த பரவசமும் என்னமோ செய்தது. நடு நடுவே அவள் முகம் வந்து போனது. இப்போது அவன் மனம் வாழ துடிக்கிறது அவள் கண்களுக்காக அவள் பேச்சுக்காக அவள் இதயத்திற்காக. கண்மணியை கூட மறக்க செய்த அவள் முகம் அவளை காண எத்தனித்தது. அவன் கீழே தான் இருப்பாள் அவனது சப்கான்ஷியஸ் சொல்லிகொண்டே இருந்தது அது அவனை கீழேயும் கொண்டு வந்து விட்டது. பார்வை அங்கும் இங்கும் பரபரத்தது.

திடிரென அவன் சமீபத்தில் அவளை போன்ற ஒரு கவிதை நிழல் உருவம் மெள்ள அருகில் வந்தது சட்டென கண்மணி அவன் காலருகே தாவினாள். “உங்கள தான் தேடுனோம் நீங்களே வச்சுக்கோங்க, அவளுக்கு உங்கள தான் ரொம்ப பிடிச்சிருக்கு” என குமட்டு புன்னகையுடன் எனக்கும் தான் என்ற தொனியில் சொல்லிவிட்டு கண்மணியை அவனிடம் விட்டுவிட்டு சென்றாள்.

வேகமாக பாய்ந்தோடி வந்த கண்மணி அவன் மீது தாவினாள் ‘படார்’ என கீழே சாய்ந்தான் முன்னங்கால்களால் அவன் மீது ஏறி அவன் முகத்தில் முத்த மழை பொழிந்தாள் அவனை தன் எச்சிலால் குளிப்பாட்டினாள் அவனுக்கும் அதில் மிக்க ஆனந்தம். அவனை முட்டி தள்ளி மூர்ச்சையற்றாக்கினாள். வாலை ஆட்டி கொண்டே அவனை பார்த்து குரைத்தாள் கொஞ்சினாள் கூத்தாடினாள். அந்த வால் ரோமங்களால் அவனை வருடினாள். இடைவிடாமல் அவனை பார்த்து குரைத்து கொண்டே இருந்தாள் ஆனால் அவன் கண்களோ அவளையே பார்த்துகொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *