நம்பிக்கை நடவு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 14,299 
 

வகுப்பை முடித்துவிட்டு வெளியேறியபோதுதான் கவனித்தாள். சத்யாவின் கண்கள் சிவந்திருந்ததை. தொடர்ச்சியாக அழுதது ஒரு காரணியாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு பேராசிரியை பிரவீணா, “சத்தியா. . . . .என்ன பிரச்சனைம்மா? உடம்பு கிடம்பு சரியில்லையா? ”

சத்யா வார்த்தைகளால் சொல்லாமல், ஏதுமில்லை என்பதை தலையசைப்பால் சொன்னாள்.

“ஏய் . . . . பொய் சொல்ற. . . எனக்கு ஒன்னபத்தி நல்லா தெரியும். நீ எதுக்கும் அவ்வளவு சீக்கிரம் அழமாட்டீயே!”

சத்யா அதை ஆமோதிப்பதுபோல் மௌனமாய் ‘தலைகுனிந்து’ நின்றாள்.

பிரவீணா பக்கத்து தோழியிடம் கேட்டாள். ‘என்னமா பிரச்சனை? உங்களுக்குள்ள.. எதாவது சண்டையா?”

தெரியலைலிங்க மேடம். ரெண்டு நாள் லீவுக்கு சொந்த கிராமத்துக்கு போய்ட்டு வந்தா. வந்ததிலிருந்து இப்படிதான் அழுதுக்கிட்டு இருக்கா. ஹாஸ்டல் ரூம்மேட்ஸ் எல்லோரும் கேட்டு பார்த்துட்டோம். வாயே தொறக்கமாட்றா மேடம்” பக்கத்தில் இருந்தவள் நட்பு கலந்த பாசக் கவலையோடு சொன்னாள்.

“சரி நீ காலேஜ் முடிஞ்சதும் என்ன வந்து பாரு! லேப்லதான் இருப்பேன்.”

“ஏய் அவ வரலன்னாலும் நீங்க வலுகட்டாயமா கூட்டிட்டு வாங்கடீ!”

வேண்டுகோளை முன்வைத்துவிட்டு நகர்ந்தாள்.

சம்பளத்துக்கு மட்டுமே பேராசிரியர் வேலை பார்க்கும் பெரும்பாலானோர்கள் மத்தியில் பிரவீணா தனியே தெரிவாள். இயந்திரத்தனமாக பாடம் நடத்திவிட்டு போவது மட்டுமல்ல அவள் வேலை. ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனித்து, அவர்களின் பிரச்சனையை தீர்த்துவைக்க துடிக்கும் உள்ளம் அவளுக்கு.

மாணவிகளின் பிரச்சனை மட்டுமல்ல, உடன் பணிபுரிவோரின்; பண-மன பிரச்சனைகளைக்கூட தீர்க்க முனைபவள்.

மாலை.

தோழிகள் சத்யாவை அழைத்துவந்து பிரவீணாவிடம் ஒப்படைதார்கள். அதற்காக எதிர்பார்த்திருந்தவளாய் “அப்பாடா . . . வந்துட்டாளா! நீங்க மட்டும் இவள கூட்டிட்டு வரலேன்னு வச்சுக்கோங்களேன். நானே. . . ஹாஸ்டலுக்கு வந்துடறதுன்னு இருந்தேன்.”

“சரிம்மா. சத்தியா. . .இப்பவாது வாயை தெற. ஊருல என்ன பிரச்சனை?”

“ ……”

“ உனக்கு கல்யாண ஏற்பாடு ஏதாவது பண்ணிட்டாங்களா?”

“ஐயோ. . . இல்லிங்க மேடம்” என்று அதிர்ச்சியோடு வாய் திறந்த சத்யா, பின்னால் திரும்பி தோழிகளை பார்த்து தயங்கினாள்.

“சரி ஏம்பா… நீங்க இவளுக்காக வெய்ட் பண்ண வேண்டாம். நீங்க கிளம்புங்க. நானே இவள ஹாஸ்டல்ல விட்டுட்டு போறேன்.”

அவர்கள் புறப்பட்டு போனதும் சத்யா, “மேடம் . . . எப்படி சொல்றதுன்னே தெரியல்ல…”

“பரவாயில்ல சொல்லு”

“எங்கம்மா சாகபோறாங்க மேடம். அவங்களுக்கு கேன்சராம் .” அடக்க முடியாமல் அழுதாள்.

“…ம்ம்…என்ன கேன்சர்?”

“பிரஸ்ட் கேன்சர்”

“ஏய் … அழறத நிறுத்து கேன்சர்னாவே செத்துடுவாங்கன்னு அர்த்தமில்ல சத்யா. அதுவும் பிரஸ்ட் கேன்சர்லாம் இப்போ சாதாரண விஷயம்.”

“இல்ல மேடம். ஆப்பேரஷன் பண்ணனும், அப்புறம் ஏதோ ரேடியேஷன். . . கீமோ . தலைமுடியெல்லாம் கொட்டி, உடல் எளச்சி . . . ” வாக்கியத்தை உடைத்து “ எங்கம்மாவ … அப்படியெல்லாம் பார்க்க முடியாது. மேடம். . . என்னால ”

“அடி பைத்தியக்காரி…, கையில அடிப்பட்டு எலும்பு முறிஞ்சிடுச்சு: மாவு கட்டு போடல..? ஒருமாசம் ரெண்டு மாசம் அந்த கட்டோடவே திரியறதில்ல…? அப்புறம் அவுத்துடறதில்ல…? அது, அதோட ப்ரொசிஜர். அதுபோலத்தான் கேன்சர் டிரீட்மென்ட்டுக்கும் சில ப்ரொசிஜர் இருக்கு. அத பாத்து பயந்தா எப்படி? உனக்கு ஒன்னு தெரியுமா? ஏதோ வரகூடாத வியாதி உங்கம்மாவுக்கு மட்டும் வந்துட்டதா நீ நெனைக்கிறதாலதான் நீ ரொம்ப பதட்டப்படுற, அழுவுற. இப்பலாம் நகரமோ கிராமமோ , நூத்துக்கு பத்து பேருக்கு இது வந்துடுது. படிச்சவ. . . நீதான் அம்மாவுக்கு இதெல்லாம் எடுத்து சொல்லனும். நீயே அழுதுகிட்டிருந்தா . . . ம்ம்?.”

“மேடம். . . நாங்க யாருக்கு என்ன பாவம் பண்ணிணோம்?”

“ச்சீ. .ச்சீ . . பாவம் புண்ணியம் பார்த்து வருமா நோய்? அதுவும் கேன்சர் ஒரு சூழல் தொடர்பான நோய்தானே தவிர, இது தான் காரணம்ன்னு சொல்ல முடியாது. அதே மாதிரி பெரியவங்களுக்கு வரும்… ஏழைகளுக்கு வரும்…பெண்களுக்கு வரும்ன்னு பேதம் பிரிச்சி சொல்ல முடியாது. ஒன்னு தெரியுமா…? பிரஸ்ட் கேன்சர் ஆண்களுக்கு வருது.”

“ இல்லங்க மேடம். எங்கம்மாவும் ஏதோ சாகப்போற மாதிரியே பேசறாங்க. அக்காகிட்டயும், எங்கிட்டயும் .. . . என்னென்னவோ சொல்றாங்க. ..”

“படிச்ச புண்ணாக்கு… ஒனக்கே அந்த நோய் ஒரு உயிர்கொல்லி நோயாத்தான் தெரியுது. பாவம் அவங்க படிக்காதவங்க. தோ. .. பாரும்மா. . . கேன்சர் டிரீட்மென்ட்டு வெறும் மருந்து சம்மந்தப்பட்டதுமட்டுமில்ல. மனம் சம்மந்தப்பட்டதும். உறுதியான நம்பிக்கையோட, பாஸிட்டீவ் உணர்வோட, எதிர்கொண்டு மருத்துவம் பார்த்துக்கிட்டா சீக்கிரம் குணமாயிடும். இந்த உணர்வ நீதான் அம்மாவுக்கு கொடுக்கனும்.”

“அப்போ”

“பயப்படத் தேவையில்ல. அப்புறம்…இது கட்டி கிட்டின்னு,பச்செல…லேகியம்…அது இதுன்னு கிராமத்து வைத்தியம் பார்த்துக்கிட்டு இருக்காம ,உடனே ,இந்த வியாதிய குணப்படுத்தறதுக்காகவே இயங்கிட்டிருக்கிற அரசு அல்லது தனியார் மருத்துவ மனையில சேருங்க.”

“மேடம் . . .. . இந்த விஷியத்த நான் யாருகிட்டையும் சொல்லல. நீங்களும்….” சத்யா கூட்டி முழுங்கினாள்.

“ சொல்லமாட்டேன் மோதுமா? சரி. சொன்னா… உங்கம்மாவுக்கு வந்தது, உனக்கு தொத்திகிட்டு, அவங்களுக்கும் தொத்திக்கும்ன்னு நெனப்பாங்களா? தொத்து வியாதியா இது.?” புறப்பட தயாரானாள் ,பிரவீணா.

“மேடம். . . எங்க அக்காகூட கேட்டா !”

“என்ன… தொத்திக்குமான்னா?”

“ம்கூம். அம்மாவுக்கு வந்ததால… எங்களுக்கும் வருமான்னு. .?”

“தொன்னூத்தியஞ்சு சதவிகிதம் வாய்ப்பில்ல. பாரம்பரிய மரபணுக்கலால வர்ற வாய்ப்பு ரொம்ப ரொம்ப கொறைவு. முன் ஜாக்கிறதையா இருந்து 35 வயசுக்கு மேல, வருசத்திற்கு ஒருமொறை ‘மேமோகிராம்’ பரிசோதனை செஞ்சிக்கிட்டா, அந்த பயமும் வேணாம். சரி. கௌம்பலாமா? நான் உன்ன ஹாஸ்டல்ல விட்டுட்டே போறேன்.”

“ மேடம், ஒங்களுக்கு எதுக்கு சிரமம் நானே போயிக்கிறேன்”

“ச்சீ..வா! இன்னொரு விஷியம் தெரியுமா? இந்த காலேஜ்ல ஒரு புரொப்பஸர் பிளட் கேன்சர் பேஷன்ட். பத்து வருஷத்துக்கு முன்னாடி… ஏ. பி.எம்.எல்ன்னு ஒரு வகை பிளட் கேன்சரால அவதிபட்டு, அல்லல்பட்டு, அப்பப்பா…. நீ சொன்ன மாதிரி உடல் எளச்சி, தலை வழுக்கையாகி கன்னமெல்லாம் டொங்கு விழுந்து… ம்ம்ச்ச்;… ஆனா…. எனக்கு தெரிஞ்சி, மருந்துகளவிட அந்த நெலையிலேயும்; நம்பிக்கையோட இருந்ததுதான் அந்த ஜீவனோட ப்ளஸ்.

“ பிளட் கேன்சரையும் குணபடுத்த முடியுமா மேடம்”

“ம்ம். இப்போ அதெல்லாம் சாதராணம்மா ஆயிடுச்சி. தொடக்க நெலையில கண்டுபுடிச்சிட்டா ரொம்ப ஈஸி.”

“யாரு மேடம் அந்த பேஷன்ட்?”

“ நீ சொல்லு பார்க்கலாம் !”

“ இங்கிலீஸ் புரொப்பஸர் இமாம் சார்…!”

பிரவீணா கலகலவென சிரித்தாள். “ஏய்.. அவர பார்த்தா அப்படியா தெரியுது? இரு இமாம் கிட்டேயே சொல்றேன்.”

“ மேடம், மேடம்… மாட்டிவிட்டுடாதீங்க. ப்ளீஸ். ”

“ஏய்…சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன். நான் தான் அந்த முன்னாள் கேன்சர் பேஷன்ட் ”

சத்யா பேரதிர்ச்சியானாள். பிரவீணாவை உச்சந்தலையிலிருந்து பாதம்வரை ஒருமுறை கூர்ந்துபார்த்துவிட்டு,

“ மேடம்….”

“ஆமாம்டா.. இப்போ… ஐயம் ஆல் ரைட் அண்ட் நார்மல். வருஷத்துக்கு ஒரு தடவ, பீரியாடிக்கல் செக்-அப். அவ்வளவுதான்.”

“சரி. வா போலாம்” சத்யாவின் தோள் மீது கையை போட்டு நடக்க தொடங்கினாள், பிரவீணா.

சத்யாவின் கண்கள் மீண்டும் ஏனோ கலங்கியது. அவள் கழுத்தை திருப்பி , தன் தோள் மீது படர்ந்திருந்த பிரவீணாவின் கைவிரல் பகுதியில்; அழுத்தமாய் ஒரு முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்து நடக்கத்தொடங்கினாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “நம்பிக்கை நடவு

  1. ரொம்ப நல்ல கருத்துடன் கூடிய கதை. அதுடன் கேன்சரை பற்றிய நல்ல கருதும் கூட மற்றூம் விழிபுணர்வு. ரொம்ப நல்ல கதை எழுதிய ஆசிரியர் புதுவை பிரபா அவர்களுக்கு வழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *