கதையாசிரியர்: ,
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 14,280 
 

மும்பையின் சயோன் கோலிவாட என்ற சேரிப்பகுதியானது நபும்சகங்கள் மட்டும் நிறைந்துள்ள ஒரு காலனி. அது தகரத்தகடுகள் கொண்டு உருவாக்கப்பட்ட குடிசைகளும், கயிற்றுக்கட்டில்களும், அழுகிய நாற்றமடிக்கும் காய்கறிகளின் தோல்களும், குப்பைக்கூளங்களும், பெண்கள் போல் உடையணிந்திருந்தாலும் தினமும் முகச்சவரம் செய்யவேண்டியவர்களான மனிதர்களும் நிறைந்து ததும்பும் கிராமம்.

எங்காவது ஒரு வீட்டில் குழந்தை பிறந்தவுடன் மேளங்களும், சலங்கைகளும் முழங்க நபும்சகங்கள்கள் அங்கு விரைவதுண்டு. அந்தக் குழந்தை நீண்ட ஆயுளும், ஆரோக்கியமாகவும் வளர அவர்கள் அங்கு நடனம் புரிவர். அந்த வீட்டின் உரிமையாளர், அந்த நடனத்திற்கான பரிசாக கோதுமை, சர்க்கரை மற்றும் தேங்காய் வழங்குவர். இப்பரிசுகள் நபும்சகங்கள்களுக்கு வழக்கமாக கொடுக்கப்பட வேண்டியவை. இப்பரிசுகள் கொடுக்கப்படுகையில் ஏதாவது குறை இருந்தாலோ, பரிசு கொடுக்காதவரையோ தகாத வார்த்தைகளால் இவர்கள் திட்டுவர். இவர்களின் முன்னால் கண்களால் வெறுப்பு காட்டி யாராவது ஒதுங்கினால் தங்களின் பாவாடையை தூக்கிக் காட்டி சாதாரணமாய் மறைக்கப்பட்டிருக்கும் தன் சாபத்தை வெளிக்காட்டுவர். அந்தக் காட்சி ஒரு பயங்கரமான தண்டனையாகவே பெரும்பாலோனோர் கருதுவார்கள்.

எல்லா வெள்ளிக்கிழமையும் புள்ளிகள் நிறைந்த பாவடையும், சேலையும் அணிந்து சலங்கையும் மேளமும் அதிர அவர்கள் நகரத்தில் உலா வருவதுண்டு. பயந்த சுபாவமுடைய பெண்கள் அவசர அவசரமாய் சில்லரைக்காசுகளை அவர்களிடம் எறிந்து விட்டு நடப்பதுண்டு. அவர்களின் அந்தப் பயம் நபும்சகங்களை எக்காளமிட்டு சிரிக்கத் தூண்டும். அதுமட்டுமல்லாது, நபும்சகங்கள் கொச்சையான வார்த்தைகளால் அந்தப் பெண்களின் உடல் உறுப்புகளையும் வர்ணிப்பதுண்டு.

சிறிய குழந்தைகளை திருடி அவர்களின் அந்தரங்க உறுப்புகளை கத்தி மூலம் வெட்டி அகற்றி அவர்களை பால் மாற்றுபவர்கள் நபும்சகங்கள் என்று மும்பைவாசிகள் தீர்மானமாக நம்புகிறார்கள். ஆனால் அதற்கு ஆதாரமில்லை. அப்படியே சாட்சிகள் இருந்தாலும் அவர்களுக்கு அதைப்பற்றி வெளியில் சொல்ல தைரியமில்லை. இல்லையென்றால் அந்தக் குப்பைக்கூளமான ஹிஜ்டா காலனியில் மீண்டும் மீண்டும் புதுமுகங்கள் தோன்றுவதெப்படி? அப்பகுதியானது எண்ணிலடங்கா நபும்சகங்களின் கூடாராமாகும். அனாயசமாக மேளங்களை ஒலிக்கச் செய்து கொண்டு சலங்கைகள் அதிர, உரத்த சப்தத்தில் பாடிக் கொண்டு அவர்கள் ஓய்வெடுப்பார்கள். பகல் முழுக்க எங்கேயோ சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

அங்கேயும் உண்டு ஒரு சங்கமும் அதன் தலைவரும். அவள் ராம் கிங்கரி என்னும் நபும்சகன். ராமு பாவு என்று அழைக்கப்படும் அவள் கருத்த உருவம் கொண்டவள். ஆறடி உயரமுள்ள ராமு பாவு எப்போதும் வெள்ளை நிற சேலை அணிபவள். வெற்றிலை சுவைத்து சுவைத்து குவிந்து போன உதடுகளுக்கிடையில் மைல்கல் போன்று காணப்படும் பற்களை எப்போதும் பார்க்கலாம். தகாத வார்த்தைகளின் பண்டிதை அவள்.

மாலைகளில் ராம் கிங்கரிக்கு எண்ணைய் தேய்த்து குளித்தல் என்பது வழக்கமான ஒன்று. அதற்கு நாலு அவுன்ஸ் பிரம்மி எண்ணையும், உதவியாளாய் அவளின் அருமைத் தோழி சக்குபாயும் மிகவும் அவசியம். கயிற்றுக் கட்டிலில் மல்லாந்து படுத்து, சக்குபாயின் பிடித்துவிடல்களை அனுபவிப்பது வழக்கம். அது முடிந்தவுடன் அரைமணி நேரம் நிலவின் ஒளியில் அங்குமிங்கும் உலாவுவதும் எப்போதும் நடக்கும் செயல். அந்த சமயத்தில் அங்கிருப்பவர்களின் நலன்களையும் தகவல்களையும் கேட்டறிந்து கொள்வதும் வழக்கம்.

ஒரு மாலை நேரத்தில் ராம் கிங்கரி கயிற்றுக்கட்டிலில் இருந்தபோதுதான் வித்யா அங்கு வந்தாள். குஜராத்திப் பெண் போல சேலை உடுத்தியிருந்த சேட்டாணி. கழுத்திலும் காதுகளிலும் ஆபரணங்கள் இல்லை. ராம் கிங்கரிக்கு அவள் கண்களின் அசாமான்யமான ஒரு தெளிவை பார்த்தவுடனே தெரிந்து விட்டது அவள் ஒரு மனநோயாளி என்பது.
‘ஒரு கிழவி வந்திருக்கிறாள்’ சக்கு தகவல் சொன்னாள்; ‘ஒரு குஜராத்தி சேட்டாணி’. ராம் கிங்கரி எழுந்திருக்கக்கூட முயற்சிக்காமல் படுத்துக்கொண்டே கேட்டாள்.

‘என்ன வேண்டும் கிழவி? இது எங்கள் ஹிஜ்டாக்களின் காலனி என்பது உங்களுக்கு தெரியாதா? இங்கே உங்களைப் போன்றவர்கள் யாருக்கும் நுழைய அனுமதியில்லை’

வித்யா மண்ணில் அமர்ந்து தன்னுடைய கால்களை நீட்டிக்கொண்டாள். ‘நான் மதியம் முதல் நடக்கத் துவங்கினேன்’ என்றவள்; ‘என்னுடைய சுந்தரிக்குட்டியை கண்டுபிடிக்காமல் வீட்டிற்கு திரும்பப்போவதில்லை என சபதம் செய்திருக்கிறேன்’ என்றாள்.

‘உங்களின் சுந்தரிக்குட்டியா? அவளை நீங்கள் இங்கு வந்து தேடினால் என்ன பயன்? இங்கே நபும்சகங்கள் மட்டும்தானே இருக்கிறோம்’ ராம் கிங்கரி கேட்டாள்.

‘அவள் நபும்சகனாகத்தான் பிறந்தாள். அவள், திருமணத்துக்குப்பின் பதினேழு ஆண்டுகள் காத்திருந்து, பல நேர்த்திக்கடன்களை செலுத்தியதால் எனக்கு கிடைத்த குழந்தை. உதித்துக் கிளம்பும் பௌர்ணமி நிலவை போன்ற முகம், உதட்டுக்கு மேல் ஒரு அழகிய மச்சம் உண்டு. அவளை தொட்டிலில் இருந்து திருடிக்கொண்டு போனது உங்களின் ஆட்கள்தான். அவள் கிடைக்காமல் நான் திரும்பப் போவதில்லை’ ’ என்றாள் வித்யா.

‘நாங்கள் குழந்தைகளை திருடுபவர்கள் அல்ல. குழந்தைகளை சில குடும்பத்தினர் எங்களுக்கு விற்பதுண்டு. நல்ல விலை கொடுத்து வாங்குவோமே தவிர திருடும் பண்பு எங்களுக்கில்லை. நபும்சகங்கள் உங்களை விட நேர்மையும் நெறியும் மிக்கவர்கள். நாங்கள் பூமித்தாயின் பிள்ளைகள்’ என்றாள் ராம் கிங்கிரி.

‘எப்போதிருந்து உங்கள் குழந்தையை காணவில்லை?’ சக்கு கேட்டாள்.

‘வரும் தீபாவளிக்கு பத்தொன்பது வருடமாகிறது. தீபாவளியன்றுதான் அவள் காணாமல் போனாள். நான் அதிகாலையில் குளிக்கச் சென்றபோதுதான் திருடன் அவளை கடத்தினான். நான் வேலைக்காரியின் அறையில் குழந்தையை கிடத்தியிருந்தேன். என் கணவருக்கும், அவரின் அம்மாவுக்கும் நான் நபும்சகனைப் பெற்றெடுத்தது பிடிக்கவில்லை. அவர்கள் குழந்தையின் கழுத்தை நெறித்து கொல்வதற்கும் தயாராயிருந்தனர். என்னுடைய அழுகையின் காரணமாக அவர்கள் குழந்தையை உயிருடன் விட்டனர். ஆனால் குழந்தையை வேலைக்காரியின் அறையில் வைத்து ரகசியமாகத்தான் வளர்க்க வேண்டும் என்று நிர்பந்தித்தனர். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் குழந்தை இறந்துவிட்டதாக அவர்கள் சொன்னார்கள். மேலும், இதனால் மனம் நொந்த நான் எனது சகோதரனின் உடல்நலத்தை கவனித்துக்கொள்ள அவரின் வீட்டிற்கு சென்றிருப்பதாகவும் சொன்னார்கள்’. ராம் கிங்கரி கட்டிலிலிருந்து எழுந்தாள். வித்யாவின் கண்கள் இருளிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

‘அப்படியென்றால் உங்களின் குழந்தைக்கு தற்போது பத்தொன்பது வயதிருக்கும். பௌர்ணமி நிலவைப்போல முகம் கொண்ட அழகிய பெண். எங்களில் இப்படிப்பட்ட யாருமில்லையே’ என்றாள் ராம் கிங்கரி.

‘ நான் என் மகளை அழைத்துச் செல்லாமல் வீட்டிற்கு திரும்புவதாயில்லை’ வித்யா சொன்னாள்.

அந்த சமயத்தில் ஒரு நபும்சகங்கள் கூட்டம் வாத்தியங்களை இசைத்துக்கொண்டு அங்கே வந்தனர். அவர்களின் சிலர் வித்யாவை கவனித்தனர். அவர்கள் பார்க்க பல விதமாயிருந்தனர். தாடியில் சிறு ரோமங்களுடன் ஆண்முகம் மாறாதவர்கள், அழகும் உடல்மொழியும் கொண்டவர்கள், சேலை அணிந்தவர்கள், சிவப்பு பாவடை அணிந்தவர்கள், நெற்றியிலும் கைகளில் பச்சை குத்தியவர்கள், அழகில்லாதவர்கள்….

‘இவர் யார்?’ ஒரு நபும்சகன் வித்யாவைக்காட்டிக் கேட்டாள். ராம் கிங்கரி சிரித்தாள். ‘அவருடைய அழகிய பெண் இங்கேயிருப்பதாக சொல்கிறாள் இந்தக் கிழவி. பத்தொன்பது வருடங்களுக்கு முன் திருடு போன குழந்தை. நிலவைப் போல முகமும், உதட்டுக்கு மேல் மச்சம் கொண்ட பெண்’.

‘அது நம்முடைய ருக்மாவாயிருக்குமோ?’ ஒருவள் சொன்னாள். அவள் அழகிதான். அவளின் உதட்டுக்கு மேல் மச்சமும் உள்ளது.

‘முட்டாள்தனமாக பேசாதே’ ராம் கத்தினாள். ‘இங்கே அப்படி யாருமில்லை. ருக்மாவிற்கு மச்சமில்லை’.

அந்த நபும்சகங்கள் இயலாமையினால் முணுமுணுத்தனர்.

‘இன்று தாதர் சென்று நடனமாடியதற்கு என்ன பரிசு கிடைத்தது. குழந்தையின் அம்மா சர்க்கரையும் கோதுமையும் கொடுத்தார்களா?’ கேட்டபடியே ராம் கிங்கரி அவர்களுடைய உடமைகளை பரிசோதித்தாள். ‘காட் கோப்பரில் ஞாயிறன்று பிறந்த குழந்தை ஆண்குழந்தை’. ஒருவள் சொன்னாள். ‘நாம் வரும் திங்கள்கிழமை அங்கு சென்று நடனம் செய்யலாம். அவர்கள் பணக்காரர்கள். பிஸினெஸ் செய்பவர்கள்….’

‘கிழவி எழுந்திருங்க.. விரைவாக வீட்டிற்கு திரும்ப போய் சேருங்கள். இருட்டியது தெரியவில்லையா? உங்களை தேடிக்கொண்டு உறவினர்களும் போலீசும் இங்கே வருவது எங்களுக்கு பிடிக்காது. இது எங்களுக்கேயான காலனி’. சக்குபாய் வித்யாவிடம் சொன்னாள்.

‘என் மகளில்லாமல் நான் வீட்டிற்கு திரும்பப் போவதாயில்லை’. வித்யா சொல்லியபடி மண்ணில் சரிந்து கிடந்து கண்களை மூடிக்கொண்டாள்.

‘உறங்க உத்தேசமா?’ ராம் கேட்டாள். ‘நாங்கள் உங்களை அப்படியே ரயில்நிலையத்திற்கு தூக்கிப் போவோம். உங்களுக்கு இங்கு அனுமதியில்லை’.

‘இங்கே எனது மகளால் வாழ முடியுமென்றால் என்னாலும் வாழ முடியும். நான் உங்களுக்காக சமையல் செய்யவும் தயாராயிருக்கிறேன். சுவையான ‘டோக்லா’வும் ‘காண்ட்யா’வும் செய்து தருகிறேன். என்னை இங்கிருந்து அனுப்பி விடாதீர்கள்’ என்றாள் வித்யா.

‘நீங்கள் பெரிய வீட்டின் சேட்டாணி. நாங்கள் சாதாரணமானவர்கள். எங்களுக்காக நீங்கள் சமையல் செய்வதையறிந்தால் உங்கள் வீட்டினர் கோபப்படுவார்கள்’ என்றாள் சக்கு.

‘அவர்கள் யாருக்கும் நான் தேவைப்படவில்லை. என்னை பைத்தியம் என்றேதான் அவர்கள் அழைக்கிறார்கள். என்னை சனியன் என்றே பாவிக்கிற எனது மாமியார், எப்போது என்னை பார்த்தாலும் மறுபடியும் குளிக்கச் செல்வாள்’ என்று வித்யா சொன்னாள்.

‘ராம்பாவூ, யார் இவர்?’ சிவப்பு பாவடையணிந்த அழகி வித்யாவைப் கைநீட்டி கேட்டாள். ‘ ஒரு குஜராத்திக்காரி வந்திருப்பதாக இப்போது தான் உள்ளே சுலு சொல்ல நான் கேட்டறிந்தேன்’.

‘ருக்மா, நீ உள்ளே போ’ ராம் சொன்னாள்; ‘இந்த நிமிஷமே நீ உள்ளே போக வேண்டும்’

நிலவொளி ருக்மாவின் முகத்தில் பிரதிபலித்தது. அவளின் உதட்டுக்குமேல் ஒரு அழகிய மச்சம் எல்லாவருக்கும் தெரியும் விதத்தில் இருந்தது. வித்யா அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘நான் ஐந்து நிமிடங்கள் இந்த நிலவொளியில் இளைப்பாறட்டுமா?’ ருக்மா கேட்டாள்; ‘எனது கால்கள் வலிக்கின்றன. சூடுபிடித்த கான்கிரிட் தளத்தில் எவ்வளவு மணிநேரம் நடனமாடினேன் தெரியுமா? இனியும் இதுபோல இளைப்பாறுதல் இல்லாமல் தொடர்ந்து நடனமாடினால் வரும் தீபாவளிக்குள்ளாகவே நான் இறந்து போய்விடுவேன்’.

‘அமங்கல வார்த்தைகளை பேசாதே’ ராம் சொன்னாள். ‘நீ இறந்து போனால் நான் எப்படி உயிர்வாழ முடியும். நீ எனது பச்சைக்கிளியல்லவா?’

வித்யா எழுந்து கயிற்று கட்டிலினருகில் வந்து நின்றாள். அவள் ருக்மாவின் முகத்தை கூர்ந்து பார்த்தபடியே கேட்டாள்:
‘இந்தப் பெண்ணுக்கு என்ன வயது?’

‘அவளுக்கு இருபத்தி நாலு வயதாகிறது’. சக்கு சொன்னாள்; ‘அவள் மைசூரைச் சேர்ந்தவள். இங்கு வந்து நான்கு வருடங்கள் தான் ஆகிறது. அவள் உங்களின் அழகான பெண்ணல்ல’.

‘அந்த மச்சம்..’ வித்யா முணுமுணுத்தாள்.

‘அது மச்சமில்லை. நெற்றியில் சாந்துப் பொட்டு வைத்துக்கொள்ளும் போது தெறித்தது.’ என்ற ராம் ருக்மாவிடம் கேட்டாள்; ‘உனக்கு மச்சம் இல்லைதானே’.

‘பார்க்கமுடியாத இடத்தில்தான் எனக்கு மச்சம் இருக்கிறது’. ருக்மா பெரிதாக சிரித்தபடியே சொன்னாள்; ‘அப்படித்தானே ராமுபாவு?’

‘உண்மை’ ராம் தன் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு சத்தமிட்டு சிரித்துக்கொண்டே சொன்னாள்; ‘ஹா…ஹா…ஹா… அந்த அழகிய மச்சத்தையும் உனக்கு காட்ட முடியாது பாட்டி’.

கட்டிலின் நுனியில் வலது காலை விரைப்பாக வைத்தும் கணுக்காலின் அழகை வெளிப்படுத்தியும் மகாராணியைப் போல நின்றிருந்த ருக்மாவின் முகத்தை இரண்டு கைகளாலும் ஏந்திக்கொண்டு வித்யா கேட்டாள்;

‘சொல் மகளே… நீ என்னுடைய அழகிய மகள்தானே.. என்னுடைய முலைப்பாலைக் குடித்துக்கொண்டு என்னுடைய உடலினை பற்றிக்கொண்டு தூங்கிய குழந்தை நீதானே.. உன்னுடைய தாய் நான்தானே?’.

‘இல்லை’ ருக்மா தனது சுருள்முடியை அள்ளி முடிந்துகொண்டு தெளிவாய் சொன்னாள். ‘இல்லை. என்னுடைய தாய் பூமிதேவிதான்’.

அவள் அவசரமாக எழுந்து தன் சிவப்பு நிற பாவடையின் சுருக்கங்களை சரி செய்து நடனமாடத் துவங்கினாள். அவள் பாவடையின் அடிப்பாகத்தில் இருந்த வெள்ளி சரிகை, நிலா வெளிச்சத்தில் ஜொலிக்கும் கடலின் அலைகள் போல தெரிந்தது வித்யாவிற்கு. அவள் ஏதோ மிக முக்கியமான ரகசியத்தை நினைவுபடுத்தியதைப் போல புன்னகை செய்து கொண்டிருந்தாள். அவளுடைய கைகள் புறாக்களின் படபடக்கும் இறகுகள் போல மாறின. அவளின் கொலுசு குலுங்கிக் கொண்டிருந்தது.

ராம்பாவு மத்தளத்தை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு வாசித்தாள். அதீத தலைவலியைப் போல அந்த மத்தள ஒலி வித்யாவை மிரட்டியது. நிலவின் ஒளி அதிகமாகிக்கொண்டே போனது. பித்தளை தங்கமானதாகவும், மரக்கிளைகளில் மரகதங்கள் தொங்கிக்கொண்டிருப்பது போலவும் அவளுக்கு தோன்றியது.

‘ஓ தாயே, எல்லையம்மா, என்னை காப்பாற்று’ ருக்மா பாடினாள்; ‘என் உடல் தீப்பற்றி எரிகிறது. என் கால்களுக்கு இடையில் இரண்டு கற்களுடைய அடுப்புக்கு தீ வைத்தது யார். என் ரத்தத்தின் கூறுகளில் அணைக்கட்டுகளை நிர்மாணித்தது யார்? ஓ தாயே, எல்லையம்மா, என்னைக் காப்பாற்று’.

தகரத் தகடுகள் கொண்டு செய்யப்பட்ட கதவுகளின் பின்னால் நிறைய நபும்சகங்கள் கருநிழல் போல நகர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஒரு வறட்சி தென்பட்டது. கண்மையினால் கருமையாக்கப்பட்ட கண்களின் மூலம் அவ்வறட்சி உலகை உற்றுப்பார்த்தது. நடனமாடும் அந்த கால்களைச் சுற்றி சிவந்த மண்துகள்கள் படிமங்களாய் உயர்ந்தன. திடீரென மழை பெய்தது. ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் மட்டுமே நீடித்த அந்த மழைக்கு எலியின் சிறுநீர் மணம் இருந்தது போல தோன்றியது வித்யாவிற்கு. அவள் தலை குலுக்கினாள்.

‘சரிதான்… நீ எனது குழந்தை அல்ல… எனது குழந்தை நல்ல வெள்ளை நிறத்தில் இருந்த குழந்தை…’ அவள் சொன்னார்.
‘உன் தோலுக்கு மண்ணின் சிவப்பு நிறமிருக்கிறது. நீ நிச்சயமாய் பூமியின் மகளாய்த்தான் இருப்பாய்.’

மேளச்சத்தம் கனக்கத் துவங்கியதும் வித்யா அந்த காலனியை விட்டு ரயில்நிலையம் நோக்கி நடக்கத் துவங்கியிருந்தாள். அந்த இருட்டிலும் ஸ்டேஷனின் சிவப்பு விளக்குககளை நன்றாகவே அவளால் பார்க்க முடிந்தது. நபும்சகங்களின் மேளச்சத்தம் அவளை பின்தொடர்ந்து கொண்டிருந்தது.

-1983 – மாதவிக்குட்டி – மலையாள இலக்கிய உலகில் தனி இடம் வகித்தவர் மாதவிக்குட்டி. கமலாதாஸ் என்ற பெயரில் கவிதைகளையும் எழுதி இருக்கிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *