நண்பன் தங்கராசு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 17,791 
 

துபாயிலிருந்து சகாதேவன் சென்னை வந்து மூன்று நாட்களாகிவிட்டன. கை நிறையச் சம்பளம் என்றதும் ஜனனியும் அவன் துபாய் செல்ல ஓ.கே. சொல்லிவிட்டாள்.
வருடத்திற்கு ஒருமுறை எப்படியும் வந்து விடுவான். பத்து நாள் லீவில் வந்தாலும் போதாது போலவே இருக்கும்.
வந்து முதல் மூன்று, நான்கு நாட்கள் சென்னையில் மனைவி குழந்தையோடு இருந்துவிட்டு மறுநாள் கிராமத்திற்கு அப்பா அம்மாவைப் பார்க்கச் செல்வான்.
சகாதேவனின் பெற்றோர் கோகூர் கிராமத்தில் தனியாக இருந்தார்கள். கொஞ்சம் நிலபுலன்கள். பூர்வீகச் சொத்து. காவிரி நீர் வரத்து சரிவர இல்லாது போக ஒருபோகச் சாகுபடிதான். உளுந்தும் பயறும் மானாவாரியில் விளையும்.
பழைய காலத்து ஓட்டு வீடு. பெரிய தோட்டம். காய்கறிகளுக்குப் பஞ்சமில்லை. தினமும் கீரை கிடைக்கும். விதை பிடிக்காத பச்சைக் காய்கள். நார்த்தை, எலுமிச்சை மரங்கள். தேவைக்குப் போக மீதி குருவித்திடல் வாரச் சந்தைக்குப் போய்விடும்.
அப்பா அம்மாவிற்கு கிராமத்தைவிட்டு கிளம்புவதில் விருப்பமே இல்லை. எனவே சகாதேவன் சென்னையிலிருந்து ஒவ்வொரு முறையும் வந்து போவது சற்று சிரமமாக இருந்தாலும் பழகிக் கொண்டான்.
அவனுக்கும் பிறந்த ஊரை மறக்க முடியவில்லை. நான்கு கிலோமீட்டர் நடந்துபோய் கீவளூரில் படித்தது, கல்லூரி லெவல் வந்ததும் திருவாரூர் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தது எல்லாமுமாகச் சேர்ந்து கிராமம் அவனைக் கட்டிப்போட்டுவிட்டது என்றே சொல்லலாம்.
அன்று சென்னையிலிருந்து பேருந்தில் புறப்பட்டு கீவளூரை அடைந்தபோது இரவு எட்டு மணியாகிவிட்டது. வழியில் பேருந்து பழுதுபட்டதால் தாமதம். எப்படியோ எட்டு மணிக்காவது வந்து சேர்ந்ததில் சமாதானமானான்.
கோகூருக்கு பஸ் வசதி கிடையாது. நடந்து போக வேண்டும் அல்லது சைக்கிளில் போகலாம்.
தெரிந்த வாடகை சைக்கிள் கடையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான். நிலா வெளிச்சம் மங்கலாக இருந்தது. ஊருக்கு தார்ச்சாலை வந்து விட்டது என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான். மண்சாலையைவிட ஓரளவுமேல்!
ஒக்கூரை அடுத்து ஆனைமங்கலம் தாண்டும்போது சைக்கிள் செயின் கழன்றுவிட்டது. கிரீஸ், ஆயில் எல்லாம் கண்டு மாமாங்கம் ஆயிருக்கும்போல. நிலவு வெளிச்சத்தில் எப்படியோ பொருத்தி மாட்டி, கையை கர்சீப்பில் துடைத்துக் கொண்டு சைக்கிள் சவாரியைத் தொடர்ந்தான்.
பூசாரி மடம் நெருங்கும்போது நாய் ஊளையிடும் சப்தம் நாராசமாய் கேட்டது. வெறிநாய் ஓடி வந்து கால்களைக் கவ்விவிடுமோ என்கிற பயம் சகாதேவனைப் பீதியடைய வைத்தது!
அவனுக்குப் பின்னாடி யாரோ சைக்கிளில் கர்புர்ரென்று மிதித்து வருவது நாய்கள் குரைக்கும் சப்தத்தையும் மீறிக் கேட்டது.
“”யாரு கணக்குப்பிள்ளை அய்யாவீட்டு சின்னய்யாவா?”
பரிச்சயமான குரல். “அட, இது தங்கராசு குரலாச்சே’ என்று மனம் நினைக்க, “”தங்கராசு, நீயாடா?” என்றான் சகாதேவன்.
சிறிது மௌன இடைவெளிக்குப் பிறகு பதில் வந்தது.
“”எப்படி சின்னய்யா கண்டுபிடிச்சீங்க?”
“”உன் நெனப்பிலேயே வந்தவனுக்கு உன்னோட குரலைத் திடுதிப்புன்னு கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது, தெரியுமா?”
இருவரும் முன்னும் பின்னுமாக இருட்டிலேயே பேசிக்கொண்டு வந்தார்கள். ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொள்ள முடியவில்லை.
தங்கராசுக்கு சகாதேவனின் வயசுதான். ஐந்தாவது வரை ஒன்றாகப் படித்தார்கள். அதன் பின் தங்கராசு அப்பாவோடு விவசாயம் பார்க்கப் போய்விட்டான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
தங்கராசைப்போல சகாதேவனுக்கு வேறு எவரும் நண்பனாக அமையவில்லை. முதன்முதலாக துபாய் சென்று திரும்பியபோது விலை உயர்ந்த கேமரா ஒன்றை வாங்கி வந்து அன்பளிப்பாகத் தந்தான்.
தங்கராசைப் போலவே சகாதேவனுக்கும் மாந்ரீகம், தாந்ரீகம் ஆகியவற்றில் ஈடுபாடு. புளியந்தோப்பில் இருந்த மந்திரவாதியோடு எத்தனையோ நாட்கள் பில்லி, சூன்யம், பேய், பிசாசு, ஆவி பற்றிய கதைகளை மந்திரவாதி சொல்லச் சொல்ல இருவரும் அவற்றில் மனம் லயித்துக் கேட்டு, கடைசியில் மன இறுக்கத்துடன் “இப்படியும் நடக்குமா’ என்று அதிசயித்து அசந்து போயிருக்கிறார்கள்.
சிலசமயம் உடல் சில்லிட போதுமென எழுந்து வந்து விடுவார்கள்.
திருமணமாகி சென்னை சென்றும் சகாதேவனால் அவற்றையெல்லாம் மறக்க முடியவில்லை. அவ்வப்போது நினைத்துக்கொண்டே தங்கராசையும் நினைவு கொள்வான். ஆங்கிலம் மற்றும் தமிழில் அவை சார்பாக வந்துள்ள புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாங்கிப் படிப்பான். ஒருமுறை கிராமத்திற்கு வந்தபோது மந்திரவாதி கிணற்றில் விழுந்து இறந்துவிட்ட செய்தியை தங்கராசுதான் சொன்னான்.
மூங்கில் பாலம் தாண்டியதும், “”சின்னய்யா, வர்றேன்… கருக்கல்ல பாக்கலாம்” என்று விடைபெற்றுக் கொண்டான். அவன் வீட்டிற்கு சாலை அங்கே பிரிந்து விடும். புளியந்தோப்பைத் தாண்டியதும் அவன் வீடு வந்துவிடும்.
சகாதேவன் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தான். அம்மா வாசலிலேயே கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அப்பா தூங்கிவிட்டார். அவர் எட்டரை மணிக்கெல்லாம் படுத்துக் கொண்டு விடுவார்.
வெகுநேரம் அம்மாவிடம் பேசியவாறே சாப்பிட்டான்.
“”நல்லகாலம் அம்மா, தனியா சைக்கிளில் வந்து கொண்டிருந்த எனக்குத் துணையாக தங்கராசு பேசிக்கொண்டே வந்தான் தெரியுமா?”
சகாதேவனை ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்து, “”அவனை நீ எப்படிப் பார்த்தே?” என்றாள்.
“”நான் வர்றச்சே, பாதி வழியிலே அவனும் என் பின்னால சைக்கிளில் வந்து பேசிக் கொண்டே வந்தான். ஏம்மா ஆச்சரியமா கேக்கறே?”
“”நீ அவனைப் பாத்தியா?”
“”இல்லே, இருட்டிலே முகம் தெரியலே, ஆனா எனக்காம்மா தங்கராசு குரல் தெரியாது?”
அவன் சொல்லி முடித்ததும் “கடகட’வென சிரித்தாள். பிறகு சொன்னாள்:
“”தங்கராசு ஒன்னோட பேசிக் கொண்டே வந்தானா?… போடா, போக்கத்தவனே… அவன் மேல திருவாரூர்கிட்ட வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் மோதி அந்த இடத்திலேயே போய்ச் சேர்ந்துட்டான்… ஆச்சு அதுவும் நாலைந்து மாசம் ஆகப் போறது… கண்றாவிச் சாவு… ஊரே திரண்டு போச்சு…”
“”நிஜமாவா, அம்மா?”
“”ஆமாம், உனக்குத் தெரிஞ்சிருக்கும்ன்னா நெனச்சேன்”
அவ்வளவுதான்! சகாதேவனின் முதுகெலும்பு சில்லிட்டது!
“அப்படியானால் அவ்வளவு தூரம் என்னோடு பேசிக்கொண்டு வந்தது யார்? தங்கராசின் அதே குரல். இரண்டு பேர்களுக்கும் தெரிந்தவற்றைத்தானே பொதுவாகப் பேசினான். அவன் இல்லாமல் இன்னொருவரால் வீட்டு விஷயம், ஊர் விஷயம் எல்லாவற்றையும் எப்படிப் பேச முடியும்?’
சகாதேவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மந்திரவாதி சொன்ன சம்பவங்கள், கதைகள் எல்லாம் நினைவுக்கு வந்தன!
“ஒருவேளை விபத்தில் இறந்துபோனதால் ஆவி அலைகிறதோ…?’
இரவு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். எழுந்து உட்கார்ந்து கொண்டான். இரண்டு மூன்று தடவைகள் தண்ணீர் குடித்தான். மனம் குமைந்து குமைந்து இருப்புக் கொள்ளாமல் தவித்தான். “இந்த முறை ஏன் கிராமத்திற்கு வந்தோம்’ என்று தோன்றியது.
காலையில் கண்ணாடியில் பார்த்தபோது முகம் களையிழந்திருந்தது. தூங்காத கண்கள் சுரந்திருந்தன.
ஆற்றங்கரைப் பக்கம் நடந்தான்.
தங்கராசின் தம்பி சோலை வண்டி மாடுகளை குட்டைபோல தேங்கி நின்ற ஆற்று நீரில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்.
“”வாங்க சின்னய்யா, என்ன பேயறைஞ்ச மாதிரி நடந்து வர்றீங்க?”
சகாதேவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. “இவன் ஏன் இப்படிக் கேட்கிறான்?’ மனம் பேதலித்தது.
“”சின்னய்யா, உங்களத்தான் கேக்கறேன், பதிலே சொல்ல மாட்டீங்கிறீங்க?… தங்கராசு அண்ணன்கிட்டதான் நீங்க பேசுவீங்கபோல”
“”அப்படியொன்றும் இல்ல”
“”கலகலன்னு பேசறவங்க கிலி பிடிச்ச மாதிரி இருக்கீங்களேன்னு கேட்டேன்”
“”மனசு சரியில்ல, அதான்”
“”தங்கராசு அண்ணனை வேணா வரச் சொல்லவா?”
“”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், ஆள விடு”
“”படிச்சுப் பட்டணம் போய், அதோட கடல் கடந்து போனவங்க இப்பிடி பித்துப் பிடுச்ச மாதிரி நடந்துக்கலாமா?… இப்ப உங்கள ஒண்ணு கேக்கப் போறேன், பதில் சொல்லணும் சின்னய்யா”
“”என்ன சோலை?”
“”நீங்க பேய், பிசாசு இதையெல்லாம் நம்புறீங்களா?”
“”நம்பாம இருக்க முடியலே சோலை… நேத்து ராத்திரி செத்துப் போன தங்கராசு சைக்கிள்ல என்னோட பேசிண்டே வந்தாங்கறதை என்னால நம்பாம இருக்க முடியலே… குழம்பிப் போய் தவிக்கிறேன்…”
“”சின்னய்யா இனிமேயும் உங்ககிட்ட உண்மையை மறைக்க விரும்பலே… இதோ பாருங்க, நேத்து ராத்திரி உங்களோட பேசிக்கிட்டே சைக்கிள்ல வந்தது நான்தான்… மிமிக்ரி செய்து பள்ளிக்கூடத்திலே பரிசெல்லாம் வாங்கியது உங்களுக்கு நினைவிருக்கும். நான் உங்ககிட்ட பேச்சுக் கொடுத்ததும், நீங்களே “தங்கராசு நீயாடா?’ன்னு கேட்டவுடனே நான் சுதாரிச்சுட்டேன். அதில போய் இவ்வளவு குழம்பிப் போவீங்கன்னு சத்தியமா நெனக்கலே… மன்னிச்சுடுங்க, சின்னய்யா” என்று கூறிய சோலை மாடுகளை ஓட்டிக்கொண்டு ஆற்றுமேடு ஏறினான்.
சகாதேவனுக்கு உயிர் வந்தது!
மந்திரவாதியிடம் மணிக்கணக்காக உட்கார்ந்து பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், கறுப்பு எனப் பேசியதையும், கேட்ட கதைகளையும் மனசிலிருந்து முதலில் தூக்கியெறியத் தீர்மானித்தான். நிலைமை திரும்ப நேரமாகியது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பாரம் இறங்க, கனத்திருந்த மனம் இலேசானது!
ஆற்றங்கரையிலிருந்து சகாதேவன் தெளிவோடு வீடு திரும்பினான்!

– ஜனவரி 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *