நட்பில் மலர்ந்த துணை மலராரம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 15,320 
 

இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறு செரு உறுப மன்னோ,
நல்லை மன்ற அம்ம பாலே மெல் இயல்
துணை மலர்ப் பிணையல் அன்ன, இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.
(குறுந்தொகை – 229 மோதாசனார்)

காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையில் காலைநேரச் சங்கு ஊதியதும், அயலவர்கள் பரபரப்பானார்கள். தொழிற்சாலைக்குச் சொந்தமான குவாட்டேஸில் அருகருகே வசித்த பாரமநாதனும், அப்துல் காதரும் ஒன்றாகவே வேலைக்குக் கிளம்பினார்கள். அவர்களின் பிள்ளைகளான ஜெகனும், ஹானியாவும் ஒன்றாகவே ஐந்தாம் வகுப்பில் படித்ததால் கல்லூரி வீதியில் உள்ள பாடசாலைக்கு ஒன்றாகவே போய்வருவார்கள். இருவரும் படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரர்களாக முன்னிலையில் இருந்தார்கள். ஹானியாவின் உறவினர்களால் அவர்களின் மதம் சார்ந்த அதிககட்டுப்பாடு இருந்தாலும், பெற்றோர்கள் புரிந்துணர்வு உள்ளவர்களாக இருந்ததால் இவர்கள் ஒன்றாகவே பழகினார்கள்.

அடிக்கடி ஹானியாவும், ஜெகனும் தங்களுக்குள் வேடிக்கையாகச் சண்டைபிடித்தாலும், சற்று நேரத்தில் ஒற்றுமையாகி விடுவார்கள். கடற்கரையில் ஒன்றாக மணல்வீடு கட்டி விளையாடி, ஒன்றாகவே அதிகநேரம் பொழுது போக்குவார்கள். இப்படித்தான் ஒருநாள் வீட்டிலே அவர்கள் கண்ணாமூச்சி விளையாடும் போது, ஓடிஒளிய இடமில்லாமல் இருவரும் ஓடிப்போய் ஸ்டோர்ரூமுக்குள் இருந்த பழைய கட்டிலின்கீழ் ஒளித்துக் கொண்டனர். இவர்களைத் தேடிவந்தவன் ‘யாராவது ஒளித்து இருக்கிறீங்களா?’ என்று இருட்டுக்குள் தேடினான். அருகே வந்தபோது கண்டுபிடித்திடுவானோ என்ற பயத்தில் இவனோடு நெருக்கமாக அவள் ஒட்டிக் கொண்டாள். வந்தவனால் அவர்களைக் கண்டு பிடிக்கமுடியவில்லை, அங்குமிங்கும் அறைக்குள் தேடிவிட்டு அவன் அறையைவிட்டு சென்றபின்பும், திரும்பவும் வருவானோ என்ற பயத்தில் அவர்கள் அசையாது அப்படியே கட்டிலுக்குக் கீழ் படுத்திருந்தனர்.

‘எருமை, கையை எடுடா..!’ என்ற போதுதான் இவன் விழித்துக் கொண்டான், தப்பான இடத்தில் அவளை தொட்டுவிட்டேனோ என்று அவன் ‘சொறிடா’ என்றான்.

‘விட்டா இப்படியே அணைச்சிட்டே இருப்பாய் போல..!’ என்றவள் உருண்டு கட்டிலிக்குக் கீழ் இருந்து வெளியேவந்தாள். அவளைத் தொடர்ந்து அவனும் வெளியேவந்தான்.

‘நில்லடி.. ஏண்டி என்னை எருமை என்று திட்டினாய்?’ எழுந்து வெளியே போக முயன்றவளின் பின்னலைப் பிடித்து இழுத்து நிறுத்திக் கேட்டான். ஏனோ அவளுடைய முகம் சிவந்து குழம்பிப் போயிருந்தது.

‘அப்படித்தான் திட்டுவேன், கையைவிடுடா’ என்றாள்.

‘மாட்டேன்..!’ என்றவனின் தலைமுடியைப் பிடித்திவளும் இழுத்தாள். ‘வி..ட..டி மா..டு..!’ என்று வலிதாங்க முடியாமல் கத்தியவனின் கைப்பிடி தளரவே, அவள் திமிறிக்கொண்டு அறையை விட்டு வெளியே ஓடிப்போனாள்.

என்ன நடந்ததோ தெரியவில்லை, கடந்த ஒரு வாரமாக ஹானியா தொலைந்து போயிருந்தாள். தான் தப்பு எதுவும் செய்யலையே, ஏன் தன்னோடு கோவிக்கிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை. பாடசாலை விடுமுறை என்பதால் என்ன நடந்தது என்று அறியவும் முடியவில்லை. உறவினர்கள் சிலர் அவளது வீட்டிற்கு வந்து போனபோதுதான், அவள் வயசுக்கு வந்து விட்டாள் என்பதைப் பெற்றோர் கதைத்தபோது புரிந்து கொண்டான்.

‘ஆதம்காக்கா ஆதம்காக்கா, அவரிட்ட சொல்லிடுங்கோ பூவரசம் மொட்டு ஒன்று பூவிரிஞ்சு போச்சுதென்று..!’ மனைவி கணவனுக்குச் செய்தி அனுப்பும் நாட்டுப்பாடல் வரியொன்று சட்டென்று அவனுக்கு நினைவுக்கு வரவே, அவள் வரும்போது அந்தப்பாடலைப்பாடி அவளை நையாண்டி செய்யத் தயாராக இருந்தான்.

‘ஆன்டி..!’ என்று அழைத்துக் கொண்டு ஹானியா வீட்டிற்குள் வந்தாள்.

‘என்னம்மா எப்படி இருக்கிறாய்?’

‘நல்லாயிருக்கேன் ஆன்டி, எங்க வாப்பாவுக்கு புத்தளம் சீமெந்து தொழிற்சாலைக்கு வேலை மாற்றம் வந்திருக்காம். நாங்க சனிக்கிழமை கிளம்பணுமாம்.’ என்று இவனுக்கும் கேட்கட்டும் என்று உரத்து சொன்னாள். அம்மா சமையலறைக்குள் நின்றாள்.

‘நீ போயிடுவியா ஹானியா?’ அருகே வந்த அவன் அதிர்ச்சியோடு கேட்டான். அவளைப் பிரிந்திடுவேனோ என்ற ஏக்கம் அவனது கண்களில் அவள் கண்டாள்.

‘நீ என்னை மறந்திடுவியாடா..?’ அவள் கண் கலங்கினாள்.

‘இல்லை’ என்று தலையை மட்டும் மெல்ல அசைத்தான்.

அவள் தந்த ‘பிரிவு’ என்ற அந்த அதிர்ச்சியில் இருந்து அவனால் மீளமுடியவில்லை. அவள் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, அருகே வந்து அவனது பிடரியில் கையைப் போட்டு அவசரமாக அருகே இழுத்து எட்டிக் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தவள், மறுகணம் எதுவும் சொல்லாமலே வெட்கப்பட்டு வெளியே ஓடிப்போனாள். இவன் ‘இவளுக்கு என்னாச்சு’ என்று தெரியாமல், கன்னத்தில் கைவைத்தபடி உறைந்து போய் அப்படியே அங்கே நின்றான்.

அதன் பிறகு அவளைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, சனிக்கிழமை மதியம் அவர்கள் கிளம்பினார்கள். அவன் கண்ணுக்குத் தெரியும்வரை அவள் விம்மியபடி கையசைத்துக் கொண்டே இருந்தாள். இவர்களுடைய நட்பு எல்லோருக்கும் வேடிக்கையாக இருந்தது. சின்னஞ்சிறுசுகள் சூதுவாது அற்றதுகள், ஒன்றாய்ப் பழகின அவர்களால் பிரிவைத் தாங்க முடியாமல்தான் இருக்கும், ஆனாலும் காலம் எல்லாவற்றையும் மறக்கடிச்சிடும் என்று பெற்றோர்கள் தங்களுக்குள் சமாதானப் படுத்திக் கொண்டார்கள். பிரிந்து சென்றாலும் பெற்றோர்கள் எப்போதாவது தொலைபேசியில் பேசிக்கொள்வார்கள்.

காலம் விரைந்து கொண்டிருந்ததால், அதற்கான வளர்ச்சியும், மாற்றங்களும் வெளிப்படையாகவே தெரிந்தன. கொழும்பில் உள்ள சட்டக்கல்லூரியில் அவனுக்கு அனுமதி கிடைத்தது. முதல்நாள் விரிவுரையின் போது, அவனுக்கு அருகே இருந்த இருக்கையில் ஒருத்தி வந்து அமர்ந்தபோது, இவனுக்குள் ஏதோ பட்சி சொன்னது. திரும்பிப்பார்த்தான். ஹானியாவின் முகச்சாயல் இருந்தது.

‘ஹானியா நீயா, நம்பமுடியலை..!’ அவன் ஒருகணம் அதிர்ந்துபோய் எழுந்து நின்றான். அவனைக் கண்டதில் அவளுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

‘ஆமாடா.. நீ எப்படி இங்கே..!’ என்றவள், ‘உட்காரு எல்லோரும் எங்களைப் பார்க்கிறாங்க’ என்றாள்.

‘அநியாயங்களைத் தட்டிக்கேட்கணும் என்றால் சட்டத்தரணி ஆகணும் என்று முடிவெடுத்தேன், அதுதான்..!

‘பார்ரா.., இரண்டு பேரோட சிந்தனையும் ஒண்ணாயிருக்கு, வாப்பா உம்மாவைவிட எங்க மாமன்தான்டா எனக்கு ரொம்ப தொல்லை கொடுக்கிறான். அப்பதான் யோசிச்சேன் உடைஞ்சு போயிருக்கிறதில அர்த்தமில்லை. படிக்கணும் மேலமேல படிக்கணும், படிப்பறிவு ஒண்ணுதான் எமக்கான விலைமதிக்க முடியாத செல்வம், அதனாலேதான் லாயருக்குப் படிக்கமுடிவெடுத்தேன். நீயும் இங்கே படிக்கவருவாய் என்று நினைச்சுப்பார்க்கவே இல்லை.’

‘அப்போ குடும்பமாய் கொழும்பில்தான் இருக்கிறீங்களா?’

‘ஆமா, ஐந்து வருசத்தால வாப்பாவுக்குப் புத்தளத்தில இருந்து தலைமையகத்துக்கு மாற்றல் கிடைத்தது. எனக்கும் அது சாதகமாய் அமைஞ்சிட்டுது. அதனாலே மேலே படிக்கணும் என்கிற எனது கனவையும் நிறைவேற்ற முடிஞ்சுது..!’

1983 ஆம் ஆண்டு, இறுதியாண்டில் இவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். யூலை மாதம் இலங்கையில் இனக்கலவரம் வெடித்திருந்தது. மலின அரசியல் காரணமாக, பெரும்பான்மை இனத்தவர்களில் சிலர், சிறுபான்மை இனத்தவரான தமிழர்களைத் தேடித்தேடி அடித்தும், வீடு வாசல்களை எரித்தும், கொள்ளையடித்தும், காழ்ப்புணர்வால் கொலையும் செய்யத் தயங்கவில்லை.

‘மகள் வரப்போறேன் என்று என்னை கேட்டாள், நான் மறுத்திட்டேன். வெளியில கலவரம் நடக்குது பாதுகாப்பில்லை என்றேன்.’

ஜெகன் எதுவும் பேசாது மௌனமாக இருந்தான்.

‘வாப்பா, அவங்க நம்மளுக்குச் செஞ்ச உதவியை மறந்திட்டீங்களா, நீங்க போகாட்டி நானே போறேன்னு கிளம்பிட்டாள். வெளியே நிலைமை இப்படியிருக்க எப்படி இவளை அனுப்பிறது. அதுதான் நானே கிளம்பி வந்தேன், கலவரம் அடங்குமட்டும் நம்மவீட்ல வந்திருப்பா’ என்றார் அப்துல் காதர்.

நிலைமை மோசமாவது புரிந்ததால், அவன் மறுப்பு சொல்லவில்லை.

‘எலவெடுத்தவனுகள் எதுசரி செய்வானுகள் நாமதான் அவதானமாயிருக்கணும்’ என்று வாய்க்கு வந்தபடி திட்டியவர், தன்னுடைய தொப்பியைக் கழற்றி அவனுக்குப் போட்டுவிட்டு, தனது ஸ்கூட்டரிலேயே அவனை அழைத்தச்சென்றார். தொப்பியில் மல்லிகைப்பூ அத்தர் வாசைன அடித்தது. அங்குமிங்குமாக வழியில் சில வீடுகள் எரிந்து கொண்டிருக்க, ‘ஜெயவேவா’ என்று கூக்குரலிட்டபடி ஒரு கூட்டம் கத்திகள், பொல்லுகளுடன் ஒவ்வொரு வீடாக நகர்ந்து கொண்டிருந்தது.

ஹானியா ஓடிவந்தாள். பெற்றோரின் முன்னால் தனது உணர்வுகளைக் காட்டாமல் தவிர்த்தாள். அவனை வெள்ளைநூல் தொப்பியோடு பார்த்ததும் அவளுக்குச் சிரிப்பு வந்தது, ஆனாலும் அடக்கிக்கொண்டாள். அவனுக்கு ஒரு அறை ஒதுக்கித் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்தாள்.

‘ஹானியா இங்கவாம்மா, பரோட்டா, மீன்சொதி, சம்பலிருக்கு, தம்பி பசியோட இருக்கும் திங்கக்கொடு’ என்றாள் உம்மா.

ஹானியா உணவு பரிமாறும்போது, ‘அங்கிள், ஆன்டிக்கு அறிவிச்சீங்களா, அவங்க துடிச்சுப் போயிருப்பாங்க’ என்று சொல்லி அவனது பெற்றோரோடு தொலைபேசியில் பேசச்சொன்னாள். அவன் பேசிமுடித்ததும் அவளிடம் போனைக் கொடுத்து ‘அம்மா பேசணுமாம்’ என்றான்.

‘ஆன்டி ஹானியா பேசறன்’ என்றாள். ஜெகனைப் பாதுகாப்பாய் கொண்டு வந்து வைத்திருப்பதற்கு மாறிமாறி நன்றி சொன்னாள் ஜெகனின் தாயார். மனசெல்லாம் நிறைந்த மகிழ்வோடு அவனுக்குக் ‘குட்நைட்’ சொல்லிப் படுக்கைக்குச் சென்றாள் ஹானியா.

படுக்கையில் அவளைப்பற்றி நினைத்துப்பார்த்தான். சின்ன வயதில் பழகிய ஹானியாவுக்கும், இப்போது பார்க்கும் ஹானியாவுக்கும் எவ்வளவு வித்தியாசம். ரொம்ப அழகாகவும், பொறுப்போடும் புரிந்துணர்வோடும் அவள் இருப்பதைப் பார்த்ததும் அவள்மேல் அவனுக்கு மதிப்பும், மரியாதையும் மட்டுமல்ல, ஒரு வகை ஈர்ப்பும் ஏற்பட்டது. அவளுடைய உபசரிப்பைப் பார்த்ததுமே, ‘ஹானியாவின் இந்த உபசாரம் உண்மையான நட்பிலானதா, அல்லது அதையும் கடந்ததா?’ அவன் ஒன்றுமே புரியாமல் அன்றிரவு தூக்கமின்றித் தவித்தான்.

அமுலில் இருந்த ஊரடங்குச்சட்டத்தைச் சிலமணிநேரம் தளர்த்தியிருந்தார்கள்.

‘உங்கிட்ட ஒண்ணு கேட்கணும் ஆனால் எப்படி சொல்றதென்று தெரியலை!’

‘நமக்குள்ள என்னதயக்கம், சொல்லு ஹானியா’ என்றான்.

‘வந்து..! ஒரு கணம் தயங்கியவள், ‘எனக்கு கல்யாணம் பேசி வந்திருக்கிறாங்க’ என்றாள்.

‘இவ்வளவு சீக்கிரமாய் உன்னைக் கட்டிக் கொடுக்கப்போறாங்களா, உனக்கு இஷ்டம் என்றால் அப்புறம் ஏன் தயக்கம்?’ என்றான்.

அவளுடைய முகம் மாறிப்போனது. முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு எங்கோ பார்த்தாள்.

‘உன்னோட பெயருக்கும் நடத்தைக்கும் ஒற்றுமையே இல்லையே!’ என்றான்.

‘என்ன சொல்றாய்?’ என்பதுபோல அவள் திரும்பிப்பார்த்தாள்.

‘ஹானியா என்றால் மகிழ்ச்சியானவள் என்றுதானே அர்த்தம்’

‘உனக்கெப்படி தெரியும்?’ அவள் ஆர்வத்தோடு கேட்டாள்.

‘தெரியும், கூகுள்ள தேடிப்பார்த்து தெரிந்து கொண்டேன். ‘சிரிச்சிட்டே இருப்பா, ரொம்ப நல்ல பெண்ணுடா என்று அம்மாவே உன்னைப்பற்றி அடிக்கடி சொல்லுவா. நீ அருகே இருக்கும்போது உன்னோட அருமை எனக்குத் தெரியலை, எப்பவும் உன்னோட சண்டை போட்டுக்கிட்டே இருந்தேன். நீ என்னை விட்டுப் பிரிஞ்சு போனதற்கு அப்புறம்தான் உன்னுடைய அருமை புரிந்தது. உன்னுடைய புன்சிரிப்பும், எப்ப சண்டை போட்டாலும் மனசில வெச்சுக்காம ஓடி வந்து ஒட்டிக்கொள்வதும்..! இப்படி ஒரு பெண்ணை என்னாலே நினைச்சும் பார்க்க முடியாதடி!’ அவன் கனவுலகில் சஞ்சரிப்பதுபோல மெல்ல முணுமுணுத்தபடி சிந்தனையில் மூழ்கிப்போனான்.

‘அப்ப, இப்படியொருபெண் கிடைச்சாதான் கட்டிப்பியா?’

‘எனக்குத் தெரிஞ்ச ஒரேயொரு பெண் நீதான், உங்க மதம் இதற்கு உடன்பட மாட்டாது என்று எனக்குத்தெரியும் ஹானியா. அதனாலேதான் ஆசைகளை வளர்க்காமல் நான் மௌனமாகிட்டேன்.’

‘உங்கவீட்ல சம்மதமென்றால் அப்படியொருபெண் உனக்குக் கிடைப்பாள்.’

‘அம்மாகூட நேற்று போன்ல பேசும்போது ஜாடைமாடையாய் உன்னைப்பற்றித்தான் விசாரித்தாள். நான்தான் அப்படியெல்லாம் ஆசைப்படாதேம்மா அவங்க தங்க மதத்தைமீறி எதுவும் செய்யமாட்டாங்க’ என்று சொன்னேன் என்றான்.

‘அவங்க சம்மதம் சொல்லிட்டாங்களா, எங்க வாப்பா, உம்மாவும் எனக்கு சம்மதம் சொல்லிட்டாங்க..!’ அவள் இன்பவதிர்ச்சியில் அவனைப் பார்த்தாள்.

‘என்ன சொல்றாய், எனக்கு ஒண்ணுமே புரியலை..!’ என்பது போல அவளைப் பார்த்தான்.

‘உண்மையிலே நீ ஒரு எரு…! சொல்ல வந்ததை சொல்லாமல் பாதியில் நிறுத்தினவள் அவனைக் கோபமாகப் பார்த்தாள்.

‘ஏண்டி என்னை எருமை என்று திட்டினாய்?’ நழுவமுயன்றவளின் பின்னலைப் பிடித்து இழுத்த வேகத்தில் அவள் சரிந்து இவன் மார்பில்விழ, இவனவளை இறுக அணைத்துக் கொண்டான்.

‘காலமெல்லாம் இப்படியே அணைச்சிட்டே இருப்பாயாடா..!’ தன்னைமறந்து அவள் புலம்பியதைக் கேட்கிறநிலையில் அவனுமில்லை, கையை எடுக்கவுமில்லை!

மனம் விரும்பினால், உண்மையான காதலுக்கு மதம் ஒருபோதும் தடையாக இருக்காது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தாலும், அவர்களின் அந்தநேர நிசப்தத்தைக் கலைப்பது போல, வெளியே எங்கோ தூரத்தில் கலகக்குரல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன.

Print Friendly, PDF & Email

2 thoughts on “நட்பில் மலர்ந்த துணை மலராரம்

  1. இந்தக் கதை கதாசிரியர் குரு அரவிந்தன் அவர்களின் மகுடத்தில் ஒளிரும் இன்னுமொரு தங்க இறகு என்றால் அது மிகையாகாது.

    காதலர் தினம் நெருங்கும் நேரத்தில் இந்தக் கதையைப் படிக்க நேர்ந்ததை ஒரு மகத்தான வாய்ப்பாகக் கருதுகிறேன்.
    ஜூனியர் தேஜ்
    சீர்காழி

  2. தாயகக் கனவுடன் கதையைப் போல இந்தக் கதையும் ஒரு நாஸ்டால்ஜிக் கதையே.
    பால்வேறுபாடு தெரியாத பருவத்தில் நடந்திருந்தாலும், பின்னாளில் அந்த நினைவுகள் உருமாறும் என்னும் மனவியல் தத்துவத்தை பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
    இனக்கலவரங்கயையும், மனிதநேயமற்ற செயல்பாடுகளையும் தவிர்க்க முடியாத இந்தச் சமுதாயத்தை

    மனம் விரும்பினால், உண்மையான காதலுக்கு மதம் ஒருபோதும் தடையாக இருக்காது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தாலும், அவர்களின் அந்தநேர நிசப்தத்தைக் கலைப்பது போல, வெளியே எங்கோ தூரத்தில் கலகக்குரல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன.
    என்று மிக அழகாய் முடித்த கதாசிரியர் குரு அரவிந்தன் தொப்பியில் இப்போது நான் ஓர் சிறகைப் பதிக்கிறேன்.
    நல்ல விழிப்புணர்வுச் சிறுகதை
    வாழ்த்துக்கள்
    பாராட்டுக்கள்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *