தோழி வேறு, மனைவி வேறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 15, 2014
பார்வையிட்டோர்: 8,451 
 

கையில் பிரித்த பத்திரிகையுடன் தன்னை நோக்கிவந்த மகளைக் கவனிக்காது, மும்முரமாக இட்லி மாவை வார்த்துக் கொண்டிருந்தாள் ராஜம்மா.

“அம்மா! இன்னிக்கு என் கதை வந்திருக்கு!”

அம்மா தன் உற்சாகத்தில் பங்கு கொள்ளமாட்டாள், குறைந்தபட்சம் அதைப் புரிந்துகொள்ளக்கூட அவளால் முடியாது என்பது தெரிந்திருந்தும், தேவியால் அந்த மகிழ்ச்சிகரமான செய்தியைப் பங்கு போட்டுக் கொள்ளாமல், இருக்க முடியவில்லை.

அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் தன் காரியத்தைக் கவனிக்கலானாள் தாய். “எவனையோ பாத்துட்டு, சொக்கிப்போன மாதிரி எழுதியிருப்பே!”

அவளுடைய குரலிலிருந்த கேலி பெண்ணுக்குப் புரியவில்லை. “பின்னே? நம்பளைச் சுத்தி நடக்கிறதைப் புரியவைக்கறதுதான் கதை!”

வெந்த இட்லிகளின்மேல் நீரைத் தெளித்து, இட்லித்தட்டைத் திருப்பித் தட்டினாள் ராஜம்மா. முதிர்ந்த கனிகள் தாமாக உதிர்வதுபோல் அப்பண்டங்கள் சுதந்திரம் அடைந்து விழுந்தன. பழகிய தோஷத்தில் அவள் கை தன்பாட்டில் வேலை செய்தது. மனமோ, மகளின் போக்கை எண்ணிக் குழம்பியது.

தான்தான் கணவனை இழந்து, படிப்போ, பணமோ இல்லாத நிலையில், உடலை வருத்தி சமையல்காரியாக உழைப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. மகளாவது தன்னைப்போல் திண்டாடக் கூடாது என்று, ஒவ்வொரு மாதமும் அரிசிக்கும், புத்தகங்களுக்கும் சரிசமமாகச் செலவழித்தது தப்பாகப் போயிற்றோ?

அக்கம் பக்கத்திலிருந்த இளம் பெண்களைப்போல் இல்லாது, வம்பிலும், ஊர்சுற்றுவதிலும் நாட்டமின்றி, வேலை முடிந்து திரும்பியதும், தனக்கும் வீட்டுக் காரியங்களில் கைகொடுத்துக்கொண்டு, ஓய்ந்த சமயங்களில் எல்லாம் படித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருந்த மகளைப்பற்றி முன்பெல்லாம் ராஜம்மாவுக்குக் கொள்ளைப் பெருமை.

“ஒங்க மக போட்டோ பத்திரிகையில வந்திருக்குதாமே!” என்று பலரும் கேட்டபோதுதான் விழித்துக்கொண்டாள்.

மேலுக்கு அவர்கள் பாராட்டுவதுபோல இருந்தாலும், அவர்களின் குணத்தை நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள் ராஜம்மா.

இந்தப் பெண்ணை யார் பரிசெல்லாம் வாங்கச் சொன்னது! சற்று பயம் எழுந்தது.

வித்தியாசமான பிறர்மேல் பொறாமை கொண்டு, அவர்களைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் பேசும் உலகம் இது!

சிறிது யோசித்ததில், நம்மீது குற்றத்தை வைத்துக்கொண்டு, மற்றவரை நோவானேன் என்று தோன்றியது.

`என்னதான் இருந்தாலும், இப்படியா ஒரு பெண்பிள்ளை எழுதுவாள், கொஞ்சங்கூட கூச்சநாச்சமில்லாது!’ என்று அவள் யோசனை போயிற்று.

முப்பது வயதுவரை கல்யாணமாகாதவள், தன் கனவுகளை எல்லாம் எழுத்தின் மூலம் நனவாக்கிக்கொள்ளப் பிரயாசைப்படுகிறாள்! வேறென்ன!

போன மாதம் ஒரு கதை எழுதியிருந்தாளே! அந்தக் கதையின் நாயகிக்குத் தன் மனம் கவர்ந்தவனிடம் என்னென்ன பிடிக்கும் என்று அனுபவித்து எழுதியிருந்தது இருக்கிறதே! வெட்கக்கேடு!

அட, கிருதா வளர்த்துக் கொண்டிருந்தான், ஆஜானுபாகுவாக இருந்தான் என்று பொதுப்படையாக ஏதாவது எழுதிவிட்டுப் போகவேண்டியதுதானே!

இந்தக் கடங்காரி என்னமோ, அந்தக் கதாநாயகத் தடியனோடு ஒன்றாக இருந்துவிட்டு வந்தமாதிரி அவனை அணுஅணுவாக வர்ணிக்கிறாள் –`அவன் கரம் பட்டவுடன் இப்படி இருந்தது,’ `அவன் குரலைக் கேட்டவுடன் என்னுள் உண்டான கிளர்ச்சி — இப்படி!

பெயர் கெட்டுவிடுமே என்று கொஞ்சமாவது அக்கறை இருந்தால்தானே! ஹூம்! அவளுக்காக கவலைப்படத்தான் நான் ஒருத்தி இருக்கிறேனே!

புத்தி சொன்னால், அது என்ன சிரிப்பு!

“ஏம்மா? ஆம்பளைங்களுக்குத்தான் நம்பளை வர்ணிக்கத் தெரியுமா? பெண்களுக்கும் கற்பனா சக்தி உண்டுன்னு மத்தவங்களுக்கு எப்படிப் புரியவைக்கிறது?”

சரி, இவள் எதையோ எழுதித் தொலைக்கட்டும்! ஆனால், வர வர, எந்த விஷயத்திலுமே பிறரோடு ஒத்துப் போவதில்லையே!

இவளை இப்படியே விட்டுவிடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தவளாக, “நாளைக்கு நம்ப சாந்தாவோட கல்யாணம். அத்தை நேரிலே வந்து அழைச்சுட்டுப் போயிருக்காங்க,” என்று மெள்ள ஆரம்பித்தாள் ராஜம்மா.

தேவி அலட்சியமாகச் சூள் கொட்டினாள்.

எந்த விழாவுக்குப் போனாலும், `ஒனக்கு எப்போ கல்யாணம்?’ என்று, என்னமோ துக்கம் விசாரிப்பதுபோல் பார்ப்பவரெல்லாம் கேட்பார்கள். இதற்காக அலங்காரம் பண்ணிக்கொண்டு, தான் போக வேண்டுமா?

கல்யாணம் பண்ணிக்கொண்டு இவர்களெல்லாம் என்ன கிழித்து விட்டார்களாம்!

`நாங்களெல்லாம் சுதந்திரத்தை இழந்து, கட்டியவனுக்கு அடிமையாக வாழ்கையில், உனக்கு மட்டும் பெயரும் புகழுமான ஒரு வாழ்வா!’ என்று அவர்கள் பொருமுவதாகத்தான் அவளுக்குப் பட்டது. இந்தமாதிரி உதட்டளவில் உறவு கொள்வதைவிட மௌனமாக இருக்கலாம்!

வெளிப்படையாக, `நாம் இப்பிறவி எடுத்ததே கணவனுக்குச் சேவை செய்து கிடக்கத்தான்!’ என்பதுபோல் அவர்கள் பேசிக்கொண்டாலும், அச்சேவையால் கிடைத்த பூரிப்பும், நிறைவும் எங்கே?

ஏன் அவ்விழிகளில் எப்போதும் ஆத்திரமும், பொறாமையும்?

எல்லாரும் கண்ணை மூடிக்கொண்டு நடந்தால், நானும் அப்படியே அவர்கள் பின்னால் போகவேண்டுமா, என்ன! இருக்கிற கொஞ்ச காலத்தில் என் இஷ்டப்படி வாழ்ந்துவிட்டுப் போகிறேனே!

அப்படி ஒரு வேளை, என்னையும் மீறி, யார்மேலாவது காதல் தோன்றி, `இவர் இல்லாமல் நான் வாழ முடியாது!’ என்ற நிலை வந்தால், அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

எண்ணமிடும்போதே தேவிக்குச் சிரிப்பு வந்தது.

எதையும் மிகுந்த கவனத்துடன், தடுமாற்றத்துக்கே இடம் கொடாது, பகுத்தறிந்து பார்க்கும் தன்னைப் போன்றவர்களுக்கு இந்தக் காதல் எல்லாம் எங்கே வரப்போகிறது!

“என்னடி, தானே சிரிச்சுக்கறே?”

திடுக்கிட்டு விழித்தாள் தேவி. அவளைப் பொறுத்தவரை, கனவுலகில்தான் அர்த்தம், இன்பம் எல்லாம்.

“எனக்கு இதிலே எல்லாம் இண்டரெஸ்ட் இல்லேம்மா. நீங்க போயிட்டு வாங்க!”

தாய்க்குக் கோபம் வந்தது. “ரொம்ப நல்லா இருக்கு! தலை நிறைய பூ வைச்சுக்கிட்டு நீ போறதும், வெள்ளைப்புடவை கட்டிட்டு நான் போறதும் ஒண்ணாகிடுமா?”

விவாதத்துக்குத் தயாரானாள் மகள். “ஏம்மா? பொட்டில்லாத நெத்தியோட ஒங்களைப் பாத்தா, `நாளைக்கு நாம்பளும் இந்த மாதிரி ஆகிடுவோமோ!’ன்னு அந்தக் கல்யாணப் பொண்ணுக்கு பயம் வந்திடுமா? நான்தான் கேக்கறேன், இந்த ஒலகத்திலே எதுதான் நிலைச்சிருக்கு? செடி பட்டுப்போகுது. பூ வாடிப்போகுது. இதுல, புருஷன் சாகறதை மட்டும் ஏன் பெரிசு பண்ணணும்? அவன் இல்லாம போனா, ஒரு பெண் பூஜ்யம்தானா?” நினைவு தெரிந்ததிலிருந்து தாய்க்குச் சமூகத்தில் அளிக்கப்பட்டிருந்த தாழ்ந்த நிலை அவளை அப்படிப் பேசவைத்தது.

ஆனால், அதற்கு உள்ளாகி இருந்தவளுக்கு அதை ஏற்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. மற்ற பெண்கள் அடையாத துன்பத்தையா அவள் அனுபவித்துவிட்டாள்!

`பெண்களைப் படிக்க வைத்தாலே இப்படித்தான்!’ தெரிந்தவர்கள் எல்லாம் அவளைப் பார்த்து எள்ளி நகையாடுவதுபோல் இருந்தது ராஜம்மாவுக்கு.

என்ன பேச்சு பேசுகிறாள்! இதெல்லாம் மேடையில் முழங்குவதற்கு வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம். இல்லை, பத்திரிகையில் எழுதிவிட்டுப் போகலாம்.

பொதுக் கூட்டங்களுக்கு வருகிறவர்களும், படிப்பதைத் தவிர வேறு வேலை அல்லாத சோம்பேறிகளும்தான் உப்பு சப்பில்லாத வாழ்வு வாழ்ந்து அலுத்துப்போய், தீனியாய் ஏதாவது காரசாரமாகத் தேடுகிறார்கள்.

இவளை என்ன செய்வது!

பெற்ற மகளே புதிராகத் தோன்றும் தருணங்களில் ஓர் ஆண் பக்கத்திலிருந்தால், எவ்வளவு நம்பிக்கையும், தைரியமும் ஊட்டுவதாக இருக்கும் என்ற எண்ணம் அவளையும் மீறி எழும். ஒரு நீண்ட பெருமூச்செறிந்துவிட்டு, அதன்வழி அந்த `தகாத’ எண்ணத்தையும் வெளியே தள்ளப்பார்ப்பாள்.

அது எப்படி இந்தப் பெண் ஆணின் உறவையே நாடாது இப்படி இருக்க முடிகிறது என்ற வியப்பு அடிக்கடி ஏற்படும் அவளுக்குள்.

கவனமாக அழகுசெய்துகொள்ளும் மகளையே புன்சிரிப்புடன் பார்த்தபடி நின்றாள் ராஜம்மா. தான் இவ்வளவு காலமும் பயந்ததெல்லாம் அனாவசியம்!

ஒருவருக்கு எப்போதும் இல்லாத வழக்கமாக, அலங்காரத்தில் விசேட அக்கறை தோன்றினால், அதற்கு ஒரு காரணம்தான் இருக்க முடியும். யாரோ அவரது அந்தரங்கத்தைத் தொட்டுவிட்டார்கள்!

வேறு யார், நாள் தவறாது தேவியை போனில் அழைத்து, ஒரு மணிக்குக் குறையாது பேசும் குமரனாகத்தான் இருக்க வேண்டும்.

ஒரு இலக்கியக் கூட்டத்தில் பார்த்தபோது, `நான் ஒங்க விசிறி!’ என்று தேவியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் குமரன். சில நிமிடங்கள் உரையாடிய பின்னர், தம் இருவருக்கும் எத்தனை விஷயங்களில் கருத்து ஒத்துப்போகிறது என்பது புரிய, ஏதோ இன்பம் உண்டாயிற்று. இருவருக்குமே.

நாள் தவறாமல் தொலைபேசியில் பேசினார்கள். கணினிவழி தம் எண்ணங்களைப் பரிமாறிக்கொண்டார்கள். சமூகத்தின் குறுகிய பார்வையை, அதனால் நலிந்த மனங்களை. நெருங்கிவிட்டதைப்போல் உணர்ந்தார்கள்.

“ஒங்களை மாதிரி துணிச்சலா எதிலேயும் ஈடுபடற பெண்ணைத்தான் இத்தனை நாளா தேடிக்கிட்டு இருக்கேன்!”

நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்ததுதான் என்றாலும், ஒரு கணம் திணறிப்போனாள் தேவி.

தன் மன ஓட்டத்தை நன்றாகப் புரிந்துகொண்டு, தனக்கு மதிப்பு கொடுப்பவர்! இவரை வாழ்க்கைத் துணைவனாக ஏற்றுக்கொண்டால், தன் மூலம் எல்லாப் பெண்களுக்குமே பக்கபலமாக அமைவார்.

அவ்வளவு ஏன்? ஒரு வழியாக உலகத்தின் வாயை அடைத்தமாதிரியும் இருக்கும்.

ஒரு பெண் கணவனின் பக்கத்தில் நடந்து சென்றால், அவர்களிடையே இருக்கும் அந்தரங்கமான உறவு நெருக்கமோ இல்லையோ, அந்தப் பெண்ணைக் கௌரவமானவளாகக் கருதும் முட்டாள் உலகம், தனித்து நிற்கும் தைரியம் படைத்த பெண்ணை சந்தேகக் கண்ணுடன்தான் நோக்குகிறது. இவள் தலைகுனிந்து, புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்துக்கொண்டு… அடேயப்பா! ஏதேதோ செய்ய வேண்டும், தன் புனிதத்தைக் காட்ட.

இதற்குமுன் சவாலாக ஏற்றிருந்தது இப்போது பிரச்னையாகப் பட்டது. இன்னும் எதற்காக இப்படிப் போராட வேண்டும் என்ற அலுப்பு பிறந்தது தேவிக்கு.

“அம்மா! இன்னிக்கு வெளியே போயிட்டு வந்ததும், ஒரு மகிழ்ச்சியான சமாசாரத்தை ஒங்ககிட்ட சொல்லப்போறேன்!” குழந்தைபோல் பெருமிதத்துடன் கூவியபடி வெளியே நடந்தவளை யோசனையுடன் பார்த்தபடி நின்றாள் ராஜம்மா.

எவ்வளவுதான் வீறாப்பு பேசினாலும், இயற்கையை எதிர்த்து, தன்னையும் அறியாது எழும் ஆண்-பெண் கவர்ச்சியை எதிர்த்து, இதுவரை யார், என்ன செய்ய முடிந்திருக்கிறது!

அதற்கென்ன, தேவி தன்னைப்போல் ஒருவனுக்காகக் காத்திருந்திருக்கிறாள்! பழைய காலம் மாதிரியா, `ஆண்பிள்ளை’ என்று ஒருவன் இருந்தாலே போதும் என்று கழுத்தை நீட்ட!

ராஜம்மா விழித்தபடியே கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டு இருந்தபோது திரும்பி வந்தாள் தேவி.

புறப்படுகையில் அவள் நடையில் இருந்த துள்ளல் இப்போது இல்லை. பூரிப்பு குடிகொண்ட இருந்த முகத்தில் கடுமை.

“என்னடி?” என்றாள் தாய், பதட்டத்துடன்.

“மொதல்ல இதுக்குப் பதில் சொல்லுங்கம்மா!” என்றாள் பெண், அதிகாரமாக. “ஒருத்தர் தெருவைக் கடக்க பயந்து, முன்னாலே கால் வெச்சு, உடனே பஸ்ஸோ, காரோ வர்ற சத்தத்தைக் கேட்டு அதைப் பின்னாலே இழுத்துக்கிட்டு — இந்தமாதிரி திண்டாடிக்கிட்டு இருந்தாரு. அப்போ நான் என்ன செஞ்சிருக்கணும்?”

“இது என்னம்மா கேள்வி? ஆபத்திலே உதவ யாரைக் கேக்கணும்?” பதிலாக வந்தன இரு கேள்விகள்.

மகளின் முகத்தில் இறுக்கம் குறைந்து, தெளிவு பிறந்தது. “அப்பாடி! நீங்ககூட எங்கே, `கண்டவன் கையை நடுத்தெருவிலே பிடிச்சு அழைச்சுக்கிட்டுப் போறியே! ஒனக்கு மூளை, கீளை இருக்கா?’ன்னு கேட்டுடுவீங்களோ அப்படின்னு பயந்துட்டேன்!”

“யாரு, குமரனா அப்படி அசிங்கமா கேட்டாரு?”

“ஒரு கத்து கத்தினாரு, பாருங்க, `எவனோ, எப்படியோ போறான், ஒனக்கென்ன?’ன்னு! எனக்கு வந்த ஆத்திரத்திலே ஒண்ணும் பேசாம, அங்கேயே ஒரு டாக்ஸி பிடிச்சுக்கிட்டு வந்துட்டேன்!”

ராஜம்மாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. அதை மறைத்துக்கொண்டு, “விடு, போ! ஒனக்குன்னு ஒருத்தன் பிறக்காமலா போயிருப்பான்!” என்று ஆறுதல் கூறிவிட்டு, “நீ வெளியில சாப்பிடுவேன்னு நான் ஒண்ணும் சமைக்கலே,” என்றாள், மன்னிப்பு கேட்கும் தொனியில்.

கணினிமுன் உட்கார்ந்துகொண்ட தேவிக்கு, எதுவும் காதில் விழவில்லை.

ஒருவருடன் காலம் பூராவும் வாழ வேண்டுமென்றால், பெண் தனக்கென சில விருப்பு வெறுப்புகளும், உரிமைகளும் — அவை கணவருடைவைகளிலிருந்து மாறுபட்டிருந்தாலும், அவைகளை நிலைக்க வைத்துக்கொள்வது தகாத ஆசையா?

ஏன் இப்படி?

தனது தனித்துவம் மட்டுமே போதிய தைரியத்தை அளிக்காததால், மனைவியையும் தன் ஆதிக்கத்துக்குக்கீழ் கொண்டுவரப் பார்க்கிறானோ ஒவ்வொரு ஆணும்? இதனால் ஏதோ புதிய பலம் வந்துவிட்டதைப்போன்ற அற்ப நிறைவோ?

தேவி எந்த அனுபவத்தையும் வீணடிப்பதில்லை.

தனக்குள் எழுந்த ஒவ்வொரு வினாவையும் ஒரு கதையாக்கி, விடை காண முயலப்போகிறாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *