தொடாமல் வீழ்ந்தேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 12,072 
 

இருள். எங்கும் இருள். கண் திறந்தாலும், மூடினாலும் எந்த ஒரு வித்தியாசமும் அறிய முடியாத பேரிருள் இது. மண் வாசனையும் மலர் வாசனையை மட்டுமே உணர முடிகிறது. சற்று நேரத்திற்கு முன்பே மனித குரல்கள் யாவும் தேய்ந்து ஒரு புள்ளியில் மறைந்துவிட்டது. இவ்வுலகின் எந்த சக்தியாலும் தீண்ட முடியாத ஓரிடத்தில் அடைக்கப்பட்டுவிட்டேன். நாற்பது வயதான நான் சில மணி நேரம் முன்பு இறந்துவிட்டதாக எண்ணி, உறவுகள் என்னை பார்த்து அழுதுவிட்டு, பேசிவிட்டு, சிரித்துவிட்டு, புதைத்துவிட்டு கலைந்து விட்டார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். இல்லை, இல்லவே இல்லை.

என்னை மண்ணால் மூடி புதைத்த பின்பும் உடலளவில் எந்த சிரமும் ஏற்படவில்லை. சுவாசமும் முட்டவில்லை. கொஞ்சம் ஆழ்ந்து உணர்ந்தால் என் உடல், மனித உடலாகவே இல்லை. எனக்கு உடல் உறுப்புக்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக என் வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்கள், ஏமாற்றங்கள், ஆசைகள் யாவும் நரம்பாக மாறி, ரத்தமாக பாய்ந்து ஒரு உருவமில்லாத தேகம் உருவாவதை கண்டிப்பாக விஞ்ஞானம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்புது தேகம் கொண்டு இவ்வுலகை மீண்டும் காண ஆவல் கொண்டு இந்த மண் குவியலை முட்டி மோதுகிறேன். எந்தொரு மாற்றமும் இல்லை. யாதொரு அசைவும் இல்லை. ஐயோ! என்னால் மண்ணை தொடவே முடியவில்லை. தொட முடியவில்லை. தொடுதல். தொடல்.

தொட்டால் தன் இலைகளை மூடிக்கொள்ளும் தொட்டாசிணுங்கியைப் போல் இல்லை மனிதன். அவன் தொடப்பட்டால் தன் மனமென்னும் இலையை விரித்துக் காட்டுகிறான். தொடப்படுவதற்காக தன் ஆயுள் முழுவதும் ஏங்கித் தவிக்கிறான். அப்படி தொடப்படாமலே போனவன் மிருகம் ஆகிறான். இல்லை, மிருகங்கள்கூட தொடப்படுவதற்கு ஏக்கம் கொள்கின்றன. மூர்க்கம் நிறைந்தவனாக ஆகிறான் என்பதே சரி. அப்படி ஒரு மூர்க்கமான மனிதனாகவே என் வாழ்நாள் முழுதும் கழிக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணமே என் இறுதி நாட்களில், ஆயிரம் பாம்புகள் நிரம்பிய ஒரு கிணற்றுக்குள் என்னை தள்ளிவிட்டது போன்ற ஒரு அருவருப்பை ஏற்படுத்தியது.

எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே என்னை யார் தொட்டாலும் ஒரு இனம் புரியாத வெறுப்பை உணர்ந்திருக்கிறேன். மற்றவர்களிடம் கை குளுக்குவதோ, கை கோர்ப்பதோ, தோளில் கைபோடுவதோ எனக்கு விருப்பமற்ற செயலாகவே இருந்தது. தொட்டாசிணுங்கிப் போலத்தான் வாழ்ந்தேன். ஆனால் மறுபுறம் தொடுதலுக்காக ஏங்கியும் தவிப்பேன். என் சகல உணர்வுகளையும் வெளிக்கொட்ட ஒரு தொடுதலுக்காக எதிர்பார்த்து கிடக்கும் அதே வேளையில், அப்படி ஒரு சமயம் வாய்க்கும்போதும் அதிலிருந்து தப்பித்து ஓடும் ஒரு விசித்திரமான மனநிலையும் இருந்தது. என் செல்வி அத்தையை முதன்முதலில் பார்த்ததும் அப்படி ஒரு மனநிலையில்தான்.

நான் பிறந்ததிலிருந்தே மேச்சேரியிலிருந்த ஆறுமுகம் மாமா வீட்டில்தான் வளர்ந்தேன். நான் பிறந்தவுடன் அம்மா இறந்துவிட்டாள். அப்பா வேறொரு கல்யாணம் பண்ணிக்கொண்டு சேலம் பக்கம் குடிபோய் விட்டதாக மாமா சொல்லுவார். அதனால் மாமாதான் என்னை வளர்த்தார். மாமா, ஆற்றங்கரை ஓரத்திலிருந்த தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில், தென்னை, மஞ்சள் விவசாயம் செய்து வந்தார். ஆள் நல்ல கருப்பாக கட்டுமஸ்தான உடம்பு கொண்டவர். அவர் சாதாரணமாக பேசுவதே சண்டைக்கு வருவது போலிருக்கும். என்மேல் மிகுந்த அன்பு கொண்டவர். ஆனால் அதை எப்போதும் வெளிக்காட்ட மாட்டார்.

என்னுடைய நான்காம் வயதில், பொங்கல் பண்டிகை முடிந்த ஒரு வாரத்தில் மாமா திடீரென்று திருமணம் செய்துகொண்டு செல்வி அத்தையை வீட்டுக்கு கூட்டி வந்தார். அப்போதுதான் முதன் முதலில் செல்வி அத்தையை பார்த்தேன். பழுப்பு நிற பட்டுபுடவையில், மணக்கோலத்தில் மிக அழகாக இருந்த அவளை பார்த்தவுடன் ஏனோ எனக்குள் ஒரு சந்தோஷம் பாய்ந்தது. வெட்கம் வந்தது. அவள் ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் மாநிற தேகம் கொண்டிருந்தாள். அவள் கண்கள் அழுதுஅழது லேசாக வீங்கி இருந்ததுபோல தெரிந்தது.

மாமா அத்தையிடம், “ந்தா, இவன்தான் வேலு”

“டேய்! உனக்கு இவ அதை வேணும். சரியா…செல்வி அத்தை”

மாமா சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார். அதை என்னை பார்த்து புன்னகைத்தபடி, என் அருகே வந்து, ” வாடா, என்ன வெட்கம்? இனிமே நான்தான் உனக்கு அம்மா மாதிரி” என்று சொல்லிவிட்டு, என்னை கட்டியணைத்தபடி தூக்கி என் மூக்கில் முத்தமிட்டு சிரித்தாள். அந்த ஒரு வினாடியில் என் உடல் முழுக்க கூசிப்போனது. அருவருப்பு உண்டானது. என் உடலை வளைத்து நெளித்து அவளிடமிருந்து விடுபட்டு, தெருவில் இறங்கி ஓடினேன். ஒரு குமட்டல் உண்டாகி சாலையின் ஓரத்தில் வாந்தி எடுத்தேன். அருகிலிருந்த வாய்க்காலில் வாய் கொப்பளித்தபின் ஆசுவாசமாக இருந்தது. வாயில் புளிப்பு சுவை ஒட்டியிருந்தது. அன்று அத்தையிடம் வாங்கிய முத்தம்தான் என் வாழ்நாளில் பெற்ற முதல் முத்தம். ” நான் இன்னொருமுறை வாந்தி எடுத்தாலும் பரவாயில்லை, இன்னொரு முத்தம் கொடு என் அத்தே” எனத் தோண்றியது.

அதை என்மேல் மிக அன்பாக இருந்தாள். அவள் என்னை தொட்டுப்பேசும் போதெல்லாம் இனம் புரியாத வெறுப்பு உண்டான அதே வேளையில், அவள் என்னை தொட வேண்டும் என்ற விருப்பமும் இருக்கும். காலப்போக்கில், அவளும் என் உணர்வை புரிந்துகொண்டு என்னை தொடுவதை நிறுத்திக்கொண்டாள்.

என் வாழ்வில் நான் பார்த்த ஒரே அழகி அத்தைதான். சில மாதங்கள் கழித்து குட்டி அழகியும் வந்தாள். சுந்தரி. என் அத்தைக்கு அவள் மட்டும் மகளாக பிறந்ததால் அவள்மேல் எனக்கு பொறாமை வந்தது அப்போது.

எனது ஐந்தாம் வயதில், ஒருநாள் விளையாடுவதற்காக மாமா வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் களிமண் எடுப்பதற்காக போனபோது, அத்தை அங்கிருந்த புங்க மரத்தின் நிழலில் அமர்ந்து சுந்தரிக்கு தாய்ப்பால் ஊட்டிக்கொண்டிருந்தாள். அத்தையின் முலைக்காம்பை சப்பி சுந்தரி பால் குடிப்பதையும், அதனால் எழுந்த சத்தமும் எனக்கு ஏதோ வினோதமான காட்சியாக தோன்றி, அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அத்தை திடீரென்று என்னை பார்த்தவுடன் அவசரமாக முந்தானையை கொண்டு சுந்தரியோடு தன் மார்பகத்தையும் மூடிக்கொண்டாள்.

“வேலு, இங்க என்னாடா பண்ற?”

“வெளையாட மண்ணெடுக்க வந்தேன். சுந்தரிக்கு என்ன அத்த பண்ற?” அவளை நோக்கி நடந்தபடி கேட்டேன்.

“டேய்! அதெல்லாம் நீ பெரிய பையன் ஆனா புரியும். வெளையாடப்போ”

“சுந்தரி என்னமோ குடிக்கிறா. என்னான்னு சொல்லு”. குழப்பமாய் கேட்டுவிட்டு, அவளருகேபோய் எதிரெதிராக அமர்ந்து கொண்டேன்.

அவள் மெலிதாக சிரித்தபடி, “கிறுக்குபையா, சுந்தரி மாதிரி குழந்தைக்கு எல்லாம் பசியெடுத்தா சத்தான பால் கொடுக்கணும். அப்பத்தான் அவ நல்லா வளருவா. அந்த மாதிரி பால் அம்மாவோட உடம்புல இருந்துதான் கிடைக்கும். அதான் நான் அவளுக்கு கொடுக்கிறேன். புரியுதா?”

“பால் எப்படி உன்கிட்ட வந்துக்சு?”

“ம்………சாமி எனக்கு கொடுக்கும். நான் சுந்தரிக்கு கொடுப்பேன்” என்றாள் என் தலை கோதியபடி.

அவள் கையை உதறிவிட்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சுந்தரி இன்னும் பால் குடித்துக் கொண்டிருந்தாள்.

“அப்போ எனக்கும் பால் கொடு அத்த, நீதான் எனக்கு அம்மான்னு சொன்னல்ல. எனக்குக்கூட சத்தே இல்ல” என்றேன் புஜத்தை காட்டியபடி.

“ப்ச்….அது உன்ன மாதிரி பெரிய பசங்கலுக்கெல்லாம் கிடையாது” என்றவாறு முந்தானையை சரிசெய்துகொண்டு, சுந்தரியை இடுப்பில் வைத்துக்கொண்டு எழுந்தாள். சுந்தரி வாயில் பால் ஒழுகியப்படி என்னை பார்த்தாள்.

“அப்போ எனக்கு யார் இந்த மாதிரி பால் கொடுத்தாங்க?”

“உங்கம்மா சாமிகிட்ட போனதால, பசும்பால்தான் கொடுத்துருப்பாங்க. டேய் நீ கேக்குற கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியல.ஆள விடு” என்றபடி அத்தை வீட்டுக்குள் சென்று விட்டாள்.

தாய்ப்பாலையும் விட தாயின் முலைக்காம்பு சத்தானது. அதன் ருசியரியாதவன் இவ்வுலகில் சபிக்கப்பட்ட வாழ்கையையே வாழ்கிறான். இந்த வாழ்வு பற்றிய பிடிப்பு தாயின் முலைக்காம்பின் சுவையிலிருந்தே தொடங்குகிறது. அன்று அத்தையுடன் பேசிய அந்த நாளிலிருந்தே ஒரு மகனாக அவளிடம் பால் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் என் வாழ்நாள் முழுதும் இருந்தது. முழுமையடையாத என் வாழ்வை முழுமையுற செய்யும் சக்தி அவளின் முலைக்காம்பில் மட்டுமே இருக்கிறது என்ற எண்ணம் உறுதியாக இருந்தது.

என் உடல் மாமா வீட்டில் கிடத்தப்பட்டு இருக்கிறது. மாமாவின் சொந்தக்காரர்கள், பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் என இருபதுக்கும் குறைவான ஆட்கள் என்னை சுற்றி இருந்தனர். எனக்காக கண்ணீர் சிந்த அத்தையோ சுந்தரியோ இங்கு இல்லை. சுந்தரி வருவாளா? தெரியவில்லை.

“ஆறுமுகம், பொண்ணுக்கு சொல்லி அனுப்பியாச்சுல்ல?” மாமாவின் நண்பர் அய்யாக்கண்ணு.

“இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவாங்கன்னு நினைக்கிறேன்”. மாமா முகத்தில் எந்த பாவனையும் இல்லை.

சுந்தரி வா. ஒருமுறை என்னை தொடு. என் மூக்கில் முத்தமிட்டு உன் அம்மா தொடங்கிவைத்த இந்த வாழ்க்கையை ஒருமுறை என் முடியை கோதிவிட்டு நிறைவுறச் செய்.

சுந்தரியும் நானும் சிறுவயதிலிருந்தே ஒருவருக்கொருவர் அன்புடன் பழகினோம். தொட்டால் பிடிக்காது என புரிந்து கொண்ட அவள் என்னை தீண்டி கோபப்படுத்தி வேடிக்கை பார்ப்பாள். அவளின் குணம், தோற்றம் ஆகியவற்றில் பலமுறை அத்தையை பார்த்திருக்கிறேன். சிறுவயது முதல் எங்களுக்குள் இருந்த நெருக்கம் வயது ஆக ஆக ஏனோ குறைந்து போனது. எப்போதும் ஒரு கூச்சம் எங்கள் மனதில் ஒட்டிக்கொண்டது.

எனக்கு 22 வயது ஆனபோது, மாமா எனக்கும் சுந்தரிக்கும் கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்தார். அதன்பின், எங்கள் கண்களில் ஓடிய தெளிந்த நீரோடை, சேறு கலந்துவிட்ட நிறமாக மாறத் தொடங்கியது.

ஒருநாள் அதிகாலை மேட்டுக்காடு ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். இடுப்பளவு ஆழமுள்ள இடத்தில் நின்றுகொண்டு, வேட்டியை அவிழ்த்து அதில் கிடைத்த கெண்டை மீன்களை எல்லாம் பிடித்து கரையிலுள்ள பாத்திரத்தில் போட்டுக்கொண்டிருந்தேன். அதிகாலை வெயில் மீன்கள்மேல் பட்டு வெள்ளி நிறத்தில் ஜொலித்துக் கொண்டிந்தன. அப்போது சுந்தரி தண்ணீர் எடுப்பதற்காக குடத்தோடு அங்கே வந்தாள். என்னை பார்த்தவள் அருகே வந்து கரையோரம் என்னை பார்த்தபடி அமர்ந்துகொண்டாள். பச்சை நிற பாவாடையும், வெள்ளை தாவணியும் அணிந்து தலையில் மல்லிகை வைத்து, என் சிறு வயதில் பார்த்த அத்தையைப் போலவே அழகாக இருந்தாள்.

“ஏன் மாமா, நானும் வந்து மீன் புடிக்கவா? ரொம்ப கஷ்டப்படுறீயே” சிரித்தபடி கேட்டாள்.

“துணி நெனைஞ்சிரும், அங்கையே இருடி”

“அதனாலென்ன, நீ புடிக்கிற வேகத்த பார்த்தா இன்னிக்கு புடிக்கமாட்ட போல. இரு வரேன்”. ஏரிக்குள் இறங்கி கவனமாக என்னை நோக்கி வந்தாள். அவள் பாவாடை, நீரில் பலூன்போல் பூம்மென்று மேல் எழும்பி வந்து, என் முகத்தில் அடித்தது. சிரித்தபடி பாவாடையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டவள், தன் முதுகில் தொங்கிக்கொண்டிருந்த தாவணியை மட்டும் சிறுகுழிபோல் ஆக்கி மீனுக்காக காத்திருந்தாள். சூரிய ஒளி நீரில்பட்டு ஏற்படுத்திய பிரதிபலிப்பு ஒளிகீற்றாய் அவள் முகத்தில் ஆடியபடி இருந்தது.

“மாமா, உண்மையிலயே என்னை உனக்கு பிடிச்சிருக்கா?” என் கண்ணை பார்த்துக் கேட்டாள்.

“ம்” என்றேன் சிரித்தபடி அவளை பார்க்காமல்.

சற்று அருகில் நெருங்கி வந்தவள், என்னை அவள் பக்கம் திருப்பி வளைத்து எகிறி என்னை கட்டியணைத்து உதடோடு உதடு பதித்தாள். அவள் தாவணியில் சிறைபட்ட மீன்களெல்லாம் சிதறி ஓடின. சுருக்கென்று கோபம் எனக்கு தலையேற, அவளை உதறிவிட்டு ஓங்கி கன்னத்தில் அறைந்தேன். அவள் தண்ணீரில் சுருண்டு விழுந்தாள். தட்டுத்தடுமாறி எழுந்து இரும்பினாள். கண்களும் முகமும் சிவந்திருந்தன. என்னை அதிர்ச்சியாக பார்த்தவள், கிளம்பி வேகமாக கரையேறி சென்றாள். நான் ஒன்றும் புரியாமல் நின்றேன். கெண்டை மீன்கள் பாத்திரத்தில் துடித்தபடி கிடந்தன.

காலையில் மாமாவும் அத்தையும் ஏதோ திருமணத்துக்காக சென்றிருந்தார்கள். சுந்தரி சமையற்கட்டில் காய்கறி வேட்டி கொண்டிருந்தாள். எதேச்சையாக நான் அந்தப்பக்கம் சென்றபோது, “மாமா, ஒரு நிமிஷம் இங்க வா”

“சொல்லு”

“நேத்து ஏன் அப்படி பண்ண?” தெளிவாக கேட்டாள்.

“உனக்குத்தான் தெரியும்ல, தொட்டா எனக்கு புடிக்காதுன்னு”

“அப்போ நமக்கு கல்யாணம் ஆனாக்கூட உன்ன தொடக்கூடாதா? காலம் முழுசா உன்கிட்ட அறை வாங்கிகிட்டே இருக்கனுமா?………..இல்ல நான் அலையிறேன்னு நினைச்சிட்டியா? சொல்லு” சற்று கோபமாக கேட்டாள்.

“அப்படிஎல்லாம் இல்ல சுந்தரி”

“அப்போ ஒன்னு மட்டும் வெளங்குது. நாம கல்யாணம்லாம் பண்ணிக்க முடியாது. உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கு மாமா. அது ஏன் எதுனாலன்னு எனக்கு தெரியல. எனக்கும் முதல்லயிருந்தே இந்த பிரச்சன பத்தி தெரியும். ஆனா புடிச்சவள தொடக்கூட உன்னால முடியலன்னா..அப்புறம்……… எனக்கு இந்த கல்யாணம் வேணாம். அப்பாகிட்ட சொல்லிடுறேன். நான் வாழணும்னு நினைச்சா நீயும் அப்படியே சொல்லு. நான்னு இல்ல எந்த பொன்னும் இந்த பிரச்சனைய சகிச்சிக்க மாட்டா.” முன்பே யோசித்து வைத்ததுபோல் தெளிவாக சொல்லி முடித்தாள். எனக்கென்னவோ அவள் சொன்னது, அவளை அடித்ததால் பழிவாங்குவதற்காகவே சொல்லியதுபோல் இருந்தது. பின்பு யோசித்து பார்த்தபோதுதான் என் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்தேன். சுந்தரி சொன்னதில் இருந்த நியாயம் புரிந்தது.

பின், எனக்கும் சுந்தரிக்கும் இடைவெளி அதிகமாகியது. அவள் என்னுடன் பேசுவதை, பார்ப்பதை குறைத்தாள். சுந்தரி மாமாவிடம் தனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாள். எவ்வளவோ கேட்டும் ஏன் கல்யாணம் வேண்டாம் என்ற காரணத்தை அவள் சொல்லவில்லை என்று அத்தையும் மாமாவும் சொன்னார்கள். நானும்கூட காரணத்தை கூற மறுத்துவிட்டேன். அடுத்து மூன்று மாதத்தில் மேட்டூரில் மாமாவின் தூரத்து சொந்தத்திலிருந்த வந்த ஒருவனுக்கு சுந்தரியை கல்யாணம் செய்து வைத்தார். மாமாவும் அத்தையும் எவ்வளவோ வற்புறுத்தியும் நான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அதற்கான தகுதி என்னிடம் இருப்பதாக தோன்றவில்லை. சுந்தரி என்னை கல்யாணம் செய்ய மறுத்ததுகூட நல்லதாகவே பட்டது.

சுந்தரி புருஷனோடு மேட்டூரில் வாழ்ந்தாள். ஊருக்கு வரும் போதெல்லாம் சம்பிரதாயமாக பார்த்து சிரிப்பாள். அவ்வளவுதான். அந்த சிரிப்பில் என்னை முற்றிலும் நிராகரித்ததின் அறிகுறி இருந்தது. ஆனால் எனக்கோ அவளை பார்ப்பதில், முகத்தில் சாரல் அடிப்பது போன்ற பரவசம் ஏற்படும். காலங்கள் கரைந்த போதிலும், சிதிலம் அடைந்தபோதிலும், கோவில் சிற்பங்கள் நமக்கு ஆச்சர்யம் ஏற்படுத்துவதுபோல, அவள் மீதான என் காதல் கொஞ்சம்கூட குறையாதது ஆச்சரியமாகவே இருந்தது.

பின் என் முப்பதுகளில் அத்தை சிறுநீரக கோளாறு வந்து படுத்துவிட்டாள். அவள் சாவை எதிர்நோக்கி உதிர்ந்த இறகாய் கிடந்தாள். உடல் முழுவதும் சுருக்கங்கள் நிறைந்து, கண்களில் நீர் தேங்கியபடி என்னை பார்த்து கொண்டிருந்தாள்

“ந்தாத்த, இந்த மாத்திரைய போடு”

“வேலு, என்மேல உனக்கு ஏதும் கொர இருக்காடா” குரலில் நடுக்கம்.

“ஏன் அப்படி கேக்குற?”

” யார் தொட்டாலும் புடிக்கமாட்டேன்கிது. அது ஏன் என்னன்னு எனக்கு தெரியல. என்னால உன்னைய இப்படி பார்க்க முடியலடா. எவ்வளவோ சொல்லியும் கல்யாணமும் பண்ணிக்க மாட்டேன்கிற. மாமாவும் நானும் போனதுக்கு அப்புறோம் உனக்குன்னு யார்றா இருக்கா?………………. உன்கிட்ட சொன்னமாதிரியே, உனக்கு அம்மா மாதிரி இத்தனை நாளும் இருந்திருக்கேன். அந்த உரிமைல கேட்கிறேன். ஏதாச்சும் கொர இருந்தா சொல்லு, என்னால முடிஞ்சத பண்றேன். ” அத்தையின் நிறம் மங்கிய விழித்திரையில் நீர் கோர்த்திருந்தது.

“இல்லத்த” என்று கூறியபோது, தொண்டை அடைத்தபோதும் புன்னகைத்தேன். அத்தையும் பதிலுக்கு சோகமாக புன்னகைத்தாள். அவளை முதன்முதலில் மணக்கோலத்தில் பார்த்தபோது, என்னை பார்த்து வீசிய புன்னகை போலவே அது இருந்தது. அவளை அப்படியே அள்ளி அணைக்க வேண்டும் போலிருந்தது.

அந்த பேரழகி ஒருநாள் இறந்து போனாள். இந்த உலகமே எனக்கு அர்த்தமில்லாததாக மாறியது. என் உயிரில் பாதி கரைந்து விட்டது. எந்த வேலையும் செய்யா முடியாமல் வீட்டிலயே முடங்கி கிடந்தேன். அவள் இல்லாத தனிமை என்னை புரட்டிபோட்டது. அத்தையும், சுந்தரியும் சுற்றி திரிந்த வீடு நிசப்தமான கல்லறையாகவே தோன்றியது. அத்தையின் இழவுக்கு வந்திருந்த சுந்தரி, தங்கியிருந்த மூன்று நாள்களில் ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை. வாழ்வில் இருந்த அத்தனை பிடிப்புகளும் தகந்துபோனபின் உயிரை சுமப்பது பெரிய வலியாகி போனது. அதனால்தான் இன்று காலை தூக்குமாட்டிக் கொண்டேன்.

சுந்தரி தன் மகனோடு வந்திருக்கிறாள். என் உடலை அதிர்ச்சியாக பார்த்தவள், அருகில் வந்து நடுங்கும் விரல்களால் காலை தொட்டு வணங்கினாள். எனக்கு எந்த உணர்வும் ஏற்படவில்லை. பக்கவாட்டில் அமர்ந்து, என்னை உற்றுப்பார்த்தவளின் கண்களில் நீர் கோர்த்தது. அந்த கண்களில் நீண்ட காலம் கழித்து எனக்கான காதலை பார்க்கிறேன். என் உடலருகே வந்து, என் கைகளை பற்றிக்கொண்டு அதில் முகம் புதைத்து அழத் தொடங்கினாள்.

“சுந்தரி, ஒருமுறை என்னைதொடு. என் மூக்கில் முத்தமிட்டு அந்த பேரழகி தொடங்கி வைத்த இந்த வாழ்கையை நீ ஒருமுறை என் முடியை கோதிவிட்டு நிறைவுறச்செய்.” அவளுக்கு எதுவும் கேட்கவில்லை. உடலும் சதையுமான இந்த சுந்தரியை இனி காண போவதில்லை. வெறும் எண்ணங்களாக மட்டுமே நீ மாற போகிறாய். ” சுந்தரி ஒருமுறை என்னை முத்தமிடு, அன்று ஏரியில் செய்தது போல”. அவளுக்கு கேட்கவில்லை. என் கரங்களில் முகம் புதைத்தபடி இருந்தாள்.

பேரிருளும், பேரமைதியும் நீடித்துக் கொண்டிருந்தது. கதகதப்பு பரவிக் கொண்டிருந்தது. இப்போது புதிய உயிர் பெற்றிருக்கும் இந்த தேகம் அமைதி கொள்ள என் அத்தையின் முலைகாம்பின் சுவையும், சுந்தரியின் இதழ் முத்தம் மட்டுமே தேவை. ஐயோ……. என்னை சுவைக்க விடுங்கள், அணைக்க விடுங்கள், வருட விடுங்கள், தொட விடுங்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *