தொங்கட்டான்கள்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 8,455 
 

வழியெல்லாம் வட்டில் கிணறு நிறைந்து நீர். பாத்தி கட்டி பசுமை. சங்கரி துர்க்கம் தாண்டிற்று ரயில்வண்டி. ஐந்தாம் முறையாய் காதுக்குள் இளையராஜாவின் குடகு மலை காற்றில் ஒரு பாட்டு. கண்களைக் கடக்கும் மொட்டை பனைகளை போல, துடைச்சுவிட்ட மாதிரி இருக்கு மனசு.

ரயில்நிலையம் நெருங்கியதும் தோள் பையும் பெட்டியுமாய் எழுந்தாயிற்று. இறங்கியதும் ‘வணக்கம்’ என்றவாறு அருகில் வந்த இளைஞனை முருகன் என்று அனுமானிக்க முடிந்தது.

‘சங்கரையா..’ என்றதும், ‘ஆமாம், அவர்தானம்மா என்னை அனுப்பிச்சார் . முருகன் . டில்லியிலிருந்து வரீங்க. பயணம் சௌகரியமா இருந்ததா‘ என்கிற கேள்விக்கு, ‘விமானம்தானே , இங்கே வரத்தான் ரயில்’ என்று பதில் சொன்னேன்.

ஸ்டேஷன் விட்டு வெளியே வந்து, ஒரு பழைய மாருதி வண்டியில் முன் கதவைத் திறந்துவிட்டான். வண்டி உருளத் தொடங்கியதும், ஒரு மெல்லிய காற்று நாத்து கட்டுகளின் மணத்தை நாசியில் கொடுத்தது.

‘அணைக்கட்டு விஷயமாத்தானே எழுத வந்துருக்கீங்கம்மா ‘

‘ம்ம்..கருப்பண்ண உடையாரின் இறப்பு குறித்தும்தான்..’

‘இப்போ மழை அதிகமா இருந்ததாலே, ஆத்துல தண்ணி அதிகமாயிருக்கு. நாலஞ்சு நாளு பசனூரில தங்கிட்டு அப்புறம் போகலாம்மா. இங்கே தான் கவர்மென்ட் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. உங்க சௌரியம் சொல்லுங்க.’

‘ம்ம்..சரி’

வெளியே பார்வையில் வயல். வயல் வரப்புகளினிடையில் சிறிதாய் ஒரு கோவில். அதன் வெளியே ஒற்றை கால் மேல் மற்றொரு கால் இருத்தி சிவப்பு சீலையுடன் சற்று பெரிதாய் பத்ரகாளி. அவளின் துணைக்கு அமர்ந்துவிட தவித்தது மனசு.

சிறிது தூரம் போனதும், மர நிழலில் வண்டி நிறுத்தி, பெட்டியை தூக்கிக் கொண்டான் முருகன். நடக்கத் தொடங்கிய சில நொடிகளில் கண்ணின் வட்டத்திற்குள் சிறு கூட்டம் தென்பட்டது. முகபாவனைகளிலிருந்து, அவர்கள் ஆவேசப்பட்டு பேசுவதை உணரமுடிந்தது. சற்று நடையை நிறுத்தியபோது, முருகன், ‘ஏதோ பஞ்சாயத்தும்மா ‘ என்றான்.

இவர்களைப் பார்த்ததும், நடுவில் தலைப்பாவுடன் நின்றிருந்தவர் இவர்களை நோக்கி வரத் தொடங்கினார். கூட்டத்தைப் பார்த்து, ‘இன்னும் நாலு அடி பாக்கி. விளாசுங்க அவள’ என்று பெரிய வயிறு குலுங்க குரல் எழுப்பினார்.

அப்போதுதான் அந்த பெண்ணைப் பார்த்தேன். ஒரு பதினெட்டு வயது கூட இருக்காது. சாட்டை கோடுகள் அவள் ஜாக்கட்டைத் தாண்டி, சதையில் வரியிட்டிருந்தன. எதற்கும் அசராதவளாய் முகத்தில் கோணலாய் ஒரு புன்னகையைப் பரப்பியிருந்தாள்.

‘இனி செய்யாதே’ என்னும் அவரின் அடுத்த குரலுக்கு தலையசைத்தாள். அடிபணிந்துவிட்டதாய் முணுமுணுப்பு காட்டி மெதுவாய் கலைகிறது கூட்டம். அவள் அப்படியே நிற்கிறாள், விரல் உணரும் சேலையின் முடிப்பை இறுக்கிக் கொண்டே. கிழியாமல் கசங்குகிறது நூலிழைகள்.

தலைப்பாகை மனிதர் என் அருகில் வந்து, ‘நீங்கதானா சுப்ரதா மேடம்’ என்று கைகூப்ப, ‘ஆமாம்.’ என்றேன். ‘அய்யா தான் ஊருக்கு எல்லாம்’ என்றான் முருகன்.

கூட்டம் எங்களையே பார்த்துக் கொண்டிருக்க, ‘அவள போகச்சொல்லுங்க ‘ என்று சொல்லிவிட்டு, நடக்கத் தொடங்கினார். ‘தப்பா எடுத்துக்காதீங்க. சிறுக்கி மக. அடிச்சாதான் சரிப்படும்’ என்றார்.

கெஸ்ட் ஹவுஸ் வரும்வரை இறுக்கமான மௌனம் நிலவியது.

மதிய உணவு முருகனும் இன்னொரு பெண்ணுமாய் கொண்டுவந்தார்கள். மனைவி என்றான். முழுகாம இருக்கா என்றான். மென்மையாய் சிரித்தாள் அந்த பெண்.

சற்று எழுத்து வேலை பார்த்துவிட்டு, சோம்பல் முறித்து தலை நிமிர்த்தி நேரம் பார்த்தபோது, பின் கட்டில் ஏதோ நிழலாடுவதை உணர முடிந்தது. எழுந்து போய் பார்த்தால், காலையில் அடி வாங்கிய அந்த பெண்.

முகத்தில் சாட்டையின் நுனி இழுத்த வரிகள் தெரிந்தன. வரச்சொல்லி கையசைத்தபோது, மெதுவாய் வந்தாள்.

‘மருந்து போட்டியா’

‘ம்ஹும்’

கையோடு கொண்டுவந்த ஆண்டிசெப்டிக்கை கொடுத்து போட சொன்ன போது, சிறிதாய் புன்னைகைத்து வாங்கிக் கொண்டாள். அதற்குள் முருகன் வரவே, நகர்ந்தாள்.

‘அம்மா, இவதான் எப்போவும் இந்த கெஸ்ட் ஹவுஸ் பார்த்துப்பா. என்ன கேட்டாலும் செய்து தருவா. இவளும் இங்கேயே உங்ககூட படுத்துப்பா.’ என்று சொல்லிவிட்டு, அவள் நகர்ந்ததும், ‘கொஞ்சம் கவனம்மா. அவ்வளவு நல்ல பொண்ணு இல்ல.’ என்றான்.

‘அவளும் அவ தொங்கட்டான்களும்,’ என்று முணுமுணுத்துக் கொண்டே, உள்ளே பார்த்து, ‘கதவை சாத்திக்கோ’ என்று சொல்லிவிட்டு செருப்பு மாட்டிக் கொண்டான்.

அப்போதுதான் கவனித்தேன் அவளின் நீள் தொங்கட்டான்களை. அவளைப் போலவே அழகாய் இருந்தன.

‘உனக்கு தொங்கட்டான்கள் பிடிக்குமா’

‘ரொம்பபப..’ என்றாள்.

புழுக்கம் இருந்ததால், மின்விசிறியை சற்று கூட்ட, எடுத்து வைத்திருந்த காகிதங்கள் மேசையைவிட்டு பறக்கத் தொடங்கின. ஓடி வந்து, காகிதங்களை எடுத்து அடுக்கி கொடுத்தாள்.

‘உன் பெயர் என்ன ‘

‘துர்க்கா’

சாப்பிட்டு முடிக்கும் போது நன்றாய் பேசத் தொடங்கினாள்.

உடம்பு சரியில்லாத அம்மா மட்டும்தான் படிப்பும் எட்டாம் வகுப்புவரை தான் என்று சொன்னாள்.

‘ஏன் இன்னைக்கு உன்ன அடிச்சாங்க’ என்ற கேள்விக்கு, ‘விளங்காத பயலுக’ என்று சொல்லிவிட்டு சிரிக்கத் தொடங்கினாள்.

ஆச்சரியப் பார்வை பார்த்தேன் அந்த சிறு பெண்ணை. அடி வாங்கும் போதும் முகச் சிரிப்பு மாறவில்லை.

‘அப்பாவை பார்த்ததில்ல. சித்தப்பா இருந்தார். அவரும் எப்போவும் குடி. எங்கம்மா நல்லாயிருந்தப்போ அவகிட்டே இருந்து காசு பிடுங்கி போய் குடிச்சுட்டு வருவார். அவ படுத்த பிறகு வீட்டுல இருக்கிற பாத்திரங்கள மட்டுமில்ல, இருந்த ஒரே நிலத்தையும் வித்துட்டார்.

எனக்கு பதினஞ்சு வயசிருக்கும், அப்போ ஒரு நா, கெஸ்ட் அவுசுல சாப்பாடு செய்யனும், வா. பணம் தருவாங்கன்னு சொல்லி கூட்டிட்டு வந்தார். சாப்பாடு முடிஞ்சு நான் மட்டும் போறேன், நீ இரு, அவரு பெரிய ஆபீசர், ராத்திரி ஏதாவது டீ கேட்டா போட்டு குடுன்னு சொல்லிட்டு போயிட்டார். அந்த தொளதொள ஜிப்பா போட்டவரு, ராத்திரி டீ ஒன்னும் குடிக்கலா. என்னை கடிச்சு பிச்சு சாப்பிட்டுட்டார் காட்டு கரடி மாதிரி.’

சிரித்தபடியே முகத்தை, குத்திட்ட முட்டுக்கு நடுவில் புதைத்துக் கொண்டாள். அழுகிறாளோ என்று தோன்றியது.

நிமிர்த்தி என் முகம் பார்த்து, ‘நீங்க கவலப்படாதீங்க..அப்புறம் பழகிடுச்சு. எப்போவாவது இங்கே தங்க ஆளுங்க வருவாங்க, உங்கள மாதிரிதான் அந்த அணை பிரச்சனைக்காக, டெல்லியிலிருந்து. மந்திரிங்க, போலீஸ்காரங்க, ஆபீசருங்கன்னு.

அப்போவெல்லாம் என் சித்தப்பாவுக்கு நிறைய காசு கிடைக்கும். எங்கம்மாவுக்கு மருந்தெல்லாம் வாங்கிக் கொடுக்கும். எனக்கும் புதுதுணி நல்ல சாப்பாடு எல்லாம் கிடைக்கும்.’ என்று குழந்தைதனமாய் கண் விரித்தாள்.

‘ஒரு நாள் என் சித்தப்பாவுக்கும் நீங்க பேசுனீங்களே அந்த பெரிய வயிறு பண்ணையாரு அவருக்கும் பெரிய சண்டை. நான் வேனும்னு கேட்டாராம். என் சித்தப்பா ஊருக்குள்ளே எல்லாம் என் பொண்ண தரமாட்டேன்னு சொல்லிட்டாராம்.’ என்று சொல்லிவிட்டு சத்தம் போட்டு சிரித்தாள். அந்த சிரிப்பிலிருந்து ரணத்தின் வாடை அதிகமாய் என் நாசி தொட்டது.

‘இப்போ என் சித்தப்பாவும் இல்ல. செத்துட்டாரு. நான் பக்கத்தூருக்கு பண்ணை வேலைக்கு போறேன். பெரிய வயிறுகாரரு தொந்தரவு தாங்க முடியல. நீங்களே இன்னைக்கு பாத்தீங்களே. திருடி, குணங்கெட்டவ அப்படி இப்படின்னு என்னை ஏதாவது சொல்லி அடிப்பாரு. என் உடம்ப கிழிச்சு பார்க்கிறதுல அவ்வளவு சந்தோசம் அவருக்கு.’

‘நல்ல வேளை நீங்க பொம்பளையா இருக்கீங்க, என் சித்தப்பனும் இப்போ இல்ல’ என்று கேலியாய் ஒரு சிரிப்பு செய்தாள்.

‘சரி போதும், போய் படு’ என்றேன் சிறு சிரிப்புடன்.

ஜவஹர் பல்கலையில் ஒருமுறை பேச்சரங்கில் ஷீலா தீனதயாளுவுடனான என் மிதவாத தர்க்கம் நினைவுக்கு வந்தது. ஒருவருக்கு இயைந்தவை மற்றவருக்கும் ஒத்துப்போகும்னு சொல்லமுடிவதில்லை என்கிற போக்கில் விவாதம் நடந்துக் கொண்டிருந்தது. எல்லாவற்றிற்கும் தீவிர தன்மையே விடிவாகும் என்கிற கூற்றை மறுத்துக் கொண்டிருந்தேன். மிதவாத பெண்ணியங்கள் தோற்று போகும் இடம் இந்த தொங்கட்டான்களாக இருக்குமோ என்கிறதாய் இப்போது ஒரு தோன்றல் உண்டாகியது.

படுக்கையில் அமர்ந்ததும், அதில் விரித்திருந்த விரிப்பில் முளைத்திருந்த சின்ன பூக்கள் துர்க்காவின் சின்ன கண்களை நினைவுகாட்டின. மூடும் போர்வையை தரையில் விரித்து படுத்து கண் மூடினேன்.

மாலையில் சற்று நதியினோரமாய் நடக்க, சுகனின் நினைவு வந்தது. பைக்கை உதைத்து அவன் இளமைக்கும் சேர்த்து உயிர் கொடுக்கும் வேகமும் நினைவில். அப்படியே தகப்பனைப் போல. இன்று டெக்சாஸ் போய் இறங்கியிருப்பான். அவரும் இறந்த பிறகு, இவனும் நாடோடியாக சுற்றிக் கொண்டிருக்க, நான் மட்டுமே தனித்திருக்கும் வாழ்க்கை. எவ்வளவு வித்தியாசங்கள் வாழ்வியல் நிலைகளில்.

பதிக்கப்பட்ட வழுக்கு கற்களின் மீது நடந்துக் கொண்டே ஆங்கிலமும் இந்தியுமாக வெளிச்ச திரையில் நாட்டின் முன்னேற்றம், பெண் முன்னேற்றம் குறித்த பேச்சுகள் பெரு நகரங்களில். இந்த மண் தரையில் நடக்கும் எந்த பெண்ணும் இது குறித்து பேசுவதில்லையே. வாழ்ந்து மட்டுமே காட்டுகிறார்கள். உன்னதம்.

சட்டென்று கேட்ட சிரிப்புக்கு தலை திருப்ப, அங்கே புளிய மரத்தினடியில் இருவர். தொங்கட்டான்களைக் கொண்டு பெண்ணை அடையாளம் தெரிந்தது. பையன் சிவப்பாய் பசனூருக்கு சம்பந்தமில்லாமல் இருந்தான். ஏதும் பேசாமல் எட்டி நடையிட்டேன்.

இரவு சாப்பாட்டின் போது, ‘யாரது, சிவப்பா, அழகா..’ என்ற கேள்விக்கு, ‘எப்போ பார்த்திங்க’ என கண்கள் விரித்தாள்.

‘ராஜேஷ் அது’

‘என்ன காதலா’

‘ம்ம்..’என சொல்லும்போதே வெட்கம் முகம் பரவத் தொடங்கியது. அடுத்த கட்டத்திற்கு செல்லும் அவளின் பாதை பிடித்திருந்தது.

காலையில் அவளைக் காணவில்லை. தண்ணீர் வற்றியதாக முருகன் சொன்னதால், அணைக்கட்டு விஷயமாய் கிளம்பத் தொடங்கினேன்.

பத்து நாட்கள் முடித்து, ஊர் திரும்ப பேக் பண்ணும் சமயம், துர்க்காவை பார்க்கும் எண்ணம் வந்தது. முருகனிடம் பேசினேன். பசனூரில் பேருந்து நின்ற போது, முருகன் வந்திருந்தான்.

‘ஒரு வாரம் இருப்பீங்களாம்மா ‘

‘ஒரு இரண்டு நாட்கள் மட்டுமே. கொஞ்சம் தொகுத்து பார்த்து ஏதாவது சந்தேகம் இருந்தால் விசாரித்து முடித்துவிடலாமே. அங்கு போனால் மீண்டும் வருவது கடினமாச்சே’

‘ம்ம்..’

‘துர்க்கா எப்படியிருக்கா’

‘அத கேக்காதீங்க. நீங்க போன அன்னைக்கே ஒரு பஞ்சாயத்து. எத்தனையோ முறை பெரிய அய்யா வீட்டு வேலைக்கு கூப்பிட்டுவிட்டு போகாம இருந்திருக்கா. அன்னைக்கு அவரே நேர்ல போய் கூப்பிட்டிருக்கார். மரியாதையே தெரியாத பொண்ணும்மா. அவரு என்னை கெடுக்க பார்த்தாருன்னு ஊர் கூட்டி பிரச்சனைப்படுத்திட்டா. அடிச்சு துவைச்சுட்டாங்க ஊர்க்காரங்க. ரெண்டு நாள் உடம்பு முடியாம படுத்திருந்தா. மூணாவது நாள் அவளைக் காணோம். வீட்டுல சாமானமும் இல்ல. எங்கேயோ ஓடிட்டா. ‘

மதியம் முருகனின் மனைவி சாப்பாடு எடுத்துவந்தாள்.

‘அம்மா, உங்ககிட்டே ஒண்ணு சொல்லனும்’ என்றாள்.

‘என்னம்மா’

‘அந்த துர்க்கா பிள்ள முடியாம படுத்திருந்தப்போ நான்தான் இவருக்கு தெரியாம சாப்பாடு கொண்டு கொடுத்தேன். அவ்வளவு அடி வாங்கியும் அழவே இல்லம்மா. சிரிச்சுகிட்டு இருந்துச்சு. ஊரைவிட்டு போகிறதுக்கு முன்னாடி நீங்க வந்தா சொல்ல சொல்லிச்சு. அதுதான் உங்ககிட்டே சொல்ல நினைச்சேன். எங்கே போனான்னு எனக்கு ஒன்னும் விளங்கல்ல.’ என்றாள்.

ஏதாவது காதல் இருக்குமா அவளுக்குன்னு பொதுவான என் கேள்விக்கு,’அட போங்கம்மா. எத்தனையோ பேருக்கு அவ சித்தப்பன் அவள கூட்டிட்டான். ஊருக்கே தெரியும். யாரும்மா அவள கட்டிக்குவா.’ என்று சலித்துக் கொண்டாள்.

‘ம்ம்..’

இவளிடம் ராஜேஷைப் பற்றி கேட்கலாமான்னு தெரியல. இவர்களுக்கு தெரியாத ஒன்றை சர்ச்சையாக்க விருப்பமில்லாமல் சாப்பிடத் தொடங்கினேன்.

‘இன்னைக்கு நல்லி போயிட்டு வந்துரலாம் மஞ்சு.’

‘சரி மேம். எனக்கும் சேலை எடுக்கணும்.’

‘சரி, வேலை முடித்து வா. பார்க்கில் இருக்கேன்’

டில்லி யுனிவர்சிட்டி கட்டிடம் விட்டு வெளியே வந்து, ஜீல் பார்க் வந்தமர்ந்து, அடுத்த மாநாட்டுக்கான தயாரிப்பு குறிப்புகளைப் புரட்டத் தொடங்க, பரிச்சயமான அந்த சிரிப்பு காதுகளில். அது அவளுடையதே. திரும்பி எல்லா பக்கமும் பார்வையை சுழட்ட, சட்டென்று ரேடியஸுக்குள் சிக்கினாள் அவள், ஒரு குழந்தையுடன்.

அருகே சென்று, ‘துர்க்கா’ என்றபோது, நிமிர்ந்து பார்த்தவளின் வகிடில் குங்குமம், காதுகளில் தொங்கட்டாங்கள். சற்று பூசினாற் போலிருந்தாள்.

‘எப்படி இருக்கீங்க மேம்சாப்’ என்ற அவளின் சந்தோஷ கேள்வியில் அவளின் அடையாளங்கள் சற்று மாறியிருந்தன.

அறிமுகங்கள் முடித்து, ‘இவன் என் பையன், ரோஹித். அவரைத்தான் உங்களுக்குத் தெரியுமே’ என்று சிரித்தாள்.

‘ஊர் விட்டு கிளம்பிட்டேன். என்னை அவர் அப்படியே ஏத்துக்கிட்டார். ‘ என்றாள்.

‘இருந்தாலும் பெரிய வயிறு பண்ணையாரை விட்டுட்டு வந்துட்டியே ‘ சிரிப்புடன் விழுந்த இந்த என் கேள்விக்கு, பெருமிதமாய் நிமிர்ந்து, அவரை எங்கே நான் விட்டேன் என்றாள். புதிரா இவள் என்ற தோணல் என்னுள் உண்டாகியது.

‘மேம்சாப், இவன் இருக்கானே ரோஹித், அந்த பெரிய வயிற்றுக்காரர் பேரன்தான். லீவில் ஊருக்கு வந்த அவர் மகனைத்தான் நான் காதலித்தேன்னு அவருக்கு தெரியாது.

இங்கே வந்து கல்யாணம் முடிந்த பிறகுதான் சொன்னோம். கோபம், வெறுப்பு எல்லாம் இருந்தது முதலில். இப்போ இவனைப் பார்த்து சமாதானமாயிட்டார் . ஊருக்கும் ஒருமுறை போயிட்டு வந்துட்டோம். இப்போ என்னை எல்லோரும் பெரிய வயிறு அய்யாவுக்கு பயந்து மரியாதையா பார்க்கிறாங்க.’ என்று சொல்லி, சிறு தொங்கட்டான்கள் குலுங்க அவள் சிரித்தபோது, இதுதான், விவாதங்கள், காகித குப்பைகள், கண்ணாடி மேசைகள், விளக்கு வெளிச்சங்கள் தாண்டிய நிஜ பெண்ணீயமோ என்று தோன்றியது.

நடக்கத் தொடங்கிய போது, அடிவானம் சில சிவப்புகளை நீள் முகமாய் கொண்டிருந்தது. அவளின் தொங்கட்டான்களைப் போல.

~ கணையாழி

Print Friendly, PDF & Email

2 thoughts on “தொங்கட்டான்கள்

  1. அருமையான கதை. நல்ல முடிச்சு, முடிவு. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *