தேவகியின் கனவு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 9,690 
 

காலை நேரக்கடமை மருத்துவர் வைத்தியசாலையின் உள்ளக பெண் நோயாளர் விடுதியில் உள்ள நோயாளிகளை பார்வையிட்டுக்கொண்டிருந்தார். ஒவ்வொரு நோயாளிகளும் தங்களது வருத்தங்களை பயத்துடனும், கவலையுடனும், விரக்தியுடனும் சொல்லிக்கொண்டிருந்தனர் என்பதைவிட, தங்களது வேதனைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பிரதிபலித்துக் கொண்டிருந்தனர். திடீரென மருத்துவரின் குரல் உயர்ந்து ஒலித்ததினால் அனைவரது கவனமும் மருத்துவரிலும், மருத்துவர் அருகில் இருந்த நோயாளி மீதும் விழுந்தது.

“அம்மா ஒரு நாளைக்கு எத்தனை தரம் சலம் போறது?” மருத்துவர் மிகவும் அன்பாக கேட்டார்.

“வழமையாக போறமாதிரித்தான் போகுது…” மருத்துவரின் முகம் கொஞ்சம் மாறியது. இருந்தும் மீண்டும் அமைதியாக வழமையாக எத்தனை தடவையம்மா போகிறது? என்றார். அந்த அம்மாவோ, அது வழமையாகக் கொஞ்சமாகத்தான் போறது. இங்கே மலசலகூடத்துக்குள் போனால் சத்திதான் வருகிறது. இப்பொழுது மருத்துவரின் முகம் கடுப்பாகியது.
எணேய்! உங்களுக்கு சலம் வழமையாக போறது… வாறது… எனக்குத் தெரியும். இன்றைக்கு எத்தனை தடவை போனது?

“ஒரு நாலைஞ்சு தடவை போனான் ஆனால் …,”

கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேணும் நான்கு தரமோ? இல்லை ஐந்து தரமோ?

இந்த அமனிதுமளியிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவகியின் மனம் மிகக் குதூகலமாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவளுக்கு இன்னும் வயிற்று வலிக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. வயிற்றுவலியும் குறைந்தபாடில்லை. இவை எல்லாவற்றையும் தாண்டி தேவகியின் மனம் குதூகலித்ததன் காரணம் இதுதான். வருத்தம் பார்க்க வந்த பக்கத்து வீட்டுமாமியின் வாக்கு.

நீ ஆஸ்பத்திரிக்கே வந்திருக்கத் தேவையில்லை. இது வெறும் வாய்வுக் கோளாறுதான், பயப்படத் தேவையில்லை. என்றவரின் தொடர்ந்த பேச்சுத்தான் தேவகியின் வயிற்றுவலிக்கும் மீறிய குதூகலத்துக்கு காரணம். உனக்கென்னடி இங்கபார், எல்லாப் பொம்பிளைப்பிள்ளைகளும் சின்னதுகள், ஆனால் வெள்ளைக்கோர்ட்டைப் போட்டுக்கொண்டு என்ன வடிவாக திரியுதுகள். உன்னுடைய மூத்தவளும் இப்படித்தானே திரியப் போகின்றாள். என்றவரின் வாக்கு, தேவகிக்கு தெய்வவாக்குப்போல் இருக்க: பார்க்கும் வெள்ளைக்கோர்ட் போட்டவர்களெல்லாம் தன் மகளாய்த் தெரிய தேவகிக்கு வயிற்றுவலி போன இடம் தெரியவில்லை.

தேவகியின் பள்ளிக்காலத்தில் எல்லாவற்றிலும் முதன்மையாக வந்தவளுக்கு; குடும்பக் கஸ்டமும் சேர்ந்து அவளுடன் போட்டி போட, தேவகியின் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து குடும்பக் கஸ்டம் வென்றது. தேவகியின் அப்பாவுக்கு பிள்ளையை நிறைய படிக்க வைப்பதற்கு பணமும் இல்லை, அதிகமாக படிக்க வைத்தால் அதற்கு ஏற்ப மாப்பிள்ளை தேடவசதியும் இல்லை. எல்லாவற்றையும் கூட்டிக்கழித்தவர் மகளைத் தன் சொந்தத்திலேயே மணமுடித்துக் கொடுத்தார். தேவகியின் குடும்பத்தில் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் இருந்தாலும், தான் படிக்கவில்லையே என்ற ஏக்கம் மனம் முழுவதும் பரவிக்கிடந்தது. தனக்குக் கிடைக்காததை தன் பிள்ளையின் மூலம் அடைந்தே தீருவது என வைராக்கியம் கொண்டாள்.

மகளின் கற்பனையில் இருந்தவளை கணவனின் குரல் நினைவுக்கு அழைத்துவர, என்னப்பா பகல் கனவோ? என்றவாறு கொண்டுவந்த உணவுப் பொட்டலத்தை எடுத்துவைத்துக் கொண்டே இப்ப எப்படி வயிற்றுவலி? டொக்ரர் என்ன சொன்னவர்? படம் எடுத்துப் பார்த்தவர்களோ? என்ற கணவனுக்கு, “எனக்கு இப்ப ஒருவலியும் இல்லை, பக்கத்து வீட்டு மாமி சொன்னவா இது வெறும் வாய்வுக் கோளாறுதான் என்று. டொக்ரரிடம் சொல்லி, வீட்டுக்கு போக துண்டு வெட்ட சொல்ல வேணும். நான் இங்கே இருந்தால் அவளின்ர படிப்பு குழம்பிவிடும். என்றவளை வினோதமாகப் பார்த்தான் கணவன்.

மூத்தவளான ஆர்த்தியின் கல்விப்பொதுத் தர சாதாரண பரீட்சை முடிவுடன் தொடங்கிய தேவகியின் பிரச்சினைகள், கோபம், எரிச்சல், பொறுமையின்மை எனத் தொடங்கி படிப்படியாக முன்னேறி பலவித உடல் உபாதைகளாக மாறி இன்று முழுநேர நோயாளியாக்கி விட்டிருந்தது.

அன்றிலிருந்து வைத்தியசாலைகளும், கோயில்களும், சாத்திரிகளும், சாமியார்களும் தேவகியின் குடும்பத்துடன் அன்னியோன்னியமாக மாறினர். இந்த மாற்றங்களால்; தேவகியை விட தேவகியின் கணவனே பாதிக்கப்படுவது கூடுதலாக இருந்தது.

ஆர்த்தியின் படிப்புடன் முட்டிமோதுவதே மனைவியின் நோய்க்கு காரணம் எனப் பலதடவை தன் மனைவியிடம் சொல்லியும் இருக்கிறான். இருந்தும் மனைவி ஆர்த்தியை விடுவதாக இல்லை.

எப்பொழுதெல்லாம் ஆர்த்தியின் புள்ளிகள் குறைகின்றதோ அன்றிலிருந்து சில நாட்களுக்கு தேவகிக்கு பலவிதமான நோய்கள் ஏற்பட்டுவிடும். ஒருவர் மாறி ஒருவராக பல மருத்துவர்களிடம் சென்றும் பலன் ஒன்றுமில்லை. பணம் செலவழிவதும், வீட்டில் பிரச்சினை உருவாகுவதுமே மிச்சம் என்பதை தேவகியின் கணவன் உணர்ந்து கொண்டான்: தன் மனைவிக்கு வருவது உடல் நோயல்ல, உளரீதியிலான பிரச்சினைகளே உடல் உபாதைகளாக வெளிப்படுகின்றன என்பதை. எங்கோ ஒருதரம் கேள்விப்பட்ட சித்தர்களின் கூற்று அடிக்கடி ஞாபகத்துக்கு வந்துபோகும் அவனுக்கு. “விரும்பியது கிடைக்காமையும், விரும்பாதது கிடைத்தலும் ரோகத்தை உண்டு பண்ணும்.” என்பதே.
தேவகியின் கணவன் எண்ணிக்கொள்வதுண்டு எவ்வளவு நிதர்சனமான தத்துவம். ஆனால் இங்கு பிரச்சினை எதை விரும்புவது? எவ்வளவு விரும்புவது? என்பதுதான் தேவகியின் பிரச்சினை. அது ஆர்த்தியின் புள்ளிகள் தொண்ணூற்று ஐந்துக்கு குறைந்தாலே பிரச்சினையாகிவிடும். இவற்றையெல்லாம் பலமுறை விளக்கமாகக் கூறியும் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகவே போயின.

இந்த நிலை தேவகிக்கு வர யார் காரணம் என்றால்? தேவகியின் குடும்பக் கஸ்டமும், ஊராருந்தான். ஆர்த்தியின் கெட்டித்தனத்தை பாராட்டுகிறோம் என்று உசுப்பேத்தி உசுப்பேத்தி …. தேவகியை ரணகளப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆர்த்தி பாலர் பாடசாலையில் சேர்ந்ததில் இருந்தே தன் சுட்டித்தனத்தை காட்டியதோடல்லாமல், கெட்டித்தனத்தையும் காட்டினாள். எந்தப்போட்டி நடந்தாலும் ஆர்த்தியின் பெயர் முதலில் வருவது சாதாரணமாகப்போனது. முதலில் பொறாமைப்பட்டவர்கள் கூட ஆர்த்தியைப் பாராட்டத் தொடங்கியிருந்தனர். ஊர்ப்பாடசாலையிலேயே படித்ததினால் ஆர்த்தியினால் அந்தப்பாடசாலையே பெருமைப்பட்டுக்கொண்டது மட்டுமன்றி; பெற்றோருக்கும் ஊரில் ஆர்த்தியினால் பெருமையும் முன்னுரிமைகளும் கிடைக்கத் தொடங்கியிருந்தது.
இம்முறையாவது ஆர்த்தியின் புண்ணியத்தினால் தமது பாடசாலையின் பெயர் பத்தரிகையில் வந்துவிடவேண்டும் என்ற முனைப்புடனும், ஆசையுடனும் அதிபர், ஆசிரியர்கள் காத்திருக்கத்தொடங்கினர் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சைக்காக.

அவர்களின் ஆசைக்கு ஏற்ப காலம் உருண்டோட, மாவட்டத்திலேயே முதலாவதாக வந்திருந்தாள் ஆர்த்தி. அன்றிலிருந்தே ஊரவர் மத்தியில் டொக்ரர் ஆர்த்தியாக பிரகடனப்படுத்தப்பட்டாள். பத்திரிகைப்பேட்டிகளிலும் மருத்துவராகி சேவை செய்வதைப் பற்றியே கதைத்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி.

மீண்டும் வழமைபோல காலம் தன் கடமையை செய்ய, பிரபல பாடசாலையில் இணைந்த பின் முதல்முறையாக மிகச்சிறுசறுக்கல், ஆர்த்தியின் கல்விப் பொதுத்தர சாதாரண பரீட்சையில் ஒன்பது “ஏ” இன்றி: ஆறு “ஏ” க்கள் பெற்றதினால்; அதனால் ஆர்த்தியின் குடும்பமே குடும்பத்தில் ஒருவரை இழந்த சோகத்துக்கு சென்றது.

ஊரவர்கள் மனதில் மறைந்திருந்த பொறாமையுணர்வுகள் கொஞசம் கொஞ்சமாக வெளிப்படத்தொடங்கின. “ இப்படித்தான் தலைகால் தெரியாமல் ஆடினால்”; “படிக்கிறன் படிக்கிறன் என்று திமிரில திரிஞ்சதோழிய அது எங்கே படிச்சது”; “தலைக்கணம் பிடித்தால் உப்படித்தான்” என்று வாய்களில் பொறாமைத்தீ கனன்றது ஊரவர் மத்தியில்.

ஆறு “ஏ” மூன்று “பி” என்பது எவ்வளவு நல்லதொரு பெறுபேறு. ஆனால் ஊரவர் அதைப்பொருட்படுத்தாமல் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டனர். ஆறுதல் கூற வந்த பக்கத்துவீட்டு மாமி வேறு, இந்த “ரிசல்ட்டை” நம்பி பிள்ளையை “சயன்ஸ்” படிக்க விட்டிடாதே, அவள் நல்லா பாடமாக்குவாள் “ஆர்ட்ஸ்” ஐ படிக்கச் சொல்லு. என்று தேவகியின் காதுக்குள் இரகசியமாக சொன்னாள்: பிள்ளையின் மனம்பாதிக்கப்படக்கூடாது என்று இரகசியமாகச் சொல்லுறாவாம், ஆனால் ஆர்த்திக்கு கேட்கக்கூடியவாறாக. வைத்தியசாலையில் தெய்வவாக்காக சொன்னவர். இன்று சகுனி அளவுக்கு இறங்கியிருந்தார்.

தேவகிக்கு இப்பொழுது புதுவிதமான நோய்வந்துவிட்டது. வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை. ஊரவரைச்சந்திப்பதில்லை. சந்தித்தாலும் கதைப்பதில்லை, இரவில் நித்திரையால் திடுக்கிட்டு எழும்புதல் நேரம் பார்த்தல். போன்று அமைந்துவிட்டது தேவகியின் வாழ்க்கை.

கணவனுக்கோ என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான். மனநல மருத்துவரிடம் கூட்டிப்போனால் ஊரார் மனைவியை விசரியாக்கிவிடுவார்கள். ஒன்றும் புரியாமல் இருந்தபோதுதான் சில நாட்கள் கழிய ஆர்த்தியின் ஆரம்ப பாடசாலை அதிபர் வீடுதேடி வந்தார்.

அதிபர் சரளமாக ஊர்ப்புதினங்களை கதைத்தபடி இருக்க: தேவகி, “நாங்க ஆர்த்தியை “ஆர்ட்ஸ்” படிக்க விடப்போகின்றோம்.” என்றாள். அதிபர் புன்சிரிப்புடன், ஆர்த்திக்கு விஞ்ஞானமும் கணிதமும் “ஏ” தானே? ஏன் தேவையில்லாமல் குழம்புறீங்க? அவள் “சயன்ஸ்ஸே” படிக்கட்டும். அவள் தனக்கு விருப்பமில்லாவிடில் மாறிப்படிக்கட்டும். உங்கள் ஆசைகளையும், எதிர்பார்ப்புக்களையும் அவள்மீது திணிக்க வேண்டாம். நான் ஆறுதலாக வந்ததே, நீங்க ஆறுதலான பின் கதைப்பம் என்றுதான்.

ஆர்த்தி தன்னையுணர்ந்தவள்: அவளுக்குத் தெரியும் தன்நிலைமை அவளை நெருக்காமல் விடுங்கோ. அவள் படிக்கட்டும். டொக்ரராக வந்தால் நல்லது. ஆனால் டொக்ரராக வந்தால்தான் வாழ்க்கை, அதுதான் கெட்டித்தனம் என்றில்லை. அதைப்புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பதட்டப்படுவதால்; மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் தேடுவதால் உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. நிலவுக்கு பயந்து பரதேசம் போகமுடியாது. நீங்கள் இயல்பாக வாழுங்கள். ஊர்வாயை ஒதுங்கியிருந்து மூடமுடியாது. ஊரை நம்பாமல் உங்கள் பிள்ளையை நம்புங்கள். சரி நான் வருகின்றேன், என்று கூறியவாறு எழுந்து சென்றார்.

வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றவரை வாசல்வரை வழியனுப்ப வந்த ஆர்த்தி “நன்றி சேர் நான் கேட்டதற்காக அம்மாவுடன் வந்து கதைத்ததுக்கு, அம்மா பாவம்; தான்படிக்க முடியாமல் போனதும் அதனால் சொந்தங்களின் கேலிக்கு ஆளானது போல், திரும்பவும் கேலிப்பொருளாக மாறிவிடுவோமோ என்ற கவலையில் நானாவது தனது கனவை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கின்றா!. அப்பாவும் எல்லா மருத்துவர்களிடமும் கூட்டிப்போகின்றார்; ஆனால் எனக்குத் தெரியும் என்னுடைய “ரிசல்ட்”தான் அவவுக்கு சரியான மருந்தென்று”. என்று கூறியவளை கனிவுடன் நோக்கிய அதிபர், நீ இப்பவே பாதி டொக்ரராகிவிட்டாய். உன் முதல் நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டாய். ஆனால் அதற்கான மருந்து கிடைத்தால் நன்று. கிடைக்காவிட்டாலும் நோயாளி பாதிக்கப்படாமல் நோயாளியை நோயை மாற்றக்கூடிய வழிளையம் யோசி. அம்மாவுடன் ஆதராவாகவும் அன்பாகவும் இரு. அவ நாளடைவில் விளங்கிக்கொள்வா. என்னால் செய்யக்கூடிய உதவிகளை நான் செய்து தருகின்றேன். என்று கூறியவாறு விடைபெற்றார் அதிபர்.

– 26/06/2016 தினக்குரலில் வெளியாகிய கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *