தேங்காய்ப் பிச்சை!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,605 
 

ஊருக்குள் ஒரு வாடகைக்கார் வந்து நின்றது.
மருத்துவமனைக்கு சென்றிருந்த அருணாச்சல வாத்தியார், வீடு திரும்பி விட்டாராம்.
அவர் காரைவிட்டு இறங்குமுன், நலம் விசாரிக்க ஊரிலுள்ள ஆண்களும், பெண்களும் கூடி விட்டனர்.
விஷயம் தெரிந்ததும், தெருவிற்குள் ஓடோடி வந்தார் தேங்காய்ப்பிச்சை.
“”என்ன விஷயம்?” எதிர்ப்பட்ட பெண்களிடம் கேட்டார்.
தேங்காய்ப் பிச்சை!“”மேலத்தெரு அருணாச்சலம் வாத்தியார், ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருக்காராம்.”
“”அவருக்கென்ன செஞ்சது?”
“”அது தெரியாதா ஒங்களுக்கு?”
“”தெரியாதே… நான்தான் சென்னைக்குப் போயிட்டு, முந்தா நாள்தானே வந்தேன்?”
“”ஓ… அப்படியா? அவருக்கு வயித்துல ஆபரேஷன் ஆச்சு. 18 நாள் கழிச்சி, இன்னிக்குத்தான் திரும்பி இருக்கார்.”
“”ஆபரேஷன்னா ரொம்ப கஷ்டமாச்சே… போய்ப் பார்க்கலாம்.”
வீட்டிற்குப் போய் துண்டை எடுத்து உதறிப் போட்டு, வாயிலில் கிடந்த சென்னையில் வாங்கிய புது செருப்பை காலில் மாட்டி கிளம்பும் போது, “”எங்கே புறப்பட்டுட்டிய?” என்று கேட்டாள் மனைவி.
“”பாவம்… அருணாச்சலம் வாத்தியார் ஆபரேஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்திருக்காராம்; போய் எட்டிப் பாத்துட்டு வந்துர்றேன்.”
“”போறது சரிதான்… போனமா, வந்தமான்னு வாங்க; வேண்டாத கதையெல்லாம் பேசிப் புடாதீங்க!”
“”வேண்டாத கதை என்னத்தடீ பேசப் போறேன்… வாய மூடிகிட்டுக் கெட.”
மனைவியை அலட்சியப்படுத்தி, நடையைக் கட்டினார்.
கீழத் தெருவிற்குள் வரும் போது, அருணாச்சலம் வாத்தியாரைப் பார்க்க, சில பேர் ஒன்றாகப் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.
அவர்களுடன் சேர்ந்து கொண்டார் தேங்காய்ப்பிச்சை. (தேங்காய்ப்பிச்சை என்பதன் பொருள், தேங்காய் வியாபாரி பிச்சை என்பதாகும்!)
“”அருணாச்சல வாத்தியார் இனிமே பொழைப்பார்ன்னா நெனைக்கறிய?” – பிச்சை.
“”ஏன்?” – ஒருவர்.
“”சவத்த ஆபரேசன் செஞ்சவன், எவன் தப்புவான்? அதுவும், 18 நாளா மருத்துவ மனையில போட்டுருந்துதுன்னா ரொம்ப ஆபத்தான நோயாத்தான இருக்கணும்? பாவம்… நல்ல மனுஷன்.
“”மிஞ்சி, மிஞ்சிப் போனா, ஆறு மாசம் அல்லது ஒரு வருஷம் தான் தாங்கும்,” மனதளவில் மிகவும் வருந்திச் சொன்னார் பிச்சை.
“”யோவ்… நீரா ஒரு முடிவெடுத்து, அவரு தாங்க மாட்டார்ன்னா என்னய்யா அர்த்தம்? சும்மாக் கெடையும்வேய்.” – இன்னொருத்தர்.
“”என்னமோ எம்மனசுல பட்டதச் சொன்னேன்… வாத்தியார் ரொம்ப காலம் வாழ்ந்தா வேண்டாம்ன்னா சொல்லுதேன்?” தேங்காய்ப்பிச்சை நடந்தார்; பின் தொடர்ந்தனர். வாத்தியார் வீட்டிற்குள் சென்றனர். அவர் சோர்வாகப் படுத்திருந்தார்.
“”அண்ணாவி எப்படி இருக்கிய? கனபாடு பட்டுட்டிய போலிருக்கே? வயித்திலயா ஆபரேஷன் நடந்தது?” – ஒருவர் கேட்டார்.
“”ஆமா… கன பாடு தான் பட்டுட்டேன். இந்தா பாருங்க…” தன் சட்டையை விலக்கி, அறுவை செய்திருந்த இடம் காட்டினார் அருணாச்சலம்.
நெஞ்சுக்குழியிலிருந்து, தொப்புள்குழி கடந்து சென்றிருந்தது.
“”அடடா என்னா பெரிசு… பெரிய ஆபரேஷன் தான் போலருக்கு!” – ஒருவர்.
“”இவளோ பெரிய ஆபரேஷன் செய்த யாரு பொழச்சிருக்கா… இந்த டாக்டர் பயலுவ என்னத்தயோ துட்டுக்காவச்சுட்டி செய்வானுவ. உள்ள என்னெல்லாம் கொடக்கம் செய்வானுவளோ?” தேங்காய்ப்பிச்சையால் இருக்க முடியவில்லை.
“”அதெல்லாம் ஒண்ணுமில்லை. நல்ல டாக்டர்; நல்லா கவனிச்சார். இன்னும், ஆறு மாசத்தில எல்லா வேலையும் செய்யலாம்ன்னுட்டார்…” அருணாச்சலம் வாத்தியார் விளக்கம் கூறினார்.
“”அண்ணாவி… நீங்க என்னத்தத்தான் சொல்லுங்க… ஒரிஜினல் மாதிரி, ஒட்டுப் போட்டது ஒழைக்குமா? எப்பம் பிச்சுகிட்டுப் போவுமோ… எத்தன நாள் தாங்குமோ… ம்… ஒங்க மனசுக்கும், கொணத்துக்கும் இப்படி ஒரு நோயி வந்திருக்கப் படாது. இன்னும், அஞ்சாறு வருஷம் உசிரோடக் கெடந்தா நல்லாருக்கும்… ம்… கடவுளு எறக்கமில்லாதவன்யா.” தேங்காய்ப்பிச்சை, “உச்’ கொட்டினார். அவரோடு வந்திருந்தவர்கள் அருணாச்சலம் வாத்தியாரைக் கவனித்து விட்டு நெளிந்தனர்.
அருணாச்சலம் வாத்தியாரின் முகம் சிறுத்து, பயம் கலந்த உள்ளுணர்வா… தனக்கு ஏதுமாகாதென்பதை எப்படி தெளிவுபடுத்துவது என்ற குழப்பமா என்றறிய இயலா பார்வை தெரிந்தது.
“”அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. எனக்கு நல்லா கொணமாயாச்சு! இனிமே நோயே கெடையாதுன்னு டாக்டர் சொல்லியாச்சு… கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்தா, பழைய மாதிரி எழுந்திருச்சிடுவேன்…” பலகீனமாய் சொன்னார் அருணாச்சல வாத்தியார்.
“”நீங்க சொன்னதெல்லாம் சரி. தலைக்கு வந்தது தலப்பாயோட போயாச்சு! ஆபரேஷன் செய்தப் பொறவு நோயி ஏன் வரப் போவுது? நீங்க முன்னை விட இனுமதான் புதுத் தெம்போட எழும்பி நடப்பிய…” – ஒருவர் ஆறுதலாய் சொன்னார்.
“”நீங்க என்னதான் சொல்லுங்க… எனக்கென்னமோ பயமாருக்கு. அண்ணாவிய இப்படி பாப்பம்ன்னு கனவுல கூட நெனச்சிப் பாக்கல; வரப்படாதது வந்தாச்சு… மனசு கேக்கல… ம்… நம்ம கைல என்ன இருக்கு? சாமிய நல்லாக் கும்பிடுங்க…” சொல்லிவிட்டு எழுந்தார் தேங்காய்ப்பிச்சை.
தேங்காய்ப்பிச்சையை எரிச்சலோடு பார்த்துவிட்டுத் தலை குனிந்தார் அருணாச்சலம் வாத்தியார். மற்றவர்களும் விடை பெற்று எழுந்தனர். வெளியில் வந்தாகிற்று.
“”யோவ்… தேங்கா… அறிவிருக்காவேய் ஒமக்கு?” கோபத்தோடு கேட்டார் பாண்டி நாடார்.
“”ஏன்… என் அறிவுக்கென்ன?”
“”உடல்நலமில்லாம மருத்துவமனைக்குப் போயி, செத்து பொழச்சி வந்திருக்கற மனுஷன் மூஞ்சிலடிக்கற மாதிரி, அஞ்சாறு வருசத்துல செத்துப் போவீருன்னா என்னய்யா அர்த்தம். ஒரிஜனலைப் போல ஒட்டுப் போட்டது இருக்காது; எப்ப பிச்சிக்கிட்டுப் போகுதோன்னு சொன்னீரே… அந்த மனுஷன் மூஞ்சி அஷ்ட கோணலா நெளிஞ்சுதே… பார்த்தீரா?” கோபமாகக் கேட்டார் கந்தசாமி.
“”தீன்னா நாக்கு வெந்துறாதுடேய்… என் வயசுல இப்படி எத்தன பேத்தப் பாத்திருப்பேன்… நெஞ்சுக்குழியிலிருந்து தொப்புளு தாண்டி சத்திரமிட்டாச்சே… இனும கஷ்டந்தானே… கொஞ்ச காலம் வாழ்ந்தா நல்லதேங்கற நல்லெண்ணத்தில தான் அப்படிச் சொன்னேன்; தப்பா?”
“”தப்புன்னா… தப்பு, மகா பெரிய தப்புவேய்… சாகக் கெடக்கறவனப் பாத்தாக் கூட நீ நல்லாதானிருக்கே… நாலே நாள்ல மத யானை மாதிரி எந்திருச்சு வருவேன்னு தயிரியம் குடுக்கணும்வேய்…” பாண்டி நாடார் சற்றே கோபத்துடனேயே கடிந்து கொண்டார்.
“”சும்மாயா சொன்னான்… யதார்த்தவாதி வெகுஜன விரோதின்னு… நான் ஒண்ணும் இல்லாதத சொல்லலியே… ஒங்கள மாதிரி உள்ள ஒண்ணு, வெளிய ஒண்ணுன்னு நமக்கெல்லாம் பேச முடியாதப்பா.” கடுகடுப்புடன் தலையைக் கவிழ்ந்து கொண்டு நடந்தார் தேங்காய்ப்பிச்சை.
யாரும் பேசவில்லை; நடந்தனர். எதிரே கீழத்தெரு கிருஷ்ணன் வந்தார்.
“”எல்லாரும் வாத்தியாரப் பாத்துட்டுத் திரும்பிற்றிய போலருக்கே… எப்படி இருக்கறார்?”
“”சவத்தத் தள்ளுங்க… பெரிய ஆபரேஷன்… கொடலக் கிழிச்சு உட்ருக்கானுவ… இனிம அவ்வளவுதான்…” தேங்காய் பிச்சை முந்திக் கொண்டார். பாண்டிநாடாருக்கு, ஆத்திரம் ஆத்திரமாக வந்தது; அடக்கிக் கொண்டார்.
“”அதெல்லாம் ஒண்ணும் ஆவாதுடேய்… நீ ஒண்ணுண்ணா ஒம்பதும்பா… மூடிகிட்ட வாடே!” தேங்காயைக் கைசுற்றி இழுத்தார் கந்தசாமி.
“”எண்ணே கிருஷ்ணண்ணே… வர வர ஒங்க ஒடம்பும் கெட்டுட்டு வருது… சுகர் அதிகமாகியாச்சுன்னு நெனைக்கறேன்… ஒடலு ரொம்ப மெலிவாத் தெரியுதே…” தேங்காய்ப்பிச்சை.
“”இல்லியே… நான் நல்லாத்தானே இருக்கேன்… ஒடம்பு ஒண்ணும் கொறயலியே…” கிருஷ்ணனுக்குத் தன் ஆரோக்கியத்தின் மீதே சந்தேகம் வந்து விட்டது.
“”கிருஷ்ணண்ணே… இந்தக் கிறுக்கன்கிட்ட பேசிக்கிட்டிருந்திய… ஒங்களுக்கும் நோக்காட்ட உண்டு பண்ணிப்படுவான்; பேச்சுக் குடுத்றாதீங்க…” சிரித்தபடியே எச்சரித்தார் கந்தசாமி.
“”யல, உள்ளதச் சொல்ல உடமாட்டியால… என்னண்ணியும் போங்கல…” ஆற்றாமையுடன் தன் வீட்டை நோக்கிப் போனார் தேங்காய்ப்பிச்சை.
“”தனக்கு மட்டும் நோக்காடே வராதுங்கற நெனப்பு… தனக்கு வந்தாத் தெரியும் தலவலியும், மண்டகுத்தும்…” பாண்டி நாடார் முணுமுணுத்தபடியே, தன் வீட்டை நோக்கிப் சென்றார்.
வீட்டிற்குப் போன தேங்காய்ப்பிச்சை, தன் மனைவியிடம் நடந்ததைச் சொன்னார்.
“”உங்களுக்கு பேசத் தெரிஞ்சது இவ்வளவு தான். எப்படின்னாலும் அடுத்தங்க வயித்தெரிச்சலக் கொட்டாம இருக்க முடியாது, இந்தப் புத்தி ஒங்களவுட்டு எப்பத்தான் போகப் போகுதுன்னு தெரியல… கடவுளுக்குத்தான் வெளிச்சம்…” முகத்தைத் திருப்பிக் கொண்டு வேலையில் ஈடுபட்டாள். அவளுக்கு, அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர் நல்லவர்தான்; ஆனால், அவரால் உள்ளொன்று வைத்து, வெளியில் ஒன்று சொல்லத் தெரியாது. அது சரியில்லை என்பது, அவருக்குத் தெரியாது. தெரியும் காலம் ஒன்று வர வேண்டும்… வரும். வரும் போது நல்லபடியாக வரவேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டாள்.
“”இனிய உளவாக… இனிய உளவாக… இன்னாத கூறல்… இன்னாத கூறல்… கனியிருப்ப… கனியிருப்பக் காய் கவர்ந்தற்று… காய் கவர்ந்தற்று…” தேங்காய்ப்பிச்சை பேரன் புத்தகத்தை விரித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தான்.
“”யல… எம் பேரா… என்னம்மோ சொல்லுதியே… அதுக்கு என்னல அர்த்தம்?” தன் பேரனைக் கேட்டார் தேங்காய்ப்பிச்சை.
“”ஆங்… நீங்க எங்க போனாலும் ஒங்க மனசுலப்பட்டதப் படபடன்னு பேசிப்புடுதியளே… அப்படிப் பேசப்புடாதுன்னு அர்த்தம்…” வெடுக்கு என சொன்ன தேங்காய்ப்பிச்சையின் மனைவி, தன் வேலையில் ஈடுபட்டாள்.
“”தாத்தா… கனியைப் போல் வார்த்தை இருக்கும் போது, காய் மாதிரி கசப்பான வார்த்தையைப் பேசக் கூடாதுன்னு அர்த்தம்ன்னு எங்க டீச்சர் சொன்னாங்க,” பேரன் எதார்த்தமாகப் பதில் சொல்லிவிட்டு, தன் படிப்பைத் தொடர்ந்தான்.
“”வச்சுக்கிட்டு நாங்க என்ன வஞ்சகமா பண்றம்? மனசுலப் பட்டதத்தான் சொல்றம்… சரியோ, தப்போ அதெல்லாம் நமக்குத் தெரியாதுப்பா… இந்த வஞ்சகம், சூதெல்லாம் நமக்குத் தெரியாதுப்பா…” சலிப்புடன் சொல்லிவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தார் தேங்காய்ப்பிச்சை.
அவர் தமக்குத்தாமே சுய விமர்சனம் செய்து பார்த்துக் கொண்டார்; எதுவுமே தட்டுப்படவில்லை. அவரைப் பொறுத்தவரை வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடே கிடையாது. யாராவது உதவியென்று தன்னை நாடி விட்டால், என்ன பாடுபட்டாவது அதைச் செய்து கொடுத்து விடுவார். ஆனால், அவரிடம் வருவோர்தான் இல்லை; அதையும் கண்டுகொள்ள மாட்டார்.
ஆண்டுகள் உருண்டோடின.
ஊரில் என்னென்னவெல்லாமோ நடந்து விட்டன.
தேங்காய்ப்பிச்சை சென்னைக்குப் போயிருந்த போது, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, ரயில்வே ஸ்டேஷனில் விழுந்து விட்டார்; மருத்துவமனையில் சேர்த்தனர்.
நல்ல வேளை, அவரின் மகன், மகள் எல்லாரும் அங்கிருந்ததால், அவரை அருகிலிருந்து கவனித்துக் கொண்டனர். இனியொரு முறை நெஞ்சுவலி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று எச்சரித்து, மருந்து, மாத்திரை கொடுத்தனுப்பினர். ஊர் வந்து சேர்ந்த அவரை பார்ப்பதற்கு, ஊரிலுள்ளவர்கள், காலை முதல், மாலை வரை வந்து போக ஆரம்பித்தனர்.
வந்தவர்களில் ஒருவர், தேங்காப்பிச்சை மேல் அதிக அக்கறை உள்ளவர். வந்தவர், “”உங்களுக்கு இப்படி ஒரு நோய் வரும்ன்னு நான் கனவுல கூட நெனச்சுப் பாக்கல. ஒருக்கா, “ஹார்ட்-அட்டாக்’ வந்துட்டா ஓயாம வந்துருமாமே… எளவுடுத்த நோயி மனுஷனுக்கு ஆவாது. மாமா… நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க… ஒங்களுக்கு ஒண்ணும் ஆவாது.
“”கொறச்சுப் பாத்தாலும், ஒரு வருசமாவது தாங்கும். அதுக்குப் பொறவு மருத்துவமனையில போயி படுத்திறமாண்டியளா… கவலப்படாதீங்க…” என்றதுதான் தாமதம்; தேங்காய்ப்பிச்சைக்கு நெஞ்சு வலித்தது போலிருந்தது. அதே நேரம் தனக்கு ஆறுதல் சொன்ன, உறவினரைக் கடித்துக் குதறிவிட வேண்டும் போலிருந்தது.
அருகில் நின்றிருந்த அவரின் மனைவிக்கு, அவர் படும்பாடு நன்கு புரிந்தது. வந்தவரை விரட்டியடிக்க வேண்டும் போலிருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு நகர்ந்தார்.
“”அண்ணே… இதெல்லாம் ஒண்ணும் பண்ணாதுண்ணே… மனசத் தளரவுட்றாதீங்க. நோய் வராத மனுஷன் யார்ண்ணே இருக்கா? மனசத் தளரவுடாம பார்த்துக்கிட்டாலே போதும். மனம் நல்லாருந்தா, ஒடம்பும் நல்லாவே இருக்கும். இத நான் சொல்லல; மருத்துவமே சொல்லுது!” படித்த ஒரு இளைஞர், பக்குவமாய் பேசினார்.
அதைக் கேட்டதும், தேங்காய்ப் பிச்சைக்குள் ஒரு தெம்பு, புதிதாய் பிறந்தது போலிருந்தது.
வந்தவர் களெல்லாம் சென்று விட்டனர்.
மனைவி உள்ளே வந்தாள்.
“”இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக்காய் கவர்ந்தற்று…” என்று, தன் பேரன் இதே திருக்குறளைப் படித்ததும், அதற்கான விளக்கத்தைப் பேரனும், மனைவியும் சொன்னதும், அப்போது தனக்குள் முரண்பட்டுக் கிடந்த பொருள், இப்போது தான் சரியாகத் துலங்குவதும் புரிந்தது.
“”அடி செண்பகம்… இப்பதாண்டி இந்த திருக்குறள் எவ்வளவு எதார்த்தமானதுன்னு புரியுது. தனக்கு வந்தாத்தான் தலவலியும், காச்சலும் தெரியும்றது சரிதாண்டி. யாருக்கு சொகமில்லன் னாலும் அவங்க மொகத்துக்கு நேரிலயே, “இனும அவ்வளவுதான்… நீங்க தேற மாட்டிய …’ன்னு எல்லாமே தெரிஞ்சவன் போல சொல்லுவனே… அப்பல்லாம் எல்லாரும் என்னத் திட்டினாக் கூட, அறிவு கெட்டவங்கன்னு எம்போக்கிலயே தாண்டி போனேன். ஆனா, என்னப்பாத்து யாராவது நீ இனிமே தாங்க மாட்டேலன்னு சொல்லும் போதுதான், அந்த வார்த்தையோட வலியும் தெரியுது… “உனக்கு ஒண்ணும் ஆகாது; நீ தைரியாமாயிரு…’ன்னு சொல்ற வார்த்தையோட சொகமும் தெரியுது.”
தேங்காய்ப் பிச்சையின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
“”ஒங்களுக்குப் புத்தி வர்றதுக்காகத்தான் இந்த நோயே வந் திருக்கும்ன்னு நெனக்கிறேன். என்ன நெனைப்பாங்கன்னு மனுசுல நெனச்சுப் பாத்துப் பேச ஆரம்பிச்சிட்டம்னாலே நல்லத மட்டும்தாங்க பேசுவோம்.” செண்பகத்தின் மனதில், தன் கணவனைப் பற்றி வெகுநாளாயிருந்த வருத்தம் சுத்தமாக விலகியது.
இப்போது, “உற்சாகம் தர்ற வார்த்தையைப் பேசத் தெரிந்தவன் தான் மனிதன்…’ என, தன்னைப் பார்க்க வருபவர்க்கெல்லாம், சொல்லிக் கொண்டிருக்கிறார் தேங்காய்ப்பிச்சை.

– செப்டம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *