கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2021
பார்வையிட்டோர்: 4,421 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆற்றுப் பாலம் வரை நேர்க்கோடாக வந்த பாதை, திடீரென்று வலப்புறம் நோக்கித் திரும்பியது. சாலையின் இருபுறமும் தென்னை மரங்கள் அணி வகுத்திருப்பதைப் பார்த்தால், ராணுவப் படை ஒன்று நிற்பது போல் தோன்றியது. வெற்றிலைக் கொடிக்கால்கள், வாழைத் தோட்டங்கள், கரும்பு, நெல் எல்லாம் திமிறிக் கொண்டு வளர்ந்திருக்கும் காவேரிப் பகுதி எட்டிய வரை பச்சைப் போர்வையாக விரிந்தது.

இன்னும் இரண்டே பர்லாங்குகள் தான் பாக்கி. மயிலைக் காளை உற்சாக மிகுதியில் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருந்தது. என்றாலும், வண்டி ஊர்ந்து செல்வ தாகவே அலமுவுக்குத் தோன்றியது . மனதின் வேகத்துக்கு அது ஈடு கொடுக்க முடியுமா?

வாய்க்கால் கரைப் பிள்ளையார் கோவில் வந்து விட்டது. அருகே படித்துறையில் பெண்களின் சிரிப்பும் பேச்சும் கேட்டன. வேம்பும் அரசும் பிணைந்து நின்றன. அவற்றின் கீழ் சில நாகர்கள். அலமு இந்தப் படித் துறையில்தான் தினமும் குளிப்பது வழக்கம்.

தெருக் கோடியை நெருங்கியதும் ஈசுவரன் கோவில் கோபுரம் தென்பட்டது. கைகூப்பி வணங்கினாள் அலமு.

வீட்டை அடைந்ததும் “வாடியம்மா ………….. ஏன் இப்படி இளைத்திருக்கிறது உடம்பு?” என்று கேட்டாள் கனகம், பெண்ணைப் பார்த்து.

“இளைத்தா இருக்கு?” என்று சிரித்தாள் அலமு. “பின்னே என்ன? பருத்து விட்டதாக நினைப்போ?”

அலமு தன் உடலைப் பார்த்துக் கொண்டாள். வாஸ்தவத்தில் அவள் சற்று ‘பூசினாற்போல்’ பருத்துத்தான் இருந்தாள். அம்மாவுக்கு இது தெரியவில்லையே! விஷயத்தைச் சொன்னால் பூரித்துப் போக மாட்டாளா ?

இரண்டு பெட்டிகள், ஒரு படுக்கை, பழக்கூடை, ஓலைத் தூக்கு , நாகரிகப்பை இவ்வளவும் வீட்டுக்குள் வந்தன. கனகம் அவற்றைப் பார்த்ததும் பெருமை அடைந்தாள். உடனே ஓடிப்போய்க் கோமளத்தைக் கூட்டி வந்து காட்ட வேண்டும். வாய்க்கு வாய் தன் பெண் வாழ்க்கைப்பட்டி ருக்கும் பெரிய குடும்பத்தைப் பற்றிப் பெருமை பேசும் அவள் வாயை மூட அதுதான் வழி.

“மாப்பிள்ளை உடம்புக்கு ஒன்றுமில்லாமல் இருக்காரா?”

“உம்…………….”

“ப்ரமோஷன் ஆயிருக்காமே?”

“யார் சொன்னா?”

“நாலு நாள் முன்னாடி பட்டணத்திலிருந்து கண்ணன் வந்திருந்தான். அவன்தான் சொன்னான் ……………. உனக்கு எப்படிடா தெரியும்னு கேட்டேன். அவன் சிநேகிதன் ஒருத்தன் வந்திருக்கானாம், அவன் சொன்னதாக…………..”

“எனக்கு ஒண்ணும் தெரியாதம்மா. உன் மாப்பிள்ளை அதையெல்லாம் என்கிட்டே சொல்லி விட்டா, அப்புறம் என்னை யாராலேயும் கட்டிப் பிடிக்க முடியாது………..”

பெண்ணின் விரக்தி கலந்த பேச்சு, கனகத்தின் வாயை மூடிவிட்டது. “சரி, பல்லைத் தேய். காப்பி போட்டு வைத்திருக்கேன் ………. உங்கப்பாவுக்கு இப்பதான் கோர்ட் வேலை மும்முரமா வந்துடுத்தாம். திருச்சிக்குப் போயிருக்கார். …………. எல்லாத்துக்கும் நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!” என்றாள்.

அலமு பெட்டியைக் குடைந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். சமையற் கட்டின் நிலைப்படியைப் பிடித்துக் கொண்டு நின்ற கனகம் , அவளையே கூர்ந்து பார்த்துவிட்டு, “அலமு , இது எத்தனாவது மாசம்?” என்று கேட்டாள்.

“நாலுன்னு நினைக்கிறேன்” என்றாள் அலமு.

“எழுதவே இல்லையே?”

“எழுதின போதெல்லாம் தரிச்சுதாக்கும்?”

“தரிக்கிறதுக்கும் தரிக்காத்துக்கும் நீ என்ன பண்ணுவே?நன்னா யிருக்கடி நீ பேசறது. அசடு மாதிரி பேசாமல் போனா நீ அலமு இல்லையே!”

“என் வயிற்றெரிச்சலைக் கிளப்பாதே அம்மா. இங்கேயாவது நிம்மதியா இருக்கலாம்னு வந்தா ……….” அலமுவின் கண்களில் நீர் துளிர்த்து விட்டது.

கனகம் பயந்து விட்டாள். பெண் கண் கலங்குவது வயிற்றைப் பிசைந்தது. இது என்ன இப்படி? வந்ததும் வராததுமாக அபசகுனம் மாதிரி. தன் மீதே கோபம் வந்தது கனகத்துக்கு. எங்கே என்று காத்திருந்தவளைப் போல் எடுத்த எடுப்பிலேயே தகராறுதானா? அலமுவின் சுபாவம்தான் தெரிந்ததாயிற்றே! “பல்லைத் தேயம்மா . கண்ணைத் துடைச்சுக்கோ” என்றாள் அன்பு பொங்க.

புழக்கடைப் பக்கம் சென்றாள் அலமு . ஒற்றைத் தனி மரமாய் நெடிது வளர்ந்திருந்தது பாக்கு. அருகில் மல்லிகைப் புதர். கனகாம்பரத்தின் சிவப்புச் சிரிப்பு. கொடி படர்ந்து குதூகலிக்கும் புடலையும், அவரையும் இவற்றோடு போட்டியிட்டுக் கொண்டு வேலிக் காலில் ஒரு காட்டுக் கொடியின் ஆதிக்கம். காப்பியைக் குடித்துவிட்டு, மீண்டும் பெட்டியைக் குடையலானாள் அலமு.

புதிதாக ஏதாவது நகை செய்து கொண்டிருப்பாளோ? அல்லது புடவை வாங்கியிருப்பாளோ! கணவன் முந்நூறுக்கு மேல் சம்பாதிக்கிறான். பிச்சுப் பிடுங்கல் இல்லாத குடும்பம். செய்து கொள்வது பிரமாதமல்ல.

“ஏண்டியம்மா, இப்பதான் புதுசு புதுசா என் னென்னவோ ‘பார்டரிலே’ புடவை யெல்லாம் வந்திருக்கே ………… நீ ஏதாவது வாங்கினாயா?” என்று கேட்டாள் கனகம். இந்தக் கேள்வி கேட்பதற்கு மனத்துள் வேறு நோக்கம் உண்டு. பெண்ணுக்கு இதமாக ஏதாவது பேசி, அவளது கோபத்தையும், முதல் முதல் இடறிய அபசகுனத்தையும் துடைக்கலாமென்பதுதான் அது.

ஆனால் விளைவோ விபரீதமாக இருந்தது. வெறிக்கத் தாயாரையே பார்த்தாள் அலமு . “அவ்வளவு தூரத்துக்கு இருந்தால், நான் ஏன் இப்படி இருக்கிறேன்?” என்றாள்.

வாயைத் திறக்காதிருப்பதே உத்தமம் என்று தோன்றி விட்டது கனகத்துக்கு. ஏதாவது ஒன்று கேட்டால், அது ஒன்பதாகக் கிளைத்து விடுகிறதே! வந்த நேரம் சரியில்லையா? சந்தடி செய்யாமல் சமையற் கட்டுக்குள் புகுந்து விட்டாள்.

அம்மா கேட்ட கேள்வியிலே அலமுவின் மனது லயித்து விட்டது. பெட்டியைக் குடைவதெல்லாம் வெறும் பாசாங்குதான். பிரமோஷன்’ ஆகியிருக்கிறதாமே. அதைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னாரா! கொண்டவ ளுக்கு அந்த உரிமை கூட இல்லை என்றால், இல்வாழ்க்கைக்கு என்னதான் பொருள்? ஏதோ மாதிரி நடத்துவதைத் தவிர, அவளை ஒரு பெண்ணாக இதுவரை அந்த மனிதர் மதித்திருக்கிறாரா? எப்போது பார்த்தாலும் ஆபீஸ், ஆபீஸ், ஆபீஸ் ! பிரமாத ஆபீஸை இவர் ஒருத்தர்தானே ஆள்கிறார்!

உலகத்தில் எல்லோரும் ஆபீஸுக்குப் போகவில்லையா சம்பாதிக்கவில்லையா? என்ன அதிசயமோ! முகத்தில் சிரிப்பின் சுவடே கிடையாது. அந்த நரகத்திலிருந்து விடுபடலாமென்று இங்கே வந்தால், அதற்கு மேல் வேதனை பொறுக்க முடியவில்லை. யாருக்காவது அவளுடைய மனது புரிகிறதா? யாரை நொந்து கொள்வது? விதி! எல்லாம் விதி!

அப்பா கூட வீட்டில் இல்லை. அவசர காரியம் வந்து விட்டதாம். பெண் வருகிறாளே. அதுவும் ஆயிரம் மைலுக்கு அப்பாலிருந்து வருகிறாளே’ என்கிற பாசம் இருக்காதோ? இருந்தால் போவாரா? எல்லோரும் யந்திர மாக இருக்கிறார்கள். அவளுக்கு அப்படி இருக்கத் தெரியாத குறைதான் இத்தனை சங்கடங்களுக்கும் காரணம்.

வாசலுக்கு வந்தாள். மழை பெய்து படிந்திருந்த தெருவில் ஒரு மாறுதலும் இல்லை. அன்று போல் இன்றும் மேலக் கோடிப் பெருமாள் கோவிலிலிருந்து, கீழ்க் கோடி ஈசுவரன் கோவில் வரை மேனி மழுங்காது நீண்டிருக்கிறது. உலகத்தில் எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டால்தான் என்ன, இந்த ஊரை ஒன்றும் செய்துவிட முடியாது!

காற்றைக் கூடக் காணோம். அதன் மென்னியை யாரோ பிடித்துத் திருகிவிட்டதைப் போல அசைவற்றுக் கிடந்தது. காலைக் கதிரவன் உமிழ்ந்த கதிர்கள், தெருவில் தேங்கியிருந்த நீரில் விகாரமாகப் பளபளத்தன.

“யாரடி அலமுவா!”

பக்கத்து வீட்டுத் திண்ணை குரல் கொடுத்தது. அலமு பார்த்தாள். பத்து வருஷத்துக்கு முன்பிருந்த மேனிக் கட்டு சற்றும் தளராது அம்புஜம் நின்றாள்.

“ஆமாம், மாமி…..”

“எப்போ வந்தே ?”

“காலையில் தான்”

“நான் கவனிக்கவே இல்லையே………. இங்கே இதுக்கள் போடற இரைச்சலிலே என்ன காதிலே விழறது?………… உடம்புக்கு ஒன்றுமில்லாமல் இருக்கிறாயா?”

“உம்” என்றாள் அலமு . ‘இதுகள்’ என்று அம்புஜம் குறிப்பிட்டது அவளது அளவற்ற சந்தான பாக்கியங்களைத் தான்! காலணா அகலத்துக்கு நெற்றியில் பொட்டிட்டுக் கொண்டு, எப்போதும் ரெடிமேட்’ சிரிப்புடன், வயிறு குலுங்கப் பேசும் ஹாஸ்யமுமாய்த் துலங்கும் அவளிடம், எப்போதும் அலமுவுக்குப் பொறாமை. எட்டுக் குழந்தை களையும் சமாளித்துக் கொண்டு இவளால் சிரித்துப் பேசவும் முடிகிறதே!

“உங்களவர் வந்திருக்காரா?”

“இல்லை, நான் மட்டும் தான்.”

“ஆமாண்டியம்மா , ஒரு தடவை வந்துவிட்டுப் போற துன்னா லேசிலே இருக்கா? எண்ணி ரெண்டு பச்சை நோட்டை எடுத்து வைக்க வேண்டியிருக்கே ………………. தவிரவும் ஆபீஸ்காரா நெனைச்சபடி வரத்தான் முடியுமா? ………. சாவகாசமா வீட்டுக்கு வாயேன்……….. அடுப்பிலே தீஞ்சு போயிடும் … வரேன்” என்று அம்புஜம் விடை பெற்றுப் போனாள்.

ஆபீஸ்காரர்கள் என்றால் கிராமத்திலிருப்பவர்களுக்குத் தேவலோகத்துப் பதவி என்று கற்பனை போலும்!

ஏன், முதலில் அலமுவே அப்படித்தானே எண்ணிக் கொண்டிருந்தாள் ! அதுவும், நம் தேசத்தவர்களுக்கு வடக்கே வேலை பார்க்கிற மாப்பிள்ளை வாய்த்துவிட்டால், தலை கால் தெரிவதில்லை!

அலமுவின் கணவன் வேலை பார்த்த இடம், இரும்புத் தொழிற்சாலைகள் புதிதாக நிர்மாணமாகும் பகுதியில் அமைந்திருந்தது. சுற்றிலும் செம்மண் காடு. புல், பூண்டு மருந்துக்குக் கூடக் கிடையாது.

அதுகூட அவளுக்குப் பெரிய ஏமாற்றமல்ல. காடு புதரில் வசித்தால் கூட, அன்பான கணவனின் இன்சொல் அதைத் தெய்வலோக மாக்கி விடாதா? ஆனால் அவளது கணவன் பத்மனாபனோ , ஆபீஸைத் தலையில் தாங்குபவனைப் போல, மணமானது முதல், இன்றுவரை நம்பிக்கையற்ற நிராசைப் பெரு வெளியில் அவளைத் தவிக்க விட்டு, உடலையும் உள்ளத்தையும் சோரச் செய்தானே தவிர, அன்பெனும் அரும்பை மலரச் செய்ததில்லை.

அவனது மனத்தைக் கவர அவளும் படாதபாடு பட்டாள். விதம் விதமாக உடுத்திக் கொண்டாள். மலர்சூடி, மையிட்டு, முறுவலுடன் வழிபார்த்து நின்றாள். அவனோ வீட்டுக்குள் கால் எடுத்து வைத்ததும், “எதற்காக இந்த அலங்காரம்?……….. கண்ணைக் கூசுகிறது. எப்போதும் போல இரு, போதும்” என்பான்.

இதற்கு என்ன அர்த்தம்? எவ்வளவோ அர்த்தம் கொள்ளலாம். தன் மீதே நம்பிக்கையற்ற பலவீனமும் ஒரு முக்கிய காரணம் எனலாம். தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவான்.

“உடம்பு சரியில்லையா?”

“எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது……….. விடிவ தற்குள் ஒரு ‘ஸ்டேட்மெண்டு’ அனுப்பியாகணும் …….. கணக்கில் எங்கோ உதைக்கிறது. கண்டு பிடித்தாகணும்.”

“காப்பி கொண்டு வரட்டுமா?”

‘உம்……………..”

எவ்வளவோ ஆசையுடன் தயாரித்த பலகாரமும், காப்பியும் அவன் முன் வைக்கப்பட்டாலும், ஒருவித உணர்ச்சியும் இன்றிச் சாப்பிட்டு எழுந்திருப்பான். முப்பது வயது வரை வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் உழன்று விட்டுத் தாமாக மணம் செய்துகொண்ட பிழையோ, வேறு எதுவோ, அவளுடைய உணர்ச்சிகளுக்கு அவன் மதிப்புக் கொடுத்ததே இல்லை. ஒரு வேளை அவளுக்கு உணர்ச்சிகள் உண்டு என்பதையே அவன் அறிவானோ என்னவோ?

அர்த்தமற்ற பிணைப்பு. சாப்பாட்டுக் கவலையில்லை. அதை வாங்கிப் போட்டு விடுகிறான். தான் சம்பாதிப்பதே அதற்காகத்தான் என்பதைத் தவிர, அவனுக்கு வேறு சிந்தனையே இல்லை. ஒரு துணை வேண்டுமே, அதற்காக அவள் உடற் புண்ணால் மனப் புண்ணை அதிகமாக்கிக் கொள்வதைத் தவிர, அங்கே குளிர் நிலவுக்கோ, உதயத்தின் மலர்ச்சிக்கோ அர்த்தமே கிடையாது. என்ன வாழ்க்கை!

அம்புஜம் தான் இருக்கிறாள். அலமுவைவிட ஏழெட்டு வயது மூத்தவள். இருந்தும், இப்போது பார்த்தாலும், புது மணப் பெண் போலப் பொலிவு துலங்குகிறது. மணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும், இன்னமும் ஒற்றை மரமாக நிற்கும் தனக்கும், அம்புஜத்துக்கும் எத்தனை வேறுபாடு!

சரேலென்று உள்ளே வந்தாள் அலமு. தலை கனத்தது. படுக்கையில் விழுந்தாள். துயரம் அடக்கக் கூடியதாக இல்லை. பொங்கிப் பொங்கி விம்மினாள்.

“என்னம்மா, என்ன?” என்று ஓடோடி வந்தாள் கனகம். அலமு பதில் சொல்லவில்லை. அவளது தலை மயிரைக் கோதியபடி, ஆதுரத்துடன் மூச்சடைக்க நின்றாள் கனகம், பேச வாயற்று.

இதற்கு விமோசனம் இல்லையா? இப்படியே எத்தனை நாள் வாழ்வது? ‘பொக் கென்று ஒரு கணத்தில் பிராணன் போய் விட்டாலும் தேவலையே!

“எழுந்திருந்து குளித்து விட்டு வாம்மா……. பிள்ளைத் தாச்சி இப்படி அழக்கூடாது. என் கண்ணல்லவா, எழுந்திரடா கண்ணு” என்று அன்பைப் பூசினாள் கனகம்.

வெடித்த நிலத்தில் மழைத் துளி பாய்ந்ததைப் போல, அலமுவின் உள்ளத்தில் சற்றுக் கசிவு கண்டது. கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.

உம் …… பொருமுவதால் என்ன லாபம்? வாய்த்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டியதுதான். ஆறு வருடம் பழகிப் போன விஷயம் தானே!

“வாய்க்காலுக்குப் போய்க் குளித்து விட்டு வரட்டுமா?” என்றாள் அலமு.

“உடம்புக்கு ஆகுமோ?” என்று கேட்ட கனகம், பிறகு தன் பெண்ணின் ஆவலுக்கு எதிர் சொல்ல வேண்டாமென்று, “சரி, போயிட்டுத்தான் வாயேன் ………. அம்பு ஜம்கூடப் புறப்படுகிற சமயம்தான்” என்றாள்.

குழந்தை மாதிரிச் சிரித்துக் கொண்டு அம்புஜம் வந்தாள். “என்ன அத்தை , பேரனா பேத்தியா?…………” கனகத்தை ‘அத்தை’ என்றே அழைப்பாள் அம்புஜம்.

“எதுவோ ஒண்ணு ………… நல்லபடியாப் பிறக்கணுமனு பகவானை வேண்டிண்டிருக்கேன்.”

“அதெல்லாம் கவலைப் படாதேங்கோ ………. எனக்கு மாட்டுப் பெண்தான் பொறக்கப் போறா! என்ன சம்பந்தியம்மா, இப்பவே பிடிச்சுக் கிராக்கி பண்ணிக்காதே . புறப்படு, வாய்க்காலுக்கு.”

“சரி , போயிட்டுச் சீக்கிரம் வாங்கோ ………. வெய்யில் ஜாஸ்தியாகிறது.”

வழியில் – ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தாள் அம்புஜம். அலமுவுக்கு அதை எல்லாம் கேட்கக் கேட்க மறைந்த தாபம் அதிகரிக்க ஆரம்பித்தது. படித்துறையில் குளிக்கும் போது மனது குளிர வேண்டுமே! ஊஹும்!

வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் படுத்ததும், கடிதம் எழுதிப் போட வேண்டும் என்ற நினைவு வந்தது. எழுதா விட்டால் தான் என்ன? ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கவா போகிறார்?

இரண்டு நாட்கள் கழித்து வேண்டா வெறுப்பாக ஒரு முக்காலணா கார்டு போட்டு வைத்தாள். “சௌக்யமாக வந்து சேர்ந்தேன். இங்கு எல்லோரும் சௌக்கியம். அங்கு உங்கள் சௌக்கியத்துக்கு எழுதவும் ……… குளிர் காலம், மப்ளரைக் கட்டிக் கொள்ளுங்கள் …….. இப்படிக்கு – அலமு.”

மாதங்கள் உருண்டோடின. சீமந்தம் எப்போது வைத்துக் கொள்ளலாம், என்று அவள் தந்தை தேசிகாச்சாரி மாப்பிள்ளைக்கு எழுதிக் கேட்டார். ‘அதெல்லாம் ஒன்றும் வேண்டியதில்லை’ என்று அவன் எழுதி விட்டான்.

“இதென்னடி இப்படி எழுதியிருக்கார்?” என்றார் மனைவியிடம்.

“லீவ் கிடைக்காதோ என்னவோ!”

“அதுக்காக ?….. சீமந்தம் செய்யாம விடலாமா?”

“மறுபடியும் எழுதுங்களேன் …… நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!”

“சரி, சரி . நீ வேறே கண்ணைக் கசக்காதே…….. அலமு, இந்தாம்மா” என்று அழைத்தார் பெண்ணை. அவள் வந்து நின்றாள். “நீ எழுதிப் போடம்மா ……….. இதெல்லாம் சம்பிரதாயத்தை ஒட்டி நடந்தாகணும் ….. அப்புறம் ஊரிலே நாலு பேர் நாலுவிதமாப் பேசுவா……. என்ன?” என்றார்.

வேறு வழியின்றி அவளே கடிதம் எழுதினாள். திரும்பத் திரும்ப, “செய்யாது விட்டோமானால் நாலு பேர் நாலுவிதம் சொல்லுவா” என்ற பல்லவியையே கடிதம் பூராவும் நிரப்பி அனுப்பினாள். ஒரு வழியாக மாப்பிள்ளை அசைந்து கொடுத்தான். வருவதாகக் கடிதம் எழுதினான்.

இன்றுதான் பத்மனாபன் வரப் போகிறான். பாழும் மனசு! வாசலுக்கு, வாசலுக்கு ஏன்தான் ஓடுகிறதோ?

வண்டி வந்து நின்றது. தேசிகாச்சாரி முதலில் இறங்கினார். பின்னால் அவன்!

“வாங்கோ” என்று வரவேற்றாள் அலமு.

“உம்…….”

“வண்டி லேட்டா என்ன?”

“இல்லையே …… ஆறு பதினெட்டுக்கு வரவேண்டியது. பதினேழுக்கே வந்துட்டானே!”

எப்படி இருக்கிறது? இந்த வேண்டாத தகவல்களை எல்லாம் மனதில் பதிய வைத்துக் கொள்ளத் தெரிகிறது!

வாசல் அறையில் அவனுக்குக் காப்பி கொண்டு போனாள். சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டு, பனியனோடு ஒரு சிறு நோட்டுப் புத்தகத்தில் கணக்குக் குறித்துக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும், “இது வரையிலே ஐம்பது ரூபாய் ஆயிடுத்து……. இத்தனைக்கும் வழியிலே ஒரு தூசு கூட வாங்கல்லே” என்றான்.

“போனாப் போறது. காப்பி சாப்பிடுங்கோ ”

மடக் கென்று காப்பியை முழுங்கினான். “ஒரு வாரம் தான் லீவ். தெரிஞ்சுதா?……. இதுக்கே பெரிய துரைகிட்ட சண்டைபோட்டு வாங்கிண்டு வந்திருக்கேன்”

“குளிக்கிறீர்களா? வெந்நீர் இருக்கு ……..”

“உம்……….”

கை நிறைய வளையல்கள் குலுங்க அவள் திரும்பினாள். ஒரு வார்த்தை – ஒரே ஒரு வார்த்தை – அன்புடன் விசாரிக்கத் தெரிய வில்லையே! ஐம்பது ரூபாய் செலவானா லென்ன, ஐந்நூறு ஆனாலென்ன! ஆற்றிலே கொண்டு எறியலாமே அந்தப் பணத்தை! அவளுக்கு ஒரு முழப் பூ வாங்கி வரக்கூடாதா? செலவாயிற்றாம் செலவு!

பகலில் தலையை வலிப்பது போலிருந்தது அலமுவுக்கு. மெள்ள மெள்ள வலி அதிகரித்து, உடலில் குளிர் கண்டு விட்டது. மாலையில் பேச்சு மூச்சற்றுப் படுத்துவிட்டாள். தேசிகாச்சாரி பயந்து போய் டாக்டரை அழைத்து வர ஓடினார். கனகம் கையைப் பிசைந்தாள். இதற்கு முன் மூன்று தடவை இந்த அனுபவம் உண்டு. ஆனால் சீமந்த மாதம் வரை தாண்டியதில்லை. மூன்றிலும், நான்கிலுமாகக் கரைந்து போனவை. இப்போதும் அப்படித்தானா? பெண் வந்த அன்றைக்கு ஆரம்பித்த அபசகுனத்தின் விளைவோ இதெல்லாம்? நல்லபடியாக முடியாதா?

“என்னடியம்மா, என்ன பண்றது?” என்று அடிக்கொரு முறை கேட்டுக் கொண்டே இருந்தாள். பதில் இல்லை. நினைவற்றுக் கிடந்தாள்.

டாக்டர் வந்து பார்த்து, இஞ்செக்ஷன் போட்டுவிட்டு, இரண்டு மருந்துகளை எழுதிக் கொடுத்தார். இவ்வளவையும் பொம்மை போலப் பார்த்துக் கொண்டே நின்றான் பத்மனாபன். என்ன செய்வதென்று தெரியவில்லையோ அல்லது இத்தகைய ஏமாற்றத்தை அவன் எதிர் பார்க்க வில்லையோ, அவன் முகம் பேயறைந்தது போலாகிவிட்டது. வாசல் அறைக்குப் போய் விட்டான்.

யாரும் சாப்பிடவில்லை. சாப்பிடத் தோன்றவில்லை. இன்னும் இரண்டு நாள் தான் இருக்கிறது. சீமந்தத்துக்கு பத்திரிகை அடித்து அனுப்பியாகி விட்டது. வருபவர் களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோமோ என்கிற பீதி கனகத்துக்கு.

“நீங்கள் ஒரு வாய் சாப்பிடுங்களேன், மாப்பிள்ளை” என்றார் தேசிகாச்சரி .

“உம்…” என்றான் பத்மனாபன். பிறகு “வேண்டாம் …….. பசியில்லை எனக்கு” என்று கூறிவிட்டான்.

பத்து மணி இருக்கும், அலமு மெல்லக் கண் திறந்தாள். கனகம் அருகில் நின்று கொண்டிருந்ததைக் கண்டதும், “அம்மா!” என்று அரற்றினாள்.

“அழாதேம்மா…. எல்லாம் சரியாயிடும்…. இரு , மருந்து தரேன்” என்று ஓடினாள் கனகம்.

பத்மனாபன் வந்து பார்த்தான். அவன் முகம் வெளிறி யிருந்தது.

அவள் பேசவில்லை, தலையைத் திருப்பிக் கொண்டாள். பயங்கர அமைதி! டாக்டர் பதினோரு மணிக்கு ஒரு முறை வந்து விட்டுப் போனார். தேசிகாச்சாரி வாசல் திண்ணையில் படுத்தார். கனகம் கூடத்தில் சுருண்டு கிடந்தாள்.

மணி என்ன இருக்குமோ ! அலமுவுக்கு சுயநினைவும் விழிப்பும் வந்தன. இருளைக் கிளறிக் கொண்டு சிம்னியின் சிறு நாக்கு நீண்டு துவண்டது. வறண்ட புன்சிரிப்பு இதழ்க் கடையில் மெல்ல ஓட, அவள் எழுந்திருக்க முயன்றாள். அம்மாடி! எவ்வளவு நிம்மதி! இத்துடன் முழு நிம்மதியும் வந்துவிடக் கூடாதா? வந்து விடும்! நிச்சயம் வந்து விடும்!

புழக் கடைக் கதவை மெல்லத் திறந்தாள். நடை தள்ளாடியது. அம்மாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கலாம். பாவம் ! அவள் இப்போது தான் சற்று அயர்ந்து கண் மூடியிருப்பாள். அவளை எழுப்புவானேன்? ஆனால் புழக்கடைக் கதவு தாளிடப் படவில்லையே! மறந்து விட்டார்களோ சாத்தி வைக்க?

ஒற்றைப் பாக்கு மரமும், மல்லிகைப் புதரும், அவரைக் கொடி வீடும் கண்ணில் பட்டன. மெல்லிய சந்திரனின் ஒளிக் கதிர்கள், வலிக்கு ஒத்தடம் கொடுப்பன போலப் பரவியிருந்தன.

“அலமுவா?”

மாட்டுக் கொட்டத்திலிருந்து குரல் வந்தது. அலமு திடுக்கிட்டாள், யார்? அவரா? இங்கே என்ன செய்கிறார்? தள்ளாடியபடி, “ஆமாம், நீங்கள்….?” என்று திணறினாள்.

அவன் எழுந்து வந்தான். அலமு அவனையே பார்த்தாள். கண்கள் சிவந்திருந்தான் . தனிமையில் கண்ணீர் வடித்திருக்கிறான் என்பதை அவை புலப்படுத்தின. கலைந்து கிடந்த தலை மயிர் முகத்தில் புரள, அவன் நின்ற நிலையைக் கண்டு அவள் நெஞ்சு விண்டது.

“நான் பயந்தே போயிட்டேன், அலமு …… எனக்கு இப்போ போதாத காலம்… ஆபிஸிலே துரை போன வாரம் எரிஞ்சு விழுந்தான் …. இங்கே இப்படி இருக்கிறது” என்றான் அவன் குழந்தை போல.

அவளுக்கு அழுகை வந்து விடும் போல ஆகிவிட்டது. “எனக்கு ஒன்றும் இல்லை… பயப்படாதீர்கள் ” என்றாள்.

“பயப்படற்தென்ன? நீ இல்லை என்றால் என் வாழ்வு முடிந்தது. அவ்வளவுதான்.”

“அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் … உங்களைப் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கிறது… ஒரு மாசத்துக்கு லீவு எழுதுங்கள்.”

“எழுதியாச்சே!”

அருகில் சென்று அவன் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் அலமு.

இவ்வளவு நாட்கள் தெரியாத ரகசியம் தெரிந்து விட்டது!

யந்திரமாக இருந்த அவனது உள்ளத்தின் அடியில், அன்பின் வெள்ளச் சுழலைக் கண்டு விட்டாள் அலமு . இனி அவளுக்கு வியாதி ஏது, கவலை ஏது?

– சிறுகதைக் கோவை (பதின்மூன்று சிறந்த எழுத்தாளர்களின் உயர்ந்த ஓவியங்கள்), முதற்பதிப்பு: மே 1961, எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகம், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *