தெய்வத்துக்கும் நேரம் காலம் வரவேண்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 6,362 
 

ராசப்பண்ணே எப்படிண்ணே சிமிண்ட்ல இவ்வளவு அழகா சிலை எல்லாம் செய்யறீங்க, கண்ல ஒத்திக்கலாம் போல இருக்கு”ராசப்பண்ணன் தன் நரை மீசையை ஒதுக்கிவிட்டு சிரித்தார்.எப்படி கல்லுல செதுக்கறவங்க தன்னுடைய மனசை எல்லாம் வச்சி செய்யறாங்களோ, அது மாதிரிதான் நாங்களும் செய்யறோம். இப்பவெல்லாம் மக்கள் இதுலயும் கொஞ்சம் ஆர்வமா இருக்கறதுனால எங்க வண்டி ஓடுது.சொன்னவர் உள்ளே திரும்பி மணிகண்டா அந்த அனுமார் சிலைய கொஞ்சம் வெளிய எடுத்து வை. இன்னைக்கு பார்ட்டி வர்றேன்னு சொல்லியிருக்கு.

வேலையாள் கொண்டு வந்த அனுமார் சிலை பிரமாதமாய் இருந்தது. அதை மணிகண்டன் வெளியே வைத்துவிட்டு சென்றதும் நான் அருகே சென்று உற்றுப்பார்த்து அண்ணே கலக்கிட்டீங்க, அப்படியே ஆஞ்சனெயரே எதிர்ல நிக்கறமாதிரி இருக்கு. இதுல கலர் கொடுத்தா பிரமாதமா இருக்கும். மனதார பாராட்டி விட்டு சரி வரேன் பஸ்சுக்கு நேரமாச்சு விடைபெற்றேன்.

நான் கோவை மாநகரின் உட்புறம் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். தினமும் காலை ஒன்பது மணிக்கு எனது வீட்டிலிருந்து கிளம்பி அங்குள்ள பஸ் ஸ்டாபிங்க்கில் பஸ்ஸ¤க்கு நின்று பஸ் ஏறுவது வழக்கம். பஸ் நிறுத்தத்தின் அருகில்தான் ராசப்பண்ணனின் சிமிண்ட் ஒர்க்ஸ் கடை இருந்தது.அதில் ஏராளமான சிற்பங்களை செய்து ரோட்டோராமாய் வைத்திருப்பார், கொஞ்சம் உள்ளே தள்ளி அவரும், அவர் குடும்பமும் இருந்தது.இரண்டு வேலையாட்களையும் வைத்திருந்தார்.அவர் தினமும் சிமிண்டால் செய்யும் உருவங்களை நான் பஸ் ஏறு முன் பார்த்து இரசிப்பது வழக்கம் நான் நின்று தினமும் இரசித்து செல்வதை பார்த்த ராசப்பண்ணன் என்னை ஒரு நாள் உள்ளே அழைத்து தம்பி தினமும் இந்நேரத்திக்குதான் கிளம்புவிங்களா என்று தானே நட்பாக்கிக்கொண்டார். அவருடன் பேசி பேசி இன்று அண்ணே என்று உரிமையுடன் அழைத்து பேசும் அளவுக்கு சினேகிதமாகிவிட்டேன். இப்பொழுதெல்லாம் காலையில் அவருடன் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு, அங்குள்ள் சிற்பங்களை இரசித்து பாராட்டிவிட்டு கிளம்பினால்தான் திருப்தியாக இருக்கும்.

இரவு வேலை முடிந்து பஸ்சை விட்டு இறங்கி கடையை பார்க்க, அனுமன் சிலை அப்படியே இருந்தது.விசாரிக்கலாம் என்று நினைத்தவன் இந்நேரத்துக்கு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து வீட்டுக்கு சென்று விட்டேன்.

காலையில் பஸ் ஏறு முன் அவர் கடைக்கு சென்று எண்ணன்னே, அனுமாரை இன்னும் வந்து வாங்கிக்கலயா? இன்னும் வரலை தம்பி, போன் பண்ணுனாலும் எடுக்க மாட்டீங்கறாங்க. அட்வான்ஸ் வேற் கொடுத்துட்டு போயிருக்கறாங்க, சரி பாப்போம், அங்க அவங்களுக்கு என்ன பிரச்சனையோ! அலுத்துக்கொண்டார் ராசப்பண்ணன்.

அதன் பின் தினமும் அந்த அனுமனை பார்த்துதான் பஸ் ஏறுவது எனக்கு வழக்கமாயிற்று. எங்களுக்குள் ஒரு இரகசிய தொடர்பே இருந்தது போல் எனக்கு தோன்றியது. அவரை பார்க்காமல் பஸ் ஏறிவிட்டால் எனக்கு மனசே கேட்காது. இரவு பஸ் விட்டு இறங்கியவுடன் அவரை பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு வீட்டுக்கு போனால்தான் நிம்மதி. இருந்தாலும் அந்த மண்ணிலும் புழுதியிலும் அவர் நின்று கொண்டிருப்பது எனக்கு மனசை சங்கடப்படுத்திக்கொண்டே இருந்தது.அவருக்கு என்று விமோசனம் வருமோ, என்று நினைத்துக்கொள்வேன்.

மூன்று மாதங்கள் ஓடியிருக்கும், ஒரு நாள் இரவு பஸ் விட்டு இறங்கி வழக்க்ம்போல் அனுமனை பார்க்க தலையை திருப்பினேன். ஆனால் அங்கு அனுமனை காணவில்லை. திகைப்புற்று நேரத்தைப்பற்றி கவலைப்படாமல் அவர் கடைக்கு சென்று எண்ணன்னே அனுமனை காணல?

அவர் ‘என் குரலில்’ இருந்த பரபரப்பை ஆச்சர்யமுடன் பார்த்தவாறு மதியம் சிவானந்தா காலனியில இருந்து ஒருத்தர் வந்து வாங்கிட்டு போயிட்டாரு, கூட்டி கழிச்சு கொஞ்சம் கம்மியாத்தான் கொடுத்தேன்.எனக்கு ஏமாற்றமாய் போய்விட்டது. நாளையிலிருந்து அவரை பார்க்க முடியாது. மனதில் ஏற்பட்ட ஏமாற்றத்தை குரலில் காட்டாதவாறு சரி வாரேண்ணே, என்று விடை பெற்றேன்.

வார விடுமுறை அன்று.மனது சிவானந்தா காலனிக்கு சென்று அனுமன் எங்கிருக்கிறார் என பார்க்க மனசு ஆசைப்பட்டது. எப்படி கண்டு பிடிப்பது, என தெரியவில்லை, இருந்தாலும் கிளம்பிவிட்டேன்.

பஸ்ஸை விட்டு இறங்கியவன் மெல்ல நடந்து எதிரில் வந்தவரிடம் இங்க புதுசா அனுமன் சிலை எங்காவது வச்சிருக்கிறாங்களா? என்று கேட்டேன். சிறிது யோசித்தவர் இங்க ஒண்ணும் இருக்கறமாதிரி தெரியல, வடகோவை திரும்பற இடத்துல ஒரு சிலை புதுசா வச்சிருக்கறதா பேசிகிட்டாங்க, எனக்கு சரியா தெரியல கிளம்பிவிட்டார்.

எனக்கு மனசு இலேசானது, அப்பா! ஏதோ ஒரு இடத்தில் உடகார்ந்துவிட்டார். வடகோவைக்கு பஸ் ஏறினேன்.பஸ் விட்டு இறங்கி சிறிது தூரம் நடந்து திருப்பத்தில் ஏதாவது தெரிகிறதா என பார்த்தேன். சற்று தொலைவில் அனுமன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் அவ்ர் மீது கலராய் எதோ பூசியிருந்தார்கள். அவர் காலுக்கு கீழே ஊது பத்தி,கற்பூரம், காட்டியிருந்த அடையாளங்கள் இருந்தன. கொஞ்சம் சில்லறையும் கிடந்தது.நான் சிரித்தவாறு எப்படியோ நீயும் ஒரு இடத்தை பிடித்து உட்கார்ந்துவிட்டாய். இப்பொழுதுதான் எனக்கு மனசு நிம்மதி மனதுக்குள் சொல்லிக்கொண்டே என் வீட்டிற்கு செல்லும் பஸ் ஏறினேன்.

பத்திருபது நாட்கள் ஓடியிருக்கும், அன்று ஏதேச்சையாய் பத்திரிக்கை பார்த்த பொழுது போக்குவரத்துக்கு இடைஞ்சலாய் இருக்கும் சிலைகள் எல்லம் அப்புறப்படுத்தப்படும் என்ற செய்தி கண்ணில் பட்டது. மனது பதை பதைத்தது. அடுத்த விடுமுறையிலேயே வடகோவை கிளம்பிவிட்டேன். அங்கே சென்று பார்த்த பொழுது அனுமன் சிலை காணாமல் போயிருந்தது.மனது அடித்துக்கொண்டது, யாரிடம் விசாரிப்பது? அங்கிருந்த கடை ஒன்றில் இங்கிருந்த அனுமன் சிலை என்னவாயிற்று? அவர் வியாபார மும்முரத்தில் அதை எடுத்து வேற ஒரு பக்கம் கொண்டு போயிட்டாங்க, எங்கன்னு தொ¢யல்ல, அடுத்த கஸ்டமரை பார்க்க போனார்.மனதுக்குள் மீண்டும் சோகம் வந்து சூழ்ந்து கொண்டது. மெல்ல திரும்பி வீட்டுக்கு கிளம்பினேன்.

கொஞ்சம் கொஞ்சமாய் அனுமனை மறக்க ஆரம்பித்துவிட்டேன். அதற்குப்பின் ராசப்பண்ணனின் கடைக்கு போவதை கூட குறைத்து விட்டேன். இப்படியே ஆறு மாதங்கள் ஓடிவிட்டது.

மறு நாள் விடுமுறை ! என் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர், நாளை நீங்க வீட்டுல இருப்பீங்களா? நான் கேள்விக்குறியுடன் அவரை பார்க்க இல்ல பெரியநாயக்கன் பாளையத்துல ஆஞ்சனேயர் கோயில் ஒண்ணு இருக்குது ரொம்ப சக்தி வாய்ந்தவராம், நீங்களும் வந்தீங்கண்ணா காலையில நேரத்துல போயிட்டு வந்திடலாம். என்ன சொல்றீங்க? யோசித்தவன்! நாளைக்கு எனக்கு முக்கியமான வேலை இல்லை. சரி போகலாம்.

விடியற்காலையிலேயே கிளம்பிவிட்டோம். அந்த அதிகாலை நேரத்திலும் கோயிலில் கூட்டம் அலை பாய்ந்தது. கோயிலை ஒட்டி கடைகள் வேறு முளைத்திருந்தன. காலை பதினோரு மணி முதல் அன்னதானமும் உண்டு என்று சொன்னார்கள். வரிசைப்படியே அனைவரையும் உள்ளே அனுப்பினர். இரண்டு அர்ச்சனை சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே
நுழைந்தோம். பத்து நிமிடத்தில் தரிசன இடத்தை அடைந்தவர்கள், அங்குள்ள ஆஞ்சநேயரை பார்த்தவன் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனேன். அங்கே என் அனுமன் மாலை மற்றும் அலங்காரங்களுடன் கம்பீரமாய் நின்று கொண்டிருந்தார்.என் நண்பரை பார்த்தேன்.

அவர் கண்ணை மூடி கும்பிட்டுக்கொண்டிருந்தார். அவரை தொந்தரவு செய்யாமல் வெளியே வந்து விட்டேன்.

நண்பர் என்னிடம், என்ன சார் நல்லபடியாய் தரிசனம் பண்ணிட்டீங்களா, இவர் கிட்ட எது வேண்டுனாலும் அது அப்படியே நடக்குதாம். அவ்வளவு சக்தி வாய்ந்தவராம். சொல்லிக்கொண்டே வந்தார்

எனக்கு என் நண்பனை இழந்தது போல் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *