தெய்வத்தாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 9,644 
 

அறையை முழுவதுமாய் ஒரு நோட்டம் விட்டாள் விட்டாள் வேதா.இப்போதுதான் திருப்தியாய் இருந்தது.அப்பப்பா ஒரு வாரமாய் வேலை பெண்டை கழட்டிவிட்டது.

‘வீட்டில் இருக்கும் எதாவது ஒரு உருப்படியாவது,உருப்படியாய் உதவுகிறதா?எல்லாவேலையும் நானேதான் செய்ய வேண்டும்.எல்லாம் என் தலை எழுத்து’ தனக்குத் தானே பேசிக் கொண்டவளாய் மிச்சமிருக்கும் அலமாரியையும் ஒதுங்க வைத்தாள்.

நேற்றுதான் வீட்டை வந்து பார்த்து அட்வான்ஸ் கொடுத்தது போல் இருந்தது.அதற்குள் ஒரு மாதம் ஓடிவிட்டது.இதற்கு முன்னால் நான்கு,ஐந்து வீடுகள் பார்த்தார்கள்.எதுவுமே வேதாவிற்கு பிடிக்கவில்லை.கதிருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. காலையில் போனால் இரவு ஆகிவிடும் வீடு திரும்ப. 45 மணி நேர பயணத் தொலைவில் இருக்கிறது அவன் பேராசிரியராய் பணி புரியும் கல்லூரி.மாலை நேரே கம்ப்யூடர் சென்டர் போய்விட்டு இரவு எட்டு மணிக்குத் தான் வீடு திரும்புவான். பொழுதெல்லாம் வீட்டிலே இருந்தால் கூட அவனுக்கு வீடு எப்படி இருக்க வேண்டும் என்பது ஒரு பிரச்சனையே இல்லை.அவனுக்கு வேண்டியது நான்கு சுவர், ஒரு கதவு கொண்ட ஒரு அறை,பார்க்க ஒரு டி.வி, கொறிக்க கொஞ்சம் தீனி.அவ்வளவுதான்.ஆனால் வேதா அப்படி இல்லை. அவளுக்கு அவள் இருக்கும் வீடு மனதுக்கு இதமாய் இருக்க வேண்டும். வெளிச்சம், காற்றோட்டம் இருக்க வேண்டும். வீட்டின் முன் ஒரு சிறு தோட்டமாவது இருக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேல் முகம் பார்த்து சிரிக்கும் மனிதர்கள் அருகில் இருக்க வேண்டும். இத்தனை விதிகளுடன் கோவை தெருக்களில் வீடு தேடுவது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன.தென்னிந்தியாவின் மான்ஸெஸ்டரில் வாழ்க்கைத் தரம் கூடிக் கொண்டே இருக்கிறது.அதற்கேற்ப அந்த ஊரும் மாறிக் கொண்டே இருக்கிறது.எது எப்படியோ அவள் நினைத்தது போலவே அழகான ஒரு வீட்டை பல சிரமங்களுக்கு இடையில் கண்டு பிடித்து,இதோ இப்போது குடித்தனம் வந்து ஒரு வாரமும் ஆகிவிட்டது. அரவிந்தையும் சற்று அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தாயிற்று.

வேலை எல்லாம் முடித்தவள்,இனியாவது சிறிது நிம்மதி மூச்சு விடலாம் என்று, அவசர அவசரமாய் ஒரு காக்கா குளியல் போட்டுவிட்டு,தலையின் ஈரம் சொட்ட சமையலறையில் நுழைந்தாள்.

அடுப்புப் பற்ற வைத்து,தண்ணீரை தளம்ப தளம்ப கொதிக்க வைத்து,கப்பித்தூளில் எடுத்து ஊற்ற,அது நுரைத்தது.மணம் வீடு எங்கிலும் பரவி,குடிப்பதற்கு முன்பே ஒரு புத்துணர்வை அவளுக்கு ஊட்டியது.டிக்காஷனை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி, ஒரு ஸ்பூன் சக்கரையும் சிறிது பாலும் சேர்த்து நுரைக்க ஆற்றி, அதை எடுத்துக் கொண்டு பால்கனியில் வந்து நின்றாள்.

காஃபீ மேக்கரில் காஃபீ போட்டும் குடிக்கும் காலத்தில் தான் இப்படி துணியில் வடிகட்டி காப்பி குடிப்பதை நினைத்து,தனக்குத் தானே சிரித்துக் கொண்டவளாய்,தோட்டத்தில் இருந்த பூக்களின் அழகை கண்களிலும், காபியை வாயிலும் பருகிக் கொண்டிருந்தாள்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் வந்து விடுவேனே என்று மழை சொல்வதற்கு அறிகுறியாய் வானம் கருமையை அப்பிக் கொண்டிருந்தது.உன்னை வரவிட்டேனா பார் என்று காற்று தன் பங்குக்கு தன் பலத்தை காட்டிக் கொண்டிருந்தது.காற்றின் வேகத்திற்கு எங்கோ கொடிகளிலிருந்த துணிகளெல்லாம் பறந்துக் கொண்டிருந்தன.வெகு நாள் கழித்து வரும் நண்பனை வரவேற்கும் மகிழ்ச்சியில் பூக்கள் எல்லாம் மழைக்காய் நர்த்தனமாடிக் கொண்டிருந்தன.

அந்த அருமையான சூழல் வேதாவிற்கு இனம் புரியாத சந்தோஷத்தை ஏற்படுத்தியது.இத்தனை நேரம் இருந்த அசதி எல்லாம் இட்ஸ் கான் என்பது போல் அவளிடமிருந்து கேட்காமலே விடைப் பெற்றன. இயற்கைக் கொடுத்த மகிழ்ச்சிக்கு அந்த இயற்கைக்கு மனதார நன்றி சொல்லிக் கொண்டிருந்தவளை, அந்த வார்த்தைகள் திடுக்கிட வைத்தன.

‘… மவனே,வாடா இங்க.செருப்பு பிஞ்சிடும் வரலைனா’, கனியை விட்டுவிட்டு யாரோ காயைக் கவர்ந்து கொண்டிருந்தார்கள். சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்தாள்.முப்பத்தைந்து வயதிருக்கும் அந்த பெண்மணிக்கு.திடகாத்திரமான உருவம்.வெற்றிலை கறை படிந்த உதடுகள்.மெல்லிய இழையாய் ஓடிய சோகத்தை போர்த்தினாற் போல,கோபத்தை காட்டும் கண்கள்.இரண்டு கைகளிலும் கண்ணாடி வளையள்கள்.மூக்கை விட பெரியதாய் ஒரு மூக்குத்தி.தூக்கிக் கட்டிய புடவை,சரிய விட்ட முந்தானை.அந்த பெண்மணியைப் பார்க்கையிலே வேதாவிற்கு எதோ ஒரு சொல்ல முடியாத வேதனை மனதுக்குள் புகுந்தது.இத்தனை நேரம் மனதுக்குள் பூட்டி வைத்திருந்த சந்தோஷமெல்லாம், சாவிப் போட்டு திறக்காமலேயே மனதிலிருந்து பறந்துவிட்டது. அவள் யாரைத் திட்டுகிறாள் என்று சற்று தொலைவில் தன் கண்ணை எட்டிப் போட்டாள். இவனையா இப்படிப் பேசினாள்.வேதாவிற்கு தூக்கி வாரிப் போட்டது.

ஒரு சிறுவன்,மிஞ்சிப் போனால் பத்து வயது இருக்குமா? பள்ளியிலிருந்து வந்த ஆடையைக் கூட கழற்றாமல் நின்றிருந்தான்.உற்றுப் பார்க்கையில் அவன் முகத்தில் எதோ ஒரு வித்தியாசத்தை வேதா உணர்ந்தாள்.தெளிவில்லாத முகம்,எப்போதும் சிரித்தது போலவே உதடுகள்,எங்கோ வெறிக்கும் கண்கள் என அவன் தோற்றம்,இயல்பான சிறுவனுக்குரியதாய் இல்லை.

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் வேதா.சற்று நேரத்தில் அந்த பெண்மணி அவன் அருகில் சென்று அவன் சட்டையைக் கொத்தாய்ப் பற்றி எங்கோ இழுத்து சென்றாள்.அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டால் வேதாவிற்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது.புதிதாய் வந்த இடத்தில் யாரைக் கேட்பது.என்னவென்று கேட்பது?அவளுக்கு மனத் தாங்கலாய் இருந்தது.சற்று நேரம் அங்கு நின்றவள், மனம் அதையே நினைத்துக் கொண்டிருந்ததால், அதை திசை திருப்பும் பொருட்டு,வீட்டிற்குள் நுழைந்து புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

ம்ஹூம்,மனம் அதிலும் லயிக்கவில்லை.என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவள்,அரவிந்தின் வேன் சத்தம் கேட்கவே,அவனை அழைத்துவர வெளியில் சென்றாள்.அவன் வந்து, அவனுடைய தினப்படிகளை ஒரு தொடர்கதையைப் போல் சுவாரஸ்யமாய் சொல்லத் துவங்க, மனம் முழுதும் அதிலேயே லயிக்கவிட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஆறு வயது சுட்டி அந்த வயதிற்கே உரித்தான மழலையில் கவி பாடிக் கொண்டிருந்தது.

‘ம்மா,காலைல அபிஷேக் இல்ல,என் ஃப்ரண்ட், அவன் டொபுக்கடின்னு போய் செவுத்துல இடிச்சுட்டு,அப்டியே பின்னாடி நின்னுட்டு இருந்த ஆஷா மேல மோதி டொபீர்னு கீல விலுந்துட்டான்ம்மா,அப்பறம்,அவளும் கீழ விழுந்த்துட்டா.நாங்கலாம் அத பாத்து லாஃப் பன்னிட்டே இருந்தோம்.ஜோக்கா இருந்துச்சு…”

“ம்மா, ம்மா இன்னிக்கு மிஸ் எங்க அல்லாரையும் டெடி பியர் ரைம்ஸ் சொல்ல சொன்னாங்களா…நான் கட கடனு சொன்னேனா,மிஸ் என் கன்னத்த கிள்ளி ‘குட் பாய்’ சொன்னாங்கம்மா..த்ரிஷா இருக்காள்ளம்மா, அவளுக்கு அந்த ரைம் தெரியவே இல்ல.திரு திருனு முலிக்கிறாம்மா..நான்லாம் ஃபாஸ்டா ஸ்பீடா சொல்லிட்டேனே..”

அத்தனை ஒரு பெருமிதம் அவன் பேச்சில்.

“வெரி குட் குட்டி.அவளையும் நாளைக்கு படிச்சுட்டு வந்து சொல்ல சொல்லிடலாம் என்ன..”

“ம்ம் சரிம்மா,நானே போய் சொல்லிக் குடுக்கறேன்..ஓகேவா..”

“டபுள் ஓகே..”

அவனுக்கு டிஃபன் கொடுத்து,வீட்டுப் பாடங்களில் சிறிது உதவி செய்து,இரவு சமையல் முடிக்க என நேரம் சரியாய் இருந்ததால், மாலை நேர நிகழ்ச்சியை சுத்தமாய் மறந்திருந்தாள்.

‘கத்ரிக்கா,முருங்கக்கா,தக்காளியோவ்..கிலோ பத்து கிலோ பத்து வாங்கம்மோவ்..”

காய் கறிக்காரர் அடித்தொண்டையில் கத்தியபடியே, வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தார்.அந்த தெருப் பெண்கள் எல்லாம் அவரை நோக்கி அணி வகுக்க, வேதாவும் கூடையை எடுத்துக் கொண்டு சென்றாள்.தக்காளியைப் பொறுக்கிக் கொண்டிருந்தவள், திடீரென குழைத்த நாயின் சத்தத்தில்,திரும்பிப் பார்த்தாள்.

நேற்றுப் பார்த்த அதே பையன். கையிலிருந்த சிறு கல்லால் நாயைத் தாக்க, அவனுடைய தாக்குதலால் வெறிக் கொண்ட நாய், அவனைக் கடிக்கும் நோக்குடன் அவன் மேல் பாய எட்டியது.அதன் திடீர் எதிர் வினையில் பயந்துப் போன சிறுவன், சுவரில் போய் ஒண்டிக் கொண்டான்.என்ன நினைத்ததோ அந்த நாய், அவனை பயமுறுத்தும்படி ஒரு சிறு உறுமல் மட்டும் செய்துவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டது.அப்போதுதான் அந்த சிறுவனக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல் பெரு மூச்சு விட்டான்.

இதற்குள் பக்கத்திலிருந்த ஒரு கடையில் எதையோ வாங்கிக் கொண்டிருந்த நேற்றுப் பார்த்த அதே பெண்மணி, நடந்ததை சற்றுத் தாமதமாக கவனித்து, அவனை நோக்கி ஒரு எட்டில் பாய்ந்தாள்.மீண்டும் அதே காதை மூடிக் கொள்ளும் வாசகங்கள்.கூடுதலாக முதுகில் ஒரு அடியுடன், அவனை அந்த இடத்திலிருந்த இழுத்துக் கொண்டுப் போனாள். யாரும் அவர்களை எதுவும் சொல்லவில்லை.ஏன் அடிக்கிறாய் என்று அந்தப் பெண்ணை கேட்கக் கூட இல்லை.

இதற்கு மேல் வேதாவால் பொறுக்க முடியவில்லை.அவர்கள் யார், என்ன என்று அறிந்துக் கொள்ளும் ஆர்வம் அவள் முகத்தில்.அவள் அருகில் நின்றுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பெண்ணிடம்,இந்த ஒரு வார புன்னகைப் பரிமாற்ற ஸ்னேகத்தில், மெல்ல தன் சந்தேகத்தை கேட்க ஆரம்பித்தாள்.

‘யாருங்க அது?,நேத்து கூடப் பாத்தேன்.அந்த பையன அப்படி பேசுனாங்க.இன்னிக்கு என்னடானா அந்த அடி அடிச்சுட்டு கூட்டிட்டு போறாங்க.அந்த அம்மா யாரு?” காயைப் பொறுக்குவதை நிறுத்திவிட்டு ஆர்வமாய்க் கேட்க ஆரம்பித்தாள்.

கிசு கிசு பேச ஆள் சிக்கிவிட்ட சந்தோஷம் அந்த பக்கத்து வீட்டுப் பெண்ணின் முகத்தில்.அடுத்த வீட்டு விஷயத்தை ஆர்வமாய் சொல்லத் துவங்கினாள்.

“ஓ அதுவா..அது(?) எப்பவும் அப்படிதாங்க.பொம்பளையே இல்ல ராட்சஷி.வாயைத் தொறந்தா ஒரே கெட்ட வார்த்ததான்.அந்த பையன் இருக்கானில்லீங்க, அது அவ பையந்தான்.கொஞ்சம் மூளை வளர்ச்சி இல்லை.இப்படிதான் எதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணிக்கிட்டே இருப்பான்.நாயை கல்ல விட்டு அடிக்கிறது,தெருவுல போற பசங்கள அடிச்சு,கடிச்சு வச்சறது,போறவங்க மேல தண்ணி ஊத்தறதுனு ஒரே அழிச்சாட்டியம் பண்ணிடுவான்.ஆனா என்ன பண்றது,மன நிலை சரியில்லாத பய.அது பாவம் தெரிஞ்சா பண்ணுது.நல்லா இருந்த இப்டிலாம் பண்ணும்மா சொல்லுங்க.அதுக்கு இந்த பொம்பள இருக்கா பாருங்க,அந்த அடி அடிப்பா அந்தப் பையனை.நாங்களும் சொல்லிப் பாத்துட்டோம்.கேக்கற மாதிரி இல்லை.அதான் இப்பலாம் யாரும் எதுவுமே சொல்றது இல்ல..”

அந்த அம்மா நீட்டி முழக்கி பேசி முடித்தது.

“அடப் பாவமே.அவங்க வீடு எங்க இருக்கு?.பாத்தா கஷ்டப்படற ஆளுங்க மாதிரி இருக்காங்க..”

“அடுத்த தெருவுல,ஓட்டு வீடுங்கல்லாம் இருக்கு பாருங்க,அதுல முதல் வீடு அவங்க வீடு.இந்தத் தெருவுல ஒரு நாலு வீட்டுக்கு பத்துப் பாத்தரம் தேய்க்கும் அந்த பொம்பள.அது பேரு கூட அன்னமோ என்னமோ, சரியாத் தெரியில்ல.வீட்ல தான் அவன விட்டுட்டு வருவா.அவன் இடைல பூந்து அடிச்சுட்டு இங்க ஓடியாந்துருவான்..”

சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி முடித்தாயிற்று என்பது போல் அந்த பெண் கூடை எடுத்துக் கொள்ள,வேதாவுக்கு அந்த அன்னத்தைப் பற்றியே நினைவாய் இருந்தது.

“சரிங்க அப்பறம் பாக்கலாம்.எங்க வீடு இதுதான்.உங்களுக்குதான் தெரியுமே.ஃப்ரீயா இருக்கும்போது ஒரு எட்டு வாங்க.நான் வறேங்க..” இவளிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் அந்த பெண் கிளம்பினாள்.

அந்தப் பையனைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து வேதாவிற்கு மனமே சரியில்லை.ஒரு குழந்தையை எத்தனை ஆசையாய்ப் பெற்றெடுக்கிறோம்.எத்தனை எத்தனை கனவுகளை நெஞ்சில் சுமந்து , அந்த சின்ன சிசுவை வயிற்றில் சுமக்கிறோம்.நம் ஏக்கங்களுக்கு மருந்தாய் வரும் அந்த சின்ன உயிர், இப்படி எதாவது ஒரு குறையையும் கூடவே அழைத்து வரும்போது பெற்றவள் மனது என்ன பாடு படும்.அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும்,எத்தனை ஒரு பாரம் நெஞ்சை அழுத்தும்.என்ன ஒரு கொடுமையான தண்டனை இது?

இதைப் பார்த்துப் பார்த்துதான் அந்த அன்னம் இப்படி கடின நெஞ்சுடைய பெண்ணாய் மாறிவிட்டாளோ.ஏன் அவள் முகத்தில் மட்டும் அவ்வளவு ஒரு வன்மம்.பெண்களுக்குரிய மென்மை ஒரு துளியும் அவள் முகத்தில் இல்லை.முகம் முழுதும் கடினப் பட்டுப் போய் இருக்கிறது.

எதேதோ நினைத்துக் கொண்டிருந்தாள்.

மறு நாள் அன்னம் வரும் நேரத்தை தெரிந்து வைத்திருந்து அவள் வரவுக்காய் தன் வாசலில் காத்திருந்தாள்.வேதாவின் வீட்டிலிருந்து ரெண்டு வீடு தள்ளி உள்ள ஒரு வீட்டில் அவள் வேலைக்கு வருவது வேதாவிற்கு தெரியும்.அவள் நினைத்தது போலவே கொஞ்ச நேரத்தில் அன்னத்தின் தலை தெரு முனையில் தெரிந்தது.அவள் இவர்கள் வீட்டின் அருகில் வந்ததும்,வேதா அவளை அழைத்தாள்.

“ஏங்க,கொஞ்சம் இங்க வறீங்களா?” அவள் என்ன? என்பது போல் அருகில் வரவும்,

“இல்ல,நாங்க இந்த வீட்டுக்கு புதுசா குடி வந்துருக்கோம்.எனக்குக் கூட மாட ஹெல்ப் பண்ண, ஒரு ஆள் தேவப் படுது.அக்கம்பக்கத்துல விசாரிச்சதுல்ல,உங்களப் பத்தி சொன்னாங்க.அதான் உங்கக் கிட்ட கேக்கலாம்னு நெனச்சேன்.எங்க வீட்டுக்கு வேலைக்கு வறீங்களா?நீங்க சரின்னு சொன்னா மேற்கொண்டு சம்பளம் பத்தி பேசலாம்”

தன்னை இத்தனை பதிவிசாய் யாரும் வேலைக்கு அழைத்தது இல்லை என்பதால், அன்னம் ஒரு நொடி அவளையேப் பார்த்தாள்.பின் என்ன நினைத்தாளோ,சிறிது புன்னகைப் புரிந்து,பின் சொன்னாள்.

“அதுக்கு என்னங்க.வந்துட்டாப் போச்சு.காலைல ஏழு மணிக்கு வந்தறேன்.சம்பளமெல்லாம் நான் வேலை செய்யறதப் பாத்துட்டு நீங்களே குடுங்க.காலைல உங்க வீட்டுக்கு வறேன்..”

சொன்னவள்,சிறிதும் நிற்காமல் அவள் வேலை செய்யும் வீட்டை நோக்கி நகர்ந்தாள்.வேதாவிற்கு ஏனோ அவள் பேச்சு பிடித்திருந்தது.

அன்னம் வேதாவின் வீட்டிற்கு வேலைக்கு வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது.காலையில் ஒரு மணி நேர வேலை,மாலை ஒரு மணி நேர வேளை.சிட்டாய்ப் பறந்து வேலைகளை முடிப்பாள் அன்னம்.அத்தனை வேலையும் நேர்த்தியாய் இருக்கும்.வெகு சுத்தமாய் செய்வாள்.காலையில் குளித்துவிட்டுதான் வேலைக்கு வருவாள்.வேலையைத் தாண்டி வேறு எந்தப் பேச்சும் இருக்காது.வேதாதான் அவளாய் எதாவ்து பேச்சுக் கொடுத்துக் கொண்டிருப்பாள்.தன் வீட்டைப் பற்றி,தன் உறவுகளைப் பற்றியெல்லாம் பேசுவாள்.அன்னத்திடமிருந்து புன்னகை மட்டுமே பதிலாய் இருக்கும் எப்போதும்.

வேதாவிற்கு ஆச்சர்யம் என்ன வென்றால்,சில நேரங்களில் அன்னத்தின் மகன் பாபு, அன்னம் இங்கு வேலை செய்துக் கொண்டிருக்கும்போது வருவான்.அப்போதெல்லாம் அவனிடம் அவ்வளவு அன்பாய்ப் பேசுவாள் அன்னம்.அத்தனை கெட்ட வார்த்தைகளைப் பேசியவாளா இவள் என்பது போல் பார்ப்பாள் வேதா.

அவனுக்கு சட்டை,பேண்ட், அரவிந்தின் புக்ஸ்,பொம்மைகள் எல்லாம் வேதா கொடுத்திருந்தாள்.இந்த ஒரு மாதத்தில் அவளை வெறுங்கையுடன் ஒரு நாளும் வீட்டிற்கு அனுப்பியதே இல்லை வேதா.

இன்று மாலை நான்கு மணிக்கே வேலைக்கு வந்து விட்டாள் அன்னம்.வந்தவள் அடுப்படியைத் துடைத்துக் கொண்டிருக்க,தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்துடன் டைனிங்க் ஹாலில் இருந்தபடியே அன்னத்திடம் பேச்சுக் கொடுத்தாள் வேதா.

“அன்னம்,ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்கக் கூடாது.கேக்கட்டுமா?” முதல் முறையாய் இவள் பீடிகையுடன் பேச,கைகளை முந்தானையில் துடைத்தவாறே அன்னம் இவள் அருகில் வந்தாள்.

“என்னம்மா இப்படி கேக்குறீங்க.நீங்க எது வேணா கேக்கலாம்.கேளுங்க..”

“இல்ல,பாபுகிட்ட எங்க வீட்டுல இருக்கும்போது எவ்வளவு நல்லா பேசற.எப்படித் தாங்குற அவனை.அதே வெளிலனு போய்ட்டா ஏன் அவனைப் அப்படித் திட்டற?எல்லாரும் உன்னை எப்படிப் பேசுறாங்கத் தெரியுமா?உனக்குத் தானே கெட்டப் பேரு.அந்த மாதிரி அவன அடிச்சு,திட்டாத அன்னம்,ப்ளீஸ்..”

வேதா வேண்டுகோளாய் சொல்ல, அன்னத்திற்கு படக்கென கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.சுவரில் சாய்ந்தவாறே,கண்களைத் துடைத்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.

“நீங்க வேற வேதாம்மா.எனக்கு மட்டும் என்ன என் பையன அப்படிலாம் பேசனும்னு ஆசையா.உங்களுக்குத் தெரியாது.இந்த பையனுக்கு இப்படி மூளை வளர்ச்சி கம்மினு தெரிஞ்சதும் நான் எப்படித் துடிச்சேனு.யார் விட்ட சாபமோ,என்னக் குத்தமோ எனக்கு இப்படி ஒரு நிலைமை.ஒவ்வொரு ராத்திரியும் தூங்காம அழுதே தீத்துருக்கேன்.எப்படியோ ஒரு வழியா மனசத் தேத்திக்கிட்டு,நமக்கு இதுதான் விதிச்சுருக்கு,இந்தப் பையன நல்லா வளத்தாப் போதும்டா சாமினு நெனக்க ஆரம்பிச்சேன்.இவன் குழந்தையா இருக்கும்போது ஒண்ணும் தெரியில்ல.பெரிசா ஆக ஆக ஒவ்வொருத்தர் கேலியும்,கிண்டலும் ரொம்ப சகிக்க முடியாததா ஆய்டுச்சு.பத்தாததற்கு இவன் வேற எதையுமே புரிஞ்சுக்காம,ரொம்ப சேட்ட பண்ண ஆரம்பிச்சுட்டான்.யாரையாவது அடிக்கிறது,கிள்ளறதுனு இப்படியே எதாவது பண்ணவும்,எல்லாரும் இவன என் காதுக்குக் கேக்கற மாதிரியே திட்ட ஆரம்பிச்சுட்டாங்க.எவ்வளவு கேவலமா பேசுவாங்கத் தெரியுமா?.இந்த பையனோட நிலையைத் தெரிஞ்சுக்காம,அவன் ஏதோ வேணுனே பண்ற மாதிரி பேசுவாங்க.பொறுத்துப் பொறுத்து பார்த்து ஒரு கட்டத்துல என்னால சகிக்கவே முடியாமப் போச்சு.அதுக்கப்பறம்தான் அவன் இந்த மாதிரி எதாவது பண்ணிட்டானா நானே அவனை ரொம்பக் கோபமா,ஆவேசமா பேசி அடிச்சுடுவேன்.அத பாக்குறவங்க என்னைத் திட்ட ஆரம்பிச்சுட்டாங்க.அவனை தப்பா சொல்றத நிறுத்திட்டாங்க.அவன் மேல பரிதாபப் பட ஆரம்பிச்சுட்டாங்க.எனக்கு அதுவே போதும்னு ஆய்டுச்சு.நம்ம பையன ஊர்ல இருக்குறவங்கல்லாம் திட்டிப் பேசுன்னா இந்த பெத்த மனசு எப்படி துடிக்குதுத் தெரியுமா?அத்தனை ஒரு வெறி வரும்.ஆனா இப்ப பாருங்க,என்னைத் தான் பேசுவாங்க பஜாரி,வெறி பிடிச்சவ அப்படினு. பேசுனா பேசிட்டுப் போட்டும்.என்னக்கு அதப் பத்திலாம் கவலை இல்ல..”

மூக்கை உறிஞ்சியபடியே அன்னம் பேசிக் கொண்டிருந்தாள்.

“இவனுக்கு எதாவது ஒரு நல்லது பண்ணனும்மா.இவன் நல்லா இருக்கனும்.அதுக்குதான் இப்டி அங்க இங்கனு ஓடியாடி வேலை செய்யறேன்.நீங்க வேணா பாருங்க என் பையன் ராஜா மாதிரி வருவான்..” ஆருடம் சொல்லியவள் மிச்சமிருக்கும் தன் வேலையை செய்ய உள்ளே சென்றாள்.

வேதா அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளைப் பார்த்து ஒரு சல்யூட் அடிக்க வேண்டும் போல் இருந்தது.இவர்கள் எல்லாம் போற்றப் பட வேண்டிய பெண்மணிகள் இல்லையா?

அவனுக்குத் தன்னால் ஆன எதாவது ஒரு உதவியை செய்ய வேண்டும் என்று மனதுக்குள் உறுதிப் பூண்டவளாய்,அன்னத்துக்கும்,தனக்குமாய் காபி கலக்க சமையலறைப் புகுந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *