கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 10,180 
 

வாசலில் ஆண்களும் பெண்களுமாய் செருப்புகளை வரிசையாக விடப்பட்டிருந்தார்கள். இராமன் சீதையைக் கண்டுபிடித்தான். சீதை இராமனுக்காகக் காந்திருந்தாள். சொந்த பந்தங்கள் கூடி திருமணம் பொருத்தம் பார்க்க அங்கே குழுமி இருந்தார்கள். அக்கூட்டத்தின் நடுவே தலை நிமிராமல் மாப்பிள்ளை நடேசனும் உட்காந்திருந்தான். ஆள் கொஞ்சம் கருப்புதான். தலைமுடி அடர்த்தியா இல்லையன்னாலும் சொட்ட இல்ல. பார்க்க வாட்ட சாட்டமான ஆண்பிள்ளைதான். வெத்தல பாக்கு பழம் பூ தாம்பாலத்தில் கூட்டத்தின் நடுவே வைக்கப்பட்டிருந்தன.

மீனாட்சி மா நிறத்தவள். ஜன்னலுக்கு நேரே கட்டியப் புடவையோடு உட்காந்திருந்தாள். மீனாட்சியின் தாயார் அம்சவேணி அவளுக்கு மல்லிகையை நிறைய தலையில் சூடிக்கொண்டிருந்தாள். அவர்களுக்குள் எந்தவொரு சம்பாசனையும் அங்கே நடக்கவில்லை. மௌனமே நிலவியது. தாயுள்ளம் எதை நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதை முக்கால் பங்கு அனுமானித்துக் கொண்டாள் மீனாட்சி.

மகளைச் சந்தையில் கூறுக்கட்டி விற்க அம்சவேணிக்கு விருப்பமில்லை. பின்னன்ன, முத்துன கத்திரிக்கா சந்தைக்கு வந்துதான ஆகனும்! யாரும் வாங்கலன்னா காய் அழுகி யாருக்கும் உதவாது குப்பையிலேதான தூக்கிப் போடனும். அதுக்கு குறைஞ்ச விலக்கொடுத்தாலும் வித்துட்டா, குழம்புக்குக் கறிக்காச்சும் உதவுமே! என எண்ணியவளாய் அம்சவேணி அங்கிருந்து எழுந்து கூட்டத்தில் ஒருத்தியாகி விட்டிருந்தாள்.

மீனாட்சி கண்ணாடியை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் கண்ணாடிக்கும் அத்தனைப் பொருத்தம். கண்ணாடிக்கு வாய் இருந்திருந்தால் மீனாட்சியை திட்டித் தீர்த்திருக்கும். கால்கள் இருந்திருந்தால் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்திருக்கும். என்ன செய்ய? அது கண்ணாடி ஆயிற்றே! மீனாட்சியின் முகம் கண்ணாடி முழுவதும் பரவியிருந்தது. அவளின் மென்மையான உதடுகள் எதையோ சொல்ல வாயெடுத்தது. ஆனால் அவளால் எதுவுமே பேச முடியவில்லை. மீனாட்சி மௌனித்திருந்தாள். கண்ணாடியும் மௌனம் காத்தது. ஜன்னல் வழியே காற்று மெள்ள வீசியது. அவளுடையக் கூந்தல் இடுப்பு வரை நீண்டிருந்தது. கூந்தலில் வைக்கப்பட்டிருந்த மல்லிகையின் ஈரம் ஜாக்கெட்டை நனைத்து ஈரமாக்கியது. தென்றல் காற்றானது ஈரம்பட்ட முதுகை வருடித்தான் கொடுத்தது. ஆனந்த இன்பத்தை ரசித்துக் கொண்டே கண்ணாடியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி. பரந்து பட்ட அவளின் தோள்களில் மென்மையான நான்கு விரல்கள் தொட்டன. இப்போதும் மீனாட்சியின் கண்கள் கண்ணாடியிலிருந்து அகலவேயில்லை. கொஞ்சம் திரும்பி யாரென்று கூடப் பாரக்கத்தோனவில்லை. ஏனென்றால் அந்த கை ஏற்கனவே பழக்கப்பட்டிருந்த கையாகவே தோன்றியது. என்னோட கை என் உடல்களைத் தீண்டும் போது எனக்கு எந்தவொரு உணர்வும் புதுமையும் தெரிவதில்லையே. அதுபோலத்தான் இந்தக் கை. இந்தக் கையை நான் பலமுறை பிடித்திருக்கிறேன். முகர்ந்திருக்கிறேன். எனக்கு எப்படி இந்தக் கை தொட்டவுடன் சிலிர்ப்பு வரும். இன்னும் மீனாட்சியின் முதுகிலிருந்து அந்தக் கை எடுக்காமல் அப்படியேதான் இருந்தது. இப்போது மீனாட்சியும் கண்ணாடியின் பிம்பத்தில் ஒருத்தியாகியிருந்தாள்.

“நீ கண்ணாடியைப் பாத்துட்டு இருந்தா, இந்த உலகத்துல எது நடந்தாலும் நீ அசையவே மாட்டியே… அப்படி என்னதான் பாத்திட்டு இருக்கடி..” என்று சொல்லிக் கொண்டே முன்பக்கமாய் வந்து நின்றாள் மல்லிகா.

மீனாட்சியின் அன்பு தோழி மல்லிகா. பாவாடைச் சட்டைப் போட்டதிலிருந்து இன்று வரை ஒன்றாய் வளர்ந்தவர்கள். மல்லிகாவின் வீடு ரெண்டு வீதி தள்ளிதான் இருக்கிறது. காலையிலேயே மல்லிகாவை தூக்கத்திலிருந்து எழுப்பி, “இன்னிக்கு என்ன பொண்ணுப் பாக்க வராங்கடி, நீ கண்டிப்பா வந்தரணும்” என்று சொல்லிப்புட்டுதான் வந்தாள் மீனாட்சி. மல்லிகாவுக்கும் சந்தோசம்தான். ஆனால் மீனாட்சி போகும்போது சொல்லிய அந்த வார்த்தை மனசை நொறுங்க வைத்தாலும், மீனாட்சியின் நிலையில் இருந்து பார்க்கும் போது அது சரியாகவேப் பட்டது. கதவுப்பக்கத்தில் போன மீனாட்சி “அடியேய் மல்லிகா…” “சொல்லுடி..” “நீ எங்க வீட்டுக்கு வரும்போது பின்வாசல் வழியா வாடி ப்ளிஸ்…” மறுவார்த்தையை மல்லிகாவிடம் இருந்து எதிர்ப்பார்க்காமல் வெளியே சென்று கொண்டிருந்தாள் மீனாட்சி.

“ஏண்டி இவ்ளோ நேரம்” – மீனாட்சி

“குழாய்ல தண்ணீ வந்திருச்சி, துணியெல்லாம் அலசிப்போட்டுட்டு வரதுக்கு லேட்டாயிடுச்சிடி… அதுமட்டுமில்லாம நானா கட்டிக்கப்போறேன்” காலையில மீனாட்சி சொன்ன வார்த்தைக்குச் சரியான சவுக்கடிக் கொடுத்தாள் மல்லிகா.

“அதிகபிரசங்கி.. அதிகபிரசங்கி…” என்று மல்லிகாவின் தலையில் ரெண்டு கொட்டு கொட்டினாள் மீனாட்சி. “உண்மையச் சொல்லனுமின்னா நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கத் தெரியுமா… என் கண்ணே பட்டிடும் போலிருக்கு…” – மல்லிகா. மீனாட்சி சிரித்தாள். கண்ணாடியிலுள்ள பிம்பமும் சிரித்தது.

பொண்ணக் கூட்டிட்டு வாங்க… ஊர் பெரியவர் உரக்கச் சொன்னார். அம்சவேணி தன்னோடப் பொண்ணு கையில டீயைக் கொடுத்தனுப்பினாள். டீயைக் கையில் வாங்கியவுடனே மீனாட்சியின் மனம் நடுங்கத் தொடங்கியது. இவனாவது பொண்ணப் புடிச்சிருக்கு… கல்யாணத்த எப்ப வச்சிக்கலாமுன்னு கேட்க மாட்டானா..? இல்ல, டீயைக் குடிச்சிட்டு ஊருக்குப்போயி சொல்லி அனுப்புறேன்னு சொல்வானா? மனசு குழம்பித்தான் போயிருந்தது.

மீனாட்சி மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒவ்வொருத்தருக்காய் டீ கொடுத்துக் கொண்டே வந்தாள். இப்போது மாப்பிள்ளைக்கு டீ கொடுக்கிறாள். மாப்பிள்ளை நடேசன் குனிந்து கொண்டே டீயை எடுக்கிறான். மீனாட்சியின் முகம் வாடின. மாப்பிள்ளைக்கு எதற்காக டீ கொடுக்கிறது. பொண்ணு மாப்பிள்ளை மூஞ்சப் பாக்கணும். மாப்பிள்ளை பொண்ணு மூஞ்சப் பாக்கணும் என்கிறதுக்குத்தானே.. மாப்பிள்ளை டீ எடுத்துக்கொண்டப் பின்பும் மீனாட்சியின் கால்கள் அங்கிருந்து நகர மறுத்தன. தான் கற்பனித்த உள்ளத்தில் உருவான உருவம் இவர்தானோ? அந்த உருவம் மனதிலே பதிந்து காதல் கீதம் தீட்டாதோ என எண்ணி உருகுகிறாள். “மாப்பிள்ளை தம்பி கொஞ்சம் பொண்ண நிமிர்ந்து பாருங்க…” என்றாள் மீனாட்சியின் தூரத்து அத்தை ஒருத்தி.

நடேசன் மீனாட்சியை நிமிர்ந்துப் பார்க்கிறான். மீனாட்சியும் நடேசனை உற்றுப் பார்க்கிறாள். நடேசனின் ஒற்றைக் கண் பார்வையால் தீயிலே கருகிய புழுவாய் எரிகிறாள் மீனாட்சி. மாப்பிள்ளை நடேசனோ தன்னுடைய ஊனத்தை நினைத்து வருத்தத்துடன் தலைகுனிகிறான். சிவந்த கண்களில் கண்ணீர் நிரம்ப உறவுகளுக்காகச் சிரித்த முகத்தோடு தன் அறைக்குள் நுழைகிறாள். மீண்டும் கண்ணாடியை எடுத்து முகத்தைப் பார்க்கிறாள். கண்களை நிறைத்த கண்ணீர் கண்ணாடியில் சொட்டாய் விழுந்தது.

கண்ணாடியின் முகம் கண்களாக விரிய, அலைகளை ஆக்கிரமித்துக் கொண்டது கண்ணீர்த்துளிகள். “என்னடி விசும்புற..” அம்மா அம்சவேணி மீனாட்சியின் பின்புறமாய் நின்று கொண்டிருந்தாள். “உனக்கு மூணு வயசிருக்கும். உங்க அப்பாவும் மாமாவும் கிணத்துல குளிச்சிட்டு இருந்தாங்க. நீ கிணத்து மேட்டுல நின்னுட்டு கிணத்துப் பூண்டுச் செடியைக் கிள்ளிக்கிட்டு விளையாடிட்டு இருந்த. அந்த நேரத்துல மாமா கிணத்து மேட்டுல இருந்து தண்ணிக்குள்ள குதிக்கிறதப் பாத்து நீயும் குதிச்சிட்ட. குதிச்ச நீ நேரா பம்பு செட்டுல விழுந்து தாடையைக் கிழிச்சிட்டு இரத்த வெள்ளமா மயங்கி தண்ணில மூழ்கின. உடனே உங்க அப்பா தண்ணில இருந்து உன்னையத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினாரு. வேலைக்குப் போயிருந்த எனக்கு சேதி கெடச்சவுடனே உன்னப் பார்க்க ஓடோடி வந்தேன். ஆனாலும் பார்க்க முடியல. அப்புறம் டாக்டர் வந்த சொன்னாரு, “தாடையில ரொம்ப அடிப்பட்டிருக்கு. தாடை கிழிஞ்சித் தொங்குது. இழுத்துப் புடிச்சிதான் தையல் போடனும். உங்க பொண்ணோட முகமே மாற வாய்பிருக்கு” என்று சொன்ன போது தலையில இடி விழுந்த மாதிரி சுர்ர்…ன்னுது. ஆரம்பத்தில உன்னைப் பார்க்கும் போது மனசு வலிக்கும். போகப்போக மனசு கல்லாயிடுச்சி. கொஞ்ச நாள்ல உங்க அப்பாவும் போய்ச் சேந்துட்டாரு. கடங்காரனுகளும் இருக்கிறதப் புடிங்கிட்டானுவ… நான் எப்படி உன்னை காப்பாத்தப் போறன்னு மனசு நோகிடுச்சி. இந்த கல்யாணத்துக்கு நீ சம்பதிச்சே ஆகனும்டி…”

“அம்மா மாப்பிள்ளைக்கு ஒரு கண்ணே இல்லம்மா”

“கண் இல்லன்னா என்னாடி? உன்ன கண்ணும் கருத்துமா வச்சிக் காப்பாத்துவாண்டி”

“என்னோட முகம் இப்படி ஆனதுக்கு நான் என்ன செய்ய முடியும். அந்த கடவுளுக்கே கண் இல்லையோ என்னுமோ! அதான் கண் இல்லாத ஒருத்தனுக்கு என்னை கட்டி வைக்கப் பாக்கராரு…எனக்கு கல்யாணமே வேண்டாம்மா…”

“போடி போக்கத்தவளே… நான் போய்ச் சேர்ந்ததுக்கு அப்புறம் உனக்கு ஒரு பாதுகாப்பு வேணாம்மா…”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். என்னோட மூஞ்சி கூர்மையா இருக்குது. அதனால ஊனம் இருக்கிறவங்கள மட்டுதான் கட்டிக்கனுமா…ம்மா”

“வந்த மாப்பிள்ள எல்லாம் பொண்ணப் புடிக்கல… பொண்ணப் புடிக்கல…ன்னு சொல்லும் போது எங்க நான் பெத்தது சொத்தையாயிடுச்சேன்னு அடிவயிறு கலங்கிப் போகுதடி”

“நான் அழகா இல்லையாம்மா”

“யாரு சொன்னது. நீ அழகுதான். உன் மனசு யாருக்கும் வராதுடி செல்லம்”

“மல்லியாவுக்குக் கூடவாம்மா”- மீனாட்சி.

“அவளுக்கென்ன அவ மாமங்காரன் சிங்கப்பூர்ல இருக்கான். அவனுக்காகக் காத்துக்கிட்டு இருக்கா… நீ அப்பிடியா மீனாட்சி. கல்யாணத்துக்கு ஒத்துக்கோடி” – அம்சவேணி

சாப்பிட்ட ரசத்தின் மனமும் குழம்பின் வாசனையும் தென்றல் காற்றில் இரண்டறக் கலந்தன. பார்த்துக்கொண்டிருந்தக் கண்ணாடியைச் சுவற்றிலே வீசி எறிந்தாள். அக்கண்ணாடி சுக்கு நூறாய் வெடித்து சிதறின. சிதறியக் கண்ணாடி பிம்பத்தில் ஓவியமாய் தெரிந்தாள் மீனாட்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *